வியாழன், 4 ஆகஸ்ட், 2016

வடு என்றால் என்ன?


முன்னுரை:

சங்க காலத்தில் புலவர்களால் பயன்படுத்தப்பட்டு இன்றுவரையிலும் மக்களால் நடைமுறையில் பேசப்பட்டும் வருவதான பல தமிழ்ச் சொற்களுள் ஒன்றுதான் ' வடு ' என்பதாகும். இச் சொல்லுக்குப் பத்துக்கும் மேற்பட்ட பொருட்களை இன்றைய அகராதிகள் காட்டினாலும் இவை ஏதும் பொருந்தாத நிலையே பல பாடல்களில் காணப்படுகிறது. இது இச்சொல்லுக்குப் புதியதோர் பொருள் இருப்பதையே காட்டுகிறது. இக் கட்டுரையில், அந்தப் புதிய பொருளைப் பற்றி விரிவாக ஆதாரங்களுடன் காணலாம்.

வடு - அகராதிகள் காட்டும் பொருட்கள்:

சென்னைத் தமிழ்ப் பேரகராதி வடு என்னும் சொல்லுக்குக் கீழ்க்காணும் பொருட்களைக் காட்டுகின்றது.

வடு¹ vatu, n. 1. cf. வடி&sup5;. [K. miḍi.] Unripe fruit, especially very green mango; மாம் பிஞ்சு. மாவின் வடுவகிரன்ன கண்ணீர் (திருவாச. 9, 2). (பிங்.) 2. Wart, mole; உடல்மச்சம். (W.) 3. Scar, cicatrice, wale; தழும்பு. சாப நோன்ஞாண் வடுக்கொள வழங்கவும் (புறநா. 14). 4. cf. வடி&sup7;. Chiselled figure; உளியாற்செதுக்கின உரு. கூருளி பொருத வடுவாழ் நோன்குறடு (சிறுபாண். 252). 5. Mouth of an ulcer or wound; புண்வாய். தாழ் வடுப் புண் (பு. வெ. 10, சிறப்பிற். 11). 6. Fault, defect; குற்றம். வடுவில் வாய்வாள் (சிறுபாண். 121). 7. Reproach; பழி. வடுவன்று வேந்தன்றொழில் (குறள், 549). 8. Injury, calamity; கேடு. நாயகன் மேனிக் கில்லை வடுவென (கம்பரா. மருத்து. 5). 9. Fine, black sand; கருமணல். வடுவா ழெக்கர் மணலினும் பலரே (மலைபடு. 556). 10. Copper; செம்பு. (பிங்.) 11. Sword; வாள். (யாழ். அக.) 12. Beetle; வண்டு. (பிங்.)

மேலே உள்ளவற்றை நோக்கினால், வடு என்பதற்கு 12 விதமான பொருட்கள் கொடுக்கப்பட்டு இருப்பதையும் இவற்றில் ஒரே ஒரு உயிருள்ள பொருளாக ' வண்டு ' குறிப்பிடப்பட்டு இருப்பதையும் அறிந்துகொள்ளலாம்.

வடு - அகராதிப் பொருட்கள் பொருந்தா இடங்கள்:

வடு என்பதற்கு அகராதிப் பொருட்கள் பன்னிரெண்டில் ஒன்றுகூட பொருந்தாத பல இடங்கள் இருக்கின்றது. இருப்பினும் சிலவற்றை மட்டும் இங்கே காணலாம்.

கடு வரல் கலுழி கட்கு இன் சேயாற்று       
வடு வாழ் எக்கர் மணலினும் பலரே - மலைபடு.556

கொடு விரல் உளியம் கெண்டும்
வடு வாழ் புற்றின வழக்கு அரு நெறியே - அகம்.88

வெண் தலை புணரி அலைக்கும் செந்தில்
நெடுவேள் நிலைஇய காமர் வியன் துறை
கடு வளி தொகுப்ப ஈண்டிய
வடு வாழ் எக்கர் மணலினும் பலவே - புறம்.55

மேலுள்ள பாடல்களை நோக்கினால், வடு எனப்படுவது எக்கர் மணலிலும் புற்றிலும் வாழும் தன்மையது என்பதை நன்கு அறிந்துகொள்ளலாம். இதிலிருந்து, வடு எனப்படுவது ஒரு வாழும் உயிரியைக் குறிக்கும் என்பதை எளிதின் புரிந்துகொள்ளலாம். ஆனால், தமிழ் உரையாசிரியர்கள் இப் பாடல்களில் வரும் வடு எனும் சொல்லுக்குக் கருமணல் என்று பொருள் கொள்கிறார்கள். இது பொருந்துமா என்றால் சற்றும் பொருந்தாது. முதல் காரணம், கருமணலானது வாழும் தன்மை உடையது அல்ல; அது ஒரு உயிரற்ற பொருள். இரண்டாவது காரணம், கருமணலை கறையான் புற்றில் காணமுடியாது. மூன்றாவது காரணம், கருமணலை இப் பாடல்களில் கூறவேண்டிய தேவையுமில்லை. இதிலிருந்து, வடு என்னும் சொல்லுக்கு அகராதிகள் காட்டும் பொருட்கள் நீங்கலாக வேறு பொருளும் உண்டு என்பதை முடிவுசெய்யலாம்.

வடு - புதிய பொருட்கள்:

வடு என்னும் சொல்லுக்கு இக் கட்டுரையில் காட்டப்படும் புதிய பொருட்கள் மூன்று.

ஒன்று: கறை.
இரண்டு: நத்தை, சிப்பி, பலகறை (சோழி) முதலியன.
மூன்று: கறையான்.

வடு என்னும் சொல்லுக்கு இப் புதிய பொருட்கள் எவ்வாறு பொருந்தும் என்று தனித்தனியாகக் கீழே ஆதாரங்களுடன் காணலாம்.

வடு = கறை :

வடு என்னும் சொல்லுக்குக் கறை என்னும் பொருள் எவ்வாறு பொருந்தும் என்று கீழே சில ஆதாரங்களுடன் காணலாம்.

மண் ஆர் முழவின் கண்அகத்து அசைத்த
விரல் ஊன்று வடுவின் தோன்றும் மரல் - அகம்.155

விளக்கம்: கண்போல மைபூசிய பறையை விரல்களால் முழக்கியபோது பறையில் படிந்த கறைகளைப் போலத் தோன்றுகின்ற இலைகளையுடைய மரல்செடிகள்......

பொதுவாகப் பறையின் நடுவில் கண்போல வட்டமாக மை அல்லது சேறு கொண்டு பூசுவது வழக்கம். அப்படிப் பூசிவிட்டு, அது முற்றிலும் காயாதநிலையில், பறையினை விரல்களால் முழக்கினால் விரல்களில் அம் மையானது ஒட்டிக்கொள்வதுடன், விரல்களில் உள்ள மைக்கறைகள் அப் பறையிலும் பதியும். விரல்களின் கறைகளுக்கு இடையே பறைத்தோலின் வெண்மை நிறம் மாறிமாறித் தோன்றும். இது பார்ப்பதற்கு மரல் செடி என்று அழைக்கப்படும் மரலாக்குச் செடியின் இலைகளைப் போலவே காட்சியளிக்கும். அருகில் மரல் செடியின் படம் இணைக்கப்பட்டுள்ளது. மரல் செடியினைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணமுண்டா? என்ற கட்டுரையைப் படிக்கலாம்.

இதேபோல பெண்கள் தமது கண்ணிமைகளை அழகுசெய்வதற்குப் பூசிக்கொள்ளும் மையானது, அப் பெண்கள் தமது காதலரின் அல்லது கணவரின் தோளில் அல்லது மார்பில் தலைசாய்க்கும்போது, அவ் ஆடவரின் மார்பிலோ கழுத்தின் கீழோ கறையாக ஒட்டிக்கொள்ளும். இக் காலத்துப் பெண்களின் உதட்டுச் சாயமானது ஆடவரின் மார்பில் படிந்திருப்பதைப் போல அக் காலத்து நிகழ்வான இதனை வடுப்படுதல் என்றும் வடுக்கொள்ளுதல் என்றும் இலக்கியம் கூறுகிறது. பெண்களின் கண்ணிமையில் பூசிக்கொள்ளும் அணியினை பூண் என்றும் இழை என்றும் தொடி என்றும் இலக்கியம் குறிப்பிடுகிறது. இதைப் பற்றி தொடி ஆகம் தொடர்பு என்ன?. என்ற கட்டுரையில் முன்னரே கண்டுள்ளோம். இனி, வடுக்கொள்ளுதல் பற்றி ஏராளமான பாடல்கள் உள்ள நிலையில், சில பாடல்களை மட்டுமே கீழே விளக்கங்களுடன் காணலாம்.

ஏதிலார் தொடி உற்ற வடு காட்டி ஈங்கு எம் இல் வருவதை - கலி.78
(பிற பெண்களின் கண்மை அணிகளால் உண்டான கறைகளைக் காட்டி இங்கு எனது வீட்டுக்கு வருவதை......)

நல்லார் செறி தொடி உற்ற வடுவும் - கலி.91
( பெண்களின் கண்மை அணியினால் உற்ற கறையும்...)

இயல் எறி பொன்னின் கொங்கு சோர்பு உறைப்ப
தொடி கண் வடு கொள முயங்கினள் - அகம்.142
( பொன்னிறத்துப் பூந்தாதுக்களை அரைத்து இமைகளின் மேல் பூசியிருந்த மையணியானது அவனது மார்பினை கறைப்படுத்துமாறு தழுவினாள்.....)

புணர்ந்த நின் எருத்தின்கண் எடுத்துக்கொள்வது போலும்
தொடி வடு காணிய - கலி.71
( தழுவிய உனது கழுத்தருகே எடுத்து பூசிக்கொள்ளலாம் போலத் தெளிவாக ஒட்டியிருக்கின்ற கண்ணிமையின் மையணிக் கறையினைக் காண்க...)

நுண் பூண் ஆகம் வடுக்கொள முயங்கி - மது.568
( மிகுதியாகப் பூசிய மையணியினை உடைய கண்ணிமைகளின் கறைப்படுமாறு தழுவி....)

இழை அணி ஆகம் வடுக்கொள முயங்கி - நற்.229
( மையணி கொண்ட கண்ணிமைகளின் கறைப்படுமாறு தழுவி.....)

எல்லி வான் மதியின் உற்ற கறை என என் மேல் வந்து
புல்லிய வடுவும் போகாது - கம்ப. யுத். 28/61
( ஒளிவிடும் வான்மதியில் தோன்றும் கறையானது எப்படி அதைவிட்டு நீங்குவதில்லையோ அதைப்போல என்னை நீவந்து தழுவியதால் உண்டான மையணியின் கறையும் என்னைவிட்டு நீங்காது....)

திகழ்ந்து ஏந்து அகலத்து செம் சாந்து சிதைய
பூண் வடு பொறிப்ப புல்லுவயின் வாராள் - பெருங்.2/16
( என் மார்பில் பூசியிருக்கும் செஞ்சாந்தினை அழித்து அவளது மையணியின் கறைப்படியுமாறு தழுவுவதற்கும் வாராள்.....)

நறு வெண் சாந்தம் பூசிய கையால்
செறிவுற பிடித்தலின் செறி விரல் நிரை வடு
கிடந்தமை நோக்கி - பெருங்.5/8
( நறுமணம் மிக்க சந்தனத்தைப் பூசிய கையினால் கெட்டியாகப் பிடித்தலால் விரலின் சந்தனக்கறைகள் வரிசையாகத் தோன்றியதைப் பார்த்து.....)

வடு = நத்தை முதலியன:

வடு என்ற சொல்லானது நத்தை முதலானவற்றை எவ்வாறு குறிக்கும் என்பதை இங்கே ஆதாரங்களுடன் காணலாம்.

பொதுவாக நத்தை, சிப்பி, பலகறை முதலானவை அழகிய பல வண்ணங்களைக் கொண்ட மேலோடுகளை முதுகில் சுமப்பவை என்பதை நாம் அனைவரும் நன்கு அறிவோம். இவை பற்றி பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணமுண்டா?. என்ற ஆய்வுக் கட்டுரையில் விரிவாகத் தெரிந்துகொள்ளலாம். அக் கட்டுரையில் நத்தை முதலானவற்றை அறல் என்ற சொல்லால் குறித்திருப்பார்கள். இக் கட்டுரையில், இவற்றை வடு என்ற சொல்லால் குறித்திருக்கின்றனர். காரணம், இவை ஆற்றுமணல் அல்லது கடற்கரை மணலில் ஊர்ந்துசெல்லும்போது மணலின்மேல் ஒரு சுவட்டினை அதாவது வழித்தடத்தை உருவாக்கி விட்டுச்செல்லும். இதை அருகில் உள்ள படம் தெளிவாகக் காட்டும். இப்படி இவை ஒரு வடுவினை அதாவது சுவட்டினை விட்டுச் செல்வதால் தான் இவற்றை வடு என்ற சொல்லால் குறித்தனர் புலவர்.

வடு என்பது நத்தை, சிப்பி, பலகறை ஆகிய பொருட்களில் பயின்றுவரும் பல பாடல்களில் சிலவற்றை மட்டும் கீழே காணலாம்.

வெண் தலை புணரி அலைக்கும் செந்தில்
நெடுவேள் நிலைஇய காமர் வியன் துறை
கடு வளி தொகுப்ப ஈண்டிய
வடு வாழ் எக்கர் மணலினும் பலவே - புறம்.55

செந்தில் நெடுவேளாகிய முருகன் நிலைகொண்டிருக்கும் திருச்செந்தூரின் அழகிய கடற்கரை மணலில் நத்தை, சிப்பி போன்றவை ஊர்ந்து செல்லும் காட்சியினை அப்படியே படம்பிடித்துக் காட்டுகின்றது மேற்காணும் புறநானூற்றுப் பாடல்.

கழகத்து தவிராது வட்டிப்ப கவறு உற்ற வடு ஏய்க்கும் காமரு பூ- கலி.136

இப் பாடலில் வரும் காமரு பூ என்பது நெய்தல் பூவினையும், வடு என்பது பலகறையினையும் குறிக்கும். பலகறையின் மேலோடுகளான சோழிகளைத் தான் தாய விளையாட்டில் கவறாக அதாவது உருட்டும் காய்களாகப் பயன்படுத்துகிறோம். அருகில் சோழியின் படம் காட்டப்பட்டுள்ளது. சோழியின் அடிப்புறமானது ஒரு சிறிய வாய் போன்ற பிளவுடன் காணப்படும். இது பார்ப்பதற்கு மேல் இமை, கீழ் இமைகளுடன் கூடிய கண் போலத் தெரிவதால், இதைப் பெண்களின் மையுண்ட கண்ணுக்கு ஒப்பிடுவது இலக்கிய வழக்கம். இப்பாடலில், இதனைக் கண்போன்ற வடிவுடைய நெய்தல் பூவிற்கு ஒப்பிட்டுக் கூறி இருக்கின்றனர்.

வடு வாழ் கூந்தல்! அதன்பால் போக' என்று - மணி.17
வடு வாழ் கூந்தல் வாசவதத்தையொடு - பெருங். 4/6

இப் பாடல்களில் வரும் ' வடு வாழ் கூந்தல் ' என்பது நத்தை, சிப்பி, பலகறையின் மேலோடுகளைப் போல வண்ணம் தீட்டிய கண்ணிமைகளைக் குறிக்கும். இதனையே ' அறல் வாழ் கூந்தல் ' என்றும் இலக்கியம் குறிப்பிடுகிறது. இதைப்பற்றி பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணமுண்டா? என்ற ஆய்வுக் கட்டுரையில் விரிவாகக் காணலாம். வடு பற்றிய இன்னும் சில பாடல்களைக் கீழே காணலாம்.

வடு பிளவு அனைய கண்ணாள் - சிந்தா.1573
வாள் ஆர் மதி முகத்த வாளோ வடு பிளவோ - சிந்தா.1972
வடு போழ்ந்து அன்ன வாள் அரி நெடும் கண் - பெருங்.1/46
வடுவும் வேலும் மலரும் கயலும் வனப்பு அழித்த கண் - சிந்தா.1654
வடு கண் வார் கூந்தலாளை - கம்ப.ஆரண்-113

இப் பாடல்களில் வரும் வடு என்பதற்கு மாவடு அதாவது மாம்பிஞ்சு என்ற பொருள் கூறுவாருளர். ஆனால் இப் பொருள் இவற்றுக்குப் பொருந்தாது. காரணம், மாவடுவானது இயற்கையிலேயே பிளவினை உடையது அல்ல. அதனை ஒரு இரும்பாலான கத்தி போன்ற ஆயுதத்தால் இரண்டாகக் கிழித்தால் தான் அது கண்ணின் மேல் இமை, கீழ் இமை போன்ற அமைப்புடன் ஒத்திருக்கும். மேலும், மாவடுவினைக் குறிப்பதற்கு வடு என்ற சொல்லைக் காட்டிலும் வடி என்ற சொல்லைத்தான் மிக அதிகமாகப் பயன்படுத்தியுள்ளனர் புலவர். இதோ சங்க இலக்கியத்தில்,

வடு = மாம்பிஞ்சு என்ற பொருளில் ஒரேஒரு பாடலிலும்
வடி = மாம்பிஞ்சு என்ற பொருளில் ஒன்பது பாடல்களிலும் பயன்படுத்தியுள்ளனர். 

மேற்கண்டவற்றில் முதல் மூன்று பாடல்களில் வரும் வடு என்பது இயற்கையிலேயே பிளவினை உடையதும் கண்ணின் மேல் இமை மற்றும் கீழ் இமைகளைப் போல இரண்டு பிரிவுகளை உடையதும் பல வண்ணங்களை உடையதுமான பலகறையினைக் குறிக்கும். ஏனையவற்றில் வரும் வடு என்பது நத்தை, சிப்பி போன்றவற்றின் ஓடுகளைக் குறிக்கும். அதாவது, பெண்கள் தமது கூந்தலாகிய கண்ணிமைகளைப் பல வண்ணங்களில் அழகாக மைதீட்டி அலங்கரித்திருப்பதை இவற்றின் மேலோடுகளுடன் உவமையாக்கிப் பாடியுள்ளனர் புலவர்.

வடு = கறையான் :

வடு என்னும் சொல் கறையான் என்ற பொருளில் கீழ்க்காணும் ஒரே ஒரு இடத்தில் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.

கொடு விரல் உளியம் கெண்டும்
வடு வாழ் புற்றின வழக்கு அரு நெறியே - அகம்.88

இப் பாடலில் வடு என்பது புற்றில் வாழ்வது என்றும் அதனை உண்பதற்குக் கரடிகள் தோண்டியெடுக்கும் என்றும் கூறப்படுவதால், அது கறையானைத் தான் குறிக்கும் என்பதில் ஐயமில்லை. சரி, கறையானை ஏன் வடு என்ற சொல்லால் குறித்தனர் என்று காண்போம்.

பொதுவாக, ஒரு இடத்தில் கறையான் வாழ்ந்தால் என்ன செய்யும்?. அது கூடியவரையில் அனைத்து இடங்களிலும் அதாவது மரம், சுவர், மண் தரை என்று எந்தத் தளத்தினையும் விடாமல் செம்மண் கொண்டு மெல்லிய குருதி நாளங்களைப் போன்ற அமைப்பில் தனது கூடுகளைப் படரவிட்டு அமைத்துக்கொண்டு விடும். கறையான் கூடுகளின் அமைப்பினை அருகில் உள்ள படத்தில் காணலாம். இப்படி இவை தாம் இருக்கும் இடம் முழுவதையும் கூடுகளைக் கட்டிக் கறைப்படுத்துவதாலும், கூடுகளின் மேல் இருக்கும் செம்மண்ணை நீக்கிய பின்னரும், அது ஒரு நீங்காத வடுவாக அத் தளத்தில் தங்கிவிடுவதாலும் இவற்றை வடு என்று குறித்தனர். இதன் பேரிலேயே 'கறை' இருப்பதையும் இதற்கொரு சான்றாகக் கொள்ளலாம்.

முடிவுரை:

இதுவரை கண்டதிலிருந்து, வடு என்பதற்கு அகராதிப் பொருட்கள் நீங்கலாக, கறை, கறையான், பலகறை, நத்தை, சிப்பி போன்ற பொருட்களும் உண்டு என்பது அறியப்பட்டது. இப் பொருட்களில் கறை என்பதே முதல்நிலைப் பொருளாகவும் இதில் இருந்தே தழும்பு, மச்சம், குற்றம், பழி, கேடு போன்ற அகராதிப் பொருட்களும் அதற்கடுத்த நிலையில் தோன்றியிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

வடு என்னும் சொல்லைப் போலவே பல சொற்களுக்கு அகராதிகள் காட்டாத பொருட்கள் பல உள்ளன. அவற்றை மீளாய்வு செய்து வெளிக்கொணர்வதின் மூலம் தமிழில் சொல்வளம் பெருகும் என்பதுடன் அப்போதுதான் பாடல்களின் உண்மையான பொருளை அறிந்து சுவைக்கவும் முடியும்.

2 கருத்துகள்:

  1. நல்ல திருத்தம் நண்பரே....
    "திருவாவடுதுறை " இச்சொல்லில் உள்ள "வடு" என்ற சொல் என்ன பொருள் கொண்டு இருக்கும் ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே. திருவாவடுதுறை =திரு+ஆ+அடு+துறை அதாவது அம்பிகை பசுவடிவம் கொண்டு இறைவனைப் பற்றிப் பூசித்த தலம்.

      நீக்கு

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.