ஞாயிறு, 17 நவம்பர், 2019

சங்க இலக்கியத்தில் சகரமுதல் சொற்கள் யாவும் தமிழ்தானா?


முன்னுரை:

தமிழ்ச் சொற்கள் சகரத்தில் தொடங்காது என்பது சரியா? என்ற ஆய்வுக் கட்டுரையில் "சரியல்ல" என்பதே ஆய்வு முடிவாகக் கூறப்பட்டது. இது தொடர்பாகத் தொல்காப்பியத்தில் காட்டப்படும் மொழிமரபு நூற்பா 29 ம் ஓர்  இடைச்செருகலே என்றும் நிறுவப்பட்டது. இந்த முடிவுக்கு ஆதரவாகச் சங்க இலக்கியத்தில் பயின்று வரும் சகர முதல் சொற்கள் யாவும் தமிழ்ச் சொற்களே என்னும் கருத்து அந்தக் கட்டுரையில் முன்வைக்கப் பட்டது.

சங்க இலக்கியத்தில் பயின்று வரும் சகரமுதல் சொற்கள் சகடம், சங்கம், சடை, சண்பகம், சதுக்கம், சந்து, சந்தம், சந்தனம், சந்தி, சமம், சமன், சமழ்ப்பு, சமைப்பு, சரணம், சருமம், சலம், சவட்டு, சனம் ஆகியவை ஆகும். சங்க இலக்கியத்தில் பயின்று வருவதால் மட்டும் சகர முதல் சொற்கள் யாவும் தமிழாகி விடுமா? என்ற கேள்வி எழுந்ததால் அக் கேள்விக்குச் சரியான விளக்கமான விடைகூறும் விதமாக இக் கட்டுரை வரையப்படுகிறது.

இலக்கணப் போலிகள்:

தமிழ் இலக்கியங்களில் பாடல்களைப் புனைவதற்குப் பயன்படுத்தப்படும் பல்வேறு உத்திகளில் ஒன்றுதான் இலக்கணப்போலி ஆகும். இலக்கணப் போலிகள் எனப்படுபவை தவறான வழக்குச் சொற்கள் அல்ல. ஏற்கெனவே வழக்கில் இருக்கும் சொல்லில் ஒரேயொரு எழுத்தை மட்டும் மாற்றியோ சேர்த்தோ நீக்கியோ அதே பொருளில் புதிய சொல்லை உருவாக்குவதே இலக்கணப் போலி எனும் உத்தியாகும்.

புதிய சொற்களை உருவாக்கும்போது சொல்லின் முதலில் வரும் உயிரெழுத்துடன் மெய்யெழுத்துக்களைச் சேர்ப்பது இலக்கணப் போலியில் ஒருவகையாகும். கீழே சில எடுத்துக்காட்டுகளைக் காணலாம்.

அறை (சொல்) >>> பறை, அலங்கு >>> கலங்கு, ஆறு >>> யாறு
உன்னம் (கருத்து) >>> முன்னம், உந்தி (வயிறு) >>> துந்தி

சம்மோனைப் போலிகள்:

சொல்லுக்கு முதலில் வரும் உயிர் எழுத்துக்களுடன் சகர மெய்யினைச் சேர்த்து உருவாக்கப்பட்ட போலிச் சொற்களே சம்மோனைப் போலிகள் எனப்படும். தமிழ் இலக்கியங்களில் மிக அதிகமாகப் பயன்படுத்தப் பட்டுள்ள போலிச்சொற்கள் சம்மோனைப் போலிகளே ஆகும். சம்மோனைப் போலிகளுக்கு எடுத்துக்காட்டாகக் கீழே சில சான்றுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

இறகு >>> சிறகு,  இப்பி >>> சிப்பி,  உணங்கு >>> சுணங்கு

சங்க இலக்கியத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள சகரமுதல் சொற்கள் பெரும்பாலும் சம்மோனைப் போலிகளாகவே அமைந்துள்ளன. அதாவது, உயிர்முதல் சொற்களில் முதலில் வரும் உயிர் எழுத்துடன் சகரமெய் சேர்த்துப் புதிய சொல்லாக உருவாக்கிப் பயன்படுத்தி உள்ளனர். சங்ககாலத்தில் உருவாக்கப்பட்டு இலக்கியங்களில் முதன்முதலில் பயன்படுத்தப்பட்ட சம்மோனைப் போலிகளைப் பின்னாளில் எழுந்த இலக்கியங்கள் மிக அதிக அளவில் பயன்படுத்தத் தொடங்கின எனலாம். இனி, சங்க இலக்கியங்களில் பயன்படுத்தப் பட்டுள்ள பல்வேறு சம்மோனைப் போலிச் சொற்களைப் பற்றி விளக்கமாகத் தனித்தனியாகக் காணலாம்.

சங்கம் (=கூட்டம்):

கூட்டம் என்ற பொருளைத் தருவதான அங்கண் என்னும் தமிழ்ச் சொல்லில் இருந்தே சங்கம் என்ற தமிழ்ச் சொல் தோன்றியது.

அங்கண் (கூட்டம்) >>> சங்கம்

அங்கண் என்ற சொல்லானது கூட்டம் என்ற பொருளில் ஏராளமான சங்க இலக்கியப் பாடல்களில் பயின்று வந்துள்ளது. ஒருசில பாடல்கள் மட்டும் கீழே சான்றாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

அங்கண் விசும்பின் விளங்கு ஞாயிற்று – அகம். 208
அங்கண் விசும்பின் ஆர் இருள் அகற்றும் – புறம்.56
அங்கண் விசும்பின் அகல் நிலா பாரிக்கும் – நால. 16/1

சங்கம் என்னும் சொல்லைப் பற்றிய மேலதிக தகவல்களைக் கீழ்க்காணும் சுட்டியில் உள்ள கட்டுரையில் படித்து அறியலாம்.


சலம் (=நீர்):

அலம்புதல் என்ற வினைச்சொல்லுக்கு அலைதல், ததும்புதல், ஒலித்தல், கழுவுதல், கலத்தல் என்றெல்லாம் பல பொருட்களைத் தமிழ் அகராதிகள் காட்டுகின்றன. இந்த அனைத்து வினைகளையும் செய்கின்ற ஒரே பொருள் நீர் தான். இவ் அடிப்படையில், அலம்புதல் என்ற வினைச்சொல்லில் இருந்தே நீரைக் குறிக்கும் தமிழ்ச்சொல் கீழ்க்காணுமாறு பிறக்கும்.

அலம்பு >>> சலம்பு >>> சலம்

அலம்பும் சலம்பும் சம்மோனைப் போலிகள். சலம்பும் இயல்புடையதால் நீருக்குச் சலம் என்ற பெயர் உண்டாயிற்று. சலம் என்ற தூய தமிழ்ப் பெயரே கீழ்க்காணும் விதிகளுக்கேற்ப தமிக்ருத மொழியில் திரிந்து நீரைக் குறிக்க எழுந்தது.

சலம் >>> ச^ல (வி.15,6)

வி.15 – கிரந்தமாற்று விதி – இதன்படி சகரம் ச^கரமாக மாறியது.
வி.6 – விகுதிகெடல் விதி – இதன்படி மகர விகுதி கெட்டது.

சருமம் (=தோல்):

சார்தல் என்ற தமிழ்ச் சொல்லுக்குப் பொருந்தியிருத்தல், ஒட்டியிருத்தல், பற்றியிருத்தல் என்றெல்லாம் பொருட்கள் உண்டென்று தமிழ் அகராதிகள் காட்டுகின்றன. சார்தல் என்ற வினையை அடிப்படையாய்க் கொண்டு தோன்றிய தமிழ்ச் சொல்லே சருமம் ஆகும். அதாவது, எலும்புகளாலும் தசைகளாலும் ஆன உடலை ஒட்டிக்கொண்டு / பற்றிக்கொண்டு இருப்பதால் தோலுக்குச் சருமம் என்ற பெயர் ஏற்பட்டது.

சார் (ஒட்டு, பொருந்து) >>> சருமம் (தோல்).

பி.கு: சார்தல் என்ற வினையில் இருந்து தோலைக் குறிக்கும் சருமம் என்ற சொல் தோன்றியதைப் போலவே கீழ்க்காணும் பல்வேறு சொற்களும் தோல் சார்ந்த பெயர்களாய் உருவாகின.

சார்க்கரம் = பாலின்மேல் தோன்றும் ஆடை
சர்ப்பம் = தோல் உரிப்பது = பாம்பு
சரசம் = தோலுடன் தோல் உரசுதல்
சரடம் = தோல்நிறத்தை மாற்றிக் கொள்வது = பச்சோந்தி
சரடு = தோல் போல மறைப்பது = தந்திரம், பொய்

சனம் (=மக்கள்):

அணத்தல் / அணவுதல் என்ற தமிழ்ச் சொல்லுக்குக் கூடுதல், உயர்தல், எழுதல்  என்ற பொருட்களுண்டு என்று தமிழ் அகராதிகள் கூறுகின்றன. உயர்தல் / எழுதல் என்ற வினையானது விரிவாக்க நிலையில் தோன்றுதல் என்ற பொருளைத் தருவதும் இயல்பான ஒன்றே ஆகும். காரணம், கடலில் இருந்து கதிரவன் உயர்ந்து எழுவதையே கதிரவன் தோன்றினான் என்று கூறுகிறோம். உயர்தல் என்பது தோன்றுதல் பொருளையும் குறிக்கும் என்ற அடிப்படையில் தோன்றியதே உயிரி என்னும் சொல்லாகும். (உயர் >>> உயிர் >>> உயிரி).

அணத்தல் என்னும் சொல்லானது அணவுதல் என்றும் வருவதைப் போலவே அணவரல் என்றொரு வடிவமும் இலக்கியத்தில் உண்டு. அணவரல் என்ற சொல்லுக்குத் தோன்றுதல் என்ற நேரடிப் பொருளே உண்டு. அணவரல் என்பது தோன்றுதல் பொருளில் கீழ்க்காணும் சங்கப் பாடல்களில் வந்திருப்பதைக் காணலாம்.

தீ உமிழ் திறலொடு முடி மிசை அணவர - பரி 1
அம் வரி உரிவை அணவரும் மருங்கின் - அகம் 327

தோன்றுதல் பொருளைத் தருவதான அணவுதல் என்ற தமிழ்ச் சொல்லில் இருந்து சனம் என்ற தமிழ்ச் சொல் கீழ்க்காணுமாறு தோன்றும்.

அணவு (தோன்று) >>> சணவு >>> சணம் >>> சனம் (தோன்றுவன = உயிரி)

அணவு என்பது சணவு என்று சம்மோனைப் போலியாக மாறி அதில் இருந்து சணம் என்ற பெயர்ச்சொல் தோன்றும். சணப்பது அதாவது தோன்றுவது உயிரின் இயல்பாதலால் சணம் என்பது உயிர்களைக் குறிக்கும் பொதுச் சொல்லாகியது.   

சணம் என்பது சனம் என்று மாறுவது வருக்க / இனப் போலியாகும். ஒரு இனத்தைச் சேர்ந்த மெய்யெழுத்து ஒன்று அதே இனஞ்சேர்ந்த இன்னொரு மெய்யாக மாறுவது இனப்போலி வகையாகும். இதற்குக் காட்டாக வேறு சில சான்றுகளையும் கீழே காணலாம்.

வண்ணம் >>> வன்னம்,  கணை >>> கனை.

சணத்தல், சணம் ஆகிய தமிழ்ச் சொற்களில் இருந்தே கீழ்க்காணும் விதிகளுக்கு ஏற்ப தமிக்ருதச் சொற்கள் தோன்றும்.

சண (தோன்று) >>> ச^ன் (வி. 15,6)
சணம் (உயிரி) >>> ச^ன (வி. 15,6)

வி.15 – கிரந்தமாற்று விதி – இதன்படி சகரம் ச^கரமாக மாறியது.
வி.6 – விகுதிகெடல் / மாற்று விதி – இதன்படி விகுதி கெட்டது / மாறியது.

சடை (=முடி):

அடைதல் என்ற தமிழ்ச் சொல்லுக்கு பொருந்துதல், சேர்தல், சேர்ந்து இறுகுதல் என்ற பொருட்களைத் தமிழ் அகராதிகள் காட்டுகின்றன. தலையில் உள்ள முடியானது நாள்தோறும் எண்ணை நீவி வாரப்படா விட்டால்  தனித்தனியாக இராமல் ஒன்றுசேர்ந்து இறுகி விடும். இப்படி ஒன்றுசேர்ந்து இறுகிய நிலையில் இருக்கும் முடியினையே சடை என்று கூறுகிறோம். சடை என்ற தமிழ்ச் சொல் கீழ்க்காணுமாறு தோன்றும்.

அடை (சேர்ந்து இறுகு) >>> சடை (இறுகிய முடி)

சடை என்ற தமிழ்ச் சொல்லில் இருந்து கீழ்க்காணும் விதிகளுக்கு ஏற்ப ச^டா எனும் தமிக்ருதச் சொல் தோன்றும்.

சடை >>> ச^டா (வி.15,6)

வி.15 – கிரந்தமாற்று விதி – இதன்படி சகரம் ச^கரமாக மாறியது.
வி.6 – விகுதி மாற்று விதி – இதன்படி விகுதி மாறியது.

பி.கு: சேர்ந்து இறுகித் திரண்டு தொங்குகின்ற தலைமுடியைக் குறித்துவந்த சடை என்னும் சொல்லானது பின்னாளில் அவ்வாறு தோன்றும் வேர்கள் மற்றும் விழுதுகளையும் குறிக்கப் பயன்படலாயிற்று.

சகடம் (=வண்டி):

அகல்தல் என்ற தமிழ்ச் சொல்லுக்குக் கடத்தல், நீங்குதல் என்றெல்லாம் பொருட்கள் உண்டென்று தமிழ் அகராதிகளில் காணலாம். அகல்தல் என்ற சொல்லே அகறல் என்றும் இலக்கியங்களில் வழங்கப்பெறும். அகறல் என்ற தமிழ்ச் சொல்லில் இருந்து கீழ்க்காணும் சொற்கள் தோன்றும்.

அகறல் (கடத்தல்) >>> சகறல் >>> சக்கரம் (1), சகடம் (2) (கடக்க உதவுவது)

மேலே காண்பதைப் போன்று, றகரம் ரகரமாக மாறுவதும் டகரமாக மாறுவதும் தமிழ் மொழியின் இயல்பே ஆகும். கீழே சில சான்றுகளைக் காணலாம்.

(1)  முறி >>> முரி,      சிதறு >>> சிதர்,      உலறு >>> உலர்
(2)  அசறு >>> அசடு,    முசிறு >>> முசிடு,   முற்று >>> முட்டு

கடத்தல் என்னும் பொருளைத் தருவதான அகறல் என்னும் தமிழ்ச் சொல்லை அடிப்படையாய்க் கொண்டு தோன்றியதால் சக்கரமும் சகடமும் தமிழ்ச் சொற்களே என்பதை அறிந்து கொள்ளலாம்.

சரணம் (=செருப்பு):

அரணம் என்ற தமிழ்ச் சொல்லுக்குச் செருப்பு என்ற பொருள் உண்டு என்று தமிழ் அகராதிகள் காட்டுகின்றன. அரணம் என்ற சொல் செருப்பு என்ற பொருளில் சங்க இலக்கியத்திலேயே வந்திருப்பதைக் கீழே காணலாம்.

அடி புதை அரணம் – பெரும்பாண். 69

அரணம் என்ற தமிழ்ச் சொல்லின் சம்மோனைப் போலியே சரணம் ஆகும். அரணம் என்ற சொல்லே சரணம் என்று சம்மோனைப் போலியாகச் செருப்பு என்ற பொருளில் சங்க இலக்கியத்தில் பயின்று வந்துள்ளது.

அரணம் (செருப்பு) >>> சரணம் (செருப்பு)

.......................... தொடரும்…………

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.