சனி, 23 டிசம்பர், 2017

கற்க கசடற - குறளும் பொருளும்



குறள்:

கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக. - 391.

தற்போதைய விளக்க உரைகள்:

கலைஞர் உரை: பிழை இல்லாதவற்றைத் தனது குறைகள் நீங்குமளவுக்குக் கற்றுக்கொள்ள வேண்டும். கற்ற பிறகு அதன்படி நடக்கவேண்டும்.

மு.வரதராசனார் உரை: கல்வி கற்க நல்ல நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும், அவ்வாறு கற்ற பிறகு, கற்ற கல்விக்குத் தக்கவாறு நெறியில் நிற்க வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை: கற்கத் தகும் நூல்களைப் பிழை இல்லாமல் கற்க; கற்ற பிறகு கற்ற கல்விக்கு ஏற்ப நல்ல வழிகளில் வாழ்க.

பரிமேலழகர் உரை: கற்பவை கசடு அறக் கற்க - ஒருவன் கற்கப்படு நூல்களைப் பழுதறக் கற்க, கற்றபின் அதற்குத் தக நிற்க - அங்ஙனம் கற்றால், அக்கல்விக்குத் தக அவை சொல்லுகின்ற நெறிக்கண்ணே நிற்க. ('கற்பவை' என்றதனான், அறம் பொருள் இன்பம் வீடு என்னும் உறுதிப்பொருள் உணர்த்துவன அன்றிப் பிற பொருள் உணர்த்துவன, சின்னாள் பல்பிணிச் சிற்றறிவினர்க்கு ஆகா என்பது பெற்றாம். கசடறக் கற்றலாவது: விபரீத ஐயங்களை நீக்கி மெய்ப்பொருளை நல்லோர் பலருடனும் பலகாலும் பயிறல். நிற்றலாவது: இல்வாழ்வுழிக் 'கருமமும் உள்படாப் போகமும் துவ்வாத், தருமமும் தக்கார்க்கே செய்தலினும் (நாலடி. 250) துறந்துழித் தவத்தான் மெய் உணர்ந்து அவா அறுத்தலினும் வழுவாமை. சிறப்புடை மகற்காயின் கற்றல் வேண்டும் என்பதூஉம், அவனால் கற்கப்படும் நூல்களும், அவற்றைக் கற்குமாறும், கற்றதனால் பயனும் இதனாற் கூறப்பட்டன.)

மணக்குடவர் உரை: கற்கப்படுவனவற்றைக் குற்றமறக் கற்க: கற்றபின்பு அக்கல்விக்குத் தக ஒழுக. இது கற்கவும் வேண்டும்: அதனைக் கடைப்பிடிக்கவும் வேண்டுமென்றது.

உரைகளில் உள்ள நெருடல்கள்:

மேற்காணும் உரைகள் அனைத்தும் ஒரே கருத்தையே வலியுறுத்துகின்றன. அதாவது: கற்க வேண்டியவற்றைப் பிழையில்லாமல் கற்கவேண்டும்; கற்றபின்னர் கற்றுணர்ந்தவாறு நடந்துகொள்ள வேண்டும் என்று வள்ளுவர் கூறுவதாக இந்த விளக்க உரைகள் அமைந்துள்ளன. இந்த விளக்க உரைகளில் சில நெருடல்கள் உள்ளன. அவற்றைக் கண்டபின்னர் இந்த உரைகள் சரியானவையா தவறானவையா என்பதை முடிவு செய்யலாம்.

1. இக்குறளில் வரும் 'நிற்க' என்ற சொல்லுக்கு 'நடந்துகொள் அல்லது வாழ்' என்று பொருள் கூறி இருப்பது முரணாகத் தோன்றுகின்றது. காரணம், இந்த இரண்டு வினைகளும் அதாவது நடந்துகொள்ளுதல், வாழ்தல் ஆகியவை நிற்றல் வினையில் இருந்து முற்றிலும் மாறுபட்டவை என்பது நாமறிந்த உண்மை.

2. நிற்றல் என்ற சொல்லுக்கு இற்றைத் தமிழ் அகராதிகள் கூறும் பொருட்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. 

நில்-தல் [நிற்றல்] nil- , v. intr. [K. nil.] 1. To stand; கால்கள் ஊன்ற உடல் நிமிர்ந்திருத்தல். நின்றா னிருந்தான் கிடந்தான்றன் கேள லறச் சென்றான் (நாலடி, 29). 2. To stop, halt, tarry; மேற்செல்லாதிருத்தல். நில்லடா சிறிது நில் லடா (கம்பரா. நாகபாச. 73). 3. To be steadfast; to persevere, persist in a course of conduct; உறுதியாயிருத்தல். வீடு பெறநில் (ஆத்திசூ.). 4. To stay, abide, continue; தங்குதல். குற்றியலிகர நிற் றல் வேண்டும் (தொல். எழுத். 34). 5. To cease; to be discontinued, stopped or suspended; ஒழிதல். வேலை நின்றுவிட்டது. 6. To be subdued; அடங்குதல். சாயவென் கிளவிபோற் செவ்வழியா ழிசைநிற்ப (கலித். 143, 38). 7. To remain; to be left, as matter in a boil, as disease in the system; to be due, as a debt; எஞ்சுதல். நின்றதிற் பதினையாண்டு (திவ். திருமாலை. 3). 8. To wait, delay; தாமதித்தல். தெய்வம் நின்று கேட்கும்.

மேற்காணும் பல்வேறு பொருட்களில் நிற்றல் என்ற சொல்லுக்கு நடந்துகொள்ளுதல், வாழ்தல் போன்ற பொருட்களே இல்லாதிருப்பதைக் காணலாம்.

3. கற்றவாறு வாழவேண்டும் என்று கூறுவதே வள்ளுவரின் நோக்கம் என்றால் 'நிற்க' என்ற சொல்லுக்குப் பதிலாக 'ஒழுக' அல்லது 'அமைக' அல்லது 'செய்க' என்ற சொல்லை வள்ளுவர் பயன்படுத்தி இருப்பார். இவற்றில் எதையும் பயன்படுத்தாததில் இருந்து வள்ளுவர் கூற வரும் கருத்து இது அல்ல என்பது தெளிவாகிறது. அன்றியும் இந்த அதிகாரத்தில் கல்வியின் சிறப்பைத் தான் வள்ளுவர் கூற வருகிறாரே அன்றி 'இப்படி நட, அப்படி இரு' என்று அறிவுரை கூற விரும்பவில்லை. இந்த அதிகாரத்தில் உள்ள ஏனைய பாடல்களில் இருந்தும் இந்த உண்மையைத் தெரிந்து கொள்ளலாம்.

4. இங்கே இன்னொரு கருத்தையும் நாம் ஆராய வேண்டும். ஒரு நூலைக் கற்பவர் அதில் கூறப்பட்டுள்ள கருத்துக்களின்படிதான் ஒழுகவேண்டும் என்ற விதி அனைத்துவகை நூல்களுக்கும் பொருந்தக்கூடியதா? என்றால் இல்லை என்றே கூறலாம். காரணம், ஒருவர் தான் கற்கும் அறநெறி சார்ந்த நூல்களை மட்டுமே அவர் விரும்பினால் பின்பற்றி வாழமுடியும். ஏனைய நூல்களைக் (அறிவியல், கணித முதலான நூல்கள்) கற்போர் அதில் கூறியுள்ளவற்றை அப்படியே வாழ்வில் கடைப்பிடித்து ஒழுகமுடியுமா?. முடியவே முடியாது அல்லவா?. மேலும் இந்த அதிகாரம் கல்வி என்னும் தலைப்பில் அனைத்துவகைக் கல்வியைப் பற்றியும் பொதுவாகவே பேசுகிறது என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.

மேற்காணும் நெருடல்களைக் காணுமிடத்து, கல்வியைக் கசடறக் கற்று, கற்றவாறே ஒருவர் வாழவேண்டும் அல்லது நடந்துகொள்ளவேண்டும் என்று விளக்கம் கூறி இருப்பது முற்றிலும் பொருத்தமற்றது என்ற முடிவுக்கே வரவேண்டியுள்ளது.

திருந்திய குறள் விளக்கம்:

ஆராய்ந்து பார்த்ததில் 'நிற்க அதற்குத் தக' என்ற இரண்டாம் அடிக்குப் பொருள்கொள்ளும்போதுதான் தவறு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இரண்டாம் அடிக்குப் பொருள்கொள்ளும் முன்னர் அதனைக் கீழ்க்காணுமாறு பிரித்துக் கொள்ளவேண்டும்.

'நிற்க அதற்குத் தக = நிற்க அதன் குத்து அக

இனி இந்த அடிக்கான பொருளைக் கீழ்க்காணுமாறு கொள்ளலாம்.

நிற்க = இருக்க
அதன் = அதனுடைய
குத்து = நினைவு / ஞாபகம்
அக = அகத்து / மனதில்

'அதனுடைய நினைவு மனதில் இருக்க' என்பதே இந்த அடியின் பொருள் ஆகும். நிற்றல் என்பது ஓரிடத்து இருத்தல் என்னும் பொருள்படுவதால் இருக்க என்னும் பொருளை உணர்த்த நிற்க என்ற சொல்லைப் பயன்படுத்தி உள்ளார் வள்ளுவர். இது சரியே ஆகும். இனி வள்ளுவர் கூறவரும் சரியான கருத்து என்ன என்று பார்ப்போம்.

' கற்க வேண்டியவற்றைப் பிழையின்றிக் கற்கவேண்டும்; அவ்வாறு கற்ற பின்னர் அதனுடைய நினைவு மனதில் இருக்கவேண்டும் (மறந்துவிடக் கூடாது).'

நிறுவுதல்:

கல்வியை எவ்வாறு கற்கவேண்டும் என்ற அருமையான பாடத்தினை இந்த முதல் குறளின் மூலமே நமக்குக் கற்பித்து விடுகிறார் வள்ளுவப் பேராசிரியர். அதுதான் சரியான முறையும் கூட. ஏனென்றால், கல்வியைப் பற்றி அனைத்தும் கூறிவிட்டு கல்வியை எவ்வாறு கற்கவேண்டும் என்று கூறாவிட்டால் அது முழுமையாகாது அன்றோ?. இனி, இப்புதிய விளக்கம் எப்படிப் பொருத்தமாகும் என்று கீழே விரிவாகப் பார்க்கலாம்.

வள்ளுவர் 'குத்து' என்ற சொல்லை இங்கே ' நினைவு / ஞாபகம் ' என்ற பொருளில் பயன்படுத்தி உள்ளார். இக் குறளில் மட்டுமல்ல, கீழ்க்காணும் குறளிலும் இதே பொருளில் இச் சொல்லைப் பயன்படுத்தி உள்ளார்.

கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து.' - 490.

இக்குறளில் வரும் குத்து என்ற சொல் கொக்கானது மீனைத் தன் வாயினால் ' பிடித்தல் / கொள்ளுதல்' என்ற பொருளில் தான் வந்துள்ளது என்பதை மறுக்க இயலாது. இதே பொருளில் தான் குத்து என்ற சொல்லைக் கல்வி அதிகாரத்திலும் பயன்படுத்தி இருக்கிறார்.

'கற்றவற்றைக் கொள்ளுதல்' என்றால் 'நினைவில் இருத்துதல்' என்று தானே பொருள்?. இதைத்தானே நாம் நினைவு, ஞாபகம், மனனம் என்று கூறுகிறோம். அன்றியும் கல்வியில் மிக இன்றியமையாத செயலே 'நினைவில் இருத்துதல்' தான். வெறுமனே படித்துவிட்டு நினைவில் வைத்துக் கொள்ளாவிட்டால் என்ன பயன் விளையும்?. எது நினைவில் உள்ளதோ அதுவே பயன் தரும். நினைவில் இல்லாதது பயன் அளிக்காது. ஒருமுறை கற்றதை பலமுறை நினைத்துக் கொண்டே இருக்கவேண்டும். இல்லையேல் அது நினைவில் இருந்து அகன்று விடும். எனவே தான் வள்ளுவர் 'கல்வியைக் கசடறக் கற்கவேண்டும்; கற்றபின் அதன் நினைவு மனதில் இருக்க வேண்டும்.' என்று கூறுகிறார். இதுவே இக்குறளின் மூலம் வள்ளுவர் கூற வரும் கருத்து ஆகும்.

குத்துதல் என்பதை ஒன்றின் நகலை இன்னொன்றின் மேல் ஏற்றுதல் என்னும் பொருளில் இன்றும் நாம் பயன்படுத்துகிறோம். முத்திரை குத்துதல் என்னும் சொற்றொடரில் குத்துதல் உணர்த்தும் பொருள் 'அச்சினை ஏற்றுதல்' என்பது தானே?. இது பொருள் விரிவு முறையில் உண்டானது ஆகும்.

முடிவுரை:

கல்வி என்னும் அதிகாரத்தில் கல்வி கற்கும் முறைகளைப் பற்றி இந்தக் குறளில் மட்டுமல்ல கீழ்க்காணும் குறளிலும் கூறி இருக்கிறார் வள்ளுவர்.

உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில். - 394.

கல்வியைக் கற்றபின்னர் கற்றவற்றை நினைவில் கொள்வதைப் பற்றி இக்குறளிலும் கூறுகிறார். இக்குறளைப் பற்றி மேலும் விரிவாக அறிந்துகொள்ள 'திருக்குறள் கூறும் புலவர் தொழில் எது?.' என்ற ஆய்வுக் கட்டுரையினைப் படிக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.