வியாழன், 31 மே, 2018

இந்திய மொழிகளின் தாய் தமிழே ! - பகுதி 4


முன்னுரை:

இந்திய மொழிகளின் தாய் தமிழே என்ற தொடர் ஆய்வுக் கட்டுரையின் முதல் மூன்று பகுதிகளில் தலை முதல் மார்பு வரையிலான பல்வேறு உறுப்புக்களைக் குறிக்கின்ற தமிழ்ச்சொற்கள் பிற மாநில மொழிகளில் எவ்வாறெல்லாம் திரிந்து அந்த உறுப்புக்களையும் அதற்கடுத்த உறுப்புக்களையும் குறிப்பதற்குப் பயன்படுத்தப் படுகின்றன என்று பல சான்றுகளுடன் விரிவாகக் கண்டோம். இக் கட்டுரையின் நான்காம் பகுதியான இதில் வயிறு முதல் காலடி வரையிலான பல்வேறு உறுப்புக்களைப் பற்றியும் நகம், மயிர் ஆகியவற்றைப் பற்றியும் பல சான்றுகளுடன் விரிவாகக் காணலாம்.

வயிறும் இடுப்பும்:

வயிறும் இடுப்பும் அருகருகே இருப்பதால் ஒரே சொல்லைக் கொண்டு இரண்டு உறுப்புக்களையும் குறிக்கப் பயன்படுத்துவது பல மொழிகளிலும் வழக்கமாக இருக்கிறது. இத்தகைய பெயர்களை 'இடமாறு பெயர்கள்' என்று முன்னர் கட்டுரையில் கண்டிருக்கிறோம். இனி, தமிழில் வயிறையும் இடுப்பினையும் குறிக்கின்ற பெயர்ச்சொற்கள் பிற மாநில மொழிகளில் எவ்வாறு திரிந்து வயிற்றையோ இடுப்பினையோ குறிக்கப் பயன்படுகின்றன என்பதைப் பற்றிக் கீழே பார்க்கலாம்.

வயிறு >>> வயறு - மலையாளம்
அகடு >>> ஒட்டெ >>> கொ`ட்டெ - கன்னடம்
அகடு >>> ஒடீ - மராத்தி
அகடு >>> கோச்~ட - இந்தி, கு~ச்^ராத்தி

பொதுவாக வயிறு என்பது உண்ணும் உணவைச் சேமித்துவைத்துப் பின்னர் செரிமானம் செய்து அதனில் இருந்து உடலுக்குத் தேவையான சத்துக்களை எடுத்துக்கொண்டு எஞ்சியவற்றைக் கழிவுகளாகப் பிரிக்கின்ற பெரிய வேலையைச் செய்கின்ற ஓய்வில்லாத் தொழிற்சாலை ஆகும். உடலில் உயிர் தங்கி இருப்பதே உண்ணும் உணவை ஆதாரமாகக் கொண்டுதான் என்ற நிலையில், ஒருவன் தனது செல்வத்தை அழியாமல் பாதுகாத்து வைக்கும் இடம் பிறரது வயிறுதான் என்று கூறுகிறார் வள்ளுவர் கீழ்க்காணும் குறளில்.

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி. - 226

அதாவது பசியென்று வருவோர்க்கு உண்ண உணவளித்துப் பசியாற்றுவதன் மூலம் தனது செல்வத்தைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம் என்று கூறுகிறார். பொருள் வைப்புழி என்று வள்ளுவர் இக்குறளில் கூறுவது வயிற்றையே ஆகும். வயிற்றைப் பொருள் வைக்கும் இடமாக வள்ளுவர் உவமித்துக் கூறுவதைப் போல இக்காலத்திலும் நாம் கூறுவது வழக்கமாகவே இருக்கிறது. பெருத்திருக்கும் வயிற்றினைப் பார்த்துப் பானை போன்ற வயிறு என்று கூறுவது வழக்கம். பானையைப் போலப் பெருத்திருப்பதாலும் பானையில் பொருட்கள் வைப்பதைப் போல உணவுப் பொருட்களைப் போட்டு வைப்பதாலும் வயிற்றைப் பானையுடன் ஒப்பிடுகின்றனர். பானையைக் குறிக்கும் தமிழ்ச் சொற்களான  குழிசி, கடிஞை, பாண்டம் ஆகியவை பிற மாநில மொழிகளில் எவ்வாறு திரிந்து வயிறு / இடுப்பினைக் குறிக்கப் பயன்படுகின்றன என்பதைப் பற்றிக் கீழே காணலாம்.

குழிசி >>> குக்சி`
பாண்டம் >>> பண்ட` >>> பேட
கடிஞை >>> கடி, கடிக

சொல்வடிவம்      பேசப்படும் மொழிகள்

குக்சி` (வயிறு)     மலையாளம், இந்தி, செங்கிருதம், கு~ச்^ராத்தி, பஞ்சாபி`.
பண்ட` (வயிறு)    செங்கிருதம்
பேட (வயிறு)      இந்தி, மராத்தி, கு~ச்^ராத்தி, வங்காளம், பஞ்சாபி, ஒரியா.         
கடி, கடிக (இடுப்பு) மலையாளம், கன்னடம், இந்தி, செங்கிருதம், 
                  கு~ச்^ராத்தி, வங்காளம், ஒரியா.

பானையைக் குறிப்பதான மேற்கண்ட சொற்கள் மட்டுமின்றி, பானையைப் போலவே பொருட்களைச் சேமித்து வைக்க உதவுகின்ற பிற கலங்களான சாடி, தசும்பு, புட்டில், குதிர், பக்கு, துருத்தி போன்ற தமிழ்ச்சொற்களும் கீழ்க்காணும் பிற மாநில மொழிகளில் திரிபடைந்து வயிற்றையும் இடுப்பினையும் குறிக்கப் பயன்படுவது வியப்பினைத் தருகின்றது.

சாடி >>> ச^ட்டர
துருத்தி >>> துந்த >>> தோந்த >>> தொந்தி
குதிர் >>> உத`ர
பக்கு >>> பக்காச`ய, பூ^க்
புட்டில் >>> புட்ட >>> ப்ருச்~ட
புட்டில் >>> பொ`ட்டு^
தசும்பு >>> க்சு`தா^ (தலைகீழ்த் திரிபு) >>> சூதர்

சொல்வடிவம்       பேசப்படும் மொழிகள்

ச^ட்டர (வயிறு)     கன்னடம், இந்தி, செங்கிருதம், மராத்தி, 
                   கு~ச்^ராத்தி, வங்காளம், பஞ்சாபி`.
துந்த (வயிறு)       செங்கிருதம்
தோந்த (வயிறு)     இந்தி
தொந்தி (வயிறு)    கன்னடம், மலையாளம், இந்தி, செங்கிருதம், தெலுங்கு.
உத`ர (வயிறு)      மலையாளம், இந்தி, செங்கிருதம் மராத்தி, 
                   கு~ச்^ராத்தி, வங்காளம், பஞ்சாபி`, ஒரியா.
பக்காச`ய (வயிறு)  இந்தி, செங்கிருதம்
பூ^க் (வயிறு, பசி)  இந்தி, கு~ச்^ராத்தி
பொ`ட்டு^ (வயிறு)  தெலுங்கு
க்சு`தா^ (வயிறு)    இந்தி
புட்ட (இடுப்பு)      இந்தி
சூதர் (இடுப்பு)      இந்தி
ப்ருச்~ட (இடுப்பு)   செங்கிருதம், இந்தி.

சங்ககாலத் தமிழர்கள் பயன்படுத்திய பல சொற்களில் கடும்பு என்ற சொல்லுமுண்டு. இச்சொல்லுக்குச் சுற்றம் என்ற பொருளையே தமிழ் அகராதிகள் கூறுகின்றன. ஆனால் இச்சொல்லுக்கு வயிறு என்ற பொருளுமுண்டு. உண்மையில் இச்சொல்லுக்குச் சுற்றம் என்ற பொருளைக் காட்டிலும் வயிறு என்ற பொருளே பல இடங்களில் மிகப் பொருத்தமாகவும் அமைகின்றது. கடும்பு என்னும் சொல்லுக்கு வயிறு என்னும் பொருள் மிகப் பொருத்தமாக அமைந்திருக்கும் சில சங்கப் பாடல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

என்பு எழு மருங்கின் கடும்பின் கடும் பசி - புறம். 68
கடும்பின் கடும் பசி தீர - புறம் 163
பெரிதால் அத்தை என் கடும்பினது இடும்பை - புறம் 169
பாணர் காண்க இவன் கடும்பினது இடும்பை - புறம் 173

மேற்பாடல்களில் வரும் கடும்பின் பசி, இடும்பை என்பது வயிற்றுப் பசியாகிய துன்பத்தைக் குறிப்பதாகும். துன்பங்கள் அனைத்திலும் மிகப் பெரிய துன்பம் வயிற்றுப் பசியாகும். இதனால்தான், பசிவந்தால் பத்தும் பறந்துபோகும் என்பார்கள். பத்தும் பறக்கின்றதோ இல்லையோ பற்றும் அதாவது அன்பு, பாசம், நேசம் என்றெல்லாம் சொல்கிறோமே அந்தப் பற்று அனைத்தும் பறந்துவிடும் என்பது உண்மைதான். தமிழ் அகராதிகள் கடுப்பு என்னும் சொல்லுக்கு வயிறு என்ற பொருளைக் காட்ட மறந்துவிட்டாலும் பிறமாநில மொழிகள் அச்சொல்லைச் சற்றே திரித்து வயிற்றையும் இடுப்பையும் குறிக்கப் பயன்படுத்துவதனைக் கீழே பாருங்கள்.

கடும்பு >>> கடுப்பு
கடும்பு >>> கம்ப`ர >>> கமர

சொல்வடிவம்        பேசப்படும் மொழிகள்

கடுப்பு (வயிறு)       தெலுங்கு
கம்ப`ர (இடுப்பு)       மராத்தி
கமர (இடுப்பு)         இந்தி, மராத்தி, வங்காளம், பஞ்சாபி`.

தமிழ்மொழியில் இடுப்பினைக் குறிப்பதற்கு நடு, அரை போன்ற சொற்களையும் பயன்படுத்துகிறோம். இச்சொற்களும் பிற மாநில மொழிகளில் சற்றே திரிபடைந்து இடுப்பினைக் குறிக்கப் பயன்படுகின்றன. இதைப் பற்றியும் கீழே காணலாம்.

இடுப்பு >>> இடுப்பு - மலையாளம்
அரை >>> அர - மலையாளம்
நடு >>> நடு`, நெடு`வு - கன்னடம், நடு`மு - தெலுங்கு.

தொடையும் காலும்:

இடுப்புக்குக் கீழே இரண்டாகப் பிரிந்து செல்லும் கால்களின் மேல்பகுதியைத் தொடை என்று கூறுகிறோம். பல்வேறு பூக்களை இணைத்துச் செய்த மாலையினைத் தொடை என்று தமிழ் இலக்கியங்கள் கூறுவதைப் போல கால்களை இடுப்புடன் இணைக்கும் பகுதியாக விளங்குவதால் இவ் உறுப்புக்குத் தொடை என்ற பெயர் சாலப் பொருத்தமாகவே அமைந்துள்ளது. தொடை என்றும் துடை என்றும் தமிழில் அழைக்கப்படும் இவ் உறுப்பானது கீழ்க்காணுமாறு பிறமாநில மொழிகளில் குறிப்பிடப் படுகின்றது.

தொடை >>> தொடெ` - கன்னடம், தொட` - தெலுங்கு.
துடை >>> துட - மலையாளம்

பொதுவாக, ஆண்மக்களின் வலிமைக்குப் பேர்போன உடல் உறுப்புக்கள் இரண்டாகும். ஒன்று: உடலின் மேல்பகுதியில் அமைந்துள்ள தோள். இரண்டு: உடலின் கீழ்ப்பகுதியில் அமைந்திருக்கும் தொடை. ஒருவர் நடக்கும்போதோ ஓடும்போதோ அவரது உடலின் ஒட்டுமொத்த எடையைத் தாங்குவது தொடைப்பகுதி தான். தொடைகளில் வலிமை இல்லாதபோது ஒருவரால் கால்களை ஊன்றி நடக்கவோ ஓடவோ இயலாமல் போவதும் இதனால் தான். கால்களைத் தரையில் ஊன்றி நடக்க உதவும் இயற்கையான ஊன்று / ஊற்றுக்கோலாக விளங்கும் தொடைப் பகுதியினைக் குறிக்கப் பிறமாநில மொழிகள் ஊற்று என்னும் தமிழ்ச்சொல்லைச் சற்றே திரித்துப் பயன்படுத்துவதைப் பாருங்கள்.

ஊற்று >>> ஊறு - மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, 
           செங்கிருதம், கு~ச்^ராத்தி, வங்காளம்.

சங்கத் தமிழில் தொடை என்னும் உடல் உறுப்பினைக் குறங்கு என்ற சொல்லாலும் குறித்தனர். பெண்களைப் பொருத்தமட்டிலும் குறங்கு என்ற சொல் அவர்களது கண்ணிமையைக் குறித்திருக்க, ஆண்கள் மற்றும் விலங்குகளின் தொடையைக் குறிக்கவும் இச்சொல் பயன்பட்டிருக்கிறது. குறங்கு என்னும் தமிழ்ச்சொல்லானது பிறமாநில மொழிகளில் எப்படியெல்லாம் திரிந்து தொடை மற்றும் கால்பகுதியைக் குறிக்கப் பயன்படுகின்றது என்பதைக் கீழே காணலாம்.

குறங்கு >>> றாங்க~ >>> றான, சா^ங்க~, டாங்க~
குறங்கு >>> குற

சொல்வடிவம்       பேசப்படும் மொழிகள்

றாங்க~ (தொடை)   கு~ச்^ராத்தி
றான (தொடை)     இந்தி
சா^ங்க~ (தொடை)  இந்தி, கு~ச்^ராத்தி, ஒரியா
டாங்க~ (கால்)      இந்தி, மராத்தி, கு~ச்^ராத்தி.
குற (கால்)         வங்காளம்  

காலும் காலடியும்:

சங்ககாலம் தொட்டு இன்றுவரையிலும் வழங்கப்பட்டு வரும் பல்வேறு தமிழ்ச் சொற்களில் கால் என்பதும் ஒன்றாகும். இச்சொல் பிற மாநில மொழிகளில் எப்படித் திரிந்து வழங்கப்படுகின்றது என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கால் >>> கால் - மலையாளம், கன்னடம்,
கால் >>> காலு - தெலுங்கு

நடத்தல், நிற்றல், ஓடுதல், குதித்தல், தாவுதல், உதைத்தல் போன்ற பல்வேறு வினைகளைச் செய்வதற்குக் கால்கள் உதவி புரிந்தாலும் இவற்றுள் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க முதன்மைப் பணியாக நடத்தல் என்னும் இடப்பெயர்ச்சி வினையைச் சொல்லலாம். நடத்தல் என்னும் வினையைக் குறிப்பதான பெயர்தல் என்னும் வினைச்சொல்லானது .பிறமாநில மொழிகளில் எவ்வாறு மாற்றமடைந்து நடக்க உதவும் கால் மற்றும் காலடியைக் குறிப்பதற்குப் பயன்படுத்தப் படுகின்றது என்பதைக் கீழே காணலாம்.

பெயர் >>> கெ`ச்செ^ - கன்னடம். (பெயர் >>> கெ`ச`று என்று ஆவதைப் போல)
பெயர் >>> பைர் - இந்தி
பெயர் >>> பாய - இந்தி, மராத்தி, வங்காளம்.

தமிழில் கதி என்னும் பழஞ்சொல்லுண்டு. இச்சொல்லுக்குப் பல பொருட்கள் இருந்தாலும் நடை என்ற பொருளுமுண்டு. காற்றைப் போலப் பாய்ந்து செல்லும் வலிமையைக் கொண்ட குதிரையானது நடையேதும் இன்றித் தங்கியிருந்த நிலையைக் கீழ்க்காணும் பாடல் கூறுகிறது.

கால் இயல் கலிமா கதி இன்றி வைகவும் - புறம் 229

சங்கத் தமிழில் நடையைக் குறிக்கப் பயன்பட்ட கதி என்னும் தமிழ்ச்சொல்லானது சற்றே திரிந்து நடக்க உதவும் காலினையும் காலடியினையும் குறிக்கக் கீழ்க்காணும் மொழிகளில் பயன்படுத்தப் படுகின்றது.

கதி >>> கத`ம் - இந்தி, செங்கிருதம், வங்காளம்.

கால் என்னும் சொல்லைப் போலவே அடி என்பதும் தமிழில் வழங்கப்பட்டு வரும் பழஞ்சொல்லாகும். தமிழ்மொழியில் காலடியைச் சுருக்கமாக அடி என்றே குறிப்பது வழக்கம். இச்சொல் பிறமாநில மொழிகளில் காலடியைக் குறிப்பதற்கு வழங்கப்படும் விதத்தைக் கீழே பார்க்கலாம்.

அடி >>> அடி` - மலையாளம், கன்னடம்
அடி >>> அடு`கு~ - தெலுங்கு

மனிதர்கள் உட்பட பலவகையான விலங்குகள் ஆகட்டும் பறவைகள் ஆகட்டும் அவை மண்ணில் நடக்கும்போது தமது கால்சுவடுகளை மண்ணில் விட்டுச் செல்வதைப் பார்த்திருக்கிறோம். மண்ணில் காணப்படும் கால்தடத்தினைக் கொண்டே என்னவகையான விலங்கு அங்கே நடந்து சென்றுள்ளது என்பதைப் புரிந்துகொள்ள முடியும். இப்படி ஒரு விலங்கின் அடையாளத்தினை மண்ணில் பதிவுசெய்ய உதவுவது அதன் காலடிகளே ஆகும் என்ற நிலையில், பதிதல் என்னும் சொல்லானது சற்றே திரிந்து பிற மாநில மொழிகளில் பதிதல் வினையைச் செய்யும் உறுப்பான காலடியைக் குறிக்கப் பயன்படுத்தப் படுவது வியப்பூட்டுவதாக உள்ளது.

பதி >>> பாத` - மலையாளம், செங்கிருதம், வங்காளம், தெலுங்கு, கன்னடம், இந்தி.

பதிதல் வினைக்குரிய காலடிகள் போற்றுதலுக்கு உரியனவாகவும் திகழ்கின்றன. தற்காலத்தில் சில மனிதர்களின் காலடிகளைத் தொட்டு வணங்கி வழிபடுகிறோம். ஆனால் சங்ககாலத்தில் கந்து எனப்படும் மரத்தின் கால்பகுதியில் கடவுள் உறைவதாக நம்பி அதனை வழிபட்டார்கள். அக் கந்தின் காலடியில் பூக்களை நீருடன் சொரிந்தும் சந்தனம் முதலான நறுமணப் பொருட்களைப் பூசியும் பணிந்து எழுந்தான் சங்கத் தமிழன். இப்படி இறையை வணங்கும் செயலினைப் பரவுதல் / பராவுதல், சார்த்துதல் ஆகிய சொற்களால் குறிப்பிடுகின்றன சங்ககால இலக்கியங்கள். ஒருசில பாடல்கள் கீழே சான்றாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

பராவு அரு மரபின் கடவுள் காணின் - மலை 230
வழிபட்ட தெய்வம் தான் வலி என சார்ந்தார்கண் - கலி 132

பரவுதலுக்கும் சார்த்துதலுக்கும் உரியதாகிப்போன காலடியைக் குறிக்க இத் தமிழ்ச்சொற்களைச் சற்றே திரித்துப் பிறமாநில மொழிகள் பயன்படுத்துவதைக் கீழே பார்க்கலாம்.

பரவு >>> பாவ்ம் - இந்தி
சார் >>> சரண் - செங்கிருதம், இந்தி, மலையாளம், வங்காளம், தெலுங்கு, கன்னடம்.

நகம்:

கைவிரல்கள் மற்றும் கால்விரல்களின் முடிவில் காணப்படும் மிகச்சிறிய புற உறுப்புக்களை நாம் நகம் என்ற சொல்லால் தற்காலத்தில் குறிப்பிட்டு வருகிறோம். பிற்காலத் தமிழ் இலக்கியங்களில் ஒன்றான கம்பராமாயணத்தில் தான் நகம் என்ற சொல்லின் பயன்பாடு முதன்முதலாகக் காணப்படுவதால் நகம் என்ற சொல் வடமொழியின் திரிபு என்று கூறுவார் உளர். இவ்வாறு கூறுவோர் இச்சொல் நுகம் என்ற தமிழ்ச்சொல்லின் திரிபுதான் என்பதை அறியாமல் கூறுகின்றனர். இதைப்பற்றி விளக்கமாக இங்கே காணலாம்.

சங்ககாலத் தமிழன் நகத்தைக் குறிப்பிடுவதற்குப் பயன்படுத்திய சொல் உகிர் என்பதாகும். இச்சொல் பிற மாநில மொழிகளில் கீழ்க்காணுமாறு திரிந்து நகத்தைக் குறிக்கப் பயன்படுகின்றது.

உகிர் >>> உகு~ரு >>> கோ~ரு

சொல்வடிவம்      பேசப்படும் மொழிகள்

உகு~ரு            கன்னடம்
கோ~ரு            தெலுங்கு

தமிழில் நுகம் என்ற பழஞ்சொல்லுண்டு. இச்சொல்லுக்கு மாடுகளின் கழுத்தின்மேல் இடப்படும் வளைந்த மரக்கழி என்று மட்டுமே இற்றைத் தமிழ் அகராதிகள் பொருள் உரைக்கின்றன. உண்மையில் இச்சொல் இக்கழியினை மட்டுமின்றி, இக்கழியின் நடுப்பகுதியில் இருந்து பின்னோக்கி நீண்டுசெல்லும் தடி (நுகத்தடி) யினையும் அத்தடியின் முடிவில் மண்ணை உழுவதற்காக அமைக்கப்பட்டிருக்கும் கூரிய முனை கொண்ட கலப்பையினையும் ஆகுபெயராய்க் குறிக்கும். நுகம் என்ற சொல்லானது கலப்பையின் கூர்முனையினைக் குறிக்கின்ற பொருளில் கீழ்க்காணும் பாடலில் பாடப்பட்டிருப்பதைப் பார்க்கலாம்.

கொடுமேழி நசை உழவர் நெடுநுகத்துப் பகல் போல
நடுவு நின்ற நல் நெஞ்சினோர் - பட். 206

' வளைந்த கலப்பையினைக் கொண்ட உழவர்கள் நீண்ட நுகத்தினைக் கொண்டு செய்த பகுத்தலைப் போல நடுநிலைமை கொண்ட நல்ல நெஞ்சத்தினை உடையவர்கள் ' என்பது இதன் பொருளாகும். கலப்பையின் கூர்முனை கொண்டு மண்ணில் கிழிக்கப்படும் கோடானது எப்பக்கமும் சாயாமலும் வளையாமலும் நேராக இருக்கும் தன்மையது ஆதலால் இதனை நேர்மை கொண்ட நெஞ்சத்துடன் ஒப்பிட்டு இப்பாடல் வரிகள் கூறுகின்றன. இப்பாடலில் வரும் உவமையின் விளக்கத்தில் இருந்து நுகம் என்ற சொல்லுக்குக் கலப்பையின் கூர்முனை என்ற பொருள் இருப்பது தெரியவருகிறது. அதுமட்டுமின்றி, கீழ்க்காணும் பாடல்களில் வரும் நுகம் என்ற சொல்லானது கூரியமுனை கொண்ட படைக்கருவியான வேல் என்னும் பொருளில் வந்துள்ளது.

நுகம் படக் கடந்து நூழிலாட்டி - மலை 87
நுகம் படக் கடக்கும் பல் வேல் எழினி - குறு 80
நீயும் நும் நுகம் கொண்டு இனும் வென்றோய் - பதி. 63

போரின்போது வீசப்பட்ட கூர்முனைகொண்ட பல வேல்களைக் கடந்துசென்று எதிரிகளைக் கொன்றுகுவித்த செய்திகளை மேற்பாடல் வரிகள் எடுத்து இயம்புகின்றன. மனிதர்கள் போரின்போது கூரிய வேல்கொண்டு தாக்குவதைப் போல விலங்குகளும் பறவைகளும் பிறவற்றுடன் சண்டையிடும்போது தமது கால் / கை விரல்களின் ஈற்றில் உள்ள கூரிய உகிர்கொண்டு தாக்கும். இவ்வாறு கூர்மைப் பண்பு மற்றும் பயன்பாடு போன்றவற்றில் கலப்பை , வேல் ஆகியவற்றுடன் இருக்கும் ஒப்புமையால் நுகம் என்ற தமிழ்ச்சொல்லே நகம் என்று மருவி விரல்களில் இருக்கும் கூரிய உகிரினைக் குறிக்கப் பயன்பட்டது என்று உறுதியாகக் கூறலாம். இனி, நகம் என்ற தமிழ்ச்சொல்லானது பிறமாநில மொழிகளில் எவ்வாறு திரிந்து உகிரினைக் குறிக்கப் பயன்படுகின்றது என்று கீழே காணலாம்.

நுகம் >>> நகம் >>> நக >>> நகு~ >>> நாக்குன்

சொல்வடிவம்       பேசப்படும் மொழிகள்

நகம்                மலையாளம்
நக                  தெலுங்கு, கன்னடம், இந்தி, செங்கிருதம், மராத்தி, 
                     கு~ச்^ராத்தி, வங்காளம், ஒரியா.
நகு~                 பஞ்சாபி`
நாக்குன்             இந்தி

மயிர்:

சங்ககாலம் தொட்டு இன்றுவரை பயன்பாட்டில் இருந்துவருகின்ற பல்வேறு தமிழ்ச்சொற்களில் ஒன்றாக மயிர் என்னும் சொல்லையும் கூறலாம். முடி, கூந்தல், அளகம் ஆகியவை மயிரைக் குறிக்கும் பிற சொற்களாகும். இச்சொற்கள் பிறமாநில மொழிகளில் வழங்கும் விதங்களைக் கீழே பார்க்கலாம்.

முடி >>> முடி - மலையாளம்
கூந்தல் >>> கூந்தல் - மலையாளம்
கூந்தல் >>> கூத`லு - கன்னடம்
அளகம் >>> அளக - கு~ச்^ராத்தி

பொதுவாக, மனிதர்களின் தலைமயிர் என்பது நிறம் சார்ந்த ஒன்றாகும். கருநிறம், வெண்ணிறம், செம்பட்டை நிறம் என்று பல நிறங்களில் தலைமயிர் காணப்படுவதுண்டு. மனிதர்களின் தலைமயிரின் நிறமானது இனம், வயது மற்றும் பராமரிப்பிற்கு ஏற்ப மாறுவதுண்டு. சரியாக எண்ணை பூசிப் பராமரிக்கப்படாத தலைமயிர் செம்பட்டை நிறம் கொள்வதும் வயது முதிரும்போது வெண்ணிறமாய் மாறுவதும் கண்கூடு. மயிர் என்னும் சொல்லில் வரும் மய் (மை) என்னும் வேர்ச்சொல் நிறம் சார்ந்த ஒன்றாக இருப்பது ஈண்டு குறிப்பிடத்தக்கதாகும். இவ்வாறு மனிதர்களின் தலைமயிரானது நிறத்துடன் வெகுவாகத் தொடர்புடைய நிலையில், நிறத்தைக் குறிக்கும் பல்வேறு தமிழ்ச்சொற்கள் பிறமாநில மொழிகளில் சற்றே திரிபடைந்து மயிரைக் குறிக்கப் பயன்படுகின்றன என்பது வியப்பூட்டும் செய்தியாகும்.

கேழ் >>> கேச - மலையாளம், கன்னடம், இந்தி, மராத்தி, செங்கிருதம், ஒரியா
நிறம் >>> ரோம, லோம - மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, செங்கிருதம், வங்காளம்
வண்ணம் >>> வேணி - மலையாளம், செங்கிருதம்
உருவம் >>> ரோவாம் - இந்தி

மண்ணில் விளையும் புற்களைப் போலத் தலையிலும் தாடைப்பகுதியிலும் மயிரானது பரவலாகவும் அடர்ந்தும் வளர்வதால், மயிரினைப் புல்லுடன் ஒப்பிட்டுக் கூறுவது தமிழ் இலக்கிய வழக்கம். கீழ்க்காணும் சங்கப் பாடல்கள் ஆண்மக்களின் தலைமயிரினைப் புல்லுடன் ஒப்பிட்டுக் கூறுகின்றன.

புல் உளை குடுமி புதல்வன் பயந்து - அகம் 176
புல் உளை குடுமி புதல்வன் பன் மாண் - புறம் 160
புல் உளை குடுமி புதல்வன் தந்த - புறம் 273

மேற்பாடல்களில் வரும் புல் உளைக் குடுமி என்பது புல்லைப் போலத் தொங்குகின்ற தலைமயிரினைக் குறிப்பதாகும். கீழ்க்காணும் சங்கப் பாடல்கள் ஆண்மக்களின் தாடைப்பகுதியில் வளர்ந்துள்ள ஒழுங்கற்ற மயிரினைப் புல்லுடன் ஒப்பிட்டுக் கூறுகின்றன.

புலம் புக்கனனே புல் அணல் காளை - புறம் 258
தோல் மிசை கிடந்த புல் அணலோனே - புறம் 310
புலி போத்து அன்ன புல் அணல் காளை - பெரும் 138

மேற்பாடல்களில் வரும் புல் அணல் என்பது புல்லைப் போன்று ஒழுங்கற்று வளர்ந்திருக்கும் தாடி மயிரைக் குறிப்பதாகும். இவ்வாறு மென்மை, பரவலாகத் தோன்றி வளர்தல் மற்றும் வளையும் தன்மை ஆகிய பண்புகளால் புல்லுடன் பெரிதும் ஒத்திருப்பதால், புல் என்ற தமிழ்ச்சொல்லையே சற்று திரித்து மயிரினைக் குறிக்கப் பிறமாநில மொழிகள் பயன்கொண்டன என்று கூறலாம்.

புல் >>> பா`ல - இந்தி, கு~ச்^ராத்தி, வங்காளம், பஞ்சாபி`, ஒரியா.
புல் >>> வால - பஞ்சாபி`.

முடிவுரை:

உடல் உறுப்புக்களைக் குறிப்பதான தமிழ்ச்சொற்கள் பலவும் இந்தியாவின் பிற மாநில மொழிகளில் திரிபுற்று வழங்கப்படுவதை மேலே விரிவாகக் கண்டோம். வடமொழி உட்பட பிற மாநில மொழிகளின் ஒவ்வொரு சொல்லுக்குமான வேர் தமிழில் இருப்பது பெருமையையும் அதேசமயம் பெரும்வியப்பையும் அளிப்பதாக உள்ளது. அதுமட்டுமின்றி, பல தமிழ்ச்சொற்களுக்கு இற்றைத் தமிழ் அகராதிகள் சுட்டிக்காட்டாத பல புதிய பொருட்கள் இருப்பதையும் இக்கட்டுரையில் கண்டோம். இப்புதிய பொருட்களைத் தமிழ் அகராதிகள் கூடிய விரைவில் சேர்த்துக்கொண்டு தமிழ்மொழிக்கு வளம்சேர்க்க வேண்டும் என்று இக்கட்டுரை முன்மொழிகிறது.


4 கருத்துகள்:

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.