திங்கள், 4 பிப்ரவரி, 2019

செம்மொழித் திருமண மந்திரம் - மாமழை உருமின்


முன்னுரை:

தொல்காப்பியக் கற்பியலில் திருமணம் குறித்த கீழ்க்காணும் பாடல் உண்டு.

பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப. – 143

மேற்பாடலில் வரும் ஐயர் என்பது சான்றோர்களையும் கரணம் என்பது திருமணச் சடங்கு போன்ற ஒன்றையும் குறிக்கும் என்பதே பெரும்பாலான அறிஞர்களின் கருத்தாகும். ஏறத்தாழ 3000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழரது பண்பாட்டில் தோன்றிவிட்ட திருமணச் சடங்கில் காலப்போக்கில் பல மாறுதல்கள் ஏற்பட்டன. அப்படித் தோன்றிய பல மாறுதல்களில் ஒன்றுதான் “ மாங்கல்யம் தந்துனானே ..” என்று துவங்கும் சமற்கிருத மந்திரம். இந்த மந்திரத்தின் பொருளைப் பற்றியும் இதற்கு மாற்றாக நாம் செய்யவேண்டியதைப் பற்றியும் இக் கட்டுரை விரிவாக அலசுகிறது.

மாங்கல்யம் தந்துனானே… தேவையா?

மாங்கல்யம் தந்துனானே .. என்று துவங்கும் சமற்கிருத மந்திரப் பாடலில் வரும் சில வரிகளின் பொருட்கள் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டும் பேசப்பட்டும் வருகின்றன. ஒருசிலர் அவ் வரிகளுக்கு வேண்டுமென்றே இட்டுக்கட்டி வேறுபொருள் உரைத்தாலும் அவ்வரிகளுக்குப் பெரும்பான்மையோர் கொள்ளும் பொருள் இதுதான்:

மணப்பெண்ணே, முதலில் உன்னை
சோமன் ஆகிய சந்திரன் மணந்தான். பின்னர்
கந்தர்வன் மணந்தான். பின்னர்
அக்னி மணந்தான். பின்னர்
நான்காவதாக நான் உன்னை மணக்கிறேன்.

எவ்வளவு கேவலமான பொருள் பாருங்கள். !!!. மூன்றுபேர் ஏற்கெனவே மணம்கொண்ட பெண்ணை நான்காவதாக மணம் செய்துகொள்கிறேன் என்று இதன் பொருள் புரியாமலேயே கூறித் தாலிகட்டிக் குடும்பம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் தமிழர்கள். இப்பாடலின் பொருளைத் தமிழில் கூறினால் யாராவது தாலிகட்டுவாரா?. ஒருபோதும் யாரும் செய்யமாட்டார்.

இப்படி ஒரு வெட்கக்கேடு ஏன் நிகழ்ந்தது?. தமிழர்கள் நடத்தும் திருமணச் சடங்கில் தமிழர்கள் யாருக்கும் புரியாத சமற்கிருத மொழியில் மந்திரம் சொல்லப்படுவதால் தானே?. இப்படி ஒரு வெட்கக்கேட்டைத் தரக்கூடிய சமற்கிருத மந்திரம் தமிழர்களுக்கு இன்னும் தேவைதானா?. தேவையில்லை. தூக்கி வீசிடுவோம் அதனைக் குப்பைமேட்டில்.

சாதி-சமய-மத சார்பற்றத் திருமண மந்திரம்:
 
சமற்கிருத மந்திரத்தைத் தூக்கி எறிந்துவிட்டால் திருமண நிகழ்வில் வேறு எதை நாம் ஓதுவது?. என்ற கேள்வி எழுகிறது. சமற்கிருத மந்திரத்தை ஏற்காத தமிழர்களில் ஒருசாரார் எதையுமே ஓதாமல் தாலி கட்டலாம் என்றும், இன்னொரு சாரார் சைவம், வைணவம் போல அவரவர் உகப்புக்கேற்ப சமயம் சார்ந்த பாடல்களை ஓதித் தாலி கட்டலாம் என்றும் கூறிவருகின்றனர். இவ்விரு கருத்துக்களுமே உகந்ததாகத் தோன்றவில்லை. காரணம்,

திருமண நிகழ்வில் மணப்பெண்ணும் மணமகனும் எதையும் கூறாமல் தாலிகட்டுவதைக் காட்டிலும் பெரியவர்கள் முன்னிலையில் மந்திரம் போன்ற ஒன்றைக் கூறி உறுதி பூணுவது திருமண உறவினை வலுப்படுத்துவதாக அமையும். அப்படிக் கூறப்படும் மந்திரமானது சாதி, சமயம், மதம் சாராமல் பொதுவாக இருப்பது நல்லது. ஏனென்றால், சாதி, சமயம், மதம் கடந்து இக்காலத்தில் பல கலப்புத் திருமணங்கள் நடந்து வருகின்றன. ஆகவே, இதுபோன்ற ஒரு மந்திரம் அனைவருக்கும் பொதுவாக அமைந்துவிடும் என்பதுடன் சாதி-சமய-மத நல்லிணக்கம் பேணவும் வழிவகுக்கும்.

செம்மொழித் திருமண மந்திரம் (செந்திரம்):

பொதுவாக, எந்தவொரு மந்திரமும் எளிதில் புரியாத வண்ணம் பொருள்செறிவுடன் இருக்கும். தமிழ்மொழியிலும் பல மந்திரங்கள் உண்டு. திருமந்திரத்தை இதற்கொரு சான்றாகக் காட்டலாம். அவ்வகையில், செம்மொழியாகிய தமிழ்மொழியின் சங்க இலக்கியச் சொற்களைக் கொண்டு திருமணச் சடங்குகளுக்காக இயற்றப்பட்டதே செம்மொழித் திருமண மந்திரம். சுருக்கமாக, இதனைச் செந்திரம் என்று கூறலாம்.

இம் மந்திரமானது மணமகள் வேட்கை, மணமகன் பூட்கை ஆகிய இரண்டு பகுதிகளைக் கொண்டு கட்டமைக்கப் பட்டுள்ளது. முதலாவதாக வரும் மணமகள் வேட்கை என்பது மணமகளானவள், தன்னை மணம் செய்யப்போகும் மணமகனிடம் தனது உள்ளத்து விருப்பங்களைக் கூறி அவற்றை நிறைவேற்றக் கோருவதாக அமைந்துள்ளது. இரண்டாவதாக வரும் மணமகன் பூட்கை என்பது மணமகனானவன், தான் மணம்செய்யப் போகும் மணமகளின் உள்ளத்து வேட்கைகளைக் கட்டாயம் நிறைவேற்றுவேன் என்று உறுதிமொழி கூறுவதாக அமைந்துள்ளது. இந்த இரண்டு பகுதிகளையும் கீழே விரிவாகப் பொருள் விளக்கத்துடன் காணலாம்.

மணமகள் வேட்கை:

மாமழை உருமின் || பல்லியம் கறங்க ||
பூமழை பொழிய || வெண்நறை பொங்க ||
தூமொழி மாந்தர் || ஓராங்கு வாழ்த்த ||
தூர்பெழு துகளது || விண்ணுற எய்த ||
ஆர்ப்புடன் பாயும் || பொதுவர் அன்னதோர் ||
வீரமே தலையா || கொண்டுஎந் நாளும் ||
இன்னல் உற்றுழி || முன்னின் றகற்றி ||
கன்னல் அன்னதோர் || கனிமொழி பயிற்றி ||
அண்ணாந் தேந்திடும் || ஒண்ணுதல் தளரினும் ||
நன்னெடுங் கூந்தல் || நரையொடு முடிப்பினும் ||
என்னகம் பிரியா || உயிர்ப்பிணிக் காதலின் ||
பெண்ணியம் போற்றிட || வேண்டுவென் யானே. ||

பொருள் விளக்கம்:

கார்மேகங்கள் எழுப்பும் இடியோசை போல பல இசைக்கருவிகள் டும்டும் டுடும்டும் என்று பேரொலியுடன் முழங்க, பூவிதழ்கள் மழைபோலச் சொரிய, வெண்ணிற நறுமணப் புகைப் பொங்கி எழ, தூய உள்ளம் கொண்ட மனிதர்கள் பலரும் ஒன்றுகூடி வாழ்த்த, நிறைந்து எழுகின்ற புழுதியானது விண்ணைச் சென்று முட்ட, பேரொலியுடன் பாய்கின்ற மாடுபிடி வீரர்களைப் போல வீரத்தையே எந்நாளும் தலைமேற்கொண்டு, எனக்குத் துன்பம் வந்தபோது முன்னின்று அதனை நீக்கியும், கரும்பினைப் போல இனிமையான மொழிகளை என்னிடத்தில் பேசியும், தலைநிமிர்த்திப் பார்த்து நீர் புகழும் எனது கண்கள் சோர்வடைய, நீண்ட எனது கூந்தல் நரைத்துப் போகின்ற முதுமையிலும் என்னைவிட்டுப் பிரியாமல், என் உயிருடன் கலந்த காதலைக் கொண்டவனாக, எனது பெண்மையைப் போற்றவேண்டும் என்று நான் உம்மை வேண்டுகிறேன்.

மணமகன் பூட்கை:

மண்ணகம் பிறழினும் || மாதிரம் பொய்ப்பினும் ||
கண்ணிமை போலநம் || காதலைக் காக்குவென் ||
பொம்மல் விசும்பின் || பெயல்கலந் தேற்ற ||
செம்புலப் பெயல்நீர் || போலஎந் நாளும் ||
அன்புடை நெஞ்சினில் || வீரமும் கொண்டே ||
உன்னகம் விழைந்ததை || உறுத்துவென் யானே. ||

பொருள் விளக்கம்:

இந்தப் பூமியின் சுழற்சியே தறிகெட்டுப் போனாலும் திசைகள் அனைத்தும் தடம்மாறிப் போனாலும் கண்ணிமையைப் போல நான் நமது காதலை நெறிகெடாமல் காப்பாற்றுவேன். திரண்ட மேகங்கள் பொழிந்த மழைநீர் கலந்ததால் குழைந்த செம்மண் நிலம்போல எந்நாளும் உன்மேல் கொண்ட அன்பினால் குழைந்த என் நெஞ்சில் வீரமும் மிக்கவனாக உன் உள்ளம் விரும்பும் அனைத்தையும் நான் ஈடேற்றுவேன்.

செயல்முறை:

மேற்கண்ட செம்மொழித் திருமண மந்திரமானது முற்றிலும் சாதி-சமய-மதச் சார்பற்றதாய் விளங்குவதைப் பார்க்கலாம். அதுமட்டுமின்றி, பெரியோர்கள் முன்னிலையில் மணமகளைக் காப்பாற்றுவேன் என்று மணமகன் உறுதியும் பூண்கிறார். திருமண உறவுக்கு வலுசேர்ப்பதாய் அமைந்துள்ள இந்த மந்திரத்தை யாரும் மனப்பாடம் செய்யத் தேவையில்லை. 

ஒரு அட்டையில் அச்சாகி இருக்கும் இம் மந்திரத்தினைத் திருமணச் சடங்கின்போது மதிப்பிற்குரிய பெரியவர் ஒருவர் கூறக்கூற மணமக்கள் அதனைத் திரும்பக் கூறவேண்டும். முதலில் மணமகள் வேட்கையின் வரிகளை இரண்டு இரண்டு சீராக ஒரு பெரியவர் கூற மணமகள் அவ்வாறே அதனைத் தொடர்ந்து கூறவேண்டும். மணமகள் வேட்கை முழுவதும் முடிந்ததும் அதன் பொருளை அனைவரும் கேட்கும்படி வாசிக்க வேண்டும். மணமகன் பூட்கையின் வரிகளை மேற்சொன்னவாறே மணமகன் திரும்பக் கூறி உறுதிமொழி ஏற்கவேண்டும். அதன் பொருளை அனைவருக்கும் புரியும்படி வாசிக்க வேண்டும். அவ்வளவுதான்!. அதன்பின்னர் தாலிகட்டுதல் முதலான நிகழ்ச்சிகளைத் தொடரலாம்.

தமிழரின் மானத்தைக் கப்பலேற்றி வருகின்ற சமற்கிருத மந்திரம் இனியும் தமிழரின் திருமண நிகழ்ச்சியில் தொடரக்கூடாது என்பதில் உறுதியோடு இருப்போம். புதிய செம்மொழித் திருமண மந்திரத்தை ஆதரித்துச் செயல்படுத்திச் சாதி-சமய-மத நல்லிணக்கம் பேணுகின்ற புதிய தமிழ்ச் சமுதாயம் படைப்போம். 

துணிந்து ஓதுவோம் செம்மொழி மந்திரம் !
துரத்தி ஓட்டுவோம் மறைமொழி தன்திறம் !!

7 கருத்துகள்:

 1. பார்ப்பனியம் பற்றி எழுதவும் ஐயா

  பதிலளிநீக்கு
 2. “மாங்கல்யம் தந்துனானே
  மமஜீவன ஹேதுநா
  கண்டே பத்நாமி ஸுபகே
  த்வம ஜீவ சரதஸ்சதம்!!’

  இதில் எங்கிருந்து முதல், இரண்டாவது, மூன்றாவது, நான்காவது வந்தன..?

  பதிலளிநீக்கு
 3. சோமஹ ப்ரதமோ

  விவேத கந்தர்வ

  விவிதே உத்ரஹ

  த்ருதியோ அக்னிஸடே

  பதிஸ துரியஸதே

  மனுஷ்ய ஜாஹ''''

  "நம் உடலின் ஒவ்வொரு பாகத்திற்கும் ஒரு தெய்வத் தன்மையை உருவகித்திருக்கிறோம். கண்களுக்குச் சூரிய பகவான்; கைகளுக்கு இந்திரன் - இது போன்று. இதே போல குழந்தை ஜனித்ததிலிருந்து அது வளர்ந்து பெரியவனா(ளா)கும் வரை ஒவ்வொரு பருவத்திலும் உடல் பல மாற்றங்களைச் சந்திக்கிறது. ஓவ்வொரு பருவத்தையும் ஒரு தெய்வத்திற்கு - தெய்வத் தன்மைக்குப் ஒப்புமைப் படுத்தியிருக்கிறோம்.

  இதன்படி ஒரு பெண் குழந்தை பிறந்ததிலிருந்து, ஆடை அணியும் வயது வரையான பருவம் வரை "ஸோமனின் (Moon God)ஆதிக்கத்தில்" இருக்கிறாள். அப்பருவத்தில் குழந்தை நிலவைப் போலவே "குளிர்ச்சியாக" இருக்கிறாள். (ஆண்கள் அணியும் வேஷ்டியின் பெயரும் சோமன்).

  பிறகு இந்தச் "சோம பருவத்திலிருந்து" "பூப்பெய்தும் பருவம் வரை" விளையாட்டுத் தனமும் அழகும் நிரம்பியிருக்கும் பெண் குழந்தை. இப்பருவத்தில் அவள் "கந்தர்வனின் ஆதிக்கத்தில்" இருக்கிறாள் அவள். அதாவது விளையாட்டுத்தனமும் அழகும் நிரம்பிய கந்தர்வ பருவம்!

  பூப்பெய்திய பருவத்திலிருந்து மூன்று ஆண்டுகள் வரை அவள் "அக்னியின் ஆதிக்கத்தில்" - அதாவது அக்னி போன்று எழுந்து தகிக்கும் உணர்வுகளுடன் - இருக்கிறாள்.

  அந்தக்கால கட்டத்தின் வாழ்வு நெறிகளும் முறைகளும் மறக்கப்படக்கூடாது, இந்த மந்திரங்களின் பொருளை அறியத்தலைப்படும்போது...

  பதிலளிநீக்கு
 4. எனக்கு தெரிந்த தமிழ் துறவி ஒருவர் . அவருக்கு சமஸ்கிருதமும் தெரியும். அவர் கூறியதில் படி. திருமண சடங்குகளில், முதலில் அந்த ஐயர் அப்பெண்ணை திருமணம் செய்து கொள்வார். பின்னர் அந்த பெண்ணை மணமகனுக்கு கன்னியஸ்தானம் செய்வர். அதாவது அந்த பெண்ணை மணமகனுக்கு தானமாக கொடுப்பார் என்று. இதை தான் "நான்காவதாக நான் உன்னை மணக்கிறேன்" என்று கூறுவது ஐயர் மணப்பதையே ஆகும்.

  பதிலளிநீக்கு
 5. தாங்கள் சொல்வதுபோல் அர்த்தம் இல்லையே...எனில் ஏன் இக்கட்டுரை? விளக்க வேண்டுகிறேன்.

  மாங்கல்யம் தந்துனானே– இந்த மங்கல நானை

  மம ஜீவன ஹேதுனா – என்னுடைய வாழ்க்கையில் இன்றியமையாதவளாகி இருப்பவளே

  (மம -என்னுடைய, ஜீவன – வாழ்க்கையில், ஹேதுனா- இன்றியமையாத(வளே)

  கண்டே பத்னாமி – உன் கழுத்தை சுற்றி அணிவித்து ( நம் உறவை உறுதி செய்கிறேன் )

  சுபாகே– மிகச் சிறந்த குண நலன்களை உடையவளே

  த்வம் சஞ்சீவ சரத சதம்”– நீ நூறாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன்!

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.