முன்னுரை:
பூவில் தோன்றும் வாசம் பலநாள் வீசுமோ – இந்தப்
புவியில் தோன்றும் நேசம் நெடுநாள் நிற்குமோ
கல்லில் தோன்றியும் கணினியில் வாழ்ந்திடும்
நிலையானது அழியாதது உயிர்மூச்சது தமிழ்தானது
.. என்று தமிழ்மொழியின் பழம்பெருமையைப் பாடுவர் புலவர். இப் பெருமைக்கு அடிப்படைக் காரணமாய் விளங்கும் சங்க இலக்கியங்களை ஒரு பெரிய சொற்புதையல் எனலாம். இந்த இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டுள்ள பல சொற்களுக்குத் தமிழ் அகராதிகள் தவறான பொருட்களையும் குறைபாடான பொருட்களையும் கொடுத்துள்ளன. இதைப்பற்றிப் பல கட்டுரைகளில் முன்னர் பல விளக்கங்களுடன் விரிவாகக் கண்டோம். அந்த வரிசையில் இப்போது மாமை என்னும் தமிழ்ச்சொல்லும் இணைகிறது. இச்சொல்லுக்கு அகராதிகள் கூறியிருக்கும் பொருட்களையும் அவை கூறாமல் விடுத்த புதிய பொருளினையும் இக்கட்டுரையில் விளக்கமாகச் சான்றுகளுடன் காணலாம்.
தமிழ் அகராதிகள் காட்டாத புதிய பொருட்கள்:
பல தமிழ்ச்சொற்களுக்குத் தமிழ் அகராதிகள் இதுவரை காட்டாத புதிய பொருட்கள் கீழே பட்டியலாகக் கொடுக்கப்பட்டுள்ளன.
வ.
எண்
|
சொல்
|
அகராதிகள்
காட்டும்
பொருள் (கள்)
|
அகராதிகள்
காட்டாத புதிய பொருள் (கள் )
|
1
|
அங்கை
|
உள்ளங்கை
|
கைவிரல்கள்
|
2
|
அந்தணர்
|
ஒருவகைச்
சாதி
|
உழவர்
|
3
|
அரவு
|
நச்சுயிரி
|
மேகம்
|
4
|
அல்குல்
|
இடை, பெண்குறி
|
நெற்றி
|
5
|
அலங்கு (தல்)
|
அசைதல்
|
பூ (த்தல்)
....
|
6
|
அளகம்
|
தலைமயிர்
|
கண்ணிமை
|
7
|
அறல்
|
நீர், கருமணல்
|
நத்தை, சிப்பி...
|
8
|
ஆகம்
|
மார்பகம்,
உடல்
|
கண், கண்ணிமை
|
9
|
ஆழி
|
வட்டம், சக்கரம்..
|
சட்டிக்கலப்பை...
|
10
|
இந்திரன்
|
தேவர்தலைவன்
|
சூரியன்
|
11
|
இறை
|
கடவுள், மூட்டு…
|
கண்ணிமை
|
12
|
எயிறு
|
பல், கொம்பு…
|
கண், கடைக்கண்
|
13
|
ஓதி
|
தலைமயிர்
|
கண்ணிமை
|
14
|
கடும்பு
|
சுற்றம்
|
வயிறு
|
15
|
கணம்
|
கூட்டம்,
திரட்சி
|
ஒலி
|
16
|
கதுப்பு
|
தலைமயிர்,கன்னம்
|
கண்ணிமை
|
17
|
கதுவாய்
|
வடுப்படுகை,
குறைகை
|
தாடை
|
18
|
கல்(தல்)
|
படித்தல்,
கற்றல்
|
கூட்டொலி
|
19
|
கவரிமா
|
மாடு, மான்
வகை
|
அன்னப்பறவை
|
20
|
கன்னம்
|
உறுப்பு,
கருவி
|
கைப்பறை
/ உடுக்கை
|
21
|
குடம்பை
|
கூடு, முட்டை
|
கூண்டு
|
22
|
குய்
|
தாளிப்பு,
புகை
|
அடுப்பு
|
23
|
குறங்கு
|
தொடை
|
கண்ணிமை
|
24
|
கூந்தல்
|
தலைமயிர்
|
கண்ணிமை
|
25
|
கூழை
|
தலைமயிர்
|
கண்ணிமை
|
26
|
கொங்கை
|
மார்பகம்
|
கண், கண்ணிமை
|
27
|
சிறுபுறம்
|
முதுகு, பிடரி
|
கண், கன்னம்,
கண்ணிமை.
|
28
|
சும்முதல்
|
மூச்சுவிடுதல்
|
ஒலித்தல்...
|
29
|
செம்பாகம்
|
செம்பாதி
|
கன்னப் பகுதி
|
30
|
செம்மை
|
செந்நிறம்
|
கருப்புநிறம்
|
31
|
தசும்பு
|
கலசம், மிடா…
|
சொம்பு
|
32
|
தாமரைக்கண்ணான்
|
திருமால்
|
சந்திரன்
|
33
|
தித்தி
|
தேமல்
|
வண்ணப்புள்ளி
|
34
|
திதலை
|
தேமல்
|
வண்ணப்புள்ளி
|
35
|
திலகம்
|
நெற்றிப்பொட்டு
|
கண்மைப்பூச்சு
|
36
|
திவவு
|
யாழ்நரம்புக்கட்டு
|
வளையம்
|
37
|
தெய்வம்
|
கடவுள்
|
பசுமாடு
|
38
|
தேவர்
|
கடவுள்
|
காளைமாடு
|
39
|
தொடி
|
வளையல்
|
கண்மை
|
40
|
தோள்
|
கை, புசம்…
|
கண், கண்ணிமை
|
41
|
நகார்
|
பற்கள்
|
கண்கள்
|
42
|
நகில்
|
மார்பகம்
|
கண், கண்ணிமை
|
43
|
நந்துதல்
|
கெடுதல்,
வளர்தல்
|
சிரித்தல்
|
44
|
நாள்
|
தினம், பகல்….
|
ஒளி
|
45
|
நிணம்
|
கொழுப்பு
|
வெண்ணெய்.....
|
46
|
நுகம்
|
நுகத்தடி
|
வேல், கலப்பை
|
47
|
நுசுப்பு
|
இடுப்பு
|
கண்ணிமை
|
48
|
நுதல்
|
நெற்றி, சொல்….
|
கண், கண்ணிமை
|
49
|
நூல்
|
இழை, புத்தகம்..
|
ஏர், கலப்பை
|
50
|
பசத்தல்
|
நிறம் மாறுதல்
|
அழுதல்
|
51
|
பசப்பு /
பசலை
|
தேமல், நிறம்..
|
கண்ணீர்
|
52
|
பாணி
|
காலம்
|
கைப்பறை
/ உடுக்கை
|
53
|
பாம்பு
|
நச்சுயிரி
|
மேகம்
|
54
|
பார்ப்பான்
|
ஒருவகை சாதி
|
ஆசிரியன்
|
55
|
புகழ்
|
பெருமை
|
இரக்கம்
|
56
|
புத்தேள்
|
கடவுள்
|
ஆசிரியர்,
குரு
|
57
|
மருங்குல்
|
இடுப்பு,
உடல்
|
கண், கண்ணிமை
|
58
|
முகடு
|
உச்சி, தலை
|
தாடை
|
59
|
முகம்
|
தலைமுன்பகுதி
|
கண்
|
60
|
முச்சி
|
குடுமி மயிர்
|
கண்ணிமை
|
61
|
முயக்கம்
|
உடலுறவு
|
பார்வை, காட்சி
|
62
|
முயங்குதல்
|
தழுவுதல்
|
பார்த்தல்....
|
63
|
முலை
|
மார்பகம்
|
கண், கண்ணிமை
|
64
|
முறுவல்
|
சிரிப்பு,
பல்…
|
கண்
|
65
|
மேனி
|
உடல்
|
கண், கண்ணிமை
|
66
|
வடு
|
கறை, அழுக்கு…
|
நத்தை, சிப்பி...
|
67
|
வயிறு
|
உடல்மையப்பகுதி
|
கண், கண்ணிமை
|
68
|
வளை
|
வளையல்
|
கண்மை
|
69
|
வான்பகை
|
பெரும்பகை
|
மலை
|
70
|
வித்தகன்
|
பேரறிவாளன்
|
கொடையாளன்
|
71
|
வித்து
|
விதை
|
ஈரம், நீர்
|
72
|
வேட்டல்
|
யாகம்வளர்த்தல்
|
பசியாற்றல்
|
73
|
வேள்வி
|
யாகம்
|
பசியாற்றல்
|
74
|
வேனில்
|
பருவகாலம்
|
நுங்கு, பனைமரம்
|
மாமை – தமிழ் அகராதிகள் காட்டும் பொருட்கள்:
மாமை என்னும் தமிழ்ச் சொல்லுக்கு இற்றைத் தமிழ் அகராதிகள் காட்டும் பல பொருட்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
மாமை māmai, n. cf. மா5. 1. Beauty; அழகு. மணிமிடை பொன்னின் மாமை சாய (நற். 304). மாந்தளிர்போன் மின்னிய மாமை விளர்ப்பதென் (தஞ்சைவா. 22). 2. Black colour; கருமை. மாமைக் களங்கனி யன்ன (மலைபடு. 35). 3. Colour; நிறம். நெடுந்தகை தற்கண்டு மாமைத் தகையிழந்த (பு. வெ. 12, 2). 4. Form; மேனி. மாமை பொன் னிறம் பசப்ப (பு. வெ. 11, பெண்பாற். 6). 5. Grief, distress; துன்பம். (அரு. நி.)
அகராதிப் பொருட்கள் பொருந்தா சில இடங்கள்:
மாமை என்ற சொல்லைக் கவின் என்ற சொல்லுடன் தொடர்புறுத்திக் கீழ்க்காணும் பல பாடல்களில் புலவர்களில் பாடியுள்ளனர்.
…. நின் அம் கலிழ் மாமை கவின
வந்தனர் தோழி நம் காதலோரே – ஐங்கு. 357
… கார் நயந்து எய்தும் முல்லை அவர்
தேர் நயந்து உறையும் என் மாமை கவினே – ஐங்கு. 454
…. ஒள்_இழை சிறப்பொடு விளங்கிய காட்சி
மறக்க விடுமோ நின் மாமை கவினே – ஐங்கு. 470
மேற்பாடல்களில் மாமை என்னும் சொல்லுடன், அழகு மற்றும் நிறத்தைக் குறிப்பதான கவின் என்ற சொல்லையும் சேர்த்துக் கூறியுள்ளதில் இருந்து, இப்பாடல்களில் வரும் மாமை என்பதற்கு அழகு, நிறம் என்ற பொருட்கள் நீங்கலாகப் புதிய பொருள் இருக்கக் கூடும் என்பதையும் அது அழகுசெய்யப்படும் ஒரு உறுப்பாகத் தான் இருக்கவேண்டும் என்பதையும் புரிந்து கொள்ளலாம்.
அடுத்ததாக, மாமை என்ற சொல்லுடன் பசத்தலைத் தொடர்புறுத்திக் கீழ்க்காணும் பாடல்கள் வருகின்றன.
இனி பசந்தன்று என் மாமை கவினே – ஐங்கு.144.
இனி பசந்தன்று என் மாமை கவினே – ஐங்கு.35
பசத்தல் என்பது அழுகை வினையைக் குறிக்கும் என்று முன்னர் பல கட்டுரைகளில் ஆதாரங்களுடன் கண்டோம். ஆக, பசந்தன்று மாமை கவின் என்ற சொல்லாடலில் வருகின்ற மாமை என்பது கண்ணீரால் அழகினை இழக்கின்ற ஒரு உறுப்பாகத் தான் இருக்கவேண்டும் என்று ஊகிக்க முடிகிறது.
மாமை – புதிய பொருள் என்ன?
மாமை என்னும் சொல்லுக்கு மேற்கண்ட அகராதிகள் காட்டாத புதிய பொருள்:
கண்ணிமை.
நிறுவுதல்:
மாமை என்னும் தமிழ்ச் சொல்லுக்குக் கண்ணிமை என்ற புதிய பொருள் எவ்வாறு பொருந்தும் என்று விளக்கமாக இங்கே பல சான்றுகளுடன் காணலாம்.
மாமை என்ற தமிழ்ச் சொல்லானது சங்க இலக்கியத்தில் தான் அதிகம் பயின்று வந்துள்ளது. பெண்களின் கண்ணிமைகளைக் குறிக்க, அளகம், ஆகம், மேனி, குறங்கு, சிறுபுறம், முலை, கொங்கை, கூந்தல், நுதல், நுசுப்பு முதலான பல சொற்களைச் சங்கப் புலவர்கள் பயன்படுத்தி இருக்கும் நிலையில், மாமை என்ற சொல்லையும் கண்ணிமையைக் குறிக்கப் பல பாடல்களில் பயன்படுத்தி உள்ளனர். பெண்களின் கண்ணிமைகள் மெலிதாகவும் பல வண்ணங்களால் பூசப்பட்டும் இருப்பதால் அவற்றை இளந்தளிர்களுடனும் மலர் இதழ்களுடனும் மெல்லிய தோல்களுடனும் ஒப்பிட்டுக் கூறுவது சங்கப் புலவர்களின் வழக்கமாகும். அவ்வகையில், மாமையினையும் இவற்றுடன் ஒப்பிட்டுப் புலவர்கள் பல பாடல்களில் பாடியுள்ளனர். இப்பாடல்களில் வரும் உவமை விளக்கங்களில் இருந்து மாமை என்ற சொல்லுக்குக் கண்ணிமை என்ற புதிய பொருள் பொருந்துவதைத் தெற்றென விளங்கிக் கொள்ளலாம்.
மாமையும் மலர்களும்:
வண்ணம் பூசப்படும் கண்ணிமைகளைப் பல மலர்களின் இதழ்களுடன் ஒப்பிட்டுக் கூறுவது சங்கப் புலவர்களின் வழக்கமே என்று முன்னர் பல கட்டுரைகளில் விரிவாகக் கண்டோம். அதைப்போல, மாமையினையும் பாதிரி, வேங்கை, பீர்க்கு முதலான பல மலர்களுடன் ஒப்பிட்டுக் கூறியிருப்பதைக் கீழே உள்ள பாடல்களில் காணலாம்.
வேனில் பாதிரி கூன் மலர் அன்ன
மயிர் ஏர்பு ஒழுகிய அம் கலுழ் மாமை – குறு.147
(பொருள்: வேனிற்காலத்தில் பூக்கின்ற வளைந்த பாதிரி மலரைப் போல வண்ணம் பொருந்தியதாய் அழகு ஒழுகுகின்ற கண்ணிமைகள்…)
நுண் கேழ் மாமை பொன் வீ வேங்கை புது மலர் புரைய .. – அகம். 319
(பொருள்: நுண்ணிய பல வண்ணப் புள்ளிகளைக் கொண்ட இவளது கண்ணிமைகள், பொன்போன்ற வண்ணம் கொண்ட வேங்கை மலரினைப் போலத் தோன்ற…)
சங்ககாலத் தமிழ்ப் பெண்கள் தமது கணவர் / காதலரைப் பிரிந்திருக்கும்போது, அவரையே நினைத்து நினைத்து அழுவர். அப்போது வழியும் கண்ணீரில் நனைந்து வண்ணமும் அழகும் இழக்கின்ற அவரது கண்ணிமைகள் வாடி அழகின்றித் தோன்றும். இந்நிலையில் இவரது கண்ணிமைகளைப் பீர்க்க மலருடன் ஒப்பிட்டுக் கூறுவது புலவர் வழக்கமாகும். அழகழிந்த மாமையினையும் பீர்க்கமலருடன் ஒப்பிட்டுக் கூறும் சங்கப் பாடல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
திதலை மாமை தளிர் வனப்பு அழுங்க
புதல் இவர் பீரின் எதிர் மலர் கடுப்ப
பசலை பாய்ந்த நுதலேன் ஆகி – அகம். 135
(பொருள்: வண்ணப் பொட்டுக்கள் பொறித்த எனது கண்ணிமைகளின் தளிர்போன்ற அழகு கெடுமாறு கண்ணீர் பாய்வதால் அழகிழந்து பீர்க்கமலரைப் போலத் தோன்ற….)
மாமை அரி நுண் பசலை பாஅய் பீரத்து
எழில் மலர் புரைதல் வேண்டும் – அகம். 45
(பொருள்: பசலையாகிய கண்ணீர் பாய்தலால் நிறமிழந்த இவளது கண்ணிமைகள் பீர்க்க மலர்களைப் போலத் தோன்றுகின்றன…)
மாமையும் ஆம்பலும்:
வண்ணம் இழந்து மெலிந்து வாடியிருக்கும் கண்ணிமைகளை ஆம்பல் மலரின் தண்டில் இருந்து உரிக்கப்பட்ட தோலுடன் ஒப்பிட்டுக் கூறுகின்றன கீழ்க்காணும் பாடல்வரிகள்.
நீர் வளர் ஆம்பல் தூம்பு உடை திரள் கால்
நார் உரித்து அன்ன மதன் இல் மாமை – நற்.6
(பொருள்: நீரில் வளரும் ஆம்பலின் உள்துளையுடைய திரண்ட தண்டில் இருந்து உரிக்கப்பட்ட தோல்போன்று மெலிந்த கண்ணிமை..)
பொய்கை ஆம்பல் நார் உரி மென் கால்
நிறத்தினும் நிழற்றுதல் மன்னே
இனி பசந்தன்று என் மாமை கவினே – ஐங்கு.35
(பொருள்: குளத்தில் பூத்த ஆம்பல் மலரின் தண்டில் இருந்து உரித்த தோல் போன்று எனது இமைகளின் அழகு நிறமிழக்குமாறு கண்ணீர் பெருகியது…)
மாமையும் திதலையும்:
பெண்கள் தமது கண்ணிமைகளின்மேல் பல வண்ணப் பொடிகளைத் தூவியும் பல வண்ணப் பொட்டுக்களை வரைந்தும் அழகுசெய்வர் என்று முன்னர் பல கட்டுரைகளில் கண்டோம். இப்பொட்டுக்களைத் திதலை என்றும் தித்தி என்றும் சங்க இலக்கியம் கூறுகிறது. திதலை / தித்தி பொறித்த கண்ணிமைகளைப் பூந்தாதுக்கள் உதிர்ந்து கிடக்கும் இளந்தளிர்களுடன் ஒப்பிட்டுக் கூறும் சில பாடல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
மென் சிறை வண்டின் தண் கமழ் பூ துணர்
தாது இன் துவலை தளிர் வார்ந்து அன்ன
அம் கலுழ் மாமை கிளைஇய
நுண் பல் தித்தி மாஅயோளே – அகம். 41
(பொருள்: வண்டுகள் மொய்த்தலால் தளிர்இலைகளின்மேல் உதிர்ந்து கிடக்கும் பூந் தாதுக்களைப் போல அவளது கண்ணிமைகளின்மேல் நுண்ணிய பல வண்ணப் புள்ளிகள் தோன்றியது…)
கன்றும் உண்ணாது கலத்தினும் படாது
நல் ஆன் தீம் பால் நிலத்து உக்கு ஆங்கு
எனக்கும் ஆகாது என் ஐக்கும் உதவாது
பசலை உணீஇயர் வேண்டும்
திதலை அல்குல் என் மாமை கவினே – குறு.27
(பொருள்: கன்றும் உண்ணாமல் கலத்திலும் கரக்காமல் நிலத்திலே வீணாகச் சொரியும் பசும்பாலைப்போல, வண்ணப் புள்ளிகள் பொறித்த எனது நெற்றி மற்றும் இமைகளின் அழகானது எனக்கும் இன்றி என் தலைவனுக்கும் இல்லாதவாறு எனது கண்ணீர் சிதைத்து விட்டது..)
திதலை மாமை தேய பசலை பாய ..– ஐங்கு. 231
(பொருள்: கண்ணீர் பாய்தலால் வண்ணப் புள்ளிகளைக் கொண்ட கண்ணிமைகளின் அழகு வாட…)
மாமையும் செந்நிறமும்:
பொதுவாக, சங்ககாலப் பெண்கள் தமது கணவர் / காதலருடன் கூடி மகிழ்ந்திருக்கும்போது தமது கண்ணிமைகளுக்குப் பல வண்ணங்களில் மைதீட்டியும் ஓவியங்களை வரைந்தும் அழகுசெய்வர் என்று முன்னர் பல கட்டுரைகளில் கண்டோம். அவற்றில் முதன்மையாகத் தமது கண்ணிமைகளுக்குச் செவ்வண்ணம் பூசி அழகுசெய்ததைக் கூறலாம். இப்படிச் செவ்வண்ணம் பூசி அழகுசெய்யப்பட்ட கண்ணிமைகளை மாந்தளிருடன் உவமையாக ஒப்பிட்டுக் கூறுவது சங்கப் புலவர்களின் வழக்கமே. இங்கும் அதைப்போன்ற ஒப்பீடானது மாமைக்கும் கொடுக்கப்பட்டுள்ளதைக் கீழக்காணும் பாடல்களின் வழியாக அறிந்து கொள்ளலாம்.
நெடுமா அந்தளிர் நீர்மலி கதழ்பெயல் தலைஇய
ஆய்நிறம் புரையும் இவள் மாமை கவினே – நற்.205
(பொருள்: மழைத்துளி மிகுதியாகப் பட்ட மாந்தளிர் போல, உன்னைப் பிரிந்த துன்பத்தால் வருந்தி அழுது இவள் விடும் கண்ணீரால் செவ்வண்ணம் பூசிய இவளது கண்ணிமையின் அழகு குன்றும் ..)
சங்கப் பெண்களின் செவ்வண்ணம் பூசிய கண்ணிமைகளை மாந்தளிருடன் மேற்காணும் பாடலில் ஒப்பிட்டுக் கூறிய புலவர்கள், கீழ்க்காணும் பாடல்களில் அதனைச் செப்புப்பேழையுடன் ஒப்பிட்டுக் கூறுகின்றனர்.
பிரியின் மணி மிடை பொன்னின் மாமை சாய என்
அணி நலம் சிதைக்குமார் பசலை – நற்.304
(பொருள்: தலைவன் என்னைப் பிரிந்தால், நீலமணியைப் பதித்த செப்புப்பேழையினைப் போலத் தோன்றும் எனது கண்ணிமைகளின் அழகினைக் கண்ணீர் சிதைக்கும்….)
பல் நாளும் படர் அட பசலையால் உணப்பட்டாள்
பொன் உரை மணி அன்ன மாமை கண் பழி உண்டோ – கலி.48
(பொருள்: பல நாளும் துன்பத்தால் வருந்தி கண்ணீரால் சிதைக்கப்பட்டதால் இவளது கண்ணிமைகள் நிறம் மாறிவிட்டன. நீலமணியைப் பதித்த செப்புப்பேழையினைப் போலத் தோன்றும் இவளது கண்ணிமைகளில் பொய்யும் உண்டோ?...)
மேற்பாடல்களில் வரும் பொன் என்பது செம்பினைக் குறிக்கும். இப்பாடல்களில், செந்நிறம் பூசப்பட்ட கண்ணிமைகளைச் செப்புப்பேழைக்கும் கருநிறக் கண்மணியை நீலமணிக்கும் உவமையாகக் கூறியுள்ளனர்.
முடிவுரை:
மாமை என்னும் சொல்லுக்குக் கண்ணிமை என்ற புதிய பொருள் எவ்வாறு பொருந்தும் என்று மேலே பல சான்றுகளுடன் கண்டோம். கருமை உட்பட பல வண்ணங்களால் அழகு செய்யப்படுவதான கண்ணிமையை மட்டுமே துவக்கத்தில் குறித்துவந்த மாமை என்ற சொல்லானது நாளடைவில் கருமை, அழகு, வண்ணம் என்ற பல்வேறு அகராதிப் பொருட்களையும் விரிவாக்கமாகக் குறிக்கப் பயன்படலாயிற்று எனத் தெரிய வருகிறது.