வெள்ளி, 17 செப்டம்பர், 2021

6. பனை மரம் ( சங்க இலக்கியத்தில் தாவரவியல் )

முன்னுரை:

பனை – என்றவுடன் குளுமையான இனிமையான நீரைக் கொண்ட நுங்கு தான் நினைவுக்கு வரும். கோடைகாலத்தில் நுங்கை விரும்பி உண்ணாதவர்கள் இருக்கவே முடியாது. இயற்கையின் படைப்பில் சாகாவரம் பெற்ற அற்புதமான மரம் எதுவெனில் பனைமரம் என்றே சொல்லலாம். காரணம், இலை, பூ, காய், கனி, கொட்டை என்று தன்னிடத்தில் உள்ள அனைத்தையுமே பிறருக்கு அளித்து இறுதியாக வீட்டுக் கூரைக்கு உத்திரமாக அமைந்து சாகாவரம் பெற்று விடுவது பனைமரம் மட்டுமே. அதுமட்டுமின்றி, மண் அரிப்பைத் தடுப்பதில் முதன்மையான பங்கு பனைமரங்களுக்கு உண்டு. பனைமரத்தில் இருந்து இறக்கப்படும் கள்ளானது உடலைக் குளிரச் செய்கின்ற மருத்துவ குணமுடைய பானமாகும். பல சிறப்புக்களைக் கொண்ட பனைமரத்தைப் பற்றிச் சங்க இலக்கியம் கூறியுள்ள பல்வேறு செய்திகளை இக் கட்டுரையில் காணலாம்.

பனை – பூர்வீகமும் பெயரும்:

மணற்பாங்கான இடங்களில் இயற்கையாகத் தோன்றும் பனைமரங்களின் காய்கள் கடல் வழியாகப் பயணம் செய்து கடற்கரை ஓரங்களில் பல்கிப் பெருகும் இயல்புடையவை. எனவே பனைமரங்களின் பூர்விகத்தை உறுதிசெய்வது சற்று கடினமே. பொராசசு எனப்படும் பிரிவைச் சேர்ந்ததான பனைமரத்தில் இந்தியாவில் மட்டுமே பல வகையான மரங்கள் உண்டு. பொதுவாக, ஆசியா, இந்தோனேசியா, ஆப்பிரிக்கா, மடகாசுகர் மற்றும் நியூகினியா வில் அதிகம் காணப்படுகின்றன. பனைமரத்தைக் குறிப்பதற்கு இதுவரை நாற்பத்தி ஒன்று பெயர்கள் இருப்பதாக இதுவரை அறியப்பட்டுள்ளன. அப் பெயர்கள் யாவும் அகரவரிசை முறைப்படி அமைக்கப்பட்டு கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

அலகு,இலாங்கலம்,ஏடகம்,ஐந்தரம்,ஐந்தார்,கரதாளம்,கருப்பை,கரும்புறம்,

கற்பகம்,சடாபலம்,செத்து,தாலம்,தாலி,தாழி,திருணராசன்,தீர்க்கதரு,துராரோகம்,

துருமசிரேட்டம்,தோரை,நீலம்,நீளம்,பனை,புத்தாளி,புல்,புல்லூதியம்,புற்பதி,

புற்றாளி,புன்மரம்,பூமிபிசாசம்,பெண்ணை,பொத்தி,போந்து,போந்தை,மகம்,

மகாபத்திரம்,மடலி,மடலை,மதுரசம்,முக்காழி,வடலி,வேனில்.

மேற்கண்ட பெயர்களில் பனை, பெண்ணை, போந்தை, போந்து, மடலை, வேனில் ஆகிய பெயர்கள் மட்டுமே சங்க இலக்கியங்களில் பயன்படுத்தப் பட்டுள்ளன.

பனைமரம் – பண்புகள்:

தமிழகத்தில் அதிகம் காணப்படும் பனைமரத்தின் தாவரவியல் பெயர் பொராசசு பிலாபெலிபர் ( BORASSUS FLABELLIFER ) ஆகும். இப் பனைமரத்தைப் பற்றிச் சங்க இலக்கியங்கள் கூறியுள்ள பல்வேறு செய்திகளைச் சுருக்கமாகக் கீழே காணலாம்.

பனைமரத்தின் தண்டுகள் மிக உயரமாக வளரும் இயல்புடையவை. பனைமரத்தின் தண்டுகள் கருப்பு நிறத்தில் பல வரிகளைக் கொண்டதாகக் காணப்படும். இதனால் இம்மரத்தின் தண்டானது கருநிற வளைவுகளைக் கொண்ட யானையின் துதிக்கையுடன் ஒப்பிடப்பட்டுள்ளது. தண்டுக்குள்ளே காணப்படும் பழுப்புநிற நார்கள் கரடியின் உடலின்மேல் காணப்படும் மயிர்களுடன் ஒப்பிடப்பட்டுள்ளது. பனைமரத்தின் இலைகள் அதாவது ஓலைகள் நீளமாக கூர்முனைகளைக் கொண்டு விசிறி வடிவில் தோன்றும். பனையின் விரியாத இலைக்குருத்தானது வரால் மீனுடன் ஒப்பிட்டுக் கூறப்பட்டுள்ளது. பனையோலையின் காம்புகளின் முற்பகுதியில் கூரிய பல பற்கள் காணப்படும். காய்ந்து முதிர்ந்த பனை ஓலைகள் காற்று வீசும்போது பெருத்த சத்தத்தை எழுப்பும். பனைமரத்தின் உச்சியில் நீண்ட குச்சிகளில் வெண்ணிறப் பூக்கள் கொத்தாக மலர்ந்திருக்கும். சேர மன்னர்கள் இப் பூக்களை மாலையாகக் கட்டி அணிந்தனர்.

நுங்கு / குரும்பை என்று அழைக்கப்படும் இளங்காய்கள் உருண்டையாக கருப்பு நிறத்தில் இருக்கும். காய்களின் தலையில் பச்சை நிறத்தில் வலுவான தோடுகள் காணப்படும். இவற்றை இதக்கை என்று கூறும் சங்க இலக்கியம் யானையின் கால் நகங்களுடன் இவற்றை ஒப்பிட்டுக் கூறுகிறது. இதக்கை வெட்டிய காய்களுக்குள்ளே இருக்கின்ற சுவையான குளிர்ச்சி மிக்க நீர் நிரம்பிய விதைகளைப். பாறைகளில் காணப்படும் சுனைகளுடன் ஒப்பிட்டுக் கூறுகிறது. இவ் விதைகள் முதிர்ந்ததும் அதிலுள்ள இன்சுவை நீர் கெட்டியாகி முற்றிய தேங்காயைப் போலச் சுவையும் நிறமும் பெறும். இதன் துண்டுகளை ஆலங்கட்டிகளுடன் ஒப்பிடுகிறது சங்க இலக்கியம். பனங்காய்கள் முழுவதுமாக முற்றியதும் நார்கள் மிக்க இனிய சதையைக் கொண்ட பழமாக மாறும். இப் பழத்தை உண்ட பின்னர் அதற்குள் இருக்கும் கொட்டைகளைத் தீயில் சுட்டும் உணவாக உண்டனர். பனைமரங்களில் இருந்து கள் எனப்படும் இனிய புளிப்புடைய பானத்தை இறக்கிப் பருகினர்.

காதலின் ஆழத்தைப் பிறருக்குப் புரிய வைப்பதற்காகப் பனைமரத்தின் ஓலைகளால் குதிரை உருவத்தை உண்டாக்கி அதன்மேல் காதலனை அமரச்செய்து காதலியின் தெருவுக்குச் சுமந்து சென்றனர். காதலின் அடையாளமாகக் கருதப்படும் அன்றில் பறவைகள் பெரும்பாலும் பனைமரங்களில் தான் வாழ்ந்தன. சங்ககாலத்தில் பனைமரங்கள் கடற்கரை மணலில் அதிகம் காணப்பட்டதாக சங்க இலக்கியப் பாடல்கள் கூறுகின்றன.


தண்டு:

பனைமரத்தின் தண்டானது நூறு அடி உயரம் வரையிலும் வளரக் கூடியது. மற்ற மரங்களைப் போல பக்கவாட்டில் கிளைகளைப் பரப்பாமல் ஒரே செங்குத்தாக ஒற்றைக் காலில் உயரமாக வளரும். பனைமரத்தின் தண்டுகள் கருமை நிறம் கொண்டவை. பனைமரத்தின் தண்டுகள் கருமை நிறத்தில் நீண்டு உயரமாக வளர்வதைப் பற்றிக் கூறும் சில சங்க இலக்கியப் பாடல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

நீள் இரும் பனை – பரி. 2

இரும் பனை – திரு. 312, நற். 335, புறம். 45, 340, பொரு. 143

நெடு மா பெண்ணை – நற். 146, 199

நீடு இரும் பெண்ணை – நற். 354, குறு. 374, அகம். 400

ஓங்கு இரும் பெண்ணை – குறு. 293, கலி. 139, குறி. 220

பனைமரத்தின் வலுவான கருப்பான தண்டில் பூங்கொடி ஒன்று படர்ந்துள்ளது. அதைப் பார்ப்பதற்கு கருப்பான வலிய உடல்கட்டுடைய வீரன் ஒருவனைக் கொடியிடை ஒருத்தி தழுவியிருப்பதைப் போலத் தோன்றுவதாகக் கீழ்க்காணும் சங்கப் பாடல் கூறுவதைப் பாருங்கள்.

மள்ளர் அன்ன மரவம் தழீஇ மகளிர் அன்ன ஆடு கொடி

நுடங்கும் அரும்பதம் கொண்ட பெரும்பத வேனில் - ஐங்கு. 400

பனைமரத் தண்டில் அடுக்கடுக்காக பல வரிகள் காணப்படும். கருமை நிறத்தில் பருத்துப் பல வரிகளைக் கொண்ட பனைமரத் தண்டினை யானையின் பல வரிகளைக் கொண்ட கருப்புநிறத் துதிக்கையுடன் ஒப்பிட்டுப் பல பாடல்களில் சங்கப் புலவர்கள் பாடியுள்ளனர். அவற்றுள் சில மட்டும் கீழே தரப்பட்டுள்ளன.

இரும் பனை அன்ன பெரும் கை யானை – புறம். 340

பனை தடி புனத்தின் கை தடிபு பல உடன் யானை பட்ட – பதி. 36

பனை திரள் அன்ன பரேர் எறுழ் தட கை …. உயர் மருப்பு யானை – அகம். 148

வெளிற்று பனை போல கை எடுத்து யானை – அகம். 333

பனை மருள் தட கையொடு முத்து படு முற்றிய

உயர் மருப்பு ஏந்திய வரை மருள் நோன் பகடு – புறம். 161

பனைமரத் தண்டானது வெளியே கடினமான கருப்புநிறப் பட்டையால் மூடப்பட்டு இருக்கும். அதனுள்ளே சற்று மென்மையான பழுப்புநிற நார்கள் மிகுதியாகச் செறிந்து இருக்கும். இந்த நார்களைக் கரடியின் உடலில் இருக்கும் பழுப்புநிற மயிருடன் ஒப்பிட்டுக் கீழ்க்காணும் சங்கப் பாடல் கூறுகிறது.

இரும் பனை வெளிற்றின் புன் சாய் அன்ன

குரூஉ மயிர் யாக்கை குடா அடி உளியம் – திரு. 312

பனைமரத்தின் தண்டுகள் மிகவும் உயரமாக ஒற்றைக் காலில் வளர்வதால் பலத்த காற்றினால் சாய்ந்து முறியாமல் இருப்பதற்காக அடிப்பகுதியில் பெருத்து இருக்கும். இதனைப் பராரை / முழா அரை / பரியரை / திரள் அரை என்று கீழ்க்காணும் சங்கப் பாடல்கள் குறிப்பிடுகின்றன.

முழா அரை போந்தை – புறம். 85, புறம். 375

முழவு முதல் அரைய தடவு நிலை பெண்ணை – குறு. 301

திரள் அரை பெண்ணை நுங்கொடு பிறவும் – பெரும் 360

பரியரை பெண்ணை – நற். 218

பராரை மன்ற பெண்ணை வாங்கு மடல் – நற்.303

பராரை பெண்ணை – அகம். 305


இலை:

பனைமரத்தின் இலைகள் பத்து அடி நீளம் வரையிலும் வளரக் கூடியவை. விசிறி போன்ற வடிவத்தில் விரிந்திருக்கும் இதன் முனைகள் கூரானவை. பனைமரத்தின் விரியாத இலைக்குருத்தினை நுகும்பு என்று குறிப்பிடும்  சங்க இலக்கியம் அதனை வரால் மீனுடன் கீழே ஒப்பிட்டுக் கூறுகிறது..

பனை நுகும்பு அன்ன சினை முதிர் வராலொடு      - புறம். 249

பனைமரத்தின் இலைகளைத் தாங்கியிருக்கும் நீண்ட காம்பின் முன்பகுதியில் அரத்தைப் போல கூர்மையான பல பற்கள் வரிசையாக அமைந்திருக்கும். இதனைக் கருக்கு என்று குறிப்பிடுகிறது சங்க இலக்கியம்.

பனை தலை கருக்கு உடை நெடு மடல் குருத்தொடு – குறு. 372

பைம் கால் கருக்கின் கொம்மை போந்தை – குறு. 281

போந்தை அர வாய் மா மடல் – புறம். 375

பசுமையான பனைமர இலைகள் முற்றிக் காய்ந்து பழுப்பு நிறம் பெறும். இந்த ஒலைகளின் மீது காற்று வேகமாக வீசும்போது பெரிய சத்தத்தை உண்டாக்கும். பனையோலை எழுப்பிய பெரிய சத்தத்தால் அருகில் இருந்த மரத்தில் உண்டு கொண்டிருந்த பறவை அஞ்சிப் பறந்ததாகக் கீழ்க்காணும் சங்க இலக்கியப் பாடல் கூறுகிறது.

வேனில் அரையத்து இலை ஒலி வெரீஇ

போகில் புகா உண்ணாது பிறிது புலம் படரும் – ஐங்கு. 325


பூ:

பனைமரத்தில் ஆண், பெண் என்று இருவகையான பூக்கள் தனித்தனியாகத் தோன்றும். அதாவது ஆண் பூக்கள் ஒரு மரத்திலும் பெண் பூக்கள் வேறு மரத்திலும் பூக்கும். பனைமரத்தின் பூக்கள் மரத்தின் உச்சியில் குடுமியைப் போல நீண்ட குச்சிகளில் வெண்ணிறத்தில் கொத்தாக வளர்ந்திருக்கும். இதைப்பற்றிக் கூறும் சங்க இலக்கியப் பாடல்களில் சில மட்டும் கீழே:

இரும் பனை வெண் தோடு – புறம். 45

போந்தை குடுமி வெண் தோட்டு – குறு. 281

போந்தை வெண் தோடு – பதி. 51

போந்தை குவி முகிழ் ஊசி வெண் தோடு – பதி. 70

இளம் போந்தை உச்சி கொண்ட ஊசி வெண் தோட்டு – புறம். 100

மூவேந்தர்களில் சேர மன்னர்கள் வெண்ணிறப் பனம்பூவினால் அமைந்த மாலையை அணிந்தனர். இதைப்பற்றிக் கூறும் சங்கப் பாடல்கள் கீழே;

இரும் பனை வெண் தோடு மலைந்தோன் அல்லன் – புறம். 45

மறம் கெழு போந்தை வெண் தோடு புனைந்து – பதி. 51


காய்:

பனைமரத்தின் காய்கள் கருப்பு நிறத்தில் உருண்டை வடிவத்தில் இருக்கும். இவற்றை நுங்கு என்றும் குரும்பை என்றும் சங்க இலக்கியம் குறிப்பிடும். இந்த நுங்கினுள்ளே குளிர்ச்சியான இன்சுவை மிக்க நீரைக் கொண்ட விதைகள் இருக்கும். இந்த விதைகள் பார்ப்பதற்குக் கண்களைப் போன்ற வடிவத்தில் ஒளி மிக்கதாக இருக்கும். இதைப்பற்றிக் கூறுகின்ற சங்க இலக்கியப் பாடல்கள் சிலவற்றை மட்டும் கீழே காணலாம். இப் பாடல்களில் வரும் முலை என்பது கண்களைக் குறிக்கும். (1)

முலை என வண் கோள் பெண்ணை வளர்த்த நுங்கின்

இன் சேறு இகுதரும் – சிறு. 27

தீம் கண் நுங்கின் பணை கொள் வெம் முலை

பாடு பெற்று உவக்கும் பெண்ணை – நற். 392

இரும் பனையின் குரும்பை நீரும் – புறம். 24

பெரு மடல் பெண்ணை பிணர் தோட்டு பைம் குரும்பை – கலி. 83

பனங்காயில் காம்பு பொருந்துகின்ற இடத்தில் பச்சை நிறத்தில் தடிப்புடைய தோடு இருக்கும். இந்தப் பனந்தோட்டை இதக்கை என்று சங்க இலக்கியம் குறிப்பிடும். கதிரவன் மயங்கிய மாலைநேரத்தில் உயரமான நடுகல்லை மனிதன் என்று தவறாகக் கருதிய யானை ஒன்று கோபமுற்றுத் தனது காலால் உதைக்கவும் அதனால் அதனுடைய காலில் இருந்த நகமானது பனங்காயின் இதக்கை போல ஒடிந்து விழுந்ததாகவும் கீழ்க்காணும் சங்கப் பாடல் கூறுகிறது.

புன்கண் மாலை அத்த நடுகல் ஆள் என உதைத்த

கான யானை கதுவாய் வள் உகிர்                        5

இரும் பனை இதக்கையின் ஒடியும் – அகம். 365

பனங்காயின் இதக்கையையும் சிறிது தோலையும் சீவி நீக்கிய பின்னரே உள்ளிருக்கும் இன்சுவை நுங்கினைச் சுவைக்க முடியும். அப்படி வெட்டப்பட்ட தோற்றமானது பார்ப்பதற்கு சமதளமான பெரும்பாறை ஒன்றில் அமைந்த இனிய நீரைக் கொண்ட சுனைகளைப் போல இருந்தது என்று கீழ்க்காணும் பாடலொன்று விதந்து கூறுகிறது.

பிடி துஞ்சு அன்ன அறை மேல நுங்கின்           

தடி கண் புரையும் குறும் சுனை ஆடி – கலி. 108

பனங்காய்கள் சற்று முதிர்ந்தவுடன் அவற்றின் விதைகளுக்கு உள்ளே இருக்கும் இன்சுவை நீரானது கெட்டிப்படத் தொடங்கிவிடும். முதலில் வழுக்கைத் தேங்காய் போலவும் பின்னர் முற்றிய தேங்காய் போலவும் வெண்ணிறத்தில் மாறி விடும். பனை நுங்குகளின் முற்றிய தேங்காய்த் துண்டுகளை ஆலங்கட்டிகளுடன் ஒப்பிட்டுக் கீழ்க்காணும் பாடல் கூறுகிறது.

நீர் செறி நுங்கின் கண் சிதர்ந்தவை போல்

சூர் பனிப்பு அன்ன தண் வரல் ஆலியொடு – அகம். 304

பனங்காயை மரத்தில் இருந்து பறிக்காமல் விட்டுவிட்டால் அது முதிர்ந்து பழமாகி விடும். கருமையான தோலால் மூடப்பட்டிருக்கும் இந்தப் பழத்தின் உள்ளே நார்கள் நிறைந்த இனிமையான மஞ்சள்நிறக் கூழும் மூன்று முதல் நான்கு வலுவான கொட்டைகளும் இருக்கும். பனம்பழம் பற்றிக் கூறும் சங்க இலக்கியப் பாடல் கீழே:

கானல் பெண்ணை தேன் உடை அளி பழம் – நற். 372

பனைமரத்தின் காய்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் மனிதர்களுக்கு உணவாக இருந்து பயன்படும் தன்மை கொண்டவை. முதற்கட்டத்தில் இனிய நீருடைய நுங்குகளையும் இரண்டாம் கட்டத்தில் பனம்பழங்களையும் மூன்றாம் கட்டமாக பழங்களை உண்டு கழித்த கொட்டைகளைச் சுட்டும் உணவாகக் கொள்ளலாம். இப்படிப் பனைமரங்கள் முக்காலத்திலும் உணவாகப் பயன்படுவதைக் கூறுகின்ற சங்கப்பாடல் கீழே:

தலையோர் நுங்கின் தீம் சேறு மிசைய

இடையோர் பழத்தின் பைம் கனி மாந்த

கடையோர் விடு வாய் பிசிரொடு சுடு கிழங்கு நுகர – புறம். 225

பனையும் காதலும்:

பனைமரத்தின் இலைகள் வலுவானவை. இதனால் இவற்றைக் கொண்டு வேலிகளை அடைத்தலும் கூடைகள், பாய்கள் போன்றவற்றைப் பின்னுதலும் உண்டு. இவைதவிர, பனை ஓலைகளைக் கொண்டு குதிரைகளையும் செய்துள்ளனர். பனைமா, மடல்மா என்றெல்லாம் சங்க காலத்தில் அழைக்கப்பட்ட இந்தப் பனங்குதிரையின் கழுத்தில் மயில்தோகைக் கீற்றுக்களையும் மணிகளையும் ஆவிரை, பூளை, எருக்கம் பூக்களைக் கலந்து கட்டிய மாலைகளையும் சூட்டுவர். காதலியால் கைவிடப்பட்ட காதலன் இக் குதிரைமேல் ஏறி அமர்ந்துகொள்ள, காதலி வாழும் தெருவுக்குள் அவனது நண்பர்கள் / உறவினர்கள் அந்தக் குதிரையைச் சுமந்து வருவர். அப்படி வரும்போது காதலி செய்த நோயினையும் அதனால் நேரப்போகும் பின்விளைவையும் காதலியின் பெற்றோரும் உற்றோரும் அறியுமாறு கூறிக்கொண்டு வருவர். தனது மகள் செய்த காதல்நோயால் ஒரு ஆணின் உயிர் அழியப்போகும் அவலத்தை அறிகின்ற காதலியின் பெற்றோர் மனம் மாறி இருவருக்கும் திருமணம் செய்துவைக்க வேண்டும் என்பதே இந்த மடல்மா ஊர்வலத்தின் நோக்கமாகும். இதைப்பற்றிக் கூறும் சங்கப் பாடல்களில் சில மட்டும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பொன் நேர் ஆவிரை புது மலர் மிடைந்த

பல் நூல் மாலை பனை படு கலிமா ……………………

இன்னள் செய்தது இது என முன் நின்று           

அவள் பழி நுவலும் இ ஊர்  – குறு. 173

மணி பீலி சூட்டிய நூலொடு மற்றை

அணி பூளை ஆவிரை எருக்கொடு பிணித்து யாத்து

மல்லல் ஊர் மறுகின் கண் ………….

படரும் பனை ஈன்ற மாவும் சுடர் இழை

நல்கியாள் நல்கியவை பொறை என் வரைத்து அன்றி

பூநுதல் ஈத்த நிறை அழி காம நோய் நீந்தி அறை உற்ற               

உப்பு இயல் பாவை உறை உற்றது போல உக்குவிடும் என்உயிர் – கலி. 138

பனை ஈன்ற மா ஊர்ந்து அவன் வர – கலி. 147

காதலின் ஆழத்தை மற்றவருக்குப் புரியவைப்பதற்காக மட்டுமின்றி, காதல் பறவைகளின் கூடாரமாகவும் பனைமரங்கள் விளங்கியுள்ளன. ஒன்றை விட்டு ஒன்று சிறிது நேரம் பிரிந்தால் கூட வாடிவிடுவதாக / இறந்துவிடுவதாகச் சொல்லப்படுகின்ற அன்றில் பறவைகள் இந்தப் பனைமரங்களில் தான் தங்கி வாழ்ந்ததாகக் கீழ்க்காணும் சங்கப் பாடல்கள் கூறுவதைப் பார்க்கலாம்.

மை இரும் பனை மிசை பைதல உயவும் அன்றிலும் – நற்.  335

பனை மிசை அன்றில் சேக்கும் – அகம். 360

அன்றில் ஓங்கு இரும் பெண்ணை அக மடல் அகவ - குறி 219

பரியரை பெண்ணை அன்றில் குரலே - நற் 218

மன்று இரும் பெண்ணை மடல் சேர் அன்றில் - கலி  129

மனை சேர் பெண்ணை மடி வாய் அன்றில் - அகம் 50

துணை புணர் அன்றில் எக்கர் பெண்ணை அக மடல் சேர - அகம் 260


முடிவுரை:

ஓலை, பூ, காய், கனி, கிழங்கு என்று பலவகையாலும் இக்கால மனிதருக்கும் பயன்படுவதான பனைமரங்களில் இருந்து கள் என்னும் பானமும் கிடைக்கிறது. வெண்மை நிறத்தில் குளிர்ச்சியான நீர்போலத் தோன்றும் கள்ளானது இலேசான இனிப்பும் புளிப்பும் கலந்த சுவையுடையது. நாள்பட நாள்பட புளிப்புச்சுவை மிகும். சங்கத் தமிழர்கள் பனைமரத்தில் இருந்து கள்ளை இறக்கிப் பருகிய செய்தியைக் கீழ்க்காணும் பாடல்கள் கூறுகின்றன.

பிணர் பெண்ணை பிழி மாந்தியும் – பட். 89

ஓங்கி தோன்றும் தீம் கள் பெண்ணை – நற். 323

பனைமரத்தில் இருந்து இத்தனை உணவுகளைப் பெற்ற பின்னரும் பனைமரத்தின் உயரமான தண்டுகூட வீணாவதில்லை. பனைமரத்தின் வேர்கள் பூமிக்குள் மிக ஆழமாகச் செல்வதால் இவை மண் அரிப்பைத் தடுக்கும் வல்லமை கொண்டவை. சங்ககாலத்தில் பனைமரங்கள் இயற்கையாகவே கடற்கரை ஓரங்களில் வரிசையாக வளர்ந்து கடல் அரிப்பைத் தடுப்பதில் முன்னின்றன. சங்ககாலத் தமிழகத்தின் கடற்கரை ஓரங்களில் பனைமரங்கள் மிக்கு வளர்ந்திருந்த செய்திகளைக் கூறும் சங்கப் பாடல்கள் சிலவற்றைக் கீழே காணலாம்.

பெண்ணை ஓங்கிய வெண் மணல் படப்பை  – நற். 123, அகம். 120

பெண்ணை இவரும் ஆங்கண் வெண் மணல் படப்பை      - நற். 38

அடும்பு இவர் மணல் கோடு ஊர நெடும் பனை – குறு. 248

இரும் பௌவத்து ……… தீம் பெண்ணை மடல் சேப்பவும் – பொரு. 207

பெண்ணை மா அரை புதைத்த மணல் மலி முன்றில் – நற். 135

ஓங்கு மணல் உடுத்த நெடு மா பெண்ணை – நற். 199

கடலும் கானலும் தோன்றும் மடல் தாழ் பெண்ணை – குறு. 81

தண் கடல் பரப்பின் அடும்பு அமல் அடைகரை அலவன் ஆடிய

வடு அடு நுண் அயிர் ஊதை உஞற்றும் தூ இரும் போந்தை – பதி.  51*

கடற்கரையில் பனைமரங்களை வளர்க்க மிகவும் சிரமப்படத் தேவையில்லை. அரைகிலோமீட்டருக்கு ஒரு மரத்தை கடற்கரை மணலில் நட்டு வளர்த்தால் போதுமானது. அம் மரங்களில் இருந்து பழுத்து தானே உதிரும் கனிகள் கடல்நீரால் உந்திச் செல்லப்பட்டுச் சிதைவுற்று அதனுள்ளே இருக்கும் கொட்டைகள் கடற்கரையில் வேறொரு இடத்தில் முளைக்கும். இப்படியாகப் பத்து ஆண்டுகள் கழிந்தபின், பல பனைமரங்கள் வரிசையாகக் கடற்கரையில் வளர்ந்து நிற்பதைப் பார்க்கலாம். வாழும்போது நிலையாக நின்று வாழ்ந்த பனைமரம் சாய்ந்தபின் படுத்த படுக்கையாக வீட்டுக் கூரையைத் தாங்கும் உத்திரமாக என்றும் நம்மோடு நிலைபெற்று விடுகிறது. எனவே பனைமரங்களைப் புதிதாக நட்டு வளர்ப்போம்! இருப்பவற்றை அழிவில் இருந்து பாதுகாப்போம்.!!

ஆதாரம் / மேற்கோள்கள்:

(1)  https://thiruththam.blogspot.com/2015/07/blog-post.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.