வியாழன், 2 செப்டம்பர், 2021

14. அசுணம் / அசுணமா ( சங்க இலக்கியத்தில் விலங்கியல் )


           அசுணம் 

என்றால் என்ன?

முன்னுரை:

சங்க இலக்கியத்தில் விலங்கியல் என்ற தலைப்பில் பல்வேறு விலங்குகளைப் பற்றிய தகவல்களைத் தொடர் ஆய்வுக் கட்டுரைகளாக முன்னர் கண்டோம். அவற்றில், நாய், கழுதை, பூனை, கரடி, மான், குரங்கு, யானை, புலி, குதிரை, எருமை, பன்றி ஆகிய பதினோரு விலங்குகளைப் பற்றிச் சங்க இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள விரிவான செய்திகள் படங்களுடன் தொகுக்கப்பட்டு சங்க இலக்கியத்தில் விலங்கியல் என்ற நூலாக 2018 ஆம் ஆண்டில் அச்சில் வெளிவந்தது. அதனை அடுத்து, ஆடு மற்றும் கழுது என்ற விலங்குகளைப் பற்றிய ஆய்வுக் கட்டுரைகள் வெளிவந்துள்ள நிலையில், அசுணம் அல்லது அசுணமா என்று அழைக்கப்படுவதான விலங்கினைப் பற்றிய விரிவான ஆய்வினை இக் கட்டுரையில் காணலாம்.

அசுணம் பற்றி நிலவும் கருத்துக்கள்:

அசுணம் / அசுணமா பற்றிய விரிவான ஆய்வுக்குள் செல்லும்முன் அதைப்பற்றித் தற்போது நிலவிவருகின்ற கருத்துக்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

1.   அசுணம் - ஒரு கற்பனை விலங்கு:

அசுணம் என்பது இசையை அறியக்கூடிய ஒரு விலங்கு என்றும் அப்படி ஒரு விலங்கு இவ் உலகில் வாழவே இல்லை என்றும் அது புலவர்களால் கற்பனையாகப் படைக்கப்பட்ட ஒரு விலங்கு என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.

2.   அசுணம் - ஒருவகைப் பறவை:

அசுணம் என்பது இசையை அறியக் கூடிய ஒரு உயிரி தான் என்றும் ஆனால் அது ஒரு விலங்கு அல்ல என்றும் அது ஒருவகைப் பறவை என்றும் ஒரு கருத்து நிலவி வருகிறது.

3.   அசுணம் - ஒருவகைப் பாம்பு:

அசுணம் என்பது இசையை அறியக் கூடிய விலங்கு தான் என்றும் அது ஒருவகையான பாம்பினையே குறிக்கும் என்றும் ஒரு கருத்து நிலவி வருகிறது.

தற்போதைய கருத்துக்கள் சரியா?

ஆராய்ந்து பார்த்ததில், மேலே கண்ட மூன்று கருத்துக்களிலும் தவறு இருப்பதாகவே பட்டது. எனவே முதலில் இக் கருத்துக்கள் சரியா தவறா என்று கீழே காணலாம்.

அசுணம் என்பது ஒரு கற்பனை விலங்கு என்னும் கருத்திற்கு எவ்வித ஆதாரங்களும் முன்வைக்கப் படவில்லை. “ இன்று உயிருடன் இல்லை “ என்ற ஒரேயொரு காரணத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு அந்த உயிரினம் பூமியில் வாழவே இல்லை என்று முடிவுசெய்வது அறிவியல் முறைப்படி தவறானது ஆகும். ஏனென்றால், எத்தனையோ வகையான உயிரினங்கள் காலந்தோறும் மண்ணில் வாழ்ந்து மடிந்து இருந்த தடம் தெரியாமல் போய் இருக்கின்றன. மேலும், அசுணம் ஒரு கற்பனை விலங்கு என்றால் அதைப்பற்றிக் குறிப்பிட்ட காலகட்டங்களில் மட்டுமே கூறியிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறின்றி, பல்வேறு காலகட்டங்களில் வாழ்ந்த பல்வேறு புலவர்கள் அசுணமாவைப் பற்றி இலக்கியங்களில் குறிப்பிட்டு இருப்பதில் இருந்து அசுணம் என்பது உண்மையிலேயே இவ் உலகில் வாழ்ந்து வரும் ஒரு உயிரினம் தான் என்றும் அதுவொரு கற்பனை விலங்கு அல்ல என்றும் முடிவு செய்யலாம்.

அடுத்ததாக, அசுணம் என்பது ஒரு பறவையைக் குறிக்கும் என்ற கூற்றைப் பார்க்கலாம். அசுணம் என்பது ஒரு பறவை என்பதற்குச் சான்றாக கூர்மபுராணத்தில் இருந்து கீழ்க்காணும் பாடல்வரி முன்வைக்கப் பட்டுள்ளது.

“ .... முரசொலி கேட்ட அசுண மென்புள் மூச்சவிந்து ..”

                    (இராமன் வனம் புகு படலம்)

மேற்காணும் பாடல்வரிக்குப் பொருள் கொள்கையில், அசுணம் + என் + புள் என்று பிரித்து அசுணம் என்னும் பறவை என்று அதற்கு விளக்கம் கொடுத்துள்ளனர். இது தவறான விளக்கமாகும். அசுணம் + என்பு + உள் என்பதே சரியான பிரிப்பாகும். இங்கே என்பு என்பது உடலைக் குறிக்கும். இதன் பொருளானது “ முரசொலியைக் கேட்ட அசுணமானது உடலுக்குள் உயிர் அடங்கி “ என்பதாகும். இப் பாடல்வரியில் பறவை என்ற பொருளே இல்லை என்பதால் இப்பாடல் வரியை அடிப்படையாகக் கொண்டு முன்வைக்கப்பட்ட “ அசுணம் ஒரு பறவை “ என்ற கருத்து பொருந்தாமல் போனது.

இறுதியாக, அசுணம் என்பது ஒருவகைப் பாம்பு என்ற கூற்றைப் பார்க்கலாம். .பொதுவாகப் பாம்புகளுக்கு வெளிப்படையான காதுகள் இல்லை என்பது அனைவரும் அறிந்த அறிவியல் உண்மை ஆகும். அசுணம் என்பது ஒருவகைப் பாம்பு என்றால் அசுணத்திற்கும் காதுகள் இல்லை என்றுதான் பொருள் கொள்ளப்படும். மாறாக, அசுணத்திற்கு நீண்ட காதுகள் இருந்தன என்று சூளாமணியின் கீழ்க்காணும் பாடல்வரி குறிப்பிடுகிறது.

“ ..... குலவுகோல் கோவலர் கொன்றைத் தீங்குழல்

உலவுநீள் அசுணமா உறங்கும் என்பவே ..... (நாட்டுச்சருக்கம்)

மேற்காணும் பாடல்வரியில் வரும் உலவு என்பது காதைக் குறிப்பதாகும். இது உளவு என்பதன் போலியாகும். உளவு என்ற சொல் கேட்டு அறிதல் என்ற பொருளில் இன்றும் பயன்பட்டு வருவதாகும். கேட்டு அறியும் வினைக்கு உதவும் கருவியாக காதே விளங்குவதால் காதையும் உளவு என்ற சொல்லால் குறித்தார் எனலாம். அவ்வகையில், உலவு நீள் அசுணமா என்பது காது நீண்ட அசுணம் என்று பொருள் பெறுகிறது. அசுணத்திற்கு நீண்ட காதுகள் உண்டு என்று மேற்காணும் பாடல் கூறுவதால் அசுணம் என்பது பாம்பாக இருக்க வாய்ப்பில்லை என்பது தெளிவாகிறது.

இலக்கியங்களில் அசுணம்:

அசுணம் என்பது கற்பனை விலங்கு அல்ல என்றும் பறவையும் அல்ல என்றும் பாம்பும் அல்ல என்றும் மேலே கண்டோம். என்றால், அசுணம் என்பது எதைத்தான் குறிக்கிறது என்ற கேள்வி முன் நிற்கிறது. இக் கேள்விக்கான விடையைக் காணும்முன் இலக்கியங்களில் அசுணமாவைப் பற்றிக் கூறப்பட்டுள்ள பல்வேறு செய்திகளைக் கீழே தொகுத்துக் காண;லாம்.

அசுணமும் மெல்லிசையும்:

அசுணம் என்பது பறவையோ பாம்போ அல்ல என்னும் கருத்து உறுதியாகி விட்ட நிலையில் அது இசையை அறிந்து அனுபவிக்கின்ற ஒரு விலங்குதான் என்பதைப் புரிந்து கொள்ளலாம். அசுணமானது மென்மையான இனிமையான இசையைக் கேட்டு மகிழ்ந்த மற்றும் உறங்கிய செய்திகளைக் கூறும் பாடல்வரிகளைக் கீழே காணலாம்.

மாதர் வண்டின் நயவரும் தீங்குரல்

மணம்நாறு சிலம்பின் அசுணம் ஓர்க்கும் .... நற். 244

கடாம் இருஞ்சிறைத் தொழுதி ஆர்ப்ப யாழ்செத்து

இருங்கல் விடரளை அசுணம் ஓர்க்கும் ... – அகம். 88

இன் அளி கேட்ட அசுணமா அன்னளாய் மகிழ்வு .. சிந்தா. 1402

மேற்பாடல் வரிகளில் இருந்து, வண்டுகள் இசைக்கும் யாழிசை போன்ற மெல்லிசையை அசுணங்கள் கேட்டு மகிழ்ந்தன என்ற செய்தி பெறப்படுகிறது. அதுமட்டுமின்றி, புல்லாங்குழலின் இனிமையான மெல்லோசையும் பெண்கள் பாடிய குறிஞ்சிப்பண்ணும் கூட அசுணத்திற்கு மிக விருப்பமானது என்று இலக்கியங்கள் கூறுவதைப் பார்க்கலாம்.

கழைகளின் துளைதொறும் கால்பரந்து இசைக்கின்ற ஏழிசைக்கு

உளமுருகி மெய் புளகெழ இரைகொளும் அசுணங்கள் ... வில்லி. 9/20

கொடிச்சியர் எடுத்த இன்குறிஞ்சி கனிந்த பாடல்கேட்டு

அசுணமா வருவன காணாய் ... கம்ப. அயோத். 10/24

அசுணமும் பறையோசையும்:

யாழோசை, புல்லாங்குழல் ஓசை, குறிஞ்சிப்பண் போன்ற மெல்லிசைகளை விரும்பிக் கேட்டு மகிழ்ந்த அசுணங்களைப் பறையோசை, முரசொலி போன்ற வலிய ஓசைகள் படுத்திய பாட்டினைக் கீழே பார்க்கலாம்.

முரசொலி கேட்ட அசுணம் என்புள் மூச்சவிந்து .. கூர்ம.இரா.வ.பு.படலம்

பறைபட வாழா அசுணமா... -. நான்மணி – 2

சீறியாழ் இன்னிசை கேட்ட அசுண நல்மா அந்நிலைக் கண்ணே

பறையொலி கேட்டுத் தன்படி மறந்தது போல்.... பெருங். உஞ்சை. 47/242

மேற்காணும் பாடல்களில் இருந்து, பறையோசை மற்றும் முரசொலியைக் கேட்ட அசுணங்கள் வெய்துயிர்த்துத் தன்னிலை மறந்தன என்ற செய்தியும் உடலில் மூச்சடங்கி இறந்தன என்ற செய்தியையும் அறிய முடிகிறது.

அசுணங்களின் வாழ்விடம்:

அசுணங்களின் வாழ்விடம் பற்றிய செய்திகளைக் கீழ்க்காணும் பாடல்களின் வழியாக அறிய முடிகிறது.

மணம்நாறு சிலம்பின் அசுணம் ஓர்க்கும் .... நற். 244

இருங்கல் விடரளை அசுணம் ஓர்க்கும் ... – அகம். 88

மேற்காணும் பாட்ல்களில் இருந்து, அசுணங்கள் மலைகளில் காணப்பட்ட பிளவுகள் மற்றும் குகைகளில் வாழ்ந்தன என்பதை அறியலாம். அசுணமாக்கள் மலைகளில் மட்டுமின்றி மனிதர்களின் குடியிருப்புகளுக்கு  அருகிலும் வாழ்ந்திருக்க வேண்டும். அப்போதுதான் மனிதர்கள் இசைத்த யாழோசை, புல்லாங்குழல் ஓசை, பறையோசை, முரசொலி முதலானவற்றைக் கேட்டிருக்க இயலும் அல்லவா?. 

அசுணமும் மனிதர்களும்:

அசுணங்கள் மனிதர்களின் குடியிருப்புகளுக்கு அருகில் வாழ்ந்திருக்க வேண்டும் என்று மேலே கண்டோம். உண்மையில், அசுணங்களை மனிதர்கள் வீட்டு விலங்குகளாகவும் வளர்த்து இருக்க வேண்டும் என்று கீழ்க்காணும் பாடல்வழி அறிய முடிகிறது.

.... அசுணம் கொல்பவர் கைபோல் நன்றும்

இன்பமும் துன்பமும் உடைத்தே ... – நற். 304

அசுணங்களை வளர்த்த மனிதர்கள் தமது கைகளாலேயே அவற்றைக் கொலை செய்வதைப் பற்றித்தான் மேற்பாடல் கூறுகிறது. காதலரின் மார்பு சேரும்போதும் பிரியும்போதும் தனக்கு தரக்கூடிய இன்பமும் துன்பமும் எப்படிப்பட்டது என்றால் அசுணங்களுக்குத் தனது கைகளால் உணவளித்து அன்பு காட்டியவர்கள் திடீரென்று தனது கைகளாலேயே அவற்றைக் கொல்லுவதற்கு ஒப்பாகும் என்று மேற்பாடலில் கூறுகிறாள் காதலி. கோழி, ஆடு, மாடு, பன்றி, எருமை போன்ற விலங்குகள் வீடுகளில் வளர்க்கப்பட்டு உணவுக்காகக் கொல்லப்படுவது கொடுஞ்செயலாகக் கூறப்படாத நிலையில், அசுணங்களைக் கொல்வது மட்டும் கொடிய செயலாகக் கருதப்பட்டது என்பதனை இப்பாடலின் வழியாக அறிய முடிகிறது, இதிலிருந்து, அசுணங்கள் கொன்று உண்பதற்காக அல்லாமல் அன்பு காட்டப்படும் செல்லப் பிராணிகளாக வளர்க்கப்பட்டன என்று அறியலாம்.

அசுணங்களின் உடலமைப்பு:

அசுணங்களின் உடலமைப்பு பற்றிய செய்திகளைக் கீழ்க்காணும் பாடல்களின் வழியாக அறிந்துகொள்ள முடிகிறது.

கனியிசை கள்ளினால் தூமமேனி

அசுணம் துயில்வுறும் ........ கம்ப. கிட்.. 13/14

அசுணத்தின் உடலானது தூமம் அதாவது புகையைப் போல வெண்ணிறத்தில் பொங்கிப் பொலிந்த நிலையில் காணப்பட்டது என்ற செய்தியை மேற்பாடல் கூறுகிறது. இதிலிருந்து, அதன் உடல் முழுவதும் வெண்ணிற மயிர் புசுபுசுவென்று பொலிந்து இருந்ததை அறியலாம். அசுணமாவிற்கு நீண்ட காதுகள் இருந்தன என்ற செய்தியைப் பற்றி ஏற்கெனவே மேலே கண்டோம்.

“ ..... குலவுகோல் கோவலர் கொன்றைத் தீங்குழல்

உலவுநீள் அசுணமா உறங்கும் என்பவே ..... (நாட்டுச்சருக்கம்)

அசுணம் என்பது எதைக் குறிக்கிறது?

அசுணம் பற்றிப் பல்வேறு இலக்கியங்கள் கூறிய செய்திகளை மேலே கண்டோம். இனி அவற்றைக் கீழே தொகுத்துப் பார்க்கலாம்.

1.    அசுணங்கள் மலைப்பிளவுகள் மற்றும் குகைகளில் வாழ்ந்தன.

2. அசுணங்களை மனிதர்கள் கொன்று உண்பதற்காக அல்லாமல் செல்லப் பிராணிகளாக வீடுகளில் வளர்த்தார்கள்.

3. அசுணங்கள் மனிதர்கள் இசைத்த மெல்லிசையைக் கேட்டு மகிழ்ந்தன. வல்லிசையைக் கேட்டு மடிந்தன / துன்புற்றன.

அசுணத்தின் உடலில் வெண்ணிற மயிர் புசுபுசு என்று இருக்கும். அதன் காதுகள் நீண்டு இருக்கும்.

மேற்கண்ட தகவல்களைத் தொகுத்துப் பார்த்ததில், அசுணம் / அசுணமா என்பது கீழ்க்காணும் விலங்காகத் தான் இருக்கவேண்டும் என்று தோன்றுகிறது.

                   அசுணம் / அசுணமா = பூனை.

அசுணம் – பெயர் விளக்கம் என்ன?:

அசுணம் என்பது பூனை என்றால், பூனையைக் குறிக்கும் பூசை, பிள்ளை, வெருகு போன்ற சொற்களைக் கூறாமல் அசுணம் என்ற புதிய சொல்லை ஏன் பயன்படுத்த வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. இதற்கான விடையினைக் கீழே காணலாம்.

அசை என்ற வினைச்சொல்லுக்குப் பாடுதல், இசைத்தல், ஒலித்தல் என்ற பொருட்களுண்டு. உண்ணு என்ற வினைச்சொல்லுக்கு அனுபவித்தல், உட்கொள்ளுதல் என்ற பொருட்களுண்டு. இந்த இரண்டு சொற்களும் இணைந்து உருவானதே அசுணம் ஆகும்.

அசை (=பாடு, ஒலி, இசை) + உண் (=அனுபவி) + அம் = அசுணம் = இசையினை அனுபவிப்பது.

இசையை அனுபவிப்பது என்ற பொருளில் பூனையைக் குறிக்க உருவாக்கப்பட்டதே அசுணம் என்ற சொல்லாகும்.

மேலதிக சான்றுகள்:

இலக்கியங்கள் கூறியுள்ள செய்திகளில் இருந்து அசுணம் என்பது பூனையைக் குறிக்கும் என்று முடிவு செய்யப்பட்டது. இருப்பினும், கீழ்க்காணும் மேலதிக சான்றுகள் மூலம் இக் கருத்துக்கு மேலும் வலுவூட்டலாம்.

மனிதர்கள் மற்றும் நாய்களைக் காட்டிலும் பூனைகளுக்கு அதிகக் கேட்புத் திறன் உள்ளதென்று அறிவியல் கூறுகிறது. பூனைகளால் சிறுசிறு ஒலிகளைக் கூட தெளிவாகக் கேட்டு இருட்டிலும் இரையின் இருப்பிடத்தைத் துல்லியமாகக் கணிக்க முடியும் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. பூனை தனது காதுமடல்களை 180 டிகிரி கோணத்தில் தனித்தனியாக திருப்பும் திறன் வாய்ந்ததாக அறியப்படுகிறது.

தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளதைப் போலவே, வீணை, கிடார், யாழ், புல்லாங்குழல் போன்ற கருவிகளில் இருந்து எழும் மெல்லிசைகளை மிகவும் விரும்பிக் கேட்பதாகவும் பறைகளை முழக்கும்போது பூனையின் கேட்புத்திறன் பாதிக்கப்பட்டு அதன் செயல்பாடுகளில் பெருத்த மாற்றம் உண்டாகுவதாகவும் பூனைகளை வீட்டில் வளர்ப்பவர்கள் கூறுவதை இணையங்களில் பார்க்க முடிகிறது. திடீரென ஒலிக்கும் இடியோசையால் பூனைகள் சுருண்டு விழுந்த செய்திகளும் அதில் உள்ளன. மற்ற விலங்குகளைக் காட்டிலும் பூனைகள் ஒலியினால் அதிகம் பாதிப்பு அடைவதன் காரணம் அதன் செவியமைப்பு தான். சிறிய ஒலியைக் கூட பலமடங்காகப் பெருக்கித்தரும் ஒலிபெருக்கியாக அவற்றின் காதுகள் செயல்படுவதே இந்த மோசமான விளைவுகளுக்குக் காரணம் என்று விலங்கியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இறுதியாக, பூனைக் குடும்பத்தைச் சேர்ந்த மூதாதையர் விலங்குகளுக்கு “அசிணோ” (ACINO) என்ற ஒட்டுச்சொல்லுடன் கூடியதாக, அசிணோனிக்சு (ACINONYX), மிராசிணோனிக்சு (MIRACINONYX) போன்ற பெயர்கள் சூட்டப்பட்டு இருப்பது இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.

முடிவுரை:

இதுவரை கண்டவற்றில் இருந்து, அசுணம் அல்லது அசுணமா என்பது பூனையைக் குறித்தே இலக்கியங்களில் பயின்று வந்துள்ளது என்பது உறுதியாகிறது.

பூனைகளுக்கு வண்டோசை, யாழோசை, குழலோசை போன்ற மெல்லிசைகள் தான் பிடிக்கும் என்று இப்போதுதான் ஆய்வாளர்கள் கண்டு அறியும் நிலையில், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இச் செய்திகளை இலக்கியங்களில் பதிவுசெய்து விட்டுச்சென்ற நம் முன்னோரின் அறிவுத் திறனை எவ்வளவு பாராட்டினாலும் தகும் அல்லவா?.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.