தமிழ் எண்களின் பெயர்ச் சொற்பிறப்பியல்
முன்னுரை:
தமிழர்கள் பழங்காலம் தொட்டே நிறுத்தல் அளவை, நீட்டல் அளவை, முகத்தல் அளவை போன்ற பலவகை அளவைகளில் எண்களைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த எண்கள் பலவகைகளாக இருந்தாலும், நம் வசதிக்கேற்ப அவற்றை ஒன்றுக்கு மேற்பட்டவை என்றும் ஒன்றுக்குக் கீழ்ப்பட்டவை என்றும் இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்றுக்கு மேற்பட்டும் எண்ணற்ற எண்கள் இருப்பதால் ஒன்றாதிபதி (ஒன்று முதல் பத்து வரையிலானவை) எண்கள் மற்றும் நூறு, ஆயிரம், இலக்கம், கோடி என்ற எண்களுக்குமான தமிழ்ப் பெயர்கள் மட்டும் எவ்வாறு தோற்றம் பெற்றன என்பதை இக் கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஒன்று:
ஒன்னுதல்
என்றால் பொருந்துதல், தொடுதல் என்று பொருளுண்டு. ஒரு செயலைத் துவக்க வேண்டுமென்றால்
முதலில் அதற்கான பொருளைத் தொட வேண்டும். இதனால் தான் துவக்கத்திற்குத் தொடக்கம் (தொடு
+ ஆக்கம்) என்ற பெயரும் உண்டானது. எண்களின் தொடக்கமாக இந்த எண் விளங்குவதால் இந்த எண்ணிற்கு
ஒன்று என்ற பெயர் ஏற்பட்டது. ஒன்று என்ற பெயரின் தோற்றத்தைக் கீழே காணலாம்.
ஒன்
(=பொருந்து, தொடு) + உ = ஒன்னு
>>> ஒன்று = தொடக்கம்.
பி.கு:
ஒன்று என்னும் தமிழ்ச் சொல்லே ஒந்து என்று கன்னடத்தில் வழங்கப்பட்டு வருகிறது.
இரண்டு:
ஈர்தல்
என்றால் கீறுதல், பிளத்தல் என்ற பொருளுண்டு. ஒருபொருளை ஒருமுறை கீறும்போது / பிளக்கும்போது
கிடைப்பது இரண்டு பாகங்கள் என்பதால் ஈர்தல் வினையே இந்த எண்ணிற்கு அடிப்படையானது. இரண்டு என்ற எண்ணின்
பெயர்த் தோற்றத்தினைக் கீழே காணலாம்.
ஈர்
(=கீறு, பிள) + அண்டு (=அடை) = இரண்டு = பிளப்பதால் அடைவது.
பி.கு:
இரண்டு என்ற தமிழ்ச்சொல்லே ரெண்டு என்று தெலுங்கிலும் எரடு என்று கன்னடத்திலும் வழங்கப்பட்டு
வருகிறது.
மூன்று:
பழந்தமிழர்கள்
தமது வாழ்வில் இயற்கையுடன் இணைந்து அதனை உற்றுநோக்கி வாழ்ந்தனர் என்பதும் அந்த அடிப்படையிலேயே
பல சொற்களின் பெயர்களை அமைத்தனர் என்பதும் மறுக்க இயலாத உண்மை ஆகும். அவ்வாறு இயற்கை
நியதியை உற்று நோக்கித் தமிழர்கள் அமைத்த பல எண்ணுப் பெயர்களில் ஒன்றுதான் மூன்று என்பதாகும்.
இயற்கையை உற்றுநோக்கிய தமிழர்கள் அதன் நியதியில் பெரும்பாலும் மூன்று வகைகளே இருப்பதை
அறிந்தனர். அவற்றில் சில சான்றுகளை மட்டும் கீழே காணலாம்.
வாழ்க்கை வகை : பிறப்பு – வாழ்வு – இறப்பு
இருப்பிட வகை : மேல் – இடை – கீழ்
இயல்பொருள் வகை : திடம் – திரவம் – வாயு
பாலின வகை : ஆண் – அலி – பெண்
வரிசை வகை : முதல் – இடை – கடை
பொழுது
வகை :
காலை – மதியம் – இரவு
இயற்கையின்
நியதியில் இத்தகைய மூன்று வகைகளே பெரும்பான்மையாக அறியப்பட்டதால், இயற்கை நியதியைக்
குறிக்கும் “முறை” என்ற சொல்லில் இருந்தே இந்த எண்ணுக்கான பெயரை அமைத்தனர். மூன்று
என்ற பெயரின் தோற்றத்தைக் கீழே காணலாம்.
முறை
(=இயற்கை நியதி, தடவை, எண்ணிக்கை) + உ = மூறு >>> மூன்று = இயற்கை நியதிகளின்
எண்ணிக்கை.
பி.கு:
மூறு என்ற தமிழ்ச்சொல்லே தெலுங்கில் மூடு என்றும் கன்னடத்தில் மூறு என்றும் இன்றளவும்
வழங்கி வருகிறது.
நான்கு:
ஏனை
உயிர்களின் வாழ்வைக் காட்டிலும் மனித உயிர்களின் வாழ்வு மகத்தானது என்று அறிவோம். இதைப்
பற்றிப் புலவர்கள் பலர் தமது பாடல்களில் பாடியும் உள்ளனர். இந்த மனித வாழ்வின் மகத்துவத்திற்கான
காரணம், மனிதர்களால் மட்டுமே நாற்பொருள் என்று அழைக்கப்படும் அறம், பொருள், இன்பம்,
வீடு என்னும் நான்கு நன்மைகளை அடைய முடியும் என்பதே. மனிதர்கள் தமது வாழ்வில் இந்த
நான்கு நற்பொருட்களை அடையும் முறைகளைப் பற்றியே தமிழ் இலக்கியங்கள் பலவும் விரிவாகக்
கூறியுள்ளன. இனி, நான்கு என்ற எண் பெயர் தோன்றிய விதத்தைக் கீழே காணலாம்.
நன்மை
+ கூழ் (=பொருள், எண்ணு) = நான்கூழ் >>> நான்கு = நன்மைப் பொருட்களின் எண்ணிக்கை.
நான்கு
என்ற எண் பெயரானது நால்கு என்றும் இலக்கியங்களில் வழங்கப் பட்டுள்ளது. எனவே நால்கு
என்ற பெயர் தோன்றிய முறையினையும் கீழே காணலாம்.
நல்
(=நன்மை) + கூழ் (=பொருள், எண்ணு) = நால்கூழ் >>> நால்கு = நன்மைப் பொருட்களின்
எண்ணிக்கை.
பி.கு:
நால்கு என்ற தமிழ்ச்சொல்லே நாலகு என்று தெலுங்கிலும் கன்னடத்திலும் வழங்கப்பட்டு வருகிறது.
ஐந்து:
மனிதருடைய
கையில் இயற்கையாக ஐந்து விரல்கள் தான் இருக்கும். அவ்வாறு இந்த கையை அடிப்படையாகக்
கொண்டு தோன்றியதே ஐந்து என்னும் எண் பெயராகும். இப் பெயரின் தோற்றம் கீழே:
அத்தம்
(=கை) + ஊழ் (=எண்ணு) = அத்தூழ் >>> ஐந்து = கையில் எண்ணப்படுவது.
பி.கு:
ஐந்து என்னும் தமிழ்ப் பெயரே ஐது என்று கன்னடத்திலும் தெலுங்கிலும் வழங்கப்பட்டு வருகிறது.
ஆறு:
கை
விரல்களைக் கொண்டு ஐந்து என்ற எண்ணின் பெயரை அமைத்ததைப் போல, கால் விரல்களைக் கொண்டு
ஆறாம் எண்ணிற்கான பெயரை அமைத்தனர். தேனீ, வண்டு முதலான பெரும்பாலான பூச்சிகளில் கால்களின்
எண்ணிக்கை ஆறாக அமைந்துள்ளது. இந்த அடிப்படையில், தேனீ / வண்டைக் குறிக்கும் பெயரை
அடிப்படையாகக் கொண்டே இந்த எண்ணிற்கான பெயரைக் கீழ்க்காணுமாறு சூட்டினர்.
அரி
(=தேனீ, கால்) + ஊழ் (=எண்ணு) = ஆரூழ் >>> ஆறு = தேனீயின் கால்களின் எண்ணிக்கை.
பி.கு:
ஆறு என்னும் தமிழ்ச் சொல்லானது அப்படியே கன்னடத்திலும் தெலுங்கிலும் வழங்கப்பட்டு வருகிறது.
ஏழு:
இயற்கையில்
தோன்றும் வண்ணங்களை எண்ணத் தொடங்கினால் அது கணக்கில் அடங்காது என்று அறிவோம். ஆனால்
வானவில்லில் தோன்றும் வண்ணங்களின் எண்ணிக்கையோ ஏழாகவே எப்போதும் அமைந்து விடுகிறது.
இந்த அடிப்படையில் அமைக்கப்பட்ட பெயரே ஏழு ஆகும். ஏழு எனும் எண்ணுப் பெயர் தோன்றிய
விதத்தைக் கீழே காணலாம்.
ஏ
(=மேல்நோக்குகை, அடுக்கு, வில்) + ஊழ் (=ஒளி, எண்ணு) + உ = எயூழு >>> ஏழு
= மேல்நோக்கப்படும் ஒளிவில்லில் உள்ள அடுக்குகளின் எண்ணிக்கை.
பி.கு:
ஏழு என்ற தமிழ்ச் சொல்லே ஏழு என்று கன்னடத்திலும் ஏடு என்று தெலுங்கிலும் வழங்கப்பட்டு
வருகிறது.
எட்டு:
தமிழில்
ஆறு என்றால் வழி, பக்கம் என்ற பொருட்களும் உண்டு. பக்கம், வழி என்பதற்கு மாற்றாகத்
திசை என்று கூறுவதும் உண்டு. திசைகள் என்று எடுத்துக் கொண்டால் வடக்கு, கிழக்கு, மேற்கு,
தெற்கு, வடகிழக்கு, வடமேற்கு, தென்கிழக்கு, தென்மேற்கு என்ற எட்டு மட்டுமே மக்களால்
பயன் கொள்ளப் படுபவை ஆகும். இனி, எட்டு என்ற எண் பெயர் தோன்றிய முறையைக் கீழே காணலாம்.
ஆறு
(=பயன், பக்கம், திசை) + ஊழ் (=எண்ணு, முற்று) = அற்றூழ் >>> எட்டு = பயன்
கொள்ளும் திசைகளின் முற்றிய எண்ணிக்கை.
பி.கு:
எட்டு என்ற தமிழ்ச் சொல்லே எண்ட்டு என்று கன்னடத்தில் வழங்கப்பட்டு வருகிறது.
ஒன்பது:
பத்தைக்
காட்டிலும் குறைவானது என்ற பொருளில் உருவானதே ஒன்பது என்ற எண்ணின் பெயராகும். இப் பெயர்
உருவான முறையைக் கீழே காணலாம்.
உண்
(=குறை) + பத்து = உண்பத்து >>> ஒன்பது = பத்தின் குறை
பத்து:
இதுவரையிலும்
கண்ட எண்ணுப் பெயர்கள் யாவும் ஒரு தனிப்பொருள் அல்லது தனிவினை சார்ந்ததாக அமைந்திருப்பதை
அறிந்தோம். இனி, பத்து முதல் கோடி வரையிலான எண்ணுப் பெயர்கள் யாவும் தனிப்பொருள் /
தனிவினை குறித்து அமையாமல் கூட்டப் பொருளில் அமைவதை அறியலாம். முதலில், பத்து என்ற
எண்ணின் பெயர் தோன்றும் முறையைக் காணலாம்.
பற்று
(=குலை, கூட்டம், எண்ணு) >>> பத்து = கூட்டத்தின் எண்ணிக்கை
பி.கு:
பத்து என்னும் தமிழ்ச்சொல்லே பதி என்று தெலுங்கிலும் அத்து என்று கன்னடத்திலும் வழங்கப்பட்டு
வருகிறது.
நூறு:
பத்து
என்பது கூட்டப் பொருளில் அமைந்திருப்பதைப் போல நூறு என்பதும் கூட்டப் பொருளில் அமைந்த
எண்ணுப் பெயரே ஆகும். நூறு என்னும் எண்ணுப் பெயர் தோன்றிய முறையைக் கீழே காணலாம்.
நிரை
(=கூட்டம்) + ஊழ் (=எண்ணு) = நீரூழ் >>> நூறு = கூட்டத்தின் எண்ணிக்கை
ஆயிரம்:
பத்து,
நூறு ஆகிய எண்களைப் போலவே ஆயிரம் என்ற எண்ணுப் பெயரும் கூட்டப் பொருளில் அமைக்கப்பட்டுள்ளது.
ஆனால், அது பெருங்கூட்டம் என்பதன் அடிப்படையில் அமைந்திருப்பதைக் கீழே காணலாம்.
ஆயம்
(=கூட்டம், எண்ணம்) + இருமை (=பெருமை) + அம் = ஆயிரம் = பெரிய கூட்டத்தின் எண்ணிக்கை.
இலக்கம்:
இலக்கம்
என்ற தமிழ்ச்சொல்லே இலட்சம் என்று மருவி வழங்கப் படுகிறது. இலக்கம் என்ற எண்ணுப் பெயர்
தோன்றிய முறையைக் கீழே காணலாம்.
ஏல்
(=மிகு, பெரு, எண்ணு) + ஆக்கம் (=கூட்டம்) = எலாக்கம் >>> இலக்கம் = மிகப்
பெரிய கூட்டத்தின் எண்ணிக்கை
கோடி:
கூட்டப்
பொருளில் அமைந்த இறுதியான எண்ணுப் பெயரே கோடி ஆகும். கோடி என்னும் எண்ணுப் பெயர் தோன்றும்
முறையினைக் கீழே காணலாம்.
கோடு
(=எண்ணு, குலை, கூட்டம், வரம்பு) + ஈ (=அறு) = கோடீ >>> கோடி = வரம்பற்ற கூட்டத்தின்
எண்ணிக்கை.
எண்ணுப்
பெயர் அட்டவணை:
இதுவரை கண்ட தமிழ் எண்ணுப் பெயர்களின் சொல்லாக்க முறையினைக் கீழே அட்டவணை வடிவில் காணலாம்.
எண்ணுப் பெயர் |
எண் உரு |
தோன்றும் முறை |
ஒன்று |
1 |
ஒன் (=பொருந்து, தொடு) + உ = ஒன்னு >>> ஒன்று = தொடக்கம். |
இரண்டு |
2 |
ஈர் (=கீறு, பிள) + அண்டு (=அடை) = இரண்டு = பிளப்பதால் அடைவது |
மூன்று |
3 |
முறை (=இயற்கை நியதி, தடவை, எண்ணிக்கை) + உ = மூறு >>> மூன்று = இயற்கை நியதிகளின் எண்ணிக்கை. |
நான்கு |
4 |
(1) நன்மை + கூழ் (=பொருள், எண்ணு) = நான்கூழ் >>> நான்கு = நன்மைப் பொருட்களின் எண்ணிக்கை. (2) நல் (=நன்மை) + கூழ் (=பொருள், எண்ணு) = நால்கூழ் >>> நால்கு = நன்மைப் பொருட்களின் எண்ணிக்கை. |
ஐந்து |
5 |
அத்தம் (=கை) + ஊழ் (=எண்ணு) = அத்தூழ் >>> ஐந்து = கையில் எண்ணப்படுவது |
ஆறு |
6 |
அரி (=தேனீ, கால்) + ஊழ் (=எண்ணு) = ஆரூழ் >>> ஆறு = தேனீயின் கால்களின் எண்ணிக்கை. |
ஏழு |
7 |
ஏ (=மேல்நோக்குகை, அடுக்கு, வில்) + ஊழ் (=ஒளி, எண்ணு) + உ = எயூழு >>> ஏழு = மேல்நோக்கப்படும் ஒளிவில்லில் உள்ள அடுக்குகளின் எண்ணிக்கை |
எட்டு |
8 |
ஆறு (=பயன், பக்கம், திசை) + ஊழ் (=எண்ணு, முற்று) = அற்றூழ் >>> எட்டு = பயன் கொள்ளும் திசைகளின் முற்றிய எண்ணிக்கை |
ஒன்பது |
9 |
உண் (=குறை) + பத்து = உண்பத்து >>> ஒன்பது = பத்தின் குறை |
பத்து |
10 |
பற்று (=குலை, கூட்டம், எண்ணு) >>> பத்து = கூட்டத்தின் எண்ணிக்கை |
நூறு |
100 |
நிரை (=கூட்டம்) + ஊழ் (=எண்ணு) = நீரூழ் >>> நூறு = கூட்டத்தின் எண்ணிக்கை |
ஆயிரம் |
1000 |
ஆயம் (=கூட்டம், எண்ணம்) + இருமை (=பெருமை) + அம் = ஆயிரம் = பெரிய கூட்டத்தின் எண்ணிக்கை |
இலக்கம் |
100000 |
ஏல் (=மிகு, பெரு, எண்ணு) + ஆக்கம் (=கூட்டம்) = எலாக்கம் >>> இலக்கம் = மிகப் பெரிய கூட்டத்தின் எண்ணிக்கை |
கோடி |
10000000 |
கோடு (=எண்ணு, குலை, கூட்டம், வரம்பு) + ஈ (=அறு) = கோடீ >>> கோடி = வரம்பற்ற கூட்டத்தின் எண்ணிக்கை |
முடிவுரை:
இதுவரையிலும் தமிழர்கள் பயன்படுத்துகின்ற பல்வேறு எண்களுக்கான பெயர்கள் தோன்றிய விதங்களை விளக்கமாகக் கண்டோம். இவற்றை எல்லாம் தொகுத்துப் பார்க்குமிடத்து, பழந்தமிழர்கள் எண்களுக்குப் பெயர் அமைக்கும்போது இடுகுறியாக அதாவது எதேச்சையாகச் செய்யாமல் பொருள் / வினைகளின் அடிப்படையில் காரணப் பெயர்களாகவே அமைத்துள்ளனர் என்னும் செய்தியை அறியலாம். கோடிக்கும் மேற்பட்ட எண்ணிக்கையைக் குறிப்பதற்கு ஆம்பல், வெள்ளம், பதுமம், சங்கம் முதலான பல எண்ணுப் பெயர்களும் உண்டு.
அருமை....நற்பவி🙏
பதிலளிநீக்குமகிழ்ச்சி. நன்றி. :))
பதிலளிநீக்கு