சனி, 23 மே, 2009

பிச்சைக்காரனும் பல்லக்கும்


பழமொழி:

எடுக்கிறது பிச்சை; ஏறுகிறது பல்லக்கு.

தற்போதைய பொருள்:

'பிச்சை எடுத்து உண்டு வாழ்ந்தாலும் பல்லக்கில் தான் ஏறுவேன்' என்பதே இதன் பொருள் ஆகும்.

தவறு:

முதலில் நாம் அறிந்துகொள்ள வேண்டியது இந்த தொடர் ஒரு பழமொழியே அல்ல; ஒரு விடுமொழி என்னும் உண்மையை. விடுமொழி என்றால் என்ன என்று காணும் முன்னர் இத் தொடருக்குக் கூறப்படும் தற்போதைய பொருள் எவ்வாறு தவறாகும் என்று பார்ப்போம். பல்லக்கு என்பது நடமாடும் அரியாசனம் போன்றதாகும். வள்ளுவர் காலத்துக்கு முன்பிருந்தே பல்லக்கில் மனிதர்களை ஏற்றிச் சுமந்திருக்கின்றனர் என்பது குறள் எண்: 37 இல் இருந்து தெரியவருகிறது. பொதுவாக பல்லக்கில் ஏறுபவர்கள் அனைவரும் மேல்தட்டு மக்களாகவே இருப்பர். ஏனென்றால் பல்லக்கைச் சுமந்து செல்வதற்கென்று குறைந்தது இருவரையேனும் நியமித்து அவர்களுக்குச் சம்பளம் வழங்கவேண்டும். இது மேல்தட்டு மக்களால் மட்டுமே முடியும். இக்காலத்தில் நாலாழி (கார்) மாதிரி அக்காலத்தில் பல்லக்கில் ஏறி பவனி வருதல் என்பது ஒரு பெருமையாகவே கருதப்பட்டது. இப்படி மேல்தட்டு மக்கள் மட்டுமே ஏறி செல்லக் கூடிய ஒரு பல்லக்கில் பயணிப்பது குறித்து ஒரு பிச்சைக்காரன் நினைத்துக் கூட பார்க்க முடியுமா என்பது ஐயம் தான். நிலைமை இப்படி இருக்க பிச்சை எடுத்து உண்டு வாழும் ஒருவன் பல்லக்கில் தான் ஏறுவேன் என்று சொல்வானா?. அப்படிச் சொல்வதாகக் கருத்து கூறும் இந்த தொடர் உண்மையிலேயே ஒரு சரியான பழமொழி தானா?. இதுவே இங்கு கேள்வி.

பிச்சைக்காரர்கள் இக்காலத்தில் மட்டுமல்ல அக்காலத்திலும் இருந்திருக்கிறார்கள். சங்க காலத்தில் வாழ்ந்த பல தமிழ்ப் புலவர்களின் வாழ்க்கை கிட்டத்தட்ட பிச்சைக்காரர்களின் நிலையில் தான் இருந்தது. இதை நாம் பல புறநானூற்றுப் பாடல்களின் வாயிலாக அறிகிறோம். தற்போது 'நான் கடவுள்' என்ற தமிழ்த் திரைப்படத்தில் பிச்சைக்காரர்களின் வாழ்க்கை விரிவாகக் காட்டப்பட்டு உள்ளது. இதன்படி குழந்தைகளும் முதியவர்களும் உடல் ஊனமுற்றோரும் அடிமைகளாக பிச்சை எடுக்க வைக்கப்படுகின்றனர். இவர்களில் யாராவது பல்லக்கில் ஏற முடியுமா?. முடியாது!. அடிமையாக வாழ்கின்ற இந்த பிச்சைக்காரர்களைத் தவிர கட்டுப்பாடற்ற பிச்சைக்காரர்களும் தமிழ்நாட்டில் உண்டு. இவர்களில் சிலர் பிச்சைத்தொழிலினால் நல்ல வருமானம் பார்த்து நாலாழி வசதியுடன் வாழ்வதாகப் பல தமிழ்த் திரைப்படங்கள் காட்டுகின்றன. இதில் ஓரளவுக்கு உண்மையும் இருக்கக் கூடும். இதனால் இந்தத் தொடரின் தற்போதைய பொருள் இக்காலத்தில் வாழும் ஒருசில பிச்சைக்காரர்களுக்குப் பொருந்துவதாக இருக்கலாம். ஆனால் இந்த நிலைமை எப்போது தோன்றியது?. மிக அண்மையில் தானே. ஆனால் இத் தொடரோ பல்லக்குகள் பயன்பாட்டில் இருந்த பழங்காலத்திலேயே தோன்றிவிட்டது. பழங்காலத்தில் ஏன் இன்றைக்கு இருபது ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த எந்த ஒரு பிச்சைக்காரனும் அடிப்படை வசதி கூட இன்றியே வாழ்ந்து மடிந்தான். இந்த பிச்சைக்காரன் ஒருநாளாவது பல்லக்கில் அல்லது தற்கால நாலாழியில் ஏற விரும்பி இருப்பானா?. ஒருபோதும் விரும்பி இருக்க மாட்டான். நாள்தோறும் உணவைத் தேடிஅலைந்து கிடைத்ததை உண்டு வாழ்வதே பெரும்பாடாய் இருக்க பல்லக்கை நினைப்பதற்கு அவனுக்கு மனமும் இல்லை; கையில் பணமும் இல்லை. இந் நிலையில் மேற்காணும் தொடர் கூறும் கருத்து இவனுக்குப் பொருந்துமா என்றால் பொருந்தாது. இப்படி ஒரு காலத்தில் வாழும் மனிதனுக்குப் பொருந்தி இன்னொரு காலத்தில் வாழும் மனிதனுக்குப் பொருந்தாமல் இருந்தால் ஒரு தொடர் 'பழமொழி' என்ற தகுதியினையே இழந்துவிடும். எனவே மேற்காணும் தொடர் ஒரு பழமொழியே இல்லை என்பதை உணரலாம்.

அதுமட்டுமின்றி இங்கே இன்னொரு உண்மையையும் நாம் உணரவேண்டும். 'ஏறுகிறது பல்லக்கு' என்று தான் இத் தொடர் கூறுகிறதே ஒழிய 'செல்கிறது பல்லக்கு' என்று கூறவில்லை. இதில் இருந்து இத் தொடர் பல்லக்கில் ஏறுவதை மட்டுமே குறிப்பிடுகிறது என்பதையும் பல்லக்கில் ஏறி பயணம் செய்வதைக் குறிப்பிடவில்லை என்பதையும் அறியலாம். எனவே இத் தொடர் பிச்சைக்காரர்கள் பல்லக்கில் ஏறி பயணம் செய்வதைக் குறிப்பிடவில்லை என்பது தெளிவாகிறது.

திருத்தம்:

மேற்காணும் தொடர் உண்மையில் ஒரு விடுமொழி ஆகும். ஒரு காலத்தில் விடுகதையாய் இருந்து இன்னொரு காலத்தில் பழமொழியாய் மாறியவைகளே விடுமொழிகள் ஆகும். மேற்காணும் தொடர் ஒரு காலத்தில் 'எடுக்கிறது பிச்சை; ஏறுகிறது பல்லக்கு. அது என்ன?' என்று விடுகதையாகப் பயன்படுத்தப்பட்டது. இந்த விடுகதைக்குப் பதில் 'அணில்' ஆகும். காலப்போக்கில் இந்த விடுகதை பழமொழியாக மாறிவிட்டது. இது எவ்வாறு என்று கீழே காணலாம்.

நிறுவுதல்:

விடுகதைகளும் பழமொழிகளும் நாட்டுப்புற மக்களின் வாழ்வுடன் பின்னிப் பிணைந்தவை என்பதை நாம் நன்கு அறிவோம். விடுகதைகளுக்கு என்று ஒரு தனிவடிவமும் பழமொழிகளுக்கென்று ஒரு தனி வடிவமும் உண்டு. என்றாலும் சில தொடர்களில் இவை இரண்டும் ஒன்றே போலத் தோன்றுவதும் உண்டு. இதற்குக் காரணம் விடுகதைகளில் வருகின்ற கேள்விகளான 'அவன் யார்?, அது என்ன?, அவள் யார்?' போன்றவை அவற்றில் விடுபட்டிருப்பதே ஆகும். இத்தகைய தொடர்களே 'விடுமொழிகள்' என்று அழைக்கப்படும். இந்த விடுமொழிகளில் ஒன்று தான் மேற்கண்ட தொடர் ஆகும். இதுபோலப் பல விடுமொழிகள் வழக்கில் உள்ளன. அவற்றில் சில மட்டும் கீழே காட்டப்பட்டு உள்ளன.

'எடுக்கிறது பிச்சை; ஏறுகிறது பல்லக்கு.'
'இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான்.'
'அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியிலும் குடை பிடிப்பான்.'

இனி நாம் மேற்கொண்டிருக்கும் விடுமொழி எவ்வாறு 'அணிலை'க் குறிக்கும் என்று பார்ப்போம். பல்லினால் உணவைக் கடித்து உண்ணும் விலங்குகளில் அணிலும் ஒன்று என்று நாம் அறிவோம். உணவை உள்ளங்கைகளில் தாங்கிக் கொண்டு பற்களால் கடித்து அணில் உணவு உண்ணும் அழகே தனிதான். அருகிலுள்ள படத்தைப் பாருங்கள்.

ஒரு பிச்சைக்காரன் தன் உணவை இரு கைகளிலும் ஏந்தி இருப்பதைப் போலத் தானே தோன்றுகிறது. அதனால் தான் 'எடுக்கிறது பிச்சை' என்ற தொடர் அணிலைக் குறிக்க வந்தது. அது மட்டுமின்றி அணில் உணவுக்காக மட்டும் தான் மரத்தில் இருந்து கீழே வரும். அது கிடைத்துவிட்டால் போதும் விடுவிடு என்று தான் வாழும் மரத்தின் உச்சாணிக் கொம்புக்கே சென்று அமர்ந்துகொள்ளும். ஏனென்றால் மரத்தின் உயரமான கிளைகளில் இருந்துகொண்டே வாழ்கின்ற இயல்பு கொண்டவை இந்த அணில்கள். இந்த உயரமான இருப்பிடத்தைத் தான் 'பல்லக்கு' என்று உருவகமாக இந்தத் தொடர் கூறுகிறது.

ஏனென்றால் பல்லக்கும் ஒரு உயர்வான இருப்பிடம் என்பதுடன் விடுகதைகள் ஒரு பொருளை நேரடியாகக் கூறாமல் இன்னொரு பொருளுடன் உருவகப்படுத்தியே கூறும். எனவே 'எடுக்கிறது பிச்சை ஏறுகிறது பல்லக்கு' என்பது அணிலைக் குறித்து எழுந்த ஒரு விடுகதையே என்று தெளியலாம். இந்த விடுகதையே நாளடைவில் தனது 'அது என்ன?' என்ற கேள்வித்தொடரினை இழந்து பழமொழியாகி விட்டது. இறுதியாக ஒரு உண்மையினையும் நாம் இங்கே அறிந்து கொள்ளவேண்டும். விடுமொழிகளை விடுகதைகளாக மறுபடியும் மாற்றமுடியும் என்பதே அந்த உண்மை ஆகும்.
....................................வாழ்க தமிழ்!................................

2 கருத்துகள்:

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.