புதன், 18 அக்டோபர், 2017

கிழமைகளின் வரிசைமுறை சரியா?. ( 2017 தீபாவளி சரவெடிக் கட்டுரை )

முன்னுரை:

எண்ணும் எழுத்தும் என்ற தொடர் ஆய்வுக் கட்டுரையின் முதல் பகுதியில் தமிழ் எழுத்துக்களின் பிறப்பியல் பற்றி விரிவாகக் கண்டோம். இரண்டாம் பகுதியில் மெய்யெழுத்துக்களுக்கும் வினைச்சொற்களுக்கும் இடையிலான தொடர்புகளைப் பற்றி விரிவாகக் கண்டோம். மூன்றாம் பகுதியில் எண்களுக்கும் பொருளுண்டு என்பது தொடர்பான செய்திகளைக் கண்டோம். நான்காம் பகுதியில் உயிர் எழுத்துக்களுக்குள் ஒளிந்திருக்கும் பல உண்மைகளைப் பற்றி விளக்கமாகக் கண்டோம். ஐந்தாம் பகுதியில் ஒவ்வொரு தமிழ் எழுத்துக்குமான எண்மதிப்பினைப் பற்றி விரிவாகக் கண்டோம். ஆறாம் பகுதியில் கோள் / கிழமைப் பெயர்களுக்கு மதிப்பெண்களை அளிக்கும் முறை பற்றி விரிவாகக் கண்டோம். இனி, வாரம் என்று தமிழில் அழைக்கப்படுவதான ஏழு கிழமைப்பெயர்களின் வரிசைமுறை சரியா என்பதை இறுதிப் பகுதியான இதில் விளக்கமாகக் காணலாம்.

தமிழர்களின் காலக்கணக்கு:

தமிழன் என்றொரு இனமுண்டு; தனியே அவர்க்கொரு குணமுண்டு என்று பாடினார் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம். அவர் வாக்கு பொய்யில்லை என்றே கூறலாம். காரணம், எப்போதுமே தனக்கென்று ஒரு தனித்த அடையாளமும் பாதையும் வகுத்து வாழ்ந்தவன் / வாழ்பவன் தமிழன். இதோ காலக்கணக்கில் கூட தனக்கென்று ஒரு முத்திரையாக ஒரு புதிய காலப்பகுப்பினை நிலைநாட்டிச் சென்றிருக்கின்றார் பழந்தமிழர். மேலைநாட்டாரின் காலக்கணக்கும் நமது காலக்கணக்கும் ஒரு ஒப்பீடாகக் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நாள் கணக்கு: ஒருநாள் = 60 நாழிகை (தமிழ்) , 24 மணி (ஆங்கிலம்)
வாரக்கணக்கு: ஒருவாரம் = 7 நாட்கள் (தமிழ் & ஆங்கிலம்)
திங்கள் கணக்கு: ஒரு திங்கள் = 29 - 32 நாட்கள் (தமிழ்), 28 - 31 நாட்கள் (ஆங்கிலம்)

கிழமைப்பெயர் வரிசைமுறை:

மேலே கண்டபடி, தமிழர்களும் மேலைநாட்டாரைப்போல, ஏழு நாட்கள் கொண்டதையே ஒரு வாரமாகக் கருதி தற்போது வரையிலும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த வாரக் கணக்கில் இடம்பெறுகின்ற கிழமைகளின் வரிசைமுறையானது கீழே காட்டப்பட்டுள்ளது.

ஞாயிறு
திங்கள்
செவ்வாய்
புதன்
வியாழன்
வெள்ளி
சனி

அதாவது, ஞாயிற்றுக்கிழமையை அடுத்து திங்கட்கிழமையும் இதனையடுத்துச் செவ்வாய்க்கிழமையும் இதனையடுத்து புதன்கிழமையும் இதனையடுத்து வியாழக்கிழமையும் இதனையடுத்து வெள்ளிக்கிழமையும் இதனையடுத்து சனிக்கிழமையும் வரிசைமுறையில் வரும்.

வரிசைமுறையின் அடிப்படை என்ன?

ஒரு வாரத்துக்குரிய ஏழு கிழமைகளையும் மேற்காணும் வரிசைமுறைப்படி நாம் பின்பற்றி வருகிறோம். ஆனால் இந்த வரிசைமுறையின் அடிப்படை என்ன?. என்பது நம்மில் பலருக்குத் தெரியாது. புதன்கிழமையினை அடுத்து வியாழக்கிழமைதான் வரவேண்டுமா?. ஏன் சனிக்கிழமை வரக்கூடாது?. என்று நாம் எப்போதாவது சிந்தித்துப் பார்த்திருக்கிறோமா?. கேள்வி கேட்டிருக்கிறோமா?. இல்லை.

உண்மையில் தற்போது நாம் பின்பற்றி வருகின்ற மேற்காணும் கிழமைப்பெயர் வரிசைமுறையானது ஆங்கில முறைப்படி அமைக்கப்பட்டுள்ளது. அதாவது ஒருநாளுக்கு 24 மணி நேரம் என்ற ஆங்கில காலக்கணக்கின்படி இந்தப் பெயர்வரிசை முறை அமைக்கப்பட்டுள்ளது. இதைப்பற்றி விரிவாகக் கீழே காணலாம்.

ஆங்கிலக் காலக்கணக்கும் கிழமைகளின் வரிசைமுறையும்:

ஆங்கில முறைப்படி, நமது விண்வெளியின் பால்வீதி மண்டலத்தில் உள்ள முதல் ஏழு கோள்களும் ஒருநாளின் ஒவ்வொரு மணி நேரத்தினையும் மாறிமாறி ஆளுமை கொள்ளும். அதாவது, யுரேனஸ், புளூட்டோ, நெப்டியூன் நீங்கலாக உள்ள சூரியன், புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி முதலான ஏழு கோள்களும் மாறிமாறி ஒவ்வொரு மணி நேரம் வரையிலும் ஆட்சிசெய்யும். ஒருநாளின் முதல் மணியினை எந்தக் கோள் ஆட்சி செய்கிறதோ அந்தக் கோளின் பெயராலேயே அந்த நாள் அழைக்கப்படும். அதாவது,

ஞாயிற்றுக் கிழமையின் முதல் ஒருமணி நேரத்தினை ஞாயிற்றுக்கோள் ஆட்சி செய்யும்.
திங்கட் கிழமையின் முதல் ஒருமணி நேரத்தினை பூமி ( திங்கள் பூமியின் துணைக்கோள் என்பதால் ) ஆட்சி செய்யும்.
செவ்வாய்க் கிழமையின் முதல் ஒருமணி நேரத்தினை செவ்வாய்க்கோள் ஆட்சி செய்யும்.
புதன் கிழமையின் முதல் ஒருமணி நேரத்தினை புதன்கோள் ஆட்சி செய்யும்.
வியாழக் கிழமையின் முதல் ஒருமணி நேரத்தினை வியாழன் கோள் ஆட்சி செய்யும்.
வெள்ளிக் கிழமையின் முதல் ஒருமணி நேரத்தினை வெள்ளிக்கோள் ஆட்சி செய்யும்.
சனிக் கிழமையின் முதல் ஒருமணி நேரத்தினை சனிக்கோள் ஆட்சி செய்யும்.

இந்த ஏழு கோள்களும் ஒருநாளுக்குரிய 24 மணிநேரங்களை ஆட்சிசெய்யும் வரிசைமுறையானது பால்வீதி மண்டலத்தில் இக்கோள்கள் அமைந்துள்ள வரிசை முறையினை ஒத்து அமைந்திருக்கும். அதாவது,

சூரியன் >> புதன் >> வெள்ளி >> பூமி (சந்திரன்) >> செவ்வாய் >> வியாழன் >> சனி

என்ற பால்வீதி அமைப்புமுறைப்படி (படத்தில் உள்ளபடி ) ஆட்சிசெய்யும். இதனை ஒரு எடுத்துக்காட்டுடன் விளக்கமாகக் காணலாம். சான்றாக, ஞாயிற்றுக்கிழமையின்

முதல் ஒருமணி நேரத்தினைச் சூரியனும்
இரண்டாவது ஒருமணி நேரத்தினைப் புதனும்
மூன்றாவது ஒருமணி நேரத்தினை வெள்ளியும்
நான்காவது ஒருமணி நேரத்தினைப் பூமியும் (திங்கள்)
ஐந்தாவது ஒருமணி நேரத்தினைச் செவ்வாயும்
ஆறாவது ஒருமணி நேரத்தினை வியாழனும்
ஏழாவது ஒருமணி நேரத்தினைச் சனியும்  ஆட்சி செய்யும்.

மறுபடி அந்த நாளின் எட்டாவது ஒருமணி நேரத்தினைச் சூரியன் ஆட்சி புரியும். அதற்கடுத்து புதன் என்று இச் சுழற்சி முறையானது ஒருநாளுக்கு 24 மணி நேரம் என்பதால் மூன்றுமுறை முழுமையாக (3x7 = 21 மணி நேரம்) முடிந்தபின்னர்,

22 ஆவது மணிநேரத்தினைச் சூரியனும்
23 ஆவது மணிநேரத்தினைப் புதனும்
24 ஆவது மணிநேரத்தினை வெள்ளியும் ஆளும்.

இப்படி ஞாயிற்றுக் கிழமைக்குரிய 24 மணிநேரம் முடிந்தபின்னர், மறுநாளுக்குரிய முதல் 1 மணி நேரத்தினை வெள்ளிக்கோளினை அடுத்துப் பால்வீதி மண்டலத்தில் அமைந்திருக்கின்ற பூமிக்கோள் ஆட்சி செய்யும். நாம் பூமியில் வசிப்பதாலும் பூமியின் மீது அதன் துணைக்கோளாகிய திங்கள் ஆளுமை உடையது என்பதாலும் ஞாயிற்றுக்கிழமையினை அடுத்து வரும் நாளினைத் திங்கள்கோளின் பெயரால் திங்கட்கிழமை என்று அழைத்தனர். இந்த அடிப்படையில் தொடர்ந்து கணக்கிட்டுப் பார்த்தால், கிழமைகளின் வரிசைமுறையானது கீழ்க்காண்டவாறு அமையும்.

ஞாயிறு >> திங்கள் >> செவ்வாய் >> புதன் >> வியாழன் >> வெள்ளி >> சனி .... (1)

மேற்காணும் கிழமைகளின் வரிசைமுறையினை 'ஆங்கில வாரமுறை' என்று அழைக்கலாம்.

தமிழரின் காலக்கணக்கும் கிழமைகளின் வரிசைமுறையும் :

இதுவரை நாம் மேலே கண்ட கிழமைகளின் வரிசைமுறையானது ஆங்கிலேயரின் காலக்கணக்கான 24 மணி நேர அடிப்படையிலானது. ஆனால், தமிழர்களின் காலக்கணக்கு முறையோ 60 நாழிகை அடிப்படையிலானது என்று மேலே கண்டோம். இனி, தமிழர்களின் காலக்கணக்கின் அடிப்படையில் கிழமைகளின் வரிசைமுறை எவ்வாறு வரும் என்பதனை ஒரு சான்றுடன் பார்க்கலாம். சான்றாக, ஞாயிற்றுக்கிழமையின்

முதல் நாழிகையினைச் சூரியனும்
இரண்டாவது நாழிகையினைப் புதனும்
மூன்றாவது நாழிகையினை வெள்ளியும்
நான்காவது நாழியினைப் பூமியும் (திங்கள்)
ஐந்தாவது நாழிகையினைச் செவ்வாயும்
ஆறாவது நாழிகையினை வியாழனும்
ஏழாவது நாழிகையினைச் சனியும்  ஆட்சி செய்யும்.

மறுபடி அந்த நாளின் எட்டாவது நாழிகை நேரத்தினைச் சூரியன் ஆட்சி புரியும். அதற்கடுத்து புதன் என்று இச் சுழற்சி முறையானது ஒருநாளுக்கு 60 நாழிகை நேரம் என்பதால் எட்டுமுறை முழுமையாக (8x7 = 56 நாழிகை) முடிந்தபின்னர்,

57 ஆவது நாழிகையினைச் சூரியனும்
58 ஆவது நாழிகையினைப் புதனும்
59 ஆவது நாழிகையினை வெள்ளியும்
60 ஆவது நாழிகையினைப் பூமியும் ஆளும்.

இப்படி ஞாயிற்றுக் கிழமைக்குரிய 60 நாழிகை நேரம் முடிந்தபின்னர், மறுநாளுக்குரிய முதல் நாழிகையினைப் பூமிக்கோளினை அடுத்துப் பால்வீதி மண்டலத்தில் அமைந்திருக்கின்ற செவ்வாய்க்கோள் ஆட்சி செய்யும். இந்தப் புதிய அடிப்படையில் தொடர்ந்து கணக்கிட்டுப் பார்த்தால், கிழமைகளின் வரிசைமுறையானது கீழ்க்காண்டவாறு அமையும்.

ஞாயிறு >> செவ்வாய் >> புதன் >> வியாழன் >> வெள்ளி >> சனி >> திங்கள். .... (2)

மேற்காணும் புதிய வரிசைமுறையானது நாழிகை அடிப்படையில் அமைவதால் இதற்கு 'நாழிகை வாரமுறை' என்று பெயர் வைக்கலாம்.

எது சரியான கிழமை வரிசைமுறை?

தமிழர்களின் காலக்கணக்கின்படி அமைகின்ற நாழிகை வாரமுறையும் ஆங்கிலேயரின் காலக்கணக்கின்படி அமைகின்ற ஆங்கில வாரமுறையும் சற்றே வேறுபட்டிருப்பதை மேலே காணலாம். குறிப்பாக, திங்கட்கிழமையின் வரிசை மட்டும் மாறியிருப்பதை அறியலாம். அதாவது,

நாழிகை வாரமுறைப்படி, சனிக்கிழமையினை அடுத்துத் திங்கட்கிழமை வருவதால்,

சனி >> திங்கள் >> ஞாயிறு >> செவ்வாய் >> புதன் >> வியாழன் >> வெள்ளி என்றும்

ஆங்கில வாரமுறைப்படி, ஞாயிற்றுக்கிழமையினை அடுத்துத் திங்கட்கிழமை வருவதால்,

சனி >> ஞாயிறு >> திங்கள் >> செவ்வாய் >> புதன் >> வியாழன் >> வெள்ளி என்றும் வரும்.

ஞாயிறும் திங்களும் மட்டுமே தங்களது வரிசைமுறையில் இடம் மாறியிருப்பதான இந்த இரண்டு வகையான வரிசைமுறைகளில் எது சரியானது? எதனை நாம் பின்பற்றுவது? என்னும் கேள்விகள் எழுகின்றன. நாம் தமிழர்கள் என்பதால் நாழிகை வாரமுறையினைப் பின்பற்றுவதே சரியானது என்ற போதிலும் ஆங்கில வாரமுறையினைக் காட்டிலும் நாழிகை வாரமுறைதான் சரியானது என்பதனை வேறொரு கோணத்தில் இருந்தும் நிறுவலாம்.

தமிழரின் நாழிகை வாரமுறையே சரியானது:


தமிழ்முறைப்படி கொடுக்கப்பட்ட ஒவ்வொரு கோளுக்குமான மதிப்பெண்ணைப் பற்றி இக் கட்டுரையின் ஆறாம் பகுதியில் விரிவாகக் கண்டோம். ஆறாம்பகுதியின் சுருக்கமாகக் கோளின் மதிப்பெண்ணும் அதன் கீழ் கோளின் பெயரும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

  1                 2                    3                     4                    5

புதன்  சந்திரன்    இல்லை    வியாழன்    இல்லை

  6                       7                8                9

வெள்ளி   ஞாயிறு    சனி     செவ்வாய்

இப்போது நாம் இதுவரை மேலே கண்ட இரண்டுவகையான வாரமுறைகளிலும் ( 1 & 2 ) மாறுபாடு இல்லாத பகுதியினை மட்டும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்வோம். அதாவது,

செவ்வாய் >> புதன் >> வியாழன் >> வெள்ளி >> சனி

என்ற இந்த வரிசையானது இரண்டு வாரமுறைகளிலும் ஒரேமாதிரியாகவே அமைந்துள்ளது என்று மேலே கண்டோம். இதில், கோள்களின் பெயர்களுக்குப் பதிலாக அவற்றின் மதிப்பெண்ணை இட்டுப் பார்த்தால்,

9 >> 1 >> 4 >> 6 >> 8  என்று கிடைக்கும்.

இந்த எண்களின் வரிசைமுறையில் என்ன தொடர்பு இருக்கிறது?. என்று இவற்றை நன்கு ஆராய்ந்து பார்த்ததில் இவற்றில் கணிதவியலில் மிகவும் பயன்பாடுடைய பத்துக்குறைநிரப்பியும் ( 10's compliment ) ஐந்துக்குறைநிரப்பியும் ( 5's compliment ) மாறிமாறி வருவது கண்டறியப்பட்டது. அதாவது,

9 முதலிலும் அதனை அடுத்து
9 ன் பத்துக்குறைநிரப்பியாகிய 1 ம் ( 9+1 = 10 )
1 ன் ஐந்துக்குறைநிரப்பியாகிய 4 ம் ( 1+4 = 5 )
4 ன் பத்துக்குறைநிரப்பியாகிய 6 ம் ( 4+6 = 10 )
6 ன் ஐந்துக்குறைநிரப்பியாகிய 8 ம் ( 6+8 = 14 = 5 )

வருவதனை அறிந்துகொள்ளலாம். இதே முறையினைத் தொடர்ந்து பின்பற்றினால் என்ன கிடைக்கும் என்பது கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது 8 ம் எண்ணினை அடுத்து,

8 ன் பத்துக்குறைநிரப்பியாகிய 2 ம் ( 8+2 = 10 )
2 ன் ஐந்துக்குறைநிரப்பியாகிய 3 ம் ( 2+3 = 5 )
3 ன் பத்துக்குறைநிரப்பியாகிய 7 ம் ( 3+7 = 10 )

வரவேண்டும். இதன்படி பெறப்படுவதான கோள்களுக்குரிய எண்மதிப்பு வரிசைமுறையானது,

9 >> 1 >> 4 >> 6 >> 8 >> 2 >> 3 >> 7 என்று கிடைக்கும்.

இதில் 3 ஆம் எண்மதிப்புக்குரிய கோள் இல்லை என்பதால் அதனை நீக்கிவிட்டு ஏனைய எண்மதிப்புக்களுக்குப் பதிலாக அவற்றுக்குரிய கோள்களின் பெயர்களை இட்டுப் பார்த்தோமானால்,

செவ்வாய் >> புதன் >> வியாழன் >> வெள்ளி >> சனி >> திங்கள் >> ஞாயிறு ..... (3) என்று வரும்.

மேற்காணும் வரிசைமுறை (3) ஆனது தமிழ்முறைப்படிப் பெறப்பட்ட நாழிகை வாரமுறை (2) யுடன் மிகச்சரியாகப் பொருந்தி வருவதை அறியலாம். எனவே தமிழரின் நாழிகை முறைப்படி பெறப்பட்ட நாழிகை வாரமுறையே மிகச் சரியானது என்பது இதன்மூலம் உறுதிசெய்யப்படுகிறது.

இப்பொருத்தம் எப்படிச் சாத்தியமானது?:

மேலே நாம் கண்ட பொருத்தம் ( 2 & 3 ) எதேச்சையாக நிகழ்ந்ததா?. இல்லை. திட்டமிடப்பட்டதா?. அதுவும் இல்லை. அப்படி என்றால்......? சற்றே பின்னோக்கிப் பார்ப்போம்.

இக் கட்டுரையின் முதல் பகுதியில் தமிழ் எழுத்துக்களின் பிறப்பியல் பற்றிக் கண்டோம். தொல்காப்பியர் கூற்றின்படி எழுத்துக்கள் பிறக்கும்போதுள்ள நாக்கின் நிலைகளுக்கும் வினைச்சொற்களுக்கும் இடையிலான தொடர்புகள் ஆராயப்பட்டுத் தமிழ் மெய்எழுத்துக்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. உயிர் எழுத்துக்களுக்கு மதிப்பெண்களை வழங்கியபோதும் சில விதிகள் பின்பற்றப்பட்டன. இதுதான் அடிப்படைநிலை அல்லது முதல்கட்டம்.

பின்னர் இந்த மதிப்பெண்களின் அடிப்படையில் ஒவ்வொரு கோளின் பெயருக்கும் உரிய மதிப்பெண் காணப்பட்டது. அப்போது சில கோள்களின் வடமொழிப் பெயர்களைத் தமிழாக்கம் செய்து தமிழ்ப் பெயருக்கேற்ப மதிப்பெண் கொடுக்கப்பட்டது. இது இரண்டாம் கட்டம்.

இந்த இரண்டு கட்டங்களில் ஏதேனும் ஒன்றில் சிறுதவறு நேர்ந்திருந்தாலும் இத்தகைய பொருத்தம் கிடைத்திருக்காது அல்லவா?. ஆனால் யாரும் எதிர்பாராதவிதமாக, இவ்வளவு அருமையான பொருத்தம் கிடைக்கப்பெற்றுள்ளது என்றால், இதற்கு முந்தைய பகுதிகளில் நாம் கண்ட தமிழ் எழுத்துக்களின் மதிப்பெண்களும் சரி கோள்களின் மதிப்பெண்களும் சரி அனைத்தும் சரியான முறையில் பெறப்பட்டவையே என்பது உறுதியாகிறது.

முடிவுரை:

செவ்வாய் >> புதன் >> வியாழன் >> வெள்ளி >> சனி >> திங்கள் >> ஞாயிறு என்ற தமிழரின் நாழிகை வாரமுறையே ஆங்கில வாரமுறையைக் காட்டிலும் சரியானது என்றும் ஆய்வுநெறியின் அடிப்படையில் பொருத்தமானது என்றும் மேலே கண்டோம்.  எங்கோ வான்வெளியில் இருக்கும் கோள்கள் மாறிமாறி நம்மீது தாக்கம் செய்யும் என்னும் கருத்து அறிவியல் முறைப்படி நிரூபிக்கப்படவில்லை என்பதால் எந்தக் கிழமை முறையினையும் நம்பமாட்டோம் என்று கூறுவார் உளர். கடவுளையே அறிவியல் முறைப்படி ஆய்வுசெய்துகொண்டு இருக்கிறாரா இல்லையா என்று பன்னெடுங்காலமாக பலவிதமாகக் கலந்துரையாடிக்கொண்டு எந்தவொரு முடிவுக்கும் இன்னும் வரமுடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் இக் கூட்டத்திடம் 'நம்புங்கள்' என்று கேட்டுக்கொள்வது வீண்தான்.

ஆனால், இன்று நம்மில் பலர், அதிலும் குறிப்பாகப் பெண்கள் நாள் கிழமை பார்த்துப் பலவகையான நோன்பு மற்றும் சடங்குகளில் ஈடுபடுவதும் பொதுமக்கள் கிழமைகளின் அடிப்படையில் விடுமுறைகள் மற்றும் விழாக்களைக் கொண்டாடுவதும் ஆண்டாண்டுதோறும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டு தான் வருகிறது. இந்த ஆய்வு இவர்களுக்காகத் தான். இவர்கள் பின்பற்றிவரும் கிழமைகளின் வரிசைமுறை சரிதானா? இந்த வாரமுறைக்கு அடிப்படை ஏதுமுண்டா? என்னும் கேள்வியே இந்த ஆய்வினை மேற்கொள்ளத் தூண்டியது.  உண்மையிலேயே விண்வெளியில் உள்ள கோள்கள் நம்மீது மாறிமாறி ஆளுமை செலுத்துகின்றனவா? என்ற அறிவியல் ஆய்வில் நாம் ஈடுபடப் போவதில்லை; அது நம்மால் ஆவதுமில்லை. மாறாக, தற்போது பெரும்பான்மையான மக்களால் பின்பற்றப்பட்டு வருகின்ற ஒரு நடைமுறையில் ஏரணம் உள்ளதா (  QUESTIONING THE LOGIC OF THE SYSTEM. ) என்று இலக்கணம், வானியல், கணிதம் என்ற மூன்று துறைகளின் துணையுடன் ஆய்வுசெய்து தரவுகளின் அடிப்படையில் ஒரு பொருத்தமான முடிவினை இக் கட்டுரை முன்மொழிகிறது. நன்றி. முற்றும்.

சனி, 14 அக்டோபர், 2017

எண்ணும் எழுத்தும் - 6 ( கிழமைப் பெயர்களும் மதிப்பெண்களும் )


முன்னுரை:

எண்ணும் எழுத்தும் என்ற தொடர் ஆய்வுக் கட்டுரையின் முதல் பகுதியில் தமிழ் எழுத்துக்களின் பிறப்பியல் பற்றி விரிவாகக் கண்டோம். இரண்டாம் பகுதியில் மெய்யெழுத்துக்களுக்கும் வினைச்சொற்களுக்கும் இடையிலான தொடர்புகளைப் பற்றி விரிவாகக் கண்டோம். மூன்றாம் பகுதியில் எண்களுக்கும் பொருளுண்டு என்பது தொடர்பான செய்திகளைக் கண்டோம். நான்காம் பகுதியில் உயிர் எழுத்துக்களுக்குள் ஒளிந்திருக்கும் பல உண்மைகளைப் பற்றி விளக்கமாகக் கண்டோம். ஐந்தாம் பகுதியில் ஒவ்வொரு தமிழ் எழுத்துக்குமான எண்மதிப்பினைப் பற்றி விரிவாகக் கண்டோம். ஆறாம் பகுதியான இதில் தமிழ் எழுத்துக்களுக்கு மதிப்பெண்களை அளிப்பதால் என்னென்ன நன்மைகள் / பயன்பாடுகள் கிடைக்கும் என்பதைப் பற்றியும் கோள் / கிழமைப் பெயர்களுக்கு மதிப்பெண்களை அளிக்கும் முறை பற்றியும் விரிவாகக் காணலாம்.

எழுத்துக்களுக்கு மதிப்பெண்கள் தேவையா?

எழுத்துக்களுக்கு மதிப்பெண்கள் அளிப்பது தேவையான செயல்தானா? அவற்றால் பயன் ஏதும் உண்டா?. என்று பலர் நினைக்கின்றனர். இக்கேள்விகளுக்கான விடை 'ஆம்' என்பதே ஆகும். தமிழ் எழுத்துக்களுக்கு மதிப்பெண்களை அளிப்பதால் உண்டாகும் சில பயன்கள் / பயன்பாடுகள் கீழே தொகுத்துத் தரப்பட்டுள்ளன.

> சொற்களைக் குறியீட்டு முறையில் ( கோடிங் ) மாற்றுவதற்கு மதிப்பெண்களைப் பயன்படுத்தலாம்.

> சொல்லுக்கும் பொருளுக்கும் இடையிலான தொடர்புகளை ஆராய மதிப்பெண்களைப் பயன்படுத்தலாம்.

> கோள் / கிழமைப் பெயர்களது வரிசை முறையினை ஆராய மதிப்பெண்களைப் பயன்படுத்தலாம். 

இவற்றுள் முதல் இரண்டு பயன்பாடுகள் குறித்துத் தனிக்கட்டுரையில் விரிவாகக் காணலாம். இக் கட்டுரையில், கோள் / கிழமைப் பெயர்களுக்கு எவ்வாறு மதிப்பெண்களை அளிப்பது என்பதைப் பற்றி விரிவாகக் காணலாம்.

ஞாயிறு:

இது ஒரு தமிழ்ச்சொல்லே ஆகும். ஏராளமான இலக்கியங்களிலும் இச்சொல் இவ்வாறே பயின்று வந்துள்ளது. எனவே இச்சொல்லை அப்படியே எடுத்துக்கொண்டு இதன் மதிப்பெண்ணைக் காணலாம்.

ஞாயிறு = ஞ் + ஆ + ய் + இ + ற் + உ
        =  7 + 3 + 7 + 3 + 2 + 3
        =  25 = 7

ஆக, ஞாயிற்றின் மதிப்பெண் ஏழு (7) ஆகும்.

திங்கள்:

இதுவும் ஒரு தமிழ்ச்சொல்லே ஆகும். ஏராளமான இலக்கியங்களிலும் இச்சொல் இவ்வாறே பயின்று வந்துள்ளது. எனவே இச்சொல்லை அப்படியே எடுத்துக்கொண்டு இதன் மதிப்பெண்ணைக் காணலாம்.

திங்கள் = த் + இ + ங் + க் + அ + ள்
        = 8 + 3 + 1 + 1 + 3 + 4
        = 20 = 2

ஆக, திங்களின் மதிப்பெண் இரண்டு (2) ஆகும்.

செவ்வாய்:

இதுவும் ஒரு தமிழ்ச்சொல்லே ஆகும். ஏராளமான இலக்கியங்களிலும் இச்சொல் இவ்வாறே பயின்று வந்துள்ளது. எனவே இச்சொல்லை அப்படியே எடுத்துக்கொண்டு இதன் மதிப்பெண்ணைக் காணலாம்.

செவ்வாய் = ச் + எ + வ் + வ் + ஆ + ய்
          = 7 + 7 + 6 + 6 + 3 + 7
          = 36 = 9

ஆக, செவ்வாயின் மதிப்பெண் ஒன்பது (9) ஆகும்.

புதன்:

இது தமிழ்ச்சொல் இல்லை. அறிவினைக் குறிக்கும் 'புத்' என்ற வடமொழி வேருடன் 'அன்' எனும் தமிழ் விகுதியைச் சேர்த்து பயன்படுத்தி வருகிறோம். எனவே இதற்கான தூய தமிழ்ச்சொல்லினை முதலில் காணவேண்டும். அறிவுடன் தொடர்புடையதால் இதனை ' அறிவன் ' என்றே தமிழ்ப்படுத்தலாம். இனி அறிவன் என்னும் தமிழ்ச்சொல்லுக்கான மதிப்பெண்ணைக் கீழே காணலாம்.

அறிவன் = அ + ற் + இ + வ் + அ + ன்
         = 3 + 2 + 3 + 6 + 3 + 2
         = 19 = 1

ஆக, அறிவன் என்னும் புதனுக்கான மதிப்பெண் ஒன்று (1) ஆகும்.

வியாழன்:

இதுவும் தமிழ்ச்சொல் இல்லை. மந்திரி, குரு போன்றோரைக் குறிக்கின்ற வடசொல்லான இதற்குச் சரியான தமிழ்ச்சொல் அந்தணன் என்பதாகும். பல்வேறு தமிழ் நிகண்டுகளும் அந்தணன் என்ற பொருளைக் கூறுவதால் வியாழன் என்பதனை அந்தணன் என்றே தமிழ்ப்படுத்தலாம். இனி அந்தணன் என்ற தமிழ்ச்சொல்லுக்கான மதிப்பெண்ணைக் கீழே காணலாம்.

அந்தணன்  = அ + ந் + த் + அ + ண் + அ + ன்
           = 3 + 8 + 8 + 3 + 4 + 3 + 2
           = 31 = 4

ஆக, அந்தணன் ஆகிய வியாழனின் மதிப்பெண் நான்கு (4) ஆகும்.

வெள்ளி:

இது ஒரு தமிழ்ச்சொல் ஆகும். ஏராளமான தமிழ் இலக்கியங்களிலும் இச்சொல் இவ்வாறே பயின்று வந்துள்ளது. எனவே இச்சொல்லை அப்படியே எடுத்துக்கொண்டு இதன் மதிப்பெண்ணைக் காணலாம்.

வெள்ளி = வ் + எ + ள் + ள் + இ
        = 6 + 7 + 4 + 4 + 3
        = 24 = 6

ஆக, வெள்ளியின் மதிப்பெண் ஆறு (6) ஆகும்.

சனி:

இதுவும் தமிழ்ச்சொல் இல்லை. சனி என்றாலே கருமை நிறமே நினைவுக்கு வரும். வடமொழிச் சொல்லான இதற்குக் காரி என்றே நிகண்டுகள் பொருள் உரைப்பதால் அவ்வாறே தமிழ்ப்படுத்தலாம். இனி காரி என்ற தமிழ்ச்சொல்லுக்கான மதிப்பெண்ணைக் கீழே காணலாம்.

காரி = க் + ஆ + ர் + இ
     = 1 + 3 + 1 + 3
     = 8

ஆக, காரி என்ற சனியின் மதிப்பெண் எட்டு (8) ஆகும்.

கிழமை / கோள்களும் மதிப்பெண்களும்:

இதுவரை மேலே கண்ட கிழமை / கோள்களின் மதிப்பெண்கள் கீழே அட்டவணை எண்: 1 ல் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

கிழமை / கோள் பெயர்            மதிப்பெண்

ஞாயிறு                                                 7

திங்கள்                                                  2

செவ்வாய்                                            9

அறிவன் (புதன்)                                 1

அந்தணன் (வியாழன்)                   4

வெள்ளி                                                6

காரி (சனி)                                            8

மேற்காணும் அட்டவணையில், திங்கள், செவ்வாய், வெள்ளி, சனி ஆகிய நான்கு கோள்களுக்குத் தமிழ் முறைப்படி மேலே கொடுக்கப்பட்டிருக்கும் மதிப்பெண்களும் மேலைநாட்டாரின் இன்றைய எண்கணிதத்தில் கொடுக்கப்பட்டுள்ள மதிப்பெண்களும் ஒத்திருப்பது ஈண்டு குறிப்பிடத்தக்கது.

... தொடரும் ......

செவ்வாய், 10 அக்டோபர், 2017

கழுதையும் கட்டெறும்பும் குட்டிச்சுவரும்

முன்னுரை:

தமிழ்நாட்டில் புழக்கத்தில் இருந்துவரும் பல்வேறு பழமொழிகளில் கழுதை சார்ந்த பழமொழிகள் பல உண்டு. சிவனே என்று நின்றுகொண்டிருக்கும் கழுதை என்னதான் பாவம் செய்ததோ தெரியவில்லை. பல பழமொழிகளுக்குள் இதனை இழுத்துப்போட்டுத் தவறான பொருள்கூறி அதனை அவமானப்படுத்தி இருக்கிறார்கள். அப்படிப்பட்ட பல பழமொழிகளில் இரண்டே இரண்டு பழமொழிகளைப் பற்றி மட்டும் இங்கே காணலாம்.

கழுதையும் பழமொழிகளும்:

தமிழகத்தில் புழக்கத்தில் இருந்துவரும் கழுதை சார்ந்த பல்வேறு பழமொழிகளில் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

கழுதை கெட்டால் குட்டிச்சுவர்.
கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனதைப் போல.
கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை?
பொன்னைச் சுமந்தாலும் கழுதை கழுதைதான்.
குதிரையில்லா நாட்டில் கழுதை அரசாளும்.
அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன?
எழுதி வழங்கான் வாழ்க்கை கழுதை புரண்ட களம்.
காரியமாகும் வரையில் கழுதையையும் காலைப்பிடி.

இப் பழமொழிகளில் முதல் இரண்டு பழமொழிகளைப் பற்றி மட்டும் இக் கட்டுரையில் விரிவாகக் காணலாம்.

1. கழுதை கெட்டால் குட்டிச்சுவர்:

இப்பழமொழிக்குத் தற்போது புரிந்துகொள்ளப்படுகின்ற கருத்தானது: கழுதையினைப் போல மதிகெட்டவர்கள் அமர்ந்து கதைபேசும் இடம் குட்டிச்சுவர். அதாவது, படித்து முடித்துவிட்டு வேலைக்குப் போகாமல் தங்கள் தோழர்களுடன் சேர்ந்துகொண்டு குட்டிச்சுவரின்மேல் அமர்ந்துகொண்டு பகலெல்லாம் அரட்டை அடிக்கும் இளைஞர்களைப் பார்த்து அவரது பெற்றோர் இப்படிக் கூறுவதைப் பல வீடுகளில் கேட்டிருக்கலாம்.

இளைஞர்கள் வேலைக்குப் போகாமல் குட்டிச்சுவரின்மேல் அமர்ந்துகொண்டு அரட்டை அடிப்பதற்கும் கழுதைக்கும் என்ன தொடர்பு இருக்கமுடியும்?. பொதுவாக, படிக்காத முட்டாள்களைக் கழுதையுடன் ஒப்பிடுவது உலக வழக்கம். படித்திருந்தும் படிக்காத முட்டாள்களைப் போல வெட்டியாகப் பொழுதைக் கழிப்பதனால் ஒருவேளை இந்த ஒப்பீடு செய்திருக்கலாமோ?. ஆனால்.... ஆனால்... படிக்காதவர்கள் எல்லோரும் முட்டாள்கள் அல்லரே!. படித்தவர்கள் அனைவரும் அறிவாளிகளும் அல்லரே!!. படிக்காத முட்டாளாகவே இருந்தாலும் வேலைக்குச் செல்கின்றனரே!!!. ஆக, படிப்புக்கும் முட்டாள்தனத்துக்கும் வேலைக்குப் போவதற்கும் எப்படி ஒருதொடர்பும் இல்லையோ அதைப்போலவே கழுதைக்கும் இதற்கும் ஒரு தொடர்பும் கிடையாது. என்றால், இப் பழமொழி உணர்த்தும் உண்மைப் பொருள்தான் என்ன?. இதைப்பற்றிக் கீழே காணலாம்.

மக்கள் பயன்பாட்டில் கழுதை:

மனித சமுதாயத்திற்கு நன்மை செய்யும் பல்வேறு விலங்குகளில் கழுதையும் ஒன்றாகும். பொருட்களை ஓரிடத்தில் இருந்து வேறோர் இடத்திற்குக் கொண்டுசெல்வதற்கு மட்டுமின்றி உழவுக்கும் கழுதையானது பயன்படுத்தப் பட்டுள்ளது. தமிழகத்தில் சங்ககாலம் தொட்டே கழுதையானது மக்கள் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது என்பதற்குக் கீழ்க்காணும் பாடல்கள் சான்றாகும்.

.... தடவு நிலைப் பலவின் முழு முதல் கொண்ட
சிறு சுளை பெரும் பழம் கடுப்ப மிரியல்
புணர் பொறை தாங்கிய வடு ஆழ் நோன் புறத்து
அணர் செவி கழுதை சாத்தொடு வழங்கும் ..- பெரும்பாண்.

கழுதை சுமந்துவந்த மிளகு மூட்டையானது பலாப்பழம் போலத் தோன்றியதாக மேற்காணும் பாடல் கூறுகிறது.

... அணங்கு உடை மரபின் இரும் களம்தோறும்
வெள் வாய் கழுதை புல்இனம் பூட்டி
வெள்ளை வரகும் கொள்ளும் வித்தும்
வைகல் உழவ வாழிய பெரிது என ... - புறம். 392

வெற்றிபெற்ற போர்க்களத்திலே கழுதைகளை ஏரில் பூட்டி வெள்ளை வரகும் கொள்ளும் வித்தியதாக மேற்காணும் பாடல் கூறுகிறது.

பழமொழியின் உண்மை விளக்கம்:

இனி பழமொழியின் உண்மை விளக்கம் என்ன என்று காணலாம். பொதுவாகக் கழுதைகள் மந்தமான நடையினை உடையவை. கழுதைகளைப் பொருள் போக்குவரத்திற்கோ உழவுக்கோ பயன்படுத்தும் முன்னர் அவற்றை நன்கு பழக்கவேண்டும். பழக்காவிட்டால் அவற்றிடம் இருந்து வேலைவாங்க முடியாது; உதைதான் வாங்கமுடியும்.

வேலைவாங்கினால் மட்டும் போதாது; அவற்றை நன்கு பராமரிக்க வேண்டும். வேளாவேளைக்கு உணவும் நீரும் கொடுப்பதுடன் அதனைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். கழுதைதானே என்று சரியாகக் கவனிக்காமல் விட்டுவிட்டால் அது மருண்டுவிடும் அதாவது குழம்பிவிடும். சரியாக உண்ணாது; கட்டளைகளை ஏற்று வேலைசெய்யாது. இதைத்தான் 'கழுதை கெடுதல்' என்று பழமொழி கூறுகிறது. இவ்வாறு கழுதையின் மனநிலை பாதிக்கப்பட்டாலோ உடல்நிலை கெட்டாலோ அதன் இயல்பான நடவடிக்கைகள் பாதிப்படையும். எந்தவேலையும் செய்யாமல் ஒரு குட்டிச்சுவர் போல அப்படியே நின்றுகொண்டிருக்கும். சிலநேரங்களில் சாலையின் நடுவிலோ பொது இடத்திலோ கழுதைகள் அப்படியே அசையாமல் சிலைபோல நின்றுகொண்டிருப்பதைக் காணலாம். ஓசை எழுப்பினாலும் கட்டளை இட்டாலும் ஒரு குட்டிச்சுவரைப் போல அவை நகராமல் இருப்பதன் காரணம் அவற்றின் மனநிலை அல்லது உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதே.

இப்படி ஒரு கழுதையானது மனநிலை மற்றும் உடல்நிலையில் கெடும்போது / பாதிப்படையும்போது ஒரு குட்டிச்சுவரைப் போல அசையாமல் கட்டளைகளை ஏற்காமல் வேலைசெய்யாமல் நிற்பதையே இப்பழமொழி கூறுகிறது. இப் பழமொழியின் விளக்கத்தில் இருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டியது:

கழுதையைப் போல ஒருவன் முட்டாளாக இருந்தாலும்
தன் மனநிலை / உடல்நிலை கெட்டுப் போனால்
குட்டிச்சுவரைப் போல பயனற்றுப் போவான்.

2. கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனதைப் போல:

இப் பழமொழிக்குத் தற்போது கொள்ளப்படும் பொருள் இதுதான்: ' கழுதையானது தனது பெரிய உருவில் இருந்து மெலிந்து மெலிந்து ஒரு கட்டெறும்பு அளவுக்குச் சுருங்கியதைப் போல ' . மிக்க வளத்துடனும் பலத்துடனும் நல்ல நிலையில் இருந்து பின்னர் மெல்ல மெல்ல அனைத்தையும் இழந்து நிற்கும் நிலைக்கு இந்தப் பழமொழியினை ஒரு உவமையாகக் குறிப்பிடுவர்.

பழமொழி விளக்கம் சரியா?:

இப்பழமொழியின் விளக்கம் சரியா என்று பார்க்கலாம். இப் பழமொழியில் இரண்டு உயிரினங்கள் குறிப்பிடப்படுகின்றன. ஒன்று: கழுதை. இன்னொன்று: கட்டெறும்பு. இதில் வரும் கழுதை என்பதற்குப் பொதி சுமக்கும் நாலுகால் விலங்கு என்றும் கட்டெறும்பு என்பதற்குக் கருநிறம் கொண்ட பெரிய எறும்பு என்றும் பொருள்கொண்டால் பழமொழியின் விளக்கத்தில் கேள்விக்குறி எழுகிறது. காரணம், கழுதை எனும் விலங்கிற்கும் கட்டெறும்பிற்கும் என்ன தொடர்பு என்பதை அறிய முடியவில்லை. கழுதையின் எந்தவொரு பண்பினையும் கட்டெறும்பிற்குப் பொருத்திப் பார்க்க இயலவில்லை. அதுமட்டுமின்றி, கழுதை எவ்வளவுதான் மெலிந்தாலும் கட்டெறும்பின் அளவுக்குச் சுருங்க முடியாது என்பதை அனைவரும் அறிவோம். 

இல்லை இல்லை இங்கே கழுதை, கட்டெறும்பு ஆகிய சொற்கள் மோனை (முதலெழுத்து) நயம் பற்றித்தான் கூறப்பட்டுள்ளனவே அன்றி இவ் இரண்டுக்கும் இடையில் வேறு யாதும் தொடர்பில்லை என்று ஒருசிலர் கூறுகின்றனர். இவர்களது கருத்து தவறானதாகும். காரணம், மோனை அழகுக்காகத் தான் கழுதை என்ற சொல்லைப் பயன்படுத்தினர் என்றால் கழுதைக்குப் பதிலாக கரடியைச் சொல்லியிருக்கலாம். கழுதையைக் காட்டிலும் கரடி என்ற சொல் இன்னும் பொருத்தமாயிருக்கும். காரணம், கரடியும் கட்டெறும்பும் கருநிறம் கொண்டவை. ஆனால் அவ்வாறு கூறவில்லை. எனவே கழுதையும் கட்டெறும்பும் வெறும் மோனைநயம் பற்றிக் கூறப்படவில்லை என்பது உறுதியாகிறது.

பழமொழியின் உண்மை விளக்கம்:

இப் பழமொழியின் உண்மை விளக்கம் என்ன என்று காணலாம். இப் பழமொழியில் வரும் கழுதையும் கட்டெறும்பும் நேரடியாகத் தத்தம் பொருட்களை உணர்த்தாமல் ஆகுபெயராக நின்று அவற்றுடன் தொடர்புடைய பிற பொருட்களை உணர்த்தி நிற்கின்றன. அதாவது,

கழுதை என்பது ஆகுபெயராகக் கழுதை சுமக்கும் பொதிபோன்ற பெரும் செல்வத்தையும்
கட்டெறும்பு என்பது ஆகுபெயராகக் கட்டெறும்பு சுமக்கும் உணவுபோன்ற சிறிய பொருளையும்

இப் பழமொழியில் உணர்த்தி நிற்கின்றன. இனி இப்பழமொழியின் உண்மை விளக்கம் இதுதான்:

கழுதை = கழுதை சுமக்கும் பொதியின் அளவில் இருந்த பெரும் செல்வமானது
தேய்ந்து = மெல்ல மெல்லக் குறைந்து
கட்டெறும்பு ஆனதைப் போல = கட்டெறும்பு சுமக்கும் உணவின் அளவுக்குச் சிறுத்துப் போனதைப் போல.

இப் பழமொழியின் விளக்கத்தில் இருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டிய கருத்து:

' சரியாகப் பராமரிக்கப்படாவிட்டால் எவ்வளவு பெரிய பொருட்செல்வமும் வற்றிவிடும் '.

முடிவுரை:

பழமொழிகளின் பொருளைச் சரியாகப் புரிந்துகொள்ள பொறுமை தேவைப்படுகிறது. அவசரப்பட்டுத் தவறான பொருட்களைப் புரிந்துகொண்டால் பழமொழிகள் கூறப்பட்டதன் நோக்கமே மாறிவிடும். இப்படித் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட பழமொழிகளில் இரண்டைத் தான் மேலே கண்டிருக்கிறோம். வாழ்க தமிழ் !

செவ்வாய், 3 அக்டோபர், 2017

எண்ணும் எழுத்தும் - 5 ( தமிழ் எழுத்துக்களும் மதிப்பெண்களும் )

முன்னுரை:
எண்ணும் எழுத்தும் என்ற ஆய்வுக் கட்டுரையின் முதல் பகுதியில் தமிழ் எழுத்துக்களின் பிறப்பியல் பற்றி விரிவாகக் கண்டோம். இரண்டாம் பகுதியில் மெய்யெழுத்துக்களுக்கும் வினைச்சொற்களுக்கும் இடையிலான தொடர்புகளைப் பற்றி விரிவாகக் கண்டோம். மூன்றாம் பகுதியில் எண்களுக்கும் பொருளுண்டு என்பது தொடர்பான செய்திகளைப் பற்றிக் கண்டோம். நான்காம் பகுதியில் உயிர் எழுத்துக்களுக்குள் ஒளிந்திருக்கும் பல உண்மைகளைப் பற்றி விளக்கமாகக் கண்டோம். ஐந்தாம் பகுதியான இதில் ஒவ்வொரு தமிழ் எழுத்துக்குமான எண்மதிப்பினைப் பற்றி விரிவாகக் காணலாம்.

மெய்யெழுத்துக்களும் மதிப்பும்:

முதலில் மெய்யெழுத்துக்களின் மதிப்பினைக் காணலாம். மெய்யெழுத்துக்கள் பதினெட்டினையும் ஆறு தொகுதிகளாகப் பிரித்து அவற்றுக்கான வினைச்சொற்களை இக் கட்டுரையின் இரண்டாம் பகுதியில் ஏற்கெனவே கண்டோம். அவை மறுபடியும் கீழே ஒரு அட்டவணையாகத் ( அட்டவணை எண்: 1) தொகுத்துக் காட்டப்பட்டுள்ளது.

தொகுதிபெயர்  எழுத்துக்கள்   சில வினைச்சொற்கள்

பொங்கர்         க், ங், ர்                  ஒன்றுபடுதல், திரளுதல் ....
நஞ்சை            ச், ஞ், ய்                 உயர்தல், எழுதல் .....
மண்டளி         ட், ண், ள்              வளைதல், தொங்குதல் .....
குழந்தை         த், ந், ழ்                 மழுங்குதல், எண்ணுதல் .....
வம்பு                 ப், ம், வ்               சமமாயிருத்தல், அமைதல் ......
முன்றில்         ற், ன், ல்              உட்குழிதல், இரண்டாதல் .......

அதேசமயம், ஒன்று முதல் ஒன்பது வரையிலான ஒவ்வொரு எண்ணும் குறிக்கின்ற பல்வேறு பொருட்களைப் பற்றி இக்கட்டுரையின் மூன்றாம் பகுதியில் ஏற்கெனவே கண்டோம். அவை மறுபடியும் கீழே ஒரு அட்டவணையாகத் ( அட்டவணை எண்: 2) தொகுத்துக் காட்டப்பட்டுள்ளது.

எண்         குறிக்கும் பொருட்கள்

ஒன்று        1, ஒன்றுபடுதல்
இரண்டு      2, அறுத்தல்
மூன்று       3, உதவி / இன்பம்
நான்கு       4, தொங்குதல்
ஐந்து           5, துன்பம்
ஆறு            6, அமைதல்
ஏழு              7, எழுதல்
எட்டு           8, முழுமையாதல், எண்ணுதல்.
ஒன்பது      9, உதவி / இன்பம், துன்பம்.

இப்போது மேலே கண்ட இரண்டு அட்டவணைகளையும் ஒப்பிடலாம். அதாவது, முதல் அட்டவணையில் காட்டப்படுகின்ற வினைச்சொற்களையும் இரண்டாம் அட்டவணையில் காட்டப்படுகின்ற பொருட்களையும் ஒப்பிட்டு, இவ் இரண்டிலும் எதெல்லாம் பொதுவாக வருகின்றதோ அவற்றை மட்டும் பிரித்துக் கீழே தனியாக ஒரு அட்டவணையில் ( அட்டவணை எண்: 3) காட்டப்படுகிறது.

பொதுப்பொருள்./வினை       எண்        எழுத்துக்கள்    

ஒன்றுபடுதல்                              ஒன்று         க், ங், ர்
அறுத்தல் / இரண்டாதல்        இரண்டு        ற், ன், ல்
தொங்குதல்                                  நான்கு         ட், ண், ள்
அமைதல்                                        ஆறு           ப், ம், வ்
எழுதல்                                              ஏழு            ச், ஞ், ய்
எண்ணுதல்                                    எட்டு           த், ந், ழ்

மெய்யெழுத்துக்கள் பதினெட்டிற்குமான எண்மதிப்புக்களை மேற்காணும் அட்டவணை எண் : 3 காட்டுகிறது.

உயிரெழுத்துக்களும் மதிப்பும்:

உயிரெழுத்துக்களின் வகைகளையும் அவை உணர்த்தும் பல்வேறு செய்திகளையும் இக் கட்டுரையின் நான்காம் பகுதியில் விரிவாகக் கண்டோம். அதை மறுபடியும் இங்கே ஒரு அட்டவணை வடிவில் ( அட்டவணை எண்: 4) தொகுத்துக் காணலாம்.

எழுத்துவகை            எழுத்துக்கள்        குறிக்கும் பொருட்கள்

சுட்டெழுத்துக்கள்        அ,ஆ,இ,ஈ,உ,ஊ      உதவுதல், எளிதாக்கல்
வினா எழுத்துக்கள்      எ, ஏ, யா, ஆ, ஓ     எழுதல், உயர்தல்
உணர்ச்சி எழுத்துக்கள்   ஐ, ஓ                      வியப்பு, மகிழ்ச்சி, அவலம்.
                                                                                      (இன்பம், துன்பம்)

மேற்காணும் அட்டவணை எண் 4 ல் வருகின்ற வினா எழுத்துக்களுள் ஆ, ஓ ஆகிய எழுத்துக்கள் சொல்லின் ஈற்றில் மட்டுமே நின்று வினாப்பொருள் தருவதாலும் ஏனை எழுத்துவகைகளில் (அதாவது சுட்டெழுத்துக்கள், உணர்ச்சி எழுத்துக்கள்) அவை பங்குபெறுவதாலும் இவ் இரண்டு எழுத்துக்களும் வினா எழுத்துக்கள் என்ற வகையில் இருந்து நீக்கப்படுகின்றன. இனி, அட்டவணை எண் 4 ல் உள்ள பொருட்களையும் அட்டவணை எண் 2 ல் உள்ள பொருட்களையும் ஒப்பிடலாம். இவ் இரண்டு அட்டவணைகளிலும் பொதுவாக வருகின்ற பொருட்களை மட்டும் தனியாகத் தொகுத்துக் கீழே அட்டவணை எண் 5 ல் கொடுக்கப்பட்டுள்ளது.

பொதுப்பொருள்             எண்         எழுத்துக்கள்

உதவுதல்/உதவி           மூன்று       அ,ஆ,இ,ஈ,உ,ஊ
எழுதல்                                 ஏழு          எ,ஏ
இன்பம், துன்பம்          ஒன்பது       ஐ, ஓ, ஒ

சில விளக்கங்கள்:
உயிர் எழுத்துக்களில் குறிப்பிட்ட எழுத்துக்களுக்கு குறிப்பிட்ட எண்மதிப்புக்களை அளித்தமைக்கான காரணங்களை இங்கே விளக்கமாகக் காணலாம்.

சுட்டெழுத்துக்கள் சொற்றொடர்களைச் சுருக்கி எளிமைப்படுத்தி எழுதவும் பேசவும் உதவுகின்றன என்று முன்னர் கண்டோம். சுட்டெழுத்துக்களைப் போலவே எண் மூன்றின் வடிவமானது தொலைவினைச் சுருக்கி பயணத்தை எளிமையாக்கி உதவுகின்ற ஒரு தூக்கி (லிஃப்ட்) போலவும் ஒரு சுருங்கை (சப்-வே) போலவும் இருப்பதால் சுட்டெழுத்துக்களுக்கு எண்மதிப்பாக மூன்றினை அளிப்பதே சாலப் பொருத்தமாகத் தோன்றுகிறது.

வினா எழுத்துக்கள் நமக்குள் புதிய சிந்தனைகளை எழும்பச்செய்து செயலில் ஈடுபடுத்தி நமது வாழ்வினை உயர்த்திக்கொள்ள அடிப்படையாக அமைகின்றன என்று முன்னர் கண்டோம். வினா எழுத்துக்களைப் போல எண் ஏழானது 'எழுதல், உயர்தல்' ஆகிய பொருட்களைச் சுட்டிக்காட்டுவதால், வினா எழுத்துக்களுக்கு எண்மதிப்பாக ஏழினை அளிப்பதே மிகப் பொருத்தமாகத் தோன்றுகிறது. யா என்ற வினா எழுத்தின் முதலாக வரும் ய் என்ற எழுத்து ஏற்கெனவே நஞ்சைத் தொகுதியில் வருவதாலும் இதன் மதிப்பாக எண் ஏழே கொடுக்கப்பட்டுள்ளதாலும் வினா எழுத்துக்களின் எண்மதிப்பு ஏழு என்பது மிகச் சரியாகவே அமைகின்றது.

உணர்ச்சி எழுத்துக்களை எடுத்துக்கொண்டால், அவை வாழ்க்கையில் அனைவருக்கும் பொதுவாக இருக்கின்ற இன்ப துன்பங்களை வெளிப்படுத்த உதவுகின்றன என்று முன்னர் கண்டோம். இந்த உணர்ச்சி எழுத்துக்களைப் போலவே எண் ஒன்பதின் வடிவமானது துன்பத்தில் உள்ள ஒருவருக்குத் தோள்கொடுத்து உதவிசெய்து அவரது துன்பத்தை நீக்கி மகிழ்ச்சிபெறச் செய்தல் மற்றும் உதவியின்றி தானே துன்புறச்செய்தல் ஆகிய இருநிலைகளையும் சுட்டிக்காட்டுவதால் உணர்ச்சி எழுத்துக்களுக்கு எண்மதிப்பாக ஒன்பதினை அளிப்பதே சாலப் பொருத்தமாகப் படுகிறது. ஓகார எழுத்து மட்டுமே உணர்ச்சி எழுத்து வகையில் வந்தாலும், ஒகார எழுத்தானது அதன் குறிலாக இருப்பதால் அதற்கும் எண்மதிப்பு ஒன்பது என்றே கொள்ளப்படுகிறது.

இதுவரை உயிர் எழுத்துக்களில் அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ ஆகியவற்றின் எண்மதிப்பினைப் பற்றிப் பார்த்தோம். இனி, எஞ்சி இருக்கின்ற ஔ, ஃ ஆகிய எழுத்துக்களுக்கான எண்மதிப்பினை எவ்வாறு கணக்கிடுவது என்று பார்ப்போம்.

ஔ என்ற உயிர் எழுத்தினை அவ் என்று எழுதுவதும் வழக்கமே என்று அறிவோம். அவ்வகையில்,

ஔ = அவ் = அ+வ் = 3+6 = 9 என்ற எண்மதிப்பினைப் பெறும்.

அதுமட்டுமின்றி, ஔ என்னும் எழுத்தானது ஒருவகையில் பார்த்தால் உணர்ச்சியை வெளிப்படுத்துகின்ற எழுத்தாகவும் சில நேரங்களில் பயன்படத்தான் செய்கின்றது. திடீரென்று வலி ஏற்பட்டாலும் எதிர்பாராத வகையில் ஏதேனும் தவறுகளைச் செய்துவிட்டாலும் 'ஔச்' என்று கத்துவது வழக்கமே. மிக அரிதாகவே பயன்படுத்தப்படுகின்ற இவ் எழுத்தினை ஓர் உணர்ச்சி எழுத்தாகவே கொண்டாலும் இதன் எண்மதிப்பாக ஒன்பதினைக் கொள்வது சாலப் பொருத்தமாகவே தோன்றுகிறது.

அடுத்து ஆய்த எழுத்தான ஃ என்ற எழுத்துக்கான எண்மதிப்பினை எவ்வாறு கணக்கிடுவது என்பதைப் பற்றிக் காணலாம். இந்த எழுத்தின் பெயரிலேயே ஆய்தம் என்று வருகிறது. பொதுவாக எந்த ஒரு ஆய்தமும் தாக்கி வருத்தவே செய்யும் என்று அறிவோம். அதுமட்டுமின்றி, ஒரு வல்லின எழுத்தின் முன்னால் ஆய்த எழுத்து பயின்று வரும்போது அது அவ் வல்லின எழுத்தினைத் தாக்கி அதனை மெலியச்செய்வதனை அறிவோம். சான்றாக,

எஃகு, அஃது, கஃசு, பஃறுளி, கஃடு.

இச் சொற்களில் ஆய்த எழுத்துக்களின் பின்னால் வரும் கு, து, சு, று, டு ஆகிய வல்லின எழுத்துக்களானவை வல்லினமாக அன்றி மென்மையாகவே ஒலிக்கப்படுவதனை அறிவோம். இப்படி ஆய்த எழுத்தானது ஒரு கூரிய ஆயுதத்தினைப் போல வல்லின எழுத்துக்களைத் தாக்கி வருத்தி மெலியச் செய்கின்ற பண்புடையதால் இதற்கு எண்மதிப்பாக ஐந்தினைக் கொள்வது பொருத்தமாகத் தோன்றுகிறது. காரணம், எண் ஐந்தின் வடிவமானது பிறரது உதவி ஏதுமின்றி ஒருவர் தானே மெய்வருத்தித் துன்புற்று முயன்று முன்னேறுவதைக் காட்டுகிறது என்று இக் கட்டுரையின் மூன்றாம் பகுதியில் கண்டோம். எனவே, மெலிதல் / வருந்துதல் என்ற பண்பின் அடிப்படையில் ஆய்த எழுத்திற்கு எண்மதிப்பாக ஐந்து என்பது கொள்ளப்படுகிறது.

தமிழ் எழுத்துக்களும் மதிப்பெண்களும்:

இதுவரை மேலேகண்ட தமிழ் எழுத்துக்கள் ஒவ்வொன்றுக்குமான மதிப்பெண்ணைக் கீழே அட்டவணை எண் 6 ல் தனித்தனியே காணலாம்.

எழுத்து         மதிப்பெண்

உயிரெழுத்துக்கள்

அ                              3
ஆ                             3
இ                              3
ஈ                               3
உ                              3
ஊ                             3
எ                               7
ஏ                               7
ஐ                              9
ஒ                             9
ஓ                             9
ஔ                         9      
ஃ                               5

வல்லின மெய்யெழுத்துக்கள்

க்                              1
ச்                              7
ட்                             4
த்                             8
ப்                             6
ற்                            2

மெல்லின மெய்யெழுத்துக்கள்

ங்                            1
ஞ்                           7
ண்                          4
ந்                             8
ம்                            6
ன்                           2

இடையின மெய்யெழுத்துக்கள்

ய்                            7
ர்                             1
ல்                           2
வ்                           6
ழ்                            8
ள்                           4

மதிப்பெண்களும் தமிழ் எழுத்துக்களும்:

ஒரே மதிப்பெண்களைக் கொண்ட பல்வேறு எழுத்துக்களைக் கீழே அட்டவணை எண் 7 ல் தொகுத்துக் காணலாம்.

மதிப்பெண்           எழுத்துக்கள்

1                                    க், ங், ர்
2                                   ற், ன், ல்
3                                  அ, ஆ, இ, ஈ, உ, ஊ
4                                  ட், ண், ள்
5                                  ஃ ( ஆய்த எழுத்து )
6                                  ப், ம், வ்
7                                  ச், ஞ், ய், எ, ஏ
8                                  த், ந், ழ்
9                                  ஐ, ஒ, ஓ, ஔ.


.... தொடரும் .....