வியாழன், 24 மே, 2018

இந்திய மொழிகளின் தாய் தமிழே ! - பகுதி 3


முன்னுரை:

இந்திய மொழிகளின் தாய் தமிழே என்ற தொடர் ஆய்வுக் கட்டுரையின் முதல் இரண்டு பகுதிகளில் தலையில் அமைந்துள்ள பல்வேறு உறுப்புக்களைக் குறிக்கும் தமிழ்ப்பெயர்கள் இந்தியாவின் பிறமாநில மொழிகளில் எவ்வாறெல்லாம் திரிந்து அவ் உறுப்புக்களையும் அவற்றுக்கருகில் உள்ள உறுப்புக்களையும் குறிக்கப் பயன்படுகின்றது என்று கண்டோம். இக் கட்டுரையின் மூன்றாம் பகுதியான இதில் கழுத்து முதல் மார்பு வரையிலான பல்வேறு உறுப்புக்களின் தமிழ்ப்பெயர்கள் பிற மாநில மொழிகளில் எவ்வாறு திரித்து வழங்கப்படுகின்றன என்பதைப் பற்றி விரிவாகக் காணலாம்.

கழுத்து:

சங்ககாலம் தொட்டு இன்றுவரையிலும் தமிழக மக்களிடையே புழக்கத்தில் இருந்துவரும் பல உறுப்புச்சொற்களில் கழுத்தும் ஒன்றாகும். தலையினை உடலுடன் இணைக்கும் பகுதியாக விளங்கும் இதில்தான் குரலை உருவாக்கும் குரல்வளை இருக்கிறது. இதற்கு மிடறு, தொண்டை என்று பிற பெயர்களும் தமிழில் உண்டு. இத் தமிழ்ச்சொற்கள் பிற மாநில மொழிகளில் எவ்வாறு திரிபுற்று வழங்கப்படுகின்றன என்பதைக் கீழே காணலாம்.

கழுத்து >>> கழுத்து - மலையாளம்
கழுத்து >>> க~ர்த`ன் - இந்தி, மராத்தி, கு~ச்^ராத்தி, பஞ்சாபி`
குரல்வளை >>> கொருலு - கன்னடம்
குரல்வளை >>> க்~ரீவ - ஒரியா, செங்கிருதம், கு~ச்^ராத்தி
மிடறு >>> மெடா - தெலுங்கு
தொண்டை >>> தொண்ட - மலையாளம்
தொண்டை >>> தோடோ - கு~ச்^ராத்தி

கல்லுதல் என்னும் தமிழ்ச் சொல்லுக்குத் தமிழ் அகராதிகள் காட்டாமல் விடுத்த 'ஒலித்தல்' என்ற பொருளும் உண்டென்று 'திருக்குறள் கூறும் புலவர் தொழில் எது?.' என்ற ஆய்வுக்கட்டுரையில் பல சான்றுகளுடன் நிறுவப்பட்டுள்ளது. கல்லுதல் என்னும் சொல்லை அடிப்படையாகக் கொண்டு எழுந்த களம் (லகர / ளகர மாறுபாடு) என்ற சொல்லானது ஒலி தோன்றும் இடங்களைக் குறிக்கப் பயன்பட்டது. களம் என்ற சொல்லானது போர்க்களம், ஏர்க்களம், ஆடுகளம், விழாக்களம் போன்று பேரொலி எழுகின்ற இடங்களைக் குறிக்கப் பயன்பட்டது இந்த அடிப்படையில் தான் எனலாம். அதுமட்டுமின்றி, களம் என்ற சொல்லானது ஒலிதோன்றும் இடமான தொண்டையைக் குறிக்கவும் பயன்பட்டுள்ளது. களம் என்னும் தொண்டைப்பகுதியில் ஒலியானது ஊற்றுபோலத் தோன்றிப் பெருகுவதால் அதனை ஊற்றுக்களம் என்று அடைகொடுத்துக் கீழ்க்காணும் கலித்தொகைப் பாடல் கூறுவதைப் பாருங்கள்.

காற்று போல வந்த கதழ்விடைக் காரியை
ஊற்றுக்களத்தே அடங்கக் கொண்டு அட்டு - கலி. 103

ஏறுகோள் விழாவின்போது காற்றைப் போலப் பாய்ந்துவந்த ஒரு காளைமாட்டின் கழுத்தை வீரனொருவன் வலுவாகக் கட்டிக்கொண்டு அதனை வென்ற செய்தியினை மேற்பாடல் வரிகள் கூறுகின்றன. ஊற்றுக்களம் என்ற தமிழ்ச்சொல்லானது பேச்சுவழக்கில் கீழ்க்கண்டவாறு திரிந்தும் குரல்வளையைக் குறிக்கப் பயன்படுகின்றது. கழற்று என்பது பேச்சுவழக்கில் கழட்டு என்றாவதைப் போல,

ஊற்றுக்களம் >>> ஊட்டுக்களம் >>> ஊட்டி என்றாகிறது.

தொண்டையைக் குறிக்கப் பயன்பட்டுவந்த களம் என்ற தமிழ்ச்சொல்லானது பிறமாநில மொழிகளில் எவ்வாறெல்லாம் திரிந்து கழுத்து / தொண்டையைக் குறிக்கப் பயன்படுகின்றது என்று கீழே பார்க்கலாம்.

களம் >>> க~ளா, க~லா - மலையாளம், தெலுங்கு, இந்தி, செங்கிருதம், மராத்தி, கு~ச்^ராத்தி, வங்காளம், பஞ்சாபி`, ஒரியா.

தமிழில் கணம் என்ற சொல்லுண்டு. இச்சொல்லுக்கு ஒலி என்ற பொருளுமுண்டு. ஆனால், கணம் என்றால் கூட்டம் என்ற பொருளைக் கூறிய தமிழ் அகராதிகள், கூட்டம்கூடும்போது ஒலி உண்டாவது தவிர்க்க இயலாது என்பதை மறந்துவிட்டதால், கணம் என்ற சொல்லுக்கு ஒலி என்ற பொருளைக் கூறத் தவறிவிட்டன. கணம் என்ற சொல்லுக்கு ஒலி என்ற பொருளுண்டு என்பதைக் காட்டும் சில இலக்கியப் பாடல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பொலம்தொடி போல மின்னி கணம்கொள் இன்னிசை முரசின் இரங்கி - நற் 197
கணம்கொள் அருவி கான்கெழு நாடன் - ஐங் 183, அகம் 22
கணம்கொள் வண்டின் அம்சிறைத் தொழுதி - அகம் 204

மேற்பாடல்களில் வரும் கணம்கொள் என்பது ஒலிக்கின்ற என்ற பொருளில் வந்துள்ளது. ஒலியைக் குறித்துவந்த கணம் என்ற தமிழ்ச்சொல்லானது பிறமாநில மொழிகளில் எப்படியெல்லாம் திரிந்து என்னென்ன பொருட்களையெல்லாம் குறிக்கப் பயன்படுகிறது என்று கீழே பார்க்கலாம்.

கணம் (ஒலி) >>> க்ச~ண = நொடிப்பொழுது. (கையின் பெருவிரல் நடுவிரல் கொண்டு ஓசை உண்டாக்கும் பொழுது.)
கணம் (ஒலி) >>> கண்ட, கண்ட`, கண்டு, க^ண்டுலு,  = ஒலியின் பிறப்பிடமாகிய குரல்வளை.
கணம் (ஒலி) >>> க^ண்ட, க^ண்டீ, கெ^ண்டெ = கணீர் கணீர் என்று ஒலியெழுப்பும் மணி.

சொல்வடிவம்        பேசப்படும் மொழிகள்

கண்ட, கண்ட`        இந்தி, செங்கிருதம், மராத்தி, கு~ச்^ராத்தி, வங்காளம், 
                     பஞ்சாபி`, ஒரியா.
கண்டு, கண்டமு      தெலுங்கு
க^ண்டுலு             கன்னடம்
கண்டம்              மலையாளம்
க^ண்ட, க^ண்டீ       தெலுங்கு, இந்தி, செங்கிருதம், மராத்தி, கு~ச்^ராத்தி, 
                     வங்காளம், பஞ்சாபி`, ஒரியா.
கெ^ண்டெ            கன்னடம்

தோள்:

கழுத்தினையும் கையினையும் இணைக்கும் பகுதியாக விளங்கும் உறுப்பினைத் தோள் என்றும் தோள்பட்டை என்றும் கூறிவருகிறோம். சில சமயங்களில் தோள் என்பது கையின் மேல்பகுதியைக் குறிக்கவும் பயன்படுகின்றது. தோள் என்ற தமிழ்ச்சொல் எவ்வாறு திரிந்து பிற மொழிகளில் அவ் உறுப்பினைக் குறிக்கப் பயன்படுகின்றது என்று பார்க்கலாம்.

தோள் >>> தோள் - மலையாளம்

தோள் என்று சொன்னாலே அதன் வலிமை தான் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வரும். எடைமிகுந்த பொருட்களைச் சுமப்பதற்கும் பை முதலானவற்றை மாட்டிக் கொள்வதற்கும் மிகவும் உதவியாய் இருப்பது வலிமை மிக்க தோள்களே ஆகும். இந்த தோள்களைப் போலவே சங்ககாலத்தில் கந்து என்னும் பொருளை மக்கள் பயன்படுத்தி வந்தனர். மண்ணில் நன்கு ஆழமாக ஊன்றியிருக்கும் / ஊன்றப்பட்ட பெரிய அடிமரம் அல்லது கல்தூண் போன்ற கந்தானது மதங்கொண்ட யானையையே பிணித்து வைத்துக் கொள்ளும் வலிமை உடையது. யானையைக் கந்துடன் சேர்த்துப் பிணித்திருந்த செய்தியைக் கூறும் சில சங்கப்பாடல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

களிறு கதன் அடக்கிய வெளிறு இல் கந்தின் - பெரும் 396
கந்து பிணி யானை அயா உயிர்த்து அன்ன - நற் 62
மைந்து மலிந்த மழகளிறு கந்துசேர்பு நிலைஇ - புறம். 22

சில நேரங்களில் கடவுள் வாழும் இடமாகவும் விலங்குகள் போகிற போக்கில் தமது உடலை உரசிக்கொள்ளும் இடமாகவும் விளங்கிய இக் கந்தினை அதன் வலிமை மற்றும் பிணித்தல் பயன்பாட்டு ஒப்புமை கருதித் தோளுடன் ஒப்பிட்டுக் கூறுவது வழக்கம். கீழ்க்காணும் அகநானூற்றுப் பாடலில் தோளினைக் கந்துடன் ஒப்பிட்டுக் கூறியிருப்பதனைக் காணலாம்.

ஆரியர் பிடிபயின்று தரூஉம் பெரும்களிறு போல
தோள் கந்து ஆகக் கூந்தலின் பிணித்து அவன் - அகம். 276

ஆரியர்கள் பெண்யானையைக்கொண்டு அதனுடன் சேர்த்து ஆண்யானையைப் பிணித்துக் கொணர்தலைப் போல தலைவனின் தோள் கந்தாகவும் தனது கூந்தலை அதனுடன் பிணித்து அவனைக் கொணர்வேன் என்று மேற்பாடல் வரிகள் கூறுகின்றன. தோளுடன் ஒப்புமையாகக் கருதப்பட்ட கந்து என்ற தமிழ்ச்சொல்லானது இந்தியாவின் பிற மாநில மொழிகளில் திரிபடைந்து தோளைக் குறிக்கப் பயன்படுவதைப் பற்றிக் கீழே காணலாம்.

கந்து >>> ச்`கந்த`, கந்தா^, கந்த`ர

பேசப்படும் மொழிகள்: மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, செங்கிருதம், மராத்தி, கு~ச்^ராத்தி, வங்காளம், பஞ்சாபி`, ஒரியா.

தமிழில் புயல் என்ற பழஞ்சொல்லுண்டு. இச்சொல்லுக்கு மேகம், நீர், கொடுங்காற்று ஆகிய பொருட்களைத் தமிழ் அகராதிகள் கூறுகின்றன. இவற்றில் கொடுங்காற்று என்பது வலிமை மிக்க காற்றினைக் குறிக்கும். பெரிய பெரிய மரங்களையே வேரோடு புய்க்கும் அதாவது பெயர்த்து எறியக் கூடிய வலிமை படைத்த காற்றாதலால் இதற்குப் புயல் என்ற பெயர் ஏற்பட்டது எனலாம்.

புய்                >>> புயல்
(பெயர்த்தல்)           (வலிய காற்று)

இந்தப் புயல் காற்றைப் போலவே ஒரு இடத்தில் இருப்பதைப் புய்த்து / பெயர்த்து எறியும் வேலையைச் செய்யக் கூடியது கைகள் ஆகும். பொதுவாக, ஒருவரது கைகளின் வலிமையினை அதன் தோள் பகுதி அதாவது மேல்பகுதியின் பெருத்த தன்மையே காட்டிக்கொடுத்து விடும். காற்றடைத்த பந்துபோலப் பெருத்திருக்கும் தோள்கள் மிக்க வலிமை கொண்டவை. புயல்காற்று சுழன்று சுழன்று வீசி அனைத்தையும் பெயர்த்து எறிவதைப் போல வலிமைமிக்க தோள்கள் போர்க்களத்தில் சுழன்று சுழன்று எதிரிகளைப் பெயர்த்தெறியும். வலிமையும் பெயர்த்தெறியும் தன்மையும் கொண்டதால் தோள்களுக்குப் புயம் என்ற பெயர் ஏற்பட்டது எனலாம்.

புய்                  >>> புயம்
(பெயர்த்தல்)             (வலிய தோள்)

சங்க இலக்கியங்களிலும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களிலும் புயம் என்ற சொல் இல்லை என்றாலும் சிலப்பதிகாரத்தில் புயம் என்ற சொல் தோள் என்ற பொருளில் கீழ்க்காணும் பாடலில் வருகிறது.

அணிமணி புயத்துத் தாங்கினன் ஆகி தகைமையின் செல்வுழி - வஞ்சி 26.

வலிமை மற்றும் பெயர்த்தெறியக் கூடிய தன்மையின் ஒப்பீட்டால் வலிய தோள்களை புயல் காற்றுடன் ஒப்பிடுவது இலக்கிய வழக்கம். சினம் கொண்டு வீசிப் பெயர்க்கின்ற புயலைப் போலப் போர்க்களத்தில் எதிரிகளைப் பெயர்க்கின்ற வலிமை கொண்டவன் என்று மன்னனுடைய திரண்ட தோள்களின் வலிமையைப் பற்றிக் கீழ்க்காணும் பதிற்றுப்பத்தின் பாடல்வரி கூறுகிறது. 

பெரும் சினப் புயல் ஏறு அனையை - பதி. 51

இவ்வாறு புய் என்னும் தமிழ்ச்சொல்லை அடிப்படையாய்க் கொண்டு எழுந்ததும் புயலுடன் ஒப்புமை உடையதுமான புயம் என்ற தமிழ்ச் சொல்லானது இந்தியாவின் பிற மாநில மொழிகளில் எவ்வாறு திரிபடைந்து தோளைக் குறிக்கப் பயன்படுகிறது என்று கீழே காணலாம்.

புயம் >>> பு^ச^ம் >>> பு^ச்^

பேசப்படும் மொழிகள்: மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, செங்கிருதம், மராத்தி, கு~ச்^ராத்தி, வங்காளம், பஞ்சாபி`, ஒரியா.

கை:

ஓரெழுத்து ஒருமொழியாகத் தமிழில் பன்னெடுங்காலமாகப் பயன்பாட்டில் இருந்துவரும் பல சொற்களில் கையும் ஒன்று. இச்சொல்லுக்கு உடல் உறுப்பு உட்பட செயல், உதவி போன்ற பொருட்களையும் தமிழ் அகராதிகள் கூறுகின்றன. காரணம், ஒரு செயலைச் செய்யவோ உதவி புரியவோ முதல் தேவை கை தான். கை என்னும் தமிழ்ச்சொல் பிற மாநில மொழிகளில் எவ்வாறு திரிந்து வழங்கப்படுகின்றது என்பதை முதலில் பார்க்கலாம்.

கை >>> கை - மலையாளம், கன்னடம்.
கை (கய்) >>> க`ச்`த >>> கா`த்

சொல்வடிவம்         பேசப்படும் மொழிகள்

க`ச்`த                 மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, செங்கிருதம், 
                      மராத்தி, கு~ச்^ராத்தி, வங்காளம், பஞ்சாபி`, ஒரியா.
கா`த்                  இந்தி, மராத்தி, கு~ச்^ராத்தி, பஞ்சாபி, ஒரியா.

கை என்னும் சொல்லுக்குச் செயல் என்ற பொருளும் உண்டென்று மேலே கண்டோம். செயலைக் குறிப்பதான பல்வேறு தமிழ்ச்சொற்கள் பிற மாநில மொழிகளில் எவ்வாறு திரிந்து (செயலைச் செய்ய உதவும்) கையினைக் குறிக்கப் பயன்படுகின்றது என்பதைக் கீழே காணலாம்.

செயல் >>> செய்யி - தெலுங்கு
பணி >>> பாணி - மலையாளம், கன்னடம், செங்கிருதம், மராத்தி, வங்காளம்.
கருமம் >>> கர - மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, செங்கிருதம், மராத்தி, வங்காளம்.

விரல்:

சங்ககாலத் தமிழர்கள் முதல் இக்காலத் தமிழர்கள் வரையிலும் மிகப் பரவலாகப் பயன்படுத்திய பல தமிழ்ச்சொற்களுள் விரலும் ஒன்றாகும். உள்ளங்கையில் இருந்து ஐந்து பிரிவுகளாக நீண்டிருக்கும் இவ் உறுப்புக்களின் உதவியின்றி கையினால் ஒரு பயனும் இல்லை எனலாம். விரல் என்ற தமிழ்ச்சொல்லின் திரிபுகள் எந்தெந்த மொழிகளில் எவ்வாறு வழங்கப்படுகின்றன என்று கீழே காணலாம்.

விரல் >>> விரல் - மலையாளம்
விரல் >>> வேலு - தெலுங்கு
விரல் >>> பெ`ரலு >>> பெ`ட்டு >>> போ`ட

சொல்வடிவம்          பேசப்படும் மொழிகள்

பெ`ரலு, பெ`ட்டு        கன்னடம்
போ`ட                 மராத்தி

தமிழில் அங்கை என்னும் அழகிய பழஞ்சொல்லுண்டு. இச்சொல்லுக்கு உள்ளங்கை எனும் பொருளையே இற்றைத் தமிழகராதிகள் கூறியுள்ளன. ஆனால் இச்சொல்லுக்கு உள்ளங்கை என்பது மட்டுமே பொருளன்று; உள்ளங்கையில் இருந்து பிரிந்து செல்லும் விரல்களையும் இச்சொல் குறிக்கும். கீழ்க்காணும் சங்கப் பாடல்களில் வரும் அங்கை என்பது விரல்கள் என்ற பொருளில் வந்துள்ளது.

திரு முகம் அவிழ்ந்த தெய்வ தாமரை
ஆசு இல் அங்கை அரக்கு தோய்ந்து அன்ன
சே இதழ் பொதிந்த செம்பொன் கொட்டை - சிறு 74

அழகிய முகம் போல அவிழ்ந்த தாமரைமலரில் செந்நிறம் தோய்ந்த கைவிரல்களைப் போலச் சிவந்த இதழ்கள் சூழ்ந்திருக்க நடுவில் செம்பொன் நிறத்தில் கொட்டையானது பொதிந்து இருந்ததாக மேற்பாடல் வரிகள் கூறுகின்றன. அவிழ்ந்த கோடல் மலரின் இதழ்களைக் கைவிரல்களாகக் கீழ்க்காணும் பாடலும் ஒப்பிடுவதைப் பார்க்கலாம்.

கோடல் குவி முகை அங்கை அவிழ - முல் 95

கைவிரல்களை மலரின் இதழ்களுடன் ஒப்பிடுவது தமிழ்மொழியின் வழக்கம் என்றால் செடியில் பூத்த இளம் தளிர் இலைகளுடன் ஒப்பிடுவது வடமொழியின் வழக்கம் போலும். கையில் பூத்த தளிர்கள் என்ற பொருளில் கரபல்லவ என்னும் பெயரால் விரல்களைக் குறிப்பிடுகிறது வடமொழி என்று அழைக்கப்படும் செங்கிருத மொழி.

மேற்கண்ட சான்றுகளின்படி, கைவிரல்களைக் குறிப்பதான அங்கை என்னும் தமிழ்ச்சொல்லானது பிற மாநில மொழிகளில் எப்படித் திரிந்து விரல்களைக் குறிக்கப் பயன்படுகின்றது என்பதைக் கீழே பார்க்கலாம்.

அங்கை >>> அங்கு~லி >>> உங்க~லி.

சொல்வடிவம்         பேசப்படும் மொழிகள்

அங்கு~லி             மலையாளம், தெலுங்கு, இந்தி, செங்கிருதம், மராத்தி, 
                      கு~ச்^ராத்தி, வங்காளம், ஒரியா.
உங்க~லி             இந்தி, பஞ்சாபி`.

மார்பு:

கழுத்தின் கீழ் இருப்பதான அகன்ற பகுதியை மார்பு என்று அழைக்கிறோம். இப்பகுதியானது ஏனை உடல் உறுப்புக்களைக் காட்டிலும் அகலமாக இருப்பதால் இதற்கு அகலம் என்றொரு பெயருண்டு. மார், மார்பு, மார்புக்கூடு, நெஞ்சு, நெஞ்சுக்கூடு, முலை ஆகியவை இப் பகுதியைக் குறிக்கும் பிற பெயர்களாகும். இத் தமிழ்ப்பெயர்கள் பிற மாநில மொழிகளில் எவ்வாறு திரிந்து இவ் உறுப்பினைக் குறிக்கப் பயன்படுகின்றன என்பதைக் கீழே காணலாம். 

மார்பு >>> மார் - மலையாளம்
நெஞ்சு >>> நெஞ்சு - மலையாளம்
முலை >>> முல - மலையாளம்; மொலெ - கன்னடம்
அகலம் >>> கொல - செங்கிருதம்

தமிழில் உறை என்ற பழஞ்சொல்லுண்டு. இச்சொல்லுக்குப் பல பொருட்களைத் தமிழ் அகராதிகள் கொடுத்தாலும் அவற்றில் கூடு, இருப்பிடம் ஆகிய பொருட்கள் குறிப்பிடத்தக்கவை. நம் உடலில் உயிர் உறைகின்ற இடமாகக் கருதப்படுவது இந்த மார்புப் பகுதியே ஆகும். இப் பகுதியில் தான் உயிர்த்துடிப்புக்குக் காரணமான இதயம் இருக்கின்றது. அதுமட்டுமின்றி, இந்த இதயமானது ஒரு கூட்டுக்குள் இருப்பதைப்போல மிகவும் பாதுகாப்பாக அமைந்துள்ளது. எனவேதான் உயிர் வாழும் கூடு அல்லது இருப்பிடமாகிய மார்புப் பகுதியினை உறை என்ற சொல்லால் குறித்தனர். உயிருக்குயிராகக் காதலிக்கும் காதலர்கள் உடலளவில் தமது வீடுகளில் தனித்தனியே வாழ்ந்தாலும் உயிரளவில் ஒன்றாக வாழ்வது இந்த நெஞ்சாங்கூடுகளில் தான். இப்படி பிறரது நெஞ்சங்களில் வாழும் காதலரை 'உறைநர்' என்ற சொல்லால் இலக்கியங்கள் பல பாடல்களில் குறிப்பிடுகின்றன. அவற்றில் சில பாடல்கள் மட்டும் கீழே சான்றாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

நின் நயந்து உறைநர்க்கும் நீ நயந்து உறைநர்க்கும் - புறம் 163
நலம் துறந்து உறைநர் சென்ற ஆறே - அகம் 67

தமிழில் மட்டுமின்றி, மார்பினைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லான செச்`ட் என்பதற்குக் கூட பெட்டி, கூடு போன்ற பொருட்களும் உண்டு. இப்படியாகத், தமிழில் நெஞ்சுக்கூட்டினையும் குறிப்பதான உறை என்னும் சொல்லானது பிற மாநில மொழிகளில் எவ்வாறு திரிந்து வழங்கப்படுகின்றது என்பதைக் கீழே காணலாம்.

உறை (உறய்) >>> உறச்`, உற - இந்தி, செங்கிருதம், மராத்தி, கு~ச்^ராத்தி, வங்காளம்.

உயிர் உறையும் இடம் மார்புப் பகுதி என்று மேலே கண்டோம். இந்த உயிர் இருந்தால்தான் வாழவே முடியும். ஆக, ஒருவரின் இருப்பு என்பதே உயிர் சார்ந்த ஒன்று என்ற நிலையில், உயிர் வாழ்தல் என்னும் பொருளைத் தருவதான பல்வேறு தமிழ்ச் சொற்கள் எப்படியெல்லாம் திரிந்து உயிர் வாழும் இடமான மார்பினைக் குறிப்பதற்குப் பிற மாநில மொழிகளில் பயன்படுகின்றன என்பதையும் கீழே பார்க்கலாம்.

உறைதல் >>> உறச்`, உற
இருத்தல் >>> இருத`ய் >>> இருத`யம் >>> இத`யம் >>> எதெ'
இருத்தல் >>> க்`ருத` >>> க்`ருத`ய >>> க்ரோத`
இருத்தல் >>> ரொம்மு
வதிதல் >>> வத்ச` >>> வக்ச`

சொல்வடிவம்         பேசப்படும் மொழிகள்

உறச்`, உற            இந்தி, செங்கிருதம், மராத்தி, கு~ச்^ராத்தி, வங்காளம்.
க்`ருத`ய               இந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு, செங்கிருதம், 
                      மராத்தி, கு~ச்^ராத்தி, வங்காளம், ஒரியா.
இருத`யம்             மலையாளம், கன்னடம்
எதெ'                  கன்னடம்
ரொம்மு               தெலுங்கு
க்ரோத`               செங்கிருதம்
வத்ச`, வக்ச`          செங்கிருதம், இந்தி, மராத்தி, கு~ச்^ராத்தி.                 

சங்கத் தமிழில் குய் என்ற சொல்லுண்டு. இச்சொல்லுக்குப் பல பொருட்களைக் கூறிய தமிழ் அகராதிகள் அடுப்பு என்னும் பொருளைக் கூறத் தவறிவிட்டன. குய் என்னும் சொல்லுக்கு அடுப்பு என்னும் பொருளுமுண்டு என்பதைக் கீழ்க்காணும் சங்கப் பாடல்வரிகளில் இருந்து அறிந்துகொள்ளலாம்.

குரூஉ குய்ப்புகை மழை மங்குலின் - மது 757
குவளை உண்கண் குய்ப்புகை கழும - குறு 167

மேற்பாடல்களில் வரும் குய் என்பது அடுப்பினையும் குய்ப்புகை என்பது சமைக்கும்போது அடுப்பிலிருந்து தோன்றுகின்ற புகையினையும் குறித்து வந்துள்ளது. பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட மண்ணாலான அடுப்பின் மேல்பகுதியில் மூன்று கூடுகள் இருக்கும். அடுப்புக்கூடு என்று அழைக்கப்படும் இது உருண்டையாகக் குவிந்து இருக்கும். இப்பகுதியின்மேல் தான் பாத்திரங்களை வைத்துச் சமைப்பர். இந்த அடுப்புக்கூடு பகுதியானது பார்ப்பதற்குக் குவிந்த மார்புகளைப் போலவே தோன்றியதால் குவிந்த மார்புகளையும் குயம் என்ற சொல்லால் குறித்தனர். கீழ்க்காணும் அகப்பாடலில் வரும் குயம் என்பது ஆண்களின் குவிந்த மார்பினைக் குறித்து வந்துள்ளது.

குயம் மண்டு ஆகம் செம் சாந்து நீவி - அகம் 48.

குய், குயம் ஆகிய தமிழ்ச்சொற்கள் எப்படித் திரிந்து பிற மொழிகளில் மார்பினைக் குறிக்கப் பயன்படுகின்றது என்பதைக் கீழே காணலாம்.

குய் >>> குயம் >>> குச - இந்தி, செங்கிருதம்.

சங்ககாலத்தில் ஆண்கள் தமது திறந்த அகன்ற மார்புகளின்மேல் குளிர்ச்சிக்காகவும் நறுமணத்திற்காகவும் அழகுக்காகவும் சந்தனம் முதலான நறுமணப் பொருட்களைச் சாந்தாகக் குழைத்துப் பூசியிருப்பார்கள். ஆண்கள் தமது மார்புகளின்மேல் இவ்வாறு செய்வதைப் போலச் சங்ககாலப் பெண்கள் தமது கண்களின்மேல் இமைகளில் சந்தனம் முதலானவற்றைப் பூசி அழகுசெய்வர். சங்ககால ஆண்மக்கள் தம் மார்பில் சாந்து / சந்தனம் பூசியதைப்பற்றி ஏராளமான பாடல்களில் புலவர்கள் பதிவுசெய்து வைத்துள்ளனர். அவற்றில் சிலவற்றை மட்டும் கீழே காணலாம்.

மலை செம் சாந்தின் ஆர மார்பினன் - குறு 321
குயம் மண்டு ஆகம் செம் சாந்து நீவி - அகம் 48.
தேம் கமழ் அகலத்து புலர்ந்த சாந்தின் - அகம் 36

ஆண்கள் தம் மார்பில் சந்தனம் பூசிக்கொள்ளும் பழக்கம் இன்றும் கூட உண்டு. 'ஊர்ல கல்யாணம்; மார்ல சந்தனம்' என்ற சொல்வழக்கு இதன் அடிப்படையில் எழுந்ததே. ஆண்களின் திறந்த மார்பில் எப்போதும் சந்தனம் இருப்பதால், மார்புடன் நெருங்கிய தொடர்புடையது என்றாகிப்போன சந்தனம், சாந்து ஆகிய தமிழ்ச்சொற்கள் பிற மொழிகளில் சற்றே திரிந்து மார்பினைக் குறிக்கப் பயன்படுத்தப் படுவதைக் கீழே பார்க்கலாம்.

சாந்து >>> சாதி - தெலுங்கு, இந்தி, மராத்தி, கு~ச்^ராத்தி, வங்காளம், பஞ்சாபி, ஒரியா.
சந்தன >>> ச்`தன - மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, செங்கிருதம், வங்காளம், ஒரியா.

முடிவுரை:

3500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சங்கத் தமிழர்கள் பயன்படுத்திய பரந்துபட்ட சொல்வளமானது எப்படியெல்லாம் இந்தியாவின் பிற மாநில மக்கள் பேசும் மொழிகளில் புகுந்து திரிபுற்று அதே பொருளில் வழங்கப்படுகின்றது என்பதை அறியும்போதெல்லாம் பெரும்வியப்பு மேலிடாமல் இருப்பதில்லை. தமிழ் அகராதிகள் மட்டும் ஒவ்வொரு சங்கத் தமிழ்ச்சொல்லுக்கும் உண்டான அனைத்துப்பொருட்களையும் சரியாகக் காட்டியிருந்தன என்றால் தமிழுடன் பிறமொழிகள் கொண்ட தொடர்பினை முன்கூட்டியே அறிந்து உலகோர்க்கு அறிவித்திருக்க முடியும்; ஒவ்வொரு தமிழரும் 'தமிழன்டா' என்ற பெருமையுடன் தலைநிமிர்ந்து நடந்திருக்க முடியும். கவலற்க, அப்படி நடக்கக்கூடிய நாள் வெகுதொலைவில் இல்லை; விரைவில் வரும்.!

................. தொடரும் ............


2 கருத்துகள்:

  1. வியப்பினைத்தருகின்ற செய்திகளை இப்பதிவு மூலமாக அறிந்தேன். நன்றி.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.