ஞாயிறு, 16 டிசம்பர், 2018

தமிழர்கள் குழந்தைகளுக்குத் தமிழ்ப்பெயர்களை ஏன் சூட்டுவதில்லை?. - காரணங்களும் மாற்றுவழிகளும்

முன்னுரை:

தமிழகத்தில் குழந்தைகளுக்குச் சூட்டப்பட்டு வரும் பெயர்கள் தமிழக அரசுக்கும் தமிழ் ஆர்வலர்களுக்கும் பெரிதும் கவலை அளிப்பதாகவே பல்லாண்டு காலமாக இருந்து வருகிறது. தாய்மொழியின்மீது சிறிதும் பற்றில்லாத பல தமிழர்கள் தங்கள் இல்லத்திலும் மருங்கிலிலும் (அலுவலகம்) தமிழில் பேசுவதைத் தவிர்த்து ஆங்கிலம் கலந்து பேசுவதையே பெருமையாகக் கருதுகின்றனர். இவர்கள் தங்கள் குழந்தைகளுக்கும் தமிழில் பெயர் சூட்ட விரும்புவதில்லை. ஆண் குழந்தையாக இருந்தாலும் சரி பெண் குழந்தையாக இருந்தாலும் சரி, பெரும்பான்மையோர் வடமொழிப் பெயர்களையே தங்கள் குழந்தைகளுக்குச் சூட்டி வருகின்றனர். ஏறத்தாழ அரைநூற்றாண்டுக்கு மேலும் பின்பற்றப்பட்டு வரும் இப்போக்கிற்கு அடிப்படைக் காரணம் என்ன என்பதைப் பற்றியும் இப்போக்கை மாற்றித் தமிழக மக்கள் தங்கள் குழந்தைகளுக்குத் தமிழ்ப் பெயர்களைச் சூட்டுவதற்கு என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கலாம் என்பதைப் பற்றியும் இக்கட்டுரையில் ஆராயலாம்.

தமிழ்ப்பெயர்களைச் சூட்டாதது ஏன்?:

தமிழக மக்கள் தங்கள் குழந்தைகளுக்குத் தமிழ்ப் பெயர்களைச் சூட்டாமல் தயக்கம் காட்டுவதற்குப் பல காரணங்கள் இருந்தாலும் அவற்றில் முதன்மைக் காரணமாகத் தமிழ்ப் பெயர்களின் நீளம் மற்றும் அமைப்பினைச் சொல்லலாம். வடமொழிப் பெயர்ச் சொற்களோடு ஒப்பிடுகையில் பல தமிழ்ப்பெயர்கள் நீளமாக இருக்கின்றன. சான்றாக திருநிறைச்செல்வி என்ற பெயரை எடுத்துக் கொள்ளலாம். இது மிக அழகான தமிழ்ப்பெயர் தான். ஆனால் இதன் நீளமே இதன் பயன்பாட்டுக்கான தடையாக அமைந்துவிடுவதால் மக்கள் இப்பெயரைச் சூட்டத் தயங்குகின்றனர். இதே பொருளைத் தருவதான வசுமதி என்னும் வடமொழிப் பெயர் ஒன்று இருக்கிறது. இப்பெயரில் உள்ள எழுத்துச் சுருக்கத்தின் காரணமாக வசுமதி என்ற பெயரையே மக்கள் பெரும்பாலும் சூட்டுகின்றனர். வசுமதி என்று பெயர் வைத்த பின்னரும் அதைக்கூட முழுமையாகக் கூப்பிடாமல் வசு என்று இன்னும் சுருக்கி அழைக்கின்றனர். நீட்டி முழக்கிப் பேசாமல் மிகச்சிறிய சொற்களைப் பயன்படுத்துவதையே மக்கள் பெரிதும் விரும்புகின்றனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.

தமிழ்ப்பெயர்களைச் சூட்ட விரும்பாததற்கு இரண்டாவது காரணமாக புதுமையைச் சொல்லலாம். தற்கால மக்கள் ஒவ்வொன்றிலும் புதுமையினை விரும்புகின்றனர். தங்கள் குழந்தைகளின் பெயர் சற்றே வித்தியாசமாக புதுமையாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். தமிழ்ப் பெயர்கள் என்றாலே பெரும்பாலும் கடவுளர் பெயர்கள் தான் இருக்கும் என்றும் அதில் புதுமையாக சூட்டுவதற்கு எதுவும் இல்லை என்றும் நினைக்கின்றனர். காலந்தோறும் புதுமையான அதேசமயம் சுருக்கமான தமிழ்ப்பெயர்களை உருவாக்கத் தவறியதால், பொருள் புரிகிறதோ இல்லையோ புதுமையாகவும் சுருக்கமாகவும் தோன்றிய காரணங்களுக்காக வடமொழிப் பெயர்களுக்கு மாறி அவற்றையே தொடர்ந்து சூட்டி வருகின்றனர். 

தமிழர்கள் வடமொழிப் பெயர்களைச் சூட்டுவதற்கு மூன்றாவது காரணமாகக் கணிகத்தைக் (சோதிடம்) கூறலாம். படித்தவர்கள், படிக்காதவர்கள் என்ற பாகுபாடின்றி கணிகத்தின்மேல் பலரும் நம்பிக்கை வைத்து அதன்வழிச் செயல்பட்டு வருகின்றனர். குழந்தை பிறந்ததும் அதற்கான கணிகத்தைக் கணித்து வாங்குவதற்கு மக்கள் கணிகர்களை நாடுகின்றனர். கணிகர்களும் குழந்தை பிறந்த நேரத்தினை அடிப்படையாகக் கொண்டு இன்ன எழுத்தை முதலாகக் கொண்டு குழந்தைக்குப் பெயர் வைத்தால்தான் குழந்தையின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்று கூறி தமிழில் முதலில் வராத எழுத்துக்களான ல, ர, ட, ய, போன்ற பல எழுத்துக்களையும் பரிந்துரை செய்கின்றனர். கணிகர்களின் பேச்சை நம்பும் மக்களும் அப்படியே செய்கின்றனர். ல, ர, ய, போன்ற எழுத்துக்களில் தமிழ்ச் சொற்கள் தொடங்குவதில்லை என்பதால் வேறுவழியின்றி வடமொழிச் சொற்களைப் பெயர்களாகச் சூட்டுகின்றனர்.

தமிழில் புதுமைப்பெயர்கள் சாத்தியமா?:

தமிழில் புதுமையான சுருக்கமான பெயர்கள் இல்லாததால் மக்கள் வடமொழிப் பெயர்களையே பெரிதும் விரும்பிச் சூட்டுகின்றனர் என்று மேலே கண்டோம். என்றால், தமிழ்மொழியில் புதுமையான பெயர்களைப் படைக்க முடியாதா? அவற்றைப் படைப்பதற்கான வழிமுறையே இல்லையா? என்ற கேள்வி எழலாம். இக்கேள்விகளுக்கான விடை: இருக்கிறது என்பதுதான். இப்புதிய வழிமுறையின் பெயர் திருச்சங்கம் ஆகும். இப்புதிய முறையினைப் பற்றிக் கீழே விரிவாகக் காணலாம்.

திருச்சங்க முறை:

திருத்தப்பட்ட சங்கஇலக்கியச்சொல் என்பதன் சுருக்கமே திருச்சங்கம் என்பதாகும். அதுமட்டுமின்றி, திரு என்னும் தமிழ்ச்சொல்லுக்கு அழகு, ஒளி, செல்வம், அறிவு என்றெல்லாம் பொருட்கள் உண்டு. இவை அனைத்தையும் கொண்ட சங்கத் தமிழ்ப்பெயர்கள் என்றும் பொருள் கொள்ளலாம். சங்க இலக்கியங்களில் பயிலப்பட்ட பலவகையான தமிழ்ச்சொற்களைத் தமிழ் இலக்கண முறைப்படி திருத்திப் புதுமையாக்கித் தருவதே திருச்சங்க முறையாகும். இம்முறைப்படி சங்கத் தமிழ்ப் பெயர்களானவை அசைச்சொற்களை விகுதிகளாக ஏற்றுப் புதுமையாக்கம் பெறும். சங்கத் தமிழ்ப் பெயர்களின் புதுமையாக்கத்திற்கு அசைச்சொற்களே பெரிதும் உதவுவதால் அசைச்சொற்களைப் பற்றிக் கொஞ்சம் விளக்கமாகக் காணலாம்.

அசைச்சொல் வகைகள்:


அசைச்சொல் என்பது இடைச்சொல்லின் ஒருவகையே ஆகும். இது தனியாகப் பொருள் உணர்த்தாமல் பெயர்ச் சொல்லோடும் வினைச்சொல்லோடும் சேர்த்துச் சொல்லப்படுவது. இது முன்னிலை அசைச்சொல், படர்க்கை அசைச்சொல் என்று பலவகைப்படும். முன்னால் உள்ளவர்களை அழைக்கும்போது பயன்படுத்துகின்ற ஒருவகையான பொருளற்ற ஒலிக்குறிப்பினை முன்னிலை அசைச்சொல் என்பர். சான்றாக, இக்காலத்தில் ஆண் நண்பர்களை அழைக்கும்போது டா என்றும் பெண் நண்பர்களை அழைக்கும்போது டி என்றும் அழைக்கின்றனர். பொருளற்ற இச்சொற்களை முன்னிலை அசைச்சொல் எனலாம். தொல்காப்பிய இலக்கண நூலானது பலவகையான அசைச்சொற்களைப் பட்டியல் இட்டுள்ளது. அவற்றில் சிலவற்றை மட்டும் கீழே காணலாம்.

ஏ, ஓ, மா, கா, மியா, இகா, அத்தை, இத்தை, மன், அந்தில், மோ, மதி, ஈ, யா, கா, சின் .....

இவைதவிர, இனி என்றொரு அசைச்சொல்லும் உண்டு. ஆனால் இது இலக்கண நூல்களில் கூறப்பட்டுள்ளதாக அறியப்படவில்லை. இனி என்னும் சொல்லை இனிமேல் என்னும் பொருள்தரும் சொல்லாகவே பெரிதும் கருதுவதால் அது பொருளற்று வரும் இடங்கள் கவனிக்கப் படவில்லை போலும். இனி என்ற சொல்லானது பொருளற்று வரும் பல சங்க இலக்கிய வரிகளில் சிலமட்டும் சான்றாகக் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

சொல் இனி மடந்தை என்றனென் அதன்_எதிர் - நற் 155
நோ இனி வாழிய நெஞ்சே மேவார் - நற் 190
கூறு இனி மடந்தை நின் கூர் எயிறு_உண்கு என - நற் 204
பெய்க இனி வாழியோ பெரு வான் யாமே - குறு 270

மேலுள்ளவைபோல பல இடங்களில் இனி என்ற சொல் பொருளற்று வருவதால் இனி என்ற சொல்லையும் முன்னிலை அசைச்சொல்லாகக் கொள்ளலாம்.

புதுமையாக்கும் முறை:

மேற்கண்ட பலவகையான அசைச்சொற்களைக் கொண்டு திருச்சங்கப் பெயர்களை அதாவது சங்கத் தமிழ்ப் பெயர்களில் இருந்து புதுமையான பெயர்களைப் படைக்கும் முறைகளைக் காணலாம். சான்றாக, பவளத்தைக் குறிப்பதான துவர் என்ற சங்கப் பெயரில் இருந்து பெண்களுக்கான புதிய பெயர்களைப் படைக்கும் முறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

துவர் + இகா = துவரிகா
துவர் + இனி = துவரினி
துவர் + மியா = துவர்மியா
துவர் + யா = துவர் + இ + யா = துவரியா
துவர் + மா = துவர் + இ + மா = துவரிமா

பெயர்ச்சொல்லோடு அசைச்சொல்லைப் புணர்த்தும்போது இடையில் அகரம், இகரம், உகரங்களைச் சேர்க்கலாம். இவை அப்பெயர்களை ஒலிப்பதில் எளிமையும் இனிமையும் கூட்டும். அதுமட்டுமின்றி, சில அசைச்சொற்களை ஒலிப்புக்கேற்ப இன்னும் சுருக்கிப் பயன்படுத்தலாம். சான்றாக,

அத்தை என்னும் அசைச்சொல்லை அதி என்றும்
இத்தை என்னும் அசைச்சொல்லை இதி என்றும் சுருக்கலாம். இவற்றைக் கீழ்க்கண்டவாறு பயன்படுத்தலாம்.

துவர் + அதி = துவரதி
துவர் + இதி = துவரிதி

ஆக, பவளத்தைக் குறிக்கின்ற துவர் என்ற ஒற்றைச் சொல்லில் இருந்தே பலவகையான அசைச்சொற்களை விகுதிகளாகச் சேர்த்துப் பலவகையான புதுமையான பெயர்களைப் படைக்கலாம். இப்பெயர்கள் புதுமையாக இருப்பதுடன் சுருக்கமான பெயர்களாகவும் இருப்பதுதான் திருச்சங்க முறையின் சிறப்பாகும்.

முடிவுரை:

உலக மாந்தர்க்கெல்லாம் பண்பாட்டைக் கற்றுக்கொடுத்த இனம் தமிழினம் என்று நாமெல்லாம் பெருமைப்பட்டுக்கொண்டு இருக்கிறோம். ஆனால், சங்ககாலப் புலவர்களும் மன்னர்களும் பல சங்கங்களை வைத்துப் போற்றி வளர்க்காமல் இருந்திருந்தால் இன்று நம்மிடையே சங்க இலக்கியமே இருந்திருக்காது. செம்மொழி என்ற சிறப்பும் நம் தமிழுக்குக் கிடைத்திருக்காது. இவ்வாறு பல்லாண்டு காலமாகத் தமிழைப் போற்றி வளர்த்து நமக்கெலாம் பெருமை தேடித்தந்த அவர்களுக்கு நாம் செய்யவேண்டிய ஒரே கைம்மாறு தமிழில் பெயர் வைத்தலும் தமிழில் பேசுதலுமே ஆகும். இவ்வாறு செய்தால் மட்டுமே அவர்கள் பேணி வளர்த்து வந்து தற்போது பெரும்பாலும் வழக்கொழிந்துவிட்ட சங்கத் தமிழை அழிவில் இருந்து காப்பாற்ற முடியும். சங்கத் தமிழ்ச் சொற்களை அழிவில் இருந்து மீட்டுப் புதுமையாக்கி மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவருவதே திருச்சங்க முறையின் நோக்கமாகும்.

சங்கத் தமிழில் புதுமையான பெயர்களைச் சூட்டும் முறைகள் மேலே காட்டப்பட்டுள்ளன. ஆண் பெயர்களுக்கென்று சில அசைச்சொற்களையும் பெண் பெயர்களுக்கென்று சில அசைச்சொற்களையும் வகுத்துப் பயன்படுத்திக் குழந்தைகள் என்றில்லாமல் யாவருமே தமது பெயர்களைத் தமிழில் சூட்டிக் கொள்ளலாம். பொதுமக்களின் பணியைக் குறைத்து, அவர்களின் நேரடிப் பயன்பாட்டிற்கு ஏதுவாக பெண்களுக்குச் சூட்டுவதற்கான 2000 ++ திருச்சங்கப் பெயர்கள் உருவாக்கப்பட்டுத் தயாராக உள்ளது. அது இக்கட்டுரையுடன் இலவச இணைப்புகளாக வெளியிடப்படுகிறது. இதைத்தொடர்ந்து ஆண்களுக்கான திருச்சங்கப் பெயர்களும் உருவாக்கி வெளியிடப்படும்.       

வேண்டுகோள்: தமிழக மக்கள் தங்களது குழந்தைகளுக்குத் தமிழில் பெயர்களைச் சூட்டுவதனை ஊக்குவிக்க, தமிழில் பெயர் வைத்தவர்களுக்கு மட்டுமே அரசு வேலையில் முன்னுரிமை என்று அரசாணை வெளியிடலாம். இதைப்பற்றித் தமிழக அரசு ஓர்ந்துசெயல்பட வேண்டும் என்ற வேண்டுகோள் முன்வைக்கப்படுகிறது.
நன்றி. வாழ்க தமிழ். !!!


9 கருத்துகள்:

  1. எடுத்துக்காட்டாக ஓரிரு பெயர்களை குறிப்பிடுங்கள் பாவா!!!

    பதிலளிநீக்கு
  2. நல்ல ஒரு பொருண்மையைப் பற்றிப் பகிர்ந்துள்ளீர்கள். அருமை.

    பதிலளிநீக்கு
  3. உங்கள் புது முயற்சிக்கு என் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.