புதன், 19 ஜூன், 2019

13 - கழுது ( சங்க இலக்கியத்தில் விலங்கியல் )


முன்னுரை:

சங்க இலக்கியத்தில் விலங்கியல் என்ற தலைப்பில் நாய், பன்றி, கழுதை, மான், கரடி உட்பட ஏராளமான விலங்குகளைப் பற்றிச் சங்ககாலத் தமிழ் இலக்கியங்களில் பதிவாகியுள்ள செய்திகளை விளக்கமாகப் பல ஆய்வுக் கட்டுரைகளில் கண்டோம். அதனைத் தொடர்ந்து கழுது என்னும் விலங்கினைப் பற்றிச் சங்க இலக்கியங்களில் பதிவாகியுள்ள பல்வேறு செய்திகளை இக் கட்டுரையில் விரிவாகக் காணலாம்.

கழுது – அகராதிகள் காட்டும் பொருட்கள்:

தமிழ் இலக்கியங்களில் வரும் கழுது என்ற சொல்லுக்கு பேய், காவல்பரண், வண்டு ஆகிய பொருட்கள் இருப்பதாகத் தமிழ் அகராதிகளில் கொடுக்கப்பட்டுள்ளன.

கழுது (p. 804) kautu கழுது kautu, n. 1. Demon; பேய்வகை. கூற்றக் கொஃறேர் கழுதொடு கொட்ப (மதுரைக். 633). 2. Elevated platform from which fields are guarded against damage from beasts and birds; காவற்பரண். சேணோ னிழைத்த நெடுங்காற் கழுதில் (நற். 276). 3. Beetle; வண்டு. (திவா.)

கழுது – புதிய பொருள்:

கழுது என்னும் சொல்லுக்கு மேற்காணும் அகராதிப் பொருட்கள் நீங்கலாக புதிய பொருளும் இருப்பது ஆய்வில் தெரிய வந்தது. சங்க இலக்கியங்களில் வரும் கழுது என்ற சொல்லானது பெரும்பாலான இடங்களில் ஒருவகை விலங்கினையே குறித்து வந்துள்ளது. அந்த விலங்கினைக் குறிக்கும் வேறு பெயர் தமிழில் இல்லாமையால் அதன் ஆங்கிலப் பெயர் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கழுது    = இரவில் வேட்டையாடும் குட்டி விலங்குவகை 
          = டார்சி`யர் (TARSIER)

கழுது – பெயர்க் காரணம்:

இரவில் வேட்டையாடுவதற்குத் தாவித் திரியும் இந்த குட்டி விலங்கிற்குக் கழுது என்ற பெயர் ஏற்பட்ட காரணத்தைக் காணலாம்.

கழுது என்னும் சொல்லுக்குப் பேய் என்ற அகராதிப் பொருள் உண்டு என்று மேலே கண்டோம். இந்தக் குட்டி விலங்கும் கிட்டத்தட்ட ஒரு குட்டிப்பேய் / குட்டிச் சாத்தானைப் போலவே தோன்றும். அச்சம் தரக்கூடிய வகையிலான பெரிய பெரிய முட்டைக் கண்களையும் பெரிய வித்தியாசமான காதுகளையும் எலும்புக் கூடுகளின் கைகளைப் போன்ற குச்சியான நீண்ட விரல்களையும் கொண்ட இவ் விலங்கின் உருவத்தைப் பார்ப்பவருக்குக் குட்டிச்சாத்தானின் உருவம் நினைவுக்கு வருவதில் வியப்பில்லை. அதனால் தான் இவ் விலங்கிற்கு பேய் என்ற பொருளைத் தரும் கழுது என்னும் சொல்லையே பெயராகச் சூட்டினர் எனலாம். அத்துடன் நிற்காமல், குட்டிச்சாத்தான் / பேய் பயணம் செய்யும் ஊர்தியாகவும் இதனைக் கருதி கீழ்க்காணும் பாடல்களில் புலவர்கள் பாடியிருக்கின்றனர். ,

கவைத்தலை பேய்மகள் கழுது ஊர்ந்து இயங்க - பதி 13.
 
பானாள் கொண்ட கங்குல் இடையது
பேயும் அணங்கும் உருவு கொண்டு ஆய்கோல்
கூற்றக்கொல் தேர் கழுதொடு கொட்ப – மது. 631

சங்க இலக்கியத்தில் கழுது:

சங்க இலக்கியத்தில் வரும் கழுது என்னும் விலங்கானது ஆங்கிலத்தில் டார்சி`யர் என்று அழைக்கப்படுகிறது. டார்சி`டே எனும் குடும்பத்தைச் சேர்ந்த இந்தக் குட்டி விலங்கில் பல வகைகள் உண்டு. பிலிப்பைன் டார்சி`யர் என்னும் வகையைச் சேர்ந்த விலங்கானது 85 முதல் 160 மிமீ வரையிலான உயரமே கொண்டதாகும். இதன் எடையோ 80 முதல் 160 கிராமுக்குள் இருக்கும். சாம்பல் நிறம் முதல் அடர் பழுப்பு வரையிலான பல்வேறு நிறங்களில் காணப்படும் இவ் விலங்கிற்கு அதன் உயரத்தைக் காட்டிலும் மிக நீளமான வால் உண்டு. இனி, இந்த விலங்கினைப் பற்றிச் சங்கத் தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள பல்வேறு செய்திகளை இங்கே தொகுத்துக் காணலாம். 

கழுதானது ஆந்தையைப் போலவே இரவு நேரத்தில் வேட்டையாடும் ஒருவகைக் குட்டி விலங்காகும். பெரும்பாலும் ஊரடங்கிய நள்ளிரவு நேரத்திற்குப் பின்னால்தான் இது வேட்டையாடத் தொடங்குகிறது. கழுதானது ஒரு மரத்தில் இருந்து இன்னொரு மரத்திற்கு மிக எளிதாகவும் மிக வேகமாகவும் தாவும் வலிமை வாய்ந்தது. தனது இரையை இவ்வாறு மிக வேகமாகத் தாவியே பற்றி உண்கிறது. கழுதிற்கு அதன் கண்கள் மிக இன்றியமையாத சிறப்பு வாய்ந்த உறுப்பு ஆகும். கழுதைப் பார்க்கும்போது அதன் கண்களே நமக்குத் தெரியும். பார்ப்பவருக்கு அச்சம் தரும் வகையில் மிகப் பெரியதாக உருண்டை வடிவில் இருக்கும். எனவே தான் கழுதின் கண்கள் இலக்கியத்தில் குறிப்பிட்டுச் சொல்லப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, கழுது எழுப்பும் ஒலியானது கேட்பதற்கு மணியோசை போலத் தோன்றும் என்று சங்க இலக்கியம் கூறுகிறது.

கழுதின் கண்கள்:

கழுதின் கண்கள் அதன் முகத்தில் மிகப் பெரியதாக உருண்டையாக இருக்கும். அதன் மூளையைக் காட்டிலும் அதன் கண்கள் பெரிதாக இருக்கும். ஒவ்வொரு கண்ணும் ஏறத்தாழ 16 மிமீ விட்டம் கொண்டவை. இதன் கண்களில் ஒளியைப் பிரதிபலிக்கும் படலம் இல்லை என்றாலும் இரவு நேரத்தில் மிகக் குறைந்த வெளிச்சத்தில் கூட இதனால் தனது இரையினைப் பார்க்க முடியும். பகற்பொழுதில் இதன் கண்கள் ஒரு புள்ளி அளவுக்குச் சுருங்கிவிடும். இதன் கண்களைச் சுழற்ற முடியாது என்றாலும் தனது இரையைப் பார்க்க இது தனது கழுத்தை அரைவட்டமாகக் கூடத் திருப்ப முடியும் என்று விக்கிபீடி`யா கூறுகிறது. கழுதின் கண்களைப் பற்றிச் சங்க இலக்கியங்கள் கூறுவதைப் பார்க்கலாம்.

பொழுதும் எல்லின்று பெயலும் ஓவாது
கழுது கண் பனிப்ப வீசும் அதன்_தலை – குறு. 161

இரவுப் பொழுதாகியும் மழையானது தொடர்ந்து பெய்ததினாலும் வீசிய குளிர்காற்றினாலும் கழுதின் மிகப் பெரிய கண்கள் நடுங்கியதாக மேற்பாடல் கூறுகிறது. பனிக்காற்றினால் கழுது நடுங்கியது என்று கூறாமல் கழுதின் கண்கள் நடுங்கின என்று இலக்கியம் கூறுவதில் இருந்து கழுதிற்கு அதன் கண்கள் எவ்வளவு இன்றியமையாத குறிப்பிட்டுச் சொல்லத்தக்க உறுப்பு என்பதை அறிந்து கொள்ளலாம்.

கழுதின் ஓசை:

இரவு நேரங்களில் கழுதுகள் எழுப்பும் ஓசையானது பெரும்பாலும் நிவச்சீர் (அல்ட்ரா சோனிக்) ஒலிவகையைச் சேர்ந்த்தாகும். தங்களது ஓசையை பிற வேட்டையாடும் விலங்குகளும் பறவைகளும் கேட்டுவிடாதிருக்க, இத்தகைய ஓசையினை எழுப்பும். தகவல் பரிமாற்றம், அழைப்பு போன்றவற்றுக்கு இதனைப் பயன்படுத்தும். நிவச்சீர் ஒலியை மட்டுமின்றி, மனிதர்கள் தெளிவாகக் கேட்கக்கூடிய அளவிலும் சில நேரங்களில் ஒலியெழுப்பும். கழுதின் ஓசை குறித்துச் சங்க இலக்கியங்கள் கூறும் செய்திகளைப் பார்க்கலாம்.

… வினை பூண் தெண் மணி வீழ்ந்தன நிகர்ப்ப
கழுது கால்கொள்ளும் பொழுது கொள் பானாள் – நற். 171
 
இரவு நேரத்தில் கழுது எழுப்பிய ஓசையானது கேட்பதற்குத் தெளிவான 
மணியோசையைப் போன்று இருந்தது என்று மேற்பாடல் கூறுகிறது. 
கழுது எழுப்பும் மணி ஓசையினைக் கொடுக்கப்பட்டுள்ள யூடியூப் இணைப்பில் 
கேட்டுப் புரிந்து கொள்ளலாம்.  

கழுது தாவுதல்:

கழுதானது ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு மிக வேகமாகத் தாவும் வலிமை வாய்ந்தது. மரத்தின் ஒரு கிளையில் இருந்து இன்னொரு கிளைக்குத் தனது உடல் அளவைக் காட்டிலும் 40 மடங்கு தூரத்தைத் தாவிக் கடக்க வல்லது. தாவுவதற்கு ஏதுவாக இதன் பின்னங்கால்கள் மிக நீளமாக இருக்கும். மிக நீளமான இதன் பின்னங்கால்களே இவ் விலங்கிற்கு டார்சி`யர் என்ற பெயரைப் பெற்றுத் தந்திருக்கிறது.

இதனுடைய கால்விரல்களும் மரக்கிளைகளை இறுகப் பற்றிக் கொள்ளும் விதத்தில் அமைந்துள்ளன. மிக நீளமாகவும் சதைப்பற்றில்லாத எலும்புக் குச்சிகளைப் போலவும் தோன்றும் இதன் விரல்களின் நுனியில் மட்டும் உருண்டையாக இருக்கும். கழுது தாவுதலைப் பற்றிச் சங்க இலக்கியங்கள் கூறுவதைப் பார்க்கலாம்.

கழுது கால்கொள்ளும் பொழுது கொள் பானாள் - நற் 171
கழுது கால்கிளர ஊர் மடிந்தன்றே - நற் 255

மேற்காணும் பாடல்களில் வரும் கால்கிளர்தல், கால்கொள்ளுதல் ஆகிய சொற்கள் தாவுதல் வினையைக் குறிப்பதாகும். ஊரடங்கிய நள்ளிரவுப் பொழுதில் கழுதுகள் மரத்திற்கு மரம் தாவித்தாவி இரையை வேட்டையாடும். 

கழுது வேட்டையாடுதல்:

ஆந்தையைப் போலவே கழுதானது இரவு நேரத்தில் வேட்டையாடும் இயல்பு உடையது. கழுது இரவில் வேட்டையாடுவதற்கு அதன் பெரிய கண்களும் நீண்ட பின்னங்கால்களும் எலும்புக்குச்சி போன்ற விரல்களும் பெரிதும் உதவி செய்கின்றன. இரைகள் எழுப்பும் மிகச் சிறிய ஒலியைக் கேட்பதற்கு ஏதுவாக கழுதின் காதுகள் அமைந்துள்ளன.

பூச்சிகள், எலிகள், சிறிய பறவைகள் ஆகியவற்றை கழுதுகள் வேட்டையாடி உண்ணும். இரையினை நோக்கி மிக வேகமாகப் பாய்ந்து தனது விரல்களால் இறுகப் பற்றி நெருக்கிக் கொல்லும். இதன் கூரிய பற்கள் இரையைக் கிழித்து உண்ண உதவி செய்கின்றன. இவை ஒருபோதும் தாவர உணவுகளை உண்பதில்லை என்று விக்கிபீடி`யா கூறுகிறது. கழுதுகள் வேட்டையாடி உண்பதைப் பற்றிச் சங்க இலக்கியங்கள் கூறும் செய்திகளைப் பார்க்கலாம்.

அவிர் தொடி கொட்ப கழுது புகவு அயர - ஐங் 314

மேற்பாடலில் வரும் அவிர்தொடி என்பது மின்மினிப் பூச்சிகளைக் குறிக்கும். மின்மினிப் பூச்சிகள் அங்குமிங்கும் பறந்து திரிய, கழுதுகள் அவற்றைப் பாய்ந்து வேட்டையாடி உண்டன என்று மேற்பாடல் கூறுகிறது. பொதுவாக, தொடி என்பது பொன்போல ஒளிரக்கூடிய வளையல்கள், பூண்கள், கண்மைப் பூச்சுக்களைக் குறிப்பதாகும். இப்பாடலில் கொட்ப என்று வருவதால் அது இரவில் ஒளிர்ந்து திரியக்கூடிய மின்மினிப் பூச்சிகளைக் குறிப்பதாயிற்று.

கழுதும் ஆந்தையும்:

கழுதும் ஆந்தையும் இரவில் வேட்டையாடும் தன்மை கொண்டவை. இவற்றில் ஆந்தையானது கழுதைக் காட்டிலும் மிகப்பெரிய பறவையாகும். கழுதானது ஆந்தையைக் காட்டிலும் மிகச் சிறிய விலங்காகும். அதுமட்டுமின்றி, இவை இரண்டும் இரவில் வேட்டையாடும்போது பல நேரங்களில் கழுதுகள் ஆந்தைகளிடம் சிக்கி வேட்டையாடப் பட்டுவிடும். ஆந்தைகள் கழுதுகளை வேட்டையாடும் என்று விக்கிபீடி`யாவும் கூறுகிறது.  கழுதுகளும் ஆந்தைகளும் இரவில் வேட்டையாடுவதைப் பற்றிச் சங்க இலக்கியங்கள் கூறுவதைப் பார்க்கலாம்.

இல் எலி வல்சி வல் வாய் கூகை
கழுது வழங்கு யாமத்து அழி_தக குழறும் – அகம். 122
 
முது மரத்து உறையும் முரவு வாய் முதுபுள்
கதுமென குழறும் கழுது வழங்கு அரைநாள் – அகம். 260
 
மேற்காணும் இரண்டு பாடல்களும் இரவு நேரத்தில் கழுதும் ஆந்தையும் 
சுற்றித் திரிந்ததைப் பற்றிக் கூறுகின்றன. இப்பாடல்களில் வரும் கூகை, முதுபுள் 
ஆகியவை ஆந்தையைக் குறிப்பனவாகும். கழுதுகளைக் கண்டதும் ஆந்தையானது
அலறல் ஓசையை எழுப்பியவண்ணம் அவற்றைத் துரத்தி வேட்டையாடும் 
என்று இப்பாடல்களின் வழி புரிந்துகொள்ள முடிகிறது. 
 
முடிவுரை:
 
சங்ககாலத் தமிழகத்தில் கழுதுகள் வாழ்ந்திருந்த செய்திகளை மேற்காணும் 
பாடல்களின் வழியாக அறிந்து கொண்டோம். தற்போது இந்தியாவில் இருந்து 
முற்றிலும் அழிந்துபோய் விட்ட இந்தத் தொன்மிகளின் (PRIMATES) பல வகைகள் 
வேகமாக உலகில் இருந்தே அழிந்து வரும் செய்தியை இணையத்தின் மூலம் 
அறிந்துகொள்ள முடிகிறது. இறுதியாக, கீழ்க்காணும் புறநானூற்றுப் பாடலில் 
வரும் கழுது என்னும் சொல்லானது பாடபேதம் என்று தெரிகிறது. 
 
கண நரியோடு கழுது களம் படுப்ப - புறம் 369

மேற்காணும் பாடலில் கழுகு என்று வருவதே சரியாகும். காரணம், கழுகுகளும் நரிகளுமே பிணங்களைக் கூடித் தின்னும் இயல்புடையவை. எனவே, இக் கட்டுரையில் நாம் இதுவரை கண்ட கழுது என்னும் விலங்கிற்கும் இப் பாடலுக்கும் ஒரு தொடர்புமில்லை. 

=================== முற்றும் =============

3 கருத்துகள்:

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.