திங்கள், 15 ஜூலை, 2019

அஞ்சில் என்றால் என்ன ? (அஞ்சலையும் அஞ்சனமும்)


முன்னுரை:

வானில் தோன்றும் கோலம் அதுவோர் அழகல்ல - புதுத்
தேனில் ஊறும் கனிகள் அவையும் இனிப்பல்ல

நினைவில் தோன்றிடும் நாவில் ஊறிடும்
இனிப்பானது அழகானது உயிர்மூச்சது தமிழ்தானது

.. என்று தமிழ்மொழியின் இனிமை மற்றும் அழகிய தன்மையைப் பெருமைபடப் பாடுவர் புலவர். இப் பெருமைக்கு அடிப்படைக் காரணமாய் விளங்கும் சங்க இலக்கியங்கள் உண்மையில் ஒரு பெரிய சொற்புதையல் ஆகும். இந்த இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டுள்ள பல சொற்களுக்குத் தமிழ் அகராதிகள் தவறான பொருட்களையும் குறைபாடான பொருட்களையும் கொடுத்துள்ளன. இதைப்பற்றிப் பல கட்டுரைகளில் முன்னர் பல விளக்கங்களுடன் விரிவாகக் கண்டோம். அந்த வரிசையில் இப்போது அஞ்சில் என்னும் தமிழ்ச்சொல்லும் இணைகிறது. இச்சொல்லுக்கு அகராதிகள் கூறியிருக்கும் பொருட்களையும் அவை கூறாமல் விடுத்த புதிய பொருளினையும் இக்கட்டுரையில் விளக்கமாகச் சான்றுகளுடன் காணலாம்.

தமிழ் அகராதிகள் காட்டாத புதிய பொருட்கள்:

பல தமிழ்ச்சொற்களுக்குத் தமிழ் அகராதிகள் இதுவரை காட்டாத புதிய பொருட்கள் கீழே பட்டியலாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

வ.
சொல்
அகராதிகள் காட்டும் பொருள் (கள்)
அகராதிகள் காட்டாத
எண்
புதிய பொருள் (கள் )
1
அங்கை
உள்ளங்கை
கைவிரல்கள்
2
அந்தணர்
ஒருவகைச் சாதி
உழவர்
3
அரவு
நச்சுயிரி
மேகம்
4
அல்குல்
இடை, பெண்குறி
நெற்றி
5
அலங்கு (தல்)
அசைதல்
பூ (த்தல்) ....
6
அளகம்
தலைமயிர்
கண்ணிமை
7
அறல்
நீர், கருமணல்
நத்தை, சிப்பி...
8
ஆகம்
மார்பகம், உடல்
கண், கண்ணிமை
9
ஆழி
வட்டம், சக்கரம்..
சட்டிக்கலப்பை...
10
இந்திரன்
தேவர்தலைவன்
சூரியன்
11
இறை
கடவுள், மூட்டு…
கண்ணிமை
12
எயிறு
பல், கொம்பு…
கண், கடைக்கண்
13
ஓதி
தலைமயிர்
கண்ணிமை
14
கடும்பு
சுற்றம்
வயிறு
15
கணம்
கூட்டம், திரட்சி
ஒலி
16
கதுப்பு
தலைமயிர்,கன்னம்
கண்ணிமை
17
கதுவாய்
வடுப்படுகை, குறைகை
தாடை
18
கல்(தல்)
படித்தல், கற்றல்
கூட்டொலி
19
கவரிமா
மாடு, மான் வகை
அன்னப்பறவை
20
கன்னம்
உறுப்பு, கருவி
கைப்பறை / உடுக்கை
21
குடம்பை
கூடு, முட்டை
கூண்டு
22
குய்
தாளிப்பு, புகை
அடுப்பு
23
குறங்கு
தொடை
கண்ணிமை
24
கூந்தல்
தலைமயிர்
கண்ணிமை
25
கூழை
தலைமயிர்
கண்ணிமை
26
கொங்கை
மார்பகம்
கண், கண்ணிமை
27
சிறுபுறம்
முதுகு, பிடரி
கண், கன்னம், கண்ணிமை.
28
சும்முதல்
மூச்சுவிடுதல்
ஒலித்தல்...
29
செம்பாகம்
செம்பாதி
கன்னப் பகுதி
30
செம்மை
செந்நிறம்
கருப்புநிறம்
31
தசும்பு
கலசம், மிடா…
சொம்பு
32
தாமரைக்கண்ணான்
திருமால்
சந்திரன்
33
தித்தி
தேமல்
வண்ணப்புள்ளி
34
திதலை
தேமல்
வண்ணப்புள்ளி
35
திலகம்
நெற்றிப்பொட்டு
கண்மைப்பூச்சு
36
திவவு
யாழ்நரம்புக்கட்டு
வளையம்
37
தெய்வம்
கடவுள்
பசுமாடு
38
தேவர்
கடவுள்
காளைமாடு
39
தொடி
வளையல்
கண்மை
40
தோள்
கை, புசம்…
கண், கண்ணிமை
41
நகார்
பற்கள்
கண்கள்
42
நகில்
மார்பகம்
கண், கண்ணிமை
43
நந்துதல்
கெடுதல், வளர்தல்
சிரித்தல்
44
நாள்
தினம், பகல்….
ஒளி
45
நிணம்
கொழுப்பு
வெண்ணெய்.....
46
நுகம்
நுகத்தடி
வேல், கலப்பை
47
நுசுப்பு
இடுப்பு
கண்ணிமை
48
நுதல்
நெற்றி, சொல்….
கண், கண்ணிமை
49
நூல்
இழை, புத்தகம்..
ஏர், கலப்பை
50
பசத்தல்
நிறம் மாறுதல்
அழுதல்
51
பசப்பு / பசலை
தேமல், நிறம்..
கண்ணீர்
52
பாணி
காலம்
கைப்பறை / உடுக்கை
53
பாம்பு
நச்சுயிரி
மேகம்
54
பார்ப்பான்
ஒருவகை சாதி
ஆசிரியன்
55
புகழ்
பெருமை
இரக்கம்
56
புத்தேள்
கடவுள்
ஆசிரியர், குரு
57
மருங்குல்
இடுப்பு, உடல்
கண், கண்ணிமை
58
மாமை
அழகு, நிறம்
கண்ணிமை
59
முகடு
உச்சி, தலை
தாடை
60
முகம்
தலைமுன்பகுதி
கண்
61
முச்சி
குடுமி மயிர்
கண்ணிமை
62
முயக்கம்
உடலுறவு
பார்வை, காட்சி
63
முயங்குதல்
தழுவுதல்
பார்த்தல்....
64
முலை
மார்பகம்
கண், கண்ணிமை
65
முறுவல்
சிரிப்பு, பல்…
கண்
66
மேனி
உடல்
கண், கண்ணிமை
67
வடு
கறை, அழுக்கு…
நத்தை, சிப்பி...
68
வயிறு
உடல்மையப்பகுதி
கண், கண்ணிமை
69
வளை
வளையல்
கண்மை
70
வான்பகை
பெரும்பகை
மலை
71
வித்தகன்
பேரறிவாளன்
கொடையாளன்
72
வித்து
விதை
ஈரம், நீர்
73
வேட்டல்
யாகம்வளர்த்தல்
பசியாற்றல்
74
வேள்வி
யாகம்
பசியாற்றல்
75
வேனில்
பருவகாலம்
நுங்கு, பனைமரம்

அஞ்சில் – தற்போது கூறப்படும் பொருள்:

அம், சில் ஆகிய இரண்டு சொற்களும் தனித்தனியே தமிழ் இலக்கியங்களில் பல இடங்களில் பயின்று வருவதால், அஞ்சில் என்ற சொல்லுக்குப் பொருள் காணும்போது அதனை அம், சில் என்ற இரண்டு சொற்களின் சேர்க்கையாகக் கருதிய உரையாசிரியர்கள் அச்சொல்லைப் பிரித்துக் கீழ்க்காணுமாறு பொருள் கூறுகின்றனர்.

அஞ்சில் = அம் + சில்
அம் = அழகிய, சில் = சிலவாகிய
அஞ்சில் = அழகிய சிலவாகிய

தற்காலப் பொருள் பொருந்தா சில இடங்கள்:

அஞ்சில் என்பதற்கு அழகிய சிலவாகிய என்ற பொருள் பொருந்தாத சில இலக்கிய இடங்களைக் கீழே காணலாம்.

அஞ்சில் ஓதி ஆயிழை நமக்கே - அகம் 129
அஞ்சில் ஓதி ஆய் மடத்தகையே - அகம் 365
அஞ்சில் ஓதியை வரக் கரைந்தீமே - ஐங் 391
அஞ்சில் ஓதியை உள்ளுதொறும் - ஐங் 448
அஞ்சில் ஓதி இவள் உறும் - நற் 324
அஞ்சில் ஓதி அசையல் யாவதும் - குறி 180
அழுதனள் பெயரும் அஞ்சில் ஓதி - நற் 90
அஞ்சில் ஓதி அரும் படர் உறவே - நற் 105
அஞ்சில் ஓதி என் தோழி தோள் துயில் - நற் 355
துஞ்சுதியோ மெல் அஞ்சில் ஓதி என - நற் 370
அஞ்சில் ஓதி ஆய் வளை நெகிழ - குறு 211
அஞ்சில் ஓதி அசை இயல் கொடிச்சி - குறு 214
 
மேற்பாடல்களில் அஞ்சில் என்ற சொல்லுடன் ஓதி என்ற சொல்லும் இணைந்தே
வந்துள்ளதைக் காணலாம். இந்த ஓதி என்ற சொல்லுக்குக் கூந்தல் என்ற பொருளையே
இற்றைத் தமிழ் அகராதிகள் காட்டுவதால், அஞ்சில் ஓதி என்பதற்குக் கீழ்க்காணுமாறு
பொருள் உரைக்கின்றனர் உரையாசிரியர்கள்.
 
அஞ்சில் ஓதி = அம் + சில் + ஓதி
             = அழகிய சிலவாகிய கூந்தலை உடையவள்.
 
எந்தவொரு பெண்ணுக்கும் அதிக கூந்தலே அழகு சேர்க்கும் என்பதும் அதிகமான
நீண்ட கூந்தல் இருப்பதையே எந்தவொரு பெண்ணும் விரும்புவார் என்பதும் இவ் 
உலகத்து இயற்கை என்பதனை அறிவோம். இந்நிலையில் அழகிய சிலவாகிய 
கூந்தல் என்பது பெண்ணின் இயற்கையுடன் முரணாக அமைவதை அறியலாம். 
அதாவது, ஒரு பெண்ணுக்கு இயற்கையாகக் கூந்தல் சிலவாகவே இருந்தால் அது 
ஒருபோதும் அப்பெண்ணுக்கு அழகு சேர்க்காது என்பது கண்கூடான நிலையில், 
அழகிய சிலவாகிய கூந்தல் என்னும் விளக்கத்தில் இயல்பும் பொருளும் முரண்பட்டு
நிற்பதனைத் தெற்றென விளங்கிக் கொள்ளலாம்.
 
இதிலிருந்து, மேற்பாடல்களில் வரும் அஞ்சில் என்பது அம், சில் என்ற இரண்டு 
சொற்களின் சேர்க்கையல்ல; ஒரேசொல் தான் என்பதையும் அச்சொல்லுக்கு 
அகராதிகள் காட்டாத புதிய பொருள் இருக்கவேண்டும் என்பதையும் புரிந்து 
கொள்ளலாம்.
 
அஞ்சில் – புதிய பொருள் என்ன?
 
அஞ்சில் என்னும் சொல்லுக்குத் தமிழ் அகராதிகள் காட்டாத புதிய பொருள்:
 
                         மை / கண்மை.
 
நிறுவுதல்:
 
அஞ்சில் என்னும் சொல்லுக்குக் கண்மை என்ற புதிய பொருள் எவ்வாறு பொருந்தும்
என்று விளக்கமாகப் பல சான்றுகளுடன் இங்கே காணலாம்.
 
சங்ககாலத் தமிழ்ப் பெண்கள் தமது கண்ணிமைகளுக்குக் கருமை உட்பட பல 
வண்ண மைகொண்டு பூசி அழகுசெய்வர் என்று முன்னர் ஏராளமான கட்டுரைகளில் 
பல சான்றுகளுடன் கண்டுள்ளோம். சங்க இலக்கியத்தில் பெண்களின் கண்ணிமைகளை
அளகம், ஆகம், இறை, மேனி, கூந்தல், குறங்கு உட்பட பல்வேறு பெயர்களால் 
புலவர்கள் குறிப்பிட்டுள்ளனர் என்று முன்னர் பல ஆய்வுக் கட்டுரைகளில் கண்டோம்.
அதைப்போல, ஓதி என்ற சொல்லும் பெண்களின் கண்ணிமையைக் குறிக்கும் என்று
கதுப்பு – ஓதி – நுசுப்பு என்ற நூறாவது கட்டுரையில் விளக்கமாகப் பல சான்றுகளுடன்
கண்டுள்ளோம்.
 
அக் கட்டுரையில் இருந்து, பெண்கள் தமது கண்ணிமைகள் ஆகிய ஓதியில் 
மைகொண்டு பூசி அழகுசெய்வர் என்பதனைக் காட்டும் பாடல்வரிகள் சில கீழே 
கொடுக்கப்பட்டுள்ளன.
 
மை ஈர் ஓதி பெரு மட தகையே - நற் 29
மை ஈர் ஓதி மாண் நலம் தொலைவே - நற் 57
மை ஈர் ஓதி மாஅயோள் வயின் - குறு 199
மை ஈர் ஓதி மட மொழியோயே - கலி 150
 
மேற்பாடல்களில் வரும் மை ஈர் ஓதி என்பதற்கு மை பூசிய கண்ணிமைகள் என்பதே
பொருளாகும் நிலையில், மையீரோதி என்பது அன்மொழித் தொகையாக மைபூசிய 
கண்ணிமைகளைக் கொண்ட பெண்ணைக் குறிக்கப் பல பாடல்களில் பயன்படுத்தப் 
பட்டுள்ளன. அதைப்போல, அஞ்சிலோதி என்பதும் ஒரு அன்மொழித் தொகையாகும்.
 
இக்கட்டுரையில், அஞ்சில் என்ற சொல்லுடன் இணைந்து சங்க இலக்கியத்தின் பல 
பாடல்களில் வரும் ஓதி என்ற சொல்லும் கண்ணிமை என்ற பொருளில்தான் 
வந்துள்ளது. அத்துடன், அஞ்சில் என்னும் சொல்லானது கண்மை என்ற பொருளைக் 
குறிக்க, அஞ்சில் ஓதி என்பது அன்மொழித் தொகையாக கீழ்க்காணும் புதிய விளக்கம்
பெறும்.
 
அஞ்சில் ஓதி = மைபூசிய கண்ணிமைகளைக் கொண்டவள்.
 
அஞ்சில் என்பது ஒரே சொல்லாக சங்க இலக்கியப் பாடல்களில் மட்டுமல்ல சங்க 
இலக்கியப் புலவர்களின் பெயரிலும் பயன்படுத்தப் பட்டுள்ளதை அறியமுடிகிறது. 
கீழ்க்காணும் சங்கப் புலவர்களின் பெயர்களில் அஞ்சில் உள்ளது.
 
அஞ்சில் ஆந்தையார்
அஞ்சில் அஞ்சியார்
 
இப் பெயர்களில் வரும் அஞ்சில் என்பது அவர்களது ஊரைக் குறித்து வந்திருக்கலாம்
என்று கருத முடிகிறது.
 
அஞ்சில் – சொல் திரிபுகள்:
 
அஞ்சில் என்ற அழகிய சங்கத் தமிழ்ச்சொல் இக் காலத்தில் சற்றே திரிந்து 
அஞ்சலை என்று வழங்கி வருகிறது. அதாவது,
 
அஞ்சில் + ஐ = அஞ்சிலை >>> அஞ்சலை
 
அஞ்சலை என்பது கண்மை பூசிய பெண்ணைக் குறிக்கத் தற்காலத்தில் தமிழ்ப் பேச்சு
வழக்கில் பயன்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி, அஞ்சில் என்ற சொல்லில் இருந்தே
அஞ்சன என்ற சமற்கிருதச் சொல்லும் கீழ்க்காணுமாறு பிறக்கிறது.
 
அஞ்சில் (தமிழ்) >>> அஞ்சன (சமற்கிருதம்) ( விதிஎண்கள். 23, 6 )
 
விதியெண் 23: இயமாற்று விதி  - இகரம் அகரமாக மாறுதல்.
விதியெண் 6: விகுதிமாற்று விதி – லகர விகுதி னகர விகுதியாக மாறுதல்.
 
மேற்காணும் விதிகளைப் பற்றி விளக்கமாக அறிய, சங்கத் தமிழும் சமற்கிருதமும் 
என்ற ஆய்வுக் கட்டுரைகளைப் படிக்கலாம்.
 
முடிவுரை:
 
கண்மை பூசியவள் என்ற பொருளில் அஞ்சலை என்ற தமிழ்ப்பெயர் பேச்சு வழக்கில் 
பெண்ணைக் குறிப்பதைப் போலவே, அஞ்சனா என்ற சமற்கிதப் பெயரும் கண்மை 
பூசிய பெண்ணைக் குறிக்கப் பேச்சு வழக்கில் பயன்பாட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது
.அதாவது,
 
அஞ்சில் (கண்மை) >>> அஞ்சலை (கண்மை பூசிய பெண்)
அஞ்சன (கண்மை) >>> அஞ்சனா (கண்மை பூசிய பெண்)
 
.................. தமிழ் வாழ்க ! ........................... 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.