முன்னுரை (INTRODUCTION) :
எது முதலில்
தோன்றியது?. கோழியா முட்டையா? என்பது போல பல சுவையான கருத்துரையாடல்கள் ஆண்டுதோறும்
முடிவின்றி நடைபெற்றுக் கொண்டு வருவதை நன்கு அறிவோம். இதைப்போல, எது முதலில் தோன்றியது?.
தமிழா சமற்கிருதமா? என்ற தலைப்பிலும் பன்னெடுங்காலமாக கருத்துரையாடல்கள் நடைபெற்றுக்
கொண்டுதான் இருக்கிறது. தமிழ், சமற்கிருதம் – இவை இரண்டில் சமற்கிருதமானது இறந்துபட்ட
மொழியாகக் கருதப்பட்டு வருகிறது. இந்தியாவில் வெகுசிலரே இம் மொழியைப் பேசி வருகிறார்கள்.
ஆனால், தமிழ் மொழியானது சங்ககாலத்திற்கும் வெகுமுன்பாகவே வழக்கில் இருந்து இன்றுவரை
பேசப்பட்டும் எழுதப்பட்டும் படிக்கப்பட்டும் வருகின்ற செம்மொழியாக இருக்கிறது. அதுமட்டுமின்றி,
இந்தியாவில் பேசப்படும் பிற மொழிகளில் இருக்கின்ற நூற்றுக்கும் மேற்பட்ட சொற்களுக்கான
வேர்களைத் தமிழ்மொழி கொண்டிருப்பது தற்கால மொழியியல் ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
(6)
பேச்சு வழக்கில்
இருக்கும் இந்திய மொழிகள் மட்டுமின்றி, சமற்கிருத மொழியில் இருக்கும் ஆயிரக்கணக்கான
சொற்களின் வேர்கள் கூட சங்ககாலத் தமிழில் இருப்பது ஆய்வுமுடிவில் தெரிய வந்துள்ளது
(6). இவற்றையெல்லாம் ஒப்புநோக்கும்போது, சங்ககாலத்தை ஒட்டிய காலத்தில்தான் தமிழ்ப்புலவர்கள்
ஒன்றுகூடி சமற்கிருதத்திற்கும் ஏனை இந்திய மொழிகளுக்கும் முன்னோடியான ஒரு புதுமொழியினைத்
தமிழில் இருந்து உருவாக்கி இருக்க வேண்டும் என்ற கருத்தாக்கம் பிறக்கிறது. இப்புதிய
கருத்தாக்கத்தினால் தோன்றிய மொழியே தமிக்ருதம் ( TAMIKRIT ) ஆகும்.
தமிக்ருதம்
பற்றியும் அதுசார்ந்த பிறவற்றையும் இக் கட்டுரையில் கீழ்க்காணும் தலைப்புக்களின் கீழ்
வரிசையாகக் காணலாம்.
1.
தமிக்ருதக்
கொள்கை
2.
தமிக்ருதப்
பெயர் விளக்கம்
3.
தமிக்ருத
மொழியாக்க விதிமுறைகள்
4.
தொலிந்தையும்
தொல்சமும்
5.
தொல்சமும்
தமிக்ருதமும்
6.
தமிக்ருதமும்
இந்தாரிய மொழிகளும்
7.
தமிக்ருதமும்
இந்தைமொழிகளும்
8.
சங்க
இலக்கியத்தின் காலம்
9.
தொல்காப்பியத்தின்
காலம்
10. தமிக்ருதத்தின் காலம்
1.
தமிக்ருதக்
கொள்கை ( CONCEPT OF TAMIKRIT ) :
மொழியியலில்
தமிக்ருதம் என்னும் கொள்கை புதியதாகும். இக் கொள்கையானது, தமிழ் மொழியில் இருந்து உருவான
பல மொழிகளில் இதுவரை கூறாமல் விட்டுப்போன ஒரு புதிய மொழியை அடையாளம் காட்டுகிறது. அதுமட்டுமின்றி,
தமிக்ருத கொள்கையினால் கீழ்க்காணும் நன்மைகளையும் நாம் பெறமுடிகிறது.
1.
சங்க
இலக்கியங்களின் காலத்தைக் கணிப்பதில் உதவி செய்கிறது.
2.
தமிழா,
சமற்கிருதமா – எது முதலில் தோன்றியது? என்ற கேள்விக்கான விடையினைத் தருகிறது.
3.
தற்கால
சமற்கிருத மொழியின் முன்னோடி மொழி எதுவென்று அடையாளம் காட்டுகின்றது.
4.
தொலிந்தை
மொழி மற்றும் தொல்சம் மொழி பற்றிய புதிய கருத்தாக்கத்திற்கு அடிகோலுகிறது.
5.
தொல்காப்பிய
நூல் தோன்றிய காலத்தைக் கணக்கிட உதவி செய்கிறது.
2.
தமிக்ருதப்
பெயர் விளக்கம் ( DEFINITION OF TAMIKRIT ):
தமிக்ருதம்
என்னும் சொல்லானது தமிழ், கிருதம் என்ற இரண்டு சொற்களை இணைத்து உருவாக்கப்பட்ட பெயராகும்.
இவற்றில் தமிழ் என்பது தமிழ்மொழியைக் குறிக்கும் தமிழ்ச் சொல்லாகும். கிருதம் என்பது
செய்யப்பட்டது என்னும் பொருளைத் தரும் சமற்கிருதச் சொல்லாகும்.
தமிழில்
இருந்து உருவாக்கப்பட்டது என்றால் இரண்டு தமிழ்ச் சொற்களை இணைத்து முழுமையான தமிழ்ப்பெயரைச்
சூட்டாமல் ஏன் தமிழ்ச்சொல்லையும் சமற்கிருதச் சொல்லையும் இணைத்துப் பெயர் சூட்ட வேண்டும்
? என்ற கேள்வி எழலாம். இக் கேள்விக்கான விடையைப் பார்க்கலாம்.
தமிக்ருத
மொழியானது தமிழ்ப் புலவர்களால் தமிழ்மொழியில் இருந்து உருவாக்கப்பட்டதுதான் என்றாலும்
அது தமிழ்மக்கள் ஆரியமொழிகளைப் பேசிய பிறமக்களுடன் பேசுவதற்காக உருவாக்கப்பட்ட மொழியாகும்.
இக் கருத்தினை உணர்த்துவதற்காகவே தமிழ்ச் சொல்லையும் ஆரியமொழிக் குடும்பத்தைச் சேர்ந்த
சமற்கிருதச் சொல்லையும் இணைத்து அந்தப் புதிய மொழிக்குப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
3.
தமிக்ருத
மொழியாக்க விதிமுறைகள் ( CREATION LAWS OF TAMIKRIT )
சங்ககாலத்
தமிழில் இருந்து தமிக்ருத மொழி உருவாக்கப்பட்ட முறைகளை ஆய்வு செய்ததில், இதுவரை 25
விதிமுறைகள் கண்டறியப்பட்டுள்ளன. இவ் விதிமுறைகளைப் பற்றிய விளக்கங்கள் சங்கத் தமிழும்
சமற்கிருதமும் (2) என்ற ஆய்வுக் கட்டுரைகளில் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், அவ் விதிமுறைகளின்
பெயர்கள் மட்டும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
1.
நீள்மோனை
(அ) ஆதிநீடல் விதி
2.
குறுமோனை
(அ) ஆதிகுறுகல் விதி
3.
கேழ்மோனை
(அ) முன்னொட்டு விதி
4.
மெய்யெதுகை
விதி
5.
நட்பெழுத்து
விதி
6.
விகுதிமாற்று
விதி
7.
அயமாற்று
விதி
8.
மெய்யிடை
விதி
9.
கெடுமோனை
(அ) ஆதிகெடல் விதி
10. உயிர்மாற்று விதி
11. சயழமாற்று விதி
12. சகமாற்று விதி
13. அடர்மாற்று விதி
14. வம்மோனை (அ) வகரமெய் ஏறல் விதி
15. கிரந்தமாற்று விதி
16. செகுமோனை விதி
17. செகுழ விதி
18. வல்மாற்று விதி
19. அலர்மாற்று விதி
20. பிரசமோனை விதி
21. விரிமோனை விதி
22. இயமாற்று விதி
23. ஒலிபெயர்ச்சி விதி
24. போலிமாற்று விதி
25. மெய்கெடல் விதி
4. தொலிந்தையும் தொல்சமும் (PROTO
INDO-EUROPEAN & PROTO SANSKRIT)
தொலிந்தை
என்பது தொல் இந்தோ – ஐரோப்பிய மொழி என்பதன் சுருக்கமாகும். ஆங்கிலத்தில் P. I. E. என்று
சுருக்கமாகக் கூறுவர். இட்டைட், செருமன், ஆங்கிலம், பிரஞ்சு போன்ற பல மொழிகள் அடங்கிய
இந்தை (இந்தோ – ஐரோப்பிய)க் குடும்ப மொழிகளுக்கு இடையிலான உறவினை விளக்குவதற்காகப்
புனைந்து செதுக்கப்பட்ட மொழியே தொலிந்தை மொழியாகும். அதாவது, இந்தை மொழிகள் அனைத்திற்கும்
இதுவே தாயாக இருந்து தோற்றுவித்தது என்னும் கருத்தினை உருவாக்கும் நோக்கில் இம்மொழிக்குத்
தொலிந்தை ( தொல் இந்தோ ஐரோப்பிய ) என்னும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தை மொழிக் குடும்பம்
சார்ந்த பல்வேறு மொழிகளில் உள்ள சொற்களில் இருந்து ஒன்று / இரண்டு எழுத்துக்களைத் தெரிவுசெய்து
அனைத்து சொற்களுக்கும் பொதுவாக இருக்குமாறு ஒரு சொல்லை மீட்டுருவாக்கம் செய்து செதுக்கப்பட்டதே
தொலிந்தை மொழியாகும். உண்மையில், தொலிந்தை என்பது கற்பனையான மீட்டுருவாக்க முறையில்
புனையப்பட்ட ஒரு மொழியாகும். அப்படியொரு மொழி எப்போதும் எங்கும் இருந்ததுமில்லை; எப்போதும்
யாராலும் பேசப்படவுமில்லை.
தொலிந்தை
மொழியின் இருப்பினைப் பலரும் மறுத்து ஏற்றுக்கொள்ளாத நிலையில், இந்தை மொழிகளின் தாயாகத்
தொல்சம் மொழி இருந்திருக்கலாம் என்று கருதுவாருண்டு. தொல்சம் என்பது தொல் சமற்கிருதம்
என்ற பெயரின் சுருக்கம். ஆங்கிலத்தில் PROTO SANSKRIT என்று கூறுவர். ஆனால், இந்த தொல்சம்
மொழி எப்போது எங்கிருந்து தோன்றியிருக்கக் கூடும்?. இந்தியாவுக்குள் இருந்தா?. இந்தியாவுக்கு
வெளியில் இருந்தா?. என்பதைப் போன்ற பல கேள்விகளுக்குச் சரியான விடைகளும் சான்றுகளும்
இன்மையால், தொல்சம் என்பதும் தொலிந்தை மொழியைப் போலவே கற்பனையாகக் கருதப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இக் கேள்விகள் அனைத்திற்கும் விடை பகர்வதாயும் தொல்சம் கொள்கைக்கு ஆதரவாகவும்
வீறுகொண்டு எழுந்து நிற்கிறது தமிக்ருத மொழி.
5. தொல்சமும் தமிக்ருதமும் (PROTO SANSKRIT
& TAMIKRIT ) :
இந்தை
மொழிகளின் தாயாகத் தொல்சம் என்னும் மொழி இருந்திருக்கக் கூடும் என்ற கருத்து மொழியியல்
அறிஞர்களிடம் உள்ளது என்று முன்னர் கண்டோம். அதுமட்டுமின்றி, இந்த தொல்சம் மொழியானது
இந்தியாவுக்குள் இருந்து தோன்றியதா?. வெளியில் இருந்து தோன்றியதா?. எப்போது யாரால்
தோன்றியது?. என்பதைப் போன்ற பல கேள்விகளுக்கான விடைகளை இதுவரை கண்டறிய முடியவில்லை
என்றும் முன்னர் கண்டோம். இந்த கேள்விகள் அனைத்திற்குமான ஒரே விடை: தமிக்ருதம் ஆகும்.
வரலாற்று
ஆய்வாளர்களும் மொழியியல் அறிஞர்களும் தொல்சம் என்பது எவ்வகையான மொழி என்று விடைதெரியாமல்
விழிபிதுங்கிக் கொண்டிருக்கும் மொழியே தமிக்ருத மொழியாகும். இம்மொழியே தற்கால இந்தி,
வங்காளம், மராத்தி, குசராத்தி உட்பட பல்வேறு இந்தாரிய மொழிகளுக்குச் சொல்வளம் சேர்த்து
வளர்த்து ஆளாக்கிய செவிலித் தாய்மொழி ஆகும்.
6.
தமிக்ருதமும்
இந்தாரிய மொழிகளும் ( TAMIKRIT & INDO-ARYAN LANGUAGES):
தமிக்ருத
மொழிக்கும் இந்தாரிய ( இந்தோ – ஆரிய ) மொழிகளுக்கும் இடையிலான உறவைப் பற்றிப் பார்க்கும்
முன்னர் இந்தாரிய மொழிகள் எவையெவை என்று பார்க்கலாம்.
இந்தாரிய
மொழிகள் என்பவை இந்தியாவில் பேசப்பட்ட / பேசப்படும் ஆரிய மொழிகளைக் குறிக்கும். சமற்கிருதம்,
பிராகிருதம், பாலி, காந்தாரி, இந்தி, பஞ்சாபி, வங்காளம், டோக்ரி, சிந்தி உட்பட பல்வேறு
மொழிகள் இந்தாரிய மொழிக் குடும்பத்தில் அடங்கும் என்று விக்கிபீடியா கூறுகிறது.
சங்ககாலத்திற்கும்
முன்பாகவே தமிழ் மொழியும் தமிழ் மன்னர்களும் இந்தியா முழுவதிலும் பரவி இருந்தார்கள்
என்ற கருத்தாக்கம் உறுதிசெய்யப்பட்ட ஒன்றாகும். (3, 4) தமிழ் மன்னர்கள் இந்தியாவின்
வடபகுதியில் இருந்த காலத்தில்தான் தமிழ்ப்புலவர்கள் தமிக்ருத மொழியைப் படைத்திருக்கிறார்கள்.
தமிக்ருத மொழி படைக்கப்பட்ட போது பல்வேறு இந்தாரிய மொழிகள் இந்தியாவில் பேச்சு வழக்கில்
இருந்தன. மிகமிகக் குறைந்த அளவிலான மக்களால் மட்டுமே பேசப்பட்டு வந்த இம் மொழிகளில்
மிகக் குறைந்த அளவிலான சொற்களே இருந்தன. கடினமான ஒலிப்பு முறைகளும் இலக்கண முறைகள்
ஏதுமின்றியும் இருந்த இம் மொழிகளைப் பேசிய மக்கள் தமிழர்களைக் காட்டிலும் பண்பாட்டில்
பின்தங்கியவர்களாகவே இருந்தனர்.
இந்தாரிய
மொழிகளைப் பேசிய இம் மக்களின் உதவியானது தமிழ் மன்னர்களுக்குத் தேவைப்பட்டது. தமிழ்ப்
பேரரசுகள் தென்னிந்தியாவில் இருந்து சென்று இந்தியாவின் மேற்கு, வடக்கு, கிழக்குப்
பகுதிகளையும் கைப்பற்றி ஆட்சிசெய்தபோது அப் பகுதிகளில் இருந்த மலைகள், ஆறுகள், காடுகளைப்
பற்றி நன்கு அறிந்திருந்த இம் மக்களின் உதவியானது தமிழ் மன்னர்களுக்குப் போர்க்காலங்களில்
மிகவும் தேவைப்பட்டது. இவர்களுடன் உரையாடுவதற்காக அவர்களுக்கு ஒரு பொதுமொழியின் தேவை
ஏற்பட்டது.
இந்தாரிய
மொழிச் சொற்களில் இருக்கும் ஒலி அமைப்புக்களை ஆய்வுசெய்த தமிழ்ப் புலவர்கள் தமிழ்ச்
சொற்களை அடிப்படையாகக் கொண்டு அவற்றின் ஒலிப்பு முறைகளை மட்டும் சற்றே மாற்றிப் புதுச்
சொற்களை உருவாக்க முடிவு செய்தனர். அவ்வாறு உருவாக்கப்பட்ட புது மொழியே தமிக்ருத மொழியாகும்.
7. தமிக்ருதமும் இந்தை மொழிகளும் (
TAMIKRIT & INDO EUROPEAN LANGUAGES) :
இந்தை
மொழிக் குடும்பத்தில் என்னென்ன மொழிகள் உண்டு என்று முன்னர் கண்டோம். இந்த மொழிகளைச்
சேர்ந்த பல்வேறு சொற்களின் வேர்கள் சங்கத் தமிழில் இருப்பது ஆய்வுமுடிவில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியாவில் தோன்றி வளர்ந்து பேசப்பட்டுவரும் தமிழ்மொழியின் பல வேர்ச்சொற்கள், வெளிநாடுகளில்
பேசப்படும் ஆங்கிலம், லத்தீன், கிரேக்கம் போன்ற பல மொழிகளின் சொற்களில் எவ்வாறு சென்றடைந்து
இருக்கக் கூடும்?. எப்போது சென்றிருக்கக் கூடும்?. என்ற கேள்விகள் எழுகின்றன. இக் கேள்விகளுக்கான
விடைகளை இங்கே காணலாம்.
சங்கத்
தமிழ்ப் புலவர்களால் தமிக்ருத மொழி உருவாக்கப்பட்டபோது இந்தியாவில் சமற்கிருதம் என்று
தனியாக ஒரு மொழி இல்லை. தமிக்ருதமே தொல்சம் (தொல் சமற்கிருத) மொழியாக விளங்கியது. இம்
மொழியே தற்போதைய சமற்கிருத மொழிக்குத் தாயாக இருந்ததுடன், பழங்காலத் தமிழர்களின் பிறநாடுகளுடனான
வணிகத் தொடர்புக்கும் பெரிதும் உதவியது எனலாம். பல்வேறு சங்கத் தமிழ்ச்சொற்கள் தமிக்ருத
மொழியின் வழியாக இப்படித்தான் ஆங்கிலம் உட்பட பல்வேறு இந்தை மொழிகளுக்குச் சென்று பரவியது.
அதுமட்டுமின்றி, இச்சொற்கள் எல்லாம் ஒரே காலகட்டத்தில் இந்த மொழிகளைச் சென்றடையவில்லை.
தொடர்ச்சியான வணிகத் தொடர்புகளாலும் தமிக்ருதமொழி பேசிய மக்களின் பரவலாலும் கொஞ்சம்
கொஞ்சமாகப் பிற மொழிகளைச் சென்றடைந்தது எனலாம்.
8. சங்க இலக்கியத்தின் காலம் ( SANGAM
LITERATURE ERA ) :
சங்க
இலக்கியத்தின் காலம் குறித்துப் பல முரண்பட்ட கருத்துக்கள் இருந்து வருகின்றன. சங்க
இலக்கியத்தின் காலம் கி.மு. 600 என்பாரும் கி.மு. 300 என்பாரும் உளர். இன்னும் சிலர்
சங்க இலக்கியக் காலக்கோட்டினைக் கிபிக்கும் தள்ளுவர். இத்தகைய முரண்பாடுகளைக் களைவதில்
யவனர்களைப் பற்றிய சங்க இலக்கியக் குறிப்புக்கள் நமக்குத் துணைநிற்கின்றன.
யவனர்கள்
என்பார் யார்? அவர்கள் எங்கிருந்து வந்தவர்கள்?. எங்கே வாழ்ந்தவர்கள்? போன்ற கேள்விகளுக்கான
விடைகளைச் சிந்துவெளி இருளும் இந்திய வெளிச்சமும் (1) என்ற ஆய்வுக் கட்டுரையில் மிக
விரிவாகப் பல ஆதாரங்களுடன் கண்டோம். இவர்கள் கிமு 1300 வாக்கில் இந்தியாவில் சிந்துநதி
மற்றும் யமுனை ஆற்றங்கரையில் வாழ்ந்தவர்கள் என்றும் தமிழ் மன்னர்களுடனும் மக்களுடனும்
நெருங்கிய தொடர்புடையவர்கள் என்றும் சங்க இலக்கியம் குறிப்பிடுகிறது.
கங்கை
மற்றும் யமுனை ஆற்றங்கரைளை ஒட்டி வட இந்தியாவில் கிமு 600 க்குப் பின்னால் தோன்றிய
மகாசனபதங்கள் என்று அழைக்கப்படும் 16 நாடுகளைப் பற்றிப் பழைய பௌத்த சமய நூல்கள் குறிப்பிடுகின்றன.
இவற்றில், அங்கம், கோசலை, காசி, மகதம், வச்சி, மல்ல, சேதி, வத்தம், குரு, பாஞ்சாலம்,
மத்சம், சூரசேனம், அச்மகம், அவந்தி, காந்தாரம், காம்போசம் ஆகிய நாடுகள் அடங்கும். ஆனால்
யவன நாடு பற்றிய குறிப்பு ஏதும் அந்த பௌத்த சமய நூல்களில் இல்லை. (5)
மாறாக,
சங்க இலக்கியங்கள் யவனர்களைப் பற்றிக் குறிப்பிடுகின்றன. அதே சமயத்தில், மேற்காணும்
மகாசனப்பதம் சார்ந்த நாடுகளில் ஒரு நாட்டைப் பற்றியும் சங்க இலக்கியம் குறிப்பிடவில்லை.
இதிலிருந்து, சங்க இலக்கியமானது கிமு 1300 முதல் கிமு 600 வரையிலான காலத்தில் தோன்றியிருக்கக்
கூடும் என்ற கருத்து முகிழ்க்கிறது.
இக்
காலகட்டத்திலும் சங்க இலக்கியப் பாடல்கள் ஒரே நூற்றாண்டிலோ ஒரே இடத்திலோ எழுதப்படவில்லை.
சங்கப் பாடல்கள் பலவும் தென்தமிழகத்தில் மட்டுமின்றி வட இந்தியாவில் இருந்த தொல்தமிழகத்திலும்
பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து இயற்றப் பட்டிருக்க வேண்டும் என்று சங்க இலக்கியப் பாடல்களின்
வழியாக அறிந்துகொள்ள முடிகிறது.
9. தொல்காப்பியத்தின் காலம் ( THOLKAPPIYAM
ERA ) ::
தமிழின்
முதல் இலக்கண நூலாக இன்று விளங்கக் கூடிய தொல்காப்பியத்தின் காலம் குறித்துப் பல கருத்துக்கள்
உலாவருகின்றன. தொல்காப்பியத்தின் காலத்தை கிமு 500 முதல் கிமு 300 என்பாரும் கிமு
300 க்குப் பின்னரே என்பாருமுளர். யவனர்கள் பற்றிய குறிப்புக்களைக் கொண்டு தொல்காப்பியத்தின்
காலத்தைக் கணிக்க முயலலாம்.
தொல்காப்பிய
நூலில் எழுத்து அதிகாரத்தில் மொழிமரபில் கீழ்க்காணும் நூற்பா வருகிறது.
ஆவொடு
அல்லது யகரம் முதலாது – எழுத். மொழி. 32
யகர மெய்யானது
ஆ என்னும் உயிருடன் இணைந்து யா என்று வருமே அன்றி வேறெந்த உயிருடன் புணர்ந்தும் மொழிக்கு
முதலாகாது என்பதே இப்பாவின் பொருளாகும்.
மேற்காணும்
நூற்பாவின்படி பார்த்தால், தொல்காப்பியம் எழுதப்பட்ட காலத்திலோ அதற்கு முன்போ தமிழ்
இலக்கியங்களில் யகர முதல் சொற்கள் இருந்திருக்க வில்லை என்பது தெளிவாகிறது. ஆனால்,
சங்க இலக்கியங்களில் யகர முதல் சொற்கள் பயின்று வந்துள்ளன. யமன், யவனர் ஆகிய சொற்கள்
சங்க இலக்கியங்களில் கீழ்க்காணும் பாடல்களில் வருகின்றன.
இல்ல துணைக்கு உப்பால் எய்த இறை யமன் - பரி 11
யவனர் ஓதிம விளக்கின் - பெரும் 316
வலி புணர் யாக்கை வன்கண் யவனர் - முல் 61
யவனர் இயற்றிய வினை மாண் பாவை - நெடு 101
யவனர் தந்த வினை மாண் நன் கலம் - அகம் 149
யவனர் நன் கலம் தந்த தண் கமழ் தேறல் - புறம் 56
யகர முதல்
சொற்கள் பயிலாது என்று தொல்காப்பியம் கூறியுள்ள நிலையில், யகர முதல் சொற்கள் சங்க இலக்கியத்தில்
பயின்று வந்துள்ளதைப் பார்க்கும்போது, தொல்காப்பிய நூலானது சங்க இலக்கிய காலத்திற்கும்
முந்தியதே என்பது தெளிவாகிறது. சங்க இலக்கியத்தின் காலம் கிமு 1300 முதல் கிமு 600
என்று மேலே கண்டுள்ள நிலையில், தொல்காப்பியத்தின் காலம் கிமு 1300 க்கும் முற்பட்டதாக
இருக்கவேண்டும் என்பது புலனாகிறது.
10. தமிக்ருதத்தின் காலம் (TAMIKRIT ERA) :
தமிக்ருத
மொழியானது சங்ககாலத் தமிழ்மொழியில் இருந்து தமிழ்ப் புலவர்களால் தோற்றுவிக்கப் பட்டது
என்று முன்னர் கண்டோம். ஆனால் இது எப்போது ஏன் தோற்றுவிக்கப் பட்டது என்ற கேள்விகளும்
எழாமல் இல்லை. இக் கேள்விகளுக்கான விடைகளை இங்கே பார்க்கலாம்.
சங்க
இலக்கியங்கள் வீறுகொண்டு எழுந்த கிமு 1300 – கிமு 600 வரையிலான காலகட்டத்தில்தான்,
யவனர் உட்பட பல்வேறு இந்தாரிய மொழிகளைப் பேசிவந்த பிற இந்திய மக்களுடன் தொடர்பு கொள்வதற்காகவும்
தொடர்ந்து பழகுவதற்காகவும் அப்போதைய இந்தியாவின் வடக்கு, கிழக்கு, மேற்குப் பகுதிகளை
ஆட்சிசெய்து வந்த தமிழ் மன்னர்களுக்கு ஒரு புதிய மொழியின் உதவி தேவைப்பட்டது.
இதற்காகத்
தமிழ் மன்னர்கள் விடுத்த அழைப்பின்பேரில், தென்தமிழகத்தில் இருந்து வட இந்தியாவுக்கு
கிமு 900 வாக்கில் வந்த தமிழ்ப் புலவர்கள் பலர் ஒன்றுகூடி, தமிழ்ச் சொற்களை அடிப்படையாகக்
கொண்டு இந்தாரிய மொழிகளின் பேச்சுவழக்கில் இருந்த ஒலிப்பு முறைகளுக்கேற்பப் புதிய தொடர்புமொழியை
உருவாக்க முயன்றனர். இதற்காக அம்மொழிகளைப் பேசிய மக்களுடன் நெருங்கிப் பழகி அவர்களின்
ஒலிப்பு முறைகளைப் பல ஆண்டுகளாக ஆய்ந்து சில இலக்கண விதிகளைத் தாமே வகுத்துக்கொண்டு
அதன்படி, தமிழ்ச்சொற்களில் சில மாற்றங்களைச் செய்து புதிய மொழியினைப் படைத்தனர். இப்படி
ஆய்வுசெய்து உருவாக்குவதற்குப் பல ஆண்டுகள் தேவைப்படும் என்பதால் கிமு 800 – கிமு
700 வாக்கில் தான் தமிக்ருதம் என்னும் புதிய மொழியைப் படைத்திருக்க முடியும் என்று
கருதலாம்.
இவ்வாறு
உருவாக்கப்பட்ட தமிக்ருத மொழிக்கு அப்போது எழுத்து வடிவம் எதுவும் இல்லை; அது ஒரு பேச்சுமொழியாக
மட்டுமே அப்போது இருந்தது. இத் தமிக்ருத மொழியில் இருந்தே பாலி, பிராகிருதம், சமற்கிருதம்
போன்ற பல்வேறு மொழிகள் கிளைத்தும் செழித்தும் வளரத் துவங்கின.
முடிவுரை
(CONCLUSION):
இதுவரை
கண்டவற்றில் இருந்து, தொல்காப்பியத்தின் காலம் கிமு 1300 க்கும் முற்பட்டது என்று அறியப்பட்டது.
கிமு 1300 க்கும் முன்னதாக இருந்த ஒரு எழுத்து மற்றும் பேச்சு மொழிக்கு இலக்கணம் வகுக்கப்படுகிறது
என்றால் அம்மொழியானது குறைந்தது ஓராயிரம் ஆண்டுகளேனும் மக்களால் பேசப்பட்டு வந்திருக்க
வேண்டும் அல்லவா?. அக் கணக்கின்படி பார்த்தால், தமிழ்மொழியானது கிமு 2300 க்கும் முன்னால்
இருந்தே பேச்சு வழக்கில் இருந்திருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது.
ஆனால்
தமிக்ருதம் எனப்படும் தொல்சமற்கிருத மொழியோ கிமு 800 – கிமு 700 வாக்கில் தான் சங்கப்
புலவர்களால் உருவாக்கப்படுகிறது. இதிலிருந்துதான் தற்கால சமற்கிருத மொழியே பிறக்கிறது.
அதன் பின்னரே அம்மொழியை ஆரியர்களும் பிறரும் பயின்று தமது மொழியாகப் புழங்கி இருக்க
முடியும்.
ஆக,
இதுவரை கண்ட சான்றுகள் மற்றும் கருதுகோள்களின் அடிப்படையில், இக் கட்டுரையானது கீழ்க்காண்பதை
ஆய்வுமுடிபாக முன்வைக்கிறது.
தமிழ்மொழியானது
சமற்கிருத மொழியைக் காட்டிலும் குறைந்தது 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும்.
துணைநின்ற
கட்டுரைகள் (REFERENCES):
1. சிந்துவெளி இருளும் இந்திய வெளிச்சமும்
– ஆய்வுக் கட்டுரை
2. சங்கத் தமிழும் சமற்கிருதமும் – ஆய்வுக்
கட்டுரைகள்
3. தொல்தமிழகம் – ஆய்வுக் கட்டுரைகள்
4. இமயம் வென்ற தமிழன் – ஆய்வுக் கட்டுரைகள்.
5. மகாசனப்பதம் – விக்கிபீடியா கட்டுரை
6. இந்திய மொழிகளின் தாய் தமிழே – ஆய்வுக் கட்டுரைகள்
..... தொடரும் ...
தமிக்ருதம்..இப்பொழுதுதான் கேள்விப்படுகிறேன்.
பதிலளிநீக்குஆம் ஐயா. மொழியியல் வரலாற்றில் தமிக்ருத மொழிக் கொள்கை இப்போதுதான் அறிமுகமாகிறது. இனிமேல் இது விரிவாகப் பேசப்படும்.
நீக்குநன்றி! உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்
பதிலளிநீக்கு