ஞாயிறு, 21 ஜூலை, 2019

சிந்துவெளி இருளும் இந்திய வெளிச்சமும்



சிந்துவெளி இருளும்
இந்திய வெளிச்சமும்

ஆய்வாளர்: திருத்தம் பொன். சரவணன்

முன்னுரை:

சிந்துவெளி நாகரிகம் (INDUS VALLEY CIVILIZATION) - மெசபடோமியா, சீனா போன்ற இடங்களில் தழைத்தோங்கியிருந்த, உலகின் மிகப் பழைய நாகரிகங்களையொத்த தொன்மையான ஒரு நாகரிகமாகும். இன்றைய பாகிசுத்தானிலுள்ள சிந்து நதியை அண்டித் தழைத்தோங்கியிருந்த இந்த நாகரிகம் மிகப் பரந்ததொரு பிரதேசத்தில் செல்வாக்குச் செலுத்திவந்தது. கி.மு 3300 க்கும் கி.மு 2500 க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் உச்ச நிலையிலிருந்தது இந்த நாகரிகம். இங்கு வாழ்ந்த மக்களினம் பற்றியோ, அவர்கள் பேசிய மொழிகள் பற்றியோ ஆய்வாளர்களிடையே கருத்தொற்றுமை கிடையாது. தொல்லியல் ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான முத்திரைகள் காணப்படுகின்ற நிலையிலும், அவர்களுடைய மொழியை எழுதப் பயன்படுத்திய குறியீடுகளையும் எவரும் இன்றுவரை வாசித்தறிய முடியவில்லை. (1)

கி.மு. 2500 க்குப்பின் கி.மு. 1300 க்குள் இன்னும் தெளிவாக அறியப்படாத ஏதோவொரு காரணத்தினால் சடுதியாக அழிந்து போய்விட்டது என்று வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். சிந்துவெளி நாகரிகம் எப்படி, ஏன் அழிந்து போனது?. அங்கே வாழ்ந்த மக்கள் என்ன ஆனார்கள்?. எங்கே சென்றார்கள்?. என்பதைப் போன்ற பல கேள்விகளுக்கான விடைகளைத் தக்க சான்றுகளுடன் யாரும் இதுவரை நிறுவ வில்லை. அடர்ந்த இருளாகத் தோன்றும் இறுதிக்கால சிந்துவெளியின் மீது இந்தியாவில் இருந்து பாய்ச்சப்படும் வெளிச்சம் போல மேற்காணும் பல கேள்விகளுக்கான விடைகளைப் பல ஆதாரங்களுடன் முன்வைக்கிறது இக் கட்டுரை.

சிந்துவெளி நாகரிகக் கூறுகள்:

சிந்துவெளி நாகரிகத்தின் முதன்மை இடங்களாக விளங்கிய மொகஞ்சதாரோ மற்றும் அரப்பா ஆகிய இடங்களில் நடத்திய அகழ்வாய்வுகள் மற்றும் அங்கே கிடைத்த தொல்பொருள் எச்சங்களில் இருந்து சிந்துவெளி மக்களின் பண்பாட்டுக் கூறுகள் இவையிவை என்று வரலாற்று வல்லுநர்கள் கூறுகின்றனர். (1)

1.   சிந்துவெளி மக்கள் வேளாண் தொழிலில் சிறந்து விளங்கினர். பல்வேறு தினைகளைப் பயிர் செய்தாலும் அதில் கோதுமையே முதலிடம் பெற்று விளங்கியது. இவர்களது முத்திரைகளில் அதிகமாகக் காணப்பட்ட விலங்கு காளை மாடாகும். உழவுத் தொழிலுக்குப் பெரிதும் உதவிய காளைமாட்டினை மறக்காமல் முத்திரைகள், பாண்டங்கள் முதலானவற்றில் இவர்கள் வரைந்திருந்த செயலொன்றே இவர்கள் வேளாண் மக்கள் என்று பறைசாற்றும்.

2.   சிந்துவெளியின் பெரும்பாலான நகரவாசிகள்  வணிகராகவும் சிறந்த கைவினைஞராகவும் இருந்ததாகத் தெரிகிறது. பலவிதமான முத்திரைகள், மணிகள், வளையல்கள், கிண்ணங்கள், மட்பாண்டங்கள் உட்பட பலவகைப் பொருட்கள் அகழாய்வின்போது கண்டெடுக்கப்பட்டுள்ளன.

3.   சிந்துவெளி நாகரிகத்தில் சிக்கலானதொரு உயர்நிலை நகர்சார் பண்பாடு இருந்தது. இங்கே காணப்படுகின்ற நகர அமைப்பின் தன்மை, தூய்மைக்கு முதலிடம் கொடுக்கின்ற உள்ளூராட்சி அமைப்பு மற்றும் நகரத் திட்டமிடல் தொடர்பான அறிவு இந் நாகரிக மக்களிடையே நிலவியதைக் காட்டுகின்றது. மொகஞ்சதாரோ, அரப்பா போன்ற முதன்மை நகரங்களின் தெருக்கள் முறையான வலைப்பின்னல் அமைப்பில் அமைக்கப்பட்டுள்ளன. சத்தம், கெட்டநாற்றம், கள்வர் தொல்லை போன்றவற்றிலிருந்து பாதுகாக்கும் விதத்தில் வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன.

4.   அரப்பா, மொகஞ்சதாரோ மற்றும் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட ராக்கிகர்கி ஆகியவற்றில் காணப்படுகின்ற தூய்மை அமைப்பு முறைமைகள் உலகிலேயே முதல் நகர்சார் தூய்மை அமைப்பு முறைமைகளாகும். நகரங்களில் வீடுகள் தனியாகவோ அல்லது வேறு அயல் வீடுகளுடன் கூட்டாகவோ கிணறுகளில் இருந்து நீர் பெற்றன. குளிப்பதற்குத் தனியான அறைகள் ஒதுக்கப்பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது. கழிவு நீரானது வீடுகளில் இருந்து தெருக்களில் அமைக்கப்பட்டிருந்த மூடிய கால்வாய்கள் மூலமாக வெளியேற்றப்பட்டது. வீடுகளின் வாயில்கள் உள் முற்றங்களிலோ சிறிய தெருக்களிலோதான் அமைக்கப்பட்டன.

5.   பண்டைக்காலச் சிந்து வெளியின் செல்வாக்குக்கு உட்பட்ட எல்லா நகரப் பகுதிகளிலும் காணப்பட்ட கழிவு நீரகற்றல் மற்றும் வடிகால் அமைப்பு முறைகள் சமகால மத்திய கிழக்கு நகரங்களில் காணப்பட்டவற்றிலும் திறன் மிக்கவையாக இருந்தது மட்டுமன்றித் தற்கால இந்தியாவிலும் பாகிசுத்தானிலும் உள்ள சில பகுதிகளில் காணப்படுபவற்றை விடச் சிறந்தவையாகவும் காணப்பட்டன.

6.   சிந்துவெளி நாகரிகக் கட்டிடக்கலையின் தரம் பற்றி அங்கே காணப்படுகின்ற இறங்கு தளங்கள், தானிய சேமிப்புக் கிடங்குகள், களஞ்சியத் தொகுதிகள், செங்கல் கட்டுமான மேடைகள், பாலங்கள் மற்றும் பாதுகாப்புச் சுவர்கள் போன்ற பலவிதமான அமைப்புக்கள் மூலம் அறியக்கூடியதாக உள்ளது.

7.   பெரிய அளவிலான நகர் பாதுகாப்புக் கோட்டைகள் அக்காலத்து மெசபடோமியாவில் காணப்பட்ட பெரும்பாலான சிகரெட்டு என்னும் அமைப்புக்களை விடப் பெரியவை. மெசபடோமியா, எகிப்து போன்ற இப் பண்பாட்டின் சமகாலப் பண்பாடுகளில் காணப்படுவதற்கு முரணாக இங்கே பிரம்மாண்டமான கட்டுமானச் சின்னங்கள் எதுவும் காணப்படவில்லை. இங்கே அரண்மனைகளோ கோயில்களோ இருந்ததற்கான முடிவான சான்றுகளோ அரசர், படைகள், சமயக் குருமார் போன்றவர்கள் பற்றிய தகவல்களோ எதுவும் கிடைக்கவில்லை.

8.   ஒரு நகரத்தில் பொதுக் குளியல் இடம் எனக் கருதப்படுகின்ற சிறப்பாகக் கட்டப்பட்ட குளியல் தடாகம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கோட்டைகள் மதிலால் சூழப்பட்டிருந்தபோதும் இவை பாதுகாப்புக் காரணங்களுக்காகக் கட்டப்பட்டவையா என்பதில் தெளிவு இல்லை. இவை வெள்ளநீர் உட்புகாது தடுப்பதற்காகக் கட்டப்பட்டவையாகவும் இருக்கலாம்.

சிந்துவெளியின் இறுதிக் காலம்:

ஒருகாலத்தில் தலைசிறந்த நாகரிக மக்களாக வாழ்ந்துவந்த சிந்துவெளி மக்கள் போர்க்கலையில் சிறந்தவர்களாக இருந்தார்கள் என்ற கருத்துக்கு வலுசேர்க்கும் வண்ணம் எவ்வித ஆதாரங்களும் இதுவரை கிட்டவில்லை. இதிலிருந்து இம்மக்களின் இறுதிக்காலம் பகைவர்களின் போர் அச்சுறுத்தல் மூலமாக நிகழ்ந்திருக்க வாய்ப்பு இருப்பதாகவே வரலாற்று ஆய்வாளர்கள் பெரிதும் நம்புகின்றனர். இயற்கைச் சீற்றங்கள் மற்றும் உணவு விளைச்சலில் உண்டான பெரிய மாற்றங்கள் காரணமாகவும் இம் மக்கள் இடம்பெயர்ந்து சென்றிருக்கலாம் என்றும் நம்பப் படுகிறது. (1)

சிந்துவெளி மக்களுக்கு போர் அச்சுறுத்தல் என்பது வேண்டுமென்றோ எதேச்சையாகவோ கூட நிகழ்ந்திருக்கக் கூடும். ஈரான், காபூல் போன்ற நாடுகளில் இருந்து இந்தியாவை நோக்கிப் பிறநாட்டு மன்னர்கள் படையெடுத்துவர, அவர்களது வழியில் சிந்துவெளி நகரங்கள் குறிக்கிடப்போக, அதன் காரணத்தாலும் சிந்துவெளி மக்கள் தாக்கப்பட்டு வெளியேற்றப் பட்டிருக்கலாம்.

சிந்துவெளி மக்களின் தஞ்சம்:   

இயற்கைச் சீற்றங்கள், உணவு விளைச்சல் மாற்றங்கள், போர் அச்சுறுத்தல்கள் போன்ற பல காரணங்களால் சிந்துவெளி மக்கள் மென்மெல தமது ஊர்களை விட்டு வெளியேறித் தம் ஊருக்குக் கிழக்குப் பகுதியில் இருந்த இந்தியப் பகுதிக்குள் தஞ்சம் புகலாயினர்.

அப்படி அவர்கள் இந்தியாவுக்குள் தஞ்சம் புகுந்தபோது, அவர்களுக்கு மிக அருகில் இருந்த இராசத்தான் ஒரு பாலைவனப் பகுதியானதால் அவர்களுக்குப் பயன்பட்டிருக்க வாய்ப்பில்லை. அதைத்தாண்டி இன்னும் கிழக்குநோக்கி முன்னேறிய போது முதலில் அவர்கள் அடைவது யமுனை நதியின் கிளை ஆறு ஒன்றினைத்தான். தாம் முதலில் கண்டறிந்த அந்த இந்திய ஆற்றுக்குத் தமது சொந்த ஊரில் அமைந்திருந்த சிந்து நதியின் நினைவாகச் சிந்து என்றே பெயரிட்டனர். இன்றுவரை அந்தக் கிளை ஆறானது சிந்து நதி என்றே அழைக்கப்பட்டு வருகிறது. (2)

சிந்துவெளி நாகரிகம் ஒரு ஆற்றங்கரை நாகரிகம் என்பதால் சிந்துவெளி மக்கள் தாங்கள் விரும்பித் தஞ்சம் புகுந்ததும் ஒரு வளமான ஆற்றங்கரையாக அமைந்ததில் வியப்பில்லை. காலப்போக்கில் சிந்துநதி மட்டுமின்றி அதனருகில் இருந்த பிற கிளைநதிகள் மற்றும் யமுனை நதிக் கரையிலும் தங்கள் ஊர்களை அமைத்து விரிவாக்கிக் கொண்டு வாழ்ந்தனர்.

சிந்துவெளி மக்களின் புதுப்பெயர்:

சிந்துவெளி மக்கள் மொகஞ்சதாரோ, அரப்பா முதலான ஊர்களில் வசித்தபோது அவர்கள் மற்றவர்களால் எவ்வாறு அழைக்கப்பட்டார்கள் என்பதற்கான சான்றுகள் இதுவரை கிடைக்கவில்லை. ஆனால், அவர்கள் யமுனை ஆற்றங்கரைகளில் தஞ்சம் புகுந்து வாழத் துவங்கிய பின்னால், யமுனை ஆற்றின் பெயர் அடிப்படையில் யவனர் என்று பின்னாளில் அவர்கள் அறியப்படலாயினர்.

யமுனை >>> யவனர்

யமுனை ஆற்றங்கரையில் வாழ்ந்துவந்த சிந்துவெளி மக்களை யவனர் என்ற பெயரால் தமிழ் இலக்கியங்கள் பலவும் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளன. இதைப்பற்றி விரிவாகச் சான்றுகளுடன் காணலாம்.
 
யவனர் வாழ்விடம்:

தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்படும் யவனர் என்போர் கிரேக்க நாட்டவர் என்ற ஒரு கருத்தும் நிலவுகிறது. ஆனால் உண்மையில் தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடும் யவனர் என்போர் யமுனை நதிக்கரையில் வாழ்ந்த சிந்துவெளி மக்களே ஆவர். யவனர்கள் இந்தியாவில் யமுனை நதிக்கரையில் தான் வாழ்ந்தார்கள் என்பதற்கான சான்றுகளைத் தமிழ் இலக்கியங்களில் பதிவுசெய்து இருக்கிறார்கள். அச் சான்றுகளைப் பற்றிக் கீழே விரிவாகக் காணலாம்.

யவனத் தச்சரும் அவந்திக் கொல்லரும்
மகதத்து பிறந்த மணி வினைக்காரரும்
பாடலி பிறந்த பசும்பொன் வினைஞரும்
கோசலத்து இயன்ற ஓவிய தொழிலரும்
வத்த நாட்டு வண்ண கம்மரும் – பெருங். உஞ்சை.58

மேற்காணும் பெருங்கதைப் பாடலில், யவனநாடு மட்டுமின்றி அவந்தி, மகதம், பாடலி, கோசலம், வத்தம் ஆகிய நாடுகளும் பேசப்பட்டுள்ளன. இந்நாடுகள் அனைத்தும் நடுவண் இந்தியாவுக்கு மேலாகவும் இமயமலைக்குக் கீழாகவும் இருந்தவை (3). இதிலிருந்து, யவன நாடும் இமயமலைக்குக் கீழ்தான் இருக்கவேண்டும் என்று உறுதியாகிறது. இதை உறுதிப்படுத்த மேலும் சில சான்றுகளைக் காணலாம்.

வன் சொல் யவனர் வள நாடு ஆண்டு
பொன் படு நெடு வரை புகுந்தோன் ஆயினும் - சிலப்.வஞ்சி.28

வன் சொல் யவனர் வள நாடு வன் பெருங்கல்
தென் குமரி ஆண்ட செரு வில் கயல் புலியான் - சிலப்.வஞ்சி.29

மேற்காணும் சிலப்பதிகாரப் பாடல்கள் இரண்டிலும் யவனர் வளநாடு என்ற சொல் வருகிறது. வற்றாத ஆறுபோன்ற நீர்வளம் இருந்தால்தான் அது வளநாடாக விளங்க முடியும். நீர்வளம் இல்லையேல் அது வளநாடாக விளங்கவே முடியாது. யவனர் நாட்டில் எப்போதும் புதிய வருவாய் போல விளைபொருட்களின் அளவு குறையாது இருந்தது என்ற செய்தியைக் கீழ்க்காணும் சிலம்பு வரிகளும் சான்று காட்டுகின்றன.

கயவாய் மருங்கில் காண்போர் தடுக்கும்
பயன் அறவு அறியா யவனர் இருக்கையும் .. சிலப்.புகார்.5

அதுமட்டுமின்றி, மேலேகண்ட வஞ்சிக்காண்டப் பாடல்களில் பொன்படு நெடுவரை என்றும் வன் பெருங்கல் என்றும் வருவதைப் பார்க்கலாம். இவற்றில் பொன்படு நெடுவரை என்பது இமயமலையைத் தான் குறிக்கும் என்று ஏராளமான பாடல்களின் வழியாக அறியலாம். சான்றாகச் சில பாடல்வரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பொன் படு நெடும் கோட்டு இமையம் - புறம் 39
ஆரியர் பொன் படு நெடு வரை புரையும் - அகம் 398

பொன்படு நெடுவரையைப் போல, வஞ்சிக்காண்ட பாடலில் வரும் வன் பெருங்கல் என்பதும் இமயமலையைக் குறிப்பதே ஆகும். இது வட பெருங்கல் என்றும் சில பாடல்களில் வரும்.

தென் குமரி வட பெருங்கல் - மது 70
தென் குமரி வட பெருங்கல் - புறம் 17

இதுவரை மேலேகண்ட சான்றுகளில் இருந்து, யவனர்கள் வாழ்ந்த நாட்டில் வற்றாத நீர்வளம் மிக்க ஆறு இருந்தது என்றும் அது இமயமலைக்கு அருகில் தான் இருந்தது என்றும் அறிந்துகொள்ள முடிகிறது. இதிலிருந்து அந்த ஆறானது யமுனையாகவோ கங்கையாகவோ இருக்கலாம் என்று ஊகிக்க முடிகிறது. இந்நிலையில், இம்மக்கள் யவனர் என்ற பெயரால் சுட்டப்படுவதால், இவர்கள் யமுனை ஆற்றங்கரையில் தான் முதன்முதலில் தங்கி வாழ்ந்திருக்க வேண்டும் என்று தெரிய வருகிறது.

யவனர் சிந்துவெளி மக்களா?

தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடும் யவனர் என்போர் யமுனை ஆற்றங்கரையில் வாழ்ந்துவந்த மக்களே என்று மேலே பல சான்றுகளுடன் கண்டோம். ஆனால், இந்த யவனர் தான் சிந்துவெளி மக்கள் என்று உறுதிப்படுத்துவதற்கான சான்றுகள் ஏதும் உள்ளனவா என்றால் ஒன்றல்ல இரண்டல்ல பல சான்றுகள் நமது இலக்கியங்களில் பதிவாகி இருக்கின்றன. இச் சான்றுகளை மொழி, தொழில்நுட்பம், போக்குவரத்து, பாதுகாப்பு என்ற தலைப்புக்களின் கீழ் விரிவாக ஒப்பிட்டுக் காணலாம்.

அ. மொழி:

சிந்துவெளி மக்களின் மொழி எது? என்பதைப் பற்றி இதுவரையிலும் வரலாற்று ஆய்வாளர்களால் கண்டறிய முடியவில்லை. சிந்துவெளி முத்திரைகளில் காணப்படும் பட எழுத்துக்களே அவர்களது மொழி என்று ஒரு சாராரும் அது அவர்களது மொழி அல்ல என்று ஒரு சாராரும் கருதுகின்றனர். ஆனால், மொழி இல்லாமல் இவ்வளவு பெரிய மேம்பட்ட நாகரிகம் பல்லாயிரம் ஆண்டுகளாக இருந்திருக்க முடியுமா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

தங்களது கருத்துப் பரிமாற்றத்திற்காகச் சிந்துவெளி மக்கள் ஒரு மொழியை உருவாக்கிப் பேசியிருப்பர். ஆனால் அம் மொழிக்கு அவர்கள் ஒரு வரிவடிவத்தை உருவாக்கி இருக்கவில்லை என்று தெரியவருகிறது. காரணம், ஆயிரக்கணக்கான முத்திரைகளில் படங்களையும் பட எழுத்துக்களையும் வரைந்திருந்த சிந்துவெளி மக்கள் தமது மொழிக்கான எழுத்துக்களை ஒரு முத்திரையிலும் பதிவு செய்யவில்லை. இதிலிருந்து, சிந்துவெளி மக்களுக்கு பேச்சுமொழி மட்டுமே இருந்திருக்க வேண்டும் என்ற கருத்து வலுவாகிறது.  

சிந்துவெளி மக்கள் அறிந்ததெல்லாம் மனிதர்கள், விலங்குகள், பறவைகள், மரங்கள், பூக்கள் போன்றவற்றின் இயற்கைப் படங்கள் மற்றும் அவைசார்ந்த பட எழுத்துக்களே ஆகும். இவற்றைச் சிந்துவெளியில் கண்டெடுக்கப்பட்ட பல்வேறு முத்திரைகளின் வாயிலாக அறியலாம். சிந்துவெளி மக்களைப் போலவே யவனர்களுக்கும் பேச்சுமொழி இல்லை என்பதுடன் அவர்களது மொழி என்பதெல்லாம் படம் சார்ந்த குறியீடுகளே என்பதைக் கீழ்க்காணும் பெருங்கதைப் பாடலின் வழியாக அறிந்துகொள்ள முடிகிறது.

……… அலங்காரம் அறியாள் இவள் என
பழித்து யான் புனை நெறி பார் என புனைவோன்
பற்றிய யவன பாடையில் எழுத்து அவள் கற்றனள்.. – பெருங். வத்தவ.13

… இவளுக்கு ஒப்பனை செய்யத் தெரியாது என்று சொல்ல, நான் வரையும் அழகைப் பார் என்று கூறியவாறு, யவனர்களின் மொழியில் (பாடை) இருக்கும் பட எழுத்துக்களைப் போல ஓவியம் வரையக் கற்றுக் கொண்டாள்..

என்பது மேற்பாடல் வரிகளின் பொருள் ஆகும். மேற்பாடலில் வரும் பாடை என்பது மொழியைக் குறிப்பதாகும். யவனர்களின் மொழியில் பட எழுத்துக்களே இருந்தன என்ற செய்தியை மேற்பாடல் குறிப்பிடுவதில் இருந்து, யவனர்கள் சிந்துவெளி மக்களாக இருக்கலாம் என்ற கருத்து வலுப்படுகிறது.

ஆ. தொழில்நுட்பம்:

சிந்துவெளி மக்கள் நுட்பமான வேலை தெரிந்தவர்கள் என்பதைச் சிந்துவெளியில் கண்டெடுத்த ஏராளமான தொல்பொருள் எச்சங்கள் காட்டுகின்றன. மிகச்சிறிய மணிகள், வளையல்கள், பாண்டங்களில் கூட அவர்களது கைவினைத் திறன் பளிச்செனத் தெரிகின்றது. இவர்களது பொருட்களில் இவரது கைவினைத் திறன் மட்டுமின்றி கற்பனைத் திறனும் நன்றாகத் தெரியவருகிறது. இவர்கள், நுட்பமான கைவினைத் திறன் மட்டுமின்றி அழகான ஓவியங்களைத் திறம்படத் தீட்டுவதிலும் வல்லவராய் இருந்தார்கள் என்று பானைகள், கிண்ணங்கள் மேல் வரையப்பட்டுள்ள ஓவியங்கள் பறைசாற்றுகின்றன.

சிந்துவெளி மக்களைப் போலவே யவனர்களும் கைவினைத் தொழிலில் வல்லவராய் விளங்கினர். தமிழ் அரசர்கள் யவனர்கள் உருவாக்கிய பல்வேறு கலைப்பொருட்களையே அதிகம் பயன்படுத்தியதைப் பல தமிழ் இலக்கியப் பாடல்கள் வாயிலாக அறியலாம். யவனச் செப்பு, யவனப் பேழை, யவன மஞ்சிகை, யவன அடைப்பை என்று பொன் முதலான உலோகங்களால் ஆன பல பொருட்களைப் பற்றிய செய்திகள் தமிழ் இலக்கியங்களில் உள்ளன. இவற்றில் செப்பு என்பது செம்பொன்னால் ஆன குங்குமச் சிமிழ் போன்றவற்றையும் பேழை என்பது பெரிய அளவிலான பெட்டி போன்றதையும் மஞ்சிகை என்பது பூக்கூடை போன்றதையும் அடைப்பை என்பது தாம்பூலப் பெட்டி போன்றதையும் குறிக்கும். இவைபற்றிய ஒருசில பாடல்களை மட்டும் சான்றாகக் கீழே காணலாம்.

பொன் சொரி கதவு தாளின் திறந்து பொன் யவனப் பேழை .. சிந்தா.1/114
எரி மணி செம்பொன் ஆர்ந்த ஈராயிரம் யவனப் பேழை - சிந்தா.3/557
மணி இயல் யவனச் செப்பின் மங்கல துகிலை வாங்கி .. சிந்தா.4/1146
யவனக் கைவினை தெளிந்த பொன் அடைப்பையுள் - சிந்தா.6/1479
யவன மஞ்சிகையும் பொன் செய் பேழையொடு – பெருங். உஞ்சை 32

இவை மட்டுமின்றி, யவனர்கள் ஒளிதரும் அகல்விளக்குகளைக் கூட மிகுந்த கலைநயத்துடன் அன்னம் (ஓதிமம்) போன்ற வடிவிலும் பெண் (பாவை) போன்ற வடிவிலும் உருவாக்கி அளித்ததையும் அவற்றைத் தமிழ் மன்னர்கள் பெரிதும் விரும்பிப் பயன்படுத்திய செய்தியையும் தமிழ் இலக்கியங்கள் வாயிலாக அறிந்துகொள்ள முடிகிறது. இதைப்பற்றிய சில பாடல்கள் கீழே சான்றாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

யவனர் ஓதிம விளக்கின் -  பெரும். 316

 
யவனர் இயற்றிய வினை மாண் பாவை
கை ஏந்து ஐ அகல் நிறைய நெய் சொரிந்து
பரூஉ திரி கொளீஇய குரூஉ தலை நிமிர் எரி - நெடு.101

வேண்டிடம் தோறும் தூண்டு திரி கொளீஇ
கைவயின் கொண்ட நெய் அகல் சொரியும்
யவனப் பாவை அணி விளக்கு அழல – பெருங். உஞ்சை 47

கி.மு. 700 ல் மொகஞ்சதாரோவில் கண்டெடுக்கப்பட்ட பாவை விளக்கின் படமும் யவனர்களின் பாவை விளக்குப் படமும் அருகருகில் ஒப்பிட்டுக் காட்டப்பட்டுள்ளது. இவ் விளக்குகளில் உள்ள ஒற்றுமையொன்றே யவனர்கள் சிந்துவெளி மக்களே என்பதைப் பறைசாற்றப் போதுமானது ஆகும். மூலம்: http://nationalmuseumindia.gov.in/prodCollections.asp?pid=34&id=1&lk=dp1

இ. போக்குவரத்து:

சிந்துவெளி மக்களின் முத்திரைகளில் ஆரங்களுடன் கூடிய சக்கரங்கள் பல வரையப்பட்டு உள்ளன. மேலும் வண்டிகளைப் போன்ற அமைப்புடன் கூடிய பல பொருட்களும் சிந்துவெளியில் கிடைத்துள்ளன. இதிலிருந்து, இம்மக்கள் சக்கரங்களின் உதவியுடன் வண்டிகளை அமைத்துப் போக்குவரத்துக்குப் பயன்படுத்தி இருக்கலாம் என்று தெரிகிறது. எனவே சிந்துவெளி மக்கள் உலோகத் தொழில் மட்டுமின்றி தச்சுத் தொழிலும் நன்கு அறிந்தவர்களே என்பது உறுதியாகிறது. சிந்துவெளி மக்களைப் போலவே  யவனர்களும் தச்சுத் தொழிலில் தலைசிறந்து விளங்கினார்கள். மரங்களைக் கொண்டு மிக நுட்பமாகச் செதுக்கிக் கலைநயத்துடன் கூடிய வண்டிகள் அல்லது தேர்களை (வையம்) உருவாக்கித் தமிழ் மன்னர்களுக்கு அளித்தார்கள். இதைப்பற்றிய சில இலக்கியப் பாடல்களைச் சான்றாகக் கீழே பார்க்கலாம்.

யவனக் கைவினை பெரும் பொறி வையத்து.. – பெருங். மகத. 5
ஐயைந்து இரட்டி யவன வையமும் – பெருங். வத்தவ.10
அவந்திக் கொல்லரும் யவனத் தச்சரும் .. மணி.19
யவனத் தச்சரும் அவந்தி கொல்லரும் .. பெருங். உஞ்சை. 58

சிந்துவெளி மக்கள் தரைவழியாக மட்டுமின்றிக் கடல் வழியாகவும் பிறருடன் வணிகத்தில் ஈடுபட்டு இருந்தனர் என்பதற்கான சான்றுகள் வரலாற்று ஆய்வாளர்களுக்குக் கிடைத்துள்ளன. (1) இதிலிருந்து இம்மக்கள், படகு, கப்பல் போன்ற நீர்வழிக் கலங்களை உருவாக்கிப் பயன்படுத்தியமையை அறிந்துகொள்ளலாம். சிந்துவெளி மக்களைப் போலவே, யவனர்களும் தொழில்நுட்பத்துடன் கூடிய கலங்களை உருவாக்கித் தமிழ் மன்னர்களுடன் வணிகத்தில் ஈடுபட்டிருந்தனர். இதைப்பற்றிக் கூறும் சில தமிழ் இலக்கியப் பாடல்களைக் கீழே சான்றாகக் காணலாம்.

சேரலர் சுள்ளி அம் பேரியாற்று வெண் நுரை கலங்க
யவனர் தந்த வினை மாண் நன் கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும் .. - அகம்.149

யவனர் நன் கலம் தந்த தண் கமழ் தேறல்
பொன் செய் புனை கலத்து ஏந்தி நாளும்
ஒண் தொடி மகளிர் மடுப்ப மகிழ் சிறந்து - புறம்.56

யவனர்கள் கப்பல் போன்றவற்றில் பொன்னைக் கொண்டுவந்து கொடுத்துவிட்டு அதற்குப் பதிலாக மிளகைக் கொண்டுசென்ற செய்தியை மேற்காணும் அகப்பாடல் கூறுகிறது. அதுமட்டுமின்றி, யவனர்கள் கப்பல் போன்றவற்றில் கள்ளைக் கொண்டுவந்து தமிழ் மன்னர்களுக்குக் கொடுத்த செய்தியை மேற்காணும் புறப்பாடல் கூறுகிறது. இதிலிருந்து, அக்காலத்திலேயே மதுபானங்கள் இறக்குமதி செய்யப்பட்டதையும் அறிந்து கொள்ளலாம். 
 
ஈ. பாதுகாப்பு / காவல்:

சிந்துவெளி நாகரிகத்தைச் சேர்ந்த ஊர்களில் இருந்த கட்டிட அமைப்பு மற்றும் தெரு அமைப்புக்களை ஆராய்ந்ததில், அம் மக்கள் பாதுகாப்புக்கு முதலிடம் கொடுத்திருந்தனர் என்னும் செய்தி தெரிய வருகிறது. தங்களது வீடுகளின் கதவுகளை பெருந்தெருக்களில் அமைக்காமல் உள்முற்றம் அல்லது சந்துகளில் அமைத்திருந்த விதம் அவர்களது காவல் / எச்சரிக்கை உணர்வினைப் பறைசாற்றுகின்றது. அதுமட்டுமின்றி, வீடுகளில் காவலுக்கு நாய்களை வளர்த்தனர் என்னும் செய்தியையும் தொல்பொருள் எச்சங்களின் வழியாக அறியமுடிகிறது.

சிந்துவெளி மக்களைப் போலவே யவனர்களும் காவல் / பாதுகாப்பு உணர்வு மிக்கவர்களாக விளங்கினர். பாதுகாப்பு உணர்வுடன் கூடவே உடல்வலிமையும் கொண்டவர்களாக விளங்கியதால், இம்மக்கள் தமிழ் மன்னர்களது அரண்மனையில் காவல் வீரர்களாய்ப் பணிபுரிந்தனர் என்ற செய்தியைத் தமிழ் இலக்கியங்களில் காண முடிகிறது. இதைப்பற்றிக் கூறும் சில இலக்கியப் பாடல்கள் கீழே சான்றாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

கடி மதில் வாயில் காவலின் சிறந்த
அடல் வாள் யவனர்க்கு அயிராது புக்கு ஆங்கு - மது.66

மெய்ப்பை புக்க வெருவரும் தோற்றத்து                
வலி புணர் யாக்கை வன்கண் யவனர்                           
புலித்தொடர் விட்ட புனை மாண் நல் இல் - முல்.59

தமிழருடன் நெருங்கிய தொடர்பு:

சிந்துவெளியில் வாழ்ந்த மக்கள் திராவிடர்களே என்றும் ஆரியர்களே என்றும் இருவேறு கருத்துக்கள் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இவற்றில் எந்தவொரு கருத்துக்கும் அரண் சேர்க்க வரலாற்று ஆய்வாளர்களிடம் சான்றுகள் இல்லாத நிலையிலும் திராவிடர்கள் தான் என்ற கருத்தே பெரும்பான்மையோரால் ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளது.

சிந்துவெளி மக்கள் இந்தியாவுக்குள் தஞ்சம் புகுந்து யமுனை ஆற்றங்கரையில் யவனர் என்ற பெயருடன் வாழ்ந்தார்கள் என்பதையே இக் கட்டுரை பல சான்றுகளுடன் வலியுறுத்துகிறது. இக் கருத்துக்கு அரணாக ஏராளமான சான்றுகளைத் தமிழ் இலக்கியங்களில் இருந்து காட்டுகிறது. தமிழ் இலக்கியங்களில் அதிகமாகப் பேசப்பட்ட பிற இனத்து மக்கள் உண்டென்றால் அது யவனர் மட்டுமே. ஆரியர், மிலேச்சர் போன்றோர் பேசப்பட்டிருப்பினும் மிகவும் அதிகமான பாடல்களில் பேசப்பட்டிருப்பவர்கள் யவனர் மட்டுமே. ஏன் யவனர் மட்டும் தமிழருடன் அதிகமாக இணைத்துப் பேசப்பட்டுள்ளனர் ?. யவனருடன் தமிழ் மன்னர்களுக்கு எப்படி நெருக்கம் ஏற்பட்டது?. இக் கேள்விகளுக்கான விடைகளை இங்கே பார்க்கலாம்.

தமிழகம் என்பது ஒருகாலத்தில் இந்தியாவின் தென்பகுதியில் மட்டுமின்றி, வடபகுதியிலும் பரவி இருந்தது என்றும் சேர மன்னர்கள் இந்தியாவின் வட பகுதியிலும் இமய மலையிலும் கோலோச்சினர் என்றும் தொல்தமிழகம் என்ற ஆய்வுக் கட்டுரையில் (4) பல சான்றுகளுடன் கண்டோம். வட இந்தியாவிலும் இமய மலையிலும் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து கோலோச்சும் பொழுதுதான் தமிழ் மன்னர்களுக்கும் யமுனை ஆற்றங்கரையில் வாழ்ந்துவந்த யவனர்களுக்கும் தொடர்பு ஏற்பட்டிருக்க வேண்டும். வட இந்தியாவில் சேர மன்னர்கள் கோலோச்சியதற்கும் அப்போது யவனர் அவருடன் தொடர்பில் இருந்தனர் என்பதற்கும் அரணாகக் கீழ்க்காணும் பாடல்வரிகளைக் காட்டலாம்.

மகத வினைஞரும் மராட்டக் கம்மரும்
அவந்திக் கொல்லரும் யவனத் தச்சரும்
தண் தமிழ் வினைஞர் தம்மொடு கூடிக் - மணி.19

விழு பெரும் செல்வமொடு வென்றி தாங்கிய
ஐம்பதின் இரட்டி யவன சேரியும்
எண்பதின் இரட்டி எறி படை பாடியும்
அளப்பரும் சிறப்பின் ஆயிரம் ஆகிய
தலைப்பெரும் சேனை தமிழ சேரியும்
கொலை பெரும் கடும் திறல் கொல்லர் சேரியும்
மிலைச்ச சேரியும் தலைத்தலை சிறந்து – பெருங். மகத. 4

மேற்பாடல்கள் இரண்டிலும் தமிழ் மக்களுடன் யவனர் உள்பட பல்வேறு இனத்து மக்கள் இருந்த செய்தி கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, யவனச் சேரிகள் நூற்றுக் கணக்கிலும் தமிழர் சேரிகள் ஆயிரக்கணக்கிலும் இருந்ததாக பெருங்கதைப் பாடல் கூறுகிறது. உஞ்சை, மகதம், வத்தம் என்று பெருங்கதை கூறும் நகரங்கள் யாவும் வட இந்திய நாடுகள் என்பதால் தமிழ் மன்னர்கள் வட இந்தியாவில் ஆட்சி செய்திருக்க வேண்டும் என்பது உறுதியாகிறது. ஏனென்றால், அப்போதுதான் ஆயிரக்கணக்கான தமிழர் சேரிகள் வட இந்தியாவில் இருந்திருக்க முடியும்.

சேர மன்னர்கள் வட இந்தியாவில் ஆட்சி செலுத்தியபோது, யவனர்களின் கலைத்திறன், அஞ்சாத நெஞ்சம், உடல் வலிமை ஆகியவற்றைக் கண்டு வியந்தனர்.  யவனரின் பண்பாடும் தமது பண்பாட்டுடன் மிக நெருக்கமாக இருப்பதாகக் கருதியதால் மீண்டும் தமிழ் மன்னர்கள் தென்தமிழகம் திரும்பும்போது பல யவனர்களையும் தம்முடன் அழைத்து வந்திருக்க வேண்டும். இப்படித்தான் யவனர் தென்தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வந்து தங்கலாயினர்.

தமிழகத்தில் சிந்துவெளி எச்சங்கள்:

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள மயிலாடுதுறையில் 2007ல் சிந்துவெளி எழுத்துக்கள் பொறித்த கற்கோடரி ஒன்று கிடைத்துள்ளது. இதன் காலம் கி.மு. 2000 - கி.மு. 1500 ஆகும். தமிழ்நாட்டின் காவிரிக் கழிமுகப் பகுதியில் சமீபத்தில் நடத்தப்பட்ட தொல்லியல் துறையின் அகழ்வாய்வின்போது பத்துக்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த முதுமக்கள் தாழிகளில் காணப்பட்ட சில குறியீடுகள், அரப்பா, மொகஞ்சதாரோ ஆகிய இடங்களில் கண்டெடுக்கப்பட்ட சிந்து சமவெளி நாகரிகக் குறியீடுகளைப் போன்றே இருப்பதாகத் திரு. ஐராவதம் மகாதேவன் தெரிவித்துள்ளார். (1)

இவற்றையெல்லாம் அடிப்படையாகக் கொண்டு, சிந்துவெளி மக்களும் தமிழரும் ஒரே மொழியையோ அல்லது ஒரே தாய்மொழியிலிருந்து பிரிந்த கிளை மொழிகளையோ பேசியிருக்கலாம் என்று வரலாற்று ஆய்வாளர் திரு. ஐராவதம் மகாதேவன் கருதுகிறார். (1) இவரது கருத்து சரியாகவும் இருக்கலாம் தவறாகவும் இருக்கலாம்.

மாறாக, சிந்துவெளி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கோடரியும் தாழிகளும் தமிழகத்தில் எப்படிக் கிடைத்திருக்கக் கூடும் என்று ஆய்ந்ததில், அந்த முடிச்சுக்களும் யவனர்களால் அவிழ்ந்து விட்டன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தங்கி வாழ்ந்துவந்த யவனர்கள் உண்மையில் சிந்துவெளி மக்கள் என்பதால் இவர்கள் தாம் பயன்படுத்திய முதுமக்கள் தாழிகளிலும் கோடரி போன்ற இன்னபிற பொருட்களிலும் சிந்துவெளி எழுத்துக்களைப் பொறித்திருக்க வேண்டும் என்ற கருத்து வலுப்படுகிறது.

முடிவுரை:

இதுவரை மேலே கண்ட செய்திகள் தொகுக்கப்பட்டுக் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

1.   சிந்துவெளி மக்கள் இயற்கைச் சீற்றங்கள், உணவு விளைச்சல் மாற்றங்கள், போர் அச்சுறுத்தல்கள் போன்ற காரணங்களால் கிழக்கு நோக்கி இந்தியாவுக்குள் இடம்பெயர்ந்தனர்.
2.   இந்தியாவில் அவர்கள் முதன்முதலில் தங்கிய பகுதியில் இருந்த ஆற்றுக்குத் தமது சொந்த நாட்டில் இருந்த ஆற்றின் நினைவாகச் சிந்து என்றே பெயரிட்டனர்.
3.   இந்தியாவில் யமுனை ஆற்றங்கரையில் பன்னெடுங்காலமாகத் தங்கி வாழ்ந்தபடியால் இவர்கள் யவனர் என்று தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
4.   யவனர் யமுனை ஆற்றங்கரையில் வாழ்ந்தவர்கள் என்பதற்கான சான்றுகள் தமிழ் இலக்கியங்களில் காணப்படுகின்றன.
5.   தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடும் யவனர் என்போர் சிந்துவெளி மக்களாக இருக்கலாம் என்னும் கருத்துக்கு அரணாக, சிந்துவெளி மக்களின் பல பண்பாட்டுக் கூறுகள், தமிழ் இலக்கியங்கள் காட்டும் யவனரின் பண்பாட்டுக் கூறுகளுடன் ஒப்புநோக்கப்பட்டன.
6.   யவனர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையிலான உறவு எவ்வாறு தோன்றியது என்ற கேள்விக்கான விடை தமிழ் இலக்கியங்களின் உதவியுடன் உறுதி செய்யப்பட்டது.
7.   தமிழகத்தில் இதுவரை கிடைத்துள்ள சிந்துவெளி நாகரிக எச்சங்களும் யவனர்கள் தமிழகத்தின் பல பகுதிகளில் வாழ்ந்து வந்ததை உறுதி செய்கின்றன.

இதுவரை மேலே கண்ட பல்வேறு சான்றுகளையும் கருதுகோள்களையும் இணைத்துப் பார்த்ததில், சிந்துவெளி மக்கள் என்ன ஆனார்கள்? எங்கே சென்றார்கள்?. அவர்கள் திராவிடர் தானா? போன்ற இருள்சூழ்ந்த கேள்விகளுக்கு வெளிச்சம் போன்ற விடைகள் கிடைத்துவிட்டன. அந்த விடைகளே இக் கட்டுரையின் ஆய்வு முடிவுகளாகக் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

சிந்துவெளி மக்கள் இந்தியாவில் யமுனை ஆற்றங்கரையில் தஞ்சம் புகுந்து யவனர் என்ற பெயருடன் வாழ்ந்துவந்தனர்.

தமிழருடன் மிக நெருக்கமாகத் தமிழகம் முழுவதும் யவனர் வாழ்ந்து வந்ததால் சிந்துவெளி மக்கள் ஆகிய யவனர் திராவிடரே ஆவர்.

மேற்கோள்கள்:
 
    1. சிந்துவெளி நாகரிகம் – விக்கிபீடியா கட்டுரை.
2.          2.    யமுனை - கங்கை ஆறு வரைபடம்
    3. இந்தியா – கி.மு. 600 வரைபடம்
    4. தொல்தமிழகம் – ஆய்வுக் கட்டுரை.
 
துணைநூல் குறிப்புகள்:

மது.            – மதுரைக்காஞ்சி
முல்.           – முல்லைப்பாட்டு
அகம்.          – அகநானூறு
புறம்.           – புறநானூறு
நெடு.           – நெடுநல்வாடை
பெரும்.         - பெரும்பாணாற்றுப்படை
சிந்தா.          – சிந்தாமணி
மணி.          – மணிமேகலை
சிலப்.          – சிலப்பதிகாரம்
                       புகார் – புகார்க்காண்டம்
                       வஞ்சி – வஞ்சிக்காண்டம்
பெருங்.         - பெருங்கதை
                       உஞ்சை.        – உஞ்சைக்காண்டம்
                       வத்தவ.        – வத்தவகாண்டம்
                       மகத.           - மகதகாண்டம்

 ============= தமிழ் வாழ்க ! ================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.