திங்கள், 28 அக்டோபர், 2019

இலக்கணம், இலக்கியம் - இவை தமிழ்ச் சொற்களா?


முன்னுரை:

ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து இறுதியில் மனிதனையே கடித்த கதையாக இப்போது தமிழ்மொழியின் அடிமடியிலேயே கை வைத்து விட்டது சமக்கிருத மொழியின் பயன்பாடு. ஆம், இலக்கணம், இலக்கியம் ஆகிய சொற்களே தமிழ் இல்லை என்று வாதாடுவதும் அதனைப் பரப்பி வருவதும் தற்போது மிகப் பரவலாகி விட்டது. பல்லாயிரம் ஆண்டுகளாக இலக்கண இலக்கிய வழக்கம் கொண்ட செம்மொழியாம் நமது பழந்தமிழ் மொழியில் அவற்றைக் குறிக்கும் சொற்கள் இல்லை என்றும் சமக்கிருத மொழியில் இருந்தே அவற்றைக் கடனாகப் பெற்றுத் தமிழர் பயன்படுத்தினர் என்றும் பொருளற்ற அடிப்படையற்ற கருத்து முன்வைக்கப் படுகிறது. இக் கருத்து எவ்வளவு தவறானது என்பதையும் உண்மையில் இலக்கணமும் இலக்கியமும் தமிழ்ச் சொற்களே என்பதையும் இவற்றில் இருந்து சமக்கிருதச் சொற்கள் எப்படித் தோன்றின என்பதையும் இக் கட்டுரையில்  விளக்கமாகக் காணலாம்.

இலக்கணம்:

3300 ஆண்டுகளுக்கும் முற்பட்டு எழுதப்பட்ட தொல்காப்பியத்தில் இலக்கணம் என்ற சொல் பலமுறை பயன்படுத்தப் பட்டுள்ள நிலையிலும் கூட, இலக்கணம் என்பதைத் தமிழ்ச் சொல்தான் என்று நம்பாமல், சமக்கிருதச் சொல்லின் திரிபுதான் இலக்கணம் என்று கூறப்படும் பொய்யான கருத்துரையையே பெரிதும் நம்பி தமிழர்களே அதைப் பரப்பியும் வருவது வருந்தத்தக்கது மட்டுமல்ல வெட்கப்பட வேண்டியதும் ஆகும். இதோ தொல்காப்பியத்தில் இலக்கணம் என்ற சொல் பயின்று வரும் இடங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

இலக்கண மருங்கின் சொல் ஆறு அல்ல - சொல். கிளவி:27
புறத்திணை இலக்கணம் திறப்பட கிளப்பின் - பொருள். புறத்:1
இழைபின் இலக்கணம் இயைந்ததாகும் - பொருள். செய்யு:242
இழைத்த இலக்கணம் பிழைத்தன போல - பொருள். செய்யு:243

தொல்காப்பியத்தில் பயின்று வந்துள்ள இலக்கணம் என்ற சொல் சங்க இலக்கியங்களில் பயின்று வரவில்லை. ஆனால், சங்க இலக்கியங்களுக்குப் பின்னர் எழுந்த பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள், சிலப்பதிகாரம், மணிமேகலை, பெருங்கதை, கம்ப ராமாயணம் போன்ற பல நூல்களிலும் இலக்கணம் என்ற சொல் பயின்று வந்துள்ளது. கீழே சில சான்றுகள் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளன.

இலக்கணத்தால் எட்டும் எய்துப என்றும் - ஆசாரக் 2
இலக்கணம் யாதும் அறியேன் கலை கணம் - நாலடி:40 9
இலக்கண முறைமையின் இருந்தோன் ஈங்கு இவன்சில.மது 16
இரு வகை கூத்தின் இலக்கணம் அறிந்துசில.புகார் 3

இலக்கியம்:

இலக்கணம் என்ற சொல் தொல்காப்பியம் உட்பட பல தமிழ் இலக்கியங்களில் இருப்பதை மேலே கண்டோம். ஆனால், இலக்கியம் என்ற சொல் எந்தவொரு இலக்கியத்திலும் பயின்று வரவில்லை. இதிலிருந்து, இலக்கியம் என்ற சொல்லின் பயன்பாடானது இலக்கணம் என்ற சொல் தோன்றிய காலத்திற்கும் பிற்பட்டது என்று தெரிந்து கொள்ளலாம்.

தமிழ்ச் சொற்களின் தோற்றம்:

இலக்கணம், இலக்கியம் ஆகிய இரண்டு தமிழ்ச் சொற்களும் ஒரே மூலத்தில் இருந்து தோன்றிய சொற்களே ஆகும். இந்த இரண்டு சொற்களும் இலக்கு என்ற தமிழ்ச் சொல்லில் இருந்து தோன்றியவையே ஆகும். அதாவது,

இலக்கு + அணம் = இலக்கணம்
இலக்கு + இயம் = இலக்கியம்

இவற்றில் வரும் இலக்கு என்பது எழுத்து என்று பொருள்படும். ஆனால் இப் பொருள் தமிழ் அகராதிகளில் குறிப்பிடப்படவில்லை. இலக்கு என்பது எவ்வாறு எழுத்து என்று பொருள்படும் என்று கீழே காணலாம்.

இலங்குதல் என்ற தமிழ்ச்சொல்லுக்கு விளங்குதல், தோன்றுதல், ஒளிர்தல் என்றெல்லாம் பொருட்கள் உண்டு. இச்சொல்லின் இன்னொரு வடிவமே இலகுதல் ஆகும். இச் சொற்கள் பிறவினையைக் குறிக்கும்போது இலக்குதல் என்று மாறும். கலங்குதல் என்பது கலக்குதல் என்று ஆவதைப் போல, அலங்குதல் என்பது அலக்குதல் என்று ஆவதைப் போல, இலங்குதல் என்பது இலக்குதல் என்று பிறவினைச் சொல்லாகிக் கீழ்க்காணும் வினைகளைக் குறிக்கும்.

இலக்குதல் = விளக்குதல், ஒளியூட்டுதல், தோற்றுவித்தல், வரைதல்.

இலக்குதல் என்ற வினையின் அடிப்படையில் பிறந்த தமிழ்ச் சொற்களே இலக்கு, இலக்குமி, இலக்கம், இலக்கணம், இலக்கியம் ஆகும்.

இலக்கு = வரையப்படுவன = எழுத்து, குறி.
இலக்குமி = மனைக்கு ஒளியாக விளங்குபவள்.
இலக்கம் = ஒளிதரும் மூலம் = கதிரவன், நிலவு, விளக்கு.

இலக்கம் என்பது ஒளிதரும் மூலங்களைக் குறிப்பதனைக் கீழ்க்காணும் பாடல்களில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

இரு வேறு மண்டிலத்து இலக்கம் போல - பரி 13 (இலக்கம் = கதிரும் நிலவும்)
கம்பமொடு துளங்கிய இலக்கம் போல - புறம் 260 (இலக்கம் = விளக்கு)

எப்படி ஒளியானது புறத்து இருளை நீக்க உதவுகிறதோ அதைப்போல அகத்து / மனத்து இருளாகிய அறியாமையை நீக்க உதவுவது எழுத்துக்களே ஆகும். இலக்கு என்பது எழுத்து என்ற பொருளில் கீழ்க்காணும் பாடல்களில் பயின்று வந்துள்ளதைக் காணலாம்.

விலங்கொடு மக்கள் அனையர் இலங்கு நூல் - குறள்:41 10
இலங்கு நூல் ஓதாத நாள் - ஆசாரக் 47

மேற்பாடல்களில் வரும் இலங்கு என்ற சொல்லானது இலக்கு என்பதன் மெலித்தல் விகாரம் ஆகும். வெற்றி என்பது வென்றி என்றாவதைப் போல, தட்டை என்பது தண்டை என்றாவதைப் போல, இலக்கு என்பது மெலித்தல் விகாரமாக இலங்கு என்று மேற்பாடல்களில் பயன்பட்டு வந்துள்ளது. நூல் என்னும் சொல்லுடன் பொருந்தி வந்திருப்பதில் இருந்தே மேற்பாடல்களில் வரும் இலங்கு (இலக்கு) என்பது எழுத்துக்களையே குறிக்கும் என்பது உறுதியாகிறது.

எழுத்துக்களைக் குறிக்கும் இலக்கு என்ற சொல்லில் இருந்தே இலக்கணமும் இலக்கியமும் தோன்றியது என்று மேலே கண்டோம். இச் சொற்களின் விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இலக்கு + இயம் = இலக்கியம்
               = எழுத்துக்களால் நிரம்பியது. (இயைதல் = நிரம்புதல்)

எழுத்துக்களால் நிரம்பிய அனைத்துமே இலக்கியம் தான். அதைப்போல, எழுத்துக்களை அணைந்து வருவது அதாவது அவை எல்லைமீறாத வண்ணம் அவற்றுக்கு ஒரு அணையாக / கரையாக விளங்குவதே இலக்கணம் ஆகும்.

இலக்கு + அணம் = இலக்கணம்
                 = எழுத்துக்களுடன் அணைந்து கரையாக விளங்குவது.

எழுத்து / மொழிக்கு அணையாக விளங்குவதான இலக்கணம் என்ற சொல்லானது இலக்கணை என்றும் சில பாடல்களில் வந்துள்ளது இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.

எல்லாரும் காண இலக்கணையோடு ஆடினாய் - சிந்தா:13 2963
எரி பொன் மேகலை இலக்கணை கடிவினை நொடிவாம் - சிந்தா:12 2385
ஏர் அணி மயில் அம் சாயல் இலக்கணை ஈன்ற சிங்கம் - சிந்தா:13 2913

தமிக்ருதச் சொற்களின் தோற்றம்:

இதுவரை மேலே கண்ட சான்றுகளில் இருந்து, இலக்கணம், இலக்கியம் ஆகிய இரண்டு சொற்களும் இலக்கு என்ற எழுத்தினை அடிப்படையாகக் கொண்டு பிறந்த தமிழ்ச் சொற்களே என்பது உறுதிசெய்யப்பட்டு விட்டது. இந்த தமிழ்ச் சொற்களில் இருந்தே கீழ்க்காணும் விதிகளின்படி தமிக்ருதச் சொற்கள் உருவாகின.

இலக்கணம் >>> லக்ச~ (வி.9,12,6)
இலக்கியம் >>> லக்ச்~ (வி.9,12,6)
இலக்குமி >>> லக்ச்~மி (வி.9,12)

வி.9 – ஆதிகெடல் விதிஇதன்படி முதல் எழுத்தாகிய இகரம் கெட்டது.
வி.12 – மெய்மாற்று விதிஇதன்படி இரட்டித்து வரும் ககரத்தில் ஒன்று ~கரமாக மாறியது.
வி.6 – விகுதிகெடல் விதிஇதன்படி மகர விகுதி கெட்டது.

முடிவுரை:

எழுத்தினைக் குறிக்கும் இலக்கு என்ற தமிழ்ச் சொல்லில் இருந்தே எழுதுதலைக் குறிக்கும் தமிக்ருதச் சொல்லானது கீழ்க்காணும் முறைப்படி தோன்றியது.

இலக்கு >>> லிக் (வி. 23, 6)

வி.23 – ஒலிபெயர்ச்சி விதிஇதன்படி முதலில் வரும் இகர ஒலி நீங்கி அடுத்துவரும் லகரத்தின்மேல் பெயர்ந்து ஏறியது.
வி.6 – விகுதிகெடல் விதிஇதன்படி ககர விகுதி கெட்டது.

2 கருத்துகள்:

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.