ஞாயிறு, 8 டிசம்பர், 2019

பாசத்தின் பிறப்பிடமாகப் பெண்களே இருப்பது ஏன்?


முன்னுரை:

மாதராய்ப் பிறப்பதற்கே நல்ல
மாதவம் செய்திடல் வேண்டும்

என்று பாடிச் சென்றான் பாரதி. கோடிக்கணக்கான உயிரினங்கள் வாழும் இந்தப் பூமியில் மனிதராய்ப் பிறப்பதே அரிதான நிலையில் மனிதரிலும் பெண்களாய்ப் பிறப்பதற்கு எவ்வளவு பெரிய தவப்பயன் இருக்க வேண்டும் என்பதை உலகோர்க்கு உணர்த்தி விட்டான் அந்த முண்டாசுக் கவிஞன்.

இத்துணை சிறப்புக்கும் பெருமைக்கும் ஒரு பெண் எவ்வாறு தகுதியாகிறாள்?. குடும்பப் பொறுப்புக்களைச் சுமந்தவாறு பணம் சம்பாதிப்பதற்காக நாள் முழுவதும் அல்லல்பட்டு உழந்தும் ஏன் ஒரு ஆணுக்கு இவ்வளவு பெரிய பாராட்டு கிடைப்பதில்லை?. அன்பு என்பதே இக்கேள்விக்கான விடையாகும். ஆண்களைக் காட்டிலும் பெண்களே அதிக பாசம் காட்டுகிறார்கள். சரி, பெண்கள் மட்டும் ஏன் இவ்வளவு பாசத்துடன் இருக்கிறார்கள்? இக் கேள்விக்கான விடையினை ஒற்றைவரியில் சொல்வதைக் காட்டிலும் பல சான்றுகளுடன் விளக்கமாகக் கூறுவதே பொருத்தமாக இருக்கும் என்று தோன்றியதால் இக் கட்டுரை எழுதப்படுகிறது.
:
பெண் என்னும் பிறப்பு:

ஒரு வீட்டில் பெண் குழந்தை பிறந்தாலே அங்கே செல்வமும் மகிழ்ச்சியும் தோன்றிப் பெருகப் போகிறது என்று பொருள். அதுவரை வீட்டில் நிலவி வந்த துன்பங்கள் விலகி மகிழ்ச்சிக்கான வழி பிறக்கப் போகிறது என்று பொருள். இதன் அடிப்படையில் உருவானதே கீழ்க்காணும் பழமொழி.

தை பிறந்தால் வழி பிறக்கும்.

இதில் வரும் தை என்பது தையல் ஆகிய பெண்ணைக் குறிக்கும். தைத்தல் என்றால் உருவாக்குதல் என்ற அகராதிப் பொருள் உண்டு. உயிர்களை உருவாக்குபவள் பெண்ணே என்பதால் பெண்ணுக்குத் தை என்றும் தையல் என்றும் பெயர் உண்டானது.

பெண்ணும் தங்கமும்:

ஒரு தந்தை தனது மகளைச் செல்லமாகக் கொஞ்சும்போது தங்கமே என்று அழைப்பான். ஒரு கணவன் தனது மனைவியைச் செல்லமாகக் கொஞ்சும்போதும் தங்கமே என்று அழைப்பான். தந்தையும் சரி கணவனும் சரி பெண் என்றாலே பாசமாக இருப்பார்கள். ஆம், ஆண்களைப் பொறுத்தமட்டிலும் பெண்கள் எப்போதுமே தங்கம் தான். இந்த பாசமும் நேசமும் இப்போது மட்டுமில்லை; வள்ளுவர் காலத்திலும் இருந்திருக்கிறது.

ஒவ்வொரு இல்லத்தரசியையும் தங்கம் என்று கூறும் வள்ளுவர் அந்தத் தங்கத்தைக் கொண்டு செய்யப்படும் நல்ல நகைகளைப் போன்றவர்களே நல்ல குழந்தைகள் என்று கீழ்க்காணும் குறளில் கூறுவதைப் பாருங்கள்.

மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்
நன்கலம் நன்மக்கள் பேறு – 60

மேற்காணும் குறளில் வரும் மங்கலம் என்பது தங்கத்தைக் குறிப்பதாகும். தமிழ் அகராதிகளில் இப்பொருள் இல்லாத காரணத்தினால் மங்கலம் என்ற சொல்லுக்கு ஒழுக்கம், நற்பண்பு என்றெல்லாம் பொருள்கொண்டு விளக்கம் கொடுத்துள்ளனர். இதன் காரணமாக, இல்லத்தரசிகள் தங்கத்தைப் போன்றவர்கள் என்று வள்ளுவர் பெண்ணியத்தைப் போற்றியிருப்பதை இதுவரையிலும் அறிய முடியாமல் போயிற்று. பிறந்த வீட்டிலும் புகுந்த வீட்டிலும் தங்கமே என்று எப்போதும் செல்லமாக அழைத்துப் பாராட்டப்பட்டதாலோ என்னவோ பெண்களுக்குத் தங்கத்தின் மேல் அதிக ஆசை.

பெண்ணும் அன்பும்:

ஒரு பெண்ணின் அன்புக்கு மூன்று விதமான நிலைகள் உண்டென்று கூறலாம். இந்திய சமுதாயத்தில் ஒரு ஆண் வளர்ந்து ஆளாகும் முறையும் பெண் வளர்ந்து ஆளாகும் முறையும் பெருத்த மாறுபாடுகளைக் கொண்டது. பிறந்தது முதல் ஒரு பெண் குழந்தைத் தனது தாயிடமே அதிக ஒட்டுதலுடன் இருக்கும். தனது தாயினைப் பார்த்துப் பார்த்தே பலவற்றைக் கற்றுக் கொள்ளும். தாயிடம் இருந்து ஒரு பெண்குழந்தை கற்றுக் கொள்ளும் பலவற்றில் குறிப்பிடத்தக்க ஒன்றுதான் அன்பு காட்டுதல் என்பது. தாய் தன்னிடம் காட்டும் அன்பினை என்றுமே மறவாமல் நினைவில் கொண்டு அதைப் போற்றி வைத்திருப்பாள் மகள். இதுதான் பெண்ணுடைய அன்பின் முதல்நிலை. இதனை மகடூஉ நிலை என்று அழைப்பர்.

வளர்ந்து ஆளாகிப் பருவமடைந்த பின்னர் ஒரு ஆணைத் திருமணம் செய்துகொண்டு இல்லத்தரசியாக மாறுவது பெண்ணின் இரண்டாவது பிறப்புநிலை. தனது அன்னையிடம் இருந்து கற்றுக் கொண்டு தேக்கி வைத்திருக்கும் அன்பு முழுவதையும் தனது கணவனிடம் காட்டத் தொடங்குவாள் மனைவி. இதுதான் பெண்ணுடைய அன்பின் இரண்டாவது நிலை. இந்த நிலையினை மனைமாட்சி என்று அழைப்பர்.

கணவனும் மனைவியும் செம்புலப் பெயர்நீர் போல நடத்திய இல்லறத்தின் நற்பயனாக நல்ல குழந்தைகளைப் பெறுவாள் மனைவி. மனைவி என்ற பதவியில் இருந்து அம்மா என்ற பதவி உயர்வினைப் பெறுகிறாள். இதுதான் பெண்ணின் மூன்றாவது பிறப்புநிலை. ஒரு பெண்ணுக்குரிய உச்சகட்ட மதிப்பாகக் கருதப்படுவது இந்த நிலையே ஆகும். தனது தாய் தனக்குக் கொடுத்த அன்பு என்னும் சோற்றினைத் தனது கணவன் தன்மேல் கொண்ட காதல் என்னும் பாலுடன் கலந்து குழைத்துத் தனது மகவுக்கு அமுதாக ஊட்டுவாள் தாய். இதுதான் பெண்ணுடைய அன்பின் மூன்றாவது நிலை. இதனைத் தாய்மை நிலை என்று கூறுவர்.

பெண்ணும் பெயர்களும்:

ஒரு பெண் மகளாக, மனைவியாக, தாயாக மூன்று விதமாக வாழ்வதனை மேலே கண்டோம். மகடூஉ, மனைமாட்சி, தாய்மை என்ற மூன்று நிலைகளிலும் அவள் காட்டும் அன்பின் அளவில் மாறுபாடு உண்டு என்றாலும் அன்பு மாறுவதில்லை. மகடூஉவில் அன்பினைப் பெறுபவளாக, மனைமாட்சியில் அன்பைப் பயில்பவளாக, தாய்மையில் அன்பில் முதிர்ந்தவளாக விளங்குகின்ற பெண்ணைக் குறிக்கும் பல்வேறு பெயர்களும் அன்பு சார்ந்ததாகவே அமைக்கப்பட்டுள்ளது என்பது வியப்பானதே.

தாய் மற்றும் மனைவியைக் குறிக்கும் பல்வேறு தமிழ்ப் பெயர்களையும் அவற்றில் இருந்து அன்பினைக் குறிக்கும் பல்வேறு தமிழ்ப் பெயர்கள் எவ்வாறு தோற்றம் பெற்றன என்பதைப் பற்றியும் கீழே விரிவாகக் காணலாம்.

அம்மா என்னும் தாய்மை:

அம்மா என்பதை ஒரு சொல் என்று கூறுவதைக் காட்டிலும் ஒருவரிக் கவிதை என்றே கூறலாம். மழலையின் முதல் சொல் அம்மா. எதையுமே அறியாத புதிய உலகில் யாருமே சொல்லித் தராமல் ஒரு மழலை தானே மிழற்றும் முதல் சொல் அம்மா. இப்படி எத்தனை கவிதைகளை வேண்டுமானாலும் அம்மாவுக்காகப் படைக்கலாம். அத்தனை படைத்த பின்னரும் இன்னும் படைக்க வேண்டும் என்ற ஆவலே மிஞ்சும். அதுதான் அம்மா. அன்பின் ஊற்றுக் கண்ணாக விளங்கும் அம்மாவைக் குறிக்கும் பல்வேறு பெயர்களையும் அவற்றில் இருந்து உருவான அன்பைக் குறிக்கும் சொற்களையும் கீழே காணலாம்.

அம்மா >>> அமர்
அன்னை >>> அன்பு
அவ்வை >>> அவா, ஆவல்
ஆச்சி >>> ஆசை, ஆசு
தாய் >>> தயை, தயவு
தாய் >>> தாயிகம் >>> த்யாக~ >>> தியாகம் = தன்னலமின்மை.
ஞாய் >>> நயம், நேயம், நேசம்
யாய் >>> யாப்பு
ஆத்தாள் >>> ஆத்தம், ஆதம்
ஈந்தாள் >>> இதம்
செவிலி >>> சேவை
பயந்தாள் >>> பாசம்
மாதிரு >>> மாதர்
மவ்வை >>> மேவல்
மோய் >>> மோகம்
வீரை >>> பிரியம்
தள்ளை >>> தளை

பி.கு: மேற்காணும் பெயர்கள் அனைத்தும் தமிழே. 

மனைவி என்னும் மனைமாட்சி:

இல்லறத்தைக் கற்பவளாக இருப்பதால் மனைவிக்குக் கற்பாள் என்ற பெயருண்டு. இல்லத்தை ஆள்பவளாக இருப்பதால் அவளுக்கு இல்லாள் என்ற பெயருமுண்டு. மனைவியைக் குறிக்கும் தமிழ்ச் சொற்களில் இருந்து தோன்றிய அன்பினைக் குறிக்கும் தமிழ்ப் பெயர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

மனைவி >>> முன்னம்
கற்பாள் >>> கிருபை
இல்லாள் >>> ஈர், ஈரம்

மனைவியைக் குறிக்கும் பெயர்களில் இருந்து அன்பைக் குறிக்கும் பெயர்கள் தோன்றியதைக் காட்டிலும் அன்பைக் குறிக்கும் பெயர்களில் இருந்து மனைவியைக் குறிக்கத் தோன்றிய பெயர்களே மிக அதிகம். காரணம், திருமணத்திற்குப் பின்னர் அன்பைப் பயிலும் இடமாக மனைவி மாறிவிடுவதே. தாயிடம் பெற்ற அன்பினைக் கணவனின்மேல் காதலாகக் காட்ட, அதற்குக் கைம்மாறாக கணவன் பொழியும் அன்பு மழையில் குழைந்த செம்மண் நிலமாக மாறுவாள் மனைவி. இப்படியாக, கணவனின் மேல் மனைவி காட்டும் அன்பினைக் காதல் என்றும் நட்பு என்றும் கூறலாம். அன்பு / காதல் / நட்பினைக் குறிக்கும் பல்வேறு தமிழ்ச் சொற்களில் இருந்து மனைவியைக் குறிக்கும் பல்வேறு பெயர்கள் எவ்வாறு தோன்றின என்று கீழே விரிவாகக் காணலாம்.

கிழமை >>> கிழத்தி >>> களத்திரம்
கிழமை >>> கிழவி >>> களம்
பற்று >>> பத்து >>> பத்தினி
பரிவு >>> பாரி, பாரியை
நசை >>> நாச்சி
அருத்தி >>> அருந்ததி
தருமம் >>> தாரம்
காதல் >>> காந்தை
காமம் >>> காமினி
சால்பு >>> சாலி, சாலினி
தேம் >>> தேவி
நயம் >>> நாயகி
மதுகை >>> வதுகை, வது
வேட்கை >>> வேட்டாள்
சாயல் >>> சாயை
நார் >>> நாரி
கருணை >>> காரிகை
பெட்டு >>> பெண்டு, பெண்டாட்டி
விருப்பம் >>> வீரை

பி.கு: மேற்காணும் பெயர்கள் யாவும் தமிழ்ச் சொற்களே.

முடிவுரை:

இதுவரை கண்டவற்றில் இருந்து, பெண்ணைக் குறிப்பதற்கு எத்தனைப் பெயர்ச் சொற்கள் தமிழில் இருக்கின்றன என்று மேலே கண்டோம். அப் பெயர்ச் சொற்களுடன் அன்பினைக் குறிக்கும் தமிழ்ப் பெயர்களுக்கான உறவினையும் கண்டோம். இப்படி தனது வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் அன்பின் ஊற்றுக்கண்ணாக பெண் விளங்குவதால் தான் பெண்ணாகப் பிறப்பதற்கு மிகப்பெரிய தவம் செய்திருக்க வேண்டும் என்று சொன்னான் பாரதி. பாரதியின் வாக்கு எந்த அளவிற்கு உண்மை என்பதும் ஏன் பெண்கள் மட்டும் இவ்வளவு பாசத்துடன் இருக்கிறார்கள் என்பதும் விளங்கியிருக்கும். எனவே எந்தவொரு சூழலிலும் பெண்ணை நேசியுங்கள்; கொடுமைப் படுத்த வேண்டாம்; பாலியல் வன்கொடுமை அறவே வேண்டாம்.

மகளை நேசிப்போம் !
மனைவியை மதிப்போம் !!
மவ்வையைப் போற்றுவோம் !!!
அனைத்துப் பெண்களுக்கும்
அன்புடன் சமர்ப்பணம் !!!!

2 கருத்துகள்:

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.