வியாழன், 7 நவம்பர், 2019

கோவில், கோயில் - எது சரியான சொல்?.எப்படி?


முன்னுரை:

கோவில், கோயில் – என்ற இரண்டு தமிழ்ச் சொற்களும் தமிழர்களிடையே பன்னெடுங் காலமாகவே புழக்கத்தில் இருந்து வருகிறது. இருந்தாலும், இந்த இரண்டு சொற்களில் இலக்கணப்படி எது சரி? என்ற கேள்வியும் பல ஆண்டுகளாகவே இருந்து வருகிறது. கோவில் என்பதே சரி என்று ஒரு சாராரும் கோயில் என்பதே சரியென்று இன்னொரு சாராரும் விடைகூறி வருகின்றனர். இந்த இரண்டு விடைகளில் எது சரி?. எப்படிச் சரி?. என்று தமிழ் இலக்கணம் மற்றும் இலக்கிய நூல்களின் உதவியுடன் இங்கே விரிவாகக் காணலாம்.

உயிர் முன் உயிர் புணர்ச்சி

கோ என்னும் தமிழ்ச் சொல்லுக்கு இறைவன், தலைவன், அரசன் என்றெல்லாம் பொருளுண்டு. இல் என்னும் தமிழ்ச் சொல்லானது இருக்கும் வீட்டைக் குறிக்கும். இறைவனின் இல்லத்தைக் குறிப்பிடுவதற்கு இந்த இரண்டு சொற்களையும் புணர்த்திக் கூறவேண்டும். அதாவது,

கோ + இல் = இறைவனின் இல்லம்.

இதில் கோ என்னும் சொல்லின் இறுதியில் ஓ எனும் உயிர் தொக்கி நிற்கிறது. இல் என்னும் சொல்லின் முதலில் இ என்னும் உயிர் குறித்து நிற்கிறது. ஓ, இ என்ற இரண்டு உயிர்களும் புணரும்போது / சேரும்போது என்ன மாற்றங்கள் விளையும் என்று தமிழ் இலக்கண நூல்கள் கூறியுள்ளன. இதைப்பற்றி முதலில் காணலாம்.

தொல்காப்பியம் காட்டும் விதிகள்:

உயிர் முன் உயிர் புணர்ச்சி பற்றித் தொல்காப்பியர் எழுத்ததிகாரம் புணரியலில் 5 ஆம் பாடலில் முதன்முதலில் இவ்வாறு கூறுகிறார்.

உயிர் இறு சொல் முன் உயிர் வரு வழியும்
உயிர் இறு சொல் முன் மெய் வரு வழியும்
மெய் இறு சொல் முன் உயிர் வரு வழியும்
மெய் இறு சொல் முன் மெய் வரு வழியும் என்று
இவ் என அறியக் கிளக்கும் காலை
நிறுத்த சொல்லே குறித்து வரு கிளவி என்று
ஆயீர் இயல புணர் நிலைச் சுட்டே.- 5

இப்பாடலில் நிறுத்த சொல் என்பது நிலைமொழியைக் குறிக்கும். குறித்துவரு கிளவி என்பது வருமொழியைக் குறிக்கும். இந்த இரண்டு வகையானும் புணர்ச்சி மாறுபடும் என்று இப் பாடலில் கூறுகிறார். இப்பாடலில் உயிர் முன் உயிர் மட்டுமின்றி ஏனைய வகையினையும் குறிப்பிடுகிறார். இதனை அடுத்து வரும் பாடல்களில் புணர்ச்சியின் போது என்னென்ன மாற்றங்கள் விளையும் என்று கீழ்க்காணுமாறு கூறுகிறார்

நிறுத்த சொல்லின் ஈறு ஆகு எழுத்தொடு
குறித்து வரு கிளவி முதல் எழுத்து இயைய
பெயரொடு பெயரைப் புணர்க்குங் காலும்
பெயரொடு தொழிலைப் புணர்க்குங் காலும்
தொழிலொடு பெயரைப் புணர்க்குங் காலும்
தொழிலொடு தொழிலைப் புணர்க்குங் காலும்
மூன்றே திரிபுடன் ஒன்றே இயல்பு என
ஆங்கு அந் நான்கே மொழி புணர் இயல்பே. - 6

மேற்காணும் 6 ஆவது பாடலில், மூன்று வகைத் திரிபுகளும் திரிபில்லாத இயல்பு ஒன்றும் என்று நான்கு வகையான புணர்ச்சிகள் உண்டு என்கிறார்.

அவைதாம், மெய் பிறிது ஆதல் மிகுதல் குன்றல்
என்று இவ் என மொழிப திரியும் ஆறே. - 7

மேற்காணும் 7 ஆவது பாடலில் அந்த மூன்றுவகைத் திரிபுகள் எவை என்று கூறுகிறார். மெய் வேறாகுதல், மிகுதல், கெடுதல் என்பவையே அந்த மூன்று வகையான திரிபுகள் என்று விளக்குகிறார்.

அவ்வளவுதான், இதற்கப்புறம் உயிர் முன் உயிர் பற்றிய பாக்கள் வரவில்லை. இறுதியாக, கீழ்க்காணும் பாடல்களில் உயிர் முன் உயிர் புணர்ச்சி பற்றிப் பேசுகிறார்.

எல்லா மொழிக்கும் உயிர் வரு வழியே
உடம்படுமெய்யின் உருபு கொளல் வரையார். 38

பொருள்: நிலைமொழி, வருமொழி என்று எல்லா மொழியிலும் உயிர் முதலிலோ ஈற்றிலோ வரும்போது உடம்படுமெய் என்னும் எழுத்து தோன்றும். ஆனால் இன்னது தான் தோன்றும் என்று வரைய மாட்டார்.

இந்தப் பாடல் மிக முகன்மையானது. தொல்காப்பியர் மேற்சொன்ன பாடலில் கூறியுள்ள கருத்தைக் கவனியுங்கள். உடம்படுமெய்யாக இன்ன எழுத்துதான் தோன்றும் என்று வரையறுக்க மாட்டார் என்று கூறுகிறார். ஏன் இவ்வாறு அவர் கூறவேண்டும்.?. என்று நம்மில் சிலர் நினைக்கக் கூடும். அதனால் அதற்கான காரணத்தையும் அடுத்த பாடலில் அவரே கூறிவிட்டார். .

எழுத்து ஓரன்ன பொருள் தெரி புணர்ச்சி
இசையின் திரிதல் நிலைஇய பண்பே. 39

பொருள்: ஒரே எழுத்தாக இருந்தாலும் பொருள்கொள்ளும் நிலையில் இசைக்கேற்பத் திரிவதே புணர்ச்சிக்குரிய நிலையான பண்பாகும். அதாவது, ஒரே எழுத்தே இடத்திற்கேற்ப தனது இசையில் / ஒலியில் திரியும் என்று கூறுகிறார். இதற்கொரு சரியான எடுத்துக்காட்டே கோவில் - கோயில் ஆகும். அதாவது, கோ, இ ஆகிய எழுத்துக்களே புணரும் இடத்திற்கேற்ப இசையில் திரியும் என்பது இதன் பொருளாகும். இதன்படி,

கோ + இல் = கோயில் என்றும்
கோ + இல் = கோவில் என்றும் ஆகும். இதிலிருந்து,

தொல்காப்பியப் புணரியல் நூற்பா 39 ல் கூறியுள்ளபடி, கோ + இல் என்பது கோவில் என்றாவதும் கோயில் என்றாவதும் சரியே என்றாகிறது.

மேற்காணும் நூற்பாவிற்கு எடுத்துக்காட்டாகச் சங்க இலக்கியங்களில் இருந்தும் சில சான்றுகளைக் கீழே காணலாம். மா என்னும் சொல்லும் இகர முதல் சொற்களும் புணரும்போது இருவகையாகப் புணர்வதைக் கீழே காணலாம்.

மாயிருள் ஞாலம் மறுவின்றி விளங்க - திரு 91
மணி வார்ந்து அன்ன மாயிரு மருப்பின் - பெரும் 14
மாயிரும் குருந்தும் வேங்கையும் பிறவும் - குறி 95

மேற்காணும் பாடல்களில் வரும் மாயிரு என்பது யகர உடம்படுமெய் பெற்று வந்துள்ளது. அதாவது, மா + இரு = மா + ய் + இரு = மாயிரு.

தொன் மாவிலங்கை கருவொடு பெயரிய - சிறு 119
நன் மாவிலங்கை மன்னருள்ளும் - சிறு 120

மேற்காணும் பாடல்களில் வரும் மாவிலங்கை என்பது வகர உடம்படுமெய் பெற்று வந்துள்ளது. அதாவது, மா + இலங்கை = மா + வ் + இலங்கை = மாவிலங்கை.

இதுவரை கண்டவற்றில் இருந்து, தொல்காப்பியத்தின்படி, உயிர் முன் உயிர் புணர்ச்சியின்போது தோன்றும் உடம்படுமெய் இன்னதென்று வரையறுக்கப் படவில்லை என்றும் இடத்திற்கேற்பத் திரியும் என்றும் புரிந்து கொள்ளலாம்.

நன்னூல் காட்டும் விதிகள்:

உயிர் முன் உயிர் புணர்ச்சி பற்றித் தொல்காப்பியர் கூறியுள்ள அளவுக்குப் பல பாடல்களை நன்னூலார் இயற்றவில்லை. மாறாகத், தொல்காப்பியர் இன்னதென்று விளக்கமாகக் கூறாத உடம்படுமெய் பற்றி விளக்கமாகக் கீழ்க்காணும் ஒற்றைப் பாடலில் கூறிச் சென்றுவிட்டார். 

இ ஈ ஐ வழி “ய” வ்வும்
ஏனை உயிர்வழி “வ” வ்வும்
ஏமுன் இவ் இருமையும்
உயிர்வரின் உடம்படுமெய் என்றாகும்…. - நன்னூல். 162

பொருள்: இ, ஈ, ஐ என்ற உயிர்கள் யகர மெய்யினையும் ஏனைய உயிர்கள் வகர மெய்யினையும் ஏகார உயிர் மட்டும் யகர வகர மெய்கள் இரண்டையும் உடம்படுமெய்யாகப் பெறும். 

தொல்காப்பியர் தொல்காப்பியத்தில் உயிர் முன் உயிர் புணர்ச்சியில் தோன்றும் உடம்படுமெய்கள் இன்னவை என்று வரையறுக்கவில்லை. ஆனாலும் அவருக்குப் பின்னர் வந்த நன்னூலார் சங்க இலக்கியங்களை ஆராய்ந்து அவற்றில் வரும் உடம்படுமெய்களை உற்றுநோக்கித் தனது நூலில் பதிவுசெய்து விட்டார்.

நன்னூலின் மேற்காணும் விதி 162 ஐப் பற்றிப் பலரும் பலவித கருத்துக்களைப் பதிந்துள்ளனர். அதாவது, இந்த விதி ஒருதலையாக உள்ளது என்றும் இலக்கியங்களில் உள்ள அனைத்துவகைப் புணர்ச்சிகளையும் இது சுட்டவில்லை என்றும் கூறுகின்றனர். இதற்கொரு சான்றாகக் கோயில் என்னும் சொல்லைக் காட்டுகின்றனர்.

நன்னூலாரின் விதிப்படி, கோ என்னும் சொல்லானது இல் என்னும் சொல்லுடன் புணரும்போது வகர உடம்படுமெய் பெற்றுக் கோவில் என்றுதானே புணரவேண்டும். ஆனால், சங்க இலக்கியங்களில் கோவில் என்று வராமல் கோயில் என்ற சொல்லே கீழ்க்காணும் பாடல்களில் வந்திருப்பதைச் சுட்டிக் காட்டுகின்றனர்.

திரு கிளர் கோயில் ஒரு சிறை தங்கி - பொரு 90
வெண் கோயில் மாசு ஊட்டும் - பட் 50
அரும் பொகுட்கு அனைத்தே அண்ணல் கோயில் - பரி 30
வாயில் விடாது கோயில் புக்கு எம் - புறம் 67
சாயின்று என்ப ஆஅய் கோயில் - புறம் 127
நல் தார் கள்ளின் சோழன் கோயில்.. - புறம் 378

ஆராய்ந்து பார்த்தால், நன்னூலார் சரியாகத் தான் கூறியிருக்கிறார் என்றும் அதனைப் புரிந்துகொள்வதில் தான் தவறு நேர்ந்துள்ளது என்றும் தெரிய வருகிறது. அதாவது, விதி 162 ல் இ ஈ ஐ ஆகியவை உயிர்வரின் யகர உடம்படுமெய் பெறும் என்றார். இந்த வரிக்குக் கீழ்க்காணும் இரண்டு வகைகளில் பொருள் கொள்ளலாம்.

(இ / ஈ / ஐ) + உயிர் = (இ / ஈ / ஐ) + ய் + உயிர் ………… (1) - நேர்வகை

உயிர் + (இ / ஈ / ஐ) = உயிர் + ய் + (இ / ஈ / ஐ) ……………(2) - உத்திவகை

முதலாவதாக உள்ள நேர்வகையில் இ / ஈ / ஐ ஆகியவை நிலைமொழி ஈற்றில் வந்து உயிருடன் புணரும். விதியில் இருந்து நேரடியாக அறியப்படும் கருத்து என்பதால் இது நேர்வகை ஆகும். இரண்டாவதாக உள்ள உத்திவகையில் இ / ஈ / ஐ ஆகியவை வருமொழி முதலில் வந்து உயிருடன் புணரும். விதியில் இருந்து நேரிடையாக அறியப்படாமல் உத்தி முறையில் அறியப்படும் கருத்து என்பதால் இது உத்திவகை ஆகும். நன்னூல் விதி 162 சுட்டுவது மேற்காணும் இருவகைப் புணர்ச்சிகளையும் ஆகும். இந்த இரண்டு வகைகளையும் எளிதாகப் புரிந்துகொள்ள ஒரு எடுத்துக்காட்டினைக் கீழே பார்க்கலாம்.

மணி + ஆரம் = மணி + ய் + ஆரம் = மணியாரம் ……….. (1)
மா + இருள் = மா + ய் + இருள் = மாயிருள் …………. (2)

இல்லை இல்லை, முதலாவது புணர்ச்சியே சரியென்றும் இரண்டாவது சரியல்ல என்றும் கூறமுடியாது. ஏனென்றால், இந்த இரண்டிலும் ஒரே வகையான எழுத்துக்களே அதாவது ஆகாரமும் இகரமுமே புணர்கின்றன. அதுமட்டுமின்றி, உயிர் வரின் என்று பாடலில் இருப்பதால் அது வருமொழியை மட்டுமே குறிக்கும் என்றும் அது முதலாவது புணர்ச்சியை மட்டுமே குறிக்கும் என்றும் கருதக் கூடாது. ஏனென்றால், ஒன்றை மட்டும் விளக்கமாகக் கூறி அதனுடன் தொடர்புடைய இன்னொன்றை விளக்கிக் கூறாமல் உய்த்துணர வைப்பது இலக்கண உத்திகளில் ஒன்று ஆகும். இந்த இருவகையான புணர்ச்சிகளிலும் ஒரேவகையான எழுத்துக்களே புணர்வதால் தனித்தனி பாக்களாக இயற்றாமல் ஒரே நூற்பாவில் இவற்றை அடக்கினார் என்க.

இதுவரை கண்டவற்றில் இருந்து, நன்னூல் விதிப்படி, கோயில், கோவில் என்ற சொற்களின் தோற்ற முறைகளைக் கீழே காணலாம்.

கோ + இல் = கோ + வ் + இல் = கோவில் ……….. (1) நேர்வகைப் படி
கோ + இல் = கோ + ய் + இல் = கோயில் ………. (2) உத்திவகைப் படி

ஆக, நன்னூல் விதி 162 ன் படி கோ + இல் என்பது கோவில் என்றாவதும் கோயில் என்றாவதும் சரியே என்றாகிறது.

முடிவுரை:

மேலே கண்டவற்றில் இருந்து, கோவில், கோயில் என்ற இரண்டு தமிழ்ச் சொற்களும் தொல்காப்பியம் மற்றும் நன்னூல் இலக்கணங்களின் படி அமைந்த சரியான சொற்களே என்பது உறுதியானது. தற்போது இந்த இரண்டு சொற்களையும் ஒரே பொருளில் நாம் பயன்படுத்தி வந்தாலும் இந்த இரண்டுக்கும் இடையில் ஒரு நுணுக்கமான வேறுபாடு உண்டு.  

கோவில் என்பதில் வில் என்று வருவதால், அது வளைக்கப்பட்ட வெளிப்புறப் பரப்பையும், கோயில் என்பதில் இல் என்று வருவதால், அது இறைவன் இருக்கும் உட்புற அறையையும் குறிப்பதாகக் கொள்ளலாம். .சுருக்கமாகச் சொல்வதானால்,

கோயில் = இறைவன் இருக்கும் கருவறை.
கோவில் = கோபுரமும் மதிலும் கொண்ட பரப்பு.
 

5 கருத்துகள்:

  1. இப்பதிவின் அடிப்படையில் நோக்கும்போது கோவிலில் (கோபுரமும் மதிலும் கொண்ட பரப்பு) கோயில் (இறைவன் இருக்கும் கருவறை) உள்ளது. இதனை ஆங்கிலத்தில் The temple (கோவில்) has a temple (கோயில்) என்று சொல்ல முடியாதே? மாற்றுவழி உள்ளதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோவிலுக்குள் கோயில் உள்ளதைப் போல the temple has a shrine inside.

      நீக்கு
    2. Shrine என்பதை சன்னதி என்றுதானே நாம் கொள்கிறோம்? மூலவர் இருக்கும் கருவறையை sanctum sanctorum என்கிறோம். அதனை shrine என்ற சொல் பொதுவாகச் சொல்லப்படுவதில்லையே? இங்கு sanctum sanctorumஐக்கூட shrine என்று கருதமுடியுமா?

      நீக்கு
  2. பதில்கள்
    1. Kovil is the name of the place where the koyil is built. 'Kovil' means 'Oor' the village or town. Koil is the specific temple.

      நீக்கு

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.