முன்னுரை:
கழுதை
- என்றாலே தெருக்களில் ஆங்காங்கே திரிந்தவாறு காகிதங்களையும் சுவரொட்டிகளையும் தின்றவாறும் கண்ட இடங்களில் படுத்துக்கொண்டும்
இருப்பதான அந்த 'பாவப்பட்ட' விலங்குதான்
அனைவருக்கும் நினைவுக்கு வரும். இப்போது காகிதங்களுக்குப்
பதிலாக நெகிழிப்பைகள் பெருகிவிட்டதால் பாவம் இந்தக் கழுதைகள்
அறியாமல் அவற்றைத் தின்று செரிக்கமுடியாமல் மரணத்தைத்
தழுவிக் கொண்டிருக்கின்றன. விளைவு? துணியை வெளுக்கும்
தொழிலைச் செய்வோரிடம் தவிர வேறெங்கும் கழுதைகளையே
பார்க்கமுடியாத நிலை தோன்றிவிட்டது. கழுதைப்பாலுக்கு
அவ்வப்போது மவுசு கூடுவதால் கழுதைகளை
இன்னும் உயிருடன் நடமாட விட்டிருக்கின்றார்கள். ஒருகாலத்தில் பொருள்
போக்குவரத்துக்கு மிகவும் உதவியாய் இருந்துவந்தது
கழுதை இனம் தான். மாடுகளும்
உதவும் என்றாலும் அதற்கு வண்டி கட்டவேண்டும்.
கழுதைக்கு மட்டும் தான் வண்டியே
தேவையில்லை. எவ்வளவு பெரிய பாரத்தினையும்
தாங்கிக்கொண்டு செல்லும். பொதி சுமப்பதற்கென்றே பிறந்த
இந்த விலங்கினைப் பற்றிச் சங்க இலக்கியங்கள்
கூறும் செய்திகளை இங்கே விரிவாகக் காணலாம்.
கழுதை
- வேறு பெயர்களும் காரணங்களும்:
கழுதை
என்னும் விலங்கினைக் குறிக்க கழுதை என்னும்
பெயரைத் தவிர, அத்திரி, வேசரி
ஆகிய பெயர்களையும் சங்க இலக்கியங்கள் பதிவு
செய்துள்ளன. இவற்றுள் அத்திரியும் வேசரியும் கோவேறு கழுதையைக் குறிக்கவே
பயன்படுத்தப் பட்டுள்ளன.
கோவேறு
கழுதை என்பது கழுதைக்கும் குதிரைக்கும்
கலப்பினமாகப் பிறந்ததாகும். அத்துதல் என்பது தனித்தனியான இரண்டு
பொருட்களை இணைத்து ஒன்றாக்குதல் என்னும்
பொருளைத் தரும். கழுதை இனத்தையும்
குதிரை இனத்தையும் கலந்து உருவாக்கிய இனம்
என்பதால் கோவேறு கழுதைக்கு 'அத்திரி'
என்ற பெயர் ஏற்பட்டிருக்கலாம்.
சங்க
இலக்கியத்தில் கழுதை:
சங்க
இலக்கியங்களில் கழுதையைப் பற்றியும் கோவேறுகழுதையைப் பற்றியும் சில பாடல்களில் கூறப்பட்டுள்ளன.
கழுதைளைப் பற்றிக் கூறும்போது அதன்
செவிகள் நீளமானவை என்றும் உட்குழிந்த நிலையில்
இருப்பவை என்றும் கூறப்பட்டுள்ளது. கழுதைகளின்
வாயானது வெளுப்பாக இருந்ததாகச் சங்க இலக்கியம் கூறுகிறது.
உப்பளங்களில் விளைந்த உப்பின் மூட்டைகளையும்
மிளகுப் பொதிகளையும் கழுதைகளின்மேல் ஏற்றிக்கொண்டு வணிகர்கள் சென்றதைப் பதிவுசெய்துள்ளன. போரில் வெற்றிபெற்ற மன்னர்கள்,
தோற்ற மன்னர்களின் ஊர்களில் இருந்த தெருக்களில் எல்லாம்
கழுதைகளைப் பூட்டி உழுது அவர்களை
அவமானப்படுத்திய செய்திகள் சங்க இலக்கியங்களில் காணப்பெறுகின்றன.
கோவேறுகழுதைகளைப் பற்றிக் கூறுமிடத்து, கடற்கழிகளிலும்
கடற்கரைகளிலும் அத்திரி பூட்டிய தேரில்
தலைவன் தலைவியைச் சந்திக்க வந்துசென்ற நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வையை
ஆற்றில் புனலாட்டு விழாவின்போது அத்திரிகளைப் பயன்படுத்திய செய்தியும் கூறப்பட்டுள்ளது. இனி கழுதைகளைப் பற்றியும்
கோவேறுகழுதைகள் ஆகிய அத்திரிகளைப் பற்றியும்
சங்க இலக்கியங்கள் கூறுகின்ற செய்திகளைத் தனித்தனித் தலைப்புக்களின் கீழ் விரிவாகக் காணலாம்.
கழுதை:
இந்தியாவில்
குறிப்பாகச் சங்ககாலத் தமிழர்களால் வளர்க்கப்பட்ட கழுதைகளின் விலங்கியல் பெயர் ஈகூஸ் ஆப்ரிகானஸ்
அசினஸ் ( Equus Africanus
Asinus ) ஆகும். கழுதைகளில் கருப்பு, பழுப்பு, வெளுப்பு உட்பட பல்வேறு நிறங்கள்
உண்டென்றாலும் உடலமைப்புக் கூறுகளும் பயன்பாடும் அனைத்துக்கும் பொதுவானவையே. இதைப்பற்றிய சில செய்திகளைக் கீழே
காணலாம்.
கழுதையின்
உடலமைப்பு:
கழுதையின்
செவிகள் குதிரைகளைக் காட்டிலும் நீளமானவை. சொல்லப்போனால், குதிரைக்கும் கழுதைக்கும் இருக்கும் முதல் வேறுபாடே செவிகள்
தான். கீழ்க்காணும் சங்க இலக்கியப் பாடல்
கழுதையின் நீண்ட செவிகளைப் பற்றிக்
கூறியுள்ளது.
நெடும்
செவிக் கழுதை - அகம். 343
கழுதையின்
செவிகளைப் பற்றிக் கூறுமிடத்து, அவை
உட்குழிந்து காணப்படும் என்று கீழ்க்காணும் பாடல்
கூறுகிறது.
அணர்
செவிக் கழுதை - பெரும்.80
இப்பாடலில்
வரும் அணர்தல் என்ற சொல்
உட்குழிதல் என்ற பொருள்படும்.
கழுதையின்
வாயைப் பற்றிக் கூறுமிடத்து, அவை
வெண்மை நிறத்துடன் இருந்ததாகக் கீழ்க்காணும் பாடல்களில் பதிவு செய்துள்ளனர் சங்கப்
புலவர்கள்.
வெள்
வாய்க் கழுதை - புறம். 15, 350.
கழுதையின்
பயன்பாடு:
சங்ககாலத்தில்
தமிழர்கள் பொதிசுமந்து செல்வதற்கே கழுதைகளைப் பெரிதும் பயன்படுத்தி இருக்கின்றனர். பெரும்பாலும் உப்பளங்களில் விளைந்த உப்பினை மூட்டைகளாகக்
கட்டிக் கழுதையின் முதுகில் ஏற்றிப் பல இடங்களுக்குக்
கொண்டு சென்றுள்ளனர். கடுமையான வெயிலைப் பொறுத்துக்கொண்டு கரடுமுரடான நிலங்களில் உப்புமூட்டைகளைச் சுமந்துகொண்டு கழுதைக் கூட்டம் சென்ற
காட்சியினைக் கீழ்க்காணும் அகநானூற்றுப் பாடல் அப்படியே நம்
கண்முன்னால் கொண்டுவந்து நிறுத்துவதைப் பாருங்கள்.
அணங்கு
உடை முந்நீர் பரந்த செறுவின்
உணங்கு
திறம் பெயர்ந்த வெண்கல் அமிழ்தம்
குட
புல மருங்கின் உய்ம்மார் புள் ஓர்த்து
படை
அமைத்து எழுந்த பெரும் செய்
ஆடவர்
நிரை
பர பொறைய நரைப்புறக் கழுதை
குறை
குளம்பு உதைத்த கல் பிறழ்
இயவின்
வெம்
சுரம் போழ்ந்த அஞ்சுவரு கவலை
- அகம். 207
கிழக்குக்
கடலோரங்களில் கடல்நீர் பரந்த உப்பளங்களில் காய்ச்சலால்
உண்டான வெண்கல் அமிழ்தமான உப்பினை
மேற்குப் பகுதிகளுக்குக் கொண்டுசெல்ல வேண்டி, நல்நிமித்தம் பார்த்து,
படைகொண்ட ஆடவர்கள் சூழ, உப்புமூட்டைகளைச் சுமந்தவண்ணம்
வரிசையாகச் செல்கின்ற வெண்ணிற முதுகினை உடைய
கழுதைகள் உதைத்ததால் பிறழ்ந்த கற்களையும் கடுமையான வெப்பத்தையும் உடைய அச்சந்தரும் வழியில்...
என்று அந்த வழியைப் பற்றி
விவரிக்கிறது மேற்காணும் பாடல்வரிகள்.
உப்பு
மட்டுமின்றி பல்வேறு விளைபொருட்களையும் கழுதைகளின்
முதுகில் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளனர். மஞ்சள்நிறத் துணிகளில் மிளகுகளைப் பெரும்பொதிகளாகக் கட்டிக்கொண்டு அவற்றைக் கழுதைகளின் முதுகில் ஏற்றிக்கொண்டு வணிகர்கள் வேறிடம் நோக்கிச் செல்கின்றனர்.
அப்போது அந்தப் பொதிமூட்டைகள் பார்ப்பதற்குப்
பழுத்த பலாப்பழங்களைப் போலத் தோன்றியதாகக் கீழ்க்காணும்
பாடல் கூறுகிறது.
தடவுநிலைப்
பலவின் முழுமுதல் கொண்ட
சிறுசுளைப்
பெரும்பழம் கடுப்ப மிரியல்
புணர்ப்பொறை
தாங்கிய வடுவாழ் நோன்புறத்து
அணர்செவிக்
கழுதைச் சாத்தொடு வழங்கு - பெரும்.80
பரந்து
விரிந்து வளர்ந்திருந்த பலாமரத்தின் அடியில் காய்த்திருந்த பல
சுளைகளையுடைய பெரிய பலாப்பழத்தின் மேற்புறம்
போலத் தோன்றுகின்ற மிளகுப்பொதியினைத் தாங்கியதும் முதுகில் வடுக்களையுடையதும் உட்குழிந்த செவிகளையுடையதும் ஆன கழுதைக்கூட்டம் செல்கின்ற
காட்சியை மேற்பாடல் வரிகள் விளக்குகின்றன.
கழுதைகளைப்
பொதிசுமப்பதற்கு மட்டுமின்றி உழவுக்கும் பயன்படுத்துவது பொதுவான வழக்கமே. ஆனால்,
சங்க காலத்தில் உழவர்கள் கழுதைகளைக் கொண்டு தமது விளைநிலங்களில்
உழவு செய்ததாகப் பதிவுகள் இல்லை. காரணம், மாடுகளைப்
பூட்டி உழுதல் என்பது பெருமைக்குரியதாகவும்
கழுதைகளைப் பூட்டி உழுதல் என்பது
பெருமையற்றதாகவும் அக்காலத்தில் கருதப்பட்டது. போரில் வெற்றிபெற்ற மன்னர்கள்,
தோற்றுப்போன மன்னர்களை அவமானப்படுத்துவதற்காக, அம்மன்னர்களின் கோட்டைக்குட்பட்ட நிலங்களில் கழுதைகளைப் பூட்டி உழுது வெள்ளைவரகு,
கொள்ளு போன்றவற்றை வித்தியதாகக் கீழ்க்காணும் புறநானூற்றுப் பாடல்கள் கூறுகின்றன.
உரு
கெழு மன்னர் ஆர் எயில்
கடந்து
நிணம்
படு குருதி பெரும் பாட்டு
ஈரத்து
அணங்கு
உடை மரபின் இரும் களம்தோறும்
வெள்வாய்க்
கழுதைப் புல்இனம் பூட்டி
வெள்ளை
வரகும் கொள்ளும் வித்தும்
வைகல்
உழவ வாழிய பெரிது என
- புறம். 392
கடும்தேர்
குழித்த ஞெள்ளல் ஆங்கண்
வெள்வாய்க்
கழுதைப் புல்இனம் பூட்டிப்
பாழ்
செய்தனை - புறம். 15
கோவேறுகழுதை
என்பது கழுதைக்கும் குதிரைக்கும் கலப்பினமாகப் பிறந்தது என்பதால் இரண்டின் குணங்களையும் கொண்டிருக்கும். எனவே இதன் விலங்கியல்
பெயர் ஈகுஸ் அசினஸ் x ஈகுஸ்
கபாலஸ் ( Equus asinus x
Equus caballus ) ஆகும். கழுதைகள் பொதிசுமக்கும் திறன் கொண்டவை; ஆனால்
கழுதைகளால் வேகமாக ஓடவோ நெடுந்தூரம்
ஓடவோ இயலாது. குதிரைகள் வேகமாக
நெடுந்தூரம் ஓடும் திறன் கொண்டவை.
ஆனால், அவற்றால் பொதிசுமக்க இயலாது. குதிரை மற்றும்
கழுதைகளின் கலப்பினமான கோவேறு கழுதைகளால் பொதிசுமக்கவும்
முடியும்; நன்கு வேகமாக ஓடவும்
முடியும். சங்க இலக்கியங்களில் அத்திரி
என்றும் வேசரி என்றும் இவை
குறிப்பிடப்பட்டுள்ளன.
கடற்கரை
மணற்பரப்பிலும், கடலின் கழிமுகப் பகுதிகளில்
காணப்படும் சேற்றுநிலங்களிலும் நீரிலும் கூட அத்திரிகள் பாய்ந்தோட
வல்லவை. அதனால் தலைவன் தலைவியைச்
சந்திக்க அத்திரி பூட்டிய தேரில்
வந்து செல்வது வழக்கம். இதைப்பற்றிக்
கூறும் சில சங்கப்பாடல்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ளன.
கொடு
நுகம் நுழைந்த கணைக்கால் அத்திரி
வடி
மணி நெடும் தேர் பூண
ஏவாது .... - அகம். 350
கழிமுகப்
பகுதியில் இருந்த சேற்றின்மேல் ஓடிவந்ததால்,
அத்திரியின் உடலெல்லாம் சேறுபூசி இருந்ததாகவும் அதன் குளம்புகளின் கீழே
செந்நிற இறால்கள் சிக்கி இருந்ததாகவும் கூறும்
பாடல்வரிகள் கீழே:
கழி
சேறு ஆடிய கணைக்கால் அத்திரி
குளம்பினும்
சேஇறா ஒடுங்கின - நற். 278
கழிமுகப்
பகுதியில் இரவிலே தலைவன் அத்திரியின்மீது
ஏறி வரும்போது கடற்கழி நீரில் இருந்த
சுறாக்கள் அத்திரியின் காலைக் கடித்துப் புண்
உண்டாகியதால் அது தளர்வாகச் சென்றதைக்
கூறும் பாடல்வரிகள் கீழே:
கழிச்சுறா
எறிந்த புண் தாள் அத்திரி
நெடு
நீர் இரும் கழி பரி
மெலிந்து அசைஇ - அகம். 120
வையை
ஆற்றில் புதுப்புனல் வந்தபோது புனலாட்டுத் திருவிழாவிற்கு ஆடவரும் பெண்டிரும் கூட்டம்
கூட்டமாகச் செல்கின்றனர். அப்போது அவர்களுடன் குதிரைகளும்
யானைகளும் கோவேறுகழுதைகளும் மக்களையும் பொருட்களையும் சுமந்துகொண்டு ஆற்றின்கரையே இடிந்துவிழுவதைப் போலச் செல்கின்றன. இதைப்பற்றிக்
கூறும் பரிபாடல் வரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
மாவும்
களிறும் மணி அணி வேசரி
காவு
நிறைய கரை நெரிபு ஈண்டி
- பரி. 22
முடிவுரை:
கழுதைகள்
மற்றும் கோவேறுகழுதைகளைப் பற்றிச் சங்க இலக்கியங்கள்
பதிவுசெய்துள்ள செய்திகளை மேலே கண்டோம். சங்ககாலத்தில்
மட்டுமின்றி இன்றுவரையிலும் கழுதைகள் தொடர்பான செய்திகள் தொடர்ந்து பதிவுசெய்யப்பட்டே வந்துள்ளன. கழுதைகள் தொடர்பாக வழங்கப்பட்டுவரும் பழமொழிகளே இதற்கொரு சான்றாகும். கழுதை கெட்டால் குட்டிச்சுவர்,
கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனது ஆகியவை அப்பழமொழிகளில்
சிலவாகும். இப்பழமொழிகள் உணர்த்தும் உண்மையான பொருட்களை அறிந்துகொள்ள 'கழுதையும் கட்டெறும்பும் குட்டிச்சுவரும் ' என்ற ஆய்வுக்கட்டுரையினைப் படிக்கலாம்.