ஞாயிறு, 20 செப்டம்பர், 2020

தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள் வந்தேறிகளா?

                                         


தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள் வந்தேறிகளா?

 முன்னுரை:

தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு கோவில்களில் பன்னெடுங் காலமாக இன்றுவரையிலும் மூலக் கடவுளுக்கும் துணைக் கடவுளர்க்கும் மந்திரம் ஓதி பூசை செய்து வருபவர்கள் பார்ப்பனர் ஆவர். இவர்களை அந்தணர், ஐயர், வேதியர் என்று அழைப்பதும் வழக்கமாக உள்ளது. இம் மக்கள் தமிழர்களே அல்லர் என்றும் இவர்கள் தமிழ்நாட்டுக்கு வந்தேறிகள் அதாவது வெளியில் இருந்துவந்து குடிபுகுந்தவர்கள் என்றும் பரவலான கருத்து பல காலமாகவே இருந்து வருகிறது. எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது மாதிரி இம் மக்களில் சிலர் தமக்குத் தாய்மொழி தமிழ் அல்ல சமக்கிருதமே என்று கூறி பகையுணர்வைப் பெருக்கி வருகின்றனர். தமிழகத்தில் வாழும் பலவகை மக்களால் வந்தேறி என்று தொடர்ந்து தூற்றப்பட்டு வரும் இம் மக்கள் உண்மையிலேயே யார்?. இவர்களின் பூர்வீகம் என்ன?. இவர்கள் தமிழகத்தின் வந்தேறிகள் தானா?. என்பதைப் போன்ற பல கேள்விகளுக்கான விடைகளைச் சங்க இலக்கியம் மற்றும் தொல்காப்பிய நூல்களில் கூறப்பட்டுள்ள செய்திகளை அடிப்படையாகக் கொண்டு காண முயல்வதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.

 சாதியும் தமிழகமும்:

 பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான் – குறள். 972

 என்று கூறுவார் வள்ளுவர். பிறப்பினால் ஒருவருக்கு ஏற்ற தாழ்வு உண்டாவதில்லை; அவர் செய்யும் செயல் / தொழிலின் மூலமே அவருக்குச் சிறப்பும் இழிவும் அமைகிறது என்பதே இக் குறளின் விளக்கமாகும். ஆதியில் செய்யும் தொழிலால் வெறும் உயர்வோ தாழ்வோ மட்டுமே பெறப்பட்ட நிலையில் காலப்போக்கில் அதுவே சாதீய அமைப்பிற்கு அடிகோலி விட்டது. ஆதியில், சிறப்புடைய தொழிலைச் செய்வோரை உயர்ந்தோர் அல்லது மேல்சாதி என்றும் இழிவான தொழிலைச் செய்வோரைத் தாழ்ந்தோர் அல்லது கீழ்சாதி என்றும் இரண்டு வகைகளாகப் பாகுபடுத்தினர். பின்னர் ஒவ்வொரு வகையுள்ளும் பல உட்பிரிவுகள் தோன்றலாயிற்று. இன்றைய நிலையில் தமிழகத்தில் மட்டும் ஆயிரக்கணக்கான சாதிகள் இருந்து வருகின்றன.

 தமிழகத்தில் உள்ள சாதீயப் பிரிவுகளின் தோற்ற காலத்தை மிகச் சரியாக கணக்கிட முடியாது. எப்போது பெருமையும் சிறுமையும் மக்களுக்குள் தோன்றியதோ அப்போதே சாதீயம் பிறந்துவிட்டது எனலாம். சாதீய உணர்வின் தாக்கம் பழங்காலத் தமிழர் சமுதாயத்திலும் இருந்தது என்பதனைச் சங்க இலக்கியம் மற்றும் தொல்காப்பியப் பாடல்களின் வழியாக அறிய முடிகிறது.

 தமிழகத்துப் பார்ப்பனர்கள் வந்தேறிகளா?

 தமிழகத்துப் பார்ப்பனர்கள் வந்தேறிகளா? என்று கேட்டால் இல்லை என்பதே மிகப் பொருத்தமான சரியான விடையாக இருக்கும். காரணம், ஏறத்தாழ 3000 ஆண்டுகளுக்கு முற்பட்டதான தொல்காப்பியத்திலும் சரி, சங்க இலக்கியத்திலும் சரி இம்மக்களின் பெயர்களான பார்ப்பனர் / பார்ப்பார், அந்தணர், ஐயர், வேதியர் ஆகியவை ஏராளமான பாடல்களில் இடம்பெற்று உள்ளன. கீழ்க்காணும் அட்டவணையில் அந்தப் பாடல்களின் எண்ணிக்கை பற்றிய புள்ளி விவரங்களைக் காணலாம்.


பெயர்

தொல்காப்பியம்

சங்க இலக்கியம்

மொத்தம்

பார்ப்பனர்

6

21

27

அந்தணர்

5

40

45

ஐயர்

2

5

7

வேதியர்

0

1

1

மொத்தம்

13

67

80

ஆக மொத்தம் எண்பது பாடல்களில் இம் மக்களது பெயர்கள் இடம்பெற்றுள்ளன. உழவர், வணிகர், அரசர், பாணர், பொருநர், கூத்தர், துடியர், குயவர், தச்சர், பறையர் என்று பல்வேறு சாதியினரின் பெயர்களும் சங்க இலக்கியம் மற்றும் தொல்காப்பியப் பாடல்களில் இடம்பெற்று இருந்தாலும் இவ்வளவு எண்ணிக்கையில் இல்லை என்று உறுதியாகக் கூறலாம். பார்ப்பனர்கள் தமிழகத்தின் வந்தேறிகள் இல்லை; அவர்கள் தமிழகத்தின் பூர்வீகக் குடிகள் தான் என்று நிரூபணம் செய்வதற்குச் சங்க இலக்கியம் மற்றும் தொல்காப்பியத்தில் மிக அதிக எண்ணிக்கையில் இடம் பெற்றிருக்கும் ஒரே சாதி என்ற ஒரு தரவு மட்டுமே போதுமானது தான். இருந்தாலும் மேலும் பல தரவுகளைக் கொண்டு இக் கூற்றினை மிக ஆழமாக மெய்ப்பிக்கலாம்.

 சங்க இலக்கியத்தில் அந்தணர்:

 சங்க இலக்கியத்தில் வரும் அந்தணர் என்ற சொல்லானது கீழ்க்காணும் மூன்று பொருட்களில் பயன்பட்டுள்ளது.   

 1.   இறைவன்

2.   வேதியன்

3.   உழவன்

 மேற்காணும் மூன்று பொருட்களில், இறைவன், வேதியன் என்ற பொருட்களைத் தமிழ் அகராதிகளில் காணலாம். அந்தணர் என்பது உழவர் என்னும் புதிய பொருளையும் குறிக்கும் என்பதைப் பற்றிப் பல ஆதாரங்களுடன் அறவாழி அந்தணன் என்ற ஆய்வுக் கட்டுரையில் அறிந்து கொள்ளலாம். அதுமட்டுமின்றி, வேதம் ஓதுவோரைப் புரிநூல் அந்தணர் என்றும் உழவுத் தொழில் செய்வோரை விரிநூல் அந்தணர் என்றும் கீழ்க்காணும் பரிபாடல் செய்யுளும் கூறுவதைப் பார்க்கலாம்.

 மா இரும் திங்கள் மறு நிறை ஆதிரை

விரிநூல் அந்தணர் விழவு தொடங்க

புரிநூல் அந்தணர் பொலம் கலம் ஏற்ப – பரி. 11

 மார்கழி மாத முழுநிலா நாளில் திருவாதிரை நட்சத்திரத்தில் விரிநூல் அந்தணர் ஆகிய உழவர்கள் வேளாண் விழாவைத் தொடங்கினார்கள் என்றும் புரிநூல் அந்தணர் ஆகிய வேதம் ஓதுவோர் பரிசுகளைப் பெற்றார்கள் என்றும் மேற்பாடல் வரிகள் கூறுகின்றன.

 அந்தணன் – பெயர் விளக்கம்:

 அந்தணன் என்ற சொல்லுக்கு இறைவன், வேதியன், உழவன் என்ற மூன்று பொருட்கள் இருப்பதாக மேலே கண்டோம். இந்த மூன்று பொருட்கள் தோன்றிய முறைகளைக் கீழே காணலாம்.

 (1). அந்தம் (=இன்மை) + அணை (=பிற, இற) + அன் = அந்தணன் = பிறப்பும் இறப்பும் இல்லாதவன் = இறைவன்.

 (2) அந்தி (=மாலை, தீ) + அணை (=உண்டாக்கு) + அன் = அந்தணன் = மாலைநேரத்தில் தீயை உண்டாக்குபவன் = வேதியன்.

 (3) அறை (=நிலம், பாத்தி) + அணி (=அழகு) + அன் = அற்றணன் >>> அத்தணன் >>> அந்தணன் = நிலத்தைப் பாத்திசெய்து அழகாக்குபவன் = உழவன்.

 வேதிய அந்தணர் பற்றிய செய்திகள்:

 சங்க இலக்கியம் மற்றும் தொல்காப்பியப் பாடல்களை விரிவாக ஆய்வு செய்ததில், வேதிய அந்தணர் என்னும் மக்கள் குறித்து கீழ்க்காணும் செய்திகள் பெறப்பட்டன.

 1.   அந்தணர்கள் தீமூட்டி யாகம் வளர்த்தார்கள். அந்த யாகத்தீயானது நீரில் மலர்ந்த செந்தாமரை போலத் தோன்றியது.

ஆதாரம்: திருமு. 96, பெரும். 315, பதி. 64, கலி. 36, புறம். 122, 361, 397.

2.   அந்தணர்கள் வேதம் ஓதினார்கள். அவர்கள் ஓதிய மந்திர ஒலியானது பூக்களை மொய்க்கும் வண்டுகள் இசைக்கும் ஒலியைப் போல இருந்தது.

ஆதாரம்: பரிபா. 1,2,3,4, மது. 656, புறம். 1, சிறு. 204, ஐங்கு. 387, தொல்.எழுத்.பிற.20,  

3.   மாலைநேரத்தில் அந்தண ஆண்கள் வீட்டிற்கு வெளியே தீமூட்டி அந்திக்கடன் முடித்தார்கள். அந்தண மகளிர் பூச்சூடி வீட்டிற்கு உள்ளே விளக்கேற்றி வழிபட்டார்கள்.

ஆதாரம்: கலி.119, புறம்.2, குறி. 225.

4.   அந்தணர்கள் செய்த தொழில்கள் மொத்தம் ஆறு. அவை (1) வேதம் ஓதுதல், (2) ஓதுவித்தல் / கற்பித்தல், (3) யாகத்தீ வளர்த்தல், (4) தீ வளர்ப்பித்தல் / சமையல் செய்தல், (5) தானம் கொடுத்தல், (6) தானம் பெறுதல்.

ஆதாரம்: பதி. 24, கலி. 1, புறம். 397

5.   அந்தணர்களின் வீடுகள் பார்ப்பதற்கு மலைக்குடைவு போலத் தோன்றியது. இதிலிருந்து, அந்தணர்களின் வீடுகள் மேலே மலைபோலக் குவிந்த புற்களால் ஆன கூரையைக் கொண்டிருந்தது என்பதை அறிந்து கொள்ளலாம்.

ஆதாரம்: மது. 474.

6.   அந்தணர்களின் திருமணத்தின் போது மணமகனும் மணமகளும் புத்தாடை அணிந்து விரலைப் பற்றிக் கொண்டு தீயை வலம் வந்தார்கள்.

ஆதாரம்: கலி. 69

7.   அந்தணர்களுக்கு உரிய பொருட்களாகக் குடை, மறைநூல், நீர்க்கரகம் / கமண்டலம், உட்காரும் மனை, முக்கோல் என்னும் தண்டு ஆகியவை கூறப்பட்டுள்ளன.

ஆதாரம்: கலி. 9, 126, தொல். மர. 70. 

8.   அந்தணர்களுக்கு இரு பிறப்பு என்றும் இரண்டு பெயர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆதாரம்: பரி. 14, புறம். 367

9.   எண்ணைப் பிசுக்கற்ற, கலங்கலற்ற, பூக்களும் நறுமணமும் அற்ற தூய ஆற்றுநீரில் மட்டுமே அந்தணர்கள் தம்மைச் சுத்தம் செய்து கொள்வர்.

ஆதாரம்: பரி. 24

10.  அந்தணர்கள் புரிநூல் அணிந்தனர்.

ஆதாரம்: பரி. 11

11.  அந்தணர்கள் பிறரது குடும்பத்தில் சண்டை ஏற்பட்டால் கணவன் மனைவியரிடையே சமரசம் செய்து வைக்கும் தூதராகவும் இருந்தனர்.

ஆதாரம்: கலி. 72

 சங்க இலக்கியத்தில் பார்ப்பனர்:

 சங்க இலக்கியத்தில் பார்ப்பனர் எனப்படுவோர் பார்ப்பார் என்ற சொல்லாலும் குறிப்பிடப்பட்டுள்ளனர். முதலில் இப் பெயர்களுக்கான விளக்கங்களைக் கீழே காணலாம்.

 (1). பாற்பு (=பால்நிறம்) + ஆணம் (=உடல்) + அர் = பாற்பாணர் >>> பார்ப்பனர் = பால்நிறத்து உடலைக் கொண்டவர்.

 (2). பாற்பு (=பால்நிறம்) + ஆர் = பாற்பார் >>> பார்ப்பார் = பால்நிறத்தவர்.

 பார்ப்பனர்கள் பால்போல வெளுத்த அழகிய தோற்றத்தைக் கொண்டவர்கள் என்பதைக் கீழ்க்காணும் பாடல் வரிகளின் மூலமாகவும் அறிய முடிகிறது.

 ஆவும் ஆன் இயல் பார்ப்பன மாக்களும் – புறம். 9

(பொருள்: பசுக்களும் பசுவைப் போன்ற நிறமும் குணமும் கொண்ட பார்ப்பன மக்களும் ... )

 கல் தோய்த்து உடுத்த படிவ பார்ப்பான்  – முல். 37

(பொருள்: காவிநிறம் தோய்த்து உடுத்திய அழகிய தோற்றங்கொண்ட பார்ப்பான். )

 இனி, சங்க இலக்கியம் மற்றும் தொல்காப்பிய நூல்களில் பார்ப்பனர் / பார்ப்பார் என்ற மக்களைப் பற்றிக் கூறப்பட்டுள்ள செய்திகளைக் கீழே காணலாம். 

 1.   பார்ப்பனர்க்குரிய பொருட்களாக முக்கோல் என்னும் தண்டும் கமண்டலம் என்னும் நீர்க்கரகமும் கூறப்பட்டுள்ளன.

ஆதாரம்: குறு. 156, முல். 37

2.   பார்ப்பனர்கள் செவ்வாடை அணிதலும் தலையை மொட்டை அடித்துக் கொள்ளுதலும் தாம்பூலம் தின்றலும் சிறுமியர் தலையில் குடுமி வைத்தலும் உண்டு.

ஆதாரம்: முல். 37, கலி. 65, ஐங்கு. 202

3.   பார்ப்பனர்க்கும் அறுதொழில் உண்டென்று தொல்காப்பியம் கூறுகிறது.

ஆதாரம்: பொருள். புற. 20

4.   தானம் பெறுதல், ஓலை ஒப்படைத்தல், தூது / வாயில் செய்தல், வேதம் ஓதுதல், யாகம் வளர்த்தல், சங்கு அறுத்தல் ஆகிய ஆறுவகைத் தொழில்களைப் பார்ப்பனர்கள் செய்தனர்.

ஆதாரம்: குறு. 156, புறம். 305, 367, அகம். 24, 337, ஐங்கு. 4.

5.   காமநிலை உரைத்தல், தேர்நிலை கூறல், காதலன் குறிப்பினைக் கூறல், பசு நிமித்தம் கூறல், பயணத்தைத் தெரிவித்தல், பயணம் தவிர்த்தலை அறிவித்தல் ஆகிய ஆறுவகையான வினைகள் தூதாக / வாயிலாக இருக்கும் பார்ப்பானுக்குரிய கடமைகளாகும்.

ஆதாரம்: தொல். பொருள். கற். 36

6.   பார்ப்பனர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கியவராய் வறுமையில் வாடி உழன்றனர்.

ஆதாரம்: அகம். 337, புறம். 305.

 சங்க இலக்கியத்தில் ஐயர் & வேதியர்:

 சங்க இலக்கிய நூல்கள் மற்றும் தொல்காப்பியத்தில் ஐயர் மற்றும் வேதியர் என்ற மக்களைப் பற்றிக் கூறப்பட்டுள்ள செய்திகளைக் காணலாம்.

 1.   ஐயர் யாகத்தில் தீ வளர்த்தனர்.

ஆதாரம்: கலி. 130

2.   பொய்யும் தவறும் மிகுதியாகி இல்லற நெறியில் பிறழ்வு உண்டானதால் திருமணங்கள் ஐயர்களின் முன்னிலையில் நடத்தப்பட்டன.

ஆதாரம்: தொல்.பொருள். கற். 4

3.   வேதியர்கள் வேள்வித் தீ வளர்த்தனர்.

ஆதாரம்: பரி. 11

 பார்ப்பனர் – அந்தணர் ஒப்பீடு:

 சங்க இலக்கியம் மற்றும் தொல்காப்பியத்தில் பார்ப்பனரும் அந்தணருமே அதிக தரவுகளைக் கொண்டிருப்பதால் இந்த இரண்டு பெயர்கள் தொடர்பாகக் கூறப்பட்டுள்ள செய்திகளை இங்கே ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

 யாகம் வளர்த்தல்              : இருவருக்கும் பொதுவானது.

வேதம் ஓதுதல்                : இருவருக்கும் பொதுவானது.

தூது / வாயில் செய்தல்        : இருவருக்கும் பொதுவானது

தானம் பெறுதல்               : இருவருக்கும் பொதுவானது

கமண்டலம் & முக்கோல்       : இருவருக்கும் பொதுவானது

மனைப்பலகை & குடை        : அந்தணர்களுக்கு மட்டும் உண்டு.

கற்பித்தல்                     : அந்தணர்களுக்கு மட்டும் உண்டு.

சங்கறுத்தல்                   : பார்ப்பனர்களுக்கு மட்டும் உண்டு.

தாம்பூலம் தின்றல்             : பார்ப்பனர்களுக்கு மட்டும் உண்டு.

பொருளாதாரம்                : அந்தணர்கள் செல்வந்தர்களுடன் இணைந்து வாழ்ந்ததால் பொருளாதாரத்தில் குறைவின்றி இருந்ததனைப் பல பாடல்களின் வாயிலாக அறிய முடிகிறது. ஆனால், பார்ப்பனர்கள் சாதாரண மக்களுடன் இணைந்து வாழ்ந்ததால் பொருளாதாரத்தில் பின்தங்கியவராக வறுமையில் வாடி உழன்றதை அகம். 337 மற்றும் புறம். 305 பாடல்களின் வழியாக அறிய முடிகிறது.

வேதநூல்                     : அந்தணர்களுக்கு வேதநூல் இருந்தது என்பதனை தொல்காப்பிய மரபியல் நூற்பா 70 ன் மூலம் அறியலாம். ஆனால், பார்ப்பனர்களிடத்தில் வேதநூல் இல்லை என்பதை குறுந்தொகையின் 156 ஆம் பாடலில் வரும் “ எழுதாக் கற்பு “ என்ற சொல் மூலம் அறியலாம். வேதநூல் இல்லாத காரணத்தினால் தான் பார்ப்பனர்களால் கற்பித்தல் தொழிலைச் செய்ய இயலவில்லை என்று தெரிய வருகிறது.

 மேற்கண்ட ஒப்பீட்டில் இருந்து, பார்ப்பனர் என்போர் தமிழ்ச் சமுதாயத்தில் அடித்தட்டு மக்களாகவும் அந்தணர் என்போர் மேல்தட்டு மக்களாகவும் வாழ்ந்து வந்தனர் என்பதனை அறிந்துகொள்ள முடிகிறது.

 வேதநூலில் இருந்த மொழி எது?

 சங்க காலத்தில் வாழ்ந்து வந்த அந்தணர்களிடத்தில் வேதநூல் இருந்தது என்று மேலே கண்டோம். இந்த வேதத்தினை மறை, மந்திரம் என்ற பெயர்களாலும் இலக்கியங்கள் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளன. ஆதியில், எழுதாக் கற்பாக அதாவது எழுதப்படாத கல்வியாக விளங்கிய வேதமானது பின்னாளில் அந்தணர்களின் செல்வாக்கினால் நூலாக்கம் பெற்றது எனலாம். அப்படி நூலாக்கம் செய்யப்பட்ட வேதநூலில் இருந்த மொழி என்ன? என்பதைப் பற்றி இங்கே காணலாம்.

 சங்க இலக்கியம் மற்றும் தொல்காப்பிய நூல்களை ஆய்வு செய்ததில், அந்தணரின் வேதநூலில் இடம்பெற்றிருந்த எழுத்துக்கள் “ தமிழ் “ தான் என்பதனை உறுதியாகக் கூறமுடிகிறது. இதனைக் கீழ்க்காணும் தரவுகளின் மூலம் உறுதி செய்யலாம்.

 1.   தொல்காப்பியர் எழுத்ததிகாரம் பிறப்பியல் நூற்பா 20 ல் அந்தணர்களின் மறைநூலில் வரும் எழுத்தொலிகளைப் பற்றிக் குறிப்பிட்டுச் சொல்கிறார்.

                 எல்லா எழுத்தும் வெளிப்பட கிளந்து

                சொல்லிய பள்ளி எழுதரு வளியின்

                பிறப்பொடு விடு-வழி உறழ்ச்சி வாரத்து

                அகத்து எழு வளி இசை அரில் தப நாடி

                அளபின் கோடல் அந்தணர் மறைத்தே

                அஃது இவண் நுவலாது எழுந்து புறத்து இசைக்கும்

                மெய் தெரி வளி இசை அளபு நுவன்றிசினே. - 20

 மேற்காணும் நூற்பாவில் அந்தணர்களின் மறைநூலில் வரும் சிறப்பொலிகளைப் பற்றிக் குறிப்பிட்டுச் சொல்கிறார் தொல்காப்பியர். தமிழ் எழுத்துக்கள் இவ்வாறு பிறக்கும், இவ்வாறு ஒலிக்கப்படும் என்று முதல் 19 நூற்பாக்களில் கூறி முடித்த பின்னர், அந்தணர்கள் அந்த எழுத்துக்களை உறழ்த்தியும் அதாவது திரித்தும் அளவில் வேறுபட்ட ஓசை தோன்றுமாறும் ஒலிப்பர் என்று 20 ஆம் நூற்பாவில் கூறுகிறார்.

 தொல்காப்பியம் என்னும் இலக்கண நூலானது தமிழ் மொழிக்கானது என்னும் நிலையில் அந்த நூலில் அந்தணரின் மறைநூலில் உள்ள எழுத்துக்களைக் குறிப்பிட்டுச் சொல்லியிருப்பதில் இருந்தே  அந்தணரின் மறைநூலில் தமிழ் எழுத்துக்களே இருந்தன என்பது உறுதியாகிறது. காரணம், அந்தணரின் மறைநூல் பிறமொழியில் இருந்திருந்தால் தொல்காப்பியர் அதைப்பற்றித் தனது நூலில் பேசியிருக்க மாட்டார் அன்றோ !

 2.   தொல்காப்பிய பொருளதிகாரச் செய்யுளியல் நூற்பாக்கள் 164, 165 மற்றும் 178 ல் மறைமொழியான மந்திரங்களைப் பற்றிக் கீழ்க்காணுமாறு குறிப்பிடுகிறார். 

   எழு நிலத்து எழுந்த செய்யுள் தெரியின்

அடி வரை இல்லன ஆறு என மொழிப - 164
அவை-தாம் நூலினான உரையினான
நொடியொடு புணர்ந்த பிசியினான
ஏது நுதலிய முதுமொழியான
மறை மொழி கிளந்த மந்திரத்தான
கூற்று இடை வைத்த குறிப்பினான – 165
நிறைமொழி மாந்தர் ஆணையின் கிளக்கும்
மறைமொழி-தானே மந்திரம் என்ப - 178

தமிழ் நிலத்தில் எழுதப்பட்ட செய்யுள் வகைகளில் அடி வரையறை இல்லாதவை ஆறு என்றும் அவை நூல், உரை, பிசி, முதுமொழி, மந்திரம், குறிப்பு ஆகியன என்றும் இவற்றில் மந்திரம் என்பது நிறைமொழி மாந்தராகிய சித்தர், முனிவர், துறவி போன்றோர் மக்களுக்கு உறுதிமொழியாகப் பொருள் வெளிப்பட அன்றி மறைத்துக் கூறிய மறைமொழிகளே என்றும் மேற்பாடல் வரிகள் கூறுகின்றன. தமிழ்ச் செய்யுள் வகைகளில் மந்திரங்கள் என்னும் மறைமொழி வருவதால் வேதங்களின் / மறைகளின் மொழியானது தமிழாகத் தான் இருந்திருக்க வேண்டும் என்பது இதனானும் உறுதியாகிறது.

3.   வேதமானது தன்பெயர் உட்பட மறை, மந்திரம் என்ற பெயர்களாலும் சங்க இலக்கியத்திலும் தொல்காப்பியத்திலும் பல பாடல்களில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இவற்றில் எந்தவொரு பாடலும் வேதங்கள் தமிழ் அல்லாத பிற மொழியில் இருந்தது என்று கூறவில்லை என்பது இங்கே குறிப்பிடத் தக்கதாகும்.

இதுவரை கண்டதில் இருந்து, சங்க காலத்தில் வாழ்ந்த அந்தணர்களும் பார்ப்பனர்களும் ஐயர்களும் வேதியர்களும் ஓதிய வேத மந்திரங்கள் அனைத்தும் தமிழ் மொழியில் தான் இருந்தன என்னும் கருத்தானது உறுதி செய்யப்படுகிறது. 

முடிவுரை:

இதுவரை மேலே கண்ட பல்வேறு கருத்துக்களைத் தொகுத்துக் கீழே காணலாம்.

Ø  பார்ப்பனர் என்போர் சங்ககாலத் தமிழ்ச் சமுதாயத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் இருந்த பாணர், பொருநர், கூத்தர் முதலானவருடன் இணைந்து வாழ்ந்துவந்த தமிழ் மக்களே அன்றி வந்தேறிகள் அல்லர்.

Ø  அந்தணர் என்போர் பார்ப்பனருடன் பலவகைகளில் ஒற்றுமை உடையவராக ஆனால் செல்வமும் செல்வாக்கும் மிக்க நிலையில் அரசர், வணிகர் முதலானவருடன் இணைந்து வாழ்ந்து வந்த தமிழர்கள் ஆவர்.

Ø  ஐயர், வேதியர் என்பது பார்ப்பனருக்கும் அந்தணருக்கும் உரிய பொதுப்பெயர்களாக இருந்தன.

Ø  சங்க காலத்தில் ஓதப்பட்ட வேத மந்திரங்கள் அனைத்தும் தமிழ் மொழியில் தான் இருந்தன. 


2 கருத்துகள்:

  1. சங்க இலக்கியத்தில் கூறப்படுகின்ற பார்ப்பனர் என்ற சொல்லுக்கும் தற்போது அரசியலுக்காக கூறப்படுகின்ற பார்ப்பனர் என்ற சொல்லுக்கும் இடையே வேறுபாடு இருக்கிறதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இடைப்பட்ட காலத்தில் நிறைய அரசியல் மற்றும் சமூக மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இதனால் உறுதியாகச் சொல்வதிற்கில்லை ஐயா.

      நீக்கு

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.