வியாழன், 16 ஜனவரி, 2020

திருவள்ளுவர் ஆண்டே தமிழருக்கானது !!! (திருவள்ளுவர் தினக் கட்டுரை)


திருவள்ளுவர் ஆண்டே தமிழருக்கானது!

முன்னுரை:

தற்போது நடந்து முடிந்த கீழடி அகழ்வாய்வு முடிவுகளுக்குப் பின்னால் தமிழின் தொன்மையை உலக மக்கள் அனைவரும் அறிந்து வியப்பில் ஆழ்ந்துள்ளனர் என்றால் அது மிகையில்லை. தமிழ் மொழியின் தொன்மையினை அறிந்து பிற நாட்டினர் பலரும் தமிழ் மொழியை ஆவலுடன் கற்று வருகின்றனர். அதுமட்டுமின்றி, தமிழரின் பண்பாட்டுக் கூறுகளையும் அவர்கள் மிகவும் ஆர்வத்துடன் பின்பற்றி வருகின்றனர். தமிழகத்துத் தமிழர்கள் பலரும் தமிழைப் பேசவும் படிக்கவும் எழுதவும் தயங்கி முற்றிலும் கைவிட்டு வரும் இந்த மோசமான சூழலில் பிற நாட்டினரேனும் தமிழைப் பயின்று வருவது தமிழ் ஆர்வலர்களின் புண்பட்ட மனதுக்குக் கொஞ்சம் ஆறுதல் தருகின்ற அருமருந்தாய் விளங்குகிறது.

இன்றைய காலகட்டத்தில் தமிழின் எதிர்காலத்திற்கு மிகப்பெரும் கேள்விக்குறியாய ஆங்கிலம் இருந்து வருவதைப் போல பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே சமக்கிருத மொழியும் இருந்து வருகிறது. இன்றைய சமக்கிருத மொழியின் தாயாக அந்நாளில் விளங்கிய தமிக்ருத மொழியை உருவாக்கியதே தமிழ்ப் புலவர்கள் தான் என்றாலும் காலம் என்னும் ஆற்றின் ஓட்டத்தில் ஏராளமான மாற்றங்கள் அதில் திணிக்கப்பட்டு விட்டன. தொட்டிலில் தொடங்கி சுடுகாடு வரையிலும் சமக்கிருதம் திணிக்கப்படாத இடங்களே இல்லை எனலாம்.

வானியல் என்னும் சோதிடத்தில் சிறந்து விளங்கிய தமிழர்கள் ஆண்டுப் பெயர்களைத் தமிழில் உருவாக்கி இருக்க மாட்டார்களா?. உறுதியாக உருவாக்கி இருப்பார்கள். ஆனால் அவர்கள் பின்பற்றிய ஆண்டுகளின் பெயர்கள் எதுவும் இப்போது தமிழில் இல்லை. பழந்தமிழர்கள் உருவாக்கிய தமிழ் ஆண்டுப் பெயர்களை முற்றிலும் அழித்துவிட்டு சமக்கிருதப் பெயர்களையே ஆண்டுகளுக்கான பெயர்களாகச் சூட்டி அவற்றையே இன்றுவரையிலும் தமிழர்களைப் பயன்படுத்த வைத்திருப்பதனைக் கைதேர்ந்த சூழ்ச்சி என்னாமல் வேறென்ன சொல்வது?. இச் சூழ்ச்சியை யார் எப்போது செய்தார்கள் என்று திட்டவட்டமாகக் கூற இயலாது என்றாலும் இது சூழ்ச்சிதான் என்பதை யாரும் மறுக்க இயலாது அல்லவா?. சூழ்ச்சி என்று தெளிவாக அறிந்த பின்னரும் அதில் மாட்டிக் கொண்டு முழிப்பது அறிவுடைமை அல்ல என்பதால் அதில் இருந்து வெளிவருவதற்கான வழிமுறையினை விளக்கிக் காட்டவே இக் கட்டுரை எழுதப்படுகிறது.

திருவள்ளுவர் ஆண்டு:

தமிழன் என்றொரு இனமுண்டு; தனியே அவர்க்கொரு குணமுண்டு என்று ஒரு தமிழ்ப் புலவன் பாடிச்சென்றதைப் போலத் தமிழருக்கென்று ஒரு தனிப் பண்பாடும் உண்டு. தற்போது தமிழர்களாகிய நாம், ஏசுவின் பிறப்பை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்ட கிரிகோரியன் ஆண்டுமுறையையே பெரிதும் பயன்படுத்தி வந்தாலும் நமக்கென்று ஒரு தனித்த ஆண்டுமுறை தேவை என்று கருதி நமது முன்னோர்கள் கொண்டுவந்த ஆண்டுமுறையே திருவள்ளுவர் ஆண்டு ஆகும்.

திருவள்ளுவரின் பிறப்பினை கி.மு. 31 ஆம் நூற்றாண்டாகக் கொண்டு அதன் அடிப்படையில் திருவள்ளுவர் ஆண்டு என்னும் புதிய ஆண்டுமுறையைக் கொண்டுவர வேண்டும் என்பதற்கான கால்கோள் 1935 லேயே நடப்பட்டு விட்டது. ஆனாலும் அது 1971 ல் தான் தமிழ்நாட்டு அரசிதழில் வெளியாகி 1972 ல் நடைமுறைக்கு வந்தது. தற்போது வரையிலும் தமிழக அரசும் தமிழ் ஆர்வலர்களும் திருவள்ளுவர் ஆண்டு முறையினைப் பரவலாகப் பயன்படுத்தி வருகின்றனர்.

தமிழில் ஆண்டுப் / வருடப் பெயர்கள்:

திருவள்ளுவர் ஆண்டுமுறையை உருவாக்கிப் பயன்பாட்டுக்கும் கொண்டு வந்தாகி விட்டது. ஆனால் ஆண்டுகளின் பெயர்கள் மட்டும் இன்னமும் சமக்கிருத மொழியிலேயே இருந்தால் எப்படி?. அவற்றையும் தமிழில் சூட்ட வேண்டும் என்ற வேண்டுகோள் ஓங்கி எழுந்ததன் அடிப்படையில் பல தமிழ் அறிஞர்கள் அதற்கான முயற்சிகளைச் செய்யலாயினர். அந்த முயற்சியின் பலனாக, ஆண்டுகளைக் குறிக்கும் சமக்கிருதப் பெயர்களுக்கு என்ன பொருளோ அதனையே தமிழில் எழுதலாம் என்று முடிவெடுத்து அவ்வாறே பெயர்களையும் அமைத்து விட்டனர்.

சான்றாக, ப்ரப`வ என்னும் ஆண்டுக்கு நற்றோன்றல் என்றும் விப`வ என்னும் ஆண்டுக்கு உயர்தோன்றல் என்றும் தமிழில் பெயரிட்டுள்ளனர். இன்னும் சில ஆண்டுகளுக்குப் பகைக்கேடு, நச்சுப்புழை, கழிவிரக்கம் போன்ற பெயர்களையும் வைத்துள்ளனர்.

தற்போதிய தமிழ் ஆண்டுப் பெயர்களில் உள்ள சிக்கல்கள்:

சமக்கிருத ஆண்டுப் பெயர்களின் விளக்கமாகத் தமிழில் வைக்கப்பட்டுள்ள பெயர்களை நடைமுறையில் பயன்படுத்துவதால் ஏதும் புதிய பயனுண்டா என்றால் இல்லை என்றே கூறலாம். ஆண்டின் பெயர் தமிழில் உள்ளது, அவ்வளவே. அதேசமயம், இந்த முறையில் சில இடர்ப்பாடுகள் இல்லாமலும் இல்லை. தமிழில் இருந்தாலும் இந்த ஆண்டுப்பெயர்கள் அனைத்துக்கும் சமக்கிருத மொழியே அடிப்படை என்பதால் அது தமிழ்மொழியானது என்றென்றும் சமக்கிருத மொழிக்கு அடிமையானது; தனித்து இயங்கும் வலிமையற்றது என்று முழக்கமிட்டுத் திரியும் தமிழ்ப் பகைவர் மூட்டிய தீயில் நாமே வலிந்து சென்று நெய் வார்ப்பதைப் போலாகி விடும் என்பது இதிலுள்ள முதல் இடர்ப்பாடு அல்லது சிக்கல் ஆகும்.

ஆண்டின் பெயர்களாக வைக்கப்பட்டுள்ள பகைக்கேடு, நச்சுப்புழை, கழிவிரக்கம், எதிரேற்றம், கொடுமதி, ஒடுங்கி போன்ற பலவும் மங்கலமற்ற சொற்களாக அமைந்திருப்பதனை இரண்டாவது இடர்ப்பாடாகக் கூறலாம். காரணம், எந்த ஒரு ஆண்டும் சிலருக்கு நன்மை தரலாம்; சிலருக்குத் தீமை தரலாம். அத்துடன், ஒரு ஆளுக்கே ஒரு ஆண்டின் முற்பாதியானது நன்மையும் பிற்பாதியானது தீமையும் தரலாம். ஆண்டின் பலன் எப்படி இருந்தாலும் அந்த ஆண்டின் பெயரானது மங்கலமற்று இருப்பதனை யாரும் விரும்புவதில்லை. ஆண்டின் பெயர் மங்கலமற்று இருந்தால் அந்த ஆண்டு முழுவதும் மங்கலமற்ற அந்தப் பெயரையே எழுதவும் பேசவும் நேரிடும் என்பதால் இதனை மக்கள் உவப்புடன் ஏற்கமாட்டார்கள்.  

குறிஞ்சிய முறை:

தற்போது தமிழில் அமைக்கப்பட்டுள்ள ஆண்டுப் பெயர்களில் எவ்வித நன்மையும் இல்லை என்பதுடன் சிக்கல்களே அதிகம் இருப்பதால் இதற்கு மாற்றாக புதிய முறை ஒன்றை உருவாக்க வேண்டும் என்று பல தமிழ் அறிஞர்கள் விரும்பி முயன்றனர். அதன் விளைவாக உருவாக்கப்பட்டதே குறிஞ்சிய முறை என்னும் புதிய முறையாகும். இம்முறையானது 2018 ஆம் ஆண்டிலேயே இணையத்தில் வெளியிடப்பட்டாலும் அதிலிருந்த சில சிக்கல்களைத் திருத்தியும் மேம்படுத்தியும் இக்கட்டுரை வெளியிடப்படுகிறது.

இப் புதிய முறையின்படி, ஆண்டுகளின் பெயர்கள் யாவும் பூக்களை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டவை ஆகும். காரணம், பூக்களே காலத்துடன் நெருங்கிய தொடர்புடையவை என்பதே. சில பூக்கள் காலையிலும் சில மாலையிலும் சில இரவிலும் பூக்கும். சில பூக்கள் கோடையிலும் சில மழைக்காலத்திலும் சில பனிக்காலத்திலும் பூக்கும். இப் பூக்களின் பெயர்களில் பலவும் குறிஞ்சிப் பாட்டு என்னும் சங்க இலக்கிய நூலில் இருந்து தெரிவு செய்யப்பட்டவை என்பதால் இந்தப் புதிய பெயர் சூட்டும் முறைக்குக் குறிஞ்சியம் என்று பெயரிடப்பட்டுள்ளது.

குறிஞ்சிய முறையின் நன்மைகள்:

ஏனைய முறைகளைக் காட்டிலும் குறிஞ்சிய முறையில் சில நன்மைகள் உண்டு. பூக்களின் பெயர்களை அடிப்படையாகக் கொண்ட குறிஞ்சிய முறையினைப் பின்பற்றுவதனால் உண்டாகும் நன்மைகளைப் பற்றிக் கீழே விரிவாகக் காணலாம்.

Ø  இந்தப் புதிய முறையானது, எந்தவொரு பிறமொழிச் சார்புமின்றி தமிழால் தனித்து இயங்க முடியும் என்னும் பேருண்மையை உலகோர்க்கு மிகத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.

Ø  இப் புதிய முறையானது, சங்க காலத்தில் இருந்த பல்வகைப் பூக்களைப் பற்றி அறியச் செய்வதுடன், சங்கத் தமிழர்கள் இயற்கையை எவ்வளவு நேசித்தார்கள் என்பதையும் இக்கால மனிதர்கள் இயற்கையைக், குறிப்பாக மரம், செடி, கொடிகளைப் போற்றி வளர்க்க வேண்டும் என்ற எண்ணத்தையும் மீண்டும் மீண்டும் நினைவூட்டுவதாக அமைகின்றது.

Ø  இம்முறைப்படி, ஒரு ஆண்டின் பெயரானது எழுத்துக்களின் தொகுதியாக மட்டுமே இராமல், புதியதொரு செய்தியை அல்லது அறிவினை ஊட்டுவதாயும் அமைந்துள்ளது. சான்றாக, கத்தாமரை என்பது ஆண்டின் பெயரை மட்டும் குறிப்பிடாமல், அதற்குரிய திருவள்ளுவர் ஆண்டாகிய 2051 ஐயும் தன்னுள் சுட்டி நிற்கிறது.

Ø  இம்முறைப்படி, வெறும் 60 ஆண்டுகள் மட்டுமே மீண்டும் மீண்டும் சுழற்சியில் வராமல் 10,099 ஆண்டுகள் வரையிலும் புதுப்புதுத் தமிழ்ப் பெயர்களைப் படைத்துக் கொண்டே செல்லலாம். சான்றாக, வேரிவேய் என்பது 10,099 ஆம் ஆண்டைக் குறிக்கும் தமிழ்ப் பெயராகும்.

குறிஞ்சிய முறையில் முதல் நூறாண்டுப் பெயர்கள்:

குறிஞ்சிய முறைப்படி, முதல் நூறு ஆண்டுகளுக்கு உரிய பூக்களின் பெயர்கள் கீழே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன.

ஆண்டு
பெயர்
ஆண்டு
பெயர்
01
அகில்
51
தாமரை
02
அடும்பு
52
தாழை
03
அதிரல்
53
திலகம்
04
அரக்கு
54
தில்லை
05
அவரை
55
தும்பை
06
அனிச்சம்
56
துழாய்
07
ஆசினி
57
தேமா
08
ஆத்தி
58
தோன்றி
09
ஆம்பல்
59
நந்தி
10
ஆரம்
60
நறவம்
11
ஆல்
61
நறுவழை
12
ஆவிரை
62
நாகம்
13
இலவம்
63
நாரத்தை
14
ஈங்கை
64
நாறி
15
உந்தூழ்
65
நெய்தல்
16
எருவை
66
பகன்றை
17
எறுழம்
67
பசும்பிடி
18
கடம்பு
68
பயினி
19
கண்ணி
69
பலாசம்
20
கத்திகை
70
பாங்கர்
21
கரந்தை
71
பாதிரி
22
கருவிளை
72
பாரம்
23
காஞ்சி
73
பாலை
24
காந்தள்
74
பிடவம்
25
காயா
75
பிண்டி
26
காழ்வை
76
பித்திகம்
27
குடசம்
77
பீரம்
28
குரவம்
78
புழகு.
29
குருந்தம்
79
புளி
30
குல்லை
80
புன்னை
31
குவளை
81
பூளை
32
குளவி
82
போங்கம்
33
குறிஞ்சி
83
மணிச்சிகை
34
கூவிளம்
84
மராம்
35
கொகுடி
85
மருதம்
36
கொன்றை
86
மாரோடம்
37
கோங்கம்
87
முல்லை
38
கோடல்
88
மௌவல்
39
சண்பகம்
89
வகுளம்
40
சிந்துவாரம்
90
வஞ்சி
41
சுள்ளி
91
வடவனம்
42
சூரல்
92
வள்ளி
43
செங்குரலி
93
வாகை
44
செம்மல்
94
வாழை
45
செயலை
95
வானி
46
செருந்தி
96
வெட்சி
47
சேடல்
97
வேங்கை
48
ஞாழல்
98
வேம்பு
49
தணக்கம்
99
வேய்
50
தளவம்
100
வேரி


குறிஞ்சிய முறையில் ஆண்டுப்பெயர் சூட்டும் முறை?:

குறிஞ்சிய முறையைப் பயன்படுத்தி ஒன்று முதல் நூறு வரையிலான ஆண்டுகளுக்கு மேற்காணும் அட்டவணைப்படி பெயர் சூட்டலாம். நூற்றுக்கு மேற்பட்ட ஆண்டுகளுக்குப் பெயர் சூட்டும்போது இருபெயர் ஒட்டுமுறையைப் பின்பற்றலாம். அதாவது, முதலாவதாக வரும் ஆண்டுப் பெயரில் உள்ள சில எழுத்துக்களை இரண்டாவதாக வரும் ஆண்டுப்பெயரின் முன்னால் ஒட்டாகச் சேர்ப்பதே இருபெயர் ஒட்டுமுறை ஆகும். இதில் பல விதிகள் உண்டென்றாலும் கீழே சில விதிகள் மட்டும் சில சான்றுகளுடன் விளக்கப்பட்டுள்ளன..

அ.) முதலாவதாக வரும் ஆண்டுப் பெயரில் இருக்கும் முதல் இரண்டு எழுத்துக்களைப் பின்வரும் ஆண்டுப் பெயருக்கு முன்னொட்டாகச் சேர்த்துப் பெயர் சூட்டலாம். சில சான்றுகள் கீழே:

ஆண்டு 198 = 1 || 98 = அகில் || வேம்பு = அகிவேம்பு
ஆண்டு 200 = 2 || 00 = அடும்பு || வேரி = அடுவேரி
ஆண்டு 1000 = 10 || 00 = ஆரம் || வேரி = ஆரவேரி
ஆண்டு 1379 = 13 || 79 = இலவம் || புளி = இலப்புளி

ஆ.) முதல் இரண்டு எழுத்துக்களைப் பயன்கொள்ள இயலாத நிலையில், முதலாவது மற்றும் மூன்றாவது எழுத்துக்களை முன்னொட்டாகச் சேர்க்கலாம். சில சான்றுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஆண்டு 3794 = 37 || 94 = கோங்கம் || வாழை = கோகவாழை
ஆண்டு 4387 = 43 || 87 = செங்குரலி || முல்லை = செகுமுல்லை
ஆண்டு 4073 = 40 || 73 = சிந்துவாரம் || பாலை = சிதுப்பாலை
ஆண்டு 2020 = 20 || 20 = கத்திகை || கத்திகை = கதிகத்திகை

இ.) முன்னொட்டில் வரும் இரண்டாவது உயிர்மெய் எழுத்தை மெய்யாக மாற்றியும் சேர்க்கலாம். கீழே சில சான்றுகளைக் காணலாம்.

ஆண்டு 8907 = 89 || 07 = வகுளம் || ஆசினி = வகாசினி
ஆண்டு 1206 = 12 || 06 = ஆவிரை || அனிச்சம் = ஆவனிச்சம்
ஆண்டு 101 = 1 || 01 = அகில் || அகில் = அககில்
ஆண்டு 1001 = 10 || 01 = ஆரம் || அகில் = ஆரகில்

ஈ.) ஒரே ஆண்டுப்பெயர் முதலாவதாகவும் இரண்டாவதாகவும் தொடர்ந்து வரும்போது அந்த ஆண்டுப்பெயரின் முதல் எழுத்தையோ அது நெடில் எனில் அதன் குறில் எழுத்தையோ மட்டும் முன்னொட்டாகப் பயன்படுத்தலாம். சான்றாக, சில பெயர்களைக் கீழே காணலாம்.

ஆண்டு 9090 = 90 || 90 = வஞ்சி || வஞ்சி = வவ்வஞ்சி
ஆண்டு 9797 = 97 || 97 = வேங்கை || வேங்கை = வெவ்வேங்கை
ஆண்டு 8686 = 86 || 86 = மாரோடம் || மாரோடம் = மமாரோடம்
ஆண்டு 4545 = 45 || 45 = செயலை || செயலை = செஞ்செயலை.

உ.) இரண்டாவதாக வரும் ஆண்டுப்பெயர் நீளமாக இருப்பின் அதன் பின்பகுதியை மட்டும் பின்னொட்டாகச் சேர்க்கலாம். சில சான்றுகள் கீழே:

ஆண்டு 9040 = 90 || 40 = வஞ்சி || சிந்துவாரம் = வசிவாரம்
ஆண்டு 4083 = 40 || 83 = சிந்துவாரம் || மணிச்சிகை = சிதுச்சிகை
ஆண்டு 5091 = 50 || 91 = தளவம் || வடவனம் = தளவனம்
ஆண்டு 3943 = 39 || 43 = சண்பகம் || செங்குரலி = சண்குரலி
ஆண்டு 4339 = 43 || 39 = செங்குரலி || சண்பகம் = செகுப்பகம்

திருவள்ளுவர் ஆண்டைப் பயன்படுத்தும் முறை:

குறிஞ்சிய முறையைப் பயன்படுத்தித் திருவள்ளுவர் ஆண்டுக்கான நாட்காட்டி அமைப்பது மற்றும் பயன்படுத்துவது எப்படி என்று கீழே காணலாம்.

தற்போது நடந்து கொண்டிருக்கின்ற கிரிகோரியன் ஆண்டான 2020 க்கு உரிய திருவள்ளுவர் ஆண்டு 2051 ஆகும். அதாவது, 2020 + 31 = 2051. இந்த ஆண்டுக்கான பெயரினைக் கீழ்க்காணுமாறு சூட்டலாம்.

தி.பி. ஆண்டு 2051 = 20 || 51 = கத்திகை || தாமரை = கத்தாமரை.

திருவள்ளுவர் ஆண்டுமுறையை மடல்களில் பயன்படுத்தும்போது, கத்தாமரை – தை – 1 என்றோ கத்தாமரை – தை – க என்றோ எழுதலாம்.

முடிவுரை:

கத்தாமரை – தை – க என்ற தி. பி. நாளானது வெறும் பெயராக மட்டும் இல்லாமல் தாவரப் பெயரையும் தாங்கி நிற்கிறது. அதுமட்டுமின்றி, அப் பெயரில் இருந்து அதற்குரிய கிரிகோரியன் நாளையும் கீழ்க்காணுமாறு எளிதில் கண்டறிந்து விடலாம்.

கத்தாமரை = கத் + தாமரை = கத்திகை || தாமரை = 20 || 51 = 2051 தி.பி.
இதற்கான கிரிகோரியன் ஆண்டு = 2051 தி.பி. – 31 = 2020 கி.பி..

இப்போது 2020 ஆம் ஆண்டு தை மாதம் 1 ஆம் நாளை இணையத்தில் உள்ள நாட்காட்டி மாற்றியில் இட்டால் அதற்கான கிரிகோரியன் நாளைக் கீழ்க்காண்டவாறு காட்டிவிடும்.

(தி.பி.) கத்தாமரை தை க = (கி.பி) 2020 சனவரி 15

பி.கு: 1 முதல் 10,099 வரையிலான ஆண்டுகளைக் குறிக்கும் திருவள்ளுவர் ஆண்டு முறைப் பெயர்களின் பட்டியல் தயாராகிக் கொண்டுள்ளது. முடிந்ததும் தமிழ் மக்களின் நேரடிப் பயன்பாட்டுக்காக வலையேற்றம் செய்யப்படும். இந்த புதிய முறை பற்றிய மக்கள் கருத்துக்கள் எப்போதும் வரவேற்கப்படுகின்றன.

இப்படிக்கு
தங்கள் அன்புள்ள
திருத்தம் பொன். சரவணன்
நாள்: கத்தாமரை தை – 2 – திருவள்ளுவர் தினம்

6 கருத்துகள்:

  1. குறிஞ்சிய முறை இப்போதுதான் அறிகிறேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  2. நன்றி உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  3. தங்களின் திருக்குறளுக்கான புதிய விளக்க உரைகள் link வேலை செய்ய மாட்டேங்குது , சரிசெய்யவும்

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.