சனி, 14 டிசம்பர், 2019

சமக்கிருதச் சொற்களைத் தமிழர்கள் பயன்படுத்துவது சரியா தவறா?


முன்னுரை:

தமிழ்மொழிக்கும் சமக்கிருத மொழிக்கும் இடையிலான பனிப்போர் பல நூற்றாண்டுகளாகவே இருந்து வருகிறது. இந்த பனிப்போர் அவ்வப்போது எரிமலையாகக் குமுறி வெளிப்படுவதும் உண்டு. தோற்றத்தால் முந்தியது எது தமிழா?. சமக்கிருதமா?. என்ற தருக்கங்களும் தொடராமல் இல்லை. இதற்கெல்லாம் காரணம், தமிழர்கள் பல நூற்றாண்டுகளாகச் சமக்கிருதச் சொற்களைப் பயன்படுத்தி வருவதே. தமிழர் வாழ்வுடன் ஒன்றியைந்து இருந்துவந்த சமக்கிருதச் சொற்கள் திடீரென்று தமிழ்மொழிக்கு எதிராகத் திருப்பி விடப்பட்டன.

அதாவது, எந்தவொரு தமிழ்ச் சொல்லை எடுத்துக்கொண்டாலும் அது தமிழ் அல்ல; சமக்கிருத மொழியில் இருந்துதான் தோன்றியது என்ற தருக்கமே அனைத்துச் சிக்கல்களுக்கும் தோற்றுவாயாக அமைந்துவிட்டது. உண்மை என்னவென்றால், இன்று சமக்கிருத மொழியில் இருக்கும் ஏராளமான சொற்கள் அனைத்தையும் உருவாக்கியது தமிழர்களே. அதுமட்டுமின்றி, அவை அனைத்துமே தமிழ்ச் சொற்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டவையே. இக் கட்டுரையில் இதைப்பற்றி விரிவாகக் காண்பதுடன் சமக்கிருதச் சொற்களைத் தமிழர்கள் பயன்படுத்துவது சரியா தவறா?. என்பதைப் பறியும் விரிவாகப் பார்க்கலாம்.

தமிழ் – தமிக்ருதம் – தஞ்சந்தம்:

இப்போது தமிழர்கள் பேசுகின்ற எந்தவொரு சமக்கிருதச் சொல்லை எடுத்துக் கொண்டாலும் அதனைத் தமிழ் – தமிக்ருதம் – தஞ்சந்தம் என்ற மூன்று வகைகளுக்குள் அடக்கி விடலாம். இந்த மூன்று வகைகளையும் சில சான்றுகளுடன் விளக்கமாகக் கீழே காணலாம்.

தமிழ்ச்சொல் என்று கூறப்படுவது யாதெனின், தொல்காப்பியம் மற்றும் சங்க இலக்கிய நூல்களில் நேரடியாகப்  பயின்று வரும் அனைத்துச் சொற்களும் அவற்றில் இருந்து உருவாக்கப்பட்டுப் பதினெண் கீழ்க்கணக்கு, ஐம்பெரும் காப்பியங்கள், கம்பராமாயணம் போன்ற பிற்கால இலக்கிய இலக்கண நூல்களில் பயன்படுத்தப் பட்டுள்ள பிற சொற்களும் ஆகும். சான்றுகள்: சாமி, பூமி, சத்தம், சந்தம், சுத்தம், சுந்தரம் போன்றன.

தமிக்ருதம் எனப்படுவது யாதெனின், மேற்காணும் தமிழ்ச் சொற்களை அடிப்படையாகக் கொண்டு சில விதிகளுக்கு ஏற்ப எழுத்துக்களைச் சேர்த்தும் கெடுத்தும் திரித்தும் உருவாக்கப்பட்டுத் தற்போது சமக்கிருத மொழிச் சொல்லாக அறியப்படுகின்ற சொற்கள் ஆகும். சான்றுகள்: ச`ச்~டி, ச்`ருச்~டி, சா`தா`ரண், சா`மான்ய போன்றவை. இவை முறையே சாட்டு, சூட்டு, தாரணை, மணியம் ஆகிய தமிழ்ச் சொற்களில் இருந்து தோன்றியவை. தமிழில் இருந்து உருவாக்கப்பட்ட சமக்கிருத மொழிச் சொற்கள் என்பதால் இவற்றுக்குத் தமிக்ருதம் என்ற பெயர் கீழ்க்காணுமாறு அமைக்கப்பட்டது.

தமி (ழ்) >>> (சம) க்ருதம் = தமிக்ருதம்

தமிக்ருத மொழி உருவாக்கப்பட்ட முறை மற்றும் காலம் பற்றி மேலும் பல விரிவான தகவல்ளைக் கீழ்க்காணும் கொளுவியில் படித்து அறிந்து கொள்ளலாம்.


தஞ்சந்தம் என்று கூறப்படுவது யாதெனின், மேற்காணும் தமிக்ருதச் சொற்களும் ஏனைய சமக்கிருதச் சொற்களும் தமிழுக்கு வரும்போது தமிழ்மொழியின் இலக்கணத்திற்கு ஏற்ப திரிந்து வழங்கும் சொல்லாகும். சான்றுகள்: சட்டி, சிருட்டி, சாதாரணம், சாமானியம் போன்றவை. இவை முறையே ச`ச்~டி, ச்`ருச்~டி, சா`தா`ரண், சா`மான்ய என்ற தமிக்ருதச் சொற்கள் மீண்டும் தமிழுக்கு வரும்போது திரிந்து தோன்றியவை. தமிழில் இருந்து சமக்கிருதம் சென்று மீண்டும் தமிழுக்கே வந்த சொல் என்பதாலும் தஞ்சமாகத் தமிழை அடைந்தவை என்பதாலும் அதன் பெயர் கீழ்க்காணுமாறு அமைக்கப்பட்டுள்ளது.

தம் (தமிழ்) >>> சம் (சமக்ருதம்) >>> தம் (தமிழ்) = தஞ்சந்தம்
தஞ்சம் + தம் (தமிழ்) = தஞ்சந்தம்

சமக்கிருதத்தை நேரடியாக இனங்காண்பதில் உள்ள சிக்கல்கள்:

தமிழில் கலந்துள்ள சமக்கிருதச் சொற்களை இனங்காணும் புதிய முறைகளைப் பற்றிய விளக்கமான ஆய்வுகள் இதுவரை செய்யப்படவில்லை. மொழிக்கு முதலாக வராது என்று தமிழ் இலக்கணம் கூறும் சில விதிகளைப் பயன்படுத்திச் சமக்கிருதச் சொற்களை நேரடியாக இனங்காணும் முறைகளை அனைவரும் அறிவோம். சான்றாக, தமிழ் இலக்கணப்படி மொழிக்கு முதலாக வராத எழுத்துக்களான ட, ர, ல ஆகியவற்றில் ஒரு சொல் தொடங்கினால் அது சமக்கிருதம் தான் என்று எளிதில் கண்டுபிடித்து விடலாம். சான்றாக, ரம்யா, லாவண்யா, டிம்பிள் போன்ற பெயர்களை அப்படியே எழுதும்போது சமக்கிருதமே என்று எளிதில் கண்டுபிடித்து விடலாம். ஆனால் அச் சொற்களுக்கு முன்னால் ஒரு உயிரெழுத்தைப் போட்டு இரமியா, இலாவணியா, உடிம்பிள் என்று தமிழ் இலக்கணப்படி திருத்தி எழுதும்போது சமக்கிருதச் சொற்களை இனங்காண்பதில் சிக்கல் ஏற்படுகிறது.

இரண்டாவதாக, தமிழ்மொழியின் இலக்கணப்படி மொழிக்கு முதலாக மெய் எழுத்துக்கள் வராது என்பதால் மெய் எழுத்துக்களில் தொடங்கும் சொற்களைச் சமக்கிருதச் சொற்கள் என்று நேரடியாக எளிதில் இனங்காண முடியும். சான்றாக, ச்`நேகா`, ம்ருது`, த்`வனி, ச்`ரம போன்ற சொற்களை அப்படியே எழுதும்போது அவற்றைச் சமக்கிருதச் சொற்கள் என்று எளிதில் இனங்காண முடியும். ஆனால் அச்சொற்களைத் தமிழ் இலக்கணப்படி திருத்தி சிநேகா, மிருது, தொனி, சிரமம் என்று எழுதும்போது அவற்றை இனங்காண்பதில் சிக்கல் பெருகுவதை அறிந்து கொள்ளலாம்.

மூன்றாவதாக, தமிழ்ச் சொற்களில் கிரந்த எழுத்துக்கள் வராது என்னும் இலக்கண விதி இருப்பதால், கிரந்த எழுத்துக்கள் வருகின்ற சொற்களைச் சமக்கிருதச் சொற்கள் என்று நேரடியாக எளிதில் கண்டுபிடித்து விடலாம். சான்றாக, அஸ்வின், லஜ்ஜை, மஹான், அஷ்டமி, லக்ஷ்மண் போன்ற சொற்களில் கிரந்த எழுத்துக்கள் ( ஸ, ஜ, ஹ, ஷ, க்ஷ ) வருவதால் இவற்றை சமக்கிருதச் சொற்கள் என்று எளிதாக அறிய முடிகிறது. ஆனால் இச்சொற்களில் உள்ள கிரந்த எழுத்துக்களை நீக்கிவிட்டுத் தமிழ் இலக்கணப்படி அசுவினி, இலச்சை, மகான், அட்டமி, இலக்குமணன் என்று திருத்தி எழுதும்போது சொற்களை இனங்காண்பதில் சிக்கல் எழுவதனைப் புரிந்து கொள்ளலாம்.

சமக்கிருதச் சொற்களின் எண்ணிக்கை:

தமிழர்கள் தமது அன்றாட வாழ்வில் தமிழ்ச் சொற்களுடன் ஏராளமான சமக்கிருதச் சொற்களையும் கலந்து பயன்படுத்தி வருகின்றனர். இதைப்பற்றி மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் போன்ற தமிழ் அறிஞர்கள் பலரும் ஆய்வுசெய்து சமக்கிருதச் சொற்கள் என்னென்ன என்றும் அவற்றுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் என்னென்ன என்றும் பட்டியலிட்டு வைத்துள்ளனர். தனித்தமிழ் அறிஞர் மறைமலை அடிகளாரின் மகளார் நீலாம்பிகை அம்மையார் தொகுத்திருக்கும் பட்டியலில் ஏறத்தாழ 1000 சொற்கள் இருப்பதை அறிய முடிகிறது.

தமிழில் கலந்துள்ள சமக்கிருதச் சொற்களின் எண்ணிக்கையை இன்னதென முடிவு செய்வதில் சிக்கல் இருந்து வருகின்றது. காரணம், ஒரு சொல்லைத் தமிழா, சமக்கிருதமா என்று முடிவு செய்வதற்கு எவ்விதமான வரையறைகளும் கொடுக்கப்படவில்லை. ஒவ்வொரு சொல்லின் மூலம் அல்லது வேரானது எந்த மொழியில் உயிருடன் இருக்கின்றது என்று ஆய்வுசெய்து தெளிவாக அறிவிக்கவில்லை. அதுமட்டுமின்றி, சமக்கிருதச் சொற்களை நேரடியாக இனங்காண்பதில் பல சிக்கல்கள் இருப்பதையும் மேலே கண்டோம். இது போன்ற பல காரணங்களால் சமக்கிருதச் சொற்களைத் தனிமைப்படுத்த இயலாமல் போவதுடன் பல தமிழ்ச் சொற்களையும் கூட சமக்கிருதம் என்று தவறாக நினைத்துக்கொண்டு பட்டியலில் சேர்க்கின்ற வழக்கம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

சமக்கிருதச் சொற்களைத் தமிழர்கள் பயன்படுத்தலாமா?

சமக்கிருதச் சொற்கள் இன்னின்ன என்று பட்டியலிட்ட தமிழ் அறிஞர்கள் பலரும் அச்சொற்கள் அனைத்தையும் புறக்கணித்து அவற்றுக்கு இணையான வேறு சொற்களைப் பயன்படுத்தவே பரிந்துரை செய்துள்ளனர். ஆனால், அச் சொற்களில் பலவும் நேரடித் தமிழ்ச் சொற்கள் என்றோ தமிழ்ச் சொற்களில் இருந்து தோன்றி மருவிய பல சொற்களும் அவற்றில் உண்டு என்றோ ஆய்வுசெய்து கூறவில்லை.

தமிக்ருதம் என்னும் கருத்தாக்கமும் தஞ்சந்தம் என்னும் கருத்தாக்கமும் தமிழ் – சமக்கிருத ஆய்வுலகிற்குப் புதியவை என்பதால் சமக்கிருதத்தில் இருந்து தமிழ்ச் சொற்களை மீட்டெடுக்கும் முயற்சி செய்யப்படவில்லை; அல்லது மிகக் குறைவான அளவிலேயே செய்யப்பட்டுள்ளது எனலாம்.

சமக்கிருத மொழியில் உள்ள ஏராளமான சொற்கள் தமிழர்களின் கொடையே என்பதால் அவற்றை வேண்டாம் என்று ஒதுக்கி இழந்துவிட முடியாது. ஒரு காலத்தில் தமிழர்களால் உருவாக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வந்த பல தமிழ்ச் சொற்கள் காலப்போக்கில் சமக்கிருதச் சொற்கள் என்று தவறாகவோ வேண்டுமென்றோ மாறிப்போயின அல்லது மாற்றப்பட்டன. எது எப்படி ஆயினும், அந்தச் சொற்களின் உருவாக்கத்தில் தமிழ்ப் புலவர்களின் அறிவார்ந்த உழைப்பு இருப்பதால், அவற்றைப் புறந்தள்ளுவதன் மூலம், அவர்களது பொன்னான உழைப்பை வீணாக்குகிறோம் என்பதுடன் நமது மொழியில் பல நல்ல சொற்களுக்கான வெற்றிடத்தை ஏற்படுத்துகிறோம் என்பதும் உண்மையாகிறது.

இந்நிலையில், சமக்கிருதச் சொற்கள் அனைத்தையும் ஒட்டுமொத்தமாகப் புறக்கணிப்பதைக் காட்டிலும் அவற்றில் உள்ள சிலவகைச் சொற்களை மட்டும் நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். சில சொற்களை நேரடியாகவும் சிலவற்றுக்கு அவற்றின் தமிழ் மூலங்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம். எந்தெந்த சொற்களைப் பயன்பாட்டில் இருந்து தள்ளவேண்டும், எந்தெந்த சொற்களைத் தமிழாகக் கருதிப் பயன்கொள்ள வேண்டும் என்று விளக்கமாகக் கீழே காணலாம்.

தள்ளவேண்டிய சமக்கிருதச் சொற்கள்:

தமிழர்கள் பயன்படுத்தும் சமக்கிருதச் சொற்களைத் தமிழ், தமிக்ருதம் மற்றும் தஞ்சந்தம் என்று மூன்று வகைகளாகப் பிரிக்கலாம் என்று முன்னர் கண்டோம். இவற்றில் தமிக்ருதச் சொற்கள் தமிழ் இலக்கணத்திற்கு மாறாக இருப்பவை என்பதால் இவையனைத்தும் தள்ளப்பட வேண்டியவையே. சான்றாக, ரவுடி, ரத்து,  லட்டு, சக்தி, பக்தி, சப்தம், சஷ்டி, முக்தி போன்ற தமிக்ருதச் சொற்களைப் பயன்படுத்தக் கூடாது. இச்சொற்களின் முன்னால் எதாவதொரு உயிரெழுத்தைப் போட்டுத் தமிழ்ப்படுத்தியும் பயன்படுத்தக் கூடாது.

அடுத்தபடியாக, தமிழில் உள்ள தஞ்சந்தச் சொற்களும் தள்ளப்பட வேண்டியவையே. தமிழ் இலக்கணப்படி அமைந்து இருந்தாலும் தஞ்சந்தச் சொற்களைப் பயன்படுத்தாமல் இருப்பதே தமிழ் மொழிக்கு நன்மை பயக்கும். தமிழுக்கும் சமக்கிருதத்திற்கும் இடையே பிணக்கு உருவாகக் காரணமே தஞ்சந்தச் சொற்கள் தான். சான்றாக, சிரமம், சிருட்டி, சட்டி, இரகசியம், பிருத்வி, சுவாமி, தரிசனம், தட்சணை, தோத்திரம் போன்ற பல தஞ்சந்தச் சொற்கள் தமிழில் ஊடுருவியதால் இவை தமிழாகவே அறியப்பட்டுத் தமிழ் மக்களின் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. இவை தமிக்ருதச் சொற்களாகவே இருந்திருந்தால் இவற்றை எளிதில் இனங்கண்டு பிரித்திருக்க முடியும்.

இறுதியாக, கிரந்த எழுத்துக்கள் கலந்த சொற்கள் மற்றும் தமிழ்மொழியின் மரபுப்படி மொழிக்கு முதலாக வரக்கூடாத எழுத்துக்களை முதல் எழுத்தாகக் கொண்ட சொற்கள் ஆகியவையும் பயன்பாட்டில் இருந்து தள்ளப்பட வேண்டியவையே.

கொள்ளவேண்டிய சமக்கிருதச் சொற்கள்:

தமிழர்கள் பயன்படுத்தும் சமக்கிருதச் சொற்களில் பல சொற்கள் நேரடித் தமிழ்ச் சொற்களே என்று ஆய்வுசெய்து உறுதி செய்யப்பட்டுள்ளன. இத்தகைய சொற்களைத் தமிழர்கள் பயன்படுத்துவதில் தவறில்லை. சான்றாக, சாமி, பூமி, புவனம், சத்தம், சந்தம், சுத்தம், சுந்தரம், சுகம், சுபம், சித்திரம், சிரத்தை, சங்கம் போல ஏராளமான சொற்களைக் காட்டலாம்.

தமிழர்கள் பயன்படுத்தும் சமக்கிருதச் சொற்களில் தமிக்ருதச் சொற்களும் உண்டு என்று முன்னர் கண்டோம். சான்றாக, ரவுடி, ரத்து, லட்டு, சக்தி, பக்தி, முக்தி, சச்~டி போன்றவை தமிழில் இருந்து தோன்றிய சமக்கிருதச் சொற்கள் ஆகும். தமிக்ருதச் சொற்களை அப்படியே பயன்படுத்தாமல் அவற்றின் மூலங்களான தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தலாம். சான்றாக, மேற்கண்ட தமிக்ருதச் சொற்களின் மூலத் தமிழ்ச் சொற்களான அடாவடி, அறாத்து, இலட்டு, சத்தி, பத்தி, முத்தி, சாட்டு போன்ற சொற்களைப் பயன்படுத்தலாம்.

இறுதியாக, சமக்கிருதத்தில் இருந்து உருமாறி தமிழுக்கு வந்துள்ள தஞ்சந்தச் சொற்களை அப்படியே பயன்படுத்தலாமா என்றால் கூடாது. மாறாக, தஞ்சந்தச் சொற்களின் மூலமாக விளங்கும் தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தலாம். சான்றாக, சிரமம், சிருட்டி, சட்டி, இரகசியம், பிருத்வி, சுவாமி, தரிசனம், தட்சணை, தோத்திரம் போன்ற தஞ்சந்தச் சொற்களைப் பயன்படுத்தாமல் இவற்றின் மூலத் தமிழ்ச்சொற்களான சரம்பு, சூட்டு, சாட்டு, அலகை, பருதி, சாமி, தச்சனம், தச்சிணை, சோத்திரம் ஆகிய சொற்களைப் பயன்படுத்தலாம்.

முடிவுரை:

இணையத்தில் உள்ள தமிழ்ப் பேரகராதியில் ஏராளமான சமக்கிருதச் சொற்கள் கொடுக்கப்பட்டுள்ளன. சங்க இலக்கியங்களில் பயிலும் பல தமிழ்ச் சொற்களுக்குக் கூட சமக்கிருதச் சொற்களே மூலம் என்பதைப் போன்ற விளக்கங்கள் இந்த தமிழ் அகராதியில் கொடுக்கப்பட்டுள்ளது விந்தையிலும் விந்தையாக உள்ளது. ஒவ்வொரு சமக்கிருதச் சொல்லின் மூலத்தையும் சங்க இலக்கிய அறிவின் துணைகொண்டு ஆய்வுசெய்து அதன் வேர் எந்த மொழியில் உள்ளது? அதன் வேறு வடிவங்கள் என்னென்ன?. அவற்றின் பொருள் என்ன?. என்பதைப் போன்ற மொழியியல் ஆய்வுகள் தற்போது நடந்து வருகின்றது. சமக்கிருதத்தில் ஏராளமான தமிழ்ச் சொற்கள் இருப்பதையும் தமிழ்ச் சொற்களில் இருந்தே ஆயிரக்கணக்கான சமக்கிருதச் சொற்கள் தோன்றியிருப்பதையும் இந்த ஆய்வு முடிவில் இருந்து அறிந்து கொள்ளலாம். இறுதியாக இக் கட்டுரையின் முடிவு இதுதான்:

சமக்கிருதத்தில் உள்ள
நேரடித் தமிழ்ச்சொற்களையும்
மூலத் தமிழ்ச்சொற்களையும்
தமிழர்கள் பயன்படுத்துவது சரியே. !!!

2 கருத்துகள்:

  1. அலுவலகத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது சில அலுவலர்கள்/ஆசிரியர்கள் என் பெயரை சம்புலிங்கம் என்று கூறுவதும் எழுதுவதுமாக இருந்தார்கள். உயர்நிலையிலிருந்துகூட எனக்கு நான் இவ்வாறுதான் எழுத வேண்டும் என்று கடுமையாகக் கூறினர். எனக்கு என் தாத்தாவின் அப்பா பெயரை வைத்துள்ளார்கள். அதனை நான் மாற்றி எழுத முடியாது என்று கூறிவிட்டேன். இப்போதும் நெருக்கமான நண்பர்கள் அவ்வாறு எழுதினால்தான் தமிழ்ப்பற்று என்று கூறுகின்றார்கள்.

    பதிலளிநீக்கு
  2. ஐயா, தமிழ் இலக்கணம் கிரந்த எழுத்துக்களை மறுக்கிறது. எனவே தமிழ்ப்பற்று உடையவர்கள் அவற்றைப் பயன்படுத்த மாட்டார்கள். உங்கள் பெயரில் உள்ள கிரந்த எழுத்தை நீக்கிவிட்டுச் சம்புலிங்கம் என்றோ ச^ம்புலிங்கம் என்றோ எழுதலாம்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.