சனி, 29 ஆகஸ்ட், 2020

சிவலிங்க வடிவம் – சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி !!!

 


- சிவலிங்க வடிவம் – சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி !!!

 முன்னுரை:

 சிவன் கோவில்களில் காணப்படுகின்ற இலிங்க வடிவமானது ஆண் குறியையே குறிக்கின்றது என்று பல ஆண்டுகளாகப் பலரும் வாதிட்டு வருகின்றனர். ஆண் குறியைக் குறிப்பதான லிங் என்ற வடசொல்லில் இருந்து தோன்றியதே இலிங்கம் என்றும் ஆண் – பெண் உடல் உறவினையே இலிங்க வடிவமாகச் செதுக்கிக் கோவில்களில் வைத்து வழிபட்டு வருகின்றனர் என்றும் இதற்கு விளக்கம் கூறுகின்றனர். இவர்களது இந்த கருத்து அடிப்படை அற்றது என்றும் சிறிதளவும் உண்மை இல்லாதது என்றும் இறையன்பர்கள் பலர் விளக்கம் அளித்துள்ளனர். இருந்தாலும், இலிங்கம் என்ற சொல்லின் பொருளும் அது தோன்றிய முறையும் தெளிவாக விளக்கப் படாததால் இறையன்பர்களின் விளக்கங்கள் யாவும் புறந்தள்ளப் பட்டும் மறுக்கப்பட்டும் வருகின்றன. இந்நிலையில், இலிங்கம் என்ற சொல் தோன்றிய முறையினையும் அதன் பொருளையும் தெளிவாக விளக்கிக் கூறி சிவலிங்கம் பற்றிய சர்ச்சைகளுக்கு ஒரு முற்றுப் புள்ளி வைப்பதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.

குழப்பங்களின் காரணம் என்ன?

 சிவலிங்க வடிவம் குறித்த குழப்பங்களுக்கான காரணம், இலிங்கம் என்னும் சொல்லும் அதன் பொருளுமே ஆகும். உண்மையில், இலிங்கம் என்ற தமிழ்ச்சொல்லே லிங்க என்றும் லிங் என்றும் வடமொழியில் திரிந்து வழங்குகின்றது.

 இலிங்கம் என்ற தமிழ்ச் சொல்லுக்கு ஆண் குறி என்றும் வரம்பு கடந்து தோன்றும் தீ என்றும் இருவேறு பொருட்கள் உண்டு. அதாவது,

 இலிங்கம் =      (1). வரம்பு கடந்து தோன்றும் தீ. .    

(2) ஆண் குறி.

 இலிங்கம் என்ற ஒற்றைச் சொல்லுக்கு மேற்காணும் இரண்டு பொருட்களைத் தமிழ் அகராதிகள் தெளிவாகக் கூறாமல், ஆண் குறி மற்றும் சிவலிங்கம் என்று பொதுவாகக் கூறியிருப்பதே இந்தக் குழப்பங்களுக்கு அடிப்படையாக அமைந்தது.

இலிங்கம் என்னும் ஆண் குறி:

இலிங்கம் என்னும் தமிழ்ச்சொல்லே லிங்க, லிங் என்று திரிந்து வடமொழியில் வழங்கப்பட்டு வருகின்றது என்று மேலே கண்டோம். இனி இச்சொல் எவ்வாறு ஆண் குறியைக் குறிக்கும் என்று கீழே காணலாம்.

இல்லி என்ற தமிழ்ச்சொல்லுக்குத் துளை என்ற பொருளுண்டு. இங்குதல் என்ற வினைச்சொல்லுக்கு அழுந்துதல் என்ற பொருளுண்டு. இவை இரண்டுமே தமிழ் அகராதிகளில் உள்ளன. இந்த இரு சொற்களின் இணைப்பில் உருவானதே இலிங்கம் ஆகும்.

இல்லி (=துளை) + இங்கு (=அழுந்து) + அம் = இல்லிங்கம் >>> இலிங்கம் = துளைக்குள் அழுந்துவது.

பெண்குறி ஆகிய துளைக்குள் அழுந்துவது என்னும் பொருளில் ஆண் குறியைக் குறிப்பதற்கு உண்டான தமிழ்ச்சொல்லே இலிங்கம் என்பதனை இதனான் அறியலாம்.

இலிங்கம் என்னும் வரம்பிகந்த தீ:

இலிங்கம் என்னும் தமிழ்ச் சொல்லுக்கு ஆண் குறி என்பதைத் தவிர வரம்பு கடந்து தோன்றும் தீ என்ற பொருளும் உண்டு. ஆனால் அகராதிகளில் இப் பொருள் தெளிவாகக் கூறப்படவில்லை.

இலை என்னும் சொல்லுக்குத் தீ என்ற பொருளுண்டு. இகத்தல் என்ற வினைச்சொல்லுக்கு வரம்பு கடத்தல் என்ற பொருளுண்டு. இந்த இரண்டு சொற்களும் இணைந்து இலிங்கம் என்னும் சொல் கீழ்க்காணும் முறைப்படி பிறக்கும்.

இலை (=தீ) + இக (=வரம்பு கட) + அம் = இலிகம் >>> இலிங்கம் = வரம்பு கடந்த தீ.

வரம்பு கடந்து தோன்றும் தீ என்னும் பொருளில் சிவபெருமானின் எல்லையற்ற ஆற்றல் வடிவத்தைக் குறிப்பதற்கு உண்டான தமிழ்ச்சொல்லே இலிங்கம் என்பதனை இதனான் அறியலாம்.

சிவலிங்க வடிவம் உணர்த்துவது என்ன?

சிவபெருமானின் இலிங்க வடிவமானது அவனது எல்லையற்ற ஆற்றலை உணர்த்துவதாக அதாவது வரம்பிகந்த தீயின் வடிவினை அறிவிப்பதாக அமைக்கப்பட்டது என்று மேலே கண்டோம். இதைப் பற்றிக் கீழே இன்னும் விளக்கமாகக் காணலாம்.

சிவபெருமானைப் பற்றிக் கூறும் தமிழ்ப் பத்தி இலக்கியங்களில் அவனது வரம்பிகந்த தீ அல்லது நெருப்புத் தூண் வடிவம் பற்றிய செய்திகளைக் காணலாம். ஓங்கி உயர்ந்த நெருப்புத் தூணாக விளங்கிய சிவபெருமானின் அடியையும் முடியையும் காண முடியாமல் விசுணுவும் பிரம்மனும் அல்லல் உற்ற செய்தியைப் புராணங்களும் பேசி உள்ளன. சிவபெருமானின் வரம்பிகந்த தீ அல்லது நெருப்புத் தூண் வடிவத்தை மக்கள் எளிதாகப் புரிந்துகொள்ள அதனை ஓர் எரியும் அகல்விளக்கின் வடிவாக அமைத்தனர் ஆன்றோர். அவர்கள் அமைத்த எரியும் அகல் விளக்கின் வடிவமே தற்போது நாம் கோவில்களில் வழிபட்டு வருகின்ற சிவலிங்க வடிவம் ஆகும்.


சிவலிங்க வடிவம் எவ்வாறு எரியும் அகல் விளக்கின் வடிவாக விளங்குகின்றது என்பதனை அதன் அமைப்பில் இருந்து புரிந்து கொள்ளலாம். அனைத்துச் சிவலிங்கங்களிலும் கீழ்க்காணும் மூன்று பகுதிகள் காணப்படும்.  

1.   பீடம் = அடிப்பகுதி

2.   ஆவுடை = தூம்புடைய வட்டமான நடுப்பகுதி

3.   இலிங்கம் = மேல்நோக்கி நீண்டு குவிந்த தலைப்பகுதி

மேற்காணும் மூன்று பகுதிகளில்,

Ø  பீடமானது சதுரவடிவ மணை அல்லது பலகையையும்

Ø  ஆவுடையானது வட்டவடிவ அகல் விளக்கினையும்

Ø  இலிங்கமானது இலைவடிவ விளக்குச் சுடரையும் குறிப்பதாகும்.

இலை என்பது தீயைக் குறிப்பது எப்படி?

இலிங்கம் என்னும் சொல்லின் மூலமாக விளங்கும் இலை என்னும் சொல்லுக்குத் தீ என்ற புதிய பொருள் எவ்வாறு பொருந்தும் என்று மூன்று வழிமுறைகளில் விளக்கமாகக் காணலாம்.

1.   வடிவ ஒப்புமை:

இலை என்ற சொல்லுக்குக் கீழ்க்காணும் பல பொருட்களைத் தமிழ் அகராதிகள் காட்டியுள்ளன.

இலை¹ ilai , n. [K. Tu. ele, M. ila.] 1. Leaf; மரஞ் செடிகளின் இலை. இலை வளர்குரம்பை (சீவக. 1432). 2. Petal; பூவிதழ். அகவிலை யாம்பல் (தேவா. 511, 8). 3. Betel leaf, leaf of the Betel-pepper; வெற்றிலை. இலை பிளவதனை நடித்துக்கேட்கவும் (திருப்பு. 47). 4. Wooden slats made to overlap one another as in a venetian-blind; கதவின் இலை. 5. Garland of green leaves and flowers; படலை மாலை. (பரிபா. 6, 19.) 6. Foliage ornamental work on jewels; அணிகளின் இலைத்தொழில். இலை கொள்பூண் (சீவக. 1371). 7. Mysore gamboge. See பச்சிலை. (தைலவ. தைல. 98.) 8. Spoke of wheel; சக்கரத்தின் ஆர். இலைமுகத் துழலுகின்ற வெந்திரத் திகிரிநாப்பண் (பாரத. திரெள. 31). 9. Blade of a weapon or instrument; ஆயுதவலகு. நச்சிலை வேற்படைவீரர் (சீவக. 2209).

மேற்காணும் பொருட்களை நோக்கினால், இலை என்ற சொல்லுக்குத் தாவர இலை என்ற பொருள் மட்டுமின்றி இலை வடிவாக உள்ள வேலின் தலைப்பகுதி மற்றும் இலைவடிவாகச் செய்யப்படும் வேலைப்பாடு போன்ற பொருட்களும் கொடுக்கப்பட்டுள்ளதை அறியலாம்.

இந்நிலையில், அகல் விளக்கில் எரியும் சுடரின் வடிவத்தை நோக்கினால் அதுவும் இலை வடிவாக இருப்பதை அறியலாம். இப்படி, இலையின் வடிவத்துடன் ஒப்புமை கொண்டதால் இலை என்ற பெயர் தீக்கு ஏற்பட்டது எனலாம்.

இலை = தீ = இலையின் வடிவம் கொண்டது.

2.   தொழில் ஒப்புமை:

வடிவ ஒப்புமை மட்டுமின்றிச் செயல் / தொழில் ஒப்புமையின் மூலமும் இலை என்ற சொல்லுக்குத் தீ என்ற பொருள் பொருந்தும் என்று நிறுவமுடியும். இல்லுதல் என்ற சொல்லுக்குத் துளைத்தல் என்ற பொருள் உண்டு. இதிலிருந்து தோன்றியதே இல்லி என்னும் துளை ஆகும்.

இல் / இல்லு (=துளை) + இ = இல்லி = துளை.

ஒரு பொருளில் துளையிட வேண்டும் என்றால் முதலில் அதனைக் குத்த வேண்டும். அவ்வகையில் இல் என்ற சொல்லுக்குக் குத்துதல் என்ற பொருளும் அதனை ஒப்பதாகச் சுடுதல் என்ற பொருளும் உண்டாவதை அறியலாம். ஆனால் போகூழாய் மேற்கண்ட மூன்று பொருட்களில் (துளைத்தல், குத்துதல், சுடுதல்) எதையுமே இற்றைத் தமிழ் அகராதிகள் குறிப்பிடத் தவறிவிட்டன. இதுபோன்ற அகராதித் தவறுகளால் தான் தமிழர் பண்பாடு பற்றிய மிகப் பெரிய தவறான புரிதல்கள் காலந்தோறும் நிகழ்ந்து வந்துள்ளன. சுடுதல் என்ற பொருளின் அடிப்படையில் இலை என்ற சொல்லானது தீ என்னும் பொருளைக் கீழ்க்காணுமாறு குறிக்கும்.

இல் (=துளை, குத்து, சுடு)  + ஐ = இலை = சுடும் இயல்புடையது = தீ.

3.   பண்பு ஒப்புமை:

வடிவம் மற்றும் தொழில் ஒப்புமையால் இலை என்னும் சொல்லானது தீ என்னும் பொருளையும் குறிக்கும் என்று மேலே கண்டோம். இக் கருத்துக்கு வலு சேர்க்கும் விதமாக பண்பு ஒப்புமை மூலமாகவும் இதை நிறுவ முடியும்.

இலை என்ற சொல்லானது தீயைக் குறிக்கும் நிலையில், தீயின் பண்பான சிவப்பு நிறம் என்ற பொருளிலும் பல சொற்களில் பயன்படுத்தப் பட்டுள்ளதை அறிய முடிகிறது. இலை என்ற சொல்லானது சிவப்பு நிறம் என்ற பொருளில் கீழ்க்காணும் சொற்களில் பயின்று வந்துள்ளது.

இலை >>> இலவம் = சிவந்த மலர்களைக் கொண்ட பஞ்சு மரம்.

இலை >>> இலந்தை = சிவந்த சிறிய கனிகளைக் கொண்ட மரம்.

இலை >>> இலாட்சை, இலாக்கிரி = செந்நிற மெழுகு = அரக்கு

இலை >>> இலாங்கலி = செங்காந்தள்

இலை >>> இலாஞ்சி = செந்நிற மலர்களைக் கொண்ட ஏலக்காய்.

இலை >>> இலைப்பசளி = சிவந்த பூக்களைக் கொண்ட பெரும்பசலை.

மேற்காணும் சொற்களில் இலை என்ற சொல்லானது சிவப்பு என்ற பொருளில் பயன்பட்டு வந்துள்ள நிலையில் தமிழ் அகராதிகள் இந்தப் பொருளையும் குறிப்பிடத் தவறிவிட்டன.

முடிவுரை:

இதுவரை கண்டவற்றைத் தொகுத்துப் பார்க்கும்பொழுது கீழ்க்காணும் செய்திகளை அறிய முடிகிறது.

Ø இலிங்கம் என்ற தமிழ்ச் சொல்லுக்கு ஆண்குறி என்ற பொருள் மட்டுமின்றி வரம்பு கடந்த தீ என்ற பொருளும் உண்டு.

Ø  சிவலிங்கத்தில் வரும் இலிங்கம் என்ற சொல் வரம்பு கடந்த தீயைக் குறிக்கும்.

Ø  வரம்பு கடந்த தீயாக விளங்கும் இலிங்கத்தை எளிமையாக்கி எரியும் அகல் விளக்கின் வடிவமாக அமைக்கப்பட்டதே சிவலிங்க வடிவம் ஆகும். ஆண்குறிக்கும் சிவலிங்கத்திற்கும் ஒரு தொடர்பும் இல்லை.

இலை என்ற சொல்லுக்குத் தீ, சிவப்பு நிறம் ஆகிய பொருட்களும் உண்டு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.