சனி, 15 ஆகஸ்ட், 2020

தமிழரின் கெட்ட வார்த்தைகள் – மூலமும் பொருளும்

தமிழரின் கெட்ட வார்த்தைகள் – மூலமும் பொருளும்

முன்னுரை:

 தமிழர்கள் புழங்கும் கெட்ட வார்த்தைகளைப் பற்றிய இக் கட்டுரையை எழுதியதற்கான காரணத்தை முதலிலேயே சொல்லி விடுகிறேன். பிறரை அசிங்கப் படுத்துவதற்காகத் தமிழர்கள் பலவிதமான கெட்ட வார்த்தைகளைப் புழங்கி வருகிறார்கள். ஆனால் இவற்றில் பெரும்பாலான சொற்களின் மூலம் தமிழ் இல்லை என்றும் வேற்றுமொழிச் சொற்களையே தமிழர்கள் திரித்துக் கெட்ட வார்த்தைகளாகப் பேசி வருகின்றனர் என்றும் ஒரு கருத்து பரவலாக உலா வருகிறது. இக் கருத்து எப்படித் தவறானது என்பதைப் பற்றியும் எந்தெந்த கெட்ட வார்த்தைகளைப் பேசலாம், எவற்றைப் பேசக்கூடாது என்பதைப் பற்றியும் விளக்கமாகச் சொல்வதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.

கெட்டவார்த்தை – விளக்கமும் வகைகளும்:

   ஏமாற்றம், பழி வாங்குதல், காழ்ப்புணர்ச்சி, பகை போன்ற பலவிதமான சூழல்களின்போது தொடர்புடையவரை அவமானப்படுத்தும் நோக்கில் பேசப்படுவதே கெட்ட வார்த்தை ஆகும். இடக்கர், திட்டு, வசவு, நாச்செறு, ஏச்சு, உதப்பு, பழி, சில்லை, வசை, நாழம், புல்லம், பொடிவு, மறு, சாவம் ஆகியன கெட்ட வார்த்தையைக் குறிக்கின்ற பல்வேறு தமிழ்ச் சொற்களாகும். தமிழர்கள் பேசுகின்ற அனைத்துக் கெட்ட வார்த்தைகளையும் கீழ்க்காணும் மூன்று வகைகளுக்குள் அடக்கி விடலாம்.

  பரிவாதம்

2.   அங்கதம்

3.   தூத்தம் / தூதம் / துட்டம்.

இந்த மூன்றுவகையான கெட்ட வார்த்தைகளைப் பற்றிக் கீழே விளக்கமாகக் காணலாம்.

 1..பரிவாதம்:

 ஒருவர் மீது செலுத்தப்படும் அன்பினை அழிக்கும் விதமாக அந்த உறவினை இழிவுசெய்து கூறுவதே பரிவாதம் எனப்படும். குறிப்பாக, ஒருவருடைய தாய், உடன்பிறந்தாள் போன்றோரின் அன்பினை அழித்துக் கொச்சைப்படுத்திப் பேசுவதே பரிவாதச் சொல்லாகும். பரிவாதம் என்ற சொல்லின் தோற்றத்தில் இருந்து இதனைப் புரிந்து கொள்ளலாம்.

பரி (=அன்பு, அழி) + பதம் (=சொல்) = பரிபதம் >>> பரிவாதம் = அன்பினை அழித்துக் கூறப்படும் சொல்.

கெட்ட வார்த்தைகளில் இந்த பரிவாதச் சொற்களை அறவே தவிர்த்து விட வேண்டும். ஏனென்றால், இச்சொற்கள் கேட்போருக்குக் கடுஞ்சினத்தை உருவாக்கி மிகப்பெரிய மோசமான விளைவினை ஏற்படுத்தக் கூடியன.

2. அங்கதம்

ஒரு ஆணுக்குரிய அல்லது பெண்ணுக்குரிய உறுப்புக்களின் பெயர்கள் குறிப்பாக பிறப்பு உறுப்பின் பெயர்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புடையவற்றின் பல்வேறு பெயர்களைக் கூறுவது அங்கத வகையுள் அடங்கும். அங்கதம் என்ற சொல்லின் தோற்றத்தில் இருந்து இதனை அறிந்து கொள்ளலாம்.

அங்கம் (=உறுப்பு) + அறை (=சொல், பள்ளம், தாழ்வு) + அம் = அங்கறம் >>> அங்கதம் = உறுப்புக்களின் பெயர் சொல்லித் தாழ்த்துதல்.

அங்கதச் சொற்கள் பரிவாதச் சொற்களின் அளவுக்குக் கடும் விளைவுகளை ஏற்படுத்தாது என்றாலும் இவற்றையும் தவிர்ப்பதே நல்லது.

3..தூத்தம் / தூதம் / துட்டம் :

ஒருவர் செய்த பழிச்செயல்கள் / தவறுகளைச் சுட்டிக் காட்டி அவரை இழிவு செய்யும் விதமாகக் கூறப்படுவதே தூத்தம் / துட்டம் ஆகும். இச்சொற்கள் உருவான முறைகளில் இருந்து இதனைப் புரிந்து கொள்ளலாம்.

தூற்று (=பழிகூறு) + அம் = தூற்றம் >>> தூத்தம் >>> தூதம்

தூற்று (=பழிகூறு) + அம் = தூற்றம் >>> துட்டம்.

ஒருவர் செய்த தவறுகளைச் சுட்டிக் காட்டி அவரைப் பழிகூறுவதற்காகப் பலவிதமான சொற்களைத் தமிழர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இச்சொற்கள் அனைத்திற்கும் தமிழ்மொழியே மூலம் என்றும் இவை பிறமொழிகளில் இருந்து தோன்றவில்லை என்பதையும் கீழே விளக்கமாகக் காணலாம்.

1. பேமாணி, பேமானி :


கேடு கெட்டவன் அல்லது பெருமை இழந்தவன் என்ற பொருளில் சொல்லப்படும் சொல் இது. இது தமிழ்ச்சொல் தான். இச்சொல் உண்டான முறையைக் கீழே காணலாம்.

 

வே (=அழி) + மாண் (=பெருமை) + இ = வேமாணி >>> பேமாணி >>> பேமானி = பெருமை அழிந்தவன்.

 

2. கசுமாலம், கசுமலம், கச்`மாலம் :


இதுவும் மேலே கண்டதைப் போல பெருமை அழிந்தவன் என்ற பொருளில் வருவதே.  இச்சொல் தோன்றும் முறையில் இருந்து இதுவும் தமிழ்ச்சொல் தான் என்பதை அறியலாம்.

 

கழி (=நீங்கு, அழி) + மால் (=பெருமை) + அம் = கழிமாலம் >>> கசிமாலம் >>> கச்`மாலம், கசுமாலம் =பெருமை அழிந்தவன்.

 

3. டகாட்டி, டகால்டி :


நம்பிக்கைத் துரோகி / ஏமாற்றுபவன் என்ற பொருளில் ஒருவரைத் திட்டுவதற்குப் பயன்படும் சொல் இது. இதுவும் தமிழ்ச்சொல் தான் என்பதைக் கீழ்க்காணும் சொல்பிறப்பு முறையே காட்டிவிடும்.

 

இடம் + காட்டி = இடங்காட்டி >>> டகாட்டி >>> டகால்டி = இருப்பிடத்தைக் காட்டிக் கொடுப்பவன் = நம்பிக்கைத் துரோகி / ஏமாற்றுபவன்.

 

4. டுபாக்கு, டுபாக்கூர் :


ஊரெங்கும் இட்டுக்கட்டி பேசுபவன் / பொய்பேசித் திரிபவன் என்ற பொருளில் பயன்படுத்தப் படுகின்ற சொல் இது. கீழ்க்காணும் சொற்பிறப்பு முறையில் இருந்து இதுவும் ஒரு தமிழ்ச்சொல் தான் என்று அறியலாம்.

 

இடு (=இட்டுக்கட்டு) + வாக்கு (=சொல்) + ஊர் = இடுவாக்கூர் >>> டுபாக்கூர் = ஊரெல்லாம் இட்டுக்கட்டிச் சொல்பவன்.

 

5. கம்மனாட்டி, கம்முனாட்டி :

 

கீழான / இழிந்த செயலைச் செய்பவன் என்று ஒருவரைத் திட்டுவதற்குப் பயன்படுத்தப்படுகின்ற சொல் இது. இதுவும் தமிழ்ச்சொல் தான் என்பதனைக் கீழ்க்காணும் சொற்பிறப்பு முறையில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

 

கயமை (=கீழ்மை, இழிவு) + நாட்டு (=செய்) + இ = கயமைநாட்டி >>> கம்மனாட்டி >>> கம்முனாட்டி = கீழான / இழிவான செயல் புரிபவன்.

6. மொள்ளமாரி:

மொலு / மொல்லு என்றால் பேசுதல் என்று பொருள். இது அகராதிகளில் உள்ளது. இதிலிருந்து தோன்றியதே மொல்லை என்னும் சொல்.

 

மொலு / மொல்லு (=பேசு) + ஐ = மொல்லை = பேச்சு.

 

தான் பேசிய பேச்சையே மறுத்து மாற்றிப் பேசுபவனே மொல்லைமாறி என்று அழைக்கப்பட்டான். இதுவே மொள்ளமாரி என்று மருவியது.

 

மொல்லை (=பேச்சு) + மாறி = மொல்லைமாறி >>> மொள்ளமாரி = பேச்சை மாற்றிப் பேசுபவன், பொய் சொல்பவன்.

 

7. முடிச்சவக்கி / முடிச்சவிக்கி :

 

மூடம் என்றால் முட்டாள்தனம் என்று பொருள். இதிலிருந்து தோன்றிய மூடி என்றால் முட்டாள் என்று பொருள். சவங்குதல் என்றால் மானம் கெடுதல் என்று பொருள். இவையெல்லாம் அகராதிகளில் உள்ளன. இந்த இரண்டு சொற்களும் இணைந்து உருவாகிப் பின்னர் மருவிய சொல்லே முடிச்சவிக்கி ஆகும்.

 

மூடி (=முட்டாள்) + சவங்கு (=மானங்கெடு) + இ = முடிச்சவங்கி >>> முடிச்சவக்கி, முடிச்சவிக்கி = மானங்கெட்ட முட்டாள்.

8. பிக்காலி:

எடுத்த காரியத்தில் துணிவுடன் நின்று அதனை முடிக்காமல் இடையில் ஏற்படும் தோல்வி அல்லது இடையூறுக்கு அஞ்சி அக் காரியத்தைச் செய்யாமல் பின்வாங்கி ஓடுகின்ற கோழையே பிக்காலி ஆவான். இச்சொல் தோன்றிய வரலாற்றில் இருந்து இதனை அறியலாம்.

பிற்காலி (=பின்வாங்கு) >>> பிக்காலி = பின்வாங்குபவன் = பயந்தாங்கொள்ளி.

9. பிசுனாறி / பிசினாறி:

உண்ணும்போது பசியுடன் ஒருவர் வந்து உணவைக் கேட்க, தனது கையில் ஒட்டியிருக்கும் சோற்றுப் பருக்கையை அவருக்கு உண்ணக் கொடுக்கும் மகாகஞ்சனே பிசுனாறி / பிசினாறி ஆவான். இது தமிழ்ச்சொல் தான் என்பதைக் கீழ்க்காணும் சொற்பிறப்பு மூலம் அறியலாம்.

பிசு (ஒட்டு) + ஊண் (=உணவு) + ஆர் (=உண்ணு, கொடு) + இ = பிசூணாரி >>> பிசுனாறி, பிசினாறி = ஒட்டியிருக்கும் உணவை உண்ணக் கொடுப்பவன் = மகா கஞ்சன்.

10. கேப்புமாரி / கேப்மாரி:

தம்முடன் நட்பாக இருந்து சமயம் பார்த்து தனது சுயநலத்துக்காக நட்பில் இருந்து மாறியவனே கேப்புமாரி ஆவான். இச்சொல் தமிழ்தான் என்பதைக் கீழ்க்காணும் சொற்பிறப்பில் இருந்து அறியலாம்.

கெழுவு (=நட்பு) + மாறி = கெழுவுமாறி >>> கெய்வுமாரி >>> கேவுமாரி >>> கேப்புமாரி = நட்பாய் இருந்து மாறியவன்.

11. ஈத்தரை:

இழிவான காரியங்களைச் செய்வதையே தனது பழக்கமாகக் கொண்டு இழிந்த நிலையில் இருப்பவனே ஈத்தரை என்று அழைக்கப்படுவான். இச்சொல்லின் தோற்றமுறையைக் கீழே காணலாம்.

இழி (=தாழ்) + தரம் (=நிலை) + ஐ = இழித்தரை >>> இயித்தரை >>> ஈத்தரை = இழிவான நிலையில் இருப்பவன்.

12. எடுவட்டை / எடுபட்டை:

தனது மானத்தைப் பற்றிக் கவலைப்படாமல் எப்போதும் கேவலமான காரியங்களையே செய்து மானம் அழிந்து வாழ்பவனே எடுவட்டை அல்லது எடுபட்டை என்று அழைக்கப்படுவான். இத் தமிழ்ச்சொல் தோன்றிய முறையினைக் கீழே காணலாம்.

இறு (=கெடு) + பாடு (=பெருமை, மானம்) + ஐ = இறுபாட்டை >>> எடுபட்டை,  எடுவட்டை = மானம் கெட்டவன்.

13. நாதாரி:

ஒருவரது பிறப்பினை இழிவுபடுத்த அவரைப் பன்றி, நாய் போன்ற இழிந்த விலங்குகளுடன் ஒப்பிட்டுப் பேசுவது வழக்கமே. அவ்வகையில், நாதாரி என்ற சொல்லானது நாற்றமடிக்கும் பன்றியாக ஒருவரைச் சுட்டுவதற்குப் பயன்படுத்தப் படுகிறது. இச்சொல் தமிழ்தான் என்று கீழே காணும் சொற்பிறப்பின் மூலம் அறியலாம்.

நாறு + அரி (=பன்றி ) = நாறரி >>> நாதரி >>> நாதாரி = நாற்றமடிக்கும் பன்றி.

14. தேவடியாள்:

தேவரடியாள் என்ற சொல் மருவியே தேவடியாள் என்று ஆகவில்லை என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். இரண்டும் வேறு வேறு சொற்கள். யாரோ ஒருவர் தவறாகப் புரிந்துகொண்டு கூறியதால் வந்த வினை இது.

 

தேவரடியாள் என்பவர் கடவுளுக்குத் தன்னை அடிமையாகப் பாவித்துத் தொண்டு செய்பவர். தேவடியாள் என்பவள் பணத்திற்காகப் பிறர்க்கு இன்பத்தைக் கொடுப்பவள். தேவடியாள் என்ற சொல் உருவான விதத்தில் இருந்து இந்த வேறுபாட்டினைப் புரிந்து கொள்ளலாம்.

 

தே (=இன்பம்) + மாடு (=செல்வம், பொருள்) + ஈ (=கொடு) + ஆள் = தேமாடீயாள் >>> தேவடியாள் = செல்வத்திற்காக இன்பத்தைக் கொடுப்பவள்.

15. அவிசாரி / விபச்சாரி:

கெட்ட நடத்தை கொண்ட பெண்ணைக் குறிப்பதே அவிசாரி மற்றும் விபச்சாரி ஆகிய சொற்கள் ஆகும். இச்சொற்கள் தமிழ்தான் என்பதைக் கீழ்க்காணும் சொற்பிறப்பில் இருந்து அறியலாம்.

அவி (=கெடு ) + சாரம் (=நடத்தை) + இ = அவிசாரி = கெட்ட நடத்தை கொண்டவள்.

வீவு (=கேடு) + அசை (=செல், நட) + அறம் + இ = விவசறி >>> விபச்சாரி = அறம் கெட்ட நடத்தை கொண்டவள்.

முடிவுரை:

     மேலே உள்ளவை மட்டுமின்றி இன்னும் பல வட்டார வழக்குச் சொற்கள் கெட்ட வார்த்தைகளாகப் பயன்படுத்தப் படுகின்றன. அவை யாவும் தமிழ் மக்கள் ஆதியில் இருந்து பேசிவரும் சொற்கள் தான். தமிழ்ச் சொற்களாகவே இருந்தாலும் இவற்றைப் பயன்படுத்துவதைக் குறிப்பாக பரிவாதம் மற்றும் அங்கதச் சொற்களைத் தவிர்ப்பதே நலம் பயக்கும். தற்போது திரைப்படங்கள், ஊடகங்கள் போன்றவற்றில் யதார்த்தமாகக் கூறுவதாக நினைத்துக்கொண்டு இச்சொற்களைப் பேசி வருகின்றனர். இவை முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். கட்டுக்கடங்காத சினத்தின்போது ஒருவரைத் திட்டியே ஆகவேண்டும் என்று விரும்பினால் தூத்த வகைச்சொற்களைப் பயன்படுத்தலாம். 

2 கருத்துகள்:

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.