ஞாயிறு, 30 ஜனவரி, 2022

4. (அலத்தல் > அனிச்சம்) சங்க இலக்கியச் சொற்பிறப்பியல் - Tamil Etymological Dictionary - Part 4 - Alaththal to Aniccam

 

தமிழ்ச்சொல்

பொருள்

மேற்கோள்

பிறப்பியல்

அலத்தல்

வறட்சி

புற. 103

ஆல் (=நீர்) + அறு (=இல்லாகு) + அல் = அலற்றல் >>> அலத்தல் = நீர் இல்லாமை = வறட்சி

அலந்தலை

வறட்சி

அக. 111

(1) அல் (=இன்மை) + அறல் (=நீர்) + ஐ = அலறலை >>> அலதலை >>> அலந்தலை = நீர் இன்மை = வறட்சி. (2) அலத்தல் (=வறட்சி) + ஐ = அலத்தலை >>> அலந்தலை

அலந்தலை

துன்பம்

அக. 367

அல் (=இன்மை) + அறல் (=இன்பம்) + ஐ = அலறலை >>> அலதலை >>> அலந்தலை = இன்பம் இன்மை

அலந்தலை

வளைந்த நுனி

அக. 385

அலை (=வளைவு) + தலை (=நுனி) = அலைத்தலை >>> அலந்தலை = வளைவுடைய நுனி

அலம்

துன்பம்

குறு. 64

(1) அல் (=இன்மை) + அம் (=மகிழ்ச்சி) = அலம் = மகிழ்ச்சி இன்மை = துன்பம். (2) அலை (=வருந்து) + அம் = அலம் = வருத்தம், துன்பம்

அலம்

ஆட்டம்

குறு. 98

அலை (=சுற்று, ஆடு) + அம் = அலம் = ஆட்டம்

அலமரல்

துன்பம், நோய்

புற. 43, நற். 9

அலை (=கெடு) + அமர் (=விருப்பம், மகிழ்ச்சி) + அல் = அலமரல் = மகிழ்ச்சியைக் கெடுப்பது = நோய், துன்பம்

அலமரல்

விளையாட்டு

அக. 7

அலை (=சுற்று, திரி) + அமர் (=விருப்பம், மகிழ்ச்சி) + அல் = அலமரல் = மகிழ்ந்து சுற்றித் திரிதல்.

அலமலக்கு

மனக்கலக்கம்

குறு. 43

அலை (=வருத்து) + மலக்கு (=கலக்கு) = அலைமலக்கு >>> அலமலக்கு = வருத்துகின்ற கலக்கம்

அலர்

ஊர்ப்பேச்சு

அக. 201

அளை (=கூடு) + ஆர் (=பரவு, பேசு, ஊர்) = அளார் >>> அலர் = ஊரில் கூடிப் பரவலாகப் பேசப்படுவது

அலரி, அலர்

மலர்மொட்டு

முல். 10, அக. 4

அள் (=செறிவு) + ஆர் (=மலர், கூர்மை) + இ = அளாரி >>> அலரி = செறிந்து கூரிய மலர் = மலர்மொட்டு

அல்லங்காடி

இரவுநேரக் கடை

மது. 544

அல் (=இரவு) + அங்காடி (=கடை) = அல்லங்காடி = இரவுநேரக் கடை

அல்லல்

வருத்தம்

ஐங். 27

அலை (=வருந்து) + அல் = அல்லல் = வருத்தம்

அல்லவை

துன்பம்

புற. 191

அலை (=வருத்து) + அவை = அல்லவை = வருத்துபவை

அல்லி

இரவில் மலரும் நீர்ப்பூ

பரி. 12

அல் (=இரவு, நீர்) + ஈ (=வகு, விரி, மலர்) = அல்லீ >>> அல்லி = இரவில் மலரும் நீர்ப்பூ

அலவல்

துன்பம்

கலி. 122

அல (=துன்புறு) + அல் = அலவல் = துன்பம்

அலவன்

நண்டு

பொரு. 9

அள (=எட்டு, செல்) + அண் (=பக்கம்) = அளவண் >>> அலவன் = பக்கங்களில் எட்டிச் செல்வது = நண்டு

அலவு

துன்பம்

கலி. 10

அல (=துன்புறு) + வு = அலவு = துன்பம்

அலைவாய்

திருச்செந்தூர்

அக. 266

அலை (=கொலை, கடல்) + வாய் (=சிறப்பு, பெறு, பொருந்து, இடம்) = அலைவாய் = கொலையால் சிறப்பு பெற்ற கடல் பொருந்திய இடம் = திருச்செந்தூர்

அவரை

கொடி வகை

சிறு. 164

அவி (=அடக்கு, உணவு) + அரி (=சிலம்பு, பரல், ஒப்பு, கொட்டை, பசுமை) + ஐ = அவரை = சிலம்பின் பரல் போலக் கொட்டைகளை அடக்கிய பசுமையான உணவு.

அவல்

உரலில் குற்றியது

பதி. 29

அவை (=குற்று, மெலியச்செய்) + அல் = அவல் = குற்றி மெலியச் செய்தது.

அவல்

குளம்

ஐங். 453

அவை (=இடம்) + ஆல் (=நீர்) = அவால் >>> அவல் = நீருடைய இடம் = குளம்

அவல்

பள்ளம்

பொரு. 216

அவை (=குற்று, பள்ளமாக்கு) + அல் = அவல் = பள்ளம்

அவலம்

துன்பம்

நற். 58

ஏம் (=இன்பம்) + அல் (=இன்மை) + அம் = எமலம் >>> அவலம் = இன்பம் இன்மை = துன்பம்

அவவு, அவா

ஏக்கம்

நற். 212, கலி. 71

அம் (=நீளம், காலம்) + ஆவு (=விரும்பு) = அமாவு >>> அவவு >>> அவா = நீண்ட கால விருப்பம்

அவி

உணவு

புற. 363

ஏமம் (=மயக்கம், கிறக்கம், வலிமை) + ஈ (=நீக்கு, கொடு) = எமீ >>> அவி = கிறக்கம் நீக்கி வலிமை கொடுப்பது

அவி

யாகம்

பரி. 10

அவி (=உணவு, தீ, எரி) >>> அவி = உணவுகளைத் தீயில் எரித்தல் = யாகம்

அவிர்

ஒளி, வெண்மை

சிறு. 25, நற். 144

ஏமம் (=இரவு, இருள்) + ஈர் (=அறு) = எமீர் >>> அவிர் = இருளை அறுப்பது = ஒளி, வெண்மை

அவிர்

தோற்றம்

பெரு. 481

ஏமம் (=காவல், மறைப்பு) + ஏர் (=எழு) = எமேர் >>> அவிர் = மறைவில் இருந்து எழுதல் = தோற்றம்

அவிழ்

தோற்றம்

அக. 152

ஏமம் (=காவல், மறைப்பு) + ஏழ் (=எழு) = எமேழ் >>> அவிழ் = மறைவில் இருந்து எழுதல் = தோற்றம்

அவுணர்

அரக்கர்

குறு. 1

ஏ (=பெருக்கம்) + ஊன் (=உடல்) + அர் = எவூனர் >>> அவுணர் = பெரிய உடலைக் கொண்டவர் = அரக்கர்

அவை

கூட்டம்

மது. 161

அம் (=திரள், கூடு) + ஐ = அமை >>> அவை = கூட்டம்

அவைப்பு

குத்தல்

சிறு. 194

அவை (=குற்று) + பு = அவைப்பு = குற்றுகை

அவையம்

சபை

மலை. 77

அமை (=பொருந்து, கூடு, தீர்மானி) + அம் (=சொல், பேசு) = அமையம் >>> அவையம் = கூடிப் பேசித் தீர்மானிக்க அமைக்கப் பட்டது = சபை

அவையல்

உரலில் குற்றியது

பொரு. 16

அவை (=குற்று, மெலியச்செய்) + அல் = அவையல் = குற்றி மெலியச் செய்தது.

அழகு

தூய்மை

பெரு. 252

அழி (=நீங்கு) + அகம் (=கறை) + உ = அழகு = கறை நீங்கியது = தூய்மை, அழகு

அழல்

தீ

நற். 256

அழி (=எரி) + அல் = அழல் = எரிப்பது = தீ

அழல்

நஞ்சு

நற். 75

அழி (=கொல், உண்) + அல் = அழல் = கொல்லும் உணவு = நஞ்சு

அழல், அழாஅல்

அழுகை

நற். 371, புற. 46

அழு + அல் = அழல் = அழுகை

அழல்

ஒளி, வெயில்

ஐங். 232, ஐங். 326

அழி + அல் (=இரவு, இருள்) = அழல் = இருளை அழிப்பது = ஒளி, வெயில்

அழிவு

மறைவு

அக. 242

அழி (=மறை) + வு = அழிவு = மறைவு

அழிவு

தோல்வி

நற். 9

அழி (=தோல்) + வு = அழிவு = தோல்வி

அழிவு

துன்பம்

நற். 43

அழி (=துன்புறு) + வு = அழிவு = துன்பம்

அழுக்கு

கறை

புற. 126

ஆழ் (=மறை) + உகை (=பதி, படி, எழு, தோன்று) + உ = அழுக்கு = தோற்றத்தை மறைக்கும் படிவு

அழுகல்

கெட்டு மாறுதல்

குறு. 56

அழி (=மாறு) + உகு (=கெடு) + அல் = அழுகல் = கெட்டு மாறுதல்

அழுகை

அழுதல்

மலை. 301

அழு + கை = அழுகை = அழுதல்

அழுங்கல்

ஆரவாரம்

நற். 38

அழி (=மிகுதி) + கல் (=ஒலி) = அழிக்கல் >>> அழுங்கல் = மிகுதியான ஒலி = ஆரவாரம்

அழுங்கல்

இரக்கம்

நற். 150

அழி (=மனம் உடை) + இகு (=கரை) + அல் = அழிக்கல் >>> அழுங்கல் = மனம் உடைந்து கரைதல் = இரக்கம்

அழுங்கல்

துன்பம், நோய்

குறு. 307

அழி (=வருத்து) + இகு (=வீழ்த்து) + அல் = அழிக்கல் >>> அழுங்கல் = வருத்தி வீழ்த்துவது = துன்பம், நோய்

அழும்பு

கேடு

புற. 283

அழிவு (=கேடு) >>> அழும்பு

அழுவம்

கடல்

பெரு. 350

ஆழ் + உப்பு (=பெரு, மிகு) + அம் (=நீர்) = அழுப்பம் >>> அழுவம் = மிகுதியான உப்பு நீரும் ஆழமும் உடையது

அழுவம்

கழிமுகம்

மலை. 528

ஆழி (=கடல்) + ஓ (=செல், புணர், ஒன்றுகூடு) + அம் (=நீளம், நீர்) = அழோவம் >>> அழுவம் = நீர் நீண்டு சென்று கடலுடன் ஒன்றுகூடுவது = கழிமுகம்

அழுவம்

காடு

நற். 46

அழி (=கழி, மரம், மிகுதி) + உப்பு (=பெரு, வளர்) + அம் = அழுப்பம் >>> அழுவம் = மரங்கள் மிகுதியாய் வளர்வது

அழுவம்

போர்

நற். 349

அழி (=கொல்) + ஓ (=புணர், ஒன்றுகூடு) + அம் = அழோவம் >>> அழுவம் = ஒன்றுகூடிக் கொல்லுதல்

அழுவம்

நடு

புற. 294

அழி (=நீக்கு, பிரி) + ஒப்பு (=சமம்) + அம் = அழொப்பம் >>> அழுவம் = சமமாகப் பிரிப்பது = நடு

அள்ளல்

சேறு

ஐங். 22

அளம் (=நிலம், மண், செறிவு) + ஆல் (=நீர்) = அள்ளால் >>> அள்ளல் = நீரும் மண்ணும் செறிந்தது = சேறு

அள்ளல்

செறிவு

அக. 290

அள் (=செறி) + அல் = அள்ளல் = செறிவு

அளக்கர்

பூமி

புற. 229

ஆள் (=வழங்கு) + அகம் (=உயிர், இடம்) + அர் = அளக்கர் = உயிர்கள் வழங்கும் இடம் = பூமி

அளகம்

கண்ணிமை

நற். 377

அளி (=பொருந்து, கா) + ஆகம் (=கண்) = அளாகம் >>> அளகம் = கண்களைப் பொருந்திக் காப்பது = கண்ணிமை

அளகு

கோழி

பெரு. 256

அளை (=துழாவு, கிண்டு) + அகம் (=நிலம், மரம், கால்) + உ = அளகு = கால்களால் நிலத்தைக் கிண்டுவது

அளகு

கழுகு

பதி. 35

ஆலம் (=ஆகாயம்) + அகை (=உயர், வளை, வட்டமடி) + உ = அலகு >>> அளகு = ஆகாயத்தின் உயரத்தில் வட்டமடிப்பது = கழுகு

அளப்பு

அளத்தல்

பதி. 90

அள + பு = அளப்பு = அளத்தல்

அளம்

நிலம்

நற். 354

அளை (=தழுவு, சூழ்) + அம் (=நீர்) = அளம் = நீரால் சூழப்பட்டது = பூமி, நிலம்

அளவல்

பழகுதல்

நற். 32

அள (=கல, பழகு) + அல் = அளவல் = பழகுதல்

அளவு, அளவை

வரையறை

நற். 55, பதி. 71

அள (=வரையறு) + வு = அளவு = வரையறை

அளவு

கலப்பு

அக. 89

அள (=கல) + வு = அளவு = கலப்பு

அளவை

சந்தர்ப்பம்

பொரு. 152

அளை (=பொருந்து) + அமை (=காலம்) = அளமை >>> அளவை = பொருத்தமான காலம் = சந்தர்ப்பம்

அளறு

சேறு

பெரு. 208

அளம் (=நிலம், மண், செறிவு) + அரி (=நீர்) + உ = அளரு >>> அளறு = நீரும் மண்ணும் செறிந்தது = சேறு

அளறு

இரத்தம்

பரி. 2

அள் (=செறிவு, கெட்டி) + அரி (=அறு, ஒழுகு, சிவப்பு) + உ = அளரு >>> அளறு = அறுத்தால் சிவப்பு நிறத்தில் கெட்டியாக ஒழுகுவது = இரத்தம்

அளறு

வண்ணம் கலந்த நீர்

பரி. 6

அளை (=கல) + அரி (=வண்ணம், நீர்) + உ = அளரு >>> அளறு = வண்ணம் கலந்த நீர்

அளிது

இரங்கத்தக்கது

நற். 114

அளி (=இரக்கம்) + து = அளிது = இரங்கத்தக்கது

அளிப்பு

குழைவு

நற். 51

அளி (=குழை) + பு = அளிப்பு = குழைவு

அளியர்

இரங்கத் தக்கவர்

குறு. 158

அளி (=இரக்கம்) + அர் = அளியர் = இரங்கத் தக்கவர்

அளை

குகை, பொந்து

திரு. 314, பொரு. 9

அள் (=செறி, தங்கு, அடை) + ஆய் (=பிரி, பிள) = அளாய் >>> அளை = அடைந்து தங்குகின்ற பிளவு

அளை

தயிர்

பெரு. 163

அள் (=செறிவு, கெட்டி, தங்கு) + ஆய் (=அழகு, வெண்மை) = அளாய் >>> அளை = வெண்ணிறத்தில் கெட்டியாகித் தங்குவது = தயிர்

அளை

குழைவு

ஐங். 393

அளி (=குழை) + ஐ = அளை = குழைவு

அற்கம்

குறைவு

அக. 235

அல் (=இன்மை) + கம் (=மிகுதி) = அல்கம் >>> அற்கம் = மிகுதி இன்மை = குறைவு

அற்சிரம்

குளிர்ச்சி, பனி, பனிக்காலம்

குறு. 76, அக. 317, அக. 294

அல் (=இன்மை) + சுரம் (=வெப்பம்) = அல்சுரம் >>> அற்சிரம் = வெப்பம் இன்மை = குளிர்ச்சி >>> பனி, பனிக்காலம்

அற்றம்

துன்பம்

கலி. 144

அறு (=இல்லாகு) + அம் (=இன்பம்) = அற்றம் = இன்பம் இல்லாமை = துன்பம்

அற்றம்

இன்மை, வறுமை

நற். 109, புற. 158

அறு (=இல்லாகு) + அம் = அற்றம் = இல்லாமை >>> வறுமை

அற்றம்

வழி

கலி. 4

ஆறு (=வழி) + அம் = அற்றம்

அற்றை, அன்றை

அந் நாள்

புற. 112, குறு. 385

அ (=அந்த) + நெய் (=ஒளிர், பகல்செய்) = அந்நெய் >>> அன்னை >>> அன்றை >>> அற்றை = அந்தப் பகல்

அறம், அறன்

நற்செயல், நன்னெறி

பதி. 24, கலி. 96, ஐங். 229

ஆறு (=நெறி, செயல்முறை) + அம் (=இனிமை, நன்மை) = அறம் = நன்மைக்கான செயல்முறை

அறம், அறன்

நீதி

மது. 492, புற. 210

அறை (=அடி, தண்டி, வஞ்சனை, குற்றம், சொல்) + அம் (=கட்டளை) = அறம் = குற்றத்திற்கான தண்டனையைக் கட்டளையாகச் சொல்வது = நீதி

அறத்துறை

நீர்த்துறை

புற. 381

அறல் (=நீர்) + துறை = அறற்றுறை >>> அறத்துறை = நீர்த்துறை

அறல்

சிப்பி

சிறு. 6

அறை (=வீடு, அலை, மோதுகை) + ஏல் (=நீர், சும) = அறேல் >>> அறல் = வீட்டைச் சுமந்தவாறு நீரில் அலை மோதுவது = சிப்பி

அறல்

துளை

சிறு. 162

அறு (=துளையிடு) + அல் = அறல் = துளை

அறல்

நீர்

குறு. 65

அரி (=தீ, பகை) + அல் = அரல் >>> அறல் = தீப்பகை

அறவன்

நல்லவன்

குறு. 284

அறம் (=நன்மை) + அன் = அறவன் = நல்லவன்

அறவு

இன்மை

மது. 216

அறு (=இல்லாகு) + ஔ = அறவு = இல்லாமை

அறிஞர்

அறிவுடையோர்

மது. 481

அறி (=அறிவு) + ஞர் = அறிஞர் = அறிவுடையோர்

அறியாமை

அறிவு மயக்கம்

அக. 236

அறி + ஆ + மை = அறியாமை = அறிவின்மை, மயக்கம்

அறிவு

ஞானம்

கலி. 133

அறி + வு = அறிவு = ஞானம்

அறிவு

கல்வி

கலி. 72

அறி (=கல்) + வு = அறிவு = கல்வி

அறுகை

புல் வகை

பட். 256

அரி (=நீர், பசுமை, மென்மை) + உகை (=உயர்ந்தெழு, பொருந்து) = அருகை >>> அறுகை = நீருடன் பொருந்திப் பசுமையும் மென்மையும் கொண்டு உயர்ந்தெழுவது

அறுகை

யானை

பதி. 44

அரி (=கருமை, மலை, ஒப்பு) + உகை (=உயர், அசை) = அருகை >>> அறுகை = அசைகின்ற மலை போல உயரமும் கருமையும் கொண்டது = யானை

அறுவை

ஆடை

பொரு. 83

ஆர் (=மறை, அணி) + உவ (=மகிழ்) + ஐ = அருவை >>> அறுவை = அணிந்து மகிழும் மறைப்பு

அறை

வெட்டுகை

பொரு. 193

அறு (=வெட்டு) + ஐ = அறை = வெட்டுகை

அறை

தங்குமிடம்

பெரு. 50

ஆர் (=தங்கு, இடம்) + ஐ = அரை >>> அறை = தங்குமிடம்

அறை

வெளி

குறி. 98

அறு (=இல்லாகு) + ஐ = அறை = இன்மை >>> வெளி

அறை

கட்டுகை

குறி. 177

ஆர் (=கட்டு) + ஐ = அரை >>> அறை = கட்டுகை

அறை

ஒலி

நற். 46

ஆர் (=ஒலி) + ஐ = அரை >>> அறை

அறை

நிலம்

நற். 79

ஆர் (=பூமி, நிலம்) + ஐ = அரை >>> அறை

அறை

மலை

நற். 114

அரி (=மலை) + ஐ = அரை >>> அறை

அறை

பாத்தி

குறு. 180

அறு (=வரையறு) + ஐ = அறை = வரையறுத்தது

அறை

விரிவு

ஐங். 208

ஆர் (=பரவு, விரி) + ஐ = அரை >>> அறை = விரிவு

அறை

அரைப்பு

பரி. 10

அரி (=நீர், கூட்டு, மென்மை) + ஐ = அரை >>> அறை = நீரைக் கூட்டி மென்மையாக்குதல்

அறை

பாறை

கலி. 43

ஆர் (=அருமை, கடினம், நிலம், பொருந்து) + ஐ = அரை >>> அறை = நிலத்துடன் பொருந்திய கடினப் பொருள்

அறை

பள்ளம்

கலி. 53

ஆர் (=நிலம்) + ஆய் (=குத்து, நீக்கு) = அராய் >>> அரை >>> அறை = குத்தி நீக்கிய நிலம் = குழி, பள்ளம்

அறை

வஞ்சனை

கலி. 67

ஆர் (=சொல், மறை, பொருந்து) + ஐ = அரை >>> அறை = பொருந்தச் சொல்லி மறைப்பது = பொய், வஞ்சனை

அறை

கூர்மை

அக. 107

ஆர் (=கூர்மை) + ஐ = அரை >>> அறை

அறை

துண்டு

அக. 317

அறு (=துண்டாகு) + ஐ = அறை = துண்டானது = துண்டு

அறை

மரம்

அக. 322

ஆர் (=மரம்) + ஐ = அரை >>> அறை

அறை

அலை

புற. 175

அரி (=இடைவிடு, அறுத்துச்செல், நீர்) + ஐ = அரை >>> அறை = இடைவிட்டு அறுத்துச் செல்லும் நீர்

அன்பு

காதல், இரக்கம்

திரு. 292, ஐங். 476

அண் (=பற்று, பிணி) + பூ (=பிறப்பு, உயிர்) = அண்பூ >>> அன்பு = உயிர்களைப் பிணிப்பது = இரக்கம், காதல்

அன்மை

இன்மை

நற். 34

அல் (=இன்மை) + மை = அன்மை

அன்மை

கலக்கம்

அக. 243

அல் (=மயக்கம், கலக்கம்) + மை = அன்மை = கலக்கம்

அன்றில்

காதல் பறவை

நற். 124

அறு (=நீங்கு, பிரி) + இல் (=மனைவி, துணை, சாவு) = அற்றில் >>> அன்றில் = துணையைப் பிரிந்தால் சாவது

அன்னம், அனம்

பறவை வகை

அக. 234, கலி. 56

அணி (=கூட்டம், வரிசை, நெருக்கம், அழகு) + அம் (=நீர், பறவை) = அண்ணம் >>> அன்னம் = நெருங்கிய வரிசையில் கூடிப் பறக்கின்ற அழகிய நீர்ப் பறவை

அன்னை

தாய்

நற். 4

ஆய் (=கொய், பிரித்தெடு, கொண்டாடு, அழகு, மென்மை, சிறுமை) + ஐ = அய்யை >>> அஞ்ஞை >>> அன்னை = கொய்து பிரித்தெடுத்த அழகும் மென்மையும் உடைய சிறியதைக் கொண்டாடுபவள் = தாய்.

அனந்தல், அனந்தர்

களைப்பு, பலவீனம்

பொரு. 94, மலை. 173, புற. 62

அன்மை (=இன்மை) + ஆற்றல் = அனாற்றல் >>> அனத்தல் >>> அனந்தல் >>> அனந்தர் = ஆற்றல் இன்மை = சோர்வு, களைப்பு, பலவீனம்

அனல்

தீ

பரி. 5

அணை (=மரம், தோன்று, பொருந்து, அழி, இல்லாகு) + எல் (=ஒளி) = அணெல் >>> அனல் = மரத்தில் தோன்றிப் பொருந்தி ஒளிசெய்து அழித்து இல்லாமல் போவது

அனிச்சம்

மலர் வகை

குறி. 62

அணி (=அழகு, முகம், நெருக்கம், பொருத்து) + உழை (=வருந்து, வாடு, இதழ்) + அம் = அணுழம் >>> அணிசம் >>> அனிச்சம் = முகத்துடன் நெருக்கமாகப் பொருத்தினால் வாடுகின்ற அழகிய இதழ்களுடையது