ஆலமரம்
– என்று சொன்னதுமே பரந்து விரிந்த அதன் கிளைகளும் தொங்கிக் கொண்டிருக்கும் அதன் விழுதுகளுமே
கண்முன்னால் வந்து நிற்கும். மிக நீண்ட ஆயுளைக் கொண்டதால் “ஆல் போல் தழைக்க” என்று
பிறரை வாழ்த்துவதும் உண்டு. ஆலமரத்தின் கிளைகளில் இருந்து ஒடிக்கப்பட்ட குச்சிகள் பல்துலக்குவதற்கு
இன்றளவும் பயன்படுத்தப் படுகின்றன. ஆலமரத்தை அடிப்படையாகக் கொண்டு பல ஊர்ப்பெயர்களும்
உண்டு. அவற்றுள் மிகமிகப் பழமையானவை ஆலங்கானம், தொன்மூதாலம் போன்றவை. மன்னரின் படைகள்
முழுவதும் தங்குவதற்கான இடமாகவும் ஆலமரம் விளங்கியுள்ளது. இந்தியத் திருநாட்டின் தேசிய
மரமாகத் தற்போது விளங்குகின்ற ஆலமரத்தைப் பற்றிச் சங்க இலக்கியம் கூறியுள்ள பல்வேறு
செய்திகளை இங்கே காணலாம்.
ஆலமரம் – பூர்வீகமும் பெயரும்:
ஆலமரத்தின்
பூர்வீகம் ஆசியாவில் இந்தியத் துணைக்கண்டமெனக் கூறப்பட்டுள்ளது. பிகச் பெங்காலன்சிச்
(FICUS BENGHALENSIS) என்ற தாவரவியல் பெயரைக் கொண்ட இம் மரத்தின் மிகப்பெரிய மரங்கள்
இந்தியாவில் தான் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. ஆலமரத்தை ஆங்கிலத்தில் பனியன்
(BANYAN) என்று அழைப்பார்கள். ஆராய்ந்து பார்த்ததில்
இப்பெயர் கூட தமிழ்ச்சொல்லின் திரிபாகவே அமைந்துள்ளது என்பதைக் கீழ்க்காணும் சொற்பிறப்பியல்
மூலம் அறிந்து கொள்ளலாம்.
பணை (=பெருமை, உயரம், கிளை,
தங்குமிடம்) + இழி (=இறங்கு, தாழ், தொங்கு) + அண் (=கயிறு) = பணிழண் >>> பனியன்
= பெரிய உயரமான கிளைகளையும் தொங்குகின்ற கயிறுகளையும் கொண்டு தங்குமிடமாகவும் விளங்குவது
= ஆலமரம்.
ஆலமரத்தைக்
குறிப்பதற்கு நாற்பது பெயர்கள் இதுவரை அறியப்பட்டுள்ளன. அவை யாவும் அகரவரிசைப்படி அமைக்கப்பட்டு
கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
அவரோகி,அன்னபம்,அன்னயம்,ஆல்,ஆலம்,இயக்குரோதம்,இரத்தப்பலம்,உலூகலம்,ஏகவாசம்,
ககவசுகம்,கல்லால்,காதவம்,காமரம்,கான்மரம்,கோளி,சடாலம்,சபம்,சம்புச்சயனம்,சிபாருகம்,
சிவாருகம்,தொன்மரம்,நதீவடம்,நிக்குரோதம்,நியக்குரோதம்,நெக்குரோதம்,பழுமரம்,பாலி,
பூகேசம்,பூதக்குயம்,பூதவம்,மகாச்சாயம்,முதுமரம்,யககதரு,யக்கவாசம்,யமப்பிரியம்,வடம்,
வடல்,வானோங்கி,விருகற்பாதம்,வைச்சிரவனாலயம்.
மேற்காணும்
பெயர்களில் ஆல், ஆலம், கோளி, பழுமரம், முதுமரம் ஆகிய பெயர்களே சங்க இலக்கியத்தில் பயன்படுத்தப்
பட்டுள்ளன.
ஆலமரம் – பண்புகள்:
ஆலமரத்தைப்
பற்றிப் பலவகையான புதிய செய்திகளைச் சங்க இலக்கியம் கூறியுள்ளது. அவற்றை தனித்தனித்
தலைப்புக்களின் கீழ் பாடல்களுடன் விரிவாகக் காணும் முன்னர் சுருக்கமாக கீழே காணலாம்.
ஆலமரத்தின்
தண்டுகள் பலவாகக் கிளைத்து உயரமாகவும் அகலமாகவும் வளரும். இளங்கிளைகளின் பட்டையானது
நெய்யில் தோய்ந்த பசுந்தோல் போல தடித்துப் பளபளப்புடன் இருக்கும். வயதான ஆலமரத் தண்டில்
பொந்துகள் காணப்படும். ஆலமரத்தின் தண்டு வலுவிழந்து இற்றுப் போனாலும் கீழே சாயாதபடிக்கு
அதன் விழுதுகள் தாங்கி நிற்கும். பல நூறு ஆண்டுகள் வரையிலும் உயிர் வாழக் கூடிய ஆலமரத்தின்
கொழுந்து இலைகள் தீயைப் போலச் சிவந்து தோன்றும். இலைகள் பெரிதாகவும் செறிந்தும் இருப்பதால்
ஆலமரத்தின் கீழே மிகப்பெரிய குளிர்ச்சியான நிழல் எப்போதும் இருக்கும். சங்ககாலத் தமிழர்கள்
தாது எரு மன்றங்களையும் களரிகளையும் இம்மரத்தின் நிழலில் அமைத்திருந்த செய்தி கூறப்பட்டுள்ளது.
ஆலமரத்தின் பூக்களுக்குக் கோளி என்று பெயர். இப் பூக்கள் மலராமல் உட்புறமாகவே மகரந்தச்
சேர்க்கை நடைபெறும். ஆலமரத்தின் கனிகள் சிறிய உருண்டை வடிவில் சிவப்பு நிறத்தில் சுவையாக
இருக்கும். இக் கனிகளை உண்பதற்காக ஏராளமான
பறவைகள் வந்து தங்கும். இதனால் ஆலமரத்தில் பறவைகளின் ஒலியானது எப்போதும் கேட்டுக்கொண்டே
இருக்கும். சங்ககாலத் தமிழர்கள் ஆலமரத்தில் தெய்வம் உறைவதாக நம்பி வழிபட்டனர்.
தண்டு:
ஆலமரத்தின்
தண்டானது உயரமாக வளர்வதில்லை. சிறிது உயரத்திலேயே பல கிளைகளாகப் பிரிந்து உயரமாக வளரத்
தொடங்கும். ஆனால் தண்டுப் பகுதி மிகப் பெரியதாக அகலமாக பெருக்கத் தொடங்கும். நாலைந்து
பேர் கட்டிப் பிடிக்கும் அளவுக்கு மிகப் பெரியதாக வளர்கின்ற தண்டின் அடிப்பகுதியில்
இருந்து ஏராளமான வேர்கள் உருவாகிப் பூமிக்குள் புகுந்து மரத்துக்கு ஒரு வலுவான ஆதாரத்தை
உண்டாக்கும். ஆலமரத்தின் வயது ஏற ஏற அதன் தண்டுப் பகுதி வலுவிழந்து இற்றுப் போகும்.
பல சமயங்களில் அதில் பெரிய பெரிய பொந்துக்களும் உருவாகும். இதைப்பற்றிக் கூறும் .சங்க
இலக்கியப் பாடல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
நிலம் பக வீழ்ந்த அலங்கல் பல்வேர் முது மரப் பொத்தின் – புறம். 364
முழுமுதல்
தொலைந்த கோளி ஆலத்து கொழுநிழல் நெடுஞ்சினை – புறம். 58
ஆலமரத்தின்
இளங்கிளைகளை மூடியிருக்கும் பட்டைகள் ஈரமான பசுந்தோலை நெய்யிலே தோய்த்ததைப் போல தடிப்புடனும்
பளபளப்புடனும் தோன்றும். இதைப்பற்றிக் கூறும் சங்கப் பாடல் கீழே:
பசை படு பச்சை நெய் தோய்த்து அன்ன
சேய்
உயர் சினைய …….. முது மரம் – அகம். 244
விழுது:
ஆலமரத்தின்
சிறப்பே அதன் தொங்குகின்ற விழுதுகள் தான். கிளைகளில் இருந்து வேர்களைப் போல உருவாகிக்
கீழ் நோக்கி நீண்டு வளர்ந்து பூமியைத் தொட்டு உள்ளே புகுந்து நிலைபெற்றுப் பெரிதாக
வளர்கின்ற உறுப்புக்களே விழுதுகள் ஆகும். ஆல மரங்களின் கிளைகள் தோறும் ஏராளமான விழுதுகள்
தொங்கிக் கொண்டிருக்கும். ஆலமரங்களின் விழுதுகள் பற்றிக் கூறுகின்ற சங்க இலக்கியப்
பாடல்களில் சில கீழே:
நெடு வீழ் இட்ட கடவுள் ஆலத்து – நற். 343
பொரி அரை ஆலத்து ஒரு தனி நெடு வீழ் – அகம். 287
பிணி வீழ் ஆலத்து அலங்கு சினை ஏறி – அகம். 319
அத்த ஆலத்து அலந்தலை நெடு வீழ் – அகம். 385
பல்
வீழ் ஆலம் – புறம். 70
மரங்களிலேயே
அதிக ஆண்டுகள் வாழக்கூடியது ஆலமரம் மட்டுமே. ஆலமரமானது பல நூறு ஆண்டுகள் வரையிலும்
வாழக் கூடியது. சென்னை அடையாறில் இருந்த ஆலமரத்தின் வயது 450 ஆண்டுகளாகக் கூறப்படுகிறது.
மத்தியபிரதேசம் சாகரில் இருந்த ஆலமரத்தின் வயது 1000 ஆண்டுகள் என்று கூறப்படுகின்றது
(1). ஆலமரம் மிக அதிக வயதுடையது என்பதைக் கூறும் சங்கப் பாடல்கள் கீழே:
தொன்
மூதாலத்து – அகம். 251, குறு. 15
மரங்களிலேயே
அதிக ஆண்டுகள் வாழக்கூடியது மட்டுமின்றி அதிக பரப்பளவில் கிளைகளை உருவாக்கி நிழல் தருகின்ற
ஒரே மரமும் ஆலமரம் தான். மூன்றரை ஏக்கர் பரப்பளவில் வளர்ந்துள்ள ஆலமரம் மகாராட்டிரத்தில்
புனே – நாசிக் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. 95 அடி உயரத்தில் மூன்று ஏக்கர் பரப்பளவில்
வளர்ந்திருக்கும் பெரிய ஆலமரம் பெங்களூருக்கு அருகில் உள்ளது (1).. ஆலமரத்திற்கு இத்தனை
பெரிய பரப்பும் மிக அதிகமான வயதும் சாத்தியம் ஆவதற்குக் காரணமே அதன் விழுதுகள் தான்.
தாய் ஆலமரத்தின் தண்டானது வயது முதிர்வால் இற்றுப்போய் விட்டாலும் மரத்தைக் கீழே விழாதபடிக்குக்
காப்பாற்றித் தாங்கி நிற்பவை அதன் விழுதுகள் தான். அதுமட்டுமின்றி, தரையைத் தொட்டு
வளரும் ஒவ்வொரு விழுதும் தாய் மரத்தைப் போல பல கிளைகளை உருவாக்குவதால் ஆலமரக் கிளைகளின்
பரப்பளவு பெரிதாகிக் கொண்டே செல்கிறது.
பூமியில்
ஊன்றி வளரும் ஆலமர விழுதுகள் தாய்மரத்தைப் போலவே நிழல் மற்றும் கனிகளைத் தருவதைப் போல
மன்னனும் தமது மூதாதையர் செய்த நன்மைகளைக் கைவிடாமல் தானும் தொடர்ந்தான் என்று ஆலமரத்துடன்
ஒப்பிட்டுக் கூறுகின்ற சங்கப் பாடல் வரிகள் கீழே:
முழுமுதல் தொலைந்த கோளி ஆலத்து
கொழு நிழல் நெடும் சினை வீழ் பொறுத்து ஆங்கு
தொல்லோர் மாய்ந்து என துளங்கல் செல்லாது
நல்
இசை முது குடி நடுக்கு அற தழீஇ – புறம். 58
இலை:
ஆலமரத்தின்
கீழே நல்ல நிழல் இருக்கும் என்று மேலே கண்டோம். அதற்குக் காரணம் ஆல மரத்தின் இலைகள்
தான். ஆல மரத்தின் கொழுந்து இலைகள் தீயின் நிறத்தில் பளபளப்புடன் இருக்கும் என்று கீழ்க்காணும்
சங்கப் பாடல் கூறுகிறது.
அழல்
புரை குழை கொழு நிழல் தரும் பல சினை ஆலமும் – பரி. 4
ஆலமரத்தின்
இலைகள் பெரிதாகவும் செறிந்தும் இருக்கும். இதன் கீழே பெரிய அளவிலான குளிர்ந்த நிழல்
இருப்பதால் வழிப்போக்கர்கள் பயணத்தின்போது இடையில் தங்கி இளைப்பாறினர். ஆடுமாடுகளை
எருவுக்காகக் கட்டிவைக்கின்ற தாது எரு மன்றமும் ஆலமரத்தின் நிழலில் அமைக்கப்பட்டிருந்தது.
நூல் கல்வி மட்டுமல்லாது வில்வித்தை, மல்யுத்தம், வாட்போர் முதலான சண்டைப் பயிற்சிகளும்
இம்மரத்தின் நிழலில் நடைபெற்றது. இதைப்பற்றிக் கூறும் சில சங்கப் பாடல்கள் கீழே:
ஆல நீழல் அசைவு நீக்கி – நற்.76
தாது எரு மறுகின் ஆ புறம் தீண்டும்
நெடு வீழ் இட்ட கடவுள் ஆலத்து – நற். 343
முது
மரத்த முரண் களரி – பட். 59
பூ:
பிற
மரங்களைப் போலன்றி ஆலமரத்தின் பூக்கள் மலர்வதில்லை. ஆலமரத்தின் பூக்கள் கொழுத்த இதழ்களால்
மூடப்பட்ட சிறிய குடம் போன்ற மலருக்கு உள்ளே இருக்கும். இந்த உறுப்புக்குக் கோளி என்று
பெயர். கோளியின் நுனியில் சிறிய ஓட்டை இருக்கும். இதன் வழியாக சிறு பூச்சிகள் உள்ளே
சென்று மகரந்த சேர்க்கை செய்யும். ஆலமரத்தின் கோளியைப் பற்றிக் கூறும் சங்க இலக்கியப்
பாடல்கள் கீழே தரப்பட்டுள்ளன.
கொழு மென் சினைய கோளியுள்ளும் – பெரும். 407
கோளி
ஆலத்து – மலை. 268, புறம். 58, புறம். 254
கனி:
ஆலமரத்தின்
கனிகள் நல்ல சிவப்பு நிறத்தில் சிறிய உருண்டைகளாக இருக்கும். கனிகளுக்கு உள்ளே மிகச்சிறிய
விதைகள் ஏராளமாகப் பொதிந்திருக்கும். ஆலமரத்தின் கனிகள் சிவப்பாக உருண்டையாக இருந்ததால்
அவை பார்ப்பதற்கு புதிய சிறிய மட்கலங்களைப் போலத் தோன்றியதாகக் கீழ்க்காணும் சங்கப்பாடல்
கூறுகிறது.
புது
கலத்து அன்ன கனிய ஆலம் – ஐங்கு. 353
ஆலமரத்தின்
கனிகள் சுவையானவை என்பதால் அவற்றை உண்பதற்காக காகம், கிளி, வவ்வால் உள்ளிட்ட ஏராளமான
பறவைகள் ஆலமரத்திற்குப் படையெடுக்கும். இதனால் ஆலமரத்தில் பறவைகளின் ஒலியானது எப்போதும்
கேட்டுக் கொண்டே இருக்கும். ஆலமரத்தில் பறவைகள் தங்கும்போதும் உண்ணும்போதும் எழுப்புகின்ற
ஒலியைப் பற்றிக் கூறும் சில சங்கப்பாடல்கள் கீழே:
ஆலத்து கூடு இயத்து அன்ன குரல் புணர் புள்ளின் – மலை. 268
கோளி ஆலத்து புள் ஆர் யாணர்த்து – புறம். 254
இழுமென் புள்ளின் ஈண்டு கிளை தொழுதி
கொழு மென் சினைய கோளியுள்ளும் – பெரும். 407
யாணர் பழு மரம் புள் இமிழ்ந்து அன்ன – புறம். 173
கடவுள் ஆலத்து தடவு சினை பல் பழம்
நெருநல் உண்டனம் என்னாது பின்னும்
செலவு
ஆனாவே கலி கொள் புள்ளினம் – புறம். 199
முடிவுரை:
ஆலமரம்
அதிக ஆண்டுகள் நீடித்து வாழ்வதாலும் அதன் மிகப் பெரிய பரப்பினாலும் அதனில் தெய்வம்
உறைவதாக எண்ணி வழிபட்டனர் சங்ககாலத் தமிழர்கள். கீழ்க்காணும் பாடல்களில் வரும் கடவுள்
ஆலம் / கடவுள் முதுமரம் என்ற சொற்கள் இதை உறுதிசெய்கின்றன.
நெடு வீழ் இட்ட கடவுள் ஆலத்து – நற். 343
கடவுள்
முது மரத்து – நற். 83
அதுமட்டுமின்றி,
உயிரைப் பணயம் வைத்து வீரமே தலையாகக் கொண்டு காளைகளுடன் போரிடுகின்ற சல்லிக்கட்டு விளையாட்டிற்குச்
செல்வதற்கு முன்னரும் ஆலமரத்தைத் தொழுது வணங்கிவிட்டே சென்றனர் என்று கீழ்க்காணும்
கலிப்பாடல் கூறுகிறது.
ஆலமும் தொல் வலி மராஅமும்
முறையுளி
பராஅய் பாய்ந்தனர் தொழூஉ – கலி. 101
குரங்குகள்
உட்பட ஏராளமான பறவைகளின் கூடாரமாகவும் உணவுக்கான ஆதாரமாகவும் நிழல் தரும் இயற்கைக்
கட்டிடமாகவும் பல நூறு ஆண்டுகளாக வாழ்ந்து இவ் உலகில் புகழ்பெற்று மடிகின்ற ஆலமரத்தை
நாமும் வளர்ப்போம் ! பாதுகாப்போம். !!
ஆதாரம் / மேற்கோள்கள்:
(1) https://en.wikipedia.org/wiki/List_of_Banyan_trees_in_India
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.