பழந்தமிழர்கள் முக்கனிகள் என்று கொண்டாடிய மா, பலா, வாழை யில் முதன்மையாக விளங்குவது மாங்கனி ஆகும். இனிப்புச் சுவைகொண்ட மாம்பழத்தை விரும்பாதவர்களே இல்லை என்று கூறலாம். பனை நுங்கு, தண்ணீர்ப்பழம் போன்றவை கோடைகால உணவுகளாக உண்ணப்பட்டாலும் அதிக அளவில் உண்ணப்படுபவை மாம்பழங்களே ஆகும். கோடைப் பருவத்தில் ஒவ்வொரு தமிழரின் வீட்டிலும் மதிய உணவில் மாம்பழக் கீற்றுக்களை சேர்த்துக் கொள்வது வழக்கமாகும். மாவடுக்களை வாங்கிவந்து ஊறவைத்து மாங்காய் ஊறுகாய் போடுவதும் தமிழர்களின் வாழ்வியல் முறைகளில் ஒன்றாகும். இப் பழக்கங்கள் யாவும் இன்று நேற்றல்ல மூவாயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்டதான சங்க காலத்தில் இருந்தே இன்றளவும் தொடர்ந்து வருகிறது என்ற செய்தி வியப்பூட்டுவதாக அமைகிறது. மாமரம் தொடர்பாக சங்க இலக்கியங்களில் கூறியுள்ள பல்வேறு செய்திகளை இக் கட்டுரையில் விரிவாகக் காணலாம்.
மாமரம் – பூர்வீகமும் பெயரும்:
மாமரமானது இந்தியாவைப் பூர்வீகமாக உடையது என்பதை அதன் தாவரவியல் பெயரில் இருந்தே அறிந்து கொள்ளலாம். மாங்கிபெரா இண்டிகா (MANGIFERA INDICA) என்ற தாவரவியல் பெயரில் உள்ள இண்டிகா என்பது இந்தியாவைக் குறிக்கும். இப் பெயரின் முன்னால் உள்ள மாங்கிபெரா என்பதில் மாங்கி என்பது மாங்காய் என்ற தமிழ்ச்சொல்லின் திரிபாகும். இதிலிருந்து, மாமரமானது இந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தைத் தாயமாகக் கொண்டது என்பதை அறிந்து கொள்ளலாம்.
மாமரத்தினைக் குறிப்பதற்கு எண்பத்து மூன்று பெயர்கள் இருப்பதாக இதுவரை அறியப்பட்டுள்ளன. அப் பெயர்கள் யாவும் அகர வரிசைப்படி அமைக்கப்பட்டுக் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
அக்கபிரம்,அக்கரம்,அக்காரம்,அம்பரீடம்,அம்மிரம்,ஆம்,ஆம்பிரம்,ஆமிரம்,ஆள்வணங்கி,இணர்,
இரசம்,இரசாலம்,இரதம்,இலஞ்சி,இவுளி,இறை,உதளை,ஒமை,ஓமை,கக்கார்,கசக்கார்,கத்தாமார்,
காதேமார்,குண்டு,கெத்தமார்,கொக்கு,கோகிலவாசம்,கோகிலானந்தம்,கோகிலோற்சவம்,கோவா,
சககாரம்,சகியம்,சஞ்சீவன்,சட்பதாதிதி,சாமரபுட்பம்,சாவதயிலம்,சீழ்மரம்,சுரணை,சுள்ளி,சூதகம்,
சூதம்,சேகரம்,சேதாரம்,திதளம்,தெசலம்,தெசவம்,தெவம்,தெறுழ்,தேசலம்,தேமா,தேவம்,நீலன்
,நீவி,பச்சரிசி,பச்ந்து,பலாலதோகதம்,பலோற்பதி,பாரமா,பிகவல்லபம்,பிரியாம்பு,பிருகதி,புளிமா,
மகரகாலம்,மகரந்தம்,மகாகாலம்,மகாரசூதம்,மத்தியகந்தம்,மதுதூதம்,மதுமா,மதூலி,மரிச்சம்,
மல்கோவா,மன்மதன்கணை,மன்மதாலயம்,மா,மாகந்தம்,மாதி,மாந்தி,மாழை,மிருடாகம்,
வசந்ததூதம்,வடி,வடு.
மேற்கண்ட பெயர்களில் இணர், மா, தேமா, கொக்கு, வடி, வடு ஆகிய பெயர்கள் மட்டுமே சங்க இலக்கியங்களில் பயன்படுத்தப் பட்டுள்ளன.
மாமரம் – பண்புகள்:
அனகார்டியாசியே என்ற தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த மாமரத்தின் சராசரி உயரம் 75 அடி ஆகும். இதன் தண்டின் சராசரி சுற்றளவு 9 அடி ஆகும். மாமரத்தைப் பற்றிச் சங்க இலக்கியம் கூறும் பல்வேறு செய்திகளின் சுருக்கத்தைக் கீழே காணலாம்.
மாமரத்தின் தண்டானது கருப்பு நிறத்தில் பல வெடிப்புக்களைக் கொண்டதாகும். இதன் இலைகள் புதிதாகத் தோன்றும்போது இளஞ்சிவப்பு நிறத்திலும் பின்னர் பச்சையாகவும் மாறும். இதன் தளிர்களைத் தீயின் நாக்குகளுடனும் பெண்களின் சிவப்புமை பூசிய கண்ணிமைகளுடனும் ஒப்பிட்டுச் சங்க இலக்கியம் கூறுகிறது. பூக்கள் பொன்னிறத்தில் மிகச் சிறியவையாகக் கொத்தாகப் பூக்கும். இப் பூக்களில் உள்ள தேனை வண்டுகள் மட்டுமின்றிக் குயில்களும் மிக விரும்பிக் குடைந்து உண்ணும். மாமரத்தின் காய்கள் பச்சையாக இருக்கும். வடு / வடி என்று அழைக்கப்படும் மாம்பிஞ்சுகளை சங்ககால மக்கள் இரும்பால் அறுத்து இடித்துச் சாறாக்கிப் புளிக்கச்செய்து காடியாகப் பயன்படுத்துவர். அறுக்கப்பட்ட மாவடுக்களைப் பெண்களின் கண்களுடன் ஒப்பிட்டும் சங்கப் புலவர்கள் பாடியுள்ளனர். இனிய சுவைகொண்ட மாம்பழக் கூழானது மாவைக் கரைத்த கூழ்போல இருக்கும் என்றும் இப்பழங்கள் இன்சுவையுடன் நறுமணமும் மிக்கவை என்பதால் இப் பழங்களைப் பறவைகள், விலங்குகள் மட்டுமின்றி ஆமைகளும் வாளை மீன்களும் கூட உண்டதாகச் சங்க இலக்கியம் கூறுகிறது. சங்ககாலப் பெண்கள் மாந்தளிர்களையும் மாம்பூக்களையும் மாலையாகக் கட்டி நெற்றியில் அணிந்தனர்.
தண்டு:
மாமரத்தின் தண்டானது நீண்டு உயரமாய் வளரும் இயல்புடையது. இம் மரத்தின் பட்டையானது கருமை நிறத்தில் வெடிப்புக்களை உடையதாய் இருக்கும். மாமரத்தின் தண்டினைப் பற்றிக் கூறும் பாடல்களில் சிலவற்றை இங்கே காணலாம்.
பொரி கால் மா சினை புதைய – ஐங்.349
நெடும் கால் மாஅத்து – அகம் 117, 141
கரும் கோட்டு மாஅத்து – அகம். 236
இலை:
மாமரத்தின் இலைகள் புதிதாகத் தோன்றும்போது பச்சை நிறமாக இல்லாமல் இளஞ்சிவப்பு நிறத்தில் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். மாமரத்தின் இளந்தளிர்கள் சிவப்பாகக் கூர்மையுடன் இருப்பதால் அவற்றைத் தீயின் நாக்குகளுடன் ஒப்பிட்டுக் கீழ்க்காணும் பாடல்கள் கூறுகின்றன..
மா சினை புதைய எரி கால் இளம் தளிர் ஈனும் – ஐங்.349
மா தீந் தளிரொடு – பரி. 10
சங்க காலத்தில் பெண்கள் தமது கண்ணிமைகளைப் பலவகையான முறைகளில் பலவகைப்பட்ட வண்ணங்களில் அழகுபடுத்துவர். அவ் வண்ணங்களுள் சிவப்பு நிறம் குறிப்பிட்டுச் சொல்லத் தக்கதாகும். காரணம், சங்கப் பெண்கள் தமது இமைகளைச் செந்நிறச் சாயம் கொண்டு பூசியதைப் பற்றிப் பல சங்கப் பாடல்களில் கூறப்பட்டுள்ளது. இப் பாடல்களில் வரும் மேனி என்பது இமையைக் குறிப்பதாகும். (1). சிவப்புச் சாயம் பூசிய இமைகள் பார்ப்பதற்கு மாமரத்தின் இளந்தளிர் போல இருந்ததைப் பற்றிக் கூறும் சில சங்கப் பாடல்கள் கீழே:
மாவின் தளிர் ஏர் அன்ன மேனி - மது – 706
மா தளிர் மேனி – பரி. 8
இமைகளின்மேல் சிவப்புச் சாயம் பூசுவதுடன் அதன்மேல் மஞ்சள்நிறத்தில் சிறிய பொட்டுக்களையும் இட்டு அலங்கரிப்பர். இப் புள்ளிகளைத் திதலை என்றும் தித்தி என்றும் சுணங்கு என்றும் சங்க இலக்கியம் கூறும். (2) இப்படிச் சிவப்புச் சாயம் பூசி மஞ்சள் புள்ளிகள் வரையப்பட்ட மென்மையான இமைகளை மாமரத்தின் சிவப்புநிறத் தளிர்களின்மேல் உதிர்ந்து கிடக்கும் பொன்னிறப் பூந்தாதுக்களுடன் ஒப்பிட்டுக் கீழ்க்காணும் சங்கப்பாடல்கள் கூறுவதைக் காணலாம்.
மா ஈன்ற தளிர் மிசை மாயவள் திதலை போல்
ஆய் இதழ் பன் மலர் ஐய கொங்கு உறைத்தர – கலி. 29
மாயவள் மேனிபோல் தளிர்ஈன அம்மேனி
தாய சுணங்கு போல் தளிர் மிசை தாது உக - கலி - 35
தலைவன் தன்னை விட்டுப் பிரிந்ததால் அவனை நினைத்து அழுதுகொண்டே இருக்கிறாள் தலைவி. இமைகளைக் கசக்கிக் கசக்கி அழுததன் விளைவாக, அவளது கண்களும் இமைகளும் சிவந்து காணப்பட்டன. சிவந்து காணப்பட்ட அவளது மெல்லிய இமைகளை மாந்தளிருடன் கீழ்க்காணும் பாடல் ஒப்பிட்டுக் கூறுகிறது.
மாஅத்து அம் தளிர் அன்ன நன் மா மேனி பசப்ப –குறு. 331
பூ:
மாமரமானது இளவேனில் பருவத்தில் பூக்கத் தொடங்கும். பூக்கள் பொன்னிறத்தில் மிகச் சிறியவையாகவும் கொத்துக் கொத்தாகவும் இருக்கும். இப் பூங் கொத்துக்களை இணர் என்று சங்க இலக்கியம் குறிப்பிடுவதைக் கீழே உள்ள பாடல்களின் மூலம் அறியலாம்.
கவிழ் இணர் மா – திரு. 59
இணர் துதை மாஅத்த – நற்.157
மாமரத்தின் பூக்களில் மகரந்தச் சேர்க்கை செய்வதில் குயிலுக்கு மிக முக்கிய பங்கு உண்டு. காரணம், மாமரத்தின் பூக்களில் உள்ள தேனானது குயிலுக்கு மிகப் பிடித்தமான உணவுகளில் ஒன்றாகும். குயிலானது தனது பெரும்பாலான நேரத்தை மாமரத்தில் செலவிடுவதே மாங்குயில் என்ற பெயர் ஏற்படுவதற்கு முதன்மைக் காரணமாகும். மாமரத்தின் பூக்களைத் தனது அலகினால குடைந்து குடைந்து தேன் உண்பதைப் பற்றிக் கூறும் சில சங்கப் பாடல்கள் கீழே தரப்பட்டுள்ளன.
மா நனை கொழுதி மகிழ் குயில் ஆலும் - நற். 9
மா நனை கொழுதிய மணி நிற இரும் குயில் – அகம். 25
குயிலானது மாமரத்தின் பொன்னிறப் பூக்களைக் குடைந்து குடைந்து உண்ணும்போது அதிலுள்ள பொன்னிறப் பூந்தாதுக்கள் குயிலின் கருப்பான உடலில் ஒட்டிக்கொண்டன. இக் காட்சியானது பார்ப்பதற்கு, பொன்னின் தரத்தை உரசி அறிய உதவும் கருப்பான கட்டளைக் கல்லின்மேல் ஒட்டியிருக்கும் பொன் துகள்களைப் போல இருந்ததாகக் கீழ்க்காணும் சங்கப் பாடல் கூறுவதைப் பாருங்கள்.
மின்னின் தூவி இரும் குயில் பொன்னின் உரை திகழ் கட்டளை கடுப்ப மா சினை
நறும் தாது கொழுதும் – குறு.192
காய்:
மாமரத்தின் காய்கள் பச்சை நிறத்தில் கொத்தாகக் காய்க்கும். இக் காய்க் கொத்துக்களைத் துணர் என்று சங்க இலக்கியம் குறிப்பிடும். வடு என்றும் வடி என்றும் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்படுவதான இளம்பிஞ்சுகள் நுனியில் வளைந்திருப்பதால் அவற்றைக் கிளியின் மூக்குடன் ஒப்பிட்டுப் புலவர்கள் பாடியுள்ளனர்.
மாஅத்து கிளி போல் காய கிளை துணர் – அகம். 37
மாவின் வடுக்களை கத்தி அல்லது கூரிய இரும்பு கொண்டு இரண்டாகப் பிளந்து பயன்படுத்துவர். அப்படிப் பிளக்கப்பட்ட வடுவானது பார்ப்பதற்குக் கண்களைப் போன்ற வடிவத்தில் இருக்கும். அதாவது, மாவடுவின் நடுவில் இருக்கும் புடைப்பான கொட்டையானது கண்விழியைப் போலவும் அதைச் சுற்றியுள்ள விளிம்பானது கண்ணின் தோள் என்னும் பகுதியைப் போன்றும் தோன்றும். சங்கப் புலவர்கள் மாவடுவினைப் பெண்களின் கண்ணுடன் ஒப்பிட்டுப் பாடியுள்ள பாடல்களில் சிலவற்றைக் கீழே காணலாம்.
வடு வகிர் வென்ற கண் – பரி. 8
இரும்பு ஈர் வடி ஒத்து மை விளங்கும் கண் ஒளியால் – பரி. 7
எஃகு உற்று இரு வேறு ஆகிய தெரி_தகு வனப்பின் மாவின் நறு வடி போல
காண்-தொறும் மேவல் தண்டா மகிழ் நோக்கு உண்கண் – அகம். 29
கண்ணே வாள் ஈர் வடியின் வடிவு இழந்தனவே – நற். 133
மாவடுவானது மிதமான புளிப்புச் சுவையுடன் இருக்கும். சங்க காலத்தில் இந்த மாவடுக்களை இடித்துச் சாறாக்கிப் புளிக்க வைத்துக் காடியாகப் பயன்படுத்துவர். இச் செய்திகளைக் கூறும் சங்கப் பாடல்களைக் கீழே காணலாம்.
வண் தளிர் மாஅத்து கிளி போல் காய கிளை துணர் வடித்து
புளி_பதன் அமைத்த புது குட மலிர் நிறை – அகம். 37
பைம் துணர் நெடு மர கொக்கின் நறு வடி விதிர்த்த
தகை மாண் காடியின் – பெரும். 309
கனி:
மாமரத்தின் கனிகள் பழுக்கத் தொடங்கியதும் பசுமஞ்சள், மஞ்சள், செம்மஞ்சள், சிவப்பு நிறங்களில் மாறத் தொடங்கும். புளிப்புச் சுவையுடன் இருந்த காய் பழுத்தவுடன் இனிமை கலந்த புளிப்புச் சுவை பெறும். நன்கு பழுத்தவுடன், பழத்தின் நறுமணம் காற்றில் கலந்து பரவும். மாம்பழத்தின் சுவை மற்றும் நறுமணம் பற்றிக் கூறும் சங்க இலக்கியப் பாடல்களில் சில கீழே:
மாவின் வடி சேறு விளைந்த தீம்பழ தாரம் – மலை. 512
தேன் தேர் சுவைய திரள் அரை மாஅத்து
கோடைக்கு ஊழ்த்த கமழ் நறும் தீம் கனி – அகம். 348
முழு_முதல் கொக்கின் தீம் கனி உதிர்ந்து என – குறி. 188
துணர் தே கொக்கின் தீம் பழம் – குறு 164
நறு வடி மாஅத்து விளைந்து உகு தீம் பழம் – ஐங்க்.61
மாம்பழத்துக்குள் இருக்கும் கூழானது மாவை நீரில் கரைத்த கூழ்போல சற்று கெட்டியாக இருக்கும். இதைப்பற்றிக் கூறும் சங்க இலக்கியப் பாடல் கீழே:
இடி கலப்பு அன்ன நறு வடி மாவின் வடி சேறு – மலை. 512
மாம்பழம் முழுவதும் பழுத்தவுடன் மரத்தில் இருந்து உதிர்ந்து கீழே விழும். அப்படி விழுந்த பழங்களை ஆமைகளும் வாளை மீன்களும் கூட உண்டன என்ற செய்தியைக் கீழ்க்காணும் பாடல்களின் வழியாக அறியமுடிகிறது.
நெடும் கால் மாஅத்து ஊழ்-உறு வெண் பழம்
கொடும் தாள் யாமை பார்ப்பொடு கவரும் – அகம் 117
கழனி மாஅத்து விளைந்து உகு தீம் பழம்
பழன வாளை கதூஉம் ஊரன் – குறு.8
கணை கோட்டு வாளை கமம் சூல் மட நாகு
துணர் தே கொக்கின் தீம் பழம் கதூஉம் – குறு 164
முடிவுரை:
மாமரத்தின் காய்கள் மற்றும் கனிகளை உணவுக்காக பயன்படுத்திய சங்ககால மக்கள் அதன் இலைகள் மற்றும் பூக்களை அலங்காரப் பொருட்களாகவும் பயன்படுத்தி உள்ளனர். குறிப்பாக, சங்ககாலப் பெண்கள் மாவிலைகளையும் மாம்பூக்களையும் மாலைபோலக் கட்டி நெற்றியில் அணிந்துள்ளனர் என்னும் செய்தியைக் கீழ்க்காணும் பாடல்களின் வழி அறியலாம். இப்பாடல்களில் வரும் அல்குல் என்பது நெற்றிப் பகுதியைக் குறிப்பதாகும்.(3)
சுரும்பு உண தொடுத்த பெரும் தண் மா தழை
திருந்து காழ் அல்குல் திளைப்ப உடீஇ – திரு. 204
பொலம் காசு நிரைத்த கோடு ஏந்து அல்குல்
நலம் கேழ் மா குரல் குழையொடு துயல்வர – அகம். 269
ஆதாரங்கள் / மேற்கோள்கள்:
(1 https://thiruththam.blogspot.com/2009/10/blog-post_05.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.