சனி, 11 செப்டம்பர், 2021

4 - வேப்ப மரம் ( சங்க இலக்கியத்தில் தாவரவியல் )

முன்னுரை:

வேம்பு என்றதுமே அதன் குளுமையான நிழலே நினைவுக்கு வரும். கொளுத்தும் வெயிலில் இருந்து தப்பிக்க வேப்ப மரங்களை விட்டால் வேறு மரமில்லை. வெளி வெப்பத்தை மட்டுமின்றி உடலுக்கு உள்ளே உண்டாகும் காய்ச்சல் வெப்பத்தையும் குறைக்கும் ஆற்றல் வேம்புக்கு உண்டு. உடலெல்லாம் கொப்புளமாகக் காணும் அம்மை நோயின் தாக்கத்தைக் குறைக்க வேப்பிலை நீரால் குளிப்பாட்டுவது இன்றளவும் வழக்கமே. இலை, பூ, காய், பழம், பட்டை என்று பலவகையிலும் மருந்துப் பொருளாகப் பயன்பட்டு வருகின்ற வேப்ப மரத்தைப் பற்றிச் சங்க இலக்கிய நூல்கள் கூறியுள்ள பல்வேறு செய்திகளை இங்கே காணலாம்.

வேம்பு – பூர்வீகமும் பெயரும்:

வேப்ப மரமானது இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டது என்பதனை அதன் தாவரவியல் பெயரான அசடிரச்த இண்டிகா ( AZADIRACHTA INDICA ) என்பதில் உள்ள இண்டிகா என்ற பெயரே உறுதி செய்து விடுகின்றது. இந்தியாவிலும் குறிப்பாகத் தமிழ்நாட்டுக்கு உரியதாகவே இருக்கவேண்டும் என்று தோன்றுகிறது. காரணம், அப் பெயரின் முன்னால் உள்ள அசடிரச்த என்பதே.

வெப்பத்தில் இருந்து பாதுகாப்பது என்ற பொருளுடைய அழற்றிரசிதம் என்னும் தமிழ்ப்பெயரே அசடிரச்த என்று திரிந்து வழங்குகின்றது.

அழற்றி (=தீ, வெப்பம்) + இரசிதம் (=பாதுகாப்பு) = அழற்றிரசிதம் >>> அசட்டிரசிதம் >>> அசடிரச்த = வெப்பத்தில் இருந்து பாதுகாப்பது.

வேப்பமரத்தைக் குறிப்பதற்கு நாற்பத்தி ஏழு பெயர்கள் இதுவரையிலும் அறியப்பட்டுள்ளன. அப்பெயர்கள் யாவும் அகரவரிசை முறைப்படி அமைக்கப்பட்டு கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

அகளுதி,அகுளூதி,அதிபம்,அரிசு,அரிட்டம்,அரிடம்,அரிநிம்பம்,அருட்டம்,அருணாதி,

அருளுறுதி,அழற்றிரசிதம்,அறிட்டம்,உக்கிரகந்தம்,கசப்பி,கடிப்பகை,கயிடரியம்,கிஞ்சி,

கேசமுட்டி,கோடரவாலி,கௌரியம்,சங்குமரு,சத்தி,சாவாமூலி,சீரிணபன்னம்,நலதம்பு,

நிம்பம்,நியாசம்,பன்னகந்தி,பார்வதம்,பாரிபத்திரம்,பாரியம்,பிசாசப்பிரியம்,பிசிதம்,

பிசுமந்தம்,பூமாரி,பூயாரி,மாலகம்,வச்சரி,வச்சிரநிம்பம்,வருட்டம்,வாதாரி,விசிமந்தம்,

விசுமிகினி,விருக்காதனி,விருந்தம்,வேப்பம்,வேம்பு.

மேற்காணும் பெயர்களில் வேப்பம், வேம்பு  என்ற பெயர்கள் மட்டுமே சங்க இலக்கியப் பாடல்களில் பயிலப்பட்டு உள்ளன.

வேம்பு – பண்புகள்:

வேப்ப மரத்தின் பண்புகளாகச் சங்க இலக்கியம் கூறியுள்ள பல்வேறு செய்திகளின் சுருக்கத்தை இங்கே காணலாம்.

வேப்பமரத்தின் தண்டும் கிளைகளும் கருநிறம் கொண்டவை. தண்டுகள் மேகங்களைத் தொட முயல்வதைப் போல மிக உயரமாக வளரக் கூடியவை. சில மரங்களின் அடிப்பகுதி பெருத்து வளர்ந்திருக்கும். இதனைப் பராரை என்று சங்க இலக்கியம் குறிப்பிடுகிறது. சங்ககாலத் தமிழர்கள் வேப்பமரத்தில் தெய்வம் உறைவதாக எண்ணி உயிர்ப்பலி கொடுத்து வணங்கினர். வேம்பின் இலைகள் சிறிதாகவும் பக்கங்களில் அரம்போன்ற பற்களைக் கொண்டதாகவும் இருக்கும். இலைக்கொழுந்துகள் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். இலைகள் செறிந்து இருப்பதால் மரத்தின் கீழே அடர்ந்த நிழல் இருக்கும். வேம்பின் பூக்கள் வெண்மையாகச் சிறிதாக இருக்கும். பலத்த காற்று வீசும்போது மரங்களில் இருந்து இப் பூக்கள் மழைச்சாரல் போல உதிர்ந்து விழும். வேப்பம் பூவின் மொட்டுக்கள் சிறிய உருளை வடிவில் இருக்கும். இதனை நண்டின் கண்களுடன் ஒப்பிட்டுக் கூறுகிறது சங்க இலக்கியம்.

வேப்பங்காய்கள் பச்சை நிறத்தில் அதிக கசப்புச் சுவையுடன் இருக்கும். பழுத்தவுடன் மஞ்சள் நிறம் பெற்று இலேசான கசப்புடன் இருக்கும். இப் பழங்களைக் கிளி, வவ்வால் உள்ளிட்ட பல பறவைகள் உண்ணும். கிளியின் அலகில் இருக்கும் மஞ்சள்நிற வேப்பம் பழத்தைக் கொல்லன் தனது குறட்டின் நடுவில் பிடித்த தங்கக்காசுடன் ஒப்பிட்டுக் கூறுகின்ற சங்க இலக்கியமானது. ஊர்த் தலைவன் இறந்தால் அந்த ஊர் மக்கள் அனைவரும் ஒன்றுகூடிச் செய்யும் இறப்புச் சடங்கில் வேப்பிலைக்கு இருந்த பங்கினையும் விரிவாகப் பதிவுசெய்துள்ளது. மூவேந்தர்களில் ஒருவரான பாண்டிய மன்னர்கள் வேம்பின் பூக்களை மாலையாகத் தொடுத்து அணிந்ததும் போருக்குச் செல்லும் முன் வேல்களின் தண்டில் வேப்பிலைகளைக் கட்டியதும் கூறப்பட்டுள்ளது. இனி, இந்தச் செய்திகள் அனைத்தையும் தனித்தனித் தலைப்புக்களின் கீழ் விரிவாகப் பார்க்கலாம்.


தண்டு:

வேப்பமரத்தின் தண்டும் கிளைகளும் கருநிறம் கொண்டவை. சில மரங்களின் தண்டுகள் நூறு அடி உயரம் கூட வளரும். இதுபற்றிக் கூறும் சில சங்க இலக்கியப் பாடல்களைக் கீழே காணலாம்.

கரும் கால் வேம்பின் – குறு. 24

கரும் சினை வேம்பின் – புறம். 45

வான் பொரு நெடும் சினை பொரி அரை வேம்பின் – நற். 3

மன்ற வேம்பின் மா சினை  – புறம். 76

கரும் சினை விறல் வேம்பு – பதி. 49

சில வேப்ப மரங்களின் தண்டுகள் அடியில் பெருத்து இருக்கும். இத்தகைய பெருத்த அடிப்பகுதியை பராரை என்று கூறுவர். இந்தப் பராரைகளின் சுற்றளவு பத்து அடி வரையிலும் கூட இருக்கும். பராரை கொண்ட வேப்ப மரங்களைப் பற்றிக் கூறும் சங்கப் பாடல்கள் கீழே:

பராரை வேம்பில் – அகம். 309

பாரிய பராரை வேம்பின் – நற். 218

திரள் அரை மன்ற வேம்பின் – புறம். 76


இலை:

வேப்ப மரத்தின் இலைகள் சிறியவை. இதைப்பற்றிக் கூறும் சங்கப் பாடல்களில் சில மட்டும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

புன் கால் சிறியிலை வேம்பின் – நற். 103

சிறியிலை குறும் சினை வேம்பின்  – ஐங்கு. 339

வேப்ப மரத்து இலைகளின் விளிம்பில் அரத்தில் இருப்பதைப் போன்ற கூரிய பல பற்கள் வரிசையாய் அமைந்திருக்கும். இதனால் இதனை அரவாய் வேம்பு என்று கூறுகிறார் புலவர் கீழ்க்காணும் சங்கப் பாடலில்.

கரும் சினை அர வாய் வேம்பின் – பொரு. 144

மாமரத்தின் இளந்தளிர்களைப் போலவே வேப்ப மரத்தின் இலைக் கொழுந்துகளும் இளஞ்சிவப்பு நிறத்தில் அழகாகத் தோன்றும். இதனை ஒண் தளிர் / ஒண் குழை என்ற சொற்களால் கீழ்க்காணும் பாடல்கள் குறிப்பிடுகின்றன.

மன்ற வேம்பின் மா சினை ஒண் தளிர் – புறம். 76

வேம்பின் ஒண் தளிர் - புறம் 77

மன்ற வேம்பின் ஒண் குழை - புறம் 79

வேப்ப மரத்தின் இலைகள் சிறியதாக இருந்தாலும் மிகுதியாகவும் அடர்த்தியாகவும் செறிந்து இருக்கும். கீழ்க்காணும் பாடலில் வரும் வெறி என்ற சொல் இதை உறுதி செய்கிறது,

வேம்பின் வெறி கொள் பாசிலை – அகம். 138

இலைகள் அடர்த்தியாக இருப்பதால் வேப்பமரத்தின் கீழ் எப்போதும் குளிர்ச்சியான நிழல் இருக்கும். இந்த நிழல் அடர்த்தியானது என்பதனைப் புள்ளி நீழல் என்ற சொல்லினால் கீழ்க்காணும் பாடல் உறுதிசெய்கிறது.

பொரி அரை வேம்பின் புள்ளி நீழல் - நற் 3


பூ:

வேப்ப மரத்தின் பூக்கள் சிறிய அளவினதாக வெண்ணிறத்தில் பூக்கும். இதனை ஒண்பூ / ஒண்குழை / வான்பூ என்ற சொற்களால் கீழ்க்காணும் சங்க இலக்கியப் பாடல்கள் குறிப்பிடுகின்றன.

கரும் கால் வேம்பின் ஒண் பூ யாணர் – குறு. 24

அத்த வேம்பின் அமலை வான் பூ – குறு. 281

மன்ற வேம்பின் ஒண் குழை மிலைந்து – புறம். 79

வெண்மை நிறமுடைய வேப்பம் பூக்கள் காற்று பலமாக வீசும்போது  பொலபொலவென உதிரும். இக் காட்சியானது பார்ப்பதற்கு மழைத்துளிகள் (உறை) பொழிவதைப் போலத் தோன்றும். இதைப்பற்றிக் கூறும் சில சங்கப் பாடல்களைக் கீழே காணலாம்.

வேம்பின் ஒண் பூ உறைப்ப – ஐங்கு. 350

மன்ற வேம்பின் ஒண் பூ உறைப்ப – புறம். 371

வேப்பம்பூக்களின் மொட்டுக்கள் மிகச் சிறியதாக உருளை வடிவில் உயர நோக்கிய நிலையில் இருக்கும். இவை பார்ப்பதற்கு நண்டின் கண்களைப் போலத் தோன்றுவதாகக் கீழ்க்காணும் சங்கப் பாடல்கள் கூறுகின்றன.

வேப்பு நனை அன்ன நெடும் கண் களவன் – ஐங்கு. 30

வேப்பு நனை அன்ன நெடும் கண் நீர் ஞெண்டு – அகம். 176


காய்:

வேப்பமரங்கள் கோடை காலத்தில் தான் பூப்பூத்துக் காய்க்கத் தொடங்கும். இதைப் பற்றிக் கூறும் சங்கப் பாடல் கீழே:

வேம்பின் காய் திரங்க கயம் களியும் கோடை – புறம். 389

வேம்பின்  காய்கள் பச்சை நிறமும் அதிக கசப்புச் சுவையும் கொண்டவை. ஆனால் காதலியின் கையால் கொடுக்கப்பட்ட வேப்பங்காயோ இனிப்புக் கட்டியாய் இனித்தது என்று தலைவன் கூறும் சங்க இலக்கியப் பாடல் கீழே:

வேம்பின் பைம் காய் என் தோழி தரினே

தேம் பூம் கட்டி என்றனிர் – குறு. 196


கனி:

பசுமையாகத் தோன்றும் வேப்பமரத்தின் காய்கள் கனிந்ததும் மஞ்சள் நிறத்தில் அழகாக ஒளிரும். கனியின் உள்ளே இலேசான கசப்புடைய வெண்மை / வெளிர்மஞ்சள் நிறக் கூழ் போன்ற சதையும் வலுவான கொட்டையும் இருக்கும். வேப்பம் பழங்களைக் கிளி உட்பட பல பறவைகள் உண்ணும். இவற்றுள் குறிப்பாக வவ்வால் பறவைகள் வேப்பம் பழங்களை விரும்பி உண்ட செய்தியைக் கீழ்க்காணும் சங்கப் பாடல்கள் வாயிலாக அறியலாம்.

வேம்பின் நறும் பழம் உணீஇய வாவல் உகக்கும் – ஐங்கு. 339

வேம்பின் ஒண் பழம் முணைஇ இருப்பை

தேம் பால் செற்ற தீம் பழம் நசைஇ

வைகு பனி உழந்த வாவல் – நற். 279

வேப்பமரக் கிளையொன்றில் அமர்ந்திருந்த பச்சைக்கிளி ஒன்று தனது கருப்பான வளைந்த அலகினால் மஞ்சள் நிறத்திலிருந்த பெரிய வேப்பம் பழம் ஒன்றைக் கவ்வி எடுத்து உண்ண முயன்று அதை அலகிற்குள் அசைக்கிறது. இக் காட்சியானது பார்ப்பதற்கு, புதிய நூலை நுழைப்பதற்காகக் கருப்பான குறட்டின் நாக்குகளுக்கு நடுவே பிடிக்கப்பட்ட தங்கக்காசு போலத் தோன்றியதாகக் கீழ்க்காணும் சங்கப்பாடலில் கூறப்பட்டுள்ளது.

கிள்ளை வளை வாய் கொண்ட வேப்ப ஒண் பழம்

புது நாண் நுழைப்பான் நுதி மாண் வள் உகிர்

பொலம் கல ஒரு காசு ஏய்க்கும் – குறு.67

வேப்பமரமும் சடங்குகளும்:

வேப்ப மரத்தை மாரியம்மன் என்னும் கடவுளாக இன்றளவும் தமிழர்கள் வழிபட்டு வருவதை நாம் அறிவோம். இப் பழக்கம் இன்று நேற்றல்ல, சங்க காலத்தில் இருந்து தொடர்ந்து வரும் பழக்கமே என்று அறியும்போது வியப்பு மேலிடும். பருத்த அடிப்பகுதியைக் கொண்ட ஒரு வேப்பமரத்தில் தெய்வம் உறைவதாக நம்பிய மக்கள் கொழுத்த மாட்டினை அதற்குப் பலிகொடுத்து அந்த மாட்டின் இரத்தத்தை அம் மரத்தின்மேல் தூவி வழிபட்டனர். பின்னர் அந்த மாட்டிறைச்சியைப் புழுக்கி உணவாக உண்டனர். இச்செய்தியைக் கூறும் சங்க இலக்கியப் பாடலைக் கீழே காணலாம்.

தெய்வம் சேர்ந்த பராரை வேம்பில்

கொழுப்பு ஆ எறிந்து குருதி தூஉய்

புலவு புழுக்கு உண்ட வான் கண் அகல் அறை – அகம். 309

சங்க காலத்தில் ஒரு ஊரின் மக்களைப் பகைவர்களிடம் இருந்து போரிட்டுக் காப்பாற்றுபவனே தலைவனாக / குறுநில மன்னனாகக் கருதப்பட்டான். இந்நிலையில், இத் தலைவன் போரில் இறந்துவிட்டால் அந்த ஊர் மொத்தமும் அவனுக்காக இறப்புச் சடங்கினைப் பின்பற்றுகிறது. சங்க காலத்தில் வேந்தனுக்காகப் போரிடச் சென்ற குறுநில மன்னன் ஒருவன் போரின்போது வேந்தனைக் காப்பாற்றுவதற்காகத் தனது மார்பில் வேலினைத் தாங்கி இறந்துபட்டான். அவனது இறப்புக்காக அந்த ஊர்மக்களால் பின்பற்றப்பட்ட  சடங்குமுறையைக் கீழே காணலாம்.

ஊரில் உள்ள அனைத்து வீடுகளின் கூரையின் முற்பகுதியில் வேப்பமரத்தின் இலைகள் மற்றும் இரவ மர இலைகளைச் செருகுவர். வளைந்த தண்டினைக் கொண்ட யாழுடன் மேலும் பல வாத்தியங்களில் சோக கீதத்தை இசைப்பர். தீயை மெதுவாகக் கிளறி அதன்மேல் ஆட்டுக் கொழுப்பைப் பரப்பி உருக்கி அதில் ஐயவி என்னும் வெண்சிறு கடுகுகளை இட்டுப் புகை மூட்டுவர். ஆம்பல் என்னும் சங்கினை ஊதியும் இசைமணி என்னும் இரும்புத் தகட்டுப் பறையினை அடித்தும் ஒலி எழுப்புவர். அனைவரும் ஒன்று சேர்ந்து காஞ்சி என்னும் வாழ்க்கை நிலையாமைப் பாடலைப் பாடுவர். இறுதியாக, பிணத்தை எடுத்துக்கொண்டு நகரின் எல்லையில் இருக்கும் சுடுகாடு வரையிலும் வாசம் மிக்க ஐயவிப் புகையைப் பரப்பியவாறே சென்றடைவர். அவர்கள் சென்று அடைவதற்குள் அந்த நெடுந்தகையின் காயம்பட்ட உடலைச் சென்று காண்போம் வா என்று தோழியை அழைப்பதாகக் கீழ்க்காணும் புறநானூற்றுப் பாடல் இறப்புச் சடங்கு முறையினை அழகாகப் பதிவு செய்துள்ளது.

தீம் கனி இரவமொடு வேம்பு மனை செரீஇ

வாங்கு மருப்பு யாழொடு பல் இயம் கறங்க

கை பய பெயர்த்து மை இழுது இழுகி

ஐயவி சிதறி ஆம்பல் ஊதி

இசை மணி எறிந்து காஞ்சி பாடி

நெடு நகர் வரைப்பின் கடி நறை புகைஇ

காக்கம் வம்மோ காதல் அம் தோழீ

வேந்து உறு விழுமம் தாங்கிய

பூம் பொறி கழல் கால் நெடுந்தகை புண்ணே – புறம். 281

மேற்காணும் இறப்புச் சடங்கு முறையினை சற்று சுருக்கமாக இன்னொரு புறப்பாடலும் பதிவு செய்துள்ளது. வேப்ப மரத்தின் கிளைகளை ஒடிக்கவும் காஞ்சியைப் பாடவும் எண்ணையில் ஐயவியை இட்டுப் புகை மூட்டவும் எல்லா வீடுகளிலும் கல் என்ற அழுகை ஒலி எழவும் போரிலே நெடுந்தகை இறந்துபட்டான். அதோ தூரத்தில் அவனது தேர் மட்டும் வருகின்றது. இனி வேந்தனால் பகைவரை எதிர்த்து அழிக்க முடியுமோ?. என்ற பொருளில் கீழ்க்காணும் புறநானூற்றுப் பாடல் கூறுவதைப் பார்க்கலாம்.

வேம்பு சினை ஒடிப்பவும் காஞ்சி பாடவும்

நெய் உடை கையர் ஐயவி புகைப்பவும்

எல்லா மனையும் கல்லென்றவ்வே

வேந்து உடன்று எறிவான்-கொல்லோ

நெடிது வந்தன்றால் நெடுந்தகை தேரே – புறம். 296

முடிவுரை:

மூவேந்தர்களில் ஒருவரான பாண்டிய மன்னர்கள் வேம்பின் பூக்களை மாலைகளாகத் தொடுத்து அணிந்தனர். இச் செய்தி கீழ்க்காணும் சங்கப் பாடல்களில் கூறப்பட்டுள்ளது..

அர வாய் வேம்பின் அம் குழை தெரியலும் - பொரு 144

கரும் சினை வேம்பின் தெரியலோன் அல்லன் - புறம் 45

அதுமட்டுமின்றி, போருக்குச் செல்லும் முன்னர் பாண்டியர்கள் தமது வேல்களின் தண்டுகளிலும் வேப்பிலைகளைக் கட்டினர் என்பதும் கீழ்க்காணும் பாடலில் கூறப்பட்டுள்ளது.

வேம்பு தலை யாத்த நோன் காழ் எஃகமொடு - நெடு 176.

குளுமையான நிழலைத் தருவதுடன் நோய் தீர்க்கும் மருந்தாகவும் பயன்படுகின்ற வேப்ப மரங்களை வீட்டைச் சுற்றிலும் நட்டு வைத்துப் பயன்பெறுவோமாக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.