செவ்வாய், 7 செப்டம்பர், 2021

2. பலா மரம் ( சங்க இலக்கியத்தில் தாவரவியல் )


முன்னுரை:

பலா என்றதுமே அதன் இனிப்பான சுவையுள்ள சுளைகள் தான் கண் முன்னால் வந்து நிற்கும். கண்களைக் கவரும் மஞ்சள் வண்ணத்தில் நறுமணம் வீசும் இக் கனிகள் நாக்கு, மூக்கு, கண் என்று மூன்று புலன்களுக்கும் இன்பம் அளிப்பவை. இதனுள்ளே இருக்கும் வலுவான கொட்டைகள் புரதச் சத்து மிக்கவை. ஏராளமான நார்களால் கட்டப்பட்ட பெரிய உடல் போன்ற பெரிய கனிகளைக் கொண்ட பலா மரத்தைப் பற்றிச் சங்க இலக்கியங்கள் பல செய்திகளைப் பதிவு செய்துள்ளன. அவற்றை இங்கே விரிவாகக் காணலாம்.

பலா – பூர்வீகமும் பெயரும்:

பலாமரத்தின் பூர்வீகமாக இந்தியாவே கூறப்படுகின்றது. இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் (1) குறிப்பாகக் கேரளாவில் அதிகமாகக் காணப்படுகின்றது. பலாப்பழத்தில் நார்கள் அதிக அளவில் இருப்பதால் இதற்குச் சக்கை என்ற பெயர் ஏற்பட்டது.

சாய் (=பெருமை, மிகுதி, நார்) + காய் = சாய்க்காய் >>> சக்கை 

= நார்கள் மிக்க பெரிய காய் = பலா.

சக்கை என்ற தமிழ்ப் பெயரில் இருந்தே சக் (JACK) எனப்படும் ஆங்கிலப் பெயரும் உண்டாயிற்று. பலாப்பழத்திற்கு 24 பெயர்கள் இருப்பதாக இதுவரை அறியப்பட்டுள்ளன. அப் பெயர்கள் யாவும் அகர வரிசைப்படி கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஆசயம்,ஆசனி,ஆசினி,ஆயினி,இரசாலம்,ஏகாரவல்லி,குடக்கனி,சக்கை,சிகாவரம்,

சுளை,பசள்,பஞ்சளை,பலவு,பலா,பலாசம்,பனசம்,பாகல்,பூதபலம்,பைஞ்சுளை,

மிருதங்கபலம்,முட்புறக்கனி,மூலபலதம்,வருக்கை,வனசம்

மேற்காணும் பெயர்களில் பலவு, பலா, ஆசினி, சுளை ஆகிய பெயர்கள் மட்டுமே சங்க இலக்கியங்களில் பயன்படுத்தப் பட்டுள்ளன.

பலா – பண்புகள்:

பலாமரத்தின் தாவர வியல் பெயர் அர்டோகார்பச் கெடிரோபிலச் (ARTOCARPUS HETEROPHYLLUS) ஆகும். இம் மரத்தின் பண்புகளாகச் சங்க இலக்கியம் கூறும் பல்வேறு செய்திகளின் சுருக்கத்தைக் கீழே காணலாம்.

பலாமரத்தின் வேர்கள் சிவப்புநிறம் கொண்டவை. இந்த வேர்கள் மண்ணுக்குள் மட்டுமின்றி மண்ணுக்கு மேலும் வளரும் இயல்புடையவை. இந்த வேர்களில் கூட பழங்கள் காய்க்கும். பலாமரத்தின் தண்டுகள் உயரமாக வளரும். கிளைகளும் அகன்று நீண்டு வளரும். கிளைகள் திரண்டு வலுவாக இருப்பதால் அவற்றின்மேல் காவல்பரண்களை அமைத்துத் தோட்டங்களைக் காவல் காத்தனர். பலாமரத்தின் இலைகள் நீளமாகவும் அகலமாகவும் பெரிதாக இருக்கும். தோல் போலத் தடிப்புடையதாகப் பச்சை நிறத்தில் செறிந்து இருக்கும். பலாமரத்தின் காய்கள் மிகப் பெரியவை. கிளைகளில் மட்டுமின்றி தண்டு மற்றும் வேர்களில் கூட காய்கள் தோன்றும். காய்களின்மேல் முள்போன்ற அமைப்புக்கள் காணப்படும். நன்கு பழுத்த பலாப் பழங்களுக்கு உள்ளே இனிப்பான நறுமணம் கொண்ட சிறிய மஞ்சள்நிறப் பழங்கள் ஏராளமாகப் பொதிந்திருக்கும். சுளை என்று அழைக்கப்படும் இந்தப் பழங்கள் பிசுபிசுப்புத் தன்மை கொண்டவை. இப் பழங்களில் இருந்து சாறு வடித்துப் புளிக்கச் செய்துக் காடியாகப் பருகினர். சுளைகளுக்கு உள்ளே வலுவான கொட்டை இருக்கும். இந்தக் கொட்டையின்மேல் வெண்ணிறத்தில் தோல் மூடியிருக்கும். கொட்டைகளை உடைத்து மாவாக்கி உண்பதற்கு அவற்றின்மேல் கன்றுகளை ஏறவிடுவர்.

இனி, பலாமரத்தைப் பற்றிச் சங்க இலக்கியம் கூறியுள்ள பல்வேறு செய்திகளைத் தனித்தனி தலைப்புக்களின் கீழே விரிவாகக் காணலாம்.


வேர்:

பெரும்பாலான மரங்களின் வேர்கள் மண்ணுக்கு அடியில் மறைவாக வளரும்போது பலாமரத்தின் சில வேர்கள் வெளியில் தெரியும்படி வளரும். இக் காரணத்தினால் சங்க இலக்கியங்களில் பலாமர வேர் பற்றிய சில பதிவுகள் காணப்படுகின்றன. பலாமரத்தின் வேர்கள் சிவப்பு நிறத்தில் வளரும் என்றும் அந்த வேர்களிலும் கூட பழங்கள் காய்த்துத் தொங்கும். இவ்வாறு வேர்களிலும் பழங்கள் காய்ப்பதால் இவ்வகையான பலாவிற்கு வேர்ப்பலா என்ற பெயருண்டு. இதைப்பற்றிக் கூறுகின்ற சங்க இலக்கியப் பாடல்கள் சிலவற்றைக் கீழே காணலாம்.

செ வேர் பலவின் பயம் கெழு கொல்லி – நற். 201

செ வேர் சினை-தொறும் தூங்கும் பயம் கெழு பலவின்  – நற். 77

பலவின் வேர் கொண்டு தூங்கும் கொழும் சுளை பெரும் பழம்  – நற். 213

செம் வேர் பலவின் – அகம். 209


தண்டு:

பலாமரமானது சராசரியாக ஐம்பது அடி உயரம் வரையிலும் வளரும் இயல்புடையது. பலாமரத்தின் தண்டு உயரமாக இருப்பதால் இதனைத் தடவுநிலை மற்றும் நெடுங்கால் என்ற சொற்கள் மூலமாகக் கீழ்க்காணும் சங்கப் பாடல்கள் உறுதி செய்கின்றன.

தடவு நிலை பலவின் முழுமுதல் கொண்ட – பெரும். 77

தடவு நிலை பலவின் நாஞ்சில் பொருநன் – அகம். 140

நெடும் கால் ஆசினி ஒடுங்காட்டு உம்பர் – அகம். 91

பலாமரத்தின் கிளைகளும் நீண்டு வளரும் இயல்புடையவை. பெரிய பெரிய காய்களைத் தாங்குவதால் இக் கிளைகள் திரண்டு முதிர்ந்து வலுவாக இருக்கும். இதனை “முட முதிர்” என்ற சொல் மூலமாகக் கீழ்க்காணும் சங்கப் பாடல்கள் கூறுவதைப் பார்க்கலாம்.

முட முதிர் பலவின் அத்தம் – நற். 26

முட முதிர் பலவின் குடம் மருள் பெரும் பழம் – நற். 353

முட முதிர் பலவின் கொழு நிழல் வதியும் – அகம். 91

பலா மரத்தின் கிளைகள் நீண்டு வலுவுடன் விளங்குவதால் பழந்தமிழர்கள் இம் மரத்தின் கிளைகளின் மேல் பணவை அதாவது பரண் அமைத்துக் காவல் செய்தனர். காட்டு வயலில் யானைகள் புகுந்து நாசம் செய்யும்போது கானவர்கள் இந்த பரண்மீது ஏறி கவட்டையால் கல் எறிந்து யானைகளை விரட்டுவர். இச் செய்தியைக் கூறும் சங்கப்பாடலைக் கீழே காணலாம்.

பிடியொடு மேயும் புன்செய் யானை அடி ஒதுங்கு இயக்கம்

கேட்ட கானவன் நெடு வரை ஆசினி பணவை ஏறிக்

கடு விசை கவணையில் கல் கை விடுதலின் – கலி. 41    


இலை:

பலா மரத்தின் இலைகள் பெரியவை. ஏழு முதல் பதினைந்து அங்குலம் வரை நீளமும் மூன்று முதல் ஏழு அங்குலம் வரை அகலமும் உடையவை. தோல் போலத் தடிப்புடைய பலாமரத்தின் இலைகள் அடர்ந்த பசுமை நிறத்தில் செறிந்து காணப்படும். இதைப் பற்றிக் கூறும் சங்க இலக்கியப் பாடல்களைக் கீழே காணலாம்.

அகல் இலை பலவின் – குறு. 352

அள் இலை பலவின் – அகம். 378

பனி வரை நிவந்த பாசிலை பலவின் – புறம். 200


காய்:

பலாமரத்தின் காய்கள் பல தனிச்சிறப்புக்களைக் கொண்டவை. ஏனை மரங்களைப் போலன்றி, பலா மரத்தின் காய்கள் கிளைகளில் மட்டுமின்றித் தண்டு மற்றும் வேர்களிலும் கூட மாலையாகத் தொடுத்ததைப் போலத் தொடர்ச்சியாகக் காய்த்துத் தொங்கும். இதைப் பற்றிக் கூறும் சங்கப் பாடல் கீழே:

வேரும் முதலும் கோடும் ஓராங்கு

தொடுத்த போல தூங்குபு தொடரி

கீழ் தாழ்வு அன்ன வீழ் கோள் பலவின் – குறு. 257

பலா மரத்தின் காய்கள் அகன்று நடுவில் உருண்டு திரண்டு பெரிதாக இருப்பதால் இவற்றை முழவு (மேளம்) என்னும் இசைக்கருவியுடனும் குடத்துடனும் ஒப்பிட்டுக் கீழ்க்காணும் பாடல்களில் சங்கப் புலவர்கள் பாடியுள்ளனர்.

முன்றில் நீடிய முழவு உறழ் பலவில் – அகம். 172

கான பலவின் முழவு மருள் பெரும் பழம் – மலை. 511

முட முதிர் பலவின் குடம் மருள் பெரும் பழம் – நற். 353, அகம் 352

குட காய் ஆசினி – நற். 44

சுரம் செல் கோடியர் முழவின் தூங்கி முரஞ்சுகொண்டு

இறைஞ்சின அலங்கு சினை பலவே – மலை. 144

கார் கோள் பலவின் காய் துணர் கடுப்ப

நேர் சீர் சுருக்கி காய கலப்பையிர் – மலை. 12

பலா மரத்தின் காய்களில் சில ஐம்பது கிலோ எடைவரையிலும் இருப்பதுண்டு. இத்தனை எடையுள்ள காயினை மிகச்சிறிய காம்பு ஒன்றே தாங்கி இருப்பது ஆச்சரியமாகத் தோன்றும். சிறிய மெல்லிய காம்பில் பெரிய எடையுள்ள பலாக்காய் தொங்குவதைப் போல காதலியின் மெல்லிய உயிரில் அவளது மிகப்பெரிய காதல் தொங்குகின்றது என்று அழகான உவமையுடன் கூறும் சங்க இலக்கியப் பாடலைக் கீழே காணலாம்.

வேரல் வேலி வேர் கோள் பலவின்

சாரல் நாட செவ்வியை ஆகு-மதி

யார் அஃது அறிந்திசினோரே சாரல்

சிறு கோட்டு பெரும் பழம் தூங்கி ஆங்கு இவள்

உயிர் தவ சிறிது காமமோ பெரிதே    - குறு. 18

பலாமரத்தின் கீழே ஒரு பெரிய பழம் விழுந்து கிடக்கின்றது. அதை உண்பதற்காகக் கையில் எடுத்த குரங்கு ஒன்று பழத்தின் இரண்டு பக்கங்களில் உள்ள தோலை உரிக்க முயல்கிறது. அப்போது அந்தக் குரங்கின் முன்னால் ஆண்மயில் ஒன்று வந்து நின்று தோகை விரித்து ஆடுகின்றது. இக் காட்சியானது பார்ப்பதற்குக் கோடியன் ஆகிய பாணன் தன் கையில் முழவு என்னும் மேளத்தை இசைக்க, அலங்காரம் செய்த அழகிய விறலியானவள் இசைக்கேற்ப நடனமாடுவதைப் போலத் தோன்றியதாகக் கீழ்க்காணும் பாடல் கூறுவதைப் பாருங்கள்.

முடவு முதிர் பலவின் குடம் மருள் பெரும் பழம்

பல் கிளை தலைவன் கல்லா கடுவன்

பாடு இமிழ் அருவி பாறை மருங்கின்

ஆடு மயில் முன்னது ஆக கோடியர்

விழவு கொள் மூதூர் விறலி பின்றை              5

முழவன் போல அகப்பட தழீஇ

இன் துணை பயிரும் குன்ற நாடன் – அகம். 352


கனி:

பலாக்கனியின் தோலின்மேல் சிறுசிறு முட்களைப் போன்ற அமைப்புக்கள் உண்டு. இதைப்பற்றிக் கூறும் சங்க இலக்கியப் பாடல் கீழே:

பலவின் ஆர்வுற்று முள் புற முது கனி – புறம். 158

பலாக்கனியின் தோல்மேல் உள்ள முள் போன்ற தோற்றத்தைப் பாகல்காயின் தோலுடன் ஒப்பிட்டுக் கீழ்க்காணும் பாடல் கூறுகின்றது.

பலவுக் காய் புறத்த பசும் பழ பாகல் – அகம் 255

சங்க காலத்தில் மிளகு வணிகர்கள் மிளகினை மஞ்சள்நிறத் துணிகளில் மூட்டைகளாகக் கட்டிக் கழுதைகளின் முதுகில் ஏற்றிச் சென்றனர். அப்போது அந்த மிளகு மூட்டைகள் பார்ப்பதற்கு முட்களைக் கொண்ட பெரிய பலாக் கனிகளைப் போலத் தோன்றியதாகக் கீழ்க்காணும் சங்கப் பாடல் கூறுகிறது.

பலவின் முழுமுதல் கொண்ட சிறுசுளை பெரும்பழம் கடுப்ப

மிரியல் புணர் பொறை – பெரும். 77

பலாக் கனியின் உள்ளே இனிப்பான சிறிய மஞ்சள் நிறப் பழங்கள் ஏராளமாகப் பொதிந்திருக்கும். இவற்றைச் சுளை என்ற பெயரால் சங்க இலக்கியம் குறிப்பிடுகிறது.

தாழ் கோள் பலவின் சூழ் சுளை பெரும் பழம் – பெரும். 356

தீம் சுளை பலவின் பழம் – புறம். 109

வண் கோள் பலவின் சுளை விளை தீம் பழம் – மலை. 337

தீம் பழ பலவின் சுளை – அகம்.182

பலாச் சுளைகள் நன்கு கனிந்தவுடன் இனிப்பான வாசம் வீசத் தொடங்கும். இப் பழங்களின் வாசனை விலங்குகள் மற்றும் பறவைகளை ஈர்த்து உண்ணச் செய்யும். பலாச்சுளைகளின் வாசனை பற்றிய பாடல்கள் கீழே:

சாரல் பலவின் கொழும் துணர் நறும் பழம் – ஐங்கு. 214

ஏற்றை புடை தொடுபு உடையூ பூ நாறு பலவு கனி -  குறு. 373

கலை தொட இழுக்கிய பூநாறு பலவு கனி – குறு. 90

இனிப்பும் மணமும் கொண்ட பலாச் சுளைகளில் இருந்து சாறு வடித்துப் புளிக்கச் செய்து காடியாகப் பருகினர் சங்ககாலத் தமிழர்கள். இச்செய்தியைப் பதிவுசெய்துள்ள சங்க இலக்கியப் பாடல்கள் கீழே:

பலவின் நெகிழ்ந்து உகு நறும் பழம் விளைந்த தேறல் – குறி. 189

தீம் பழ பலவின் சுளை விளை தேறல் – அகம்.182

பலாக் கனியின் சுளைகளின் மேல் பசை போன்ற திரவம் உண்டு. இதனால் இப் பழங்களைத் தொடும்போது பிசுபிசு என்று கைகளில் ஒட்டிக் கொள்ளும். பலாச்சுளைகளின் பயிர்ப்புத் தன்மை அதாவது பிசுபிசுப்புத் தன்மை பற்றிக் கூறும் பாடல்களைக் கீழே காணலாம்.

பல் கோள் பலவின் பயிர்ப்பு உறு தீம் கனி – கலி. 50

பயிர்ப்பு உறு பலவின் – அகம். 348

பலாச்சுளைகளின் உள்ளே வலுவான கொட்டைகள் இருக்கும். ஒவ்வொரு சுளையிலும் ஒரு கொட்டை என்ற வீதத்தில் இருக்கும் இந்த கொட்டையின் மேல்புறம் வெண்ணிறத்தில் மெல்லிய தோல்போன்ற ஒன்று மூடியிருக்கும். இதைப் பற்றிக் கூறும் சங்கப் பாடலைக் கீழே பார்க்கலாம்.

பலவின் சுளைவிளை தீம்பழம் உண்டுபடு மிச்சில் காழ் – மலை. 337

ஆய்சுளை பலவின் மேய்கலை உதிர்த்த      துய்தலை வெண்காழ் – அகம். 7

பலாப்பழக் கொட்டைகள் வலுவானவை என்பதால் அவற்றை உடைத்து மாவாக்கிப் பயன்படுத்துவதற்காகக் காளைக்கன்றுகளைக் கொட்டைகளின் மேல் செலுத்தி மிதிக்கச்செய்வர். இச்செய்தியைக் கூறும் சங்கப் பாடல் கீழே:

வண் கோள் பலவின் சுளை விளை தீம் பழம்

உண்டு படு மிச்சில் காழ் பயன் கொள்மார்

கன்று கடாஅ உறுக்கும் மகாஅர் ஓதை – மலை. 337

முடிவுரை:

பலாமரங்களின் கிளைகள் உயர்ந்து வளர்ந்து மேற்பகுதியில் அடர்ந்த இலைகளால் மூடப்பட்டிருக்கும். இதனால் இம் மரங்களின் கீழ் நல்ல நிழல் எப்போதும் இருக்கும். அதுமட்டுமின்றி, குரங்குகள், அணில்கள், பறவைகள் என்று பல்வேறு உயிரினங்களுக்கு உண்ண உண்ணக் குறையாத அமுதசுரபியாக இம் மரம் விளங்குகிறது. பலா மரங்களை வீட்டைச் சுற்றி வளர்ப்பதால் இனிப்பான சத்தான பழங்கள், வலுவான புரதச்சத்து மிக்க கொட்டைகள், நல்ல நிழல் என்று அனைத்து வகையிலும் பயன் பெறலாம். .

ஆதாரங்கள் / மேற்கோள்கள்:

(1)   https://en.wikipedia.org/wiki/Jackfruit

2 கருத்துகள்:

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.