வெள்ளி, 17 செப்டம்பர், 2021

6. பனை மரம் ( சங்க இலக்கியத்தில் தாவரவியல் )

முன்னுரை:

பனை – என்றவுடன் குளுமையான இனிமையான நீரைக் கொண்ட நுங்கு தான் நினைவுக்கு வரும். கோடைகாலத்தில் நுங்கை விரும்பி உண்ணாதவர்கள் இருக்கவே முடியாது. இயற்கையின் படைப்பில் சாகாவரம் பெற்ற அற்புதமான மரம் எதுவெனில் பனைமரம் என்றே சொல்லலாம். காரணம், இலை, பூ, காய், கனி, கொட்டை என்று தன்னிடத்தில் உள்ள அனைத்தையுமே பிறருக்கு அளித்து இறுதியாக வீட்டுக் கூரைக்கு உத்திரமாக அமைந்து சாகாவரம் பெற்று விடுவது பனைமரம் மட்டுமே. அதுமட்டுமின்றி, மண் அரிப்பைத் தடுப்பதில் முதன்மையான பங்கு பனைமரங்களுக்கு உண்டு. பனைமரத்தில் இருந்து இறக்கப்படும் கள்ளானது உடலைக் குளிரச் செய்கின்ற மருத்துவ குணமுடைய பானமாகும். பல சிறப்புக்களைக் கொண்ட பனைமரத்தைப் பற்றிச் சங்க இலக்கியம் கூறியுள்ள பல்வேறு செய்திகளை இக் கட்டுரையில் காணலாம்.

பனை – பூர்வீகமும் பெயரும்:

மணற்பாங்கான இடங்களில் இயற்கையாகத் தோன்றும் பனைமரங்களின் காய்கள் கடல் வழியாகப் பயணம் செய்து கடற்கரை ஓரங்களில் பல்கிப் பெருகும் இயல்புடையவை. எனவே பனைமரங்களின் பூர்விகத்தை உறுதிசெய்வது சற்று கடினமே. பொராசசு எனப்படும் பிரிவைச் சேர்ந்ததான பனைமரத்தில் இந்தியாவில் மட்டுமே பல வகையான மரங்கள் உண்டு. பொதுவாக, ஆசியா, இந்தோனேசியா, ஆப்பிரிக்கா, மடகாசுகர் மற்றும் நியூகினியா வில் அதிகம் காணப்படுகின்றன. பனைமரத்தைக் குறிப்பதற்கு இதுவரை நாற்பத்தி ஒன்று பெயர்கள் இருப்பதாக இதுவரை அறியப்பட்டுள்ளன. அப் பெயர்கள் யாவும் அகரவரிசை முறைப்படி அமைக்கப்பட்டு கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

அலகு,இலாங்கலம்,ஏடகம்,ஐந்தரம்,ஐந்தார்,கரதாளம்,கருப்பை,கரும்புறம்,

கற்பகம்,சடாபலம்,செத்து,தாலம்,தாலி,தாழி,திருணராசன்,தீர்க்கதரு,துராரோகம்,

துருமசிரேட்டம்,தோரை,நீலம்,நீளம்,பனை,புத்தாளி,புல்,புல்லூதியம்,புற்பதி,

புற்றாளி,புன்மரம்,பூமிபிசாசம்,பெண்ணை,பொத்தி,போந்து,போந்தை,மகம்,

மகாபத்திரம்,மடலி,மடலை,மதுரசம்,முக்காழி,வடலி,வேனில்.

மேற்கண்ட பெயர்களில் பனை, பெண்ணை, போந்தை, போந்து, மடலை, வேனில் ஆகிய பெயர்கள் மட்டுமே சங்க இலக்கியங்களில் பயன்படுத்தப் பட்டுள்ளன.

பனைமரம் – பண்புகள்:

தமிழகத்தில் அதிகம் காணப்படும் பனைமரத்தின் தாவரவியல் பெயர் பொராசசு பிலாபெலிபர் ( BORASSUS FLABELLIFER ) ஆகும். இப் பனைமரத்தைப் பற்றிச் சங்க இலக்கியங்கள் கூறியுள்ள பல்வேறு செய்திகளைச் சுருக்கமாகக் கீழே காணலாம்.

பனைமரத்தின் தண்டுகள் மிக உயரமாக வளரும் இயல்புடையவை. பனைமரத்தின் தண்டுகள் கருப்பு நிறத்தில் பல வரிகளைக் கொண்டதாகக் காணப்படும். இதனால் இம்மரத்தின் தண்டானது கருநிற வளைவுகளைக் கொண்ட யானையின் துதிக்கையுடன் ஒப்பிடப்பட்டுள்ளது. தண்டுக்குள்ளே காணப்படும் பழுப்புநிற நார்கள் கரடியின் உடலின்மேல் காணப்படும் மயிர்களுடன் ஒப்பிடப்பட்டுள்ளது. பனைமரத்தின் இலைகள் அதாவது ஓலைகள் நீளமாக கூர்முனைகளைக் கொண்டு விசிறி வடிவில் தோன்றும். பனையின் விரியாத இலைக்குருத்தானது வரால் மீனுடன் ஒப்பிட்டுக் கூறப்பட்டுள்ளது. பனையோலையின் காம்புகளின் முற்பகுதியில் கூரிய பல பற்கள் காணப்படும். காய்ந்து முதிர்ந்த பனை ஓலைகள் காற்று வீசும்போது பெருத்த சத்தத்தை எழுப்பும். பனைமரத்தின் உச்சியில் நீண்ட குச்சிகளில் வெண்ணிறப் பூக்கள் கொத்தாக மலர்ந்திருக்கும். சேர மன்னர்கள் இப் பூக்களை மாலையாகக் கட்டி அணிந்தனர்.

நுங்கு / குரும்பை என்று அழைக்கப்படும் இளங்காய்கள் உருண்டையாக கருப்பு நிறத்தில் இருக்கும். காய்களின் தலையில் பச்சை நிறத்தில் வலுவான தோடுகள் காணப்படும். இவற்றை இதக்கை என்று கூறும் சங்க இலக்கியம் யானையின் கால் நகங்களுடன் இவற்றை ஒப்பிட்டுக் கூறுகிறது. இதக்கை வெட்டிய காய்களுக்குள்ளே இருக்கின்ற சுவையான குளிர்ச்சி மிக்க நீர் நிரம்பிய விதைகளைப். பாறைகளில் காணப்படும் சுனைகளுடன் ஒப்பிட்டுக் கூறுகிறது. இவ் விதைகள் முதிர்ந்ததும் அதிலுள்ள இன்சுவை நீர் கெட்டியாகி முற்றிய தேங்காயைப் போலச் சுவையும் நிறமும் பெறும். இதன் துண்டுகளை ஆலங்கட்டிகளுடன் ஒப்பிடுகிறது சங்க இலக்கியம். பனங்காய்கள் முழுவதுமாக முற்றியதும் நார்கள் மிக்க இனிய சதையைக் கொண்ட பழமாக மாறும். இப் பழத்தை உண்ட பின்னர் அதற்குள் இருக்கும் கொட்டைகளைத் தீயில் சுட்டும் உணவாக உண்டனர். பனைமரங்களில் இருந்து கள் எனப்படும் இனிய புளிப்புடைய பானத்தை இறக்கிப் பருகினர்.

காதலின் ஆழத்தைப் பிறருக்குப் புரிய வைப்பதற்காகப் பனைமரத்தின் ஓலைகளால் குதிரை உருவத்தை உண்டாக்கி அதன்மேல் காதலனை அமரச்செய்து காதலியின் தெருவுக்குச் சுமந்து சென்றனர். காதலின் அடையாளமாகக் கருதப்படும் அன்றில் பறவைகள் பெரும்பாலும் பனைமரங்களில் தான் வாழ்ந்தன. சங்ககாலத்தில் பனைமரங்கள் கடற்கரை மணலில் அதிகம் காணப்பட்டதாக சங்க இலக்கியப் பாடல்கள் கூறுகின்றன.


தண்டு:

பனைமரத்தின் தண்டானது நூறு அடி உயரம் வரையிலும் வளரக் கூடியது. மற்ற மரங்களைப் போல பக்கவாட்டில் கிளைகளைப் பரப்பாமல் ஒரே செங்குத்தாக ஒற்றைக் காலில் உயரமாக வளரும். பனைமரத்தின் தண்டுகள் கருமை நிறம் கொண்டவை. பனைமரத்தின் தண்டுகள் கருமை நிறத்தில் நீண்டு உயரமாக வளர்வதைப் பற்றிக் கூறும் சில சங்க இலக்கியப் பாடல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

நீள் இரும் பனை – பரி. 2

இரும் பனை – திரு. 312, நற். 335, புறம். 45, 340, பொரு. 143

நெடு மா பெண்ணை – நற். 146, 199

நீடு இரும் பெண்ணை – நற். 354, குறு. 374, அகம். 400

ஓங்கு இரும் பெண்ணை – குறு. 293, கலி. 139, குறி. 220

பனைமரத்தின் வலுவான கருப்பான தண்டில் பூங்கொடி ஒன்று படர்ந்துள்ளது. அதைப் பார்ப்பதற்கு கருப்பான வலிய உடல்கட்டுடைய வீரன் ஒருவனைக் கொடியிடை ஒருத்தி தழுவியிருப்பதைப் போலத் தோன்றுவதாகக் கீழ்க்காணும் சங்கப் பாடல் கூறுவதைப் பாருங்கள்.

மள்ளர் அன்ன மரவம் தழீஇ மகளிர் அன்ன ஆடு கொடி

நுடங்கும் அரும்பதம் கொண்ட பெரும்பத வேனில் - ஐங்கு. 400

பனைமரத் தண்டில் அடுக்கடுக்காக பல வரிகள் காணப்படும். கருமை நிறத்தில் பருத்துப் பல வரிகளைக் கொண்ட பனைமரத் தண்டினை யானையின் பல வரிகளைக் கொண்ட கருப்புநிறத் துதிக்கையுடன் ஒப்பிட்டுப் பல பாடல்களில் சங்கப் புலவர்கள் பாடியுள்ளனர். அவற்றுள் சில மட்டும் கீழே தரப்பட்டுள்ளன.

இரும் பனை அன்ன பெரும் கை யானை – புறம். 340

பனை தடி புனத்தின் கை தடிபு பல உடன் யானை பட்ட – பதி. 36

பனை திரள் அன்ன பரேர் எறுழ் தட கை …. உயர் மருப்பு யானை – அகம். 148

வெளிற்று பனை போல கை எடுத்து யானை – அகம். 333

பனை மருள் தட கையொடு முத்து படு முற்றிய

உயர் மருப்பு ஏந்திய வரை மருள் நோன் பகடு – புறம். 161

பனைமரத் தண்டானது வெளியே கடினமான கருப்புநிறப் பட்டையால் மூடப்பட்டு இருக்கும். அதனுள்ளே சற்று மென்மையான பழுப்புநிற நார்கள் மிகுதியாகச் செறிந்து இருக்கும். இந்த நார்களைக் கரடியின் உடலில் இருக்கும் பழுப்புநிற மயிருடன் ஒப்பிட்டுக் கீழ்க்காணும் சங்கப் பாடல் கூறுகிறது.

இரும் பனை வெளிற்றின் புன் சாய் அன்ன

குரூஉ மயிர் யாக்கை குடா அடி உளியம் – திரு. 312

பனைமரத்தின் தண்டுகள் மிகவும் உயரமாக ஒற்றைக் காலில் வளர்வதால் பலத்த காற்றினால் சாய்ந்து முறியாமல் இருப்பதற்காக அடிப்பகுதியில் பெருத்து இருக்கும். இதனைப் பராரை / முழா அரை / பரியரை / திரள் அரை என்று கீழ்க்காணும் சங்கப் பாடல்கள் குறிப்பிடுகின்றன.

முழா அரை போந்தை – புறம். 85, புறம். 375

முழவு முதல் அரைய தடவு நிலை பெண்ணை – குறு. 301

திரள் அரை பெண்ணை நுங்கொடு பிறவும் – பெரும் 360

பரியரை பெண்ணை – நற். 218

பராரை மன்ற பெண்ணை வாங்கு மடல் – நற்.303

பராரை பெண்ணை – அகம். 305


இலை:

பனைமரத்தின் இலைகள் பத்து அடி நீளம் வரையிலும் வளரக் கூடியவை. விசிறி போன்ற வடிவத்தில் விரிந்திருக்கும் இதன் முனைகள் கூரானவை. பனைமரத்தின் விரியாத இலைக்குருத்தினை நுகும்பு என்று குறிப்பிடும்  சங்க இலக்கியம் அதனை வரால் மீனுடன் கீழே ஒப்பிட்டுக் கூறுகிறது..

பனை நுகும்பு அன்ன சினை முதிர் வராலொடு      - புறம். 249

பனைமரத்தின் இலைகளைத் தாங்கியிருக்கும் நீண்ட காம்பின் முன்பகுதியில் அரத்தைப் போல கூர்மையான பல பற்கள் வரிசையாக அமைந்திருக்கும். இதனைக் கருக்கு என்று குறிப்பிடுகிறது சங்க இலக்கியம்.

பனை தலை கருக்கு உடை நெடு மடல் குருத்தொடு – குறு. 372

பைம் கால் கருக்கின் கொம்மை போந்தை – குறு. 281

போந்தை அர வாய் மா மடல் – புறம். 375

பசுமையான பனைமர இலைகள் முற்றிக் காய்ந்து பழுப்பு நிறம் பெறும். இந்த ஒலைகளின் மீது காற்று வேகமாக வீசும்போது பெரிய சத்தத்தை உண்டாக்கும். பனையோலை எழுப்பிய பெரிய சத்தத்தால் அருகில் இருந்த மரத்தில் உண்டு கொண்டிருந்த பறவை அஞ்சிப் பறந்ததாகக் கீழ்க்காணும் சங்க இலக்கியப் பாடல் கூறுகிறது.

வேனில் அரையத்து இலை ஒலி வெரீஇ

போகில் புகா உண்ணாது பிறிது புலம் படரும் – ஐங்கு. 325


பூ:

பனைமரத்தில் ஆண், பெண் என்று இருவகையான பூக்கள் தனித்தனியாகத் தோன்றும். அதாவது ஆண் பூக்கள் ஒரு மரத்திலும் பெண் பூக்கள் வேறு மரத்திலும் பூக்கும். பனைமரத்தின் பூக்கள் மரத்தின் உச்சியில் குடுமியைப் போல நீண்ட குச்சிகளில் வெண்ணிறத்தில் கொத்தாக வளர்ந்திருக்கும். இதைப்பற்றிக் கூறும் சங்க இலக்கியப் பாடல்களில் சில மட்டும் கீழே:

இரும் பனை வெண் தோடு – புறம். 45

போந்தை குடுமி வெண் தோட்டு – குறு. 281

போந்தை வெண் தோடு – பதி. 51

போந்தை குவி முகிழ் ஊசி வெண் தோடு – பதி. 70

இளம் போந்தை உச்சி கொண்ட ஊசி வெண் தோட்டு – புறம். 100

மூவேந்தர்களில் சேர மன்னர்கள் வெண்ணிறப் பனம்பூவினால் அமைந்த மாலையை அணிந்தனர். இதைப்பற்றிக் கூறும் சங்கப் பாடல்கள் கீழே;

இரும் பனை வெண் தோடு மலைந்தோன் அல்லன் – புறம். 45

மறம் கெழு போந்தை வெண் தோடு புனைந்து – பதி. 51


காய்:

பனைமரத்தின் காய்கள் கருப்பு நிறத்தில் உருண்டை வடிவத்தில் இருக்கும். இவற்றை நுங்கு என்றும் குரும்பை என்றும் சங்க இலக்கியம் குறிப்பிடும். இந்த நுங்கினுள்ளே குளிர்ச்சியான இன்சுவை மிக்க நீரைக் கொண்ட விதைகள் இருக்கும். இந்த விதைகள் பார்ப்பதற்குக் கண்களைப் போன்ற வடிவத்தில் ஒளி மிக்கதாக இருக்கும். இதைப்பற்றிக் கூறுகின்ற சங்க இலக்கியப் பாடல்கள் சிலவற்றை மட்டும் கீழே காணலாம். இப் பாடல்களில் வரும் முலை என்பது கண்களைக் குறிக்கும். (1)

முலை என வண் கோள் பெண்ணை வளர்த்த நுங்கின்

இன் சேறு இகுதரும் – சிறு. 27

தீம் கண் நுங்கின் பணை கொள் வெம் முலை

பாடு பெற்று உவக்கும் பெண்ணை – நற். 392

இரும் பனையின் குரும்பை நீரும் – புறம். 24

பெரு மடல் பெண்ணை பிணர் தோட்டு பைம் குரும்பை – கலி. 83

பனங்காயில் காம்பு பொருந்துகின்ற இடத்தில் பச்சை நிறத்தில் தடிப்புடைய தோடு இருக்கும். இந்தப் பனந்தோட்டை இதக்கை என்று சங்க இலக்கியம் குறிப்பிடும். கதிரவன் மயங்கிய மாலைநேரத்தில் உயரமான நடுகல்லை மனிதன் என்று தவறாகக் கருதிய யானை ஒன்று கோபமுற்றுத் தனது காலால் உதைக்கவும் அதனால் அதனுடைய காலில் இருந்த நகமானது பனங்காயின் இதக்கை போல ஒடிந்து விழுந்ததாகவும் கீழ்க்காணும் சங்கப் பாடல் கூறுகிறது.

புன்கண் மாலை அத்த நடுகல் ஆள் என உதைத்த

கான யானை கதுவாய் வள் உகிர்                        5

இரும் பனை இதக்கையின் ஒடியும் – அகம். 365

பனங்காயின் இதக்கையையும் சிறிது தோலையும் சீவி நீக்கிய பின்னரே உள்ளிருக்கும் இன்சுவை நுங்கினைச் சுவைக்க முடியும். அப்படி வெட்டப்பட்ட தோற்றமானது பார்ப்பதற்கு சமதளமான பெரும்பாறை ஒன்றில் அமைந்த இனிய நீரைக் கொண்ட சுனைகளைப் போல இருந்தது என்று கீழ்க்காணும் பாடலொன்று விதந்து கூறுகிறது.

பிடி துஞ்சு அன்ன அறை மேல நுங்கின்           

தடி கண் புரையும் குறும் சுனை ஆடி – கலி. 108

பனங்காய்கள் சற்று முதிர்ந்தவுடன் அவற்றின் விதைகளுக்கு உள்ளே இருக்கும் இன்சுவை நீரானது கெட்டிப்படத் தொடங்கிவிடும். முதலில் வழுக்கைத் தேங்காய் போலவும் பின்னர் முற்றிய தேங்காய் போலவும் வெண்ணிறத்தில் மாறி விடும். பனை நுங்குகளின் முற்றிய தேங்காய்த் துண்டுகளை ஆலங்கட்டிகளுடன் ஒப்பிட்டுக் கீழ்க்காணும் பாடல் கூறுகிறது.

நீர் செறி நுங்கின் கண் சிதர்ந்தவை போல்

சூர் பனிப்பு அன்ன தண் வரல் ஆலியொடு – அகம். 304

பனங்காயை மரத்தில் இருந்து பறிக்காமல் விட்டுவிட்டால் அது முதிர்ந்து பழமாகி விடும். கருமையான தோலால் மூடப்பட்டிருக்கும் இந்தப் பழத்தின் உள்ளே நார்கள் நிறைந்த இனிமையான மஞ்சள்நிறக் கூழும் மூன்று முதல் நான்கு வலுவான கொட்டைகளும் இருக்கும். பனம்பழம் பற்றிக் கூறும் சங்க இலக்கியப் பாடல் கீழே:

கானல் பெண்ணை தேன் உடை அளி பழம் – நற். 372

பனைமரத்தின் காய்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் மனிதர்களுக்கு உணவாக இருந்து பயன்படும் தன்மை கொண்டவை. முதற்கட்டத்தில் இனிய நீருடைய நுங்குகளையும் இரண்டாம் கட்டத்தில் பனம்பழங்களையும் மூன்றாம் கட்டமாக பழங்களை உண்டு கழித்த கொட்டைகளைச் சுட்டும் உணவாகக் கொள்ளலாம். இப்படிப் பனைமரங்கள் முக்காலத்திலும் உணவாகப் பயன்படுவதைக் கூறுகின்ற சங்கப்பாடல் கீழே:

தலையோர் நுங்கின் தீம் சேறு மிசைய

இடையோர் பழத்தின் பைம் கனி மாந்த

கடையோர் விடு வாய் பிசிரொடு சுடு கிழங்கு நுகர – புறம். 225

பனையும் காதலும்:

பனைமரத்தின் இலைகள் வலுவானவை. இதனால் இவற்றைக் கொண்டு வேலிகளை அடைத்தலும் கூடைகள், பாய்கள் போன்றவற்றைப் பின்னுதலும் உண்டு. இவைதவிர, பனை ஓலைகளைக் கொண்டு குதிரைகளையும் செய்துள்ளனர். பனைமா, மடல்மா என்றெல்லாம் சங்க காலத்தில் அழைக்கப்பட்ட இந்தப் பனங்குதிரையின் கழுத்தில் மயில்தோகைக் கீற்றுக்களையும் மணிகளையும் ஆவிரை, பூளை, எருக்கம் பூக்களைக் கலந்து கட்டிய மாலைகளையும் சூட்டுவர். காதலியால் கைவிடப்பட்ட காதலன் இக் குதிரைமேல் ஏறி அமர்ந்துகொள்ள, காதலி வாழும் தெருவுக்குள் அவனது நண்பர்கள் / உறவினர்கள் அந்தக் குதிரையைச் சுமந்து வருவர். அப்படி வரும்போது காதலி செய்த நோயினையும் அதனால் நேரப்போகும் பின்விளைவையும் காதலியின் பெற்றோரும் உற்றோரும் அறியுமாறு கூறிக்கொண்டு வருவர். தனது மகள் செய்த காதல்நோயால் ஒரு ஆணின் உயிர் அழியப்போகும் அவலத்தை அறிகின்ற காதலியின் பெற்றோர் மனம் மாறி இருவருக்கும் திருமணம் செய்துவைக்க வேண்டும் என்பதே இந்த மடல்மா ஊர்வலத்தின் நோக்கமாகும். இதைப்பற்றிக் கூறும் சங்கப் பாடல்களில் சில மட்டும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பொன் நேர் ஆவிரை புது மலர் மிடைந்த

பல் நூல் மாலை பனை படு கலிமா ……………………

இன்னள் செய்தது இது என முன் நின்று           

அவள் பழி நுவலும் இ ஊர்  – குறு. 173

மணி பீலி சூட்டிய நூலொடு மற்றை

அணி பூளை ஆவிரை எருக்கொடு பிணித்து யாத்து

மல்லல் ஊர் மறுகின் கண் ………….

படரும் பனை ஈன்ற மாவும் சுடர் இழை

நல்கியாள் நல்கியவை பொறை என் வரைத்து அன்றி

பூநுதல் ஈத்த நிறை அழி காம நோய் நீந்தி அறை உற்ற               

உப்பு இயல் பாவை உறை உற்றது போல உக்குவிடும் என்உயிர் – கலி. 138

பனை ஈன்ற மா ஊர்ந்து அவன் வர – கலி. 147

காதலின் ஆழத்தை மற்றவருக்குப் புரியவைப்பதற்காக மட்டுமின்றி, காதல் பறவைகளின் கூடாரமாகவும் பனைமரங்கள் விளங்கியுள்ளன. ஒன்றை விட்டு ஒன்று சிறிது நேரம் பிரிந்தால் கூட வாடிவிடுவதாக / இறந்துவிடுவதாகச் சொல்லப்படுகின்ற அன்றில் பறவைகள் இந்தப் பனைமரங்களில் தான் தங்கி வாழ்ந்ததாகக் கீழ்க்காணும் சங்கப் பாடல்கள் கூறுவதைப் பார்க்கலாம்.

மை இரும் பனை மிசை பைதல உயவும் அன்றிலும் – நற்.  335

பனை மிசை அன்றில் சேக்கும் – அகம். 360

அன்றில் ஓங்கு இரும் பெண்ணை அக மடல் அகவ - குறி 219

பரியரை பெண்ணை அன்றில் குரலே - நற் 218

மன்று இரும் பெண்ணை மடல் சேர் அன்றில் - கலி  129

மனை சேர் பெண்ணை மடி வாய் அன்றில் - அகம் 50

துணை புணர் அன்றில் எக்கர் பெண்ணை அக மடல் சேர - அகம் 260


முடிவுரை:

ஓலை, பூ, காய், கனி, கிழங்கு என்று பலவகையாலும் இக்கால மனிதருக்கும் பயன்படுவதான பனைமரங்களில் இருந்து கள் என்னும் பானமும் கிடைக்கிறது. வெண்மை நிறத்தில் குளிர்ச்சியான நீர்போலத் தோன்றும் கள்ளானது இலேசான இனிப்பும் புளிப்பும் கலந்த சுவையுடையது. நாள்பட நாள்பட புளிப்புச்சுவை மிகும். சங்கத் தமிழர்கள் பனைமரத்தில் இருந்து கள்ளை இறக்கிப் பருகிய செய்தியைக் கீழ்க்காணும் பாடல்கள் கூறுகின்றன.

பிணர் பெண்ணை பிழி மாந்தியும் – பட். 89

ஓங்கி தோன்றும் தீம் கள் பெண்ணை – நற். 323

பனைமரத்தில் இருந்து இத்தனை உணவுகளைப் பெற்ற பின்னரும் பனைமரத்தின் உயரமான தண்டுகூட வீணாவதில்லை. பனைமரத்தின் வேர்கள் பூமிக்குள் மிக ஆழமாகச் செல்வதால் இவை மண் அரிப்பைத் தடுக்கும் வல்லமை கொண்டவை. சங்ககாலத்தில் பனைமரங்கள் இயற்கையாகவே கடற்கரை ஓரங்களில் வரிசையாக வளர்ந்து கடல் அரிப்பைத் தடுப்பதில் முன்னின்றன. சங்ககாலத் தமிழகத்தின் கடற்கரை ஓரங்களில் பனைமரங்கள் மிக்கு வளர்ந்திருந்த செய்திகளைக் கூறும் சங்கப் பாடல்கள் சிலவற்றைக் கீழே காணலாம்.

பெண்ணை ஓங்கிய வெண் மணல் படப்பை  – நற். 123, அகம். 120

பெண்ணை இவரும் ஆங்கண் வெண் மணல் படப்பை      - நற். 38

அடும்பு இவர் மணல் கோடு ஊர நெடும் பனை – குறு. 248

இரும் பௌவத்து ……… தீம் பெண்ணை மடல் சேப்பவும் – பொரு. 207

பெண்ணை மா அரை புதைத்த மணல் மலி முன்றில் – நற். 135

ஓங்கு மணல் உடுத்த நெடு மா பெண்ணை – நற். 199

கடலும் கானலும் தோன்றும் மடல் தாழ் பெண்ணை – குறு. 81

தண் கடல் பரப்பின் அடும்பு அமல் அடைகரை அலவன் ஆடிய

வடு அடு நுண் அயிர் ஊதை உஞற்றும் தூ இரும் போந்தை – பதி.  51*

கடற்கரையில் பனைமரங்களை வளர்க்க மிகவும் சிரமப்படத் தேவையில்லை. அரைகிலோமீட்டருக்கு ஒரு மரத்தை கடற்கரை மணலில் நட்டு வளர்த்தால் போதுமானது. அம் மரங்களில் இருந்து பழுத்து தானே உதிரும் கனிகள் கடல்நீரால் உந்திச் செல்லப்பட்டுச் சிதைவுற்று அதனுள்ளே இருக்கும் கொட்டைகள் கடற்கரையில் வேறொரு இடத்தில் முளைக்கும். இப்படியாகப் பத்து ஆண்டுகள் கழிந்தபின், பல பனைமரங்கள் வரிசையாகக் கடற்கரையில் வளர்ந்து நிற்பதைப் பார்க்கலாம். வாழும்போது நிலையாக நின்று வாழ்ந்த பனைமரம் சாய்ந்தபின் படுத்த படுக்கையாக வீட்டுக் கூரையைத் தாங்கும் உத்திரமாக என்றும் நம்மோடு நிலைபெற்று விடுகிறது. எனவே பனைமரங்களைப் புதிதாக நட்டு வளர்ப்போம்! இருப்பவற்றை அழிவில் இருந்து பாதுகாப்போம்.!!

ஆதாரம் / மேற்கோள்கள்:

(1)  https://thiruththam.blogspot.com/2015/07/blog-post.html

திங்கள், 13 செப்டம்பர், 2021

5. ஆலமரம் ( சங்க இலக்கியத்தில் தாவரவியல் )

முன்னுரை:
 

ஆலமரம் – என்று சொன்னதுமே பரந்து விரிந்த அதன் கிளைகளும் தொங்கிக் கொண்டிருக்கும் அதன் விழுதுகளுமே கண்முன்னால் வந்து நிற்கும். மிக நீண்ட ஆயுளைக் கொண்டதால் “ஆல் போல் தழைக்க” என்று பிறரை வாழ்த்துவதும் உண்டு. ஆலமரத்தின் கிளைகளில் இருந்து ஒடிக்கப்பட்ட குச்சிகள் பல்துலக்குவதற்கு இன்றளவும் பயன்படுத்தப் படுகின்றன. ஆலமரத்தை அடிப்படையாகக் கொண்டு பல ஊர்ப்பெயர்களும் உண்டு. அவற்றுள் மிகமிகப் பழமையானவை ஆலங்கானம், தொன்மூதாலம் போன்றவை. மன்னரின் படைகள் முழுவதும் தங்குவதற்கான இடமாகவும் ஆலமரம் விளங்கியுள்ளது. இந்தியத் திருநாட்டின் தேசிய மரமாகத் தற்போது விளங்குகின்ற ஆலமரத்தைப் பற்றிச் சங்க இலக்கியம் கூறியுள்ள பல்வேறு செய்திகளை இங்கே காணலாம்.

ஆலமரம் – பூர்வீகமும் பெயரும்:

ஆலமரத்தின் பூர்வீகம் ஆசியாவில் இந்தியத் துணைக்கண்டமெனக் கூறப்பட்டுள்ளது. பிகச் பெங்காலன்சிச் (FICUS BENGHALENSIS) என்ற தாவரவியல் பெயரைக் கொண்ட இம் மரத்தின் மிகப்பெரிய மரங்கள் இந்தியாவில் தான் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. ஆலமரத்தை ஆங்கிலத்தில் பனியன் (BANYAN)  என்று அழைப்பார்கள். ஆராய்ந்து பார்த்ததில் இப்பெயர் கூட தமிழ்ச்சொல்லின் திரிபாகவே அமைந்துள்ளது என்பதைக் கீழ்க்காணும் சொற்பிறப்பியல் மூலம் அறிந்து கொள்ளலாம்.

பணை (=பெருமை, உயரம், கிளை, தங்குமிடம்) + இழி (=இறங்கு, தாழ், தொங்கு) + அண் (=கயிறு) = பணிழண் >>> பனியன் = பெரிய உயரமான கிளைகளையும் தொங்குகின்ற கயிறுகளையும் கொண்டு தங்குமிடமாகவும் விளங்குவது = ஆலமரம்.

ஆலமரத்தைக் குறிப்பதற்கு நாற்பது பெயர்கள் இதுவரை அறியப்பட்டுள்ளன. அவை யாவும் அகரவரிசைப்படி அமைக்கப்பட்டு கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

அவரோகி,அன்னபம்,அன்னயம்,ஆல்,ஆலம்,இயக்குரோதம்,இரத்தப்பலம்,உலூகலம்,ஏகவாசம்,

ககவசுகம்,கல்லால்,காதவம்,காமரம்,கான்மரம்,கோளி,சடாலம்,சபம்,சம்புச்சயனம்,சிபாருகம்,

சிவாருகம்,தொன்மரம்,நதீவடம்,நிக்குரோதம்,நியக்குரோதம்,நெக்குரோதம்,பழுமரம்,பாலி,

பூகேசம்,பூதக்குயம்,பூதவம்,மகாச்சாயம்,முதுமரம்,யககதரு,யக்கவாசம்,யமப்பிரியம்,வடம்,

வடல்,வானோங்கி,விருகற்பாதம்,வைச்சிரவனாலயம்.

மேற்காணும் பெயர்களில் ஆல், ஆலம், கோளி, பழுமரம், முதுமரம் ஆகிய பெயர்களே சங்க இலக்கியத்தில் பயன்படுத்தப் பட்டுள்ளன.

ஆலமரம் – பண்புகள்:

ஆலமரத்தைப் பற்றிப் பலவகையான புதிய செய்திகளைச் சங்க இலக்கியம் கூறியுள்ளது. அவற்றை தனித்தனித் தலைப்புக்களின் கீழ் பாடல்களுடன் விரிவாகக் காணும் முன்னர் சுருக்கமாக கீழே காணலாம்.

ஆலமரத்தின் தண்டுகள் பலவாகக் கிளைத்து உயரமாகவும் அகலமாகவும் வளரும். இளங்கிளைகளின் பட்டையானது நெய்யில் தோய்ந்த பசுந்தோல் போல தடித்துப் பளபளப்புடன் இருக்கும். வயதான ஆலமரத் தண்டில் பொந்துகள் காணப்படும். ஆலமரத்தின் தண்டு வலுவிழந்து இற்றுப் போனாலும் கீழே சாயாதபடிக்கு அதன் விழுதுகள் தாங்கி நிற்கும். பல நூறு ஆண்டுகள் வரையிலும் உயிர் வாழக் கூடிய ஆலமரத்தின் கொழுந்து இலைகள் தீயைப் போலச் சிவந்து தோன்றும். இலைகள் பெரிதாகவும் செறிந்தும் இருப்பதால் ஆலமரத்தின் கீழே மிகப்பெரிய குளிர்ச்சியான நிழல் எப்போதும் இருக்கும். சங்ககாலத் தமிழர்கள் தாது எரு மன்றங்களையும் களரிகளையும் இம்மரத்தின் நிழலில் அமைத்திருந்த செய்தி கூறப்பட்டுள்ளது. ஆலமரத்தின் பூக்களுக்குக் கோளி என்று பெயர். இப் பூக்கள் மலராமல் உட்புறமாகவே மகரந்தச் சேர்க்கை நடைபெறும். ஆலமரத்தின் கனிகள் சிறிய உருண்டை வடிவில் சிவப்பு நிறத்தில் சுவையாக இருக்கும்.  இக் கனிகளை உண்பதற்காக ஏராளமான பறவைகள் வந்து தங்கும். இதனால் ஆலமரத்தில் பறவைகளின் ஒலியானது எப்போதும் கேட்டுக்கொண்டே இருக்கும். சங்ககாலத் தமிழர்கள் ஆலமரத்தில் தெய்வம் உறைவதாக நம்பி வழிபட்டனர்.


தண்டு:

ஆலமரத்தின் தண்டானது உயரமாக வளர்வதில்லை. சிறிது உயரத்திலேயே பல கிளைகளாகப் பிரிந்து உயரமாக வளரத் தொடங்கும். ஆனால் தண்டுப் பகுதி மிகப் பெரியதாக அகலமாக பெருக்கத் தொடங்கும். நாலைந்து பேர் கட்டிப் பிடிக்கும் அளவுக்கு மிகப் பெரியதாக வளர்கின்ற தண்டின் அடிப்பகுதியில் இருந்து ஏராளமான வேர்கள் உருவாகிப் பூமிக்குள் புகுந்து மரத்துக்கு ஒரு வலுவான ஆதாரத்தை உண்டாக்கும். ஆலமரத்தின் வயது ஏற ஏற அதன் தண்டுப் பகுதி வலுவிழந்து இற்றுப் போகும். பல சமயங்களில் அதில் பெரிய பெரிய பொந்துக்களும் உருவாகும். இதைப்பற்றிக் கூறும் .சங்க இலக்கியப் பாடல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

நிலம் பக வீழ்ந்த அலங்கல் பல்வேர் முது மரப் பொத்தின் – புறம். 364

முழுமுதல் தொலைந்த கோளி ஆலத்து கொழுநிழல் நெடுஞ்சினை – புறம். 58

ஆலமரத்தின் இளங்கிளைகளை மூடியிருக்கும் பட்டைகள் ஈரமான பசுந்தோலை நெய்யிலே தோய்த்ததைப் போல தடிப்புடனும் பளபளப்புடனும் தோன்றும். இதைப்பற்றிக் கூறும் சங்கப் பாடல் கீழே:

பசை படு பச்சை நெய் தோய்த்து அன்ன

சேய் உயர் சினைய …….. முது மரம் – அகம். 244


விழுது:

ஆலமரத்தின் சிறப்பே அதன் தொங்குகின்ற விழுதுகள் தான். கிளைகளில் இருந்து வேர்களைப் போல உருவாகிக் கீழ் நோக்கி நீண்டு வளர்ந்து பூமியைத் தொட்டு உள்ளே புகுந்து நிலைபெற்றுப் பெரிதாக வளர்கின்ற உறுப்புக்களே விழுதுகள் ஆகும். ஆல மரங்களின் கிளைகள் தோறும் ஏராளமான விழுதுகள் தொங்கிக் கொண்டிருக்கும். ஆலமரங்களின் விழுதுகள் பற்றிக் கூறுகின்ற சங்க இலக்கியப் பாடல்களில் சில கீழே:

நெடு வீழ் இட்ட கடவுள் ஆலத்து – நற். 343

பொரி அரை ஆலத்து ஒரு தனி நெடு வீழ் – அகம். 287

பிணி வீழ் ஆலத்து அலங்கு சினை ஏறி – அகம். 319

அத்த ஆலத்து அலந்தலை நெடு வீழ் – அகம். 385

பல் வீழ் ஆலம் – புறம். 70

மரங்களிலேயே அதிக ஆண்டுகள் வாழக்கூடியது ஆலமரம் மட்டுமே. ஆலமரமானது பல நூறு ஆண்டுகள் வரையிலும் வாழக் கூடியது. சென்னை அடையாறில் இருந்த ஆலமரத்தின் வயது 450 ஆண்டுகளாகக் கூறப்படுகிறது. மத்தியபிரதேசம் சாகரில் இருந்த ஆலமரத்தின் வயது 1000 ஆண்டுகள் என்று கூறப்படுகின்றது (1). ஆலமரம் மிக அதிக வயதுடையது என்பதைக் கூறும் சங்கப் பாடல்கள் கீழே:

தொன் மூதாலத்து – அகம். 251, குறு. 15

மரங்களிலேயே அதிக ஆண்டுகள் வாழக்கூடியது மட்டுமின்றி அதிக பரப்பளவில் கிளைகளை உருவாக்கி நிழல் தருகின்ற ஒரே மரமும் ஆலமரம் தான். மூன்றரை ஏக்கர் பரப்பளவில் வளர்ந்துள்ள ஆலமரம் மகாராட்டிரத்தில் புனே – நாசிக் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. 95 அடி உயரத்தில் மூன்று ஏக்கர் பரப்பளவில் வளர்ந்திருக்கும் பெரிய ஆலமரம் பெங்களூருக்கு அருகில் உள்ளது (1).. ஆலமரத்திற்கு இத்தனை பெரிய பரப்பும் மிக அதிகமான வயதும் சாத்தியம் ஆவதற்குக் காரணமே அதன் விழுதுகள் தான். தாய் ஆலமரத்தின் தண்டானது வயது முதிர்வால் இற்றுப்போய் விட்டாலும் மரத்தைக் கீழே விழாதபடிக்குக் காப்பாற்றித் தாங்கி நிற்பவை அதன் விழுதுகள் தான். அதுமட்டுமின்றி, தரையைத் தொட்டு வளரும் ஒவ்வொரு விழுதும் தாய் மரத்தைப் போல பல கிளைகளை உருவாக்குவதால் ஆலமரக் கிளைகளின் பரப்பளவு பெரிதாகிக் கொண்டே செல்கிறது.

பூமியில் ஊன்றி வளரும் ஆலமர விழுதுகள் தாய்மரத்தைப் போலவே நிழல் மற்றும் கனிகளைத் தருவதைப் போல மன்னனும் தமது மூதாதையர் செய்த நன்மைகளைக் கைவிடாமல் தானும் தொடர்ந்தான் என்று ஆலமரத்துடன் ஒப்பிட்டுக் கூறுகின்ற சங்கப் பாடல் வரிகள் கீழே:

முழுமுதல் தொலைந்த கோளி ஆலத்து

கொழு நிழல் நெடும் சினை வீழ் பொறுத்து ஆங்கு

தொல்லோர் மாய்ந்து என துளங்கல் செல்லாது

நல் இசை முது குடி நடுக்கு அற தழீஇ – புறம். 58


இலை:

ஆலமரத்தின் கீழே நல்ல நிழல் இருக்கும் என்று மேலே கண்டோம். அதற்குக் காரணம் ஆல மரத்தின் இலைகள் தான். ஆல மரத்தின் கொழுந்து இலைகள் தீயின் நிறத்தில் பளபளப்புடன் இருக்கும் என்று கீழ்க்காணும் சங்கப் பாடல் கூறுகிறது.

அழல் புரை குழை கொழு நிழல் தரும் பல சினை ஆலமும் – பரி. 4

ஆலமரத்தின் இலைகள் பெரிதாகவும் செறிந்தும் இருக்கும். இதன் கீழே பெரிய அளவிலான குளிர்ந்த நிழல் இருப்பதால் வழிப்போக்கர்கள் பயணத்தின்போது இடையில் தங்கி இளைப்பாறினர். ஆடுமாடுகளை எருவுக்காகக் கட்டிவைக்கின்ற தாது எரு மன்றமும் ஆலமரத்தின் நிழலில் அமைக்கப்பட்டிருந்தது. நூல் கல்வி மட்டுமல்லாது வில்வித்தை, மல்யுத்தம், வாட்போர் முதலான சண்டைப் பயிற்சிகளும் இம்மரத்தின் நிழலில் நடைபெற்றது. இதைப்பற்றிக் கூறும் சில சங்கப் பாடல்கள் கீழே:

ஆல நீழல் அசைவு நீக்கி – நற்.76

தாது எரு மறுகின் ஆ புறம் தீண்டும்

நெடு வீழ் இட்ட கடவுள் ஆலத்து  – நற். 343

முது மரத்த முரண் களரி – பட். 59


பூ:

பிற மரங்களைப் போலன்றி ஆலமரத்தின் பூக்கள் மலர்வதில்லை. ஆலமரத்தின் பூக்கள் கொழுத்த இதழ்களால் மூடப்பட்ட சிறிய குடம் போன்ற மலருக்கு உள்ளே இருக்கும். இந்த உறுப்புக்குக் கோளி என்று பெயர். கோளியின் நுனியில் சிறிய ஓட்டை இருக்கும். இதன் வழியாக சிறு பூச்சிகள் உள்ளே சென்று மகரந்த சேர்க்கை செய்யும். ஆலமரத்தின் கோளியைப் பற்றிக் கூறும் சங்க இலக்கியப் பாடல்கள் கீழே தரப்பட்டுள்ளன.

 கொழு மென் சினைய கோளியுள்ளும் – பெரும். 407

கோளி ஆலத்து – மலை. 268, புறம். 58, புறம். 254


கனி:

ஆலமரத்தின் கனிகள் நல்ல சிவப்பு நிறத்தில் சிறிய உருண்டைகளாக இருக்கும். கனிகளுக்கு உள்ளே மிகச்சிறிய விதைகள் ஏராளமாகப் பொதிந்திருக்கும். ஆலமரத்தின் கனிகள் சிவப்பாக உருண்டையாக இருந்ததால் அவை பார்ப்பதற்கு புதிய சிறிய மட்கலங்களைப் போலத் தோன்றியதாகக் கீழ்க்காணும் சங்கப்பாடல் கூறுகிறது.

புது கலத்து அன்ன கனிய ஆலம் – ஐங்கு. 353

ஆலமரத்தின் கனிகள் சுவையானவை என்பதால் அவற்றை உண்பதற்காக காகம், கிளி, வவ்வால் உள்ளிட்ட ஏராளமான பறவைகள் ஆலமரத்திற்குப் படையெடுக்கும். இதனால் ஆலமரத்தில் பறவைகளின் ஒலியானது எப்போதும் கேட்டுக் கொண்டே இருக்கும். ஆலமரத்தில் பறவைகள் தங்கும்போதும் உண்ணும்போதும் எழுப்புகின்ற ஒலியைப் பற்றிக் கூறும் சில சங்கப்பாடல்கள் கீழே:

ஆலத்து கூடு இயத்து அன்ன குரல் புணர் புள்ளின் – மலை. 268

கோளி ஆலத்து புள் ஆர் யாணர்த்து – புறம். 254

இழுமென் புள்ளின் ஈண்டு கிளை தொழுதி

கொழு மென் சினைய கோளியுள்ளும் – பெரும். 407

யாணர் பழு மரம் புள் இமிழ்ந்து அன்ன – புறம். 173

கடவுள் ஆலத்து தடவு சினை பல் பழம்

நெருநல் உண்டனம் என்னாது பின்னும்

செலவு ஆனாவே கலி கொள் புள்ளினம் – புறம். 199

முடிவுரை:

ஆலமரம் அதிக ஆண்டுகள் நீடித்து வாழ்வதாலும் அதன் மிகப் பெரிய பரப்பினாலும் அதனில் தெய்வம் உறைவதாக எண்ணி வழிபட்டனர் சங்ககாலத் தமிழர்கள். கீழ்க்காணும் பாடல்களில் வரும் கடவுள் ஆலம் / கடவுள் முதுமரம் என்ற சொற்கள் இதை உறுதிசெய்கின்றன.

நெடு வீழ் இட்ட கடவுள் ஆலத்து – நற். 343

கடவுள் முது மரத்து – நற்.  83

அதுமட்டுமின்றி, உயிரைப் பணயம் வைத்து வீரமே தலையாகக் கொண்டு காளைகளுடன் போரிடுகின்ற சல்லிக்கட்டு விளையாட்டிற்குச் செல்வதற்கு முன்னரும் ஆலமரத்தைத் தொழுது வணங்கிவிட்டே சென்றனர் என்று கீழ்க்காணும் கலிப்பாடல் கூறுகிறது.

 ஆலமும் தொல் வலி மராஅமும்

முறையுளி பராஅய் பாய்ந்தனர் தொழூஉ – கலி. 101

குரங்குகள் உட்பட ஏராளமான பறவைகளின் கூடாரமாகவும் உணவுக்கான ஆதாரமாகவும் நிழல் தரும் இயற்கைக் கட்டிடமாகவும் பல நூறு ஆண்டுகளாக வாழ்ந்து இவ் உலகில் புகழ்பெற்று மடிகின்ற ஆலமரத்தை நாமும் வளர்ப்போம் ! பாதுகாப்போம். !!

ஆதாரம் / மேற்கோள்கள்:

(1)  https://en.wikipedia.org/wiki/List_of_Banyan_trees_in_India

சனி, 11 செப்டம்பர், 2021

4 - வேப்ப மரம் ( சங்க இலக்கியத்தில் தாவரவியல் )

முன்னுரை:

வேம்பு என்றதுமே அதன் குளுமையான நிழலே நினைவுக்கு வரும். கொளுத்தும் வெயிலில் இருந்து தப்பிக்க வேப்ப மரங்களை விட்டால் வேறு மரமில்லை. வெளி வெப்பத்தை மட்டுமின்றி உடலுக்கு உள்ளே உண்டாகும் காய்ச்சல் வெப்பத்தையும் குறைக்கும் ஆற்றல் வேம்புக்கு உண்டு. உடலெல்லாம் கொப்புளமாகக் காணும் அம்மை நோயின் தாக்கத்தைக் குறைக்க வேப்பிலை நீரால் குளிப்பாட்டுவது இன்றளவும் வழக்கமே. இலை, பூ, காய், பழம், பட்டை என்று பலவகையிலும் மருந்துப் பொருளாகப் பயன்பட்டு வருகின்ற வேப்ப மரத்தைப் பற்றிச் சங்க இலக்கிய நூல்கள் கூறியுள்ள பல்வேறு செய்திகளை இங்கே காணலாம்.

வேம்பு – பூர்வீகமும் பெயரும்:

வேப்ப மரமானது இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டது என்பதனை அதன் தாவரவியல் பெயரான அசடிரச்த இண்டிகா ( AZADIRACHTA INDICA ) என்பதில் உள்ள இண்டிகா என்ற பெயரே உறுதி செய்து விடுகின்றது. இந்தியாவிலும் குறிப்பாகத் தமிழ்நாட்டுக்கு உரியதாகவே இருக்கவேண்டும் என்று தோன்றுகிறது. காரணம், அப் பெயரின் முன்னால் உள்ள அசடிரச்த என்பதே.

வெப்பத்தில் இருந்து பாதுகாப்பது என்ற பொருளுடைய அழற்றிரசிதம் என்னும் தமிழ்ப்பெயரே அசடிரச்த என்று திரிந்து வழங்குகின்றது.

அழற்றி (=தீ, வெப்பம்) + இரசிதம் (=பாதுகாப்பு) = அழற்றிரசிதம் >>> அசட்டிரசிதம் >>> அசடிரச்த = வெப்பத்தில் இருந்து பாதுகாப்பது.

வேப்பமரத்தைக் குறிப்பதற்கு நாற்பத்தி ஏழு பெயர்கள் இதுவரையிலும் அறியப்பட்டுள்ளன. அப்பெயர்கள் யாவும் அகரவரிசை முறைப்படி அமைக்கப்பட்டு கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

அகளுதி,அகுளூதி,அதிபம்,அரிசு,அரிட்டம்,அரிடம்,அரிநிம்பம்,அருட்டம்,அருணாதி,

அருளுறுதி,அழற்றிரசிதம்,அறிட்டம்,உக்கிரகந்தம்,கசப்பி,கடிப்பகை,கயிடரியம்,கிஞ்சி,

கேசமுட்டி,கோடரவாலி,கௌரியம்,சங்குமரு,சத்தி,சாவாமூலி,சீரிணபன்னம்,நலதம்பு,

நிம்பம்,நியாசம்,பன்னகந்தி,பார்வதம்,பாரிபத்திரம்,பாரியம்,பிசாசப்பிரியம்,பிசிதம்,

பிசுமந்தம்,பூமாரி,பூயாரி,மாலகம்,வச்சரி,வச்சிரநிம்பம்,வருட்டம்,வாதாரி,விசிமந்தம்,

விசுமிகினி,விருக்காதனி,விருந்தம்,வேப்பம்,வேம்பு.

மேற்காணும் பெயர்களில் வேப்பம், வேம்பு  என்ற பெயர்கள் மட்டுமே சங்க இலக்கியப் பாடல்களில் பயிலப்பட்டு உள்ளன.

வேம்பு – பண்புகள்:

வேப்ப மரத்தின் பண்புகளாகச் சங்க இலக்கியம் கூறியுள்ள பல்வேறு செய்திகளின் சுருக்கத்தை இங்கே காணலாம்.

வேப்பமரத்தின் தண்டும் கிளைகளும் கருநிறம் கொண்டவை. தண்டுகள் மேகங்களைத் தொட முயல்வதைப் போல மிக உயரமாக வளரக் கூடியவை. சில மரங்களின் அடிப்பகுதி பெருத்து வளர்ந்திருக்கும். இதனைப் பராரை என்று சங்க இலக்கியம் குறிப்பிடுகிறது. சங்ககாலத் தமிழர்கள் வேப்பமரத்தில் தெய்வம் உறைவதாக எண்ணி உயிர்ப்பலி கொடுத்து வணங்கினர். வேம்பின் இலைகள் சிறிதாகவும் பக்கங்களில் அரம்போன்ற பற்களைக் கொண்டதாகவும் இருக்கும். இலைக்கொழுந்துகள் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். இலைகள் செறிந்து இருப்பதால் மரத்தின் கீழே அடர்ந்த நிழல் இருக்கும். வேம்பின் பூக்கள் வெண்மையாகச் சிறிதாக இருக்கும். பலத்த காற்று வீசும்போது மரங்களில் இருந்து இப் பூக்கள் மழைச்சாரல் போல உதிர்ந்து விழும். வேப்பம் பூவின் மொட்டுக்கள் சிறிய உருளை வடிவில் இருக்கும். இதனை நண்டின் கண்களுடன் ஒப்பிட்டுக் கூறுகிறது சங்க இலக்கியம்.

வேப்பங்காய்கள் பச்சை நிறத்தில் அதிக கசப்புச் சுவையுடன் இருக்கும். பழுத்தவுடன் மஞ்சள் நிறம் பெற்று இலேசான கசப்புடன் இருக்கும். இப் பழங்களைக் கிளி, வவ்வால் உள்ளிட்ட பல பறவைகள் உண்ணும். கிளியின் அலகில் இருக்கும் மஞ்சள்நிற வேப்பம் பழத்தைக் கொல்லன் தனது குறட்டின் நடுவில் பிடித்த தங்கக்காசுடன் ஒப்பிட்டுக் கூறுகின்ற சங்க இலக்கியமானது. ஊர்த் தலைவன் இறந்தால் அந்த ஊர் மக்கள் அனைவரும் ஒன்றுகூடிச் செய்யும் இறப்புச் சடங்கில் வேப்பிலைக்கு இருந்த பங்கினையும் விரிவாகப் பதிவுசெய்துள்ளது. மூவேந்தர்களில் ஒருவரான பாண்டிய மன்னர்கள் வேம்பின் பூக்களை மாலையாகத் தொடுத்து அணிந்ததும் போருக்குச் செல்லும் முன் வேல்களின் தண்டில் வேப்பிலைகளைக் கட்டியதும் கூறப்பட்டுள்ளது. இனி, இந்தச் செய்திகள் அனைத்தையும் தனித்தனித் தலைப்புக்களின் கீழ் விரிவாகப் பார்க்கலாம்.


தண்டு:

வேப்பமரத்தின் தண்டும் கிளைகளும் கருநிறம் கொண்டவை. சில மரங்களின் தண்டுகள் நூறு அடி உயரம் கூட வளரும். இதுபற்றிக் கூறும் சில சங்க இலக்கியப் பாடல்களைக் கீழே காணலாம்.

கரும் கால் வேம்பின் – குறு. 24

கரும் சினை வேம்பின் – புறம். 45

வான் பொரு நெடும் சினை பொரி அரை வேம்பின் – நற். 3

மன்ற வேம்பின் மா சினை  – புறம். 76

கரும் சினை விறல் வேம்பு – பதி. 49

சில வேப்ப மரங்களின் தண்டுகள் அடியில் பெருத்து இருக்கும். இத்தகைய பெருத்த அடிப்பகுதியை பராரை என்று கூறுவர். இந்தப் பராரைகளின் சுற்றளவு பத்து அடி வரையிலும் கூட இருக்கும். பராரை கொண்ட வேப்ப மரங்களைப் பற்றிக் கூறும் சங்கப் பாடல்கள் கீழே:

பராரை வேம்பில் – அகம். 309

பாரிய பராரை வேம்பின் – நற். 218

திரள் அரை மன்ற வேம்பின் – புறம். 76


இலை:

வேப்ப மரத்தின் இலைகள் சிறியவை. இதைப்பற்றிக் கூறும் சங்கப் பாடல்களில் சில மட்டும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

புன் கால் சிறியிலை வேம்பின் – நற். 103

சிறியிலை குறும் சினை வேம்பின்  – ஐங்கு. 339

வேப்ப மரத்து இலைகளின் விளிம்பில் அரத்தில் இருப்பதைப் போன்ற கூரிய பல பற்கள் வரிசையாய் அமைந்திருக்கும். இதனால் இதனை அரவாய் வேம்பு என்று கூறுகிறார் புலவர் கீழ்க்காணும் சங்கப் பாடலில்.

கரும் சினை அர வாய் வேம்பின் – பொரு. 144

மாமரத்தின் இளந்தளிர்களைப் போலவே வேப்ப மரத்தின் இலைக் கொழுந்துகளும் இளஞ்சிவப்பு நிறத்தில் அழகாகத் தோன்றும். இதனை ஒண் தளிர் / ஒண் குழை என்ற சொற்களால் கீழ்க்காணும் பாடல்கள் குறிப்பிடுகின்றன.

மன்ற வேம்பின் மா சினை ஒண் தளிர் – புறம். 76

வேம்பின் ஒண் தளிர் - புறம் 77

மன்ற வேம்பின் ஒண் குழை - புறம் 79

வேப்ப மரத்தின் இலைகள் சிறியதாக இருந்தாலும் மிகுதியாகவும் அடர்த்தியாகவும் செறிந்து இருக்கும். கீழ்க்காணும் பாடலில் வரும் வெறி என்ற சொல் இதை உறுதி செய்கிறது,

வேம்பின் வெறி கொள் பாசிலை – அகம். 138

இலைகள் அடர்த்தியாக இருப்பதால் வேப்பமரத்தின் கீழ் எப்போதும் குளிர்ச்சியான நிழல் இருக்கும். இந்த நிழல் அடர்த்தியானது என்பதனைப் புள்ளி நீழல் என்ற சொல்லினால் கீழ்க்காணும் பாடல் உறுதிசெய்கிறது.

பொரி அரை வேம்பின் புள்ளி நீழல் - நற் 3


பூ:

வேப்ப மரத்தின் பூக்கள் சிறிய அளவினதாக வெண்ணிறத்தில் பூக்கும். இதனை ஒண்பூ / ஒண்குழை / வான்பூ என்ற சொற்களால் கீழ்க்காணும் சங்க இலக்கியப் பாடல்கள் குறிப்பிடுகின்றன.

கரும் கால் வேம்பின் ஒண் பூ யாணர் – குறு. 24

அத்த வேம்பின் அமலை வான் பூ – குறு. 281

மன்ற வேம்பின் ஒண் குழை மிலைந்து – புறம். 79

வெண்மை நிறமுடைய வேப்பம் பூக்கள் காற்று பலமாக வீசும்போது  பொலபொலவென உதிரும். இக் காட்சியானது பார்ப்பதற்கு மழைத்துளிகள் (உறை) பொழிவதைப் போலத் தோன்றும். இதைப்பற்றிக் கூறும் சில சங்கப் பாடல்களைக் கீழே காணலாம்.

வேம்பின் ஒண் பூ உறைப்ப – ஐங்கு. 350

மன்ற வேம்பின் ஒண் பூ உறைப்ப – புறம். 371

வேப்பம்பூக்களின் மொட்டுக்கள் மிகச் சிறியதாக உருளை வடிவில் உயர நோக்கிய நிலையில் இருக்கும். இவை பார்ப்பதற்கு நண்டின் கண்களைப் போலத் தோன்றுவதாகக் கீழ்க்காணும் சங்கப் பாடல்கள் கூறுகின்றன.

வேப்பு நனை அன்ன நெடும் கண் களவன் – ஐங்கு. 30

வேப்பு நனை அன்ன நெடும் கண் நீர் ஞெண்டு – அகம். 176


காய்:

வேப்பமரங்கள் கோடை காலத்தில் தான் பூப்பூத்துக் காய்க்கத் தொடங்கும். இதைப் பற்றிக் கூறும் சங்கப் பாடல் கீழே:

வேம்பின் காய் திரங்க கயம் களியும் கோடை – புறம். 389

வேம்பின்  காய்கள் பச்சை நிறமும் அதிக கசப்புச் சுவையும் கொண்டவை. ஆனால் காதலியின் கையால் கொடுக்கப்பட்ட வேப்பங்காயோ இனிப்புக் கட்டியாய் இனித்தது என்று தலைவன் கூறும் சங்க இலக்கியப் பாடல் கீழே:

வேம்பின் பைம் காய் என் தோழி தரினே

தேம் பூம் கட்டி என்றனிர் – குறு. 196


கனி:

பசுமையாகத் தோன்றும் வேப்பமரத்தின் காய்கள் கனிந்ததும் மஞ்சள் நிறத்தில் அழகாக ஒளிரும். கனியின் உள்ளே இலேசான கசப்புடைய வெண்மை / வெளிர்மஞ்சள் நிறக் கூழ் போன்ற சதையும் வலுவான கொட்டையும் இருக்கும். வேப்பம் பழங்களைக் கிளி உட்பட பல பறவைகள் உண்ணும். இவற்றுள் குறிப்பாக வவ்வால் பறவைகள் வேப்பம் பழங்களை விரும்பி உண்ட செய்தியைக் கீழ்க்காணும் சங்கப் பாடல்கள் வாயிலாக அறியலாம்.

வேம்பின் நறும் பழம் உணீஇய வாவல் உகக்கும் – ஐங்கு. 339

வேம்பின் ஒண் பழம் முணைஇ இருப்பை

தேம் பால் செற்ற தீம் பழம் நசைஇ

வைகு பனி உழந்த வாவல் – நற். 279

வேப்பமரக் கிளையொன்றில் அமர்ந்திருந்த பச்சைக்கிளி ஒன்று தனது கருப்பான வளைந்த அலகினால் மஞ்சள் நிறத்திலிருந்த பெரிய வேப்பம் பழம் ஒன்றைக் கவ்வி எடுத்து உண்ண முயன்று அதை அலகிற்குள் அசைக்கிறது. இக் காட்சியானது பார்ப்பதற்கு, புதிய நூலை நுழைப்பதற்காகக் கருப்பான குறட்டின் நாக்குகளுக்கு நடுவே பிடிக்கப்பட்ட தங்கக்காசு போலத் தோன்றியதாகக் கீழ்க்காணும் சங்கப்பாடலில் கூறப்பட்டுள்ளது.

கிள்ளை வளை வாய் கொண்ட வேப்ப ஒண் பழம்

புது நாண் நுழைப்பான் நுதி மாண் வள் உகிர்

பொலம் கல ஒரு காசு ஏய்க்கும் – குறு.67

வேப்பமரமும் சடங்குகளும்:

வேப்ப மரத்தை மாரியம்மன் என்னும் கடவுளாக இன்றளவும் தமிழர்கள் வழிபட்டு வருவதை நாம் அறிவோம். இப் பழக்கம் இன்று நேற்றல்ல, சங்க காலத்தில் இருந்து தொடர்ந்து வரும் பழக்கமே என்று அறியும்போது வியப்பு மேலிடும். பருத்த அடிப்பகுதியைக் கொண்ட ஒரு வேப்பமரத்தில் தெய்வம் உறைவதாக நம்பிய மக்கள் கொழுத்த மாட்டினை அதற்குப் பலிகொடுத்து அந்த மாட்டின் இரத்தத்தை அம் மரத்தின்மேல் தூவி வழிபட்டனர். பின்னர் அந்த மாட்டிறைச்சியைப் புழுக்கி உணவாக உண்டனர். இச்செய்தியைக் கூறும் சங்க இலக்கியப் பாடலைக் கீழே காணலாம்.

தெய்வம் சேர்ந்த பராரை வேம்பில்

கொழுப்பு ஆ எறிந்து குருதி தூஉய்

புலவு புழுக்கு உண்ட வான் கண் அகல் அறை – அகம். 309

சங்க காலத்தில் ஒரு ஊரின் மக்களைப் பகைவர்களிடம் இருந்து போரிட்டுக் காப்பாற்றுபவனே தலைவனாக / குறுநில மன்னனாகக் கருதப்பட்டான். இந்நிலையில், இத் தலைவன் போரில் இறந்துவிட்டால் அந்த ஊர் மொத்தமும் அவனுக்காக இறப்புச் சடங்கினைப் பின்பற்றுகிறது. சங்க காலத்தில் வேந்தனுக்காகப் போரிடச் சென்ற குறுநில மன்னன் ஒருவன் போரின்போது வேந்தனைக் காப்பாற்றுவதற்காகத் தனது மார்பில் வேலினைத் தாங்கி இறந்துபட்டான். அவனது இறப்புக்காக அந்த ஊர்மக்களால் பின்பற்றப்பட்ட  சடங்குமுறையைக் கீழே காணலாம்.

ஊரில் உள்ள அனைத்து வீடுகளின் கூரையின் முற்பகுதியில் வேப்பமரத்தின் இலைகள் மற்றும் இரவ மர இலைகளைச் செருகுவர். வளைந்த தண்டினைக் கொண்ட யாழுடன் மேலும் பல வாத்தியங்களில் சோக கீதத்தை இசைப்பர். தீயை மெதுவாகக் கிளறி அதன்மேல் ஆட்டுக் கொழுப்பைப் பரப்பி உருக்கி அதில் ஐயவி என்னும் வெண்சிறு கடுகுகளை இட்டுப் புகை மூட்டுவர். ஆம்பல் என்னும் சங்கினை ஊதியும் இசைமணி என்னும் இரும்புத் தகட்டுப் பறையினை அடித்தும் ஒலி எழுப்புவர். அனைவரும் ஒன்று சேர்ந்து காஞ்சி என்னும் வாழ்க்கை நிலையாமைப் பாடலைப் பாடுவர். இறுதியாக, பிணத்தை எடுத்துக்கொண்டு நகரின் எல்லையில் இருக்கும் சுடுகாடு வரையிலும் வாசம் மிக்க ஐயவிப் புகையைப் பரப்பியவாறே சென்றடைவர். அவர்கள் சென்று அடைவதற்குள் அந்த நெடுந்தகையின் காயம்பட்ட உடலைச் சென்று காண்போம் வா என்று தோழியை அழைப்பதாகக் கீழ்க்காணும் புறநானூற்றுப் பாடல் இறப்புச் சடங்கு முறையினை அழகாகப் பதிவு செய்துள்ளது.

தீம் கனி இரவமொடு வேம்பு மனை செரீஇ

வாங்கு மருப்பு யாழொடு பல் இயம் கறங்க

கை பய பெயர்த்து மை இழுது இழுகி

ஐயவி சிதறி ஆம்பல் ஊதி

இசை மணி எறிந்து காஞ்சி பாடி

நெடு நகர் வரைப்பின் கடி நறை புகைஇ

காக்கம் வம்மோ காதல் அம் தோழீ

வேந்து உறு விழுமம் தாங்கிய

பூம் பொறி கழல் கால் நெடுந்தகை புண்ணே – புறம். 281

மேற்காணும் இறப்புச் சடங்கு முறையினை சற்று சுருக்கமாக இன்னொரு புறப்பாடலும் பதிவு செய்துள்ளது. வேப்ப மரத்தின் கிளைகளை ஒடிக்கவும் காஞ்சியைப் பாடவும் எண்ணையில் ஐயவியை இட்டுப் புகை மூட்டவும் எல்லா வீடுகளிலும் கல் என்ற அழுகை ஒலி எழவும் போரிலே நெடுந்தகை இறந்துபட்டான். அதோ தூரத்தில் அவனது தேர் மட்டும் வருகின்றது. இனி வேந்தனால் பகைவரை எதிர்த்து அழிக்க முடியுமோ?. என்ற பொருளில் கீழ்க்காணும் புறநானூற்றுப் பாடல் கூறுவதைப் பார்க்கலாம்.

வேம்பு சினை ஒடிப்பவும் காஞ்சி பாடவும்

நெய் உடை கையர் ஐயவி புகைப்பவும்

எல்லா மனையும் கல்லென்றவ்வே

வேந்து உடன்று எறிவான்-கொல்லோ

நெடிது வந்தன்றால் நெடுந்தகை தேரே – புறம். 296

முடிவுரை:

மூவேந்தர்களில் ஒருவரான பாண்டிய மன்னர்கள் வேம்பின் பூக்களை மாலைகளாகத் தொடுத்து அணிந்தனர். இச் செய்தி கீழ்க்காணும் சங்கப் பாடல்களில் கூறப்பட்டுள்ளது..

அர வாய் வேம்பின் அம் குழை தெரியலும் - பொரு 144

கரும் சினை வேம்பின் தெரியலோன் அல்லன் - புறம் 45

அதுமட்டுமின்றி, போருக்குச் செல்லும் முன்னர் பாண்டியர்கள் தமது வேல்களின் தண்டுகளிலும் வேப்பிலைகளைக் கட்டினர் என்பதும் கீழ்க்காணும் பாடலில் கூறப்பட்டுள்ளது.

வேம்பு தலை யாத்த நோன் காழ் எஃகமொடு - நெடு 176.

குளுமையான நிழலைத் தருவதுடன் நோய் தீர்க்கும் மருந்தாகவும் பயன்படுகின்ற வேப்ப மரங்களை வீட்டைச் சுற்றிலும் நட்டு வைத்துப் பயன்பெறுவோமாக.