சனி, 23 நவம்பர், 2019

பழந்தமிழரின் காலப்பெயர் அமைப்புமுறை - பகுதி 1


முன்னுரை:

காலம் என்ற சொல்லுக்கு ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டுள்ள விளக்கமானது தமிழில் கவிதை வடிவில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நேற்றில் இருந்து
இன்று வழியாக
நாளையை நோக்கிப்
பயணிக்கும் நிகழ்வுகளின்
மீளாத் தொடர்ச்சியே
காலம் !!!

காலம் என்றால் என்ன?. என்று இணையத்தில் தமிழில் தேடியபோது இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்றே விடை வந்தது. காலத்தைப் பற்றிய தற்காலத் தமிழரின் சிந்தனை இவ்வளவுதான் போலும் என்றெண்ணி பழந்தமிழரின் அறிவு எத்தகையது என்று ஆராய்ந்தபொழுது பெரும் வியப்பே மேலிட்டது. காரணம், காலம் தொடர்பான அத்தனைப் பெயர்களையும் பழந்தமிழர்கள் அமைத்துள்ள முறைதான். இதைப்பற்றி இக் கட்டுரையில் விளக்கமாகக் காணலாம்.

காலத்தைப் பற்றிய பழந்தமிழர் கருத்து:

காலத்தைப் பற்றி முதன்முதலில் குறிப்பிடும் தமிழ்நூல் தொல்காப்பியம் தான். அதைத் தொடர்ந்து சங்க இலக்கியங்களிலும் காலமானது பல பாடல்களில் பேசப்பட்டுள்ளது. காலம் என்ற சொல்லை மட்டுமின்றி, காலம் தொடர்பான பல்வேறு பெயர்களையும் சங்க இலக்கியத்தில் காண முடிகிறது. சங்க இலக்கியப் பாடல்களில் காலத்தைப் பற்றிப் பேசியுள்ளார்களே அன்றி தெளிவான விளக்கம் காணக் கிடைக்கவில்லை.

முதன்முதலில் காலம் பற்றிய தெளிவான விளக்கத்தினைத் திருவள்ளுவரே முன்வைக்கிறார். நிலையாமை அதிகாரத்தில் கீழ்க்காணும் குறளில் காலம் பற்றிய கருத்தைக் கூறுகிறார் வள்ளுவர்.

நாள்என ஒன்றுபோல் காட்டி உயிர்ஈரும்
வாள்அது உணர்வார்ப் பெறின் – 334

மக்களின் பெரும்பாலான செயல்பாடுகள் நாள் சார்ந்தே இருப்பதால் நாள் என்ற சொல்லையே காலப்பெயராக இக்குறளில் பயன்படுத்துகிறார். இக் குறளுக்கான விளக்கம் கீழே:

நாளானது தன்னை ஒரேபொருளாகக் காட்டிக்கொண்டு மக்களின் உயிர்களை மெல்லமெல்ல அறுக்கும் எண்ணற்ற வாட்களாகத் தொடர்ந்து செயல்படுவதை அறிஞர்களே அறிவர்.

என்னவொரு தெளிவான விளக்கம் பாருங்கள். நாமெல்லாம் நாள் தானே என்று எளிதாக நினைத்துக் கொண்டிருப்பது உண்மையில் ஒரே பொருள் அல்ல; உடல்களில் இருந்து உயிரை மட்டும் தனியாக மெல்லமெல்ல அறுத்துக் கொண்டிருக்கின்ற கணக்கிலடங்காத வாள்களின் தொகுதி என்று கூறுகிறார். இதனைத் தாரண மக்களால் உணர்ந்துகொள்ள முடியாது என்றும் கூறுகிறார். எப்படி வள்ளுவருக்கு மட்டும் இப்படி ஒரு கருத்து தோன்றியது?. அவர் மாபெரும் அறிஞர் என்பதாலேயே எனலாம்.   

பழந்தமிழர்களின் காலப்பெயர் அமைப்புமுறை:

நிலையாமை அதிகாரத்தில் வருகின்ற 334 ஆம் குறளானது பழந்தமிழரின் காலம் பற்றிய அறிவினை மட்டும் வெளிப்படுத்தவில்லை. காலம் தொடர்பான பல்வேறு பெயர்களைப் பழந்தமிழர்கள் அமைத்திருக்கும் முறையினைப் பற்றியும் அது சுட்டிக் காட்டுகிறது.

நாள் என்பதை இடையறுத்துச் செல்லும் வாளாக இக் குறளில் கூறியிருப்பது வெறும் உவமைக்காக மட்டுமல்ல; காலம் எனப்படும் யாவும் இடையறுத்தல் வினையுடன் தொடர்புடையதே என்று வலியுறுத்தவும் தான். ஆராய்ந்து பார்க்கும்போது, காலம் தொடர்பான பெயர்கள் அனைத்துமே இடையறுத்தல் வினையுடன் தொடர்புடையனவாகவும் அதனுடன் ஒத்த பிற வினைகளின் அடிப்படையிலேயே அமைக்கப்பட்டனவாகவும் இருப்பது தெரிய வந்தது.

ஈரும்வாள் முறை:

காலம் தொடர்பான பல்வேறு பெயர்களைச் சூட்டுவதற்குப் பழந்தமிழர்கள் பயன்படுத்திய இந்த முறைக்கு ஒரு பெயர் வைத்தாக வேண்டும்.  திருக்குறளில் 334 ஆம் குறளில் இருந்தே இந்த முறையானது கண்டறியப்பட்டதாலும் அக்குறளில் வரும் ஈரும்வாள் என்பதே இந்த முறைக்கான ஊற்றுக்கண்ணாக அமைவதாலும் காலப்பெயர் சூட்டும் இந்த முறையினை ஈரும்வாள் முறை என்று அழைக்கலாம்.

ஈரும்வாள் முறையில் இடையறுத்தல் வினையே முகன்மையான வினையாகும். இடையறுத்தல் வினையில் பிரிவே விளைவாக இருப்பதால், பிரிவை உண்டாக்கும் அனைத்து வினைகளும் இடையறுத்தல் வினையுடன் தொடர்புடைய வினைகளாக அறியப்பட்டன. பிரிவையே விளைவாக உண்டாக்குகின்ற வினைகளைக் குறிக்கின்ற சில சொற்கள் மட்டும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

அறு, வெட்டு, பிள, பிரி, பங்கிடு, பகு, வகு, கிள்ளு, களை, நீங்கு, நீக்கு, ஒதுங்கு, ஒதுக்கு, விலகு, விலக்கு, இடைவிடு, கூறாகு, கூறாக்கு, துண்டாகு, துண்டாக்கு, கட, கழி, செல், செலுத்து, முறி, கழுவு, உதிர், செதுக்கு, கிண்டு.

தமிழில் காலப்பெயர்கள்:

தமிழ்மொழியில் உள்ள பல்வேறு காலப்பெயர்களைக் கீழ்க்காணுமாறு வகைப்படுத்தலாம்.

பெருங்கூறு: ஆண்டு, யாண்டு, வருடம், உகம், யுகம், ஊழி.

சிறுகூறு: நொடி, நிமிடம், நாழிகை, கடிகை, மணி, நாள், புலரி, வைகறை, காலை, பகல், அன்று, இன்று, நாளை, ஆனியம், ஓரை, திகதி, தியதி, தேதி, தியாலம், அகசு, தினம்.

பொதுக்கூறு: அகவை, வயது, ஆயுள், காலம், நேரம், பொழுது, ஞான்று, பருவம், கொன், பிராயம், வேளை, இறுது, தருணம், தறுவாய், தவணை, தாப்பு, தான்றி.

பழந்தமிழர்கள் மேற்காணும் காலப்பெயர்களை ஈரும்வாள் முறைப்படி மேலேகண்ட வினைச்சொற்களின் அடிப்படையில் தான் அமைத்துள்ளனர். இதைப் பற்றிக் கீழே விரிவாகக் காணலாம்.
 
ஆண்டு / யாண்டு :

12 மாதங்கள் அடங்கிய காலத்தைக் குறிக்கின்ற தமிழ்ப் பெயர்களில் ஆண்டு என்பதும் ஒன்றாகும். யாண்டு என்றும் குறிப்பிடப்படுவதான இது யாணுதல் என்ற வினையின் அடிப்படையாகப் பிறந்த பெயராகும். யாணுதல் என்னும் வினையானது செதுக்குதல், கழித்தல் பொருட்களில் பயன்பட்டுள்ளது. ஆண்டு என்ற காலப்பெயர் தோன்றிய முறை கீழே:

யாணு (= செதுக்கு, கழி) >>> யாண்டு >>> ஆண்டு

பி.கு: யாணுதல் என்ற சொல்லானது செதுக்குதல், கழித்தல் பொருட்களில் யாண்டு / ஆண்டைத் தவிர வேறு இரண்டு சொற்களையும் உருவாக்கியுள்ளது. அவை கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

யாணு (=செதுக்கு, கழி) >>> யாணர் = தச்சர், அழகு.

வருடம்:

12 திங்கள் அடங்கிய காலத்தைக் குறிக்கின்ற தமிழ்ப் பெயர்களில் வருடம் என்பதும் ஒன்றாகும். வருசம் என்றும் வழங்கப்படுவதான இச் சொல்லானது வருடுதல் வினையின் அடிப்படையில் பிறந்த சொல்லாகும். வருடுதல் என்ற சொல்லுக்குத் தடவுதல் என்று மட்டுமே தமிழ் அகராதிகள் பொருள் கூறியுள்ளன. ஆனால் வருடுதல் என்ற வினையானது வெட்டி நீக்குதல் என்ற பொருளிலும் பயன்பட்டுள்ளது. வருடம் என்ற காலப்பெயரின் தோற்றமுறை கீழே:

வருடு (=வெட்டிநீக்கு) >>> வருடம்.

பி.கு: வருடுதல் என்ற வினையின் அடிப்படையில் தோன்றிய இன்னொரு பெயர் வருடை ஆகும். உடல் முழுவதும் புசுபுசுவென்று மயிர்மூடிய செம்மறி ஆட்டின் பெயரே வருடை ஆகும். செம்மறி ஆடு என்றாலே அதன் அடர்த்தியான மயிர் தான் நினைவுக்கு வரும். இந்த ஆட்டின் உடலில் வளர்கின்ற மயிரானது அடிக்கடி வெட்டி நீக்கப்படுவதால் இந்த ஆட்டிற்கு வருடை என்ற பெயர் ஏற்பட்டது.

வருடு (=வெட்டி நீக்கு) >>> வருடை (வெட்டிநீக்கப்படும் மயிரை உடையது)

உகம் / யுகம் :

உகம் என்பது பெரியதொரு கால அளவாகப் பயன்படுத்தப் படுகின்ற ஒரு தமிழ்ச் சொல்லாகும். உகுதல் என்ற வினையின் அடிப்படையில் தோன்றிய உகமானது யுகம் என்றும் வழங்கப்படும். உகுதல் என்ற வினைச்சொல்லுக்கு உதிர்தல், கழிதல், நீங்குதல் என்ற பொருட்கள் உண்டு. உகம் என்ற சொல்லின் தோற்றமுறை கீழே:

உகு (=உதிர், நீங்கு) >>> உகம் >>> யுகம்

ஊழி:

காலப்பெயர்களில் மிகப் பெரிய அளவினதாகக் கருதப்படுபவற்றில் ஒன்றுதான் ஊழி என்ற தமிழ்ச் சொல்லாகும். உழுதல் என்ற வினையின் அடிப்படையில் தோன்றியதே ஊழி (1) என்ற பெயராகும். இப்பெயரின் தோற்றமுறை கீழே:

உழு (=கிண்டு, பிரி) >>> ஊழி (=வாழ்நாள், நெடுங்காலம்)

பி.கு: ஊழ்த்தல் என்ற வினையின் அடிப்படையில் ஊழி (2) என்ற பெயர் பிறக்கும். ஊழ்த்தல் என்பது முதிர்தல் / முடிவுறுதல் என்ற பொருளின் அடிப்படையில் ஊழி (2) என்பது முடிவுகாலம் / அழிவுகாலத்தைக் குறிக்கும்.

ஊழ் (=முதிர், முடிவுறு) >>> ஊழி ( =முடிவுகாலம், அழிவுகாலம்)

அகவை:

ஒருவரது வாழ்நாளைக் குறிக்கப் பயன்படும் தமிழ்ச் சொற்களில் ஒன்றுதான் அகவை என்பதாகும். அகைத்தல் என்ற வினையின் அடிப்படையில் தோன்றியதே அகவை ஆகும். அகைத்தல் என்றால் அறுத்தல், இடையறுத்தல் என்றெல்லாம் அகராதிப் பொருட்கள் உண்டு. அகவை என்னும் தமிழ்ப் பெயரின் தோற்றமுறை கீழே:

அகை (=அறு, இடையறு) >>> அகவை

வயது / வயசு :

வாழ்நாளைக் குறிக்கும் பல தமிழ்ச் சொற்களில் ஒன்றுதான் வயது என்பதாகும். வயசு என்றும் கூறப்படுவதான இது வைத்தல் என்ற வினையின் அடிப்படையில் தோன்றிய பெயராகும். வைத்தல் என்ற சொல்லுக்குக் காட்டப்படுகின்ற பல்வேறு அகராதிப் பொருட்களில் தனியாக ஒதுக்குதல் என்பது இங்கே குறிப்பிடத் தக்கதாகும். தனியாக ஒதுக்குதல் என்பது பல்வேறு பொருட்களின் தொகுதியில் இருந்து சிலவற்றை மட்டும் பிரித்துவைத்தல் ஆகும். இப் பொருளின் அடிப்படையில் தான் வயது என்ற சொல் தோன்றும்.

வய் (=ஒதுக்கு, பிரி) >>> வயது / வயசு.

பி.கு: ஒதுக்குதல் / பிரித்தல் பொருளில் வை (வய்) எனும் மூலத்தில் இருந்து வயது / வயசு மட்டுமின்றி வேறுபல தமிழ்ச் சொற்களும் தோன்றியுள்ளன.

வய் (=ஒதுக்கு, பிரி) >>> வை = வைக்கோல் ( பிரிக்கப்பட்டது )
வய் (=ஒதுக்கு, பிரி) >>> வயவை, வாய், வாசல் ( பிரிவுடையவை )

ஆயுள்:

ஆயுள் என்பது காலத்தைக் குறிப்பதான தமிழ்ச் சொல்லே ஆகும். ஆய் என்னும் வினையடியாய்ப் பிறந்த சொல்லாகும் இது. ஆய்தல் என்றால் பிரித்தெடுத்தல், களைதல் என்றெல்லாம் பொருட்கள் உண்டென்று தமிழ் அகராதிகள் காட்டுகின்றன. இச் சொல்லின் தோற்றமுறை கீழே:

ஆய் (= பிரித்தெடு, களை) >>> ஆயுள்

காலம்:

காலம் என்பதும் பொழுதைக் குறிப்பதான தமிழ்ச் சொல்லே ஆகும். கல்லுதல் என்ற வினையடியாய்ப் பிறக்கும் இச் சொல்லுக்குக் காலை, கால் என்பன வேறு வடிவங்கள் ஆகும். கல்லுதல் என்ற வினைச் சொல்லுக்கு வெட்டியெடுத்தல், துண்டாக்குதல் என்பன பொருட்களாகும். போகூழாய் இப் பொருள் தமிழ் அகராதிகளில் காட்டப்படவில்லை. இச்சொல்லின் தோற்றமுறை கீழே:

கல்லு (=வெட்டியெடு, துண்டாக்கு) >>> காலை, காலம், கால்.

பி.கு: கல்லுதல் என்ற வினையின் அடிப்படையில் தோன்றிய இன்னொரு சொல்லே கல் ஆகும். பெரிய பாறையின் ஒரு சிறிய துண்டே கல் என்று அழைக்கப்படுகிறது.

கல்லு (=வெட்டியெடு, துண்டாக்கு) >>> கல் (=பாறைத் துண்டு)

பொழுது:

பொழுது என்னும் தமிழ்ச் சொல்லானது போழ்தல் என்ற வினையை அடிப்படையாகக் கொண்டு பிறந்ததாகும். போழ்தல் என்பதற்குப் பிளத்தல், வெட்டுதல் என்ற பொருட்கள் உண்டு. பொழுது என்ற காலப்பெயரின் தோற்றமுறை கீழே:

போழ் (=பிள, வெட்டு) + து >>> போழ்து, பொழுது

தியாலம்:

தியாலம் என்னும் சொல்லானது தேய்தல் என்ற வினையை அடிப்படையாகக் கொண்டு பிறந்ததாகும். தேய்தல் என்பதற்குக் கழிதல், நீங்குதல் என்ற பொருட்கள் உண்டு. தியாலம் என்ற காலப்பெயரின் தோற்றமுறை கீழே:

தேய் (=கழி, நீங்கு) >>> தேயல் >>> தேயலம் >>> தியாலம்.


தருணம் & தறுவாய்:

தருணம், தறுவாய் என்ற தமிழ்ச் சொற்களும் தறித்தல் என்ற வினையை அடிப்படையாகக் கொண்டு எழுந்ததாகும். தறித்தல் என்றால் வெட்டுதல், பிளத்தல் என்ற பொருட்கள் உண்டு. இந்த இரண்டு காலப்பெயர்களின் தோற்றமுறை கீழே:

தறி (=வெட்டு) >>> தறிணம் >>> தருணம்  
தறி (=வெட்டு) >>> தறிவாய் >>> தறுவாய்

தவணை:

தவணை என்னும் தமிழ்ச் சொல்லானது தவத்தல் என்ற வினையை அடிப்படையாகக் கொண்டு தோன்றியதாகும்.  தவத்தல் என்ற வினைக்கு நீங்குதல் என்ற பொருளுண்டு. தவணை என்ற காலப்பெயரின் தோற்றமுறை கீழே:

தவ (=நீங்கு) >>> தவணை

தாப்பு:

தாப்பு என்னும் பெயர்ச் சொல்லானது தப்புதல் என்ற வினையின் அடிப்படையில் பிறந்த சொல்லாகும். தப்புதல் என்ற வினைக்கு நீங்குதல் என்ற பொருளுமுண்டு. இதனின்று, தாப்பு என்னும் காலப்பெயர் தோன்றும் முறை கீழே:

தப்பு (=நீங்கு) >>> தாப்பு

தான்றி:

தான்றி  என்னும் பெயர்ச் சொல்லானது தனித்தல் என்ற வினையின் அடிப்படையில் தோன்றிய சொல்லாகும். தனித்தல் என்றால் பிரிதல், நீங்குதல் என்ற பொருட்கள் உண்டு. இதிலிருந்து, தான்றி என்னும் காலப்பெயர் தோன்றும் முறை கீழே:

தனி (=பிரி, நீங்கு) >>> தான்றி


திகதி:


திகதி என்னும் பெயர்ச் சொல்லானது திகைத்தல் என்ற வினையின் அடிப்படையில் தோன்றிய சொல்லாகும். திகைத்தல் என்றால் துணிதல், முடிவுசெய்தல் என்ற பொருட்கள் உண்டு. இதிலிருந்து, திகதி என்னும் காலப்பெயர் தோன்றும் முறை கீழே:

  திகை (=துணி) >>>திகதி = துணியப்பட்டது = நாள்.

தியதி / தேதி:

தியதி, தேதி என்னும் பெயர்கள் தேய்தல் என்ற வினையின் அடிப்படையில் தோன்றியவை ஆகும். தேய்தல் என்றால் கழிதல், நீங்குதல் என்ற பொருட்கள் உண்டு. இதிலிருந்து, இக் காலப்பெயர்கள் தோன்றும் முறை கீழே:

  தேய் (=கழி, நீங்கு) >>>தேய்தி >>> தேதி
  தேய் (=கழி, நீங்கு) >>> தியதி

................ தொடரும் ................

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.