சனி, 23 நவம்பர், 2019

பழந்தமிழரின் காலப்பெயர் அமைப்புமுறை - பகுதி 2


ஞான்று:

ஞான்று என்னும் காலப்பெயரானது ஆனுதல் என்ற வினையை அடிப்படையாகக் கொண்டு பிறந்ததாகும். ஆனுதல் என்ற வினைச்சொல்லுக்கு நீங்குதல் என்ற பொருளை அகராதிகளில் காணலாம். ஞான்று என்னும் சொல்லின் தோற்றமுறை கீழே:

ஆன் (=நீங்கு) + து >>> ஆன்று >>> ஞான்று.

பி.கு: ஆனுதல் என்ற வினைச்சொல்லே ஞானம் என்ற பெயர்ச்சொல்லின் அடிப்படை ஆகும். நாம் என்று சொல்லும்போது அங்கே பிரிவு இல்லை. நான் என்று சொல்லும்போதே அங்கு பிரிவு உண்டாகிறது. மற்றவர்களில் இருந்து தன்னைப் பிரித்து உணர்த்தவே நான் என்ற சொல்லைக் கையாள்கிறோம். பிரிவினைக் குறிப்பதான ஆன் என்னும் வினையே நான் / ஞான் என்னும் பெயரின் அடிப்படையாக அமைகின்றது. நான் யார்? என்று தன்னைப் பற்றி முழுமையாக அறிதலே நானம் / ஞானம் ஆகும். ஞானம் என்ற தமிழ்ச் சொல்லின் தோற்றமுறை கீழே:

ஆன் (=நீங்கு, பிரி) >>> நான் / ஞான் >>> நானம் / ஞானம்.

ஆனியம்:

ஆனியம் என்பது நாளைக் குறிப்பதொரு தமிழ்ச் சொல்லே ஆகும். இச் சொல்லும் ஆனுதல் வினையின் அடிப்படையில் தோன்றியதே. இதன் தோற்றமுறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆன் (=நீங்கு) + இயம் >>> ஆனியம்

பருவம்:

பருவம் என்பது காலத்தைக் குறிக்கின்ற தமிழ்ச் சொல்லே ஆகும். பருவுதல் என்ற வினையே பருவம் என்ற பெயரின் அடிப்படை ஆகும். பருவுதல் என்றால் நீக்குதல், களைதல் என்று பொருள்படும். பருவம் என்ற சொல்லின் தோற்றமுறை கீழே:

பருவு (=நீக்கு) >>> பருவம்.

கொன்:

கொன் என்பதும் காலத்தைக் குறிப்பதோர் தமிழ்ச் சொல் ஆகும். கொன்னுதல் என்ற வினையின் அடிப்படையில் எழுந்ததே இச்சொல் ஆகும். கொன்னுதல் என்றால் நீங்குதல் என்ற பொருளுண்டு. இச்சொல்லின் தோற்றமுறை கீழே:

கொன்னு (=நீங்கு) >>> கொன்

ஓரை:

காலத்தைக் குறிக்கும் பல தமிழ்ச் சொற்களில் ஒன்றே ஓரை ஆகும். ஒருவுதல் என்ற வினையின் அடிப்படையில் எழுந்ததே இச்சொல். ஒருவுதல் என்ற வினைச்சொல்லுக்குக் கடத்தல், கழித்தல் என்ற பொருட்களுண்டு. இச் சொல்லின் தோற்றமுறை கீழே:

ஒருவு (=கட,கழி) >>> ஓரை

கடிகை:

கடிகை என்பதும் காலத்தினைக் குறிக்கும் தமிழ்ச் சொல்லாகும். கடிதல் என்ற வினையே கடிகையின் அடிப்படை ஆகும். கடிதல் என்ற வினைக்கு நீக்குதல், விலக்குதல் என்றெல்லாம் பொருட்கள் உண்டு. கடிகை என்ற சொல்லின் தோற்றமுறை கீழே:

கடி (=நீக்கு, விலக்கு) >>> கடிகை

பகல்:

பகல் என்பது ஒருநாளில் கதிரவன் ஒளிவீசும் பொழுதினைக் குறிக்கப் பயன்படுத்தப் படுகின்ற சொல்லாகும். பகுத்தல் என்ற வினையே இதன் அடிப்படையாகும். இச்சொல்லின் தோற்றமுறை கீழே:

பகு (=பங்கிடு, பிரி) >>> பகல்

வைகறை:

ஒருநாளின் முதல் பொழுதாக அறியப்படுவதே வைகறைப் பொழுது ஆகும். வைகுதல் என்றால் தங்குதல் என்றும் அறுதல் என்றால் நீங்குதல் என்றும் பொருளுண்டு. இரவிலே தங்கியிருந்து விடிந்ததும் எழுந்து பயணம் செய்ய நீங்குகின்ற வழக்கத்தின் அடிப்படையில் இப்பெயர் உண்டானது. இச்சொல்லின் தோற்றமுறை கீழே:

வைகு + அறு (= தங்கி நீங்கு) >>> வைகறை.

புலரி:

புலரி என்பது காலைப் பொழுதைக் குறிக்கப் பயன்படுவதான தமிழ்ச் சொல் ஆகும். புலர்தல் என்ற வினையே இச்சொல்லின் அடிப்படை ஆகும். புலர்தல் என்ற வினைச்சொல்லுக்கு விலகுதல், நீங்குதல் என்ற பொருட்களுண்டு. இருள் நீங்கி வெளிச்சம் தோன்றும் இந்த புலரிக்குப் பெயர் உண்டான முறை இதோ கீழே:

புலர் (=விலகு, நீங்கு) >>> புலரி

நாள்:

தமிழில் உள்ள பல்வேறு காலப்பெயர்களில் முதன்மையானது நாள் என்ற பெயராகும். இதனை நாளை என்றும் வழங்குவர். நள்ளுதல் என்ற வினையே நாள் என்பதன் அடிப்படையாகும். நள்ளுதல் என்ற வினைச்சொல்லுக்கு வெட்டுதல், அறுத்தல் என்ற பொருட்களுண்டு. இப் பொருட்கள் தமிழ் அகராதிகளில் இல்லாமையைப் போகூழ் என்றே கூறவேண்டும். நாள், நாளை ஆகிய சொற்களின் தோற்றமுறை கீழே:

நள்ளு (=வெட்டு, அறு) >>> நாளை, நாள்,

பி.கு: நள்ளுதல் என்ற வினையின் அடிப்படையில் தோன்றிய பிற சொற்களாக நள்ளி, நண்டு ஆகியவற்றைச் சொல்லலாம். தனது முன்னங் கால்களையே இரண்டு கைகளாகப் பயன்படுத்தி இரையைப் பிடித்து இரண்டு துண்டாக வெட்டும் தன்மை பெற்றது இந்த நள்ளி எனப்படும் நண்டாகும்.

நள்ளு (=வெட்டு) >>> நள்ளி, நண்டு.

நாழிகை:

நள்ளுதல் வினையின் அடிப்படையில் தோன்றிய இன்னொரு காலப்பெயரே நாழிகை ஆகும். 24 நிமிடங்கள் கொண்ட கால அளவாகிய நாழிகை என்பதே தமிழரின் கால அளவாகும். நாளிகை என்பதன் (லகர – ழகரப்) போலியே நாழிகை ஆகும். நாழிகை என்னும் தமிழ்ச்சொல்லின் தோற்றமுறை கீழே:

நள்ளு (=வெட்டு, அறு) >>> நாளிகை >>> நாழிகை

இன்று / இற்றை:

இற்றை என்னும் காலப்பெயரானது இன்று என்று தற்காலத்தில் வழங்கப்பட்டு வருகிறது. இறுத்தல் வினையின் அடிப்படையில் பிறந்ததே இப்பெயராகும். இறுத்தல் என்ற வினைச் சொல்லுக்கு முறித்தல், நீக்குதல் என்றெல்லாம் பொருட்கள் உண்டு. இச்சொல்லின் தோற்றமுறை கீழே:

இறு (= முறி, நீக்கு) >>> இற்றை >>> இன்று

இறுது :

இறு என்ற வினைச் சொல்லில் இருந்து இற்றை, இன்று மட்டுமின்றி இறுது என்ற சொல்லும் கீழ்க்காணுமாறு தோன்றியுள்ளது.

இறு (= முறி, நீக்கு) + து >>> இறுது (=பருவம்)

இறுது என்ற தமிழ்ச்சொல்லே தமிக்ருத மொழியில் ருது என்று மாறியது.

அன்று / அற்றை:

அற்றை என்னும் காலப்பெயரானது அன்று என தற்காலத்தில் வழங்கப்பட்டு வருகிறது. அறுதல் வினையின் அடிப்படையில் பிறந்ததே இப்பெயராகும். அறுதல் என்ற வினைச் சொல்லுக்குப் பிரிதல், நீங்குதல் என்றெல்லாம் பொருட்கள் உண்டு. இச்சொல்லின் தோற்றமுறை கீழே:

அறு (= பிரி, நீங்கு) >>> அற்றை >>> அன்று

பி.கு: அறுதல் என்ற வினைச்சொல்லே அறிவு என்ற பெயர்ச்சொல்லின் அடிப்படை ஆகும். ஐயங்கள் அறுதலால் அதாவது நீங்குதலால் உண்டாகும் தெளிவே அறிவு எனப்படும். அதாவது,

அறு (= நீங்கு, தெளி) >>> அறிவு.

நொடி:

நொடி என்பது மிகச்சிறிய கால அளவினைக் குறிக்கப் பயன்படுகின்ற தமிழ்ச் சொல் ஆகும். நொடித்தல் என்ற வினையின் அடிப்படையாய்ப் பிறந்த இதனைக் கைந்நொடி என்றும் இமைப்பொழுது என்றும் கூறுவர். நொடித்தல் என்ற வினைக்கு முறித்தல், இடையறுத்தல் என்ற பொருட்களுண்டு. இச்சொல்லின் தோற்றமுறை கீழே:

நொடி (=முறி, இடையறு) >>> நொடி

நிமிடம்:

நொடிக்கு அடுத்தபடியான பெரிய காலஅளவினைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்ற தமிழ்ச் சொல்லே நிமிடம் ஆகும். நிமிட்டுதல் என்ற வினைக்குக் கிள்ளுதல், நீக்குதல் என்ற பொருட்களுண்டு. இதன் அடிப்படையில் நிமிடம் என்ற காலப்பெயர் கீழ்க்காணுமாறு தோன்றும்.

நிமிட்டு (=கிள்ளு, நீக்கு) >>> நிமிடம்

வேளை:

பொழுதைக் குறிக்கும் பல்வேறு தமிழ்ச் சொற்களில் வேளையும் ஒன்றாகும். ஒரு நாளினை மூன்று கூறாக்கினால் கிடைப்பதே வேளை எனப்படுகிறது. வெளுத்தல் என்ற வினையின் அடிப்படையில் பிறந்ததே வேளை ஆகும். வெளுத்தல் என்ற வினைக்கு நீக்குதல், கழித்தல் என்ற பொருட்களுண்டு. கறைகளை நீக்குவதையே ஆடை வெளுத்தல் என்று கூறுவது வழக்கம். வேளை என்னும் சொல்லின் தோற்றமுறை கீழே:

வெளு (=நீக்கு) >>> வேளை

நேரம்:

பொழுதைக் குறிக்கும் பல்வேறு பெயர்ச் சொற்களுள் ஒன்றே நேரம் ஆகும். நேர்தல் என்ற வினையின் அடிப்படையில் தோன்றியதே நேரம் ஆகும். நேர்தல் என்ற வினைச்சொல்லுக்குப் பல்வேறு அகராதிப் பொருட்கள் இருந்தாலும் அறுத்தல் என்ற பொருளும் உண்டு. நேரம் என்ற காலப்பெயரின் தோற்றமுறை கீழே:

நேர் (=அறு) >>> நேரம்

மணி:

மணி என்பது நிமிடத்திற்கு அடுத்தபடியான பெரிய கால அளவாகக் கருதப்படுகிறது. மண்ணுதல் வினையின் அடிப்படையில் தோன்றிய கால அளவே மணி ஆகும். மண்ணுதல் என்ற வினைச் சொல்லுக்குக் கழுவுதல், நீக்குதல் என்ற பொருட்களுண்டு. மணி என்ற காலப்பெயரின் தோற்றமுறை கீழே தரப்பட்டுள்ளது.

மண்ணு (=கழுவு, கழி) >>> மணி

பிராயம்:

பிராயம் என்பது வயதைக் குறிப்பதான தமிழ்ச் சொல்லே ஆகும். பிராயம் என்பது பிரிதல் என்ற வினையின் அடிப்படையில் பிறந்ததாகும். பிரிதல் என்றால் நீங்குதல், கழிதல் என்ற பொருட்கள் உண்டு. பிராயம் என்ற தமிழ்ச் சொல்லின் தோற்றமுறை கீழே:

பிரி (=நீங்கு, கழி) >>> பிராயம்


அகசு:

அகசு என்பது நாள் மற்றும் பொழுதைக் குறிப்பதான தமிழ்ச் சொல்லே ஆகும். அகசு என்பது அகைதல் என்ற வினையின் அடிப்படையில் பிறந்ததாகும். அகைதல் என்றால் கூறுபடுதல் என்ற பொருள் உண்டு. அகசு என்ற தமிழ்ச் சொல்லின் தோற்றமுறை கீழே:

அகை (=கூறுபடு) >>>அகசு

தினம்:

தினம் என்பது நாளினைக் குறிப்பதான தமிழ்ச் சொல்லே ஆகும். தினம் என்பது தின்னுதல் என்ற வினையின் அடிப்படையில் பிறந்ததாகும். தின்னுதல் என்ற சொல்லுக்கு அரித்தல், வெட்டுதல் என்று பல பொருட்கள் உண்டு. தினம் என்ற தமிழ்ச் சொல்லின் தோற்றமுறை கீழே:

தின் (=வெட்டு, அரி) >>> தினம்

முடிவுரை:

இதுவரை கண்டவற்றில் இருந்து, காலம் தொடர்பான பல்வேறு தமிழ்ச் சொற்களைப் பழந்தமிழர்கள் ஈரும்வாள் முறைப்படியே அமைத்திருப்பதை அறிந்து கொள்ளலாம். இவ்வாறு பெயர்களை அமைக்கக் காரணம், மக்களுக்கு நிலையாமையை உணர்த்தி நன்மை செய்தலை வலியுறுத்துவதே ஆகும். இக் கட்டுரையின் முடிவாக, நாம் அறிந்துகொள்ள வேண்டிய கருத்து:

காலத்தை நாம்வகுக்க வில்லை அறிவோம்
காலமே நம்மை வகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.