வெள்ளி, 15 நவம்பர், 2019

சத்தம், சந்தம், சந்தை, சுத்தம், சுந்தரம், சுகம், சுபம் - எது தமிழ்? எது மூலம்?


சத்தம்:

தமிழரின் நாவில் பன்னெடுங்காலமாக ஒலித்துக் கொண்டிருக்கும் இந்த சத்தம் என்ற சொல் உண்மையில் தமிழ்ச் சொல்லே ஆகும். இச் சொல் தோன்றிய முறையினைப் பற்றிக் கீழே காணலாம்.

சாத்து என்ற சொல்லானது கூட்டத்தைக் குறிக்கின்ற சங்ககாலத் தமிழ்ச் சொல் ஆகும். உப்பு வணிகர்களின் கூட்டத்தைக் குறிக்க இச் சொல் ஏராளமான சங்கப் பாடல்களில் பயின்று வந்துள்ளது. அவற்றில் சிலவற்றை மட்டும் கீழே சான்றாகக் காணலாம்.

உமண் சாத்து இறந்த ஒழி கல் அடுப்பில் - அகம் 119
சாத்து இடை வழங்கா சேண் சிமை அதர - அகம் 291
அணர் செவி கழுதை சாத்தொடு வழங்கும் - பெரும் 80

தாரணமாய்ப் பொதுமக்கள் கூட்டமாகக் கூடினாலே அங்கே பேரொலி எழுவதைத் தவிர்க்க முடியாது. அதிலும் குறிப்பாக வணிகர்கள் கூட்டமாகக் கூடினர் என்றால் அந்த இடத்தில் சலசலப்புக்கு முடிவே இருக்காது. இந்த அடிப்படையில் தான், கூட்டத்தைக் குறிப்பதான சாத்து என்ற சொல்லில் இருந்து கூட்டத்தால் உண்டாகின்ற ஓசையைக் குறிக்கச் சத்தம் என்னும் சொல் பிறந்தது.

சாத்து (கூட்டம்) >>> சத்தம் (கூட்டத்தால் தோன்றும் ஓலி)

சாத்து என்னும் தமிழ்ச் சொல்லில் இருந்து தோன்றிய சத்தம் என்னும் தமிழ்ச் சொல்லில் இருந்தே ச`ப்`த` என்னும் தமிக்ருதச் சொல் கீழ்க்காணும் விதிகளுக்கு ஏற்பத் தோன்றும்.

சத்தம் >>> ச~ப்`த` (வி.12,15,6)

வி.12 – மெய்மாற்று விதி – இதன்படி, இரட்டித்துவரும் தகர மெய்யில் ஒன்று பகரமாக மாறியது.
வி.15 – கிரந்தமாற்று விதி – இதன்படி சகர, பகர, தகரங்கள் கிரந்த ஒலிகளாக மாற்றம் பெற்றன.
வி.6 – விகுதிகெடல் விதி – இதன்படி மகர விகுதி கெட்டது.
பி.கு: ஒருவரை அடிக்கும் செயலைச் சாத்துதல் என்று சொல்வது தமிழ் வழக்கமே. சாற்றுதல் என்னும் சொல்லே பேச்சுவழக்கில் சாத்துதல் என்று மாறும். அப்படி ஒருவரைச் சாத்தும்போதும் எழுவதே சத்தம். அவ்வகையிலும் சாத்தில் இருந்தே சத்தம் பிறப்பதை அறிந்து கொள்ளலாம்.

சாற்று (அடி) >>> சாத்து >>> சத்தம் (அடியால் எழும் ஒலி)

சந்தம்:

சத்தம் என்ற தமிழ்ச் சொல்லின் மெலித்தல் விகாரமே சந்தம் என்பதால் சந்தம் என்பதும் தமிழ்ச் சொல்லே என்று எளிதில் புரிந்து கொள்ளலாம். அதாவது, ஒரு சொல்லில் வரும் வல்லின மெய் எழுத்தானது மெல்லின மெய் எழுத்தாக மாறி அதே பொருளில் வருவது மெலித்தல் விகாரம் எனப்படும். அப்படித் தோன்றியதே சந்தம் ஆகும்.

சத்தம் >>> சந்தம்

மெலித்தல் விகாரத்திற்குச் சான்றாக வேறு சில காட்டுகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. 


கொத்து >>> கொந்து ,       வெற்றி >>> வென்றி,     குட்டை >>> குண்டை.

சந்தை:

சத்தம் என்ற தமிழ்ச் சொல்லில் இருந்து சந்தம் என்ற சொல் தோன்றியதை மேலே கண்டோம். சந்தம் என்ற சொல்லில் இருந்தே சந்தை என்ற தமிழ்ச் சொல்லும் கீழ்க்காணுமாறு பிறக்கும்.

சந்தம் (ஓசை) >>> சந்தை (ஓசை மிக்க இடம்)

சுத்தம்:

சுத்தம் என்னும் சொல்லும் தூய தமிழ்ச் சொல்லே ஆகும். இச் சொல்லைச் சமக்கிருதச் சொல்லாக மக்களில் பலர் நினைக்கக் காரணம், இதைக் கிரந்த ஒலிகளாக மக்கள் வழங்குவதே ஆகும். இச் சொல் எவ்வாறு தமிழ்ச் சொல் ஆகும் என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

உத்து >>> சுத்து (1) >>> சுத்தம் (2)

(1)  உத்துதல் என்னும் தமிழ்ச் சொல்லுக்கு நீக்குதல், கழித்தல் என்றெல்லாம் அகராதிப் பொருட்கள் உண்டு. சங்க இலக்கியத்தில் கலித்தொகை 64 ஆம் பாடலில் பயின்று வந்துள்ள உத்து என்னும் இச் சொல்லில் இருந்தே உதிர் என்ற தமிழ்ச் சொல்லும் பிறக்கும். உத்து என்னும் சொல்லில் உள்ள முதல் எழுத்தின்மேல் சகரமெய் ஏறி சுத்து என்னும் சம்மோனைப் போலியாக மாறும். சம்மோனைப் போலிக்கு மேலும் சில காட்டுகளைக் கீழே காணலாம்.

இப்பி >>> சிப்பி,  இறகு >>> சிறகு, அட்டை >>> சட்டை

(2)  ஒரு பொருளில் இருந்து கறைகளையோ ஒரு இடத்தில் இருந்து குப்பைகளையோ கழித்து நீக்குவதையே சுத்தம் செய்தல் என்று கூறுவது வழக்கம். கழிக்கப்படா விட்டாலோ நீக்கப்படா விட்டாலோ தூய்மை உண்டாகாது. அவ்வகையில், கழித்து நீக்கும் வினையாகிய சுத்துதலால் உண்டாகும் தூய்மையே சுத்தம் என்றானது.   

சுத்து (கழித்து நீக்கு) >>> சுத்தம் (தூய்மை)

கழித்து நீக்கு என்னும் பொருளுடைய சுத்து என்னும் தமிழ்ச் சொல்லில் இருந்து உருவான சுத்தம் என்னும் தமிழ்ச் சொல்லில் இருந்தே சு`த்த^ என்னும் தமிக்ருதச் சொல் கீழ்க்காணும் விதிகளுக்கு ஏற்ப உருவாகும்.

சுத்தம் >>> சு`த்த^ (வி. 15,6)

வி.15 – கிரந்தமாற்று விதி – இதன்படி சகர தகரங்கள் கிரந்த ஒலிகளாக மாற்றம் பெற்றன.
வி.6 – விகுதிகெடல் விதி – இதன்படி மகர விகுதி கெட்டது.

பி.கு: கண்ணூறு கழித்தல் அதாவது கெட்ட கண்பார்வையால் தீங்கு நேரலாம் என்று அஞ்சி அதனைக் கழிப்பு செய்தலைச் சுத்திப் போடுதல் என்றே இன்றளவும் தமிழர்கள் கூறி வருகின்றனர். இதில்வரும் சுத்துதல் என்பது கழித்தல் பொருளில் வருவது கவனிக்கத் தக்கது. சுற்றுதலே சுத்துதலானது என்று பலரும் தவறாகக் கருதிச் சுத்தி செய்யும்போது சுற்றிச் சுற்றி வருகிறார்கள்.

சுந்தரம்:

சுந்தரம் என்பதும் தூய தமிழ்ச் சொல்லே ஆகும். சுந்தரம் என்னும் சொல்லும் சுத்தம் என்னும் சொல்லும் மிக நெருங்கிய தொடர்புடையவை. காரணம், சுத்தம் இல்லையேல் சுந்தரம் இல்லை அதாவது அழகு இல்லை. சுந்தரம் என்னும் சொல் உண்டாகும் முறையைக் கீழே காணலாம்.

சுத்து >>> சுந்து (1) >>> சுந்தரம் (2)

(1)  சுத்துதல் என்றால் கழித்து நீக்குதல் அதாவது தூய்மை செய்தல் என்று முன்னர் கண்டோம். சுத்து என்பது பிறவினைப் பெயராகும். இது தன்வினையாக மாறும்போது சுந்து என்றாகும். இதனை வினைமாற்றம் என்பர். வினைமாற்றத்தில் மெல்லின – வல்லின மெய் மாற்றம் உண்டாகும். கீழே சில சான்றுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

விளங்கு (தன்வினை) >>> விளக்கு (பிறவினை)
கிளம்பு (தன்வினை) >>> கிளப்பு (பிறவினை)
வருந்து (தன்வினை) >>> வருத்து (பிறவினை)
ஆக, சுந்துதல் என்னும் தன்வினைச் சொல்லுக்குச் சுத்தமாக /  தூய்மையாக இருத்தல் என்பது பொருளாகும். உலகில், உயிருள்ள பொருட்கள் ஆனாலும் உயிரற்ற பொருட்கள் ஆனாலும் சுத்தம் செய்வதற்கு அடிப்படையாக இருந்து உதவக் கூடிய ஒரு இயற்கைப் பொருள் உண்டென்றால் அது நீர் தான். நீரானது தானும் சுத்தமாக இருந்து பிறவற்றையும் சுத்தமாக்கக் கூடிய தன்மை கொண்டது என்னும் காரணம் பற்றியே நீருக்குச் சுந்து என்ற பெயர் உண்டானது எனலாம்.

(2)  தூய்மையாக இருப்பதால் கறைகள் அனைத்தும் கழிந்து நீங்குதலால் அங்கே இயற்கையான அழகு தோன்றும். இந்த இயற்கை அழகானது தூய்மையால் விளைந்த நற்பயன் ஆகும். அதாவது, சுந்து என்னும் தூய்மையால் உண்டாகிய அறம் என்னும் நற்பயனே அழகு ஆகும். சுந்தரம் என்னும் தமிழ்ச்சொல் இந்த அடிப்படையில் உண்டானதே. அதாவது,

சுந்து (தூய்மை) + அறம் (நற்பயன்) = சுந்தறம்
= தூய்மையால் உண்டாகும் நற்பயன்
= அழகு

சுந்தறம் என்னும் சொல்லே சுந்தரம் என்று போலியாக வழங்கப்பட்டு வருகிறது. இச் சொல்லில் இருந்தே சு`ந்தர் என்னும் தமிக்ருதச் சொல் கீழ்க்காணும் விதிகளுக்கு ஏற்பத் தோன்றும்.

சுந்தறம் >>> சு`ந்தர் (வி.15,6)

வி.15 – கிரந்தமாற்று விதி – இதன்படி சகரம் ச`கரமாகவும் றகரம் ரகரமாகவும் மாற்றம் பெற்றன.
வி.6 – விகுதிகெடல் விதி – இதன்படி அம் விகுதி கெட்டது.

பி.கு: சுந்தரம் என்பது சுந்தறத்தின் போலி என்று மேலே கண்டோம். எனவே அழகு என்பதை இனிமேல் சுந்தறம் என்றே சுந்தறமாய்க் குறிப்போம்.  

சுகம்:

சுகம் என்பதும் வழமையான தமிழ்ச் சொல்லே ஆகும். வழக்கம்போல இதனையும் கிரந்த ஒலியாக ஒலிப்பதால் சமக்கிருதமோ என்ற ஐயம் பலருக்கும் உண்டு. இது எவ்வாறு தமிழ்ச் சொல் என்று இங்கே காணலாம்.

உக >>> சுக (1) >>> சுகம் (2)

(1)  உகத்தல் என்ற தமிழ்ச் சொல்லுக்கு மகிழ்தல் என்ற பொருள் அகராதிகளில் உண்டு. சங்ககாலம் தொட்டுப் பயன்பாட்டில் இருக்கும் இச் சொல் சங்க இலக்கியங்களில் பல பாடல்களில் மகிழ்தல் / இன்புறுதல் என்ற பொருளில் வந்துள்ளது. கீழே சில காட்டுகளை மட்டும் சான்றாகக் காணலாம்.

       உகத்தவை மொழியவும் ஒல்லாள் மிக கலுழ்ந்து - நெடு 156
       பருந்து இருந்து உகக்கும் பல் மாண் நல் இல் - மது 502
       வாவல் உகக்கும் மாலையும் - ஐங் 339
       நளிர்மலை பூங்கொடி தங்குபு உகக்கும் பனி வளர் ஆவியும்- பரி 10

உகத்தல் என்ற தமிழ்ச்சொல்லே சகரமெய் ஏறி சுகத்தல் என்று மாறும். இவ்வாறு மாறுவது சம்மோனைப் போலி எனப்படும். இவ்வகைப் போலிகளுக்குக் காட்டாகக் கீழே வேறுசில சான்றுகளைக் காணலாம்.

அடை >>> சடை,   அட்டை >>> சட்டை, உணங்கு >>> சுணங்கு

(2)  மகிழ்தல், இன்புறுதல் பொருளில் வரும் சுகத்தல் என்னும் தொழில் / வினையின் அடிப்படையாய்ப் பிறக்கும் தொழிற்பெயரே சுகம் ஆகும். அதாவது,

சுகத்தல் (மகிழ்தல்) >>> சுகம் (மகிழ்ச்சி, இன்பம்)

சுகத்தல் என்னும் வினையின் அடிப்படையாய்ப் பிறந்த சுகம் என்னும் தமிழ்ச் சொல்லில் இருந்தே சு`க என்னும் தமிக்ருதச் சொல் கீழ்க்காணும் விதிமுறைகளுக்கு ஏற்ப உருவாகும்.

சுகம் >>> சு`க (வி.15,6)

வி.15 – கிரந்தமாற்று விதி – இதன்படி சகரம் ச`கரமாக மாறியது.
வி.6 – விகுதிகெடல் விதி – இதன்படி மகர விகுதி கெட்டது.

பி.கு: இன்புறுதல் என்ற பொருளைத் தருவதான சுகத்தல் என்ற தமிழ்ச் சொல்லே தற்போது சுகித்தல் என்று திரிந்து வழங்குகிறது.

சுபம்:

சுபம் என்பதும் அருமையான ஒரு தமிழ்ச் சொல்லே ஆகும். சமக்கிருதமென தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட பல தமிழ்ச் சொற்களில் இதுவும் ஒன்றாகும். சுபம் என்பது எவ்வாறு தமிழ்ச் சொல் ஆகும் என்று கீழே காணலாம்.

உப்பு >>> சுப்பு (1) >>> சுப்பம் (2) >>> சுபம் (3)

(1)  உப்பு என்னும் தமிழ்ச் சொல்லுக்கு இன்பம் / மகிழ்ச்சி என்ற பொருளும் இருப்பதை அகராதிகளில் பார்க்கலாம். உப்பு என்ற சொல்லை இன்பம் என்ற பொருளில் வள்ளுவரும் கீழ்க்காணும் குறளில் பயன்படுத்தி இருப்பதைப் பார்க்கலாம்.

        ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக்
        கூடலின் தோன்றிய உப்பு – 1328
    
உப்பு என்னும் சொல்லின் முதலில் உள்ள உகரத்தின்மேல் சகரமெய் ஏறி சுப்பு என்று மாறும். சம்மோனைப் போலி என்று அழைக்கப்படும் இந்த முறைக்குச் சான்றாக வேறு சில காட்டுகளையும் கீழே காணலாம்.

அந்தி >>> சந்தி,       அருகு >>> சருகு,      இறகு >>> சிறகு

(2)  இன்பத்தைக் குறிக்கும் சுப்பு என்னும் உகர ஈற்றுச் சொல்லே அம் விகுதி பெற்று சுப்பம் என்ற சொல்லாகும். இவ்வாறு மாறும் வேறுசில தமிழ்ச் சொற்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

மத்து >>> மத்தம்,  வெப்பு >>> வெப்பம்,  வட்டு >>> வட்டம்.

(3)  சுப்பம் என்ற தமிழ்ச் சொல்லில் இருக்கும் இரண்டு மெய்களில் ஒன்று கெட்டுச் சுபம் என்று ஆகும். இவ்வாறு மாறுவது தமிழ் மொழியில்  இயல்பே ஆகும். இம்முறைப்படி மாறும் வேறுசில தமிழ்ச் சொற்களும் கீழே காட்டாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

நட்டம் >>> நடம்,     குட்டம் >>> குடம்,    பட்டம் >>> படம்

இனிமை என்னும் பொருளைக் கொண்ட உப்பு என்னும் தமிழ்ச் சொல்லை அடிப்படையாகக் கொண்டு தோன்றிய சுபம் என்ற தமிழ்ச் சொல்லே தமிக்ருதத்தில் கீழ்க்காணும் விதிகளுக்கு ஏற்ப சு`ப^ என்று மாறும்.

சுபம் >>> சு`ப^ (வி.15,6)

வி.15 – கிரந்தமாற்று விதி – இதன்படி சகரமும் பகரமும் கிரந்த ஒலிகளாக மாற்றம் பெற்றன.
வி.6 – விகுதிகெடல் விதி – இதன்படி மகர விகுதி கெட்டது.

பி.கு: இன்பம் என்ற பொருளைத் தருகின்ற சுப்பு என்ற சொல்லில் இருந்து சுப்புதல் என்ற வினை தோன்றும். சுப்புதல் என்பது இன்பம் நுகர்தல் என்ற பொருளைத் தரும். இதிலிருந்தே முத்தமிடுவதைக் குறிக்கும் சமக்கிருதச் சொல் தோன்றும்.

சுப்பு (இன்பம் நுகர்) >>> சும்ப (முத்தம்)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.