திங்கள், 25 நவம்பர், 2019

சங்க இலக்கியத்தில் சகரமுதல் சொற்கள் யாவும் தமிழா? - நிறைவுப் பகுதி


அத்துதல் என்ற வினைச்சொல்லுக்குப் பொருத்துதல், ஒட்டுதல், அப்புதல் என்று பல பொருட்களைத் தமிழ் அகராதிகளில் காணலாம். அத்து என்ற தமிழ்ச்சொல்லானது சகரமெய் ஏறி சத்து என்றும் மாறும். இவ்வாறு மாறுவதைச் சம்மோனைப் போலிகள் என்று இக் கட்டுரையின் முதலாம் பகுதியில் விரிவாகக் கண்டோம். சத்து என்ற தமிழ்ச் சொல்லில் இருந்தே சதுக்கம், சந்து, சந்தம், சந்தனம், சந்தி என்ற சொற்கள் அனைத்தும் தோன்றும். இச் சொற்களின் தோற்றம் பற்றிக் கீழே தனித்தனியாக விரிவாகக் காணலாம்.

சதுக்கம்:

ஒன்றுக்கு மேற்பட்ட திசைகளில் இருந்து வரும் வழிகள் ஒன்றாகப் பொருந்தும் இடமே சதுக்கம் என்று அழைக்கப்பட்டது. சதுக்கம் என்ற சொல் தோன்றிய முறை கீழே:

சத்து (=பொருந்து, கூடு) >>> சதுக்கம் (=கூடும் இடம்)

சந்தி:

சந்தி என்பதும் சதுக்கத்தைப் போல பல வழிகள் ஒன்றுகூடும் இடமே ஆகும். சந்தி என்ற சொல்லும் சத்து என்ற சொல்லில் இருந்தே கீழ்க்காணுமாறு தோன்றும்.

சத்து (=பொருந்து, கூடு) >>> சந்தி (=கூடும் இடம்).

சத்து என்பது சந்தி என்று வருவதை மெலித்தல் விகாரம் என்பர். ஒரு சொல்லில் வரும் வல்லின மெய் மெல்லின மெய்யாக மாறி அதே பொருளில் வருவதை மெலித்தல் விகாரம் என்பர். இதற்கான வேறு சில காட்டுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

வெற்றி >>> வென்றி, கொத்து >>> கொந்து, சத்தம் >>> சந்தம்.

சந்து / சந்தம் / சந்தனம் :

சந்து, சந்தம் ஆகிய இரண்டும் சந்தனத்தைக் குறிக்கும் வேறு பெயர்களே ஆகும். சத்து என்ற தமிழ்ச் சொல்லுக்கு அப்புதல் என்ற பொருளுமுண்டு என்று மேலே கண்டோம். சத்து என்ற சொல்லில் இருந்து மேலே கண்ட மெலித்தல் விகாரப்படி சந்து, சந்தம், சந்தனம் ஆகிய சொற்கள் பிறக்கும்.

சத்து (=அப்பு, பூசு) >>> சந்து, சந்தம், சந்தனம் (=பூசப்படுவது)

அவைத்தல் என்ற தமிழ்ச்சொல்லுக்குப் பலவேறு பொருட்களைத் தமிழ் அகராதிகள் காட்டியுள்ளன. அவற்றில் குத்துதல், நசுக்குதல், அவித்தல் ஆகிய பொருட்கள் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கவை. ஏனென்றால், இந்த பொருட்களின் அடிப்படையில் தான் அவைத்தல் என்ற சொல்லில் இருந்து போருடன் தொடர்புடைய சொற்கள் தோன்றியுள்ளன. அவைத்தல் என்னும் சொல்லானது சகரமெய் ஏறி சவைத்தல் என்று சம்மோனைப் போலியாகவும் மாறும் என்று இக் கட்டுரையின் முதல் பகுதியில் விரிவாகக் கண்டோம். இனி, சவைத்தல் என்ற சொல்லில் இருந்து பிற சொற்கள் தோன்றும் முறையினைக் கீழ விரிவாகக் காணலாம்.

சமம் :

சமம் என்பது போரைக் குறிப்பதான தமிழ்ச் சொல்லாகும். நாற்பதுக்கும் மேற்பட்ட சங்க இலக்கியப் பாடல்களில் இச்சொல் பயின்று வந்துள்ளது. எதிரி வீரர்களை வாள், வேல் போன்ற ஆயுதங்களால் தாக்கிக் குத்தியும் யானைகளால் நசுக்கியும் கொல்வதையே போர் என்று சொல்கிறோம். குத்துதல், நசுக்குதல் ஆகிய வினைகளே போரில் நடக்கும் முகன்மை வினைகள் என்ற அடிப்படையில் சமம் என்ற தமிழ்ச் சொல் கீழ்க்காணுமாறு தோன்றும்.

சவை (=குத்து, நசுக்கு) >>> சவம் (=பிணம்) >>> சமம் (=போர்)

போரின்போது ஆயுதங்களால் குத்தப்பட்டும் யானைகளால் நசுக்கப்பட்டும் உயிரிழந்து விழும் பிணங்களே சவம் என்று அழைக்கப்பட்டன. ஒரே நேரத்தில் கணக்கற்ற சவங்களை உருவாக்குவதால் போருக்குச் சமம் என்ற பெயர் ஏற்பட்டது எனலாம்.

சவட்டு:

சவைத்தல் வினையை அடிப்படையாகக் கொண்டு தோன்றிய இன்னொரு வினையே சவட்டுதல் ஆகும். சவட்டுதல் என்றால் மிதித்தல், நசுக்குதல் என்று பொருள். சவட்டு என்ற சொல் கீழ்க்காணுமாறு தோன்றும்.

சவை (= நெரி, நசுக்கு) >>> சவட்டு (மிதி, நசுக்கு)

சமைப்பு:

சமைப்பு என்ற தமிழ்ச்சொல்லானது உணவுப் பொருட்களை அவித்துத் தயார்செய்தலைக் குறிக்கும். அரிசி, நீர் போன்ற பல பொருட்களை ஒன்றாகச் சேர்த்து அவித்து உண்ணுவதற்கு ஏற்றவாறு தயார்செய்தலையே சமையல் என்று அழைக்கிறோம். சமைப்பு என்ற தமிழ்ச் சொல் தோன்றும் முறை கீழே:

சவை (= அவி)  >>> சமைப்பு (=சமையல்)

வகரமெய் மகரமெய்யாக மாறுவது தமிழ் மொழியில் வழக்கமே ஆகும்.  இவ்வாறு மாறுவதனை வகர-மகரப் போலி என்பர். இவ்வகைப் போலிகளுக்கு வேறு சில காட்டுகளும் கீழே கொடுக்கப்பட்டுளளன. .

அவ்வை >>> அம்மை,        புவி >>> பூமி,           சவி >>> சாமி. 

சமன்:

ஞமன் என்ற தமிழ்ச் சொல்லுக்குத் துலாக்கோல் என்ற பொருளுண்டு. ஒருபுறம் எடைக்கற்களையும் இன்னொரு புறம் பொருட்களையும் வைத்து ஒப்பிட்டு நிறுப்பதற்கு உதவுவதே ஞமன் என்ற துலாக்கோல் ஆகும். ஞமன் என்ற சொல்லில் இருந்தே சமன் என்ற தமிழ்ச்சொல் கீழ்க்காணுமாறு தோன்றும்.

ஞமன் (=துலாக்கோல்)  >>> சமன் (=ஒப்பு)

ஞகரமெய்யானது சகரமெய்யாக மாறுவதும் தமிழ் வழக்கில் உள்ளதே. கீழே சில சான்றுகள் தரப்பட்டுள்ளன.

அஞ்சு >>> அச்சம், .         நஞ்சு >>> நச்சு,        பூஞை >>> பூசை

பி.கு: ஞமன் என்ற சொல்லில் இருந்தே எமனைக் குறிப்பதான யமன் என்ற தமிழ்ச் சொல்லும் தோன்றும். உயிர்களைப் பறிப்பதில் அனைத்து உயிர்களுக்கும் பொதுவாக துலாக்கோல் போல நடுவுநிலைமையுடன் செயலாற்றுவதால் இப்பெயர் ஏற்பட்டது எனலாம்.

ஞமன் (=துலாக்கோல்) >>> யமன் (=நடுநிலையாளன்) >>> எமன்.

ஞகர மெய்யானது யகர மெய்யாக மாறுவதும் தமிழில் இயல்பே ஆகும். இம் மாற்றத்திற்கான வேறு சில காட்டுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

அஞர் >>> அயர்,    ஞாய் (=அன்னை) >>> யாய்,      மஞ்ஞை >>> மயில்.

சமழ்ப்பு:

சமழ்த்தல் என்றால் நாணுதல், தாழ்த்துதல் என்று பொருளாகும்.  சமழ்ப்பு என்பது நாணத்தையும் தலைகுனிவையும் குறிக்கும். நாணத்தால் மட்டுமின்றி அவமானம், பழி, குற்றவுணர்வு போன்றவற்றாலும் தலைதாழ்த்துவது இயற்கையே. சமழ்ப்பு என்ற சொல்லானது அவலம் என்ற தமிழ்ச் சொல்லில் இருந்து கீழ்க்காணுமாறு தோன்றும்.

அவலம் >>> சவலம் >>> சமழ்ப்பு

அவலம் என்னும் சொல்லானது சவலம் என்று மாறுவது சம்மோனைப் போலி என்னும் முறைப்படி ஆகும். அவலம் என்னும் சொல்லுக்கு அவமானம், பழி, குற்ற உணர்வு என்றெல்லாம் பொருட்கள் உண்டு. ஆனால் இப்பொருட்களைத் தமிழ் அகராதிகள் குறிப்பிட ஏனோ மறந்துவிட்டன. அவலம் என்பது அவமானம் / பழி / குற்ற உணர்வு என்ற பொருளில் வருகின்ற சங்க இலக்கியப் பாடல்களில் சில மட்டும் கீழே சான்றாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

அவல நெஞ்சமொடு செல்வல் நின் கறுத்தோர் - புறம் 210
யானே புனை இழை ஞெகிழ்த்த புலம்பு கொள் அவலமொடு.. - நற் 348

அவலம் ஆகிய அவமானம் / பழி / குற்ற உணர்வினால் உண்டாகும் தலைகுனிவே சமழ்ப்பு எனப்பட்டது.

சண்பகம்:

மல்லிகை, முல்லை போல சண்பகமும் ஒரு நறுமண மலரே ஆகும். செம்பு நிறத்தில் இதன் பூக்கள் பூத்துக் குலுங்குவதால் இந்த மலருக்குச் செம்பகம் என்று பெயர் ஏற்பட்டது. இப்பெயரே மருவி செண்பகம் என்றும் சண்பகம் என்றும் வழங்கலாயிற்று.

செம்பு + அகம் = செம்பகம் >>> செண்பகம் >>> சண்பகம்

பி.கு: செம்பகம் என்ற தமிழ்ப்பெயரே சம்பக என்று மருவி தமிக்ருத மொழியில் இந்த மலரைக் குறிக்கப் பயன்படுகிறது.

செம்பகம் >>> சம்பக

முடிவுரை:

இதுவரை கண்டதில் இருந்து, சதுக்கம், சந்தி, சந்து, சந்தம், சந்தனம், சமம், சமன், சவட்டு, சமைப்பு, சமழ்ப்பு, சண்பகம் ஆகிய சகரமுதல் சொற்கள் யாவும் தமிழே என்று அறிந்தோம். அதைப்போல இக் கட்டுரையின் முதல்பகுதியில் கண்ட சங்கம், சலம், சருமம், சனம், சடை, சகடம், சரணம் ஆகிய சகரமுதல் சொற்களும் தமிழே என்று அறிந்தோம். இந்த இரண்டு ஆய்வுகளின் முடிவு இதுதான்:

சங்க இலக்கியத்தில் உள்ள
சகரமுதல் சொற்கள்
யாவும் தமிழே !!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.