திங்கள், 11 நவம்பர், 2019

சட்டி, சரக்கு, சருகு, சாதாரணம், சாமானியம் - எது தமிழ்?. எது மூலம்?


சட்டி:

கந்த சட்டியில் வரும் சட்டி என்பது தஞ்சந்தச் சொல் ஆகும். அதாவது தமிழில் இருந்து சமக்கிருதம் சென்ற ஒரு சொல் மீண்டும் தமிழுக்கே திரும்பி வரும்போது உருமாறி வருவதால் அது தஞ்சந்தம் என்று அழைக்கப்படும். சட்டி என்பது எப்படி தஞ்சந்தச் சொல் ஆகும் என்று இங்கே விரிவாகப் பார்க்கலாம்.

தமிழ்க் கடவுள் ஆகிய கந்தன் சங்க காலத்திலேயே கந்து எனப்படும் தூணத்தில் உறைந்த கடவுளாகத் தமிழரால் வணங்கப்பட்டவனே. ஆறுமுகன் ஆகிய கந்தனுக்கு ஆறாம் பிறையன்று வழிபாடு செய்யும் ஒரு முறை தமிழரிடம் இருந்தது. அந்த வழிபாட்டின் பெயர் கந்தச் சாட்டு ஆகும்.

இந்நிலையில், கந்தன் என்ற தமிழ்ப் பெயரின்முன் ச்` சேர்த்து அவனை ச்`கந்த என்று மாற்றினர் வடமொழியாளர். அதுமட்டுமின்றி, சாட்டு என்ற தமிழ்ப் பெயரைத் திரித்து ச`ச்~டி என்று மாற்றி விட்டனர். இதைப் பற்றிக் கீழே விரிவாகக் காணலாம்.

ஆறு >>> ஆற்று (1) >>> சாற்று (2) >>> சாட்டு (3) >>> ச`ச்~டி (4)

(1) ஆறு என்னும் எண்ணுப் பெயரானது வல்லொற்று இரட்டல் விதிப்படி ஆற்று என்று மாறும். அதாவது, ஒரு பொருளுடன் தொடர்புடைய எல்லாவற்றையும் குறிக்க ஒரு சொல்லை உருவாக்க வேண்டும் என்றால் அப்பொருளைக் குறிக்கும் பெயர்ச்சொல்லின் ஈற்றில் வரும் வல்லின மெய்யை இருமுறை எழுதுவதே வல்லொற்று இரட்டல் ஆகும். இதற்கு எடுத்துக்காட்டாகக் கீழே சில சான்றுகளைக் காணலாம்.

மாடு >>> மாட்டு =மாட்டினுடையது
வீடு >>> வீட்டு = வீட்டினுடையது
ஆறு >>> ஆற்று = ஆற்றினுடையது, ஆறனுடையது.

இங்கே உள்ள "ஆற்று" என்பதன் பொருள் “ஆறுக்குரியது” என்பதாகும்.

(2) ஆற்று என்ற தமிழ்ச் சொல்லானது சாற்று என்னும் சம்மோனைப் போலியாக மாறும். அதாவது, சொல்லின் முதலில் வரும் உயிர் எழுத்தின் மீது சகரமெய் சேர்ந்து தோன்றும் சொல்லே சம்மோனைப் போலி் ஆகும். கீழே சில சான்றுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

இப்பி >>> சிப்பி, இறகு >>> சிறகு, அட்டை >>> சட்டை

(3) சாற்று என்ற தமிழ்ச் சொல்லானது சாட்டு என்றும் போலியாகத் திரியும். இதனை றகர - டகரப் போலி என்று கூறுவர். அதாவது, ஒரு சொல்லின் ஈற்றில் வரும் றகரமானது டகரமாகத் திரியும். இதற்குக் கீழே சில சான்றுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

ஒற்று >>> ஒட்டு, அசறு >>> அசடு, முசிறு >>> முசிடு

(4) சாட்டு என்ற தமிழ்ச் சொல்லில் இருந்தே சில விதிமுறைகளுக்கேற்ப ச`ச்~டி என்ற தமிக்ருதச் சொல் கீழ்க்காணுமாறு தோன்றும்.

சாட்டு >>> ச`ச்~டி (வி. 2, 12, 15, 6)

வி.2 - குறுமோனை விதி - இதன்படி சா என்னும் முதல் எழுத்து குறுகி ச என்று ஆகியது.
வி.12 - மெய்மாற்று விதி - இதன்படி இரட்டித்துவரும் டகர மெய்யில் ஒன்று சகரமெய்யாக மாறியது.
வி.15 - கிரந்தமாற்று விதி - இதன்படி சகர மெய்கள் அனைத்தும் கிரந்த ஒலிகளாக மாறின.
வி.6 - விகுதிமாற்று விதி - இதன்படி ஈற்றில் வரும் உகர விகுதி இகரமாக மாறியது.

இவ்வாறு ஆறு என்ற எண்ணுப்பெயரை அடிப்படையாகக் கொண்டு தோன்றிய சாட்டு என்ற தமிழ்ப் பெயரில் இருந்து உருவாக்கப்பட்ட ச`ச்~டி என்னும் தமிக்ருதப் பெயரானது மீண்டும் தமிழுக்கே திரும்பும்போது திரிந்து சட்டி என்று மாறியது. இச் சொல்லின் தோற்றமுறை இதோ கீழே:

சாட்டு (தமிழ்) >>> ச`ச்~டி (தமிக்ருதம்) >>> சட்டி (தஞ்சந்தம்)

பி.கு: முருகனுக்குரிய சட்டி என்பது தமிழ்ப்பெயர் அல்ல; தஞ்சந்தச் சொல் என்று இங்கே விளக்கப்பட்டது. எனவே கந்தச் சட்டி என்றோ கந்த ச`ச்~டி என்றோ கூறாமல் கந்தச் சாட்டு என்று கூறினாலே போதுமானது.

சரக்கு:

சரக்கு என்பது ஒரு தூய தமிழ்ச் சொல்லே ஆகும். சரக்கு என்னும் சொல்லானது மிளகு, சுக்கு, ஏலம், திப்பிலி, மஞ்சள், பட்டை போன்ற பலவகைப் பட்ட உலர்ந்த மருந்துப் பொருட்களையே முதலில் குறிப்பதாயிற்று.

இப் பொருட்கள் உலர்ந்து கடினமாக இருப்பதால் இவற்றை அப்படியே பயன்படுத்த முடியாது. ஆகவே, இவற்றை அரக்குதல் அதாவது தேய்த்தல் வினை மூலம் அரைத்துப் பயன்படுத்தியதால் இப் பொருட்களுக்குச் சரக்கு என்ற பெயர் உண்டாயிற்று எனலாம். அதாவது,

அரக்கு (தேய்) >>> சரக்கு (தேய்க்கப்படுவது)

அரக்கு என்பது எவ்வாறு சரக்கு என்று ஆகும் என்றால் சம்மோனைப் போலி முறைப்படி எனலாம். தமிழ்ச்சொற்கள் சொல்லின் முதலில் வரும் உயிரின்மேல் சகரமெய் ஏற்று வருவதனையே சம்மோனைப் போலி என்பர். இவ்வகைப் போலிகளுக்கு மேலும் சில காட்டுகளைக் கீழே காணலாம். ,

இப்பி >>> சிப்பி, இறகு >>> சிறகு, அமை >>> சமை, அரண் >>> சரண்.

பி.கு: அரக்கு எப்படி சகரமெய் ஏற்று சரக்கு என்று ஆகியதோ அதைப்போல அருகு என்பதும் சகரமெய் ஏற்று சருகு என்று மாறும். அருகுதல் என்றால் குறைதல், அழிதல் என்றெல்லாம் பொருட்கள் உண்டு. ஈரப்பசையானது மென்மெல அருகி அதாவது குறைந்து குறைந்து முற்றிலும் இல்லாமற்போன பொருளே சருகு என்று அழைக்கப்படுகிறது. இப் பெயரின் தோற்றம் கீழே:

அருகு >>> சருகு.

சாதாரணம்:

சாதாரணம் என்பது ஒரு தஞ்சந்தச் சொல்லாகும். அதாவது தமிழில் இருந்து சமக்கிருதத்திற்குச் சென்று மீண்டும் தமிழுக்கே திரும்பி வந்திருப்பது. இதைப்பற்றி விரிவாகக் கீழே காணலாம்.

தாரம் என்றால் உணவுப்பொருட்கள் உட்பட பல்வேறு பொருட்களையும் குறிக்கும். தாரம் என்றால் கொடை என்றும் பொருள் உண்டு. இந்த தாரம் என்ற சொல்லே தருமம் என்பதன் அடிப்படையும் ஆகும். இதைப்பற்றி விரிவான செய்திகளை அறிந்துகொள்ள கீழ்க்காணும் ஆய்வுக் கட்டுரையினைப் படிக்கலாம்.

தாரமே தர்மம் (THAARAM IS THE ROOT FOR DHARMA)

தாரம் ஆகிய பல்வேறு பொருட்களையும் எவ்வித எதிர்பார்ப்புமின்றி நமக்குக் கொடையாகத் தருவது இந்த பூமியே என்பதால் பூமிக்குத் தாரணி என்ற பெயர் உண்டாயிற்று.

தாரம் (பொருள், கொடை) >>> தாரணி (தருபவள், பூமி)

பூமிக்குத் தாரணி மட்டுமின்றி உலகம் என்ற இன்னொரு பெயரும் உண்டு. ஆனால் இந்த உலகம் என்ற சொல்லானது பரந்து விரிந்த இடத்தினை மட்டுமின்றி ஆகுபெயராக அதில் வாழும் மக்களின் தொகுதியையும் அவர்களது வழக்கத்தையும் குறிக்கப் பயன்படுத்தப் பட்டுள்ளது. தமிழ் அகராதிகளும் உலகம் என்ற சொல்லுக்கு வழக்கம் என்ற பொருளைக் கொடுத்துள்ளதைப் பார்க்கலாம்.

உலகம் = மக்கள் தொகுதி, வழக்கம்.

தமிழ் அகராதிகள் மட்டுமின்றி திருவள்ளுவரும் உலகம் என்ற சொல்லை வழக்கம் என்ற பொருளில் கீழ்க்காணும் குறளில் பயன்படுத்தி இருப்பதைப் பார்க்கலாம்.

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார். - 140

மேற்காணும் குறளில் வரும் உலகம் என்ற சொல் உலக வழக்கம், நடைமுறை என்ற பொருளில் வருவதைத் தெள்ளத்தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.

உலகம் என்ற சொல் எவ்வாறு ஆகுபெயராக வழக்கம், நடைமுறை என்ற பொருட்களைக் குறிக்குமோ அதைப்போலவே தாரணி என்ற சொல்லும் கீழ்க்காணுமாறு நடைமுறையைக் குறிக்கப் பயன்படுகிறது.

தாரணி (உலகம்) >>> தாரணம், தாரணை
                    = உலக வழக்கம், ஒழுங்கு, இயல்பு.

உலக வழக்கத்தைக் குறிப்பதான தாரணம் என்ற தமிழ்ச்சொல்லே கீழ்க்காணும் விதிகளின்படி தமிக்ருதத்தில் மாற்றப் பட்டுள்ளது.

தாரணம் >>> சா`தா^ரண் (வி. 20,15,6)

வி.20 - பிரசமோனை விதி - இதன்படி, சா என்னும் முன்னொட்டு பெற்றது.
வி.15 – கிரந்தமாற்று விதி – இதன்படி சகரமும் தகரமும் கிரந்த ஒலிகளாக மாற்றம் பெற்றன.
வி.6 - விகுதிகெடல் விதி - இதன்படி அம் என்னும் விகுதி கெட்டது.

இப்படி தாரணம் என்ற தமிழ்ச்சொல்லில் இருந்து தோன்றிய சா`தா^ரண் என்ற தமிக்ருதச் சொல்லே மீண்டும் தமிழுக்கு வந்தபோது தமிழ்மொழிக்கு ஏற்ப சாதாரணம் என்று மாறியது. இச்சொல்லின் உண்மையான தோற்ற வரலாறு இதோ:

தாரணம் (தமிழ்) >>> சா`தா^ரண் (தமிக்ருதம்) >>> சாதாரணம் (தஞ்சந்தம்)

பி.கு: சாதாரணம் தமிழ் அல்ல என்பதால் சாதாரணம் என்று சொல்லாமல் தாரணம் என்று சொன்னாலே போதுமானது. மேலும், ஆங்கிலத்தில் NORMS என்பது ஒழுங்கு, விதிமுறையைக் குறிக்கும். ஒழுங்காக, இயல்பாக நடப்பதையே ஆங்கிலத்திலும் NORMAL என்று கூறுவார்கள். அதைப்போல, தாரம் என்ற தமிழ்ச் சொல்லுக்கும் இயல்பு, ஒழுக்கம் என்ற பொருட்கள் உண்டு.  NORM என்ற ஆங்கிலச் சொல்லும் தாரம் என்ற தமிழ்ச் சொல்லும் பொருள், ஒலி ஆகிய இரண்டிலும் நெருங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

சாமானியம்:

சாமானியம் என்பது தமிழ்ச் சொல்லா என்றால் இல்லை, அதுவொரு தஞ்சந்தச் சொல் ஆகும். அதாவது, தமிழில் இருந்து சமக்கிருதம் சென்று மீண்டும் தமிழுக்கு வந்துள்ள ஒரு சொல். இது எப்படி என்று விரிவாகக் கீழே பார்க்கலாம்.

உலகம் என்ற சொல்லானது பரந்த இந்த நிலத்தை மட்டுமின்றி நிலத்தில் வாழும் மக்களின் பொதுவழக்கினையும் குறிக்கும் என்று தமிழ் அகராதி கூறுகிறது. இதன் அடிப்படையில் தான், உலகத்தைக் குறிக்கும் தாரணி என்ற சொல்லில் இருந்து பொதுவழக்கினைக் குறிக்கும் தாரணம், தாரணை ஆகிய தமிழ்ச் சொற்கள் தோன்றின என்று முன்னர் கண்டோம். தாரணம் என்ற தமிழ்ச் சொல்லில் இருந்தே சா`தா^ரண் என்ற தமிக்ருதச் சொல் தோன்றியது என்றும் மேலே கண்டோம்.

இதே முறைப்படிதான் சாமானியம் என்னும் சொல்லும் தோன்றியுள்ளது. மண் என்ற .சொல்லானது உலகத்தை மட்டுமின்றி, மக்களின் பொது வழக்கிற்கும் ஆகுபெயராக வருவது இயல்பான ஒன்றுதான். ஒரு இடம் / ஊர் / மண்ணுக்குரிய பொது வழக்கானது மணியம் என்று அழைக்கப்படும்.

மண் + இயம் = மண்ணியம் >>> மணியம் = பொது வழக்கு.

ஒரு ஊரில் உள்ள மக்கள் அனைவருக்கும் பொதுவாக இருக்கும் கோவில், மடம், பள்ளி, குளம், சந்தை, சுடுகாடு போன்ற பலவற்றுக்கும் பொதுவான நடைமுறைகளை வகுத்து அதனை மேற்பார்வை செய்வதை மணியம் என்றும் அப்பணியைச் செய்பவரை மணியக்காரர் என்றும் இன்னும் தமிழகத்தின் பல ஊர்களில் வழங்கி வருகிறார்கள்.

பொதுவழக்கு என்னும் பொருளைத் தருவதான மணியம் என்ற சொல்லே தமிக்ருத மொழியில் கீழ்க்காணுமாறு மாறும்.

மணியம் >>> சா`மான்ய (வி. 20,1,4,24,6)

வி. 20 – பிரசமோனை விதி – இதன்படி, சா` என்னும் முன்னொட்டு சேர்ந்தது.
வி. 1 – ஆதிநீடல் விதி – இதன்படி, ஆதி மகரம் மாகாரமாக நீண்டது.
வி. 4 – மெய்யெதுகை விதி – இதன்படி, எதுகையில் இருந்து உயிர்நீங்கி ண் என்று மெய்யாகியது.
வி. 24 – போலிமாற்று விதி – இதன்படி, ணகரம் னகரமாக மாறியது.
வி. 6 – விகுதிகெடல் விதி – இதன்படி மகர விகுதி கெட்டது.

மணியம் என்ற தமிழ்ச் சொல்லில் இருந்து உருவான சா`மான்ய என்னும் தமிக்ருதச் சொல்லே மீண்டும் தமிழுக்கு வரும்போது தமிழ்முறைப்படி திரிந்து சாமானியம் என்று மாறும். இச் சொல்லின் தோற்றமுறை கீழே:

மணியம் (தமிழ்) >>> சா`மான்ய (தமிக்ருதம்) >>> சாமானியம் (தஞ்சந்தம்)

பி.கு: சாமானியம் என்பதற்குப் பதிலாகவும் கீழ்க்காணும் ஆங்கிலச் சொற்களுக்கு நிகராகவும் மணியம் என்ற சொல்லைப் பயன்படுத்தலாம்.

COMMON = மணிய,
COMMON MAN = மணியமன் (மன் = மனிதர்)
COMMON PEOPLE = மணியமார்.

தற்போது ஒரு கிராமத்தை மேலாண்மை செய்பவரை கிராம நிர்வாக அதிகாரி என்று கூறுவதுண்டு. இதற்கு மாற்றாக, ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் மணியக்காரர் என்ற சொல்லையே ஆங்கிலச் சொல்லுக்கு நிகராகப் பெரிதும் பயன்கொள்ளலாம். அதாவது,

VILLAGE ADMINISTRATIVE OFFICER = மணியக்காரர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.