முன்னுரை:
தமிழ் அல்லாத
பிறமொழிச் சொற்களைத் தமிழில் எழுதும்போது சில ஒலிகளைக் குறிப்பதற்காக ஸ, ஜ, ஹ, ஷ,
க்ஷ என்ற ஐந்து கிரந்த எழுத்துக்களைத் தமிழர்கள் பயன்படுத்தி வருகின்றனர். தமிழ்
இலக்கண நூல்கள் எவையும் குறிப்பிடாத இந்த கிரந்த எழுத்துக்களைத் தமிழில்
எழுதும்போது அதனை நீக்கிவிட்டு வேறொரு தமிழ் எழுத்தைக் கொண்டே எழுதவேண்டும் என்று
தொல்காப்பியர் சொல்லதிகாரம் 401 ஆவது நூற்பாவில் கூறியுள்ளார்.
பெரும்பாலான தமிழ்
இலக்கியங்கள் மேற்காணும் விதியைப் பின்பற்றியிருந்தாலும் கல்வெட்டுக்கள் இந்த
விதியைக் காற்றில் பறக்க விட்டுள்ளன. சேர, சோழ, பாண்டியர் ஆட்சிக் காலத்தில்
எழுதப்பட்ட ஏராளமான கல்வெட்டுக்களில் இந்த விதி மீறப்பட்டுள்ளது. வடசொற்களில்
இருக்கும் புதிய ஒலிகளைக் குறிக்க மேற்காணும் கிரந்த எழுத்துக்களைக்
கல்வெட்டுக்களில் பயன்படுத்தி இருக்கின்றனர். தமிழ்மொழிக்கு இந்த கிரந்த
எழுத்துக்கள் உண்மையிலேயே தேவைதானா?. என்பதைப் பற்றி இக் கட்டுரையில் விரிவாகக்
காணலாம்.
சொல்லதிகார நூற்பா 401 கூறுவது என்ன?:
வடசொற்களைத் தமிழில்
எழுதும்போது என்ன செய்யவேண்டும்? என்று சொல்லதிகாரம் நூற்பாவில் கீழ்க்காணுமாறு
கூறியுள்ளார் தொல்காப்பியர்.
வடசொல் கிளவி வடவெழுத்து ஒரீஇ
எழுத்தோடு புணர்ந்த சொல்லாகும்மே. – தொல்.சொல்.401.
அதாவது, வடசொல்லானது
அதிலுள்ள வடவெழுத்துக்களை நீக்கித் தமிழ் எழுத்துக்களுடன் கூடிய சொல்லாக மாறும்
என்று இந்த நூற்பாவுக்கு விளக்கம் கொடுத்துள்ளனர். இதன்படி, ஸ்நேகா என்ற வடமொழிப்
பெயரை எப்படித் தமிழ் எழுத்துக்களால் எழுதுவது?. இப்பெயரில் உள்ள ஸ் என்ற வட
எழுத்தினை நீக்கிவிட்டு சகர எழுத்தைப் போட்டால் ச்நேகா என்றுதான் வரும்.
தொல்காப்பியரும்
மேற்காணும் நூற்பாவின்படி, ஸ்நேகா என்பதனை ச்நேகா என்றே எழுதச் சொல்லுகிறார்.
மாறாக, சிநேகா என்றோ சுநேகா என்றோ சநேகா என்றோ சகரத்துடன் உயிரெழுத்தைக் கூட்டி
எழுதச் சொல்லவில்லை; அது அவரது நோக்கமுமில்லை. காரணம், அப்போதுதான் அது பிறமொழிச்
சொல் என்று மக்களுக்குத் தெரிய வரும் என்றும் தமிழ்மொழியில் கலந்துவிடாமல்
எப்போதும் அது தனித்தே இருக்கும் என்றும் கருதியிருக்கிறார். சான்றாக,
ஸ்டாலின், அஸ்வின், ரமேஷ் என்பதை நூற்பாவின்படி எழுதாமல்
சுடாலின், அசுவின், உரமேசு என்று எழுதினால் நாளடைவில் இவை தமிழ்ச் சொற்களாகவே
அறியப்பட்டுத் தமிழில் கலந்துவிடும். இதனால் தமிழ்மொழியின் தூய்மையானது
கேள்விக்குறியாகி விடும்.
வடசொற்களால்
தமிழ்மொழியின் தூய்மை கெட்டுவிடக் கூடாது என்ற உயர்ந்த நோக்கத்தினைக் கருத்தில்
கொண்டே இந்த நூற்பாவைத் தொல்காப்பியர் இயற்றினார் என்க. எனவே, தொல்காப்பிய
நூற்பாவின்படி, ஸ்டாலின், அஸ்வின், ரமேஷ் ஆகிய வடசொற்களைக் கீழ்க்காணுமாறு தான்
எழுத வேண்டும் என்று அறியலாம்.
ஸ்டாலின் =
ச்டாலின், அஸ்வின் = அச்வின், ரமேஷ் = ரமேச்.
கிரந்த எழுத்துக்களால் முழுமையான பயனுண்டா?:
வடசொற்களில் உள்ள
வடவெழுத்துக்களை நீக்கியே எழுதவேண்டும் என்று தொல்காப்பியர் கூறினாலும் தமிழ்மொழியில்
இல்லாத புதிய ஒலிகளைக் குறிக்க கிரந்த எழுத்துக்களைத் தான் இன்றும் தமிழர்கள்
பயன்படுத்தி வருகின்றனர். சான்றாக,
MAHATMA என்பதை
மஹாத்மா என்றும்
SUBASH என்பதை ஸுபாஷ்
என்றும்
கிரந்த எழுத்துக்களைக்
கொண்டு எழுதி வருகின்றனர். கிரந்த எழுத்துக்கள் பிறமொழிப் பெயர்களைத் தமிழில்
மொழிபெயர்ப்பதற்கு உதவியாக இருப்பதாகக் கருதுகின்றனர். ஆனால், இந்த ஐந்து கிரந்த
எழுத்துக்களை மட்டும் வைத்துக் கொண்டு தமிழில் இல்லாத புதிய ஒலிகள் அனைத்தையும்
குறிப்பிட முடியாது என்பதுதான் உண்மை. இந்த உண்மையைக் கீழ்க்காணும் சில
சான்றுகளின் உதவியுடன் எளிதில் புரிந்து கொள்ளலாம்.
GANDHI, BABUR, DHARMA, DIANA, BUDDHA
மேற்காணும் பிறமொழிப்
பெயர்களில் எதனையும் இந்த ஐந்து கிரந்த எழுத்துக்களின் உதவியுடன் மொழிபெயர்க்க
முடியுமா என்றால் முடியாது. காரணம், GA, BA, DHA, DA போன்ற ஒலிகளைக் குறிக்கும்
கிரந்த எழுத்துக்கள் இல்லை. இதைப்போல ஏராளமான பிறமொழிச் சொற்களை மிகச் சரியான
ஒலிப்புடன் குறிப்பதற்குக் கிரந்த எழுத்துக்கள் இல்லை என்பது இங்கே கவனிக்க
வேண்டிய கருத்தாகும். எனவே, கிரந்த எழுத்துக்களால் தமிழுக்கு முழுமையான பயன் இல்லை
என்பது உறுதியாகிறது.
கிரந்த எழுத்துக்களால் தமிழுக்குத் தீமையே:
கிரந்த எழுத்துக்களால்
தமிழுக்கு ஒரு பயனும் இல்லை என்று மேலே கண்டோம். மாறாகக், கிரந்த எழுத்துக்களின்
பயன்பாட்டால் தமிழுக்குத் தீமைகளே அதிகம் உண்டாகி விட்டன எனலாம்.. கல்வெட்டுக்களிலும்
பிற்காலத்து எழுந்த சில இலக்கியங்களிலும் கிரந்த எழுத்துக்களைத் தமிழ்
எழுத்துக்களுடன் தாராளமாகச் சேர்த்தும் புகுத்தியும் எழுதத் தொடங்கினர். இதன்
விளைவாக, பல ஆயிரக்கணக்கான தமிழ்ச் சொற்கள் தமது உண்மை வடிவத்தை இழந்தன. சான்றாக,
புத்தகம் புஸ்தகம்
என்று ஆகியது.
சலம் ஜலம் ஆகியது.
நானம் ஸ்நானம் ஆகியது.
இப்படி ஏராளமான
தமிழ்ச் சொற்களில் தேவையே இன்றி கிரந்த
எழுத்துக்களைச் சேர்த்தும் புகுத்தியும் எழுதியதன் விளைவாகப் பல தமிழ்ச் சொற்கள்
தமிழா? சமக்கிருதமா? என்ற கேள்விக்கு உள்ளாகியுள்ளன. சங்க இலக்கியங்களில்
பயன்படுத்தப்பட்ட சொல்லாகவே இருந்தாலும் கிரந்த எழுத்து கலந்து எழுதப்பட்ட
காரணத்தால் அவை சமக்கிருதமே என்று மக்கள் நம்பத் தொடங்கி விட்டனர். நம்பியதுடன்
நிற்காமல் அந்தச் சொற்களைப் பயன்படுத்துவதையும் கைவிட்டு விட்டனர் என்பதே கிரந்த
எழுத்துக்களால் தமிழுக்கு விளைந்த மிக மோசமான விளைவாகும். சான்றாக, சந்திரன்,
சிரத்தை, சாமி போன்ற சொற்கள் எல்லாம் தமிழாகவே இருக்க, அவற்றில் வரும்
சகரத்துக்குப் பதிலாக ஸகரத்தைப் போட்டு எழுதியதால் இவற்றைத் தமிழ் அல்ல என்று நினைத்துத்
தமிழ் ஆர்வலர் பலரும் இச்சொற்களுக்குப் பதிலாக நிலவு, அன்பு, கடவுள் என்ற
சொற்களையே பயன்படுத்துகின்றனர்.
கிரந்த எழுத்துக்களை
ஏராளமான தமிழ்ச் சொற்களில் தாராளமாகக் கலந்து எழுதியது தவறு என்று தற்போது
தமிழர்கள் உணர்ந்து விட்டனர். அதன் தொடர்ச்சியாக, இப்போது அந்த கிரந்த
எழுத்துக்களை எல்லாம் தமிழ்ச் சொற்களில் இருந்து முழுமையாக நீக்கவேண்டும் என்று
விரும்பி அதற்கென சில கணினி மென்பொருட்கள் மற்றும் செயலிகளை உருவாக்கி
வருகின்றனர்.
கிரந்த எழுத்துக்களுக்கு மாற்றுவழி என்ன?
கிரந்த எழுத்துக்களால்
தமிழுக்கு முழுமையான பயன் இல்லை என்றும் அவற்றால் தமிழுக்குத் தீமையே என்றும் மேலே
கண்டோம். என்றால், பிறமொழிப் பெயர்களை அவற்றின் உண்மையான ஒலிப்புடன் கிரந்த
எழுத்து கலவாமல் எப்படித் தமிழ் எழுத்துக்களைக் கொண்டு எழுதுவது என்ற கேள்வி
எழுகிறது. இதற்கான விடையை இங்கே காணலாம்.
சொல்லதிகார நூற்பா 401
ன்படி, வடசொற்களில் இருந்து வடவெழுத்துக்களை நீக்கிவிட்டுத் தமிழ் எழுத்துக்களைக்
கொண்டு எழுதலாம் என்ற ஒரு வழிமுறை இருப்பதை மேலே கண்டோம். ஆனால், இந்த முறைப்படி
எழுதும்போது சில சிக்கல்கள் எழாமல் இல்லை. சான்றாக, அஸ்வின் என்பதை நூற்பாவின்படி அச்வின்
என்று எழுதினால், இதில்வரும் சகரத்தை எவ்வாறு ஒலிக்கவேண்டும் என்பது புதிதாக
அச்சொல்லைப் படிப்பவர்களுக்குப் புரியாமல் போகிறது. இதனால் அவர்கள் அச்வின் என்றே
ஒலிப்பார்கள். அதுமட்டுமின்றி, அச்வின் என்பதை ஆங்கிலத்தில் எழுதும்போதும் ACHWIN
என்றே எழுதுவார்கள். இப்படி அந்தச் சொல்லின் உண்மையான ஒலிப்பு சிதைவதால் அதனைக்
கேட்பவர்கள் தவறாகப் புரிந்து கொள்ளவே வாய்ப்புக்கள் அதிகமாகிறது.
அதுமட்டுமின்றி, வடவெழுத்துக்களைத்
தமிழ் எழுத்துக்களால் மாற்றி எழுதும்போது அந்தச் சொற்களின் பொருளும் தவறாகப்
புரிந்து கொள்ளப்படுவதுண்டு. சான்றாக, விஜயம் என்ற வடசொல்லை நூற்பாவின்படி விசயம்
என்று தமிழில் மாற்றி எழுதும்போது தவறாகப் புரிந்துகொள்ளப்படும். காரணம், விஜயம்
என்பது வெற்றியையும் விசயம் என்பது கருப்பட்டியையும் குறிக்கும்.
இதுபோன்ற நடைமுறைச் சிக்கல்களைத்
தீர்ப்பதற்காகவே உருவாக்கப்பட்டது தான் ஆறுரூபாய் முறை ஆகும். ஆறுரூபாய் முறையைப்
பற்றிக் கீழ்க்காணும் சுட்டியில் உள்ள கட்டுரையில் முழுமையான தகவல்களைத்
தெரிந்துகொள்ளலாம்.
ஆறுரூபாய் முறையைப்
பற்றியும் அது செயல்படும் விதம் பற்றியும் கீழே சுருக்கமாகச் சில சான்றுகளுடன்
காணலாம்.
ஆறுரூபாய் முறை:
தமிழில் இல்லாத புதிய
ஒலிகளைக் குறிப்பதற்கு `, ~, ^ என்ற மூன்று குறியீடுகளைத் தமிழ் எழுத்துக்களுடன்
சேர்த்துப் பயன்படுத்துவதே ஆறுரூபாய் முறை ஆகும். கணினியின் விசைப்பலகையில் உள்ள
இந்த மூன்று குறியீடுகளும் கூட்டல், கழித்தல் போன்ற குறியீடுகளைப் போல அனைத்து
மொழியினருக்கும் பொதுவானவையே ஆகும். கணினி விசைப்பலகையில் ஆறாம் எண் உள்ள பொத்தானிலும்
ரூபாய்க் குறியீடு உள்ள பொத்தானிலும் இந்த மூன்று குறிகள் இருப்பதால் ஆறுரூபாய்
என்று இந்த முறைக்குப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இப்புதிய முறைப்படி,
வல்லின மெய்யெழுத்துக்களுடன் இந்த மூன்று குறியீடுகளும் சேர்ந்து எவ்வாறு புதிய
ஒலிகளைக் குறிக்கப் பயன்படும் என்று கீழே உள்ள அட்டவணையில் காணலாம்.
குறியீடு
|
`
|
~
|
^
|
^^
|
^`
|
^~
|
க
|
HA
|
GA
|
GHA
|
|
|
|
ச
|
SA
|
SHA
|
JA
|
JHA
|
ZA
|
KSHA
|
ட
|
DA
|
|
DDA
|
|
|
|
த
|
DHA
|
|
DDHA
|
|
|
|
ப
|
BA
|
|
BHA
|
|
FA
|
|
மேற்காணும்
அட்டவணையைப் பயன்படுத்திச் சில பிறமொழிப் பெயர்களை எவ்வாறு தமிழ் எழுத்துக்களால்
எழுதலாம் என்று காணலாம்.
STALIN
- ச்`டாலின்
SUBASH CHANDRA BOSE
- சு`பா`ச்~ சந்த்`ர போ`ச்`
RAMESH
- ரமேச்~
BILL CLINTON
- பி`ல் க்ளிண்டன்
ANSUI ZEN
- அன்சூ`ய் செ^`ன்
MAHATMA GANDHI
- மகா`த்மா கா~ந்தி`
JAWAHARLAL NEHRU
- ச^வக`ர்லால் நேரு
BHAGAVAT SING -
ப^க~வத் சி`ங்
BUDDHA - பு`த்தா^
LAKSHMAN -
லச்^~மண்
FEROZ
-
பெ^`ரோச்^` அல்லது ஃபெரோச்^`
ஆறுரூபாய் முறையின் நன்மைகள்:
ஆறுரூபாய் முறையைப்
பயன்படுத்தி பிறமொழிச் சொற்களை எழுதுவதால் என்னென்ன நன்மைகள் விளையும் என்று இங்கே
காணலாம்.
1.
தமிழ்மொழியில்
கிரந்த எழுத்துக்களின் பயன்பாடு அறவே ஒழிக்கப்படுகிறது.
2.
பிறமொழிச்
சொற்களில் உள்ள எழுத்துக்களை எவ்வாறு ஒலிக்க வேண்டும் என்று புரிந்துகொண்டு சரியாக
ஒலிக்க முடிகிறது.
3.
`,
~, ^ என்ற மூன்று குறியீடுகளைக் கொண்டவை எல்லாம் பிறமொழிச் சொற்கள் என்பதால்
அவற்றைத் தனியே இனம் காண முடிகிறது. இதனால் தமிழில் பிறமொழிக் கலப்பினை முற்றிலும்
தவிர்க்க முடிகிறது.
4.
ஆங்கிலம்
உட்பட பிறமொழிகள் எவற்றின் உதவியுமின்றி முழுக்க முழுக்கத் தமிழ் எழுத்துக்களிலேயே
எந்தவிதமான சிக்கல்களும் இல்லாமல் அறிவியல் கட்டுரைகளை எழுத முடிகிறது.
5.
இந்த
மூன்று குறியீடுகளும் உலகப் பொதுவாக இருப்பதால் எந்த நாட்டிலும் கணினியின்
உதவியுடன் இந்த முறையினை எளிதாகப் பயன்படுத்த முடியும்.
6.
பிறமொழிப்
பெயர்களில் உள்ள எழுத்துக்களைச் சிதைக்காமல் அப்படியே எழுதுவதால் அப்பெயரை
ஒலிப்பதிலும் கேட்பதிலும் எழுதுவதிலும் சிக்கல்கள் எழுவதில்லை.
முடிவுரை:
இதுவரை கண்டவற்றில்
இருந்து, கிரந்த எழுத்துக்களால் தமிழுக்குப் பயனில்லை என்றும் தீமையே உண்டென்றும் விளக்கமாக
அறிந்து கொண்டோம். அதேசமயம், கிரந்த எழுத்துக்களுக்கு மாற்றாக ஆறுரூபாய்
முறையினைப் பயன்படுத்துவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதையும் அறிந்தோம். இறுதியாக,
இக் கட்டுரையின் துணிபு கீழே:
கிரந்த எழுத்துக்கள் தமிழுக்குத் தேவையில்லை.
நல்ல உத்தியைத் தந்துள்ளிர்கள்.
பதிலளிநீக்குமிக்க மகிழ்ச்சியும் நன்றியும் ஐயா.
நீக்குதெளிவான விளக்கம். நன்றி
பதிலளிநீக்குமிக்க மகிழ்ச்சி. நன்றி. :))
நீக்கு