கந்தன்:
கந்தன்
என்பது முருகக் கடவுளைக் குறிப்பதான தூய தமிழ்ப் பெயரே ஆகும். சங்ககாலம் தொட்டு இன்று
வரையிலும் புழக்கத்தில் இருந்துவரும் பல தமிழ்ப் பெயர்களில் ஒன்றுதான் கந்தன் ஆகும்.
கந்தன் என்ற பெயரை மக்களுக்குச் சூட்டுவது இன்றைய வழக்கம் மட்டுமல்ல, சங்ககாலத்திலும்
வழக்கமே ஆகும். இதற்குச் சான்றாகக் கீழ்க்காணும் புறநானூற்றுப் பாடலைக் காணலாம்.
வல் வேல் கந்தன் நல் இசை அல்ல - புறம்
380
கந்து
என்ற சொல்லுக்குத் தூண், தறி, குற்றி ஆகிய பொருட்கள் உண்டென்று தமிழ் அகராதிகள் கூறுகின்றன.
மரம் அல்லது கல்லால் ஆன தூணத்தில் தெய்வம் உறைவதாக மக்கள் நம்பி வழிபட்டு வருவதை இன்றளவிலும்
பார்க்கலாம். சங்ககாலத் தமிழர்களும் தூணத்தில் கடவுள் உறைவதாக நம்பி வழிபட்டனர். இதைப்பற்றிக்
கூறும் சங்க இலக்கியப் பாடல்கள் கீழே சான்றாகக் காட்டப்பட்டுள்ளன.
பொதியில் கடவுள் போகிய கரும் தாள் கந்தத்து
- அகம் 307
கலி கெழு கடவுள் கந்தம் கைவிட
பலி கண்மாறிய பாழ்படு பொதியில் - புறம்
52
மேலே
கண்டவாறு. கந்து எனப்படும் தூணத்தில் உறைவதாகக் கருதி வணங்கப்பட்ட கடவுளே கந்தன் என்று
அழைக்கப்பட்டான். சரி, கந்தன் என்னும் கடவுள் முருகனைத் தான் குறிக்குமா என்றால் ஆம்
என்று உறுதியாகக் கூறலாம். காரணம், மேற்காணும் இரண்டு பாடல்களிலும் பொதியில் மலை வருவதே.
பொதிகை
மலை என்றும் அகத்தியர் மலை என்றும் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுவதான பொதியில் மலையில்
ஏராளமான காந்தள் பூக்கள் உண்டு. இந்த காந்தள் பூக்கள் முருகனுக்கு மிகவும் விருப்பமான
மலர் என்று சங்க இலக்கியத்தில் காணலாம். அத்துடன், முருகன் மலைகளில் விரும்பி வாழ்பவன்
என்று இன்றளவிலும் அறியப்படும் கடவுளாவான். இவற்றையெல்லாம் ஒருங்கிணைத்துப் பார்க்கும்போது,
பொதியில் மலையில் தூணத்தில் உறையும் கடவுளாகச்
சங்ககாலத் தமிழர்களால் வணங்கப்பட்டவன் முருகனே என்று உறுதியாகிறது.
கந்தில்
உறையும் கடவுளாக அறியப்பட்ட தமிழ்க் கடவுளாகிய கந்தனே பிற்காலத்தில் வடமொழியாளர்களால்
ச்`கந்த என்ற பெயர் பெற்றான். கந்தன் என்ற தமிழ்ச் சொல்லில் இருந்து கீழ்க்காணும் விதிகளுக்கு
ஏற்ப ச்`கந்த என்ற தமிக்ருதப் பெயர் தோன்றியது.
கந்தன் >>> ச்`கந்த (வி.3,6)
வி.3
– கேழ்மோனை விதி – இதன்படி ச்` என்னும் முன்னொட்டு பெற்றது.
வி.6
– விகுதிகெடல் விதி – இதன்படி னகர விகுதி கெட்டது.
குமரன்:
குமரன்
என்பதும் முருகனைக் குறிப்பதான அழகிய தமிழ்ச் சொல்லே ஆகும். குமரன் என்பது குமாரன்
என்னும் தமிழ்ச் சொல்லின் இன்னொரு வடிவமே ஆகும். குமரன் / குமாரன் என்னும் தமிழ்ச்
சொல்லுக்கு இளமையும் அழகும் நிறைந்தவன் என்பது பொருளாகும். என்றுமே மாறாத இளமையும் அழகும் நிறைந்தவன் என்பதால் முருகனுக்குக் குமரன்
/ குமாரன் என்னும் பெயர் ஏற்பட்டது எனலாம். குமாரன் என்ற பெயர் உருவான முறையினைக்
கீழே பார்க்கலாம்.
குமாரன்,
குமாரி ஆகிய இரண்டு சொற்களுக்கும் அடிப்படையாய் இருப்பது கொம்மை என்ற தமிழ்ச் சொல்லே
ஆகும். கொம்மை என்ற பண்புப் பெயர்ச் சொல்லுக்கு இளமை, அழகு ஆகிய பொருட்கள் உண்டென்று
தமிழ் அகராதிகள் காட்டுகின்றன. கொம்மை என்ற சொல்லில் இருந்து கீழ்க்காணும் முறைப்படி
குமாரனும் குமாரியும் பிறக்கும்.
கொம் (மை) + ஆர் + அன் = கொமாரன்
>>> குமாரன் = இளமையும் அழகும் பொருந்திய ஆண் பிள்ளை.
கொம் (மை) + ஆர் + இ = கொமாரி
>>> குமாரி = இளமையும் அழகும் பொருந்திய பெண் பிள்ளை.
மேற்காண்பவற்றில்
வரும் ஆர் என்பது பொருந்துதல் வினையைக் குறிக்கும். கொம்மை என்னும் பண்புப்பெயர்ச்
சொல்லானது இதனுடன் புணரும்போது மை விகுதி கெட்டும் அன் / இ என்னும் விகுதியுடன் சேர்ந்தும்
இவ்வாறு ஆகும்.
கொமாரன்
/ கொமாரி என்பது குமாரன் / குமாரி என்று எவ்வாறு மாறும் என்றால் ஒகர – உகரப் போலி முறைப்படி
எனலாம். இவ்வகைப் போலிகளுக்குச் சான்றாகப் புழக்கத்தில் / இலக்கியத்தில் உள்ள வேறுசில
காட்டுகளையும் கீழே காணலாம்.
கொட்டு >>> குட்டு, கொத்து
>>> குத்து, தொடர் >>> துடர்
கொடு >>> குடு, தொடை
>>> துடை கொம்மி >>> கும்மி
பி.கு:
இன்றும் பல சிற்றூர்களில் கொமாரு, கொமரி என்று பேசுவதை வழக்கமாகக் காணலாம். இவை கொச்சை
வழக்கல்ல; இவற்றில் இருந்துதான் குமாரும் குமரியும் தோன்றின என்பது இதனால் உறுதியாகிறது.
சரவணன்:
சரவணன்
– தமிழ்க் கடவுளாகிய முருகனுக்கு உரிய அழகிய பல தமிழ்ப் பெயர்களில் ஒன்றே சரவணன். ஆனால்,
இப் பெயரையும் வழக்கம்போல சமக்கிருதத் தொடர்புடையதாக்கி அதற்குப் பல கதைகளையும் கற்பித்து
விட்டனர் வடமொழியாளர். இச் சொல்லின் உண்மையான மூலம் எதுவென்றும் அதிலிருந்து பிற சொற்கள்
எவ்வாறு தோன்றின என்றும் கீழே விரிவாகப் பார்க்கலாம்.
கல்வி
கற்பித்தலில் முகன்மையான செயலே சொற்களை உரக்கப் பேசுதல் ஆகும். ஆசிரியர் பாடங்களை உரத்துச்
சொல்லச் சொல்ல, அவற்றை அப்படியே அனைத்து மாணவர்களும் ஒரே நேரத்தில் சத்தமாக ஒலிப்பர்.
இதனால் அந்த இடமே மிகுந்த ஒலிப்புடையதாக இருக்கும். இப்படிச் சத்தமாகப் படிப்பதால்
பாடங்கள் காது வழியாக மூளைக்குள் சென்று ஆழப் பதிவாகும். அமைதியாகக் கண்களால் பார்த்துப்
படிப்பதைக் காட்டிலும் சத்தமாக வாய்விட்டுச் சொல்லிப் படிப்பது நன்கு மனதில் நிற்கும்
என்று கல்வியியல் ஆய்வாளர்களும் தற்போது ஒப்புக் கொள்கின்றனர்.
கல்விக்குக்
கேள்வி என்றொரு பெயருமுண்டு. காது வழியாகக் கேட்டு அறியப் பெறுவதே கல்வி என்பதால் அதற்கு
அப்பெயர் ஏற்பட்டது. கல்வியைப் பற்றியும் கேள்வியைப் பற்றியும் மொத்தம் 20 பாக்களை
இயற்றிய திருவள்ளுவர் கீழ்க்காணும் குறளில் தான் கல்வியைச் சத்தம் போட்டுப் படிக்க
வேண்டும் என்று கூறுகிறார்.
உலப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில் – 394
இக் குறளில்
வரும் உலப்பல் என்பது கலப்புக் கட்டோசை அதாவது பலரது ஒலிகளின் கலவையைக் குறிக்கும்.
புலவர் என்று இங்கே வள்ளுவர் குறிப்பிடுவதும் கல்வி பயிலும் மாணவர்களே ஆவர். இக் குறளின்
பொருள் இதுதான்: ஒன்றுகூடிச் சத்தம் போட்டு படிப்பதும் பிரிந்து சென்று படித்தவற்றை
நினைத்துப் பார்ப்பதுமே மாணவர்களின் பணியாகும். இக் குறள் பற்றிய முழுமையான தகவல்களைக்
கீழ்க்காணும் கட்டுரையில் படித்துத் தெரிந்து கொள்ளலாம்.
இதைப்போன்ற
ஒரு கருத்தாக்கத்தின் அடிப்படையில் தோன்றிய பெயரே சரவணன் என்பதாகும். இப் பெயரின் தோற்றமுறை
கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
அரவு + அணம் = அரவணம் (1) >>> சரவணம்
(2) >>> சரவணன் (3)
(1) அரவு
என்ற சொல்லுக்கு ஒலி என்ற பொருளுண்டு. அணத்தல் என்றால் பொருந்துதல், தலையெடுத்தல்
/ மேலோங்குதல் என்ற பொருட்கள் உண்டு. இந்த இரண்டு சொற்களும் இணைந்து அரவணம் என்றாகும்.
இதன் பொருள் கீழே:
அரவு (ஒலி) + அணம் (மேலோங்கு) = அரவணம்
= ஒலிகள் பொருந்தி மேலோங்குவது = கல்வி.
(2) அரவணம்
என்னும் தமிழ்ச் சொல்லின் முதலில் வரும் அகர உயிர்மேல் சகரமெய் ஏறி சரவணம் என்று ஆகும்.
இவ்வாறு ஆவதன் பெயர் சம்மோனைப் போலி ஆகும். இதற்கு எடுத்துக்காட்டாக வேறு சில சான்றுகளையும்
கீழே காணலாம்.
இப்பி >>> சிப்பி, அருகு
>>> சருகு, அட்டை >>> சட்டை
(3) சரவணம்
ஆகிய கல்வியில் சிறந்தவன் என்ற பொருளில் உண்டானதே சரவணன் என்ற பெயராகும்.
சரவணம் (கல்வி) >>> சரவணன் (கல்வியில்
சிறந்தவன்)
கல்வி
/ கேள்வியைக் குறிக்கும் சரவணம் என்ற தமிழ்ப் பெயரில் இருந்தே கேள்வியையும் கேள்விக்குரிய
உறுப்பான காதினையும் குறிக்கும் தமிக்ருதப் பெயர்கள் கீழ்க்காணும் விதிகளின்படி உருவானது.
சரவணம் >>> ச்~ரவண (வி.15,16,6)
வி.15
– கிரந்தமாற்று விதி – இதன்படி சகரம் ச~கரமாக மாறியது.
வி.16
– செகுமோனை விதி – இதன்படி சகர முதலில் இருந்து உயிர் நீங்கியது.
வி.6
– விகுதிகெடல் விதி – இதன்படி மகர விகுதி கெட்டது.
பி.கு:
சரவணன் என்றால் கல்வியில் சிறந்தவன் என்பது பொருளென்று மேலே கண்டோம். ஆனால் இப் பெயர்
முருகனுக்கு ஏன் ஏற்பட்டது?. சிவன், திருமால் என்று பல கடவுளர் இருக்க, ஏன் முருகனுக்கு
இப் பெயர் சூட்டப்பட்டுள்ளது?. இக் கேள்விக்கான விடையையும் இங்கே காணலாம்.
நான்முகனே
அறியாத ஓம் என்னும் மந்திரத்தின் பொருளை அறிந்தவன் முருகன். தந்தையாகிய சிவபெருமானுக்கே
இந்த மந்திரத்தின் பொருளை உணர்த்தித் தகப்பன்சாமி என்ற பெயரைப் பெற்றவன். இவ்வாறு கல்வி கேள்வியில் சிறந்தவனாக இருந்ததால்தான் முருகனுக்குச்
சரவணன் என்ற பெயர் ஏற்பட்டது எனலாம். அதுமட்டுமின்றி, சரவணம் என்றால் கல்வி பயிலும்
இடம் என்ற பொருளில் திருப்புகழில் கீழ்க்காணும் பாடல்களில் பாடியுள்ளார் அருணகிரி நாதர்.
தகரில்
அற்ற கைத்தலம் விட பிணை சரவணத்தினில் பயில்வோனே – திருப். 794
கனமும்
குணமும் பயில் சரவணமும் பொறையும் புகழும் – திருப். 771
மேற்பாடல்களில்,
பயில் சரவணம் என்று வருவதில் இருந்தே சரவணம் என்பது கல்வி பயிலும் இடத்தைக் குறிப்பதை
உறுதிசெய்து கொள்ளலாம். சரவணம் வேறு; சரவனம் வேறு. சரவணம் என்பது கல்வி பயிலும் இடத்தைக்
குறிக்க, சரவனம் என்பது நாணற்காட்டைக் குறிக்கும். இந்த னகர ணகர எழுத்துப் போலியால்
சரவணன் என்ற தமிழ்ப்பெயரானது வடமொழிப் பெயராகவே இதுவரையிலும் அறியப்பட்டு வந்துள்ளது.
சுப்ரமணி:
சுப்ரமணி
என்பது முருகனைக் குறிப்பதான தமிழ் வழக்குச் சொல்லே ஆகும். சுப்பன், சுப்பு, சுப்பையா
என்றெல்லாம் தமிழ் மக்கள் நாவில் வலம் வருவதில் இருந்தே சுப்ரமணி என்பதும் முருகனைக்
குறிக்கும் தமிழ்ப்பெயர் தான் என்பதைப் புரிந்து கொள்ளலாம். இருந்தாலும் இது எவ்வாறு
தமிழ்ப் பெயராகும் என்பதைப் பற்றியும் இங்கே விளக்கமாகக் காணலாம்.
உம்பர்
என்ற தமிழ்ச்சொல்லுக்கு மேலே, மேலிடம், உயர்வு, தேவர் என்றெல்லாம் பல்வேறு பொருட்கள்
உண்டென்று தமிழ் அகராதிகள் காட்டுகின்றன. மணி என்ற தமிழ்ச் சொல்லுக்கு அழகு, ஒளி, ஒளிவீசும்
மணி எனப் பல்வேறு பொருட்களைத் தமிழ் அகராதிகள் காட்டுகின்றன. இந்த இரண்டு சொற்களும்
இணைந்து முருகனைக் குறிக்கும் அழகிய பெயரைக் கீழ்க்கண்டவாறு தோற்றுவிக்கும்.
உம்பர் (உயர்வு) + மணி (அழகு) = உம்பர்மணி
= உயர்ந்த அழகினை உடையவன்
= முருகன்
முருகன்
என்ற சொல்லே அழகன் என்ற பொருளைக் குறிக்க, உம்பர்மணி என்ற சொல்லும் உயர்ந்த / சிறந்த
அழகுடையவன் என்ற பொருளில் முருகனைக் குறிக்க உருவானதில் வியப்பில்லை.
முருகனைக்
குறிப்பதான உம்பர்மணி என்ற சொல்லானது கற்பனையில் படைக்கப்பட்ட சொல் அல்ல. உம்பர்மணி
என்ற சொல்லானது தேவாரத்தில் முருகனைக் குறிக்கப் பயன்படுத்தப் பட்டுள்ளது. கீழே அந்தப்
பாடல் காட்டப்பட்டுள்ளது.
உருகு மனத்து அடியவர்கட்கு ஊறும் தேனை
உம்பர்மணி முடிக்கணியை … – தேவா. 6-84/3
மேற்காணும்
பாடலில் வரும் இரண்டாவது வரிக்கு “ உயர்ந்த அழகனாகிய முருகனின் திருமுடிக்கு அணியாக
விளங்குபவனே “ என்பதே பொருத்தமான பொருளாகும். காரணம், இந்தப் பாடல் பாடப்பெற்ற இடமான
திருச்செங்காட்டங்குடி முருகனுக்குப் பல சிறப்புகள் உண்டு. இங்கு தான் சிவனும் உமையாளும்
தங்கள் மைந்தன் முருகனுடன் சிவமுருகு (சோமாச்`கந்தர்) கோலத்தில் அருளியதாகக் கூறப்படுகிறது.
இந்தக் கோவிலில் தான் முருகன் ஆறுமுகமின்றி ஒரே திருமுகமாக அசுரமயில் மீது அமர்ந்து
காட்சியளிக்கிறார். இக் கோவிலில் உள்ள முருகனை அருணகிரி நாதரும் திருப்புகழில் பாடியிருக்கிறார்.
இக் கோவிலில் உள்ள முருகனுக்கு இத்தனைச் சிறப்புக்கள் இருப்பதால்தான் அப்பரும் இந்தப்
பாடலில் முருகனைக் குறிப்பிட்டுச் சொல்லியிருக்க வேண்டும்.
இக் கோவிலில்
இருக்கும் பிள்ளையாருக்கும் பெருஞ்சிறப்பு இருப்பதாகக் கூறப்படினும் இக் கோவிலைப் பற்றிய
அப்பரின் தேவாரப் பாடல்களில் பிள்ளையாரைப் பற்றிய குறிப்புக்கள் எதுவும் இல்லை என்பது
இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த ஊரில்தான் சிவபெருமான் பிள்ளைக்கறி உண்டதாக அறியப்படும்
நிலையில், அதைப்பற்றிய ஒரு குறிப்பும் அப்பரின் பாடல்களில் இல்லை. மேற்காணும் மூன்றாவது
பாடலில் உம்பர்மணி என்ற சொல்லின் மூலம் முருகனைப் பற்றிக் கூறிய அப்பர், ஆறாவது பாடலில்
“ இமையோர் சென்னிமிசை “ என்ற சொல்லால் தேவர்களின் மணிமுடியைக் குறித்தார் என்க. எனவே,
மூன்றாம் பாடலில் வரும் உம்பர் என்பதற்குத் தேவர் என்று பொருள்கொண்டு தேவர்களின் மணிமுடிக்கு
அணியாக விளங்குபவனே என்று பொருள் கொள்வது பொருந்தாது.
உயர்ந்த
/ சிறந்த அழகுடையவன் என்ற பொருளில் முருகனைக் குறித்து வந்த உம்பர்மணி என்ற சொல்லில்
இருந்தே சுப்ரமணி என்ற சொல்லானது கீழ்க்காணும் முறையில் பிறக்கும்.
உம்பர்மணி >>> சும்பர்மணி (1)
>>> சுப்பர்மணி (2) >>> சுப்ரமணி (3)
(1) உம்பர்மணி
என்ற சொல்லில் உள்ள உகரத்தின்மீது சகரமெய் ஏறி சும்பர்மணி என்று ஆவது தமிழின் இயல்பே.
இதனைச் சம்மோனைப் போலி என்பர். இதற்கு சான்றாக வேறு சில காட்டுகளையும் கீழே காணலாம்.
அட்டை >>> சட்டை, இப்பி
>>> சிப்பி, இறகு >>> சிறகு
(2) சும்பர்மணி
என்பது சுப்பர்மணி என்று மாறுவதனை வலித்தல் விகாரம் என்று தமிழில் கூறுவர். மெல்லின
மெய்யானது வல்லின மெய்யாக மாறுவதே வலித்தல் விகாரம். இதற்குக் காட்டாக வேறு சில சான்றுகளும்
கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
கன்று >>> கற்று, வென்றி >>> வெற்றி, கொம்பு >>> கொப்பு
(3) சுப்பர்மணி
என்னும் சொல்லானது சுப்பரமணி என்றும் சுப்ரமணி என்றும் பேச்சுவழக்கில் திரித்து வழங்கப்படும்.
சுப்பர்மணி >>> சுப்பரமணி
>>> சுப்ரமணி.
இதுவரை
கண்டவற்றில் இருந்து, சுப்ரமணி என்பது தமிழ் வழக்குச் சொல்லே என்பது உறுதியானது. அதுமட்டுமின்றி,
சுப்பர் என்ற தமிழ்ச் சொல்லில் இருந்தே சுப்பன்,
சுப்பையா, சுப்பு போன்ற பல்வேறு தமிழ்ப் பெயர்கள் தோன்றி முருகனைக் குறிக்க வழங்கப்பட்டன
எனலாம். தமிழ்ச்சொல் ஆகிய சுப்ரமணி என்பதில் இருந்தே கீழ்க்காணும் விதிகளுக்கு ஏற்ப
தமிக்ருதச் சொல் தோன்றும்.
சுப்ரமணி >>> சு`ப்`ரமண்ய (வி.15,6)
வி.15
– கிரந்தமாற்று விதி – இதன்படி சுகரம் சு`கரமாகவும் பகரம் ப`கரமாகவும் கிரந்த ஒலிகளாக
மாறின.
வி.6
– விகுதி கெடல் / மாற்று விதி – இதன்படி இகர விகுதி நீங்கியும் யகர விகுதி பெற்றும்
வந்தது.
பி.கு:
சுப்ரமணி என்னும் தமிழ்ப்பெயரை சு`ப்ரமணி என்று
மாற்றிய வடமொழியாளர்கள் அச்சொல்லுக்குக் கொடுக்கும் விளக்கம் இதுதான்: பிராமணர்களுக்கு
நன்மை செய்பவன். முருகன் பிராமணருக்கு மட்டும் தான் நன்மை செய்பவனா?. என்ன ஒரு கீழ்த்தரமான
விளக்கம் பாருங்கள். எந்தவொரு கடவுளுக்கும் பொருந்தாத இந்த விளக்கத்தில் இருந்தே இச்சொல்லானது
சமக்கிருத மூலம் கொண்டதல்ல என்பதும் தமிழில் இருந்து புனையப்பட்ட ஒரு சொல்லே என்பதும்
நன்கு விளங்கும்.
உயர்வு,
மேன்மை போன்ற பொருட்களைக் குறிக்கும் சுப்பர் என்ற தமிழ்ச் சொல்லுக்கும் இதே பொருட்களைக்
குறிக்கும் கீழ்க்காணும் ஆங்கிலச் சொல்லுக்கும் இருக்கும் ஒற்றுமை வியப்பாக உள்ளது.
சுப்பர் (உயர்வு, சிறப்பு) >>>
SUPER !!! ???
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.