சனி, 9 நவம்பர், 2019

அன்னியன், அகதி, ஆகாயம், இரகசியம், ஆரியர், அகோரம் - எது தமிழ்? எது மூலம்?


அன்னியன்:

அன்னியம், அன்னியன் ஆகிய சொற்கள் தஞ்சந்தச் சொற்களாகும். அதாவது, தமிழில் இருந்து சமக்கிருதம் சென்று மீண்டும் தமிழுக்கே திரும்பி வந்த சொற்களாகும். இதைப்பற்றி விளக்கமாகக் கீழே சான்றுகளுடன் காணலாம்.

தன்னை / தம்மைத் தவிர்த்த மற்றவற்றை / பிறவற்றைக் குறிக்க ஏனை / ஏனைய என்ற சொல்லைப் பயன்படுத்துவது தமிழர் வழக்கமே.

பேச்சு வழக்கில் மட்டுமின்றி இலக்கிய வழக்கிலும் ஏனை / ஏனைய என்ற சொல்லின் பயன்பாடு நிறைய உண்டு. திருக்குறளில் இருந்து இரண்டே இரண்டு சான்றுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு. – 392

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல். - 505

ஏனை என்ற தமிழ்ச் சொல்லே கீழ்க்காணும் விதிகளின்படி திரிந்து அன்ய என்னும் தமிக்ருதச் சொல்லாக மாறும்.

ஏனை (ஏனய்) >>> அன்ய (வி. 10,4)

வி. 10 - உயிர்மாற்று விதி - இதன்படி, ஏகாரம் அகரமாக மாறியது.
வி.4 - மெய்யெதுகை விதி - இதன்படி, எதுகையின் உயிர் நீங்கியது.

ஏனை என்னும் தமிழ்ச் சொல்லில் இருந்து தோன்றிய அன்ய என்னும் தமிக்ருதச் சொல்லானது தமிழுக்கு வரும்போது திரிந்து அன்னியம் / அன்னியன் என்று மாறும். இச் சொல்லின் தோற்றமுறை கீழே:

ஏனை (தமிழ்) >>> அன்ய (தமிக்ருதம்) >>> அன்னியம், அன்னியன் (தஞ்சந்தம்)

பி.கு: அன்னியன் என்பதற்குப் பதிலாக ஏதிலி என்று கூறலாம். ஏதிலியை ஒத்த வேற்றுக்கோள் வாசிகளுக்கு ஏனை என்ற சொல்லின் அடிப்படையில் கீழ்க்காணும் முறையில் பெயர் வைக்கலாம்.

UNKNOWN PERSON = ஏதிலி
ALIEN = எனி / எனியம்
ALIENATE = எனியாக்கு
ALIENATION = எனியாக்கம்

அகதி:

அகதி என்பது தமிழ்ச் சொல்லே ஆகும். அற்கதி என்ற தமிழ்ச் சொல்லே திரிந்து அகதி ஆயிற்று. இச் சொல்லின் தோற்றமுறை கீழே:

அல் + கதி = அற்கதி >>> அகதி, அறுகதை.

கதி என்னும் தமிழ்ச் சொல்லுக்கு வழி, நிலை என்ற பொருட்கள் உண்டு காலங்காலமாக ஒருநாட்டில் வாழ்ந்துவந்து, அரசியல், போர், வறுமை முதலான காரணங்களால் திடீரென்று தமது நாட்டில் இருந்து பிறிதொரு நாட்டுக்குத் தஞ்சமாகக் குடியேறி வந்தவர்கள் புகுந்த நாட்டில் வாழும் வழிவகைகள் இல்லாமலும் நிலையான இருப்பிடம் இல்லாமலும் தட்டுத் தடுமாறி இருப்பார்கள். இவ்வாறு கதியற்றவர்களே அற்கதி என்று அழைக்கப்பட்டனர். நாளடைவில் இச்சொல் சுருங்கி அகதி என்றாயிற்று. அற்கதி என்ற சொல்லில் இருந்தே அறுகதை என்ற சொல்லும் தோன்றியது.

ஆகாயம்:

ஆகாயம் என்பது தமிழ்ச் சொல்லே. காய்தல் என்ற வினையின் அடிப்படையில் தோன்றிய இச் சொல்லின் தோற்றமுறையைக் கீழே விரிவாகக் காணலாம்.

காய் >>> காயம் (1) >>> ஆகாயம் (2)

(1)  காய்தல் என்ற தமிழ்ச் சொல்லுக்கு ஒளிவீசுதல் என்று பொருள் உண்டு. நிலா காய்கிறது என்று கூறுவது வழக்கமே. நிலா, கதிரவன், விண்மீன்கள் போன்ற பலவும் காய்கின்ற அதாவது ஒளிவீசுகின்ற பரந்த இடமே காயம் ஆயிற்று.

காய் (ஒளிவீசு) >>> காயம் (ஓளிவீசும் இடம்)

காயம் என்ற சொல் இப்படித்தான் விண் / வான்வெளியைக் குறித்தது எனலாம். தொல்காப்பியமும் இதையே கீழ்க்காணும் பாடலில் கூறுகிறது.

      விண் என வரூஉம் காய பெயர்வயின் - எழுத். புள்.மயங்:10

(2)  ஆ-தல் என்னும் வினைச் சொல்லுக்கு ஆகுதல் என்ற அகராதிப் பொருள் உண்டு. ஆகியது / ஆகின்றது / ஆகும் என்று முக்காலமும் உணர்த்தும் பொருளில் ஆ என்னும் வினையானது காயம் என்னும் பெயரின் முன்னால் சேர்ந்து ஆகாயம் எனும் வினைத்தொகையினை உருவாக்கும்.

ஆ (வினை) + காயம் (பெயர்) = ஆகாயம் (வினைத்தொகை)

ஆகாயத்தில் காலம் இல்லை அதாவது மூவகைக் காலங்களையும் அது உள்ளடக்கியது ஆகும். எனவேதான் ஆகாயம் என்னும் சொல் வினைத்தொகையாக உருவாக்கப்பட்டது. ஆகாயம் என்னும் தமிழ்ச்சொல்லில் இருந்தே கீழ்க்காணும் விதிகளின்படி ஆகாச்~ என்னும் தமிக்ருதச் சொல் தோன்றும்.

ஆகாயம் >>> ஆகாச்~ (வி.11,6)

வி.11 - சயழமாற்று விதி - இதன்படி யகரம் சகரம் ஆகும்.
வி.6 - விகுதிகெடல் விதி - இதன்படி மகர விகுதி கெடும்.

இரகசியம்:

இரகசியம் – இது தமிழ்ச் சொல்லும் அன்று; சமக்கிருதச் சொல்லும் அன்று; இதுவொரு தஞ்சந்தச் சொல். அதாவது, தமிழில் இருந்து சமக்கிருதம் சென்று பின்னர் மீண்டும் தமிழுக்குள் புகுந்த ஒரு சொல். இதைப்பற்றி விளக்கமாகக் கீழே காணலாம்.

இறந்த பின்னர் பிணத்தை மண்ணுக்குள் புதைத்து விடுவதே பெரும்பான்மை வழக்கமாகும். அப்படிப் புதைக்கப்பட்ட பிணத்தைப் பெரும்பாலும் மறுபடி தோண்டி எடுப்பதில்லை. அந்தப் பிணமானது மண்ணுக்குள்ளேயே இருந்து மட்கி மண்ணோடு மண்ணாகிப் போகும்.

இரகசியங்களும் பிணத்தைப் போன்றவையே. ஒருமுறை மனதிற்குள் புதைக்கப்பட்டால் அவை இறுதிவரையிலும் வெளிப்படுத்தப் படாமல் மனதுக்குள்ளேயே மட்கி விடும். இறுதிவரையிலும் யாரிடமும் மூச்சுவிடாமல் மனதுக்குள் புதைக்கப்பட்ட செய்திகளைத்தான் இரகசியங்கள் என்று நாம் கூறுகிறோம்.
பிணத்தைக் குறிக்கும் ஒரு தமிழ்ச்சொல் தான் இரகசியம் என்ற சொல்லின்மூலம் என்று சொன்னால் வியப்பையே தரும். ஆம், பிணத்தைக் குறிக்கும் தமிழ்ச் சொல்லான அலகை என்பதில் இருந்தே ரக`ச்`ய என்னும் தமிக்ருதச் சொல் கீழ்க்காணும் விதிகளின்படி உருவாகிறது.

அலகை (அலகய்) >>> ரக`ச்`ய (வி.9,19,15,11,6)

வி.9 – கெடுமோனை விதி – இதன்படி முன்னுள்ள அகரம் நீங்கியது.
வி.19 – அலர்மாற்று விதி – இதன்படி, லகரம் ரகரம் ஆகியது.
வி.15 – கிரந்தமாற்று விதி – இதன்படி தமிழ்க் ககரம் கிரந்த க`கரம் ஆகியது
வி.11 – சயழமாற்று விதி – இதன்படி யகரம் ச`கரம் ஆகியது
வி.6 – விகுதிமாற்று விதி – இதன்படி யகர விகுதி பெற்றது

இப்படி அலகை என்ற தமிழ்ச் சொல்லில் இருந்து உருவான ரக`ச்`ய எனும் தமிக்ருதச் சொல்லானது மீண்டும் தமிழுக்கே திரும்போது தமிழுக்கான விதிகளின்படி சற்றே திரிந்து இரகசியம் என்ற தஞ்சந்தச் சொல்லானது. இரகசியம் எனும் சொல்லுக்கான உண்மையான தோற்றம் கீழே:

அலகை (தமிழ்) >>> ரக`ச்`ய (தமிக்ருதம்) >>> இரகசியம் (தஞ்சந்தம்)

பி.கு: இரகசியம் என்ற பொருளைப் பயன்படுத்த விரும்பினால், அதன் மூலமான அலகை என்ற சொல்லைப் பயன்படுத்திக் கீழ்க்காணுமாறு கூறலாம்.

SECRET, SECRECY = அலகயம்

ஆரியர்:

ஆரியர் என்னும் சொல் தூய தமிழ்ச் சொல்லே ஆகும். ஆரியர் என்போர் யார்.? என்பதில் பல ஆண்டுகளாகவே பெருங்குழப்பம் நீடித்து வருகிறது. ஆரியர் என்றாலே பலரும் பார்ப்பனரைத் தான் நினைக்கின்றனர். இது பெருந்தவறு ஆகும். காரணம், தமிழகப் பார்ப்பனர்கள் தொல்தமிழ்க் குடிகள் ஆவர். பிற நாட்டைச் சேர்ந்தவர்களோ பிற மொழி பேசுபவர்களோ அல்லர்.

இதுவரை அறிந்திராத புதிய இனமக்களைப் பார்க்கும்போது யாரிவர் என்றோ ஆரிவர் என்றோ கேட்பது வழக்கமே. அறிமுகமற்ற புதிய இனத்தவரைக் குறிப்பதே ஆரியர் என்ற சொல்லாகும்.

ஆர் + இவர் = ஆரிவர் >>> ஆரியர்

சங்க இலக்கியத்தில் ஆரியர் என்ற சொல் பலமுறை பயன்படுத்தப் பட்டுள்ளது. ஆரியர் என்ற சொல் பயிலும் அத்தனை பாடல்வரிகளும் அதற்கடுத்து அவற்றின் பொருளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

    எதிர் தலைக்கொண்ட ஆரிய பொருநன் - அகம் 386/5
( ஆரியப் பொருநன் = வேற்று இனம் சேர்ந்த மன்னன் )    
    ஆரியர் துவன்றிய பேர் இசை முள்ளூர் - நற் 170/6
( ஆரியர் துவன்றிய = வேற்றினத்தோர் கூடிவாழ்ந்த முள்ளூர் .)
    ஆரியர் கயிறு ஆடு பறையின் கால் பொர கலங்கி - குறு 7/3,4
( ஆரியர் = கழைக் கூத்தாடும் நாடோடிகள் - இவர் வேற்றின மக்களே .)
    ஆரியர் துவன்றிய பேர் இசை இமயம் - பதி 11/23
( ஆரியர் துவன்றிய = வேற்றினத்தோர் கூடிவாழ்ந்த இமயமலை..)
    ஆரியர் பிடி பயின்று தரூஉம் பெரும் களிறு போல - அகம் 276/9,10
( ஆரியர் பிடி பயின்று = யானை பிடிப்போர், இவரும் வேற்றின மக்களே. )
    ஆரியர் படையின் உடைக என் - அகம் 336/22
( ஆரியர் படை = வேற்றின மன்னரின் படை..)
    ஆரியர் அலற தாக்கி பேர் இசை - அகம் 396/16
( ஆரியர் அலறத் தாக்கி = வேற்றினத்தோர் அலறியோடுமாறு தாக்கி..)
    ஆரியர் பொன் படு நெடு வரை புரையும் எந்தை - அகம் 398/18,19
( ஆரியர் பொன்படு நெடுவரை = வேற்றினத்தோர் கூடிவாழும் இமயமலை.)

இப் பாடல்களில் வரும் ஆரியர் என்ற சொல்லானது தமிழ் இனம் சாராத நாடோடிப் பண்பாட்டினைக் கொண்ட புதிய குடிகளைக் குறிப்பதாகவே வந்திருப்பதை அறியலாம். மேற்கண்ட சங்க இலக்கியப் பாடல்களில் இருந்து, கழைக் கூத்தாடிகள், யானைகளைப் பிடித்துப் பழக்குவோர் போன்றவர்கள் ஆரியர்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளதை அறியலாம். காரணம், இவர்கள் பிழைப்புக்காக ஓரிடத்தில் இருந்து இன்னோரிடம் சென்றுகொண்டே இருக்கும் இயல்பினர். இதுபோன்ற ஆரிய இன மக்கள் பலர் இமயமலையில் வாழ்ந்துவந்தனர் என்னும் செய்தியையும் சங்க இலக்கியம் கூறுகிறது.

அகோரம்:

கோறம் வேறு; அகோரம் வேறு. கோறம் என்பது தமிழ்ச்சொல். அகோரம் என்பது தஞ்சந்தச் சொல். இது ரகர - றகர எழுத்துப் போலியால் விளைந்த குழப்பமாகும். இதைப்பற்றிக் கீழே விரிவாகக் காணலாம்.

(1) கோலம் என்ற தமிழ்ச் சொல்லுக்கு அழகு என்ற பொருளுண்டு. இச்சொல் சமக்கிருதத்தில் கீழ்க்கண்டவாறு மாறும்.

கோலம் >>> கோ~ர (வி. 15,19,6)

வி.15 - கிரந்தமாற்று விதி - இதன்படி கோ என்னும் ஒலி கோ~ என்ற கிரந்த ஒலியாக மாறியது.
வி.19 - அலர்மாற்று விதி - இதன்படி லகரம் ரகரமாக மாறியது.
வி.6 - விகுதிகெடல் விதி - இதன்படி மகர விகுதி கெட்டது.

வடமொழியாளர்கள் இதன் முன்னால் அ சேர்த்து எதிர்மறைப் பொருளில் வழங்குவர். அதாவது,

அ + கோ~ர = அகோ~ர = அழகற்ற, அருவருப்பான.

கோரம் என்னும் தமிழ்ச் சொல்லில் இருந்து தோன்றிய அகோ~ர என்னும் தமிக்ருதச் சொல்லானது மீண்டும் தமிழுக்கு வரும்போது அகோரம் என்று மாற்றம் பெறும். இச்சொல்லின் தோற்றமுறை கீழே:

கோலம் (தமிழ்) >>> அகோ~ர (தமிக்ருதம்) >>> அகோரம் (தஞ்சந்தம்)

(2) அடுத்ததாக, கோறுதல் என்ற தமிழ்ச் சொல்லுக்கு கடியுண்டாக்குதல், ஆழப்பதித்தல், குத்துதல் என்ற பொருளுண்டு. இதன் அடிப்படையில் உருவானவதே கோறைப் பற்கள் ஆகும்.

கோறைப் பற்கள் வெளியே தோன்றும் போது அச்சத்தை உண்டாக்கும். அத்தகைய வடிவமே கோறம் எனப்பட்டது. அதாவது,

கோறு >>> கோறம் = அச்சந்தருவது.

அகோரம் என்பது அருவருப்பைக் குறிக்கும். கோறம் என்பது அச்சந்தரும் வடிவத்தைக் குறிக்கும். இரண்டும் வேறு வேறு.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.